உடல்
“ஏன் டா பேச மாட்டேங்குற, என்னோட புலம்பல் உன் காதுல விழலியா... இல்ல
நீ வேணும்னே பண்ணுற, எனக்கு தெரியாது இப்போ நீ என் கூட பேசனும்... பாரு நான் அழகா
தானே இருக்கேன் உனக்கு என்ன குற வெச்சேன். எதனா
பேசு ப்ளீஸ்...”
இரைச்சலோடு கலந்த தண்ணீர் பிழியும் சத்தமும் கலைப்பில் மெதுவாக
சுற்றிகொண்டிருந்த மின்விசிறியின் சத்தமும் எச்சரிக்கையின் ஒலியாய் கேட்டுக்கொண்டே
இருந்தது. “சரி சீக்கிரம் வா நான் பெட்ரூம்ல வெயிட் பண்ணுறேன்” கூடவே வெட்கத்தொனியுடன்
கீறிச் என்னும் சிரிப்பின் சத்தம். முட்டிக்கொண்டு வந்த சிறுநீர் என்னை
எழுப்பியது. படுக்கையில் இருந்து எழுந்து சென்று அவசரமாக சிறுநீர் கழித்தபின் பல்
துவக்கினேன். மணி ஐந்தை கடந்துகொண்டிருப்பதை பின்வாங்கிக்கொண்டிருக்கும் சூரிய
கதிர்கள் ஜன்னல் வழியே எனக்கு உணர்த்தியது. மீண்டும் அவளின் குரல்
“என்ன ஏன் இப்படி சாவடிக்குற, நாய் மாதிரி தொண்ட கிழிய கத்திட்டு
இருக்குறது உன் காதுல விழலியா...?”
பல் துலக்குவதிலேயே தீவிரம்
காட்டினேன் நுரையால் பற்களும் உதடுகளும் மொழுகிக்கொண்டிருந்தது. வழக்கமான
பிதற்றல்கள் செவிகளில் ஊர்ந்தபடி இருந்தன.
நான் தினசரி அருந்தும் விஸ்கியும் வாட்ச்மேன் வாங்கி வைத்துவிட்டு போன சப்பாத்தி
பார்சலும் மேசையின் மேல் எனக்காக காத்திருந்தது.
“டேய் ஏன்டா... ஒரு நாள் கூட உன்னால குடிக்காம இருக்க முடியாதா? குடல்
வெந்து சாக போற பாரு, ஏன் நான் சமைச்சத சாப்டா உனக்கு இறங்காதா?”
வெறுப்பும், கோவமும் ஒருசேர கலந்து அக்குரலில் வலிமை மேலோங்கியது. அவளிடமிருந்து
வந்த வார்த்தைகள் என் பழக்க வழக்கங்களை அலங்கரித்தபடி இருந்தன. நிராகரிப்பு...
அதையே தான் திருப்பி கொடுத்தேன் விஸ்கியின் புளிப்பு நெடியில் அவ்வார்த்தைககளும்
என்னுள் கரைய முந்திரி பருப்புகளை அசைபோட்டபடி மாடிக்கு சென்றேன் இடது கையில்
விஸ்கி பாட்டிலும் என்னுடன் பயணித்தது.
ஏதேதோ வண்ணங்களில் நான் வாழ்ந்துகொண்டிருக்கும் நகரம் மின்
விளக்குகளால் ஜொலித்தது. வானில் மினுங்கும் நட்சத்திரங்களை விடுத்து போக்குவரத்து நெரிசலில் மினுங்கும்
வண்டிகளை பார்த்தபடி இருந்தேன். என் கணிப்பு சரியாக இருந்தால் இப்பொழுது மணி எட்டை
கடந்திருக்கும். நீண்ட நேரமாக என் பிடியில் ஊசாலாடிக்கொண்டிருந்த விஸ்க்கியை
முழுவதும் குடித்தேன்.
மதுவில் லயித்த உடல்
வேறு கிரகணம் செல்வது போல் இருந்தது... ஆனால் இந்த மனம் பின்னோக்கி மட்டுமே பயணம்
செய்ய எத்தனிக்கிறது. என் குரலின் தொனி… என் சிரிப்பு, என் அழுகை... அனைத்தையும் தொலைத்த
வெற்று உடலுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நான் கடைசியாக எப்போது யாரிடம்
பேசினேன் என்பது கூட நினைவில் இல்லை. இந்த தனிமை.. அது தான் என்னை
கொண்டாடிகொண்டிருக்கிறது அதன் விருப்பப்படியும் என்னை இயக்கிக்கொண்டிருக்கிறது..
அவளாகவே வந்து என்னை சந்தித்தாள் அவளின் வேண்டுதலுக்கு செவி
சாய்க்காமல் கடந்திருந்தால் இந்நேரம் நான் மாடியில் தன்னந்தனியே நின்று போக்குவரத்து
நெரிசல்களை ரசித்துகொண்டிருக்க வேண்டிய அவசியம் நேர்ந்திருக்காது. எப்போதும் போல்
காமிராவை தூக்கிக்கொண்டு அறிமுகம் இல்லாத ஏதோ ஒரு பெண்ணை என் ரசனைக்கு ஏற்றபடி கிளிக்
செய்துகொண்டிருப்பேன்.
“சரி உன்னோட முடிவு தான் என்ன...?”
“அதான் நேத்து போன்லியே சொல்லிட்டேனே...”
“அது எப்படி என்ன புடிக்காம போகும் நாம பேமிலி பிரண்ட்ஸ் தானே...?”
“உன்ன புடிக்கலனு சொல்லல மேரேஜ் பண்ணிக்க எனக்கு விருப்பம் இல்லனு தான்
சொல்லுறேன்..”
அவள் முகத்தை முழுவதும் பார்க்காமல் நான் எடுத்த பெண்களின்
புகைப்படங்களை எனது லேப்டாப்பில் பார்த்துக்கொண்டிருந்தேன்.
“ஆனா எனக்கு உன்ன புடிச்சிருக்கு காரணம் தெரில நீ என்ன நிராகரிச்சது
கூட ஒரு காரணமா இருக்கலாம்...”
என் அனுமதியின்றி என் அருகில் வந்து அமர்ந்தாள். நான் சட்டென்று எனது
லேப்டாப்பை மடித்தேன். இறுக்கமாக பச்சைநிற சுடிதார் ஒன்றை அணிந்திருந்தாள் அவளிடமிருந்து
வந்த நறுமணம் என் உடலைமட்டுமல்லாது என் உணர்வுகளையும் ஸ்பரிசித்தது.
“என்ன பாரு நான் அழகா இல்ல... சரி மேரேஜ் பன்ன புடிக்கல ஆனா லவ் பண்ண
புடிக்கும்ல நாம லவ் பண்ணலாமே...
அன்று அவளை பார்த்து நான் செய்த புன்னகையை தான் மூன்று வருடங்களாக தேடவேண்டி
இருந்தது. வெறுமையால் சூழப்பட்டு தனிமையில் புதைந்துகொண்டிருக்கும் இந்நிலையோடு ஒவ்வொரு
இரவும் போராடிக்கொண்டிருகிறேன்.
லேசாக பசித்தது மீண்டும் அறைக்கு சென்று பார்சலில் தகனம்
செய்யப்பட்டிருந்த சப்பாத்தி இரண்டை சாப்பிட்டேன்.
மிதமான போதை தெளிவின் விளிம்பில் தொங்கிக்கொண்டிருக்கும் சமயத்தில் அதே
அலார ஒலி.. தினசரி நான் வெளி உலாவும் நேரம் நெருங்கியதும் கார் சாவியை
எடுத்துக்கொண்டு வழி அறியா பாதையை தேடிக்கொண்டு விரைந்தேன். நீண்ட நேர பயணத்திற்கு
பின் ஓர் பாலத்தை தஞ்சம் அடைந்தேன் இடம் சரியாக தெரியவில்லை முன்னமே வந்தது போல்
தோன்றியது. மஞ்சள் மின்விளக்குகளில் பாலம் நனைந்துகொண்டிருந்தது இன்றைய இரவு இந்த
பாலத்தின் நீண்ட வழி யாத்திரை மூலம் விடியலை சந்திக்க
முடியும் என்று காரின் வேகத்தை குறைத்துக்கொண்டேன்..
அவ்வப்போது என்னை கடந்து விரைந்து செல்லும் கார்களின் சத்தம் மட்டுமே
அவ்விரவில் என்னுடன் உரையாடிக்கொண்டிருந்தன. எனது அறையில் சீண்டிக்கொண்டிருக்கும்
அந்த குரல் இப்பொழுது என்னை பின்தொடரவில்லை அதிலிருந்து விடுபடுவதற்கான இரவை தான்
இந்த பாலத்தின் துணையோடு கழித்துக்கொண்டிருக்கிறேன்.
பாலத்தை கடந்து சவுக்கு தோப்பிற்கு இடையில் அமைந்த சாலையில் என்னுடைய கார்
ஊர்ந்துகொண்டிருந்தது அருகில் கடற்கரை ஏதேனும் இருக்க வேண்டும் வெண்மையில்
உருகிகொண்டிருந்த நிலவு எனக்கு அதை தான் உணர்த்தியது. சிகரெட் புகைக்கவேண்டும்
போல் தோன்றியது இடது பக்க இண்டிகேட்டரை மினுங்கவிட்டு காரை ஓரமாக நிறுத்தினேன்.
பச்சைநிற மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட எதிரில் இருந்த ரெஸ்டாரண்டை வெறித்து பார்த்தபடி புகைத்துக்கொண்டிருந்தேன். சற்று நிமிடத்தில் ரெஸ்டாரண்டில்
இருந்து வெளிவந்த ஒரு பெண் சாலையை கடக்க எத்தனித்துகொண்டிருந்தாள். அவளை
பின்தொடர்ந்த ஒரு வாலிபன் தடுப்பு சுவராய் அவள் எதிரில் நின்றுகொண்டு அவளோடு
விவாதித்துகொண்டிருந்தான். இருவரின் உரையாடலிலும் ஒருவரை ஒருவர் பழிசுமத்தும்
காட்சிகள். இறுதியாக அவனிடம் விடுபட்டு சாலையை கடந்து வந்தவளின் நடையின் சாயலில்
சினத்தின் வேகம் தெரிந்தது. சிந்தனையின் போக்கில் கேசத்தை கோதிக்கொண்டு சுற்று
முற்றும் பார்த்து நான் நின்றிருக்கும் திசையை நோக்கி விரைந்துவந்தாள். பாதி
கரைந்திருந்த சிகரெட்டை கீழே போட்டு அனைத்து என் காரை எடுக்க ஆழுத்தமானேன்
அதற்குள் என்னை நெருங்கிய அவள்
“ஸ் க்யூஸ் மீ என்னை பக்கதுல இருக்குற ஹோட்டல்ல டிராப் பண்ண முடியுமா
ப்ளீஸ்”
என் அறையில் நச்சரித்துகொண்டிருக்கும் அந்த குரலை ஒத்தியதுபோல்
இருந்தது இந்த குரல். எந்த எதிர்வினையும் கொடுக்காமல் காரின் கதவை திறந்து கிளம்ப
தாயரானேன். மீண்டும் தொடர்ந்தது அந்த குரல்
“எனக்கு உங்க உதவி தேவ ப்ளீஸ்”
சில வினாடி அவளது முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன் நான் புகைப்படம் எடுத்த பல பெண்களிடம் தெரிந்த அதே
நளினம். காற்றோடு அவளது கேசம் போராடிக்கொண்டிருந்தது. உதட்டில்
சிவப்பை அணிந்திருந்தாள், நீல நிற டீஷர்ட்டும் ஜீனும் அவளது ஒல்லியான தேகத்தை இறுக்கமாக
அணைத்துகொண்டிருந்தது.
“ம்.. வாங்க”
தேங்க்ஸ் என்று சொல்லிவிட்டு இடது பக்க கார் கதவை திறந்து உள்ளே
அமர்ந்தாள். பொறுமையாகவே காரை ஓட்டிக்கொண்டிருந்தேன் அவளும் அதை தான் விரும்பினாள்
போலும். விரல் நகத்தை கடிப்பதும், நெற்றியை தடவிக்கொள்வதுமாக விரக்தியின் பிடியில்
அவள் இயங்கிக்கொண்டிருந்தாள். தன்னை தானே ஆசுவாசப்படுத்திக்கொள்ள முயற்சித்து
கொண்டிருந்தவளின் உடல் ஒத்துழைக்கவில்லை என்பது அவளது உடல் நெளிவில் தெரிந்தது. அவ்வப்போது
அவள் பக்கம் என் பார்வையை செலுத்தியபடி அமைதியாக காரை ஓட்டிக்கொண்டிருந்தேன்.
“எனக்கு ஸ்மோக பண்ணனும் சிகரெட் இருக்கா..?”
மன அழுத்தத்திற்கான மருந்து தேவைப்படும் பட்சத்தில் இடமும் சூழலும்
ஒதுங்கி இருக்க தானே செய்கிறது. அவள் எதை பற்றியும் யோசிக்கவில்லை என் முகத்தையே
பார்த்துகொண்டிருந்தாள்.
கொஞ்ச நேரத்திற்கு பிறகு மீண்டும் இடது பக்க இண்டிகேட்டரை
மினுங்கவிட்டு காரை ஓரமாக நிறுத்தினேன். பேண்ட் பாக்கெட்டிலிருந்த சிகரெட்
பெட்டியை அவளிடம் நீட்டினேன் அதிலிருந்து ஒன்றை எடுத்து காரின் மீது சாய்ந்தபடி
அவள் புகைக்க துடங்கினாள். நானும் புகைத்தேன் அவள் விழிகளில் இருந்து கண்ணீர்
கசிந்ததா என்று தெரியவில்லை கைகுட்டையால் அவ்வப்போது கண்களை துடைத்துக்கொண்டாள்.
மௌனத்தை மட்டும் பரிமாறியபடி இருவரும் அமைதியாக நின்றிருந்தோம்.
“லிப்ட் கொடுத்தீங்கறதுக்காக எதுவும் பேசாம இருக்கனும்னு இல்ல எதாவது
பேசலாமே...”
எந்த பதிலும் கொடுக்காமல் இருளின் திசை பார்த்தபடி அமைதியாகவே நின்றிருந்தேன்.
“ஓகே.. எனிவே தேங்க்ஸ் நீங்க கிளம்புங்க நான் இப்படியே நடந்து
போறேன்... கத்தி அழணும்னு தோணுது ஆனா அழ தான் வர மாட்டேங்குது... அழறதுக்கு
முயற்சி பண்ணி பாக்குறேன் பாய்...”
என்னை கடந்து போக இருந்தவளை வழி மறித்தேன்
“அழுறதுக்கு முயற்சி பண்ணலாம் தப்பு இல்ல ஆனா தற்கொலைக்கு முயற்சி
பண்ணுறது தான் தப்பு”
உதட்டை சுழித்துக்கொண்டு பொய்மை கலந்த சிரிப்புடன் என்னை பார்த்தாள்.
“நீங்க சொன்னதுக்கு அப்புறம் அதையும் முயற்சி செஞ்சு பார்க்கலாம்னு
தோணுது...”
தன் இரு கைகளையும் உடலுடன் அணைத்தபடி அமைதியாக நின்றிருந்தாள் சிறிது நேர
இடைவேளைக்கு பின்
“காதல்ங்குற பேர்ல பொண்ணுங்க எதை எல்லாம் இழக்க வேண்டி இருக்கு... ஆனா
ஒரு விஷயம் தெளிவா தெரியுது பசங்களுக்கு ஒன்னு மட்டும் தான் தேவ.... உடம்பு
பொண்ணுங்களோட உடம்பு... அதுக்குதானே இந்த வேஷம் எல்லாம்...”
ஓரளவு என்னால் யூகிக்க முடிந்தது... ஏமாற்றம், துரோகம், வஞ்சகம் இது
தானோ பெண்களின் தேடல்...
“உண்ம தான் அதே சமயம் பெண்களுக்கும் ஒரு உடல் தேவ படுது... அதனாலே
தான் இந்த பிரச்சன எல்லாம்... தன்னோட உடலை மட்டுமே ரசிக்குற, கொண்டாடுற பெண்களும்
இந்த உலகத்துல இருக்காங்க அவங்களுக்கு எல்லாம் இந்த பிரட்சன வரதில்ல..”
“தன்னோட உடலை மட்டுமே ரசிக்குற பெண்களா...! அப்படிப்பட்ட பெண்களும்
இந்த உலகத்துல இருக்காங்களா என்ன?”
“இருக்காங்க... அவங்க ஒரு வகையான மனிதர்கள்”
சிறிது நேர அமைதிக்கு பின் மீண்டும் தொடர்ந்தாள்...
“சரி அந்த மாதிரியான மனிதர்களுக்கு செக்ஸ் தேவ படாதா...? அவங்களோட
வாழ்கைல ஆண்களுக்கு இடம் இல்லையா...?”
“அவங்களுக்கு எப்போவுமே செக்ஸ் வெச்சுக்க தோனாது... அவங்களோட
வாழ்கைலியும் ஆண்கள் இருக்காங்க ஆனா படுக்கைல மட்டும் இடமில்ல...”
குழப்பம் அடைந்தவளாக அவளது முகம் சிறு கோணல்களை வரைந்துகொண்டிருந்தது.
“அது எப்படி அவ்வளவு நிச்சயமா சொல்லுறீங்க உங்க கிட்ட என்ன ஆதாரம்
இருக்கு?”
நான் வலது பக்கமாக சுற்றி வந்து கார் கதவை திறந்து அவளை உள்ளே
அமரும்படி செய்கை செய்தேன். எந்த பதிலும் சொல்லாமல் உள்ளே அமர்ந்தவள் என் பதிளுக்காக
காத்திருந்து என்னையே பார்த்துகொண்டிருந்தாள் நானும் தயாரானேன். யார் என்று
முன்பின் தெரியாத முகம் அறியாத... ஒரு பெண்ணிடம் விளக்க வேண்டிய அவசியம் எனக்கு
நேர்ந்திருப்பதாக தோன்றியது... யோசித்து பார்த்தால் என்னால் கட்டமைக்கப்பட்ட
உரையாடலின் தொடர்ச்சி.
நான் ஒரு போட்டோகிராப்பர் ஆனா இயற்கையையோ மத்தவங்க திருமணத்தையோ படம்
பிடிக்குற வழக்கமான போட்டோகிராப்பர் இல்ல பெண்களின் உடலை மட்டுமே எடுக்குற ஒரு போட்டோகிராப்பர்...
“ஓ.. அப்போ நீங்க ஒரு பார்ன் போட்டோகிராப்பர்”
“அது உன்னோட பார்வ... இது ஒரு கலைனு சொல்லி உன்ன குழப்ப விரும்பல ஆனா
இத கலையா பாக்குற பெண்கள் தான் என்ன தேடி வராங்க... அவங்க உடல அவங்க ரசிக்குற
மாதிரி தான் எடுத்து கொடுக்குறேன்... என்னோட கிளைன்ட் பல ஊர்ல இருக்காங்க நிறைய
இடத்துக்கு போய் இருக்கேன் இது மூலமா நிறைய சம்பாதிச்சும் இருக்கேன்...”
அவள் முகத்தில் தீவிரம் தெரிந்தது... தன் நிலை மறந்து நான்
சொல்லிகொண்டிருந்த விஷயங்களில் மட்டும் இப்போது கவனம் செலுத்தியபடி இருந்தாள்.
“அவங்களுக்கு செக்ஸ் தேவபடுறது இல்லனு உங்களால எப்படி நிச்சயமா சொல்ல
முடியும்...”
“நான் அவங்க கூட பழகி இருக்கேன்... தன் உடல் மீதான ஒரு காதல், அதனோட
தான் அவங்க வாழ்ந்துட்டு இருக்காங்க... தன்னோட முக அழக கண்ணாடி முன்னாடி நின்னு
பார்த்து பூரிக்குற பெண்கள் மாதிரி தான் இவங்களும்... இயற்கையாவே அவங்க உடல அவங்க
ரசிக்குறாங்க, பாதுகாக்குறாங்க, கொண்டாடுறாங்க அதனால தான் எந்த ஆணையும் அவங்க
நெருங்கவிடுறது இல்ல. இந்த மாதிரி பெண்களுக்கு செக்ஸ்ல ஆர்வம் வராததுக்கு காரணம்
தன்னோட உடல ஆண்கள் பேப்பர் மாதிரி கசக்கி வீசி எரிஞ்சுடுவாங்களோ அப்படிங்குற
பயம்...”
“ரொம்ப ஆச்சரியமா இருக்கு இந்த மாதிரி பெண்கள் எங்க இருக்காங்க...
எத்தன பேற இதுமாதிரி சந்திச்சு இருக்கீங்க....”
என் பெற்றோர்கள் கூட அறிந்திராத என் வாழ்வின் ரகசியத்தை தான் அவளிடம்
சொல்லிக்கொண்டிருந்தேன். ஒரு ஆணின் அந்தரங்க செயலை பரிட்சயம் இல்லாத ஒரு பெண்
அறிந்துகொள்வதில் எதிர்பாராத ஆபத்துகள் வரிசைகட்டி நின்றுகொண்டிருப்பதை பல பொழுது
நான் அனுபவித்து இருக்கிறேன். இப்படியே இதற்கொரு முற்றுபுள்ளி வைத்து
நகர்ந்தால்... அப்படி சொன்னால் தான் என்ன...? எத்தனை நாட்கள் தனிமையுடன்
உரையாடிக்கொண்டிருப்பது... என் காரில் இருந்து அவள் இறங்கும் வரையில் இந்த
உரையாடல் நீளட்டும் என்று முடிவெடுத்தேன்.
“இருக்காங்க... ஒரு மானவியாவோ... நடிகையாவோ... உயர் அதிகாரியாவோ
இப்படி எல்லா இடத்துலயும் இருக்காங்க, எனக்கு சரியா கணக்கு தெரியல என்னோட ப்ரொபஷன்ல
ஐநூறுக்கும் மேல இந்த மாதிரி பெண்கள நான் போட்டோ ஷூட் எடுத்து இருக்கேன்.
இன்டர்நெட் மூலமா தான் இவங்க எல்லாரும் என்ன காண்டாக்ட் பண்ணுறாங்க. ஒரு எட்டு
வருஷமா இந்த ஜாப் சீக்ரெட்ஹா தான் செஞ்சுட்டு வந்தேன் இப்போ ஒரு மூணு வருஷமா
பண்ணுறது இல்ல நிறுத்திட்டேன்”.
அவள் இடத்தில் இருக்கும் எந்த ஒருவரும் கேட்க எத்தனிக்கும் அதே கேள்வி
தான்
“ஏன்...?”
சிறிது நேர இடைவேளைக்கு பின் மீண்டும் தொடர்ந்தேன்.
“என் மனைவிக்கு இந்த விஷயம் தெரிஞ்சுடுச்சு அவ சூசைட் பண்ணிகிட்டா”
இது அனுதாபத்தை ஏற்படுத்துவதற்கான உரையாடல்கள் அல்ல... தெளிவுபடுத்த
விரும்பிய... தனிமையின் பிடியில் இருந்து விலக நானே அமைத்துக்கொண்ட நிர்பந்தத்தின்
உரையாடல்... அவள் இப்பொழுது முகத்தை தொங்கவைத்துக்கொண்டாள்.
“சாரி... தனக்கு சொந்தமானவன் வேற ஒரு பொண்ணோட உடல பார்க்க கூடாதுனு
நினைக்குற பொண்ணுங்க தான் இந்த உலகத்துல அதிகம் இருக்காங்க...”
“உண்ம தான் அதனால தான் இந்த விஷயத்த அவகிட்ட இருந்து மறைச்சேன்...
அதுவும் இல்லாம அவ என்ன அதிகம் காதலிச்சா எந்த ஒரு விஷயத்தையும் சந்தேக பார்வ
இல்லாம அவ பார்க்க மாட்டா... என்னாலையும் ரொம்ப நாளைக்கு மறைக்க முடியல என்னோட
லேப்டாப்ல நான் எடுத்த போட்டோஸ் எல்லாம் அவ பார்த்ததுக்கு அப்புறம் ஒரு விவாதத்துல
நானே எல்லா விஷயத்தையும் போட்டு உடைச்சுட்டேன்..”
“ஆனா நீங்க புரிய வைக்க முயற்சி செஞ்சு இருக்கலாம் இது உங்களோட ப்ரொபஷன்னு”
“இது என்னோட ப்ரொபஷன் தான்... ஆனா அதையும் தான்டி ஒரு சிக்கல் இருந்துச்சு
அது மேரேஜ்க்கு அப்புறம் தான் நான் உணர்ந்தேன்... நான் நிறைய பெண்களோட உடம்ப
தண்ணிலியும், கடல் மண்ணுலியும், நெருப்பு வெளிச்சத்திலியும், காடுலியும் ரொம்ப
அழகா நான் நினைச்ச மாதிரி ரசிச்சு போட்டோ ஷூட் எடுத்து இருக்கேன். ஆனா அதே பிரச்சன
என் மனைவிகிட்ட இருந்தும் வரும்னு நான் எதிர் பார்க்கல. அவளுக்கும் ஒரு உடல் தேவ
தன்னோட காம தீய அணைக்க கணவனோட உடல் தேவ பட்டுச்சு. ஆனா என்னோட உடல் அதுக்கு தயாரா
இல்ல, அவள நிர்வானபடுத்தி பார்க்கும் போது என்ன அறியாமலே கேமிராவா எடுத்து அவ உடல
பல கோணத்துல போட்டோ எடுக்க ஆரம்பிச்சேன். அவ என்ன விசித்திரமா பார்த்தா எனக்கும்
அப்போ தான் ஒரு உண்ம தெரிஞ்சுது இயற்கையாவே எனக்கும் செக்ஸ்ல ஆர்வம் இல்லனு. நான்
பார்த்த எந்த ஒரு உடலும் எனக்கு இதுவரைக்கும் செக்ஸ் ஆர்வத்த தூண்டல. இனிமேலும்
தூண்ட போறதில்ல என்னோட கண்களும் கேமிரா வடிவத்துல தான் பெண்களோட உடம்ப இத்தன
வருஷமா பார்த்திட்டு இருந்திருக்கு.
கண்கள் அகல விரிய அவள் என்னையே பார்த்துகொண்டிருந்தாள். காரின் பிரேக்
பிடியில் அவளது கவனம் சிதைந்தது அவள் இறங்க இருக்கும் ஹோட்டல் வாசலின் முன் காரை
நிறுத்தினேன்.
அமைதியாக கீழே இறங்கியவளின் பார்வை விவரிக்க முடியாத வினோதத்துடன் என்
மேல் படிந்தது. விடைபெறுதளுக்கான நேரம் வழமையான சிரிப்பை வரவைக்க முயற்சி செய்து
என்னை நெருங்கினாள்.
“குட் நைட்... இப்போ எங்க நேரா வீட்டுக்கு தானே...”
“இல்ல நான் விடிஞ்சதும் தான் வீட்டுக்கு போவேன் இரவு நேரத்துல நான்
வீட்ல தங்குறது இல்ல என் மனைவி இறந்து போன இந்த மூணு வருஷமா...”
அவளது இரு புருவ நெரிசலுக்கு இடையில் கேள்விக்குரியின் பிம்பம்
மிருதுவாக உருபெற்றது... இம்முறை ஏன்...? என்று அவள் கேட்பதற்கு முன் நானாகவே
தொடர்ந்தேன்...
“எனக்கும் அவளுக்கும் இரவு நேரத்துல தான் சண்ட நடக்கும் என் மனைவியோட
குரல் என்ன பின்தொடர்ந்துகிட்டே இருக்கு,. நானும் இரவு நேரத்துல வீட்ல தங்குறது
இல்ல...”
காரை ஸ்டார்ட் செய்து கிளம்ப இருந்த என்னை மீண்டும் வழி மறைத்தாள்.
“நாளைக்கு உங்கள நான் சந்திக்கனும் இதுல இருந்து மொத்தமா நீங்க
விடுபடுவீங்க... இந்த ஹோட்டல்ல தான் இருப்பேன் நாளைக்கு வரமுடியுமா ப்ளீஸ்...”
இரவை கழிப்பதற்கான இடத்தை தான் தினமும் தேடிக்கொண்டிருக்கிறேன். என்னை
சூழ்ந்துள்ள தனிமையையும் நான் துறத்த வேண்டும்... பெயர் தெரியாத ஒருத்தியை சந்திக்க
வருவது தவறு இல்லை என்றும் தோன்றியது. நாளை வருவதாக சொல்லிவிட்டு அங்கிருந்து
நகர்ந்தேன்.
மறுநாள் இரவு பதினோரு மணியளவில் அவள் தங்கியிருக்கும் ஹோட்டலின்
அறைக்கு சென்றேன். நீண்ட வருடங்களாக பெண்களை சந்திக்க செல்வதை தவிர்த்து வந்திருந்த
நிலை மாறி இப்பொழுது ஓர் இரவில் பழகிய பெண்ணை சந்திப்பதற்காக இவ்விரவில் அவளை தேடி
வந்திருக்கிறேன்.
உள்ளே நுழைந்ததும் முகமலர்ச்சியுடன் என்னை வரவேற்றாள். திரை சீலைக்குள் உடலை மறைத்து வைத்துக்கொள்வது போல் வழ வழப்பான இரவில் அணியும்
ஆடை ஒன்றை அணிந்திருந்தாள். அறை முழுவதும் மஞ்சள் மின்விளக்குகள் விழித்துகொண்டிருந்தது. என்னை
சோபாவின் இருக்கையில் அமரவைத்து அவள் படுக்கறைக்கு சென்று கருப்பு நிற பையை ஒன்றை
எடுத்து வந்து என்னிடம் கொடுத்தாள். என் கையில் கொடுத்த வினாடியே என்னால்
தீர்மானிக்கமுடிந்தது பல வருடங்களாக என்னுடன் பயணித்த அதே சாயல் கொண்ட பை.
பையை திறந்து அதுனுள் இருந்த உயர்ரக காமிராவை எடுத்தேன். மூன்று
வருடங்களாக என் உடலிலிருந்து விலகி இருந்த ஒரு உறுப்பு மீண்டும் என்னுடலோடு இணைந்தது
போல் இருந்தது. லென்ஸை எடுத்து கமிராவினுள் பொருத்திய கணம் என் விரல்கள்
உயிர்கொண்டு கிளிக் செய்ய துடித்துகொண்டிருந்தது. கரங்களில் காமிராவை தாங்கியபடி
அவளையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். என்னை மீட்டெடுத்த வெற்றியின் குறியீடாய்
அவள் உதடுகள் மெல்ல விரிந்துகொண்டிருந்தது.
“நானும் என் உடல ரசிக்க ஆரம்பிச்சுட்டேன்”
வயிற்றின் மேல் பிணைந்திருந்த ஆடையின் முடிச்சுகளை அவிழ்த்து தன் உடலை
பளிச்சிட செய்தாள். சட்டென்று ஆயுத்தமாக அவள் பரிசளித்த காமிராவிற்குள் என்
விழியின் பார்வையை புகுத்தினேன். லென்ஸை இடதுபக்கமாக திருப்பிக்கொண்டே அவள் உடலை
போக்கஸ் செய்தேன்.
கிளிக் செய்ய தயாராக காத்திருந்த எனது ஆள் காட்டி விரல்
நடுங்கிக்கொண்டிருந்தது. கழுத்து அறுபட்ட நிலையில் அதன் வெட்டிலிருந்து பீறிட்ட ரத்தம்
கழுத்தின் மீது வழிந்து மார்புகளை நனைத்துக்கொண்டிருந்த காட்சி காமிரவிற்குள்
தெரிந்தது. மேலும் முகத்தை மட்டும் இன்னும் ஆழமாக போக்கஸ் செய்தேன். உதட்டில்
இருந்து ரத்தம் வழிய குரோத பார்வையுடன் என்னை வெறித்து பார்த்துக்கொண்டிருக்கும்
என் மனைவியின் முகம்.
கையில் இருந்த காமிரா நழுவி தரையில் மோதும் சத்தம் மட்டும் என்
செவிகளில் விழுந்தது.
No comments:
Post a Comment