Showing posts with label பிரவீன் குமார். Show all posts
Showing posts with label பிரவீன் குமார். Show all posts

Thursday, March 7, 2019

திலக்கியா - சிறுகதை - பிரவீன் குமார்


திலக்கியா

அழுகை ஓலங்கள் என் உடலை சுற்றி மொய்த்துக்கொண்டிருக்கிறது  நிமிடத்திற்கு ஒரு முறை பூமாலைகள் என் சடலத்தின் மீது போர்தப்படுகின்றன, தலைவிரி கோலத்துடன் என் தாயின் கதறல்கள், துண்டின் துணையோடு தூணில் சாய்ந்துகொண்டிருக்கும் என் அப்பா இவை எதுவும் என் இறப்பை மீட்டெடுக்க போவதில்லை. அவள் விழிகள் உயிரற்ற என்  உடலை சந்திக்கும் தருணம் ஒன்று வாய்த்தால் இறந்த பின்பும் மீளுவேன். அவளின் வருகையை எதிர்பார்த்தபடி தெரு முனையில் அமைந்துள்ள கட்சிக்கொடி கம்பத்தின் படியில் அமர்ந்துகொண்டு போவோர் வருவோரை வெறித்து பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

சூரியன் சாயும் நேரம் மனிதர்களும் அவரவர் இருப்பிடத்தை தத்தம் அடைகிறார்கள். பள்ளி முடிந்து தனது பாட்டியின் விரலை பிடித்துகொண்டு வீட்டிற்கு விரையும் அந்த மழலை, மொபெட்டில் தனது காதலியை அமர்த்திக்கொண்டு உல்லாசமாய் வளம் வரும் அந்த இளைஞன். துப்பாக்கியை தோளில் சுமந்து பராக் பார்த்து கொண்டே தன் மனைவியுடன் செல்லும் அந்த குறவன். என் வீட்டு வாசலின் வழியே எனக்கு காட்சியளிக்கிறார்கள். நான் வேண்டுவது அவளின் முகம்... அவளை தவிர வேறு யாரையும் சிந்திக்க மனது ஒப்பவில்லை. நடந்தே அவள் கிராமத்திற்கு சென்றால் என்ன? இரண்டு வருடத்திற்கு முன்பு பொங்கல் பண்டிகையையொட்டி அந்த கிராமத்திற்கு சென்று வந்த ஞாபகம் அத்தெருவின் வீடுகளும், சாணத்தின் வாசமும் இப்பொழுதும் கூட நினைவலைகளில் தடம் பதித்துகொண்டிருக்கிறது. ப்ச்... நவீன உலகத்தில் மனிதர்களுக்கான சிறகை மட்டும் ஏன் உருவாக்க ஒருவரும் முயற்சி செய்யவில்லை... அப்பிடி ஒன்று அமைந்திருந்தால் இந்நேரம் அவள் கோலமிட வாசலுக்கு வரும் முன்பே என் வருகையை பதிவுசெய்திருப்பேன்.

படிப்பிற்காக நகர வாழ்க்கைக்குள் படி எடுத்து வைத்தாயிற்று புழங்கிக்கொண்டிருக்கும் இன்னல்களை மனதுக்குள்ளோ இல்லை உடலுக்குள்ளோ பதுக்கிவைக்கவேண்டும். பிறரின் சிநேகம் கிடைத்திருந்தால் என்னை நானே பாதுகாத்துகொள்ளும் தேவை இருந்திருக்காது. கல்லூரிக்கு வந்து சேர்ந்து பத்து நாட்களுக்கு மேல் கடந்தும் கூட என் அருகில் அமர்வதற்கு ஒருவரும் பிராயத்தனப்படவில்லை. ஜடை பின்னிய என் கேசமும், மை பூசிய என் சதையும் பிறரை என் வசம் திருப்பாமல் இருந்திருக்கலாம். அவளை பார்க்கும் வரையில் அப்பிடி தான் நிச்சயித்துக்கொண்டேன். இரண்டாம் பாடத்திற்கு மணி அடித்த பொழுது வகுப்பறைக்குள் பிவேசித்தவளின் விழி தேடல் என் இருப்பை தேர்வு செய்தது. எந்த சலணுமுமின்றி என் அருகில் வந்து அமர்ந்தாள். அவள் உடலில் இருந்து வெளிப்பட்ட வாசம் இயற்கையின் நறுமணமா...? இல்லை தேகத்தின் மேல் அப்பியிருந்த செயற்கையின் நறுமணா...? என்று எனக்கு தெரியவில்லை ஆனாலும் எனக்கு பிடித்திருந்தது.
அன்று கல்லூரிக்கு சென்ற முதல் நாள் அவள் அருகில் தான் அமர்ந்தேன். ஏதோ ஒரு உந்துதல் அவள் அருகிலான இருப்பிடத்தை தேர்வு செய்ய தூண்டியது. என்னை பார்த்தாளா என்று தெரியவில்லை நானாகவே அறிமுகம் செய்துகொண்டேன். “ஹாய்... ஐ யம் திலா..” மணிக்கட்டில் சுற்றிக்கொண்டிருந்த கயிறு மட்டுமல்ல அவள் தேகமும் கருப்பு தான். நெற்றியில் பதிந்திருந்த விபுதி அவள் கருமையை அலங்கரித்தது. மௌனத்தில் பதுங்கிக்கொண்டிருந்த பற்கள் சிரிப்பின் வழியே தலைகாட்டியது.

அவள் அணிந்திருந்த கம்மிஸ் எத்தனை விலையோ...! உடையின் சிகப்பும் அவள் மேனியின் சிகப்பும் போட்டிபோட்டுக்கொண்டிருந்தது. அவள் அந்தஸ்த்தை ஒத்திய பெண்கள் கல்லூரியில் பலர் இருந்தும் கூட என்னிடம் தான் அதிகமாக உரையாடிக்கொண்டிருந்தாள். என் பெயரை சொல்லி அறிமுகபடுத்திய நாளிலிருந்து நிமிடத்திற்கு நிமிடம் இலக்கியா... என்னும் நான் அவள் நாவிலிருந்து உதிர்ந்துகொண்டே இருந்தேன். எங்கெங்கோ அழைத்து சென்றாள் என் கரம் அவள் பிடியில் தான் அந்நகரத்தை வளம் வந்து கொண்டிருந்தது.

நகர வாழ்க்கை பழகியும் கூட இலக்கியாவின் வாழ்வு தன் பெற்றோக்கு அனுப்பும் கடிதத்தில் தான் சுவாசித்துகொண்டிருந்தது. எப்பொழுதும் கடிதம் கல்லூரியைபற்றி, நகரத்தைபற்றி குறிப்பாக என்னைபற்றி இலக்கியாவின் எழுத்துக்கள் என்னை ஆராதிக்க தவறியதே இல்லை. ஒரு முறை அவள் ஹாஸ்டல் அறைக்கு செல்லும் பொழுது அனுப்புவதற்கு தயாராக மேசையின் மேல் வைத்திருந்த கடிதத்தை படிக்க நேர்ந்தது அதில் “திலா எனக்கு தெரியாமலே என்னை  தத்தெடுத்துகொண்டாள் அப்பா... அவளை போல் இவ்வுலகில் சினேகிதி இருக்கபோவதில்லை, தயங்காமல் சொல்லுவேன் நீங்கள் எனக்கு பெற்றோர்களாக கிடைத்ததைவிட திலா எனக்கு சினேகிதியாக கிடைத்தது தான் என் வாழ்வில் நான் கொண்ட பெரும் பாக்கியம் கூடியவிரைவில் அவளை நம் கிராமத்திற்கு அழைத்து வருகிறேன்” நீண்டுகொண்டே போனது என்னைபற்றிய புராணமும் இதிகாசமும். அவள் எழுதத் தெரிந்தவள் எழுத்தின் வாயிலாக சொல்லிவிட்டாள் நான் எப்படி நிருபிப்பேன் அவள் என்னுள் கலந்த குருதி என்று.

கல்லூரியில் எங்களுக்கு பெயரும் வைத்தாயிற்று நாங்கள் ஜோடி புறாக்கலாம். நிதர்சனம் அதுவே... எங்களை போல் இல்லை என்று பொறாமைபடும் மாணவிகளும் இருக்கத்தான் செய்தார்கள். சில பொழுது என்னை மாற்றுவிக்கும் தூரிகையாக திலா செயல்பட தொடங்கினாள். அவளை போலவே ஒப்பனைகளை எனக்கும் தோற்றுவித்தாள், ஆங்கிலம் பழக கற்றுக்கொடுத்தாள், துணிவோடு நகர மனிதர்களை எதிர்கொள்ளும் வீரியத்தை என்னுள் விதைத்தவளும் அவளே. என்னை நானே இழக்க தொடங்கிய நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தது. மெல்ல... மெல்ல... திலாவின் ஆக்கிரமிப்புகள் பெருகிக்கொண்டே போனது.

இலக்கியாவுடன் சேர்ந்து நான் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் கானும் இடங்களில் எல்லாம் என் வீட்டு சுவற்றில் பளிச்சிடும். கல்லூரி மட்டுமல்லாது வீட்டிலும் அவள் முகத்தை தேடியே என் மனம் அலைந்துகொண்டிருந்தது. படிப்பு, லட்சியம், எதிர்காலம் எதைபற்றி சிந்தித்தாலும் இலக்கியாவின்றி அது முழுமை பெறாது என்றே நம்பதொடங்கினேன். தனிமையில் அவளை நினைத்து சிந்திக்கும் பொழுதுகளில் ரோமங்கள் தலை தூக்கி அதில் நீர் வழிவது போல் என் தேகம் அவஸ்த்தைபட்டது. கோவிலுக்கு செல்ல அவளுக்கு பிடிக்கும் இமை மூடி உதடுகள் துடிக்கும் முனகல்களை கூட ஒற்றை பார்வையில் அவ்வழகை ரசித்துகொண்டிருப்பேன். என்ன வேண்டிக்கொள்வாளோபல தடவை கேட்டிருக்கிறேன் “என் வேண்டுதல் கடவுளுக்கு தெரியும்” என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவாள். என்னுடைய புலம்பல்கள் அந்த கடவுளுக்கு தெரிந்திருக்குமோ... இல்லையோ...

என் புத்தக இடுக்குகளில் திலாவின் புகைப்படங்கள் மூச்சின்றி உறங்கிக்கொண்டிருக்கும். திலா என்னுடன் இருக்கும் நேரத்திற்க்காகவே கல்லூரி நாட்களை அதிகம் விரும்பினேன். அவளுக்கு கடற்கரை செல்ல பிடிக்கும் தொலைவில் அமர்ந்து கொண்டே அவள் அலைகளுடன் ஓடி பிடித்து விளையாடும் அழகை ரசித்துகொண்டிருப்பேன். எங்கள் இருவரின் பெயரையும் கடற்கரை மணலில் எழுதி எழுதி அலைகளுக்கு பசியாற்றிகொண்டிருப்பாள். அழியும் என தெரிந்தும் அவளது விரல் கடல் மணலோடு போராடிக்கொண்டிருக்கும். “அழிஞ்சிடுச்சிடி இலக்கியா” முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு மீண்டும் எழுதுவாள் தள்ளிநின்று அதை அழகு பார்க்கும் முன் கடல் அலைகள் முந்திக்கொள்ளும். அவளுடைய விரல் வலி தாங்காதே... திலாவை ஏமாற்றிக்கொண்டிருக்கும் இந்த கடல் வற்றி போனால் என்ன...? மனதுக்குள் அலைகளையும் அவைகளை தூது அனுப்பும் கடலையும் சபித்துக்கொண்டே இருப்பேன். சீற்றம் கொண்டு “அவைகளுடன் போராடாதே திலா..! உன் விரல் பாவம்... காலத்திற்கும் அழியாத சுவடு என் மார்பில் பதிந்திருக்கிறதடி” என் மார்பில் குத்திய அவள் பெயரை காட்டவேண்டும் என்று பல பொழுது தவித்திருக்கிறேன்.

திலா என்னும் பிம்பம் ஏன் இலக்கியாவாக உருபெற கூடாது பல பொழுதுகள் திலா என்னை இம்சித்தாள். கண்ணாடியில் எனதுருவம் மறைந்து அவள் உருவம் பிரதிபலிக்க தொடங்கியது. கல்லூரியில் மட்டுமல்லாது கனவிலும் என்னை தொடர்ந்துகொண்டிருக்கிறாள். அவள் நினைவாகவே கருமையை அதிகம் உடுத்த ஆயுத்தமானேன். பொங்கல் பண்டிகை, திருவிழா, செமஸ்டர் விடுமுறை எல்லாமே இலக்கியாவின் கிராமத்தில் தான். தலைவிரி கோலமாய் சுற்றிக்கொண்டிருந்த என்னை ஜடை பின்னலெடுத்து மல்லி வைத்து அழகு பார்த்தாள், அவளை போலவே பாவாடை தாவணி கட்டுவித்தாள், நான் கோலமிடும் வளைவுகளெல்லாம் அவள் கரம் பிடித்தே, ஏன் சப்பணமிட்டு சாப்பிட கற்றுகொடுத்தவளும் அவள் தான். இப்பொழுதெல்லாம் திலா-இலக்கியா என்று எழுதியே அழகு பார்க்கிறேன். சில உணர்வுகள் என் எதிரில் நின்று வினாவுகிறது இலக்கியா உன் தோழி மட்டும் தானா?

கல்லூரியின் வருகை பதிவேடு புத்தகத்தை இருவருக்கும் தனித்தனியே புரட்டி பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது. இருவரின் விடுமுறையும் வேறுபட வாய்ப்பில்லை. விடுமுறை எடுக்கும் திட்டம் இருந்தால் முன்னமே திட்டமிட்டுகொள்வது எங்கள் இருவரின் வழக்கம். அன்று ஒரு நாள் கல்லூரி வாசலில் நீண்ட நேரம் காத்திருந்தும் கூட திலாவின் வருகை தென்படவில்லை. உள்மனதிலும் கூட வியர்க்க தொடங்கியது. கல்லூரியை விட்டு வெளியே வந்து டெலிபோன் பூத் வாயிலாக திலாவின் வீட்டை அணுகிய பொழுது தான் அவள் வீட்டு வேலைக்காரியின் மூலமாக விசயம் கசிந்தது படியில் இருந்து தவறி விழுந்த திலா கையை உடைத்துக்கொண்டாளாம். டாக்சி ஒன்றை பிடித்து மருத்துவமனையை சேரும் வரையில் என் உயிர் நாடி இரயிலின் சக்கரங்களாக சுழல தொடங்கியது. ஓவென்று.... அழுகை குரல்கள் நான் அமர்ந்திருந்த கட்சிக்கொடி படியை நோக்கி வந்தது திரும்பி பார்தேன்.. தென்ன ஓலையில் பின்னப்பட்ட பாடையில் என் உடலை கிடத்த என் பெற்றோர்களும் உறவினர்களும் தாயராகிகொண்டிருந்தார்கள்... சீக்கிரம் வந்துவிடு திலா...

உள்ளே பிரவேசித்தவள் நான் சகஜ நிலையில் அமர்ந்திருப்பதை பார்த்தும் கூட அழுதுகொண்டே இருந்தாள். ஒன்னும் இல்லடி லேசா தான் அடிபட்டிருக்கு நார்மலா தான் இருக்கேன் அவளை சமாதானம் செய்ய நான் மேற்கொண்ட முயற்சிகளெல்லாம் அவள் கண்ணீரில் தான் நனைந்துகொண்டிருந்தன. திடிரென்று கண்ணீரை துடைத்துவிட்டு என்னை கண்டபடி திட்ட தொடங்கினாள். அவளை பார்த்து புண்முறுவல் செய்துகொண்டே அவள் திட்டுவதை ரசித்துக்கொண்டிருந்தேன். திட்டுவதிலும் சினத்திற்கு பதிலாக கொஞ்சல்களே அதீதமாக கலந்திருக்கும் அவளது பேச்சில். இலக்கியாவின்  பொய்மை கலந்த சினத்தை ரசிப்பதற்க்காக வேண்டுமென்றே பலமுறை அவளை சீண்டியிருக்கிறேன். அன்றைய நாளிலிருந்து இலக்கியா கணப்பொழுதும் என்னைவிட்டு விலகி இருக்க விரும்பவில்லை. என்னை கவனித்துகொள்வதற்காகவே என் வீட்டின் அறையை என்னுடன் பகிர்ந்துகொண்டாள்.

திலா அப்பாவிற்கு என் சமையல் பிடிக்கும் அவரிடமிருந்து பாராட்டுதலை பெறுவதற்காக அவ்வப்போது நான் திலாவின் வீட்டிற்க்கு விரைவேன். என்னை ஓயாது சீண்டுவதில் தான் அவளின் பொழுதுபோக்கு சமைத்துகொண்டிருக்கும் போது உப்பையோ காரத்தையோ கொட்டிவிட்டு ஓடிவிடுவாள். குழந்தை பாவனையில் அவள் செய்யும் புன்முறுவல் கோடி அழகு. விசாலமான அவ்வீட்டில் சிறுபிள்ளைகளாய் இருவரும் விளையாடிக்கொண்டிருப்போம். அவளால் நடக்க முடியாது என தெரிந்தும் அவளின் சீண்டுதளுக்காக ஏங்கிக்கொண்டு சமயலறையில் இருந்து நிமிடத்திற்கு ஒரு முறை எட்டி பார்த்துகொண்டிருப்பேன். பாத்ரூமில் குளித்துகொண்டிருக்கும் போது திலா பயன்படுத்திய மேலாடை தொங்கிக்கொண்டிருந்தது. அவளுடைய வாசம் அதில் கலந்திருக்குமோ...!  நுகர வேண்டும் போல் இருந்தது திலாவின் வாசம் முழுவதும் அதில் வியாபித்திருந்தது. நாசியின் வழியே திலா என்னை ஊடுருவினாள். கேட்டு அணிந்தாலும் அவள் மறுப்பு ஏதும் சொல்லப்போவதில்லை ஆனாலும் மனது சஞ்சலப்பட்டது. அவள் மேலாடையை அணிந்துகொண்டேன் திலா என்னை ஆரத்தழுவிக்கொண்டதாக ஒர் உணர்வு கண்கள் மெல்ல செருகி புலம்பினேன். இப்படியே என்னை அணைத்துக்கொண்டிரு திலா...

உடல் தேறியபொழுதும் இலக்கியா என்னை குழந்தையாக தான் பாவித்தாள். அவள் உதவியின்றி சாப்பிட முடியும் ஆனால் அவள் விரல் என் பற்களில் உரசும் அந்த ஸ்பரிசம் வேண்டும். அவள் உதவியின்றி நடக்க முடியும் ஆனால் என் தோள்களை அரவணைக்கும் அந்த பிடிப்பு வேண்டும். அவள் பிரித்துகொடுக்கையில் சாப்பிடும் மாத்திரைகள் கூட தொண்டை குழியில் இனிப்பாய் தான் இறங்குகிறது. எல்லா வேலைகளையும் செய்துவிட்டு என்னை நெருங்கிய பொழுது அவள் உடலில் இருந்து பரவும் அந்த வியர்வை வாசம்... கழுத்திலும் நெற்றியிலும் இடையிலும் பிசுப்பிசுப்பை ஒப்பிய அந்த ஈரம் பூரித்த சருமம் முழுவதும் எனக்கு வேண்டும்... என்னை நெருங்காதே இலக்கியா போதையூட்டும் உந்தன் வாசம் ஏதோ செய்கிறதடி... அவள் மோவாயை பிடித்து என் பார்வையே நீயாக வேண்டும் இலக்கியா என்று சொல்லவேண்டும் போல் இருந்தது. மதிய பொழுதில் இலக்கியா சோபாவின் மேல் உறங்கிக்கொண்டிருந்தாள் சாளரத்தின் வழியே வந்த சூரிய கதிர் அவள் மூக்குத்தியின் கற்கள் மீது மோதிக்கொண்டு மின்னியது. இந்த கருப்பு தேவதையை அள்ளிக்கொண்டால் என்ன...? அவள் உதடுகளில் படர்ந்த காந்த விசை ஈர்ப்பு என் உதட்டோடு அவள் உதட்டை நெருங்க செய்தது... இது என்ன மாதிரியான உணர்வு மூளைக்குள் இடித்த அலார ஒலி சுதாகரித்துக்கொண்டு பாத்ரூமிற்கு விரைந்தேன். அழுதுகொண்டே இருந்தேன் மனப்புழுக்கத்திலிருந்து விடுபட இனி நான் என்ன செய்ய வேண்டும்...

என்னை கடந்து என் உடல் மயானத்திற்கு போய்கொண்டிருக்கிறது சங்கின் ஓசையும் சேமங்குல மணியும் என் இறப்பை அறிவித்துகொண்டிருக்க சிதறிய பூக்கள் மீது பாதம் பதித்துக்கொண்டு கிராம மக்கள் என் உடலை பின்தொடர்கிறார்கள். கடைசி நபராய் அவர்களை நான் பின்தொடர்கிறேன் இன்னும் ஏன் திலா வரவில்லை...? என் சித்தப்பா மகன் ஊர் தலைவரின் வீட்லிருந்த டெலிபோன் வாயிலாக என் இறப்பை திலா வீட்டிற்கு தெரிவித்ததை நான் பார்த்தேனே... வரும் வரையில் ஏதேனும் பிரச்சனையா..? சீக்கிரம் வந்துவிடு திலா இன்னும் சிறிது நேரத்தில் என் உடல் நெருப்பிற்கு காணிக்கையாக்கப்படும். கானும் முகங்களிளெல்லாம் உன் உருவத்தை தான் தேடிக்கொண்டிருக்கிறேன் என்னை ஏமாற்றிவிடதே திலா சீக்கிரம் வந்துவிடு.

தூரத்திலிருந்து வந்துகொண்டிருப்பது என் அப்பாவின் கார் தான். நான் நின்றிருப்பதை கவனித்தாரா என்று தெரியவில்லை அதிவிரைவாக வீட்டின் உள்ளே நுழைந்தது. சில பொழுதுகள் இலக்கியாவுடன் நெருங்கியும் தள்ளியும் இருந்தேன். அவள் என் இலக்கியா என்று ஓயாது என் மனம்  உரிமைகொண்டாடியது. யாருக்காக பிறந்தவள் அவள்... அவளே சொன்னாளே நான் அவளை தத்தெடுத்துவிட்டேன் என்று நானும் உனக்காக பிறந்தவள் தான் இலக்கியா... இதை எப்படி அவளுக்கு உணரச்செய்வேன். கல்லூரி முடியும் நேரமும் நெருங்கியது. இந்த நான்கு வருடத்தில் தள்ளி வைத்தே பார்த்து பழக்கப்பட்ட பிரிவு எங்கள் இருவரையும் தள்ளி வைக்க முந்திக்கொண்டு வந்தது. இலக்கியாவை இழக்க நான் விரும்பவில்லை வாழ்க்கையின் தேடலுக்காக அல்லாமல் அவளை என்னுடன் தக்கவைத்து கொள்வதற்காகவே மேற்படிப்பிற்க்கு டெல்லியில் உள்ள கல்லூரியில் இருவருக்கும் சேர்த்து விண்ணப்பித்திருந்தேன். இலக்கியாவின் பெற்றோரை சமரசம் செய்து அவளை என்னுடன் டெல்லிக்கு அழைத்து செல்வதே என் திட்டம். இல்லக்கியாவை கடத்தி செல்லும் மனநிலையில் தான் என் மூளையும் இயங்கிக்கொண்டிருந்தது. இல்லகியா என்னுடன் இருந்தால் போதும் அதற்கான வேளையிலும் ஆயுத்தமானேன். அவள் ஊருக்கு சென்ற ஓரிரு வாரங்களில் அவளிடம் வந்த கடிதம் தான் நான் தீட்டி வைத்திருந்த திட்டத்திற்கு முழுவதுமாக முழுக்கு போட்டது.

உள்ளே நுழைவதற்கு முன்பே இடுகாட்டின் வாசம் வா... வா... வென்று வரவேற்றது. பேருந்தில் ஏறுவதற்கு முன் அவள் கொடுத்த அரவணைப்பும், என் தோள்களில் படிந்த அவளது கண்ணீரும் ஊருக்கு வந்து சேர்ந்த பொழுதும் கூட  என்னை விட்டு விலகவில்லை. அவள் கொடுத்த வாக்குறுதி இன்னும் இரண்டு வருடம் நீடிக்க செய்யும் என்னும் நம்பிக்கையில் அவளுக்காக காத்திருந்தேன். எங்கிருந்தோ வந்த ஆள் அடையாளம் தெரியாத உறவுமுறை திருமணம் என்னும் சுழிக்குள் என்னை மூழ்க வைக்கும் ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது. என் அனுமதியின்று எப்போதோ நிச்சயிக்கப்பட்ட விஷயமாம்... அவளுடன் இருந்த நாட்கள் இனி வரப்போகும் நாட்களில் கிடைக்குமா...? என் வீட்டு அந்நியர்கள் என் வாழ்க்கை வடிவத்தை வரைந்து கொண்டிருக்கும் அனைத்து விஷயங்களையும் அவளுக்கு கடிதம் எழுதினேன் நான் தற்கொலை செய்யவிருக்கும் விஷயத்தை தவிர...

அப்பாவின் காரை தொடர்ந்து சிறிது நேரத்தில் போலீஸ் ஜீப்பும் அதை தொடர்ந்து ஆம்புலன்ஸ் வண்டியும் என் வீட்டு வாசலில் முன் வந்து நின்றது. வெள்ளை சீருடை அணிந்து ஆம்புலன்ஸிலிருந்து குதித்தவர்கள் வீட்டினுள் பிரவேசித்து அவர்தம் வேளைகளில் ஈடுபட்டார்கள். வீட்டு வாசலில் சலசலப்புடன் பரிட்சயமான அக்கம் பக்கத்து முகங்கள் தென்பட தொடங்கின. கை குட்டையால் கண்களை துடைத்துக்கொண்டு மூக்கு கண்ணாடியை கையில் பிடித்தபடி தேம்பியவாறு வெளியே வந்துகொண்டிருந்தார் என் அப்பா. தன் முந்தானையால் முகத்தை பொத்திக்கொண்டு அழுதுகொண்டே வெளிவந்தாள்  வேலைக்காரி. உச்சுக்கொட்டிகொண்டு காற்றோடு கலந்துவந்த புலம்பல்கள் வீட்டு வாசலில் முன் பரவியது. கருப்பு உடை அணிந்து ஸ்ட்ரெக்சரில் தூக்கிசெல்லப்பட்ட ஓர் உடல் அருகில் சென்று பார்த்தேன் இமை மூடிய எனதுருவம் தெரிந்தது. 

“பாக்குரவங்க... கடைசியா முகத்த பாத்துக்கலாம்...” கையில் வரட்டியை வைத்துகொண்டு வெட்டியான் ஏலம் விட்டுக்கொண்டிருந்தான். எவரிடமிருந்தும் மறுமொழி வராமல் இருக்கவே அந்த சொர சொரப்பான வரட்டியை என் முகத்தில் போர்த்தி என் அப்பாவிடம் கொள்ளியை கொடுத்து அவரை ஆழுதப்படுத்தினான். உடலோடு சேர்ந்து என் ஆசைகள் எரிந்துகொண்டிருந்தது தொலைவில் நின்றவாறே நான் சாம்பலாகிக்கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

ஒவ்வொரு வண்டியும் கண்ணில் இருந்து மறைய தொடங்கின... வாசலில் நின்றுகொண்டிருந்த முகங்கள் அவரவர் வீட்டிற்கு சென்றன... நான் இன்னமும் என் வீட்டு வாசலிலே நின்றுகொண்டிருக்கிறேன்.

திலா அவள் அம்மாவின் இறப்பைபற்றி பேசியிருக்கிறாள், இலக்கியா ஜாதி கலவரத்தில் அவன் அண்ணன் இறந்ததைபற்றி பேசியிருக்கிறாள், திலா தன் பள்ளிபருவத்தைபற்றி பேசியிருக்கிறாள், இலக்கியா தன் கிராமத்தைபற்றி பேசியிருக்கிறாள், திலா தனக்கு பிடித்த நடிகரை பற்றி பேசியிருக்கிறாள், இலக்கியா தனக்கு பிடித்த பாடலை பற்றி பேசியிருக்கிறாள். ஏதேதோ விஷயங்களை பேசியிருக்கிறோம் ஆனால் காதலைபற்றி இதுநாள்வரையில் நாங்கள் பேசியதே இல்லை.

உடல் - சிறுகதை - பிரவீன் குமார்


உடல்

ஏன் டா பேச மாட்டேங்குற, என்னோட புலம்பல் உன் காதுல விழலியா... இல்ல நீ வேணும்னே பண்ணுற, எனக்கு தெரியாது இப்போ நீ என் கூட பேசனும்... பாரு நான் அழகா தானே இருக்கேன் உனக்கு என்ன குற வெச்சேன். எதனா பேசு ப்ளீஸ்...

இரைச்சலோடு கலந்த தண்ணீர் பிழியும் சத்தமும் கலைப்பில் மெதுவாக சுற்றிகொண்டிருந்த மின்விசிறியின் சத்தமும் எச்சரிக்கையின் ஒலியாய் கேட்டுக்கொண்டே இருந்தது. சரி சீக்கிரம் வா நான் பெட்ரூம்ல வெயிட் பண்ணுறேன் கூடவே வெட்கத்தொனியுடன் கீறிச் என்னும் சிரிப்பின் சத்தம். முட்டிக்கொண்டு வந்த சிறுநீர் என்னை எழுப்பியது. படுக்கையில் இருந்து எழுந்து சென்று அவசரமாக சிறுநீர் கழித்தபின் பல் துவக்கினேன். மணி ஐந்தை கடந்துகொண்டிருப்பதை பின்வாங்கிக்கொண்டிருக்கும் சூரிய கதிர்கள் ஜன்னல் வழியே எனக்கு உணர்த்தியது. மீண்டும் அவளின் குரல்

“என்ன ஏன் இப்படி சாவடிக்குற, நாய் மாதிரி தொண்ட கிழிய கத்திட்டு இருக்குறது உன் காதுல விழலியா...?”

பல் துலக்குவதிலேயே தீவிரம் காட்டினேன் நுரையால் பற்களும் உதடுகளும் மொழுகிக்கொண்டிருந்தது. வழக்கமான பிதற்றல்கள்  செவிகளில் ஊர்ந்தபடி இருந்தன. நான் தினசரி அருந்தும் விஸ்கியும் வாட்ச்மேன் வாங்கி வைத்துவிட்டு போன சப்பாத்தி பார்சலும் மேசையின் மேல் எனக்காக காத்திருந்தது.

“டேய் ஏன்டா... ஒரு நாள் கூட உன்னால குடிக்காம இருக்க முடியாதா? குடல் வெந்து சாக போற பாரு, ஏன் நான் சமைச்சத சாப்டா உனக்கு  இறங்காதா?”

வெறுப்பும், கோவமும் ஒருசேர கலந்து அக்குரலில் வலிமை மேலோங்கியது. அவளிடமிருந்து வந்த வார்த்தைகள் என் பழக்க வழக்கங்களை அலங்கரித்தபடி இருந்தன. நிராகரிப்பு... அதையே தான் திருப்பி கொடுத்தேன் விஸ்கியின் புளிப்பு நெடியில் அவ்வார்த்தைககளும் என்னுள் கரைய முந்திரி பருப்புகளை அசைபோட்டபடி மாடிக்கு சென்றேன் இடது கையில் விஸ்கி பாட்டிலும் என்னுடன் பயணித்தது.

ஏதேதோ வண்ணங்களில் நான் வாழ்ந்துகொண்டிருக்கும் நகரம் மின் விளக்குகளால் ஜொலித்தது. வானில் மினுங்கும் நட்சத்திரங்களை விடுத்து போக்குவரத்து  நெரிசலில் மினுங்கும் வண்டிகளை பார்த்தபடி இருந்தேன். என் கணிப்பு சரியாக இருந்தால் இப்பொழுது மணி எட்டை கடந்திருக்கும். நீண்ட நேரமாக என் பிடியில் ஊசாலாடிக்கொண்டிருந்த விஸ்க்கியை முழுவதும் குடித்தேன்.

மதுவில் லயித்த உடல் வேறு கிரகணம் செல்வது போல் இருந்தது... ஆனால் இந்த மனம் பின்னோக்கி மட்டுமே பயணம் செய்ய எத்தனிக்கிறது. என் குரலின் தொனிஎன் சிரிப்பு, என் அழுகை... அனைத்தையும் தொலைத்த வெற்று உடலுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நான் கடைசியாக எப்போது யாரிடம் பேசினேன் என்பது கூட நினைவில் இல்லை. இந்த தனிமை.. அது தான் என்னை கொண்டாடிகொண்டிருக்கிறது அதன் விருப்பப்படியும் என்னை இயக்கிக்கொண்டிருக்கிறது..

அவளாகவே வந்து என்னை சந்தித்தாள் அவளின் வேண்டுதலுக்கு செவி சாய்க்காமல் கடந்திருந்தால் இந்நேரம் நான் மாடியில் தன்னந்தனியே நின்று போக்குவரத்து நெரிசல்களை ரசித்துகொண்டிருக்க வேண்டிய அவசியம் நேர்ந்திருக்காது. எப்போதும் போல் காமிராவை தூக்கிக்கொண்டு அறிமுகம் இல்லாத ஏதோ ஒரு பெண்ணை என் ரசனைக்கு ஏற்றபடி கிளிக் செய்துகொண்டிருப்பேன்.

“சரி உன்னோட முடிவு தான் என்ன...?”

“அதான் நேத்து போன்லியே சொல்லிட்டேனே...”

“அது எப்படி என்ன புடிக்காம போகும் நாம பேமிலி பிரண்ட்ஸ் தானே...?”

“உன்ன புடிக்கலனு சொல்லல மேரேஜ் பண்ணிக்க எனக்கு விருப்பம் இல்லனு தான் சொல்லுறேன்..”

அவள் முகத்தை முழுவதும் பார்க்காமல் நான் எடுத்த பெண்களின் புகைப்படங்களை எனது லேப்டாப்பில் பார்த்துக்கொண்டிருந்தேன்.

“ஆனா எனக்கு உன்ன புடிச்சிருக்கு காரணம் தெரில நீ என்ன நிராகரிச்சது கூட ஒரு காரணமா இருக்கலாம்...”

என் அனுமதியின்றி என் அருகில் வந்து அமர்ந்தாள். நான் சட்டென்று எனது லேப்டாப்பை மடித்தேன். இறுக்கமாக பச்சைநிற சுடிதார் ஒன்றை அணிந்திருந்தாள் அவளிடமிருந்து வந்த நறுமணம் என் உடலைமட்டுமல்லாது என் உணர்வுகளையும் ஸ்பரிசித்தது.

“என்ன பாரு நான் அழகா இல்ல... சரி மேரேஜ் பன்ன புடிக்கல ஆனா லவ் பண்ண புடிக்கும்ல நாம லவ் பண்ணலாமே...

அன்று அவளை பார்த்து நான் செய்த புன்னகையை தான் மூன்று வருடங்களாக தேடவேண்டி இருந்தது. வெறுமையால் சூழப்பட்டு தனிமையில் புதைந்துகொண்டிருக்கும் இந்நிலையோடு ஒவ்வொரு இரவும் போராடிக்கொண்டிருகிறேன்.

லேசாக பசித்தது மீண்டும் அறைக்கு சென்று பார்சலில் தகனம் செய்யப்பட்டிருந்த சப்பாத்தி இரண்டை சாப்பிட்டேன்.
மிதமான போதை தெளிவின் விளிம்பில் தொங்கிக்கொண்டிருக்கும் சமயத்தில் அதே அலார ஒலி.. தினசரி நான் வெளி உலாவும் நேரம் நெருங்கியதும் கார் சாவியை எடுத்துக்கொண்டு வழி அறியா பாதையை தேடிக்கொண்டு விரைந்தேன். நீண்ட நேர பயணத்திற்கு பின் ஓர் பாலத்தை தஞ்சம் அடைந்தேன் இடம் சரியாக தெரியவில்லை முன்னமே வந்தது போல் தோன்றியது. மஞ்சள் மின்விளக்குகளில் பாலம் நனைந்துகொண்டிருந்தது இன்றைய இரவு இந்த பாலத்தின் நீண்ட வழி யாத்திரை மூலம் விடியலை சந்திக்க முடியும் என்று காரின் வேகத்தை குறைத்துக்கொண்டேன்..
அவ்வப்போது என்னை கடந்து விரைந்து செல்லும் கார்களின் சத்தம் மட்டுமே அவ்விரவில் என்னுடன் உரையாடிக்கொண்டிருந்தன. எனது அறையில் சீண்டிக்கொண்டிருக்கும் அந்த குரல் இப்பொழுது என்னை பின்தொடரவில்லை அதிலிருந்து விடுபடுவதற்கான இரவை தான் இந்த பாலத்தின் துணையோடு கழித்துக்கொண்டிருக்கிறேன்.

பாலத்தை கடந்து சவுக்கு தோப்பிற்கு இடையில் அமைந்த சாலையில் என்னுடைய கார் ஊர்ந்துகொண்டிருந்தது அருகில் கடற்கரை ஏதேனும் இருக்க வேண்டும் வெண்மையில் உருகிகொண்டிருந்த நிலவு எனக்கு அதை தான் உணர்த்தியது. சிகரெட் புகைக்கவேண்டும் போல் தோன்றியது இடது பக்க இண்டிகேட்டரை மினுங்கவிட்டு காரை ஓரமாக நிறுத்தினேன்.

பச்சைநிற மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட எதிரில் இருந்த ரெஸ்டாரண்டை வெறித்து பார்த்தபடி புகைத்துக்கொண்டிருந்தேன். சற்று நிமிடத்தில் ரெஸ்டாரண்டில் இருந்து வெளிவந்த ஒரு பெண் சாலையை கடக்க எத்தனித்துகொண்டிருந்தாள். அவளை பின்தொடர்ந்த ஒரு வாலிபன் தடுப்பு சுவராய் அவள் எதிரில் நின்றுகொண்டு அவளோடு விவாதித்துகொண்டிருந்தான். இருவரின் உரையாடலிலும் ஒருவரை ஒருவர் பழிசுமத்தும் காட்சிகள். இறுதியாக அவனிடம் விடுபட்டு சாலையை கடந்து வந்தவளின் நடையின் சாயலில் சினத்தின் வேகம் தெரிந்தது. சிந்தனையின் போக்கில் கேசத்தை கோதிக்கொண்டு சுற்று முற்றும் பார்த்து நான் நின்றிருக்கும் திசையை நோக்கி விரைந்துவந்தாள். பாதி கரைந்திருந்த சிகரெட்டை கீழே போட்டு அனைத்து என் காரை எடுக்க ஆழுத்தமானேன் அதற்குள் என்னை நெருங்கிய அவள்    

“ஸ் க்யூஸ் மீ என்னை பக்கதுல இருக்குற ஹோட்டல்ல டிராப் பண்ண முடியுமா ப்ளீஸ்”

என் அறையில் நச்சரித்துகொண்டிருக்கும் அந்த குரலை ஒத்தியதுபோல் இருந்தது இந்த குரல். எந்த எதிர்வினையும் கொடுக்காமல் காரின் கதவை திறந்து கிளம்ப தாயரானேன். மீண்டும் தொடர்ந்தது அந்த குரல்

“எனக்கு உங்க உதவி தேவ ப்ளீஸ்”

சில வினாடி அவளது முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன் நான்  புகைப்படம் எடுத்த பல பெண்களிடம் தெரிந்த அதே நளினம். காற்றோடு அவளது கேசம் போராடிக்கொண்டிருந்தது. உதட்டில் சிவப்பை அணிந்திருந்தாள், நீல நிற டீஷர்ட்டும் ஜீனும் அவளது ஒல்லியான தேகத்தை இறுக்கமாக அணைத்துகொண்டிருந்தது.

“ம்.. வாங்க”

தேங்க்ஸ் என்று சொல்லிவிட்டு இடது பக்க கார் கதவை திறந்து உள்ளே அமர்ந்தாள். பொறுமையாகவே காரை ஓட்டிக்கொண்டிருந்தேன் அவளும் அதை தான் விரும்பினாள் போலும். விரல் நகத்தை கடிப்பதும், நெற்றியை தடவிக்கொள்வதுமாக விரக்தியின் பிடியில் அவள் இயங்கிக்கொண்டிருந்தாள். தன்னை தானே ஆசுவாசப்படுத்திக்கொள்ள முயற்சித்து கொண்டிருந்தவளின் உடல் ஒத்துழைக்கவில்லை என்பது அவளது உடல் நெளிவில் தெரிந்தது. அவ்வப்போது அவள் பக்கம் என் பார்வையை செலுத்தியபடி அமைதியாக காரை ஓட்டிக்கொண்டிருந்தேன்.

“எனக்கு ஸ்மோக பண்ணனும் சிகரெட் இருக்கா..?”

மன அழுத்தத்திற்கான மருந்து தேவைப்படும் பட்சத்தில் இடமும் சூழலும் ஒதுங்கி இருக்க தானே செய்கிறது. அவள் எதை பற்றியும் யோசிக்கவில்லை என் முகத்தையே பார்த்துகொண்டிருந்தாள்.

கொஞ்ச நேரத்திற்கு பிறகு மீண்டும் இடது பக்க இண்டிகேட்டரை மினுங்கவிட்டு காரை ஓரமாக நிறுத்தினேன். பேண்ட் பாக்கெட்டிலிருந்த சிகரெட் பெட்டியை அவளிடம் நீட்டினேன் அதிலிருந்து ஒன்றை எடுத்து காரின் மீது சாய்ந்தபடி அவள் புகைக்க துடங்கினாள். நானும் புகைத்தேன் அவள் விழிகளில் இருந்து கண்ணீர் கசிந்ததா என்று தெரியவில்லை கைகுட்டையால் அவ்வப்போது கண்களை துடைத்துக்கொண்டாள். மௌனத்தை மட்டும் பரிமாறியபடி இருவரும் அமைதியாக நின்றிருந்தோம்.

“லிப்ட் கொடுத்தீங்கறதுக்காக எதுவும் பேசாம இருக்கனும்னு இல்ல எதாவது பேசலாமே...”

எந்த பதிலும் கொடுக்காமல் இருளின் திசை பார்த்தபடி அமைதியாகவே நின்றிருந்தேன்.

“ஓகே.. எனிவே தேங்க்ஸ் நீங்க கிளம்புங்க நான் இப்படியே நடந்து போறேன்... கத்தி அழணும்னு தோணுது ஆனா அழ தான் வர மாட்டேங்குது... அழறதுக்கு முயற்சி பண்ணி பாக்குறேன் பாய்...”

என்னை கடந்து போக இருந்தவளை வழி மறித்தேன்

“அழுறதுக்கு முயற்சி பண்ணலாம் தப்பு இல்ல ஆனா தற்கொலைக்கு முயற்சி பண்ணுறது தான் தப்பு”

உதட்டை சுழித்துக்கொண்டு பொய்மை கலந்த சிரிப்புடன் என்னை பார்த்தாள்.

“நீங்க சொன்னதுக்கு அப்புறம் அதையும் முயற்சி செஞ்சு பார்க்கலாம்னு தோணுது...”

தன் இரு கைகளையும் உடலுடன் அணைத்தபடி அமைதியாக நின்றிருந்தாள் சிறிது நேர இடைவேளைக்கு பின்

“காதல்ங்குற பேர்ல பொண்ணுங்க எதை எல்லாம் இழக்க வேண்டி இருக்கு... ஆனா ஒரு விஷயம் தெளிவா தெரியுது பசங்களுக்கு ஒன்னு மட்டும் தான் தேவ.... உடம்பு பொண்ணுங்களோட உடம்பு... அதுக்குதானே இந்த வேஷம் எல்லாம்...”

ஓரளவு என்னால் யூகிக்க முடிந்தது... ஏமாற்றம், துரோகம், வஞ்சகம் இது தானோ பெண்களின் தேடல்...

“உண்ம தான் அதே சமயம் பெண்களுக்கும் ஒரு உடல் தேவ படுது... அதனாலே தான் இந்த பிரச்சன எல்லாம்... தன்னோட உடலை மட்டுமே ரசிக்குற, கொண்டாடுற பெண்களும் இந்த உலகத்துல இருக்காங்க அவங்களுக்கு எல்லாம் இந்த பிரட்சன வரதில்ல..”

“தன்னோட உடலை மட்டுமே ரசிக்குற பெண்களா...! அப்படிப்பட்ட பெண்களும் இந்த உலகத்துல இருக்காங்களா என்ன?”

“இருக்காங்க... அவங்க ஒரு வகையான மனிதர்கள்”

சிறிது நேர அமைதிக்கு பின் மீண்டும் தொடர்ந்தாள்...

“சரி அந்த மாதிரியான மனிதர்களுக்கு செக்ஸ் தேவ படாதா...? அவங்களோட வாழ்கைல ஆண்களுக்கு இடம் இல்லையா...?”

“அவங்களுக்கு எப்போவுமே செக்ஸ் வெச்சுக்க தோனாது... அவங்களோட வாழ்கைலியும் ஆண்கள் இருக்காங்க ஆனா படுக்கைல மட்டும் இடமில்ல...”

குழப்பம் அடைந்தவளாக அவளது முகம் சிறு கோணல்களை வரைந்துகொண்டிருந்தது.

அது எப்படி அவ்வளவு நிச்சயமா சொல்லுறீங்க உங்க கிட்ட என்ன ஆதாரம் இருக்கு?

நான் வலது பக்கமாக சுற்றி வந்து கார் கதவை திறந்து அவளை உள்ளே அமரும்படி செய்கை செய்தேன். எந்த பதிலும் சொல்லாமல் உள்ளே அமர்ந்தவள் என் பதிளுக்காக காத்திருந்து என்னையே பார்த்துகொண்டிருந்தாள் நானும் தயாரானேன். யார் என்று முன்பின் தெரியாத முகம் அறியாத... ஒரு பெண்ணிடம் விளக்க வேண்டிய அவசியம் எனக்கு நேர்ந்திருப்பதாக தோன்றியது... யோசித்து பார்த்தால் என்னால் கட்டமைக்கப்பட்ட உரையாடலின் தொடர்ச்சி.

நான் ஒரு போட்டோகிராப்பர் ஆனா இயற்கையையோ மத்தவங்க திருமணத்தையோ படம் பிடிக்குற வழக்கமான போட்டோகிராப்பர் இல்ல பெண்களின் உடலை மட்டுமே எடுக்குற ஒரு போட்டோகிராப்பர்...

“ஓ.. அப்போ நீங்க ஒரு பார்ன் போட்டோகிராப்பர்”

“அது உன்னோட பார்வ... இது ஒரு கலைனு சொல்லி உன்ன குழப்ப விரும்பல ஆனா இத கலையா பாக்குற பெண்கள் தான் என்ன தேடி வராங்க... அவங்க உடல அவங்க ரசிக்குற மாதிரி தான் எடுத்து கொடுக்குறேன்... என்னோட கிளைன்ட் பல ஊர்ல இருக்காங்க நிறைய இடத்துக்கு போய் இருக்கேன் இது மூலமா நிறைய சம்பாதிச்சும் இருக்கேன்...”

அவள் முகத்தில் தீவிரம் தெரிந்தது... தன் நிலை மறந்து நான் சொல்லிகொண்டிருந்த விஷயங்களில் மட்டும் இப்போது கவனம் செலுத்தியபடி இருந்தாள்.

“அவங்களுக்கு செக்ஸ் தேவபடுறது இல்லனு உங்களால எப்படி நிச்சயமா சொல்ல முடியும்...”

“நான் அவங்க கூட பழகி இருக்கேன்... தன் உடல் மீதான ஒரு காதல், அதனோட தான் அவங்க வாழ்ந்துட்டு இருக்காங்க... தன்னோட முக அழக கண்ணாடி முன்னாடி நின்னு பார்த்து பூரிக்குற பெண்கள் மாதிரி தான் இவங்களும்... இயற்கையாவே அவங்க உடல அவங்க ரசிக்குறாங்க, பாதுகாக்குறாங்க, கொண்டாடுறாங்க அதனால தான் எந்த ஆணையும் அவங்க நெருங்கவிடுறது இல்ல. இந்த மாதிரி பெண்களுக்கு செக்ஸ்ல ஆர்வம் வராததுக்கு காரணம் தன்னோட உடல ஆண்கள் பேப்பர் மாதிரி கசக்கி வீசி எரிஞ்சுடுவாங்களோ அப்படிங்குற பயம்...”

“ரொம்ப ஆச்சரியமா இருக்கு இந்த மாதிரி பெண்கள் எங்க இருக்காங்க... எத்தன பேற இதுமாதிரி சந்திச்சு இருக்கீங்க....”

என் பெற்றோர்கள் கூட அறிந்திராத என் வாழ்வின் ரகசியத்தை தான் அவளிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். ஒரு ஆணின் அந்தரங்க செயலை பரிட்சயம் இல்லாத ஒரு பெண் அறிந்துகொள்வதில் எதிர்பாராத ஆபத்துகள் வரிசைகட்டி நின்றுகொண்டிருப்பதை பல பொழுது நான் அனுபவித்து இருக்கிறேன். இப்படியே இதற்கொரு முற்றுபுள்ளி வைத்து நகர்ந்தால்... அப்படி சொன்னால் தான் என்ன...? எத்தனை நாட்கள் தனிமையுடன் உரையாடிக்கொண்டிருப்பது... என் காரில் இருந்து அவள் இறங்கும் வரையில் இந்த உரையாடல் நீளட்டும் என்று முடிவெடுத்தேன்.

“இருக்காங்க... ஒரு மானவியாவோ... நடிகையாவோ... உயர் அதிகாரியாவோ இப்படி எல்லா இடத்துலயும் இருக்காங்க, எனக்கு சரியா கணக்கு தெரியல என்னோட ப்ரொபஷன்ல ஐநூறுக்கும் மேல இந்த மாதிரி பெண்கள நான் போட்டோ ஷூட் எடுத்து இருக்கேன். இன்டர்நெட் மூலமா தான் இவங்க எல்லாரும் என்ன காண்டாக்ட் பண்ணுறாங்க. ஒரு எட்டு வருஷமா இந்த ஜாப் சீக்ரெட்ஹா தான் செஞ்சுட்டு வந்தேன் இப்போ ஒரு மூணு வருஷமா பண்ணுறது இல்ல நிறுத்திட்டேன்”.

அவள் இடத்தில் இருக்கும் எந்த ஒருவரும் கேட்க எத்தனிக்கும் அதே கேள்வி தான்

“ஏன்...?”

சிறிது நேர இடைவேளைக்கு பின் மீண்டும் தொடர்ந்தேன்.

“என் மனைவிக்கு இந்த விஷயம் தெரிஞ்சுடுச்சு அவ சூசைட் பண்ணிகிட்டா”

இது அனுதாபத்தை ஏற்படுத்துவதற்கான உரையாடல்கள் அல்ல... தெளிவுபடுத்த விரும்பிய... தனிமையின் பிடியில் இருந்து விலக நானே அமைத்துக்கொண்ட நிர்பந்தத்தின் உரையாடல்... அவள் இப்பொழுது முகத்தை தொங்கவைத்துக்கொண்டாள்.

“சாரி... தனக்கு சொந்தமானவன் வேற ஒரு பொண்ணோட உடல பார்க்க கூடாதுனு நினைக்குற பொண்ணுங்க தான் இந்த உலகத்துல அதிகம் இருக்காங்க...”

“உண்ம தான் அதனால தான் இந்த விஷயத்த அவகிட்ட இருந்து மறைச்சேன்... அதுவும் இல்லாம அவ என்ன அதிகம் காதலிச்சா எந்த ஒரு விஷயத்தையும் சந்தேக பார்வ இல்லாம அவ பார்க்க மாட்டா... என்னாலையும் ரொம்ப நாளைக்கு மறைக்க முடியல என்னோட லேப்டாப்ல நான் எடுத்த போட்டோஸ் எல்லாம் அவ பார்த்ததுக்கு அப்புறம் ஒரு விவாதத்துல நானே எல்லா விஷயத்தையும் போட்டு உடைச்சுட்டேன்..”

“ஆனா நீங்க புரிய வைக்க முயற்சி செஞ்சு இருக்கலாம் இது உங்களோட ப்ரொபஷன்னு”

“இது என்னோட ப்ரொபஷன் தான்... ஆனா அதையும் தான்டி ஒரு சிக்கல் இருந்துச்சு அது மேரேஜ்க்கு அப்புறம் தான் நான் உணர்ந்தேன்... நான் நிறைய பெண்களோட உடம்ப தண்ணிலியும், கடல் மண்ணுலியும், நெருப்பு வெளிச்சத்திலியும், காடுலியும் ரொம்ப அழகா நான் நினைச்ச மாதிரி ரசிச்சு போட்டோ ஷூட் எடுத்து இருக்கேன். ஆனா அதே பிரச்சன என் மனைவிகிட்ட இருந்தும் வரும்னு நான் எதிர் பார்க்கல. அவளுக்கும் ஒரு உடல் தேவ தன்னோட காம தீய அணைக்க கணவனோட உடல் தேவ பட்டுச்சு. ஆனா என்னோட உடல் அதுக்கு தயாரா இல்ல, அவள நிர்வானபடுத்தி பார்க்கும் போது என்ன அறியாமலே கேமிராவா எடுத்து அவ உடல பல கோணத்துல போட்டோ எடுக்க ஆரம்பிச்சேன். அவ என்ன விசித்திரமா பார்த்தா எனக்கும் அப்போ தான் ஒரு உண்ம தெரிஞ்சுது இயற்கையாவே எனக்கும் செக்ஸ்ல ஆர்வம் இல்லனு. நான் பார்த்த எந்த ஒரு உடலும் எனக்கு இதுவரைக்கும் செக்ஸ் ஆர்வத்த தூண்டல. இனிமேலும் தூண்ட போறதில்ல என்னோட கண்களும் கேமிரா வடிவத்துல தான் பெண்களோட உடம்ப இத்தன வருஷமா பார்த்திட்டு இருந்திருக்கு.

கண்கள் அகல விரிய அவள் என்னையே பார்த்துகொண்டிருந்தாள். காரின் பிரேக் பிடியில் அவளது கவனம் சிதைந்தது அவள் இறங்க இருக்கும் ஹோட்டல் வாசலின் முன் காரை நிறுத்தினேன்.

அமைதியாக கீழே இறங்கியவளின் பார்வை விவரிக்க முடியாத வினோதத்துடன் என் மேல் படிந்தது. விடைபெறுதளுக்கான நேரம் வழமையான சிரிப்பை வரவைக்க முயற்சி செய்து என்னை நெருங்கினாள்.

“குட் நைட்... இப்போ எங்க நேரா வீட்டுக்கு தானே...”

“இல்ல நான் விடிஞ்சதும் தான் வீட்டுக்கு போவேன் இரவு நேரத்துல நான் வீட்ல தங்குறது இல்ல என் மனைவி இறந்து போன இந்த மூணு வருஷமா...”

அவளது இரு புருவ நெரிசலுக்கு இடையில் கேள்விக்குரியின் பிம்பம் மிருதுவாக உருபெற்றது... இம்முறை ஏன்...? என்று அவள் கேட்பதற்கு முன் நானாகவே தொடர்ந்தேன்...

“எனக்கும் அவளுக்கும் இரவு நேரத்துல தான் சண்ட நடக்கும் என் மனைவியோட குரல் என்ன பின்தொடர்ந்துகிட்டே இருக்கு,. நானும் இரவு நேரத்துல வீட்ல தங்குறது இல்ல...”

காரை ஸ்டார்ட் செய்து கிளம்ப இருந்த என்னை மீண்டும் வழி மறைத்தாள்.

“நாளைக்கு உங்கள நான் சந்திக்கனும் இதுல இருந்து மொத்தமா நீங்க விடுபடுவீங்க... இந்த ஹோட்டல்ல தான் இருப்பேன் நாளைக்கு வரமுடியுமா ப்ளீஸ்...”

இரவை கழிப்பதற்கான இடத்தை தான் தினமும் தேடிக்கொண்டிருக்கிறேன். என்னை சூழ்ந்துள்ள தனிமையையும் நான் துறத்த வேண்டும்... பெயர் தெரியாத ஒருத்தியை சந்திக்க வருவது தவறு இல்லை என்றும் தோன்றியது. நாளை வருவதாக சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தேன்.

மறுநாள் இரவு பதினோரு மணியளவில் அவள் தங்கியிருக்கும் ஹோட்டலின் அறைக்கு சென்றேன். நீண்ட வருடங்களாக பெண்களை சந்திக்க செல்வதை தவிர்த்து வந்திருந்த நிலை மாறி இப்பொழுது ஓர் இரவில் பழகிய பெண்ணை சந்திப்பதற்காக இவ்விரவில் அவளை தேடி வந்திருக்கிறேன். 

உள்ளே நுழைந்ததும் முகமலர்ச்சியுடன் என்னை வரவேற்றாள். திரை சீலைக்குள் உடலை மறைத்து வைத்துக்கொள்வது போல் வழ வழப்பான இரவில் அணியும் ஆடை ஒன்றை அணிந்திருந்தாள். அறை முழுவதும் மஞ்சள் மின்விளக்குகள் விழித்துகொண்டிருந்தது. என்னை சோபாவின் இருக்கையில் அமரவைத்து அவள் படுக்கறைக்கு சென்று கருப்பு நிற பையை ஒன்றை எடுத்து வந்து என்னிடம் கொடுத்தாள். என் கையில் கொடுத்த வினாடியே என்னால் தீர்மானிக்கமுடிந்தது பல வருடங்களாக என்னுடன் பயணித்த அதே சாயல் கொண்ட பை.

பையை திறந்து அதுனுள் இருந்த உயர்ரக காமிராவை எடுத்தேன். மூன்று வருடங்களாக என் உடலிலிருந்து விலகி இருந்த ஒரு உறுப்பு மீண்டும் என்னுடலோடு இணைந்தது போல் இருந்தது. லென்ஸை எடுத்து கமிராவினுள் பொருத்திய கணம் என் விரல்கள் உயிர்கொண்டு கிளிக் செய்ய துடித்துகொண்டிருந்தது. கரங்களில் காமிராவை தாங்கியபடி அவளையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். என்னை மீட்டெடுத்த வெற்றியின் குறியீடாய் அவள் உதடுகள் மெல்ல விரிந்துகொண்டிருந்தது.

“நானும் என் உடல ரசிக்க ஆரம்பிச்சுட்டேன்”

வயிற்றின் மேல் பிணைந்திருந்த ஆடையின் முடிச்சுகளை அவிழ்த்து தன் உடலை பளிச்சிட செய்தாள். சட்டென்று ஆயுத்தமாக அவள் பரிசளித்த காமிராவிற்குள் என் விழியின் பார்வையை புகுத்தினேன். லென்ஸை இடதுபக்கமாக திருப்பிக்கொண்டே அவள் உடலை போக்கஸ் செய்தேன்.

கிளிக் செய்ய தயாராக காத்திருந்த எனது ஆள் காட்டி விரல் நடுங்கிக்கொண்டிருந்தது. கழுத்து அறுபட்ட நிலையில் அதன் வெட்டிலிருந்து பீறிட்ட ரத்தம் கழுத்தின் மீது வழிந்து மார்புகளை நனைத்துக்கொண்டிருந்த காட்சி காமிரவிற்குள் தெரிந்தது. மேலும் முகத்தை மட்டும் இன்னும் ஆழமாக போக்கஸ் செய்தேன். உதட்டில் இருந்து ரத்தம் வழிய குரோத பார்வையுடன் என்னை வெறித்து பார்த்துக்கொண்டிருக்கும் என் மனைவியின் முகம்.

கையில் இருந்த காமிரா நழுவி தரையில் மோதும் சத்தம் மட்டும் என் செவிகளில் விழுந்தது.

இங்குப் பேனா - சிறுகதை - பிரவீன் குமார்


இங்குப் பேனா

அந்த கடையை நெருங்கும் நேரம் மட்டும் படபடப்பும், அவசரமும் எப்படியோ உடலுக்குள் ஒட்டிக்கொள்கிறது. அத்திசை மட்டும் வேண்டாம்... கிடைக்காத ஏதோ ஒன்றை ரோட்டில் தேடிக்கொண்டு நடந்து போ.... இன்னும் கொஞ்ச தொலைவு நடந்தால் வீட்டிற்கு திரும்பும் சந்து... அதுவரை நிமிராதே... இப்பொழுது மட்டுமல்ல பனிரெண்டு வருடங்களாக மனதின் சொல்படி இணங்க மறுத்து காந்தலின் விசை ஈர்ப்பு போல் அந்த கடையின் பக்கம் திரும்புவதில் தான் ஒரு லயிப்பு உண்டாகிறது.

எனக்கு தெரியும் நான் வரும் நேரங்களில் சட்டையின் கை மடிப்பை உயர்த்திக்கொண்டும், எப்பொழுதும் அலங்கரிக்கப்பட்ட தலையை விறுவிறுப்பாக அலங்கரித்துக்கொண்டும் கடையின் வாசலில் வந்து நிற்கும் ஐசக் இப்போது இல்லை என்று. அன்னை மரியா சலூன் கடை கொஞ்ச வருடங்களாக காயத்ரி மளிகை கடையாக மாறிவிட்டிருந்தது. பல பொழுது அந்த மளிகை கடையில் பொருட்கள் வாங்கவேண்டிய தேவை இருந்தும் கூட அந்த கடைக்கு இதுவரை நான் சென்றதில்லை. நெற்றியை சொரிந்துகொண்டு நிற்கும் ஐசக்கின் முகத்தை அந்த கடையில் ஏதோ ஒரு மூலையில் தேடவேண்டி இருக்குமோ என்னும் பயம்.

வீட்டிற்கு திரும்பும் தெருவை வந்தடைந்ததும் அருகில் உள்ள மெடிக்கல் ஷாப்பில் என் மகளுக்காக ஹக்கீசும் எனக்காக நாப்கினும் வாங்கிக்கொண்டேன் நாப்கினுக்கு மட்டும் ஸ்பெஷலாக செய்தி தாள்களை அணிவித்து கொடுத்தார்கள். பள்ளி முடிந்து வீட்டிற்கு விரையும் மாணவர்களின் நடமாட்டம் அத்தெருவை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது. நானும் என் ஆசிரியர் பணியை முடித்து தான் வீட்டிற்கு விரைந்துகொண்டிருக்கிறேன்.

ஐசக்கின் தங்கை எதிரில் வந்துகொண்டிருந்தாள் அவன் நிலை குறித்து அவளிடம் விசாரிக்க நினைக்கும் நேரத்தில் பாலத்தீன் கவரில் ஊசலாடிக்கொண்டிருந்த ஹக்கீஸ் கவரும், என் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த தாலியும் எனக்கு நினைவூட்டியது நான் தாயும், மனைவியும் ஆனவள். பாதங்களை முன்வைத்தும் மனதை பின்வைத்தும் நடந்து சென்றேன். எதிரில் வந்தவளின் முகத்தை பார்க்காமல் மீண்டும் தரையில் ஏதோ ஒன்றை தேட நேர்ந்தது.

வீட்டு வாசலை நெருங்கும் முன்பே குழந்தையின் விசும்பல். என் அம்மாவின் இடுப்பில் இருந்து என் இடுப்பிற்கு தாவியவளின் கால்கள் பட்டாம்பூச்சி சிறகாய் அடித்துகொண்டது. “அம்மா வந்துட்டேன்டா செல்லம் வீட்டுக்கு லேட்ஹா வரேன்னு கோவமா அம்மா மேல” தினசரி நான் உபயோகிக்கும் சொற்கள் ஐஸ்வர்யா மெர்லினுக்கு மட்டும் எப்படி சிரிப்பை கொடுக்கின்றதோ... புடவையில் இருந்து நைடிக்கு மாறியதும் ஐஸ்வர்யாவை தூக்கிக்கொண்டு மாடிக்கு சென்றேன்.  மாடியில் நின்றுகொன்று ஐசக்கின் வீட்டை சுட்டிக்காட்டி அவளோடு உரையாடிகொண்டிருந்தேன்.

விடைத்தாள்களை திருத்த வேண்டிய வேலை அதிகம் இருந்தது மாணவர்களின் தெளிவான கையெழுத்தின் உதவியோடு சில விடைத்தாள்களை வேகமாவும் பொறுமையாகவும் திருத்திக்கொண்டிருந்தேன். திடிரென்று ஐஸ்வர்யா மெர்லின் சிணுங்கிக்கொண்டு அழ ஆரம்பித்தாள் அவளை தட்டிகொடுத்துக்கொண்டே மடியில் வைத்து பாலூட்டினேன். நெஞ்சில் இருந்த பாரம் இறங்கியது போல் இருந்தது ஆனால் அவன் நினைவுகளின் பாரத்தை எப்படி இறக்குவது...? அவன் நினைவுகளை சிதைக்க நினைக்கும் பல வருட போராட்டத்தில் அவனே தான் கடைசியில் வெற்றி காண்கிறான். இப்பொழுதும் கூட மடியில் குழந்தையை வைத்துக்கொண்டும் நெஞ்சில் அவனை வைத்துக்கொண்டும் தவித்துகொண்டிருக்கிறேன். அன்று ஐசக் சொல்லிய வார்த்தை “அவ்ளோ சீக்கிரம் என்னைய மறந்துட முடியாது செலஸ்டினா” அந்த வார்த்தைகள் தான் ஒவ்வொரு இரவும் அவன் காதலை நிரூபித்துக்கொண்டிருக்கிறது. எவ்வளவு சுலபமாக சொல்லிவிட்டான். 

ஐஸ்வர்யா மெர்லின் இப்பொழுது தூங்கிவிட்டாள் அவளை மார்பின் மேல் கிடத்திக்கொண்டு படுக்கையின் மீது மெல்ல சாய்ந்தேன். எப்பொழுதும் போல் அவளிடம் என் கதையை சொல்லும் வழக்கத்தை மீண்டும் கையில் எடுத்தேன். “ஐஸு இன்னைக்கு என்ன நாள்னு தெரியுமா...? அந்த ஐசக் பய இந்த நாள்ல தான் அவனோட காதல என்கிட்ட சொன்னான்”
ப்ளஸ் டூ தேர்வுகள் நெருங்கிக்கொண்டிருந்த சமயம் அது சிறப்பு வகுப்பை முடித்துக்கொண்டு நான் பள்ளியிலிருந்து வந்துகொண்டிருந்தேன். எப்பொழுதும் போல் சலூன் கடை வாசலிலே எனக்காக காத்திருக்கும் அவன் நான் வரும் நேரங்களில் மட்டும் கடைக்கு எந்த ஒரு கஸ்டமரும் வந்துவிட கூடாது என்பதை மனதுக்குள் ஜெபித்துகொண்டிருப்பான்.. தன் காதலை சொல்ல நினைத்து தவறவிட்டு போன நாட்கள் எத்தனை என்பது அவன் ஒருவனுக்கே தெரியும். அன்று அவனுடைய நாளாக அமைந்துவிட்டது. ஐசக் என்னை பின்தொடரும் நேரங்களில் சிறு நடுக்கங்கள் ஏற்பட்டாலும் உதட்டிலிருந்து வெட்கச்சிரிப்பு எப்படியோ முளைத்துவிடுகிறது.

“செலஸ்டினா நில்லு” பலபொழுது என் பின்னே தொடர்ந்துகொண்டிருப்பானே ஒழிய என் பெயரை சொல்லி இதுவரை உறக்க கூப்பிட்டது கிடையாது. மெதுவாக திரும்பினேன் ரிப்பன் கட்டிய சிறிய பெட்டியை பேண்ட் பாக்கெட்டிற்குள் இருந்து எடுத்து என்னிடம் நீட்டினான். “என் தங்கச்சியும் உன்கிட்ட பல தடவ சொல்லிட்டா ஆனா நீ தான் இன்னும் எதுவுமே சொல்ல மாட்டேங்குற” அதை வாங்க மறுத்து அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். “சரி இத புடி செலஸ்டினா” “எதுக்கு ஐசக்” அவன் கை விரல்கள் அவன் சிகையையே கோதிக்கொண்டிருந்தது. தரையை பார்த்துக்கொண்டே தொடர்ந்தான் “இல்ல எனக்கு பயமா இருக்கு இப்போ பிளஸ் டூ முடிச்சதுக்கு அப்புறம் நீ காலேஜ்க்கு போய்டுவ, நானும் உன்ன லவ் பண்ணுறேன்னு நிறைய பேரு உன் பின்னாடி சுத்துவான்க நான் இப்போவே சொல்லிடுறேனே... எனக்கு உன்ன புடிச்சு இருக்கு செலஸ்டினா” ஒரு ஆணின் தயக்கத்தையும், வெட்கத்தையும் ஐசக்கின் உடல் நெளிவுகளில் முதல் தடவையாக ரசிக்க நேர்ந்தது. அப்பொழுது ஐசக் அழகாக இருந்தான். தாடியை சொறிந்துகொண்டு என் பதிலுக்காக காத்திருந்தான். அவன் கொடுத்த பரிசை வாங்கிக்கொண்டு லேசாக சிரித்தபடி அங்கிருந்து நகர்ந்தேன்.

சீருடையை கூட கழற்றாமல் ஐசக் கொடுத்த பரிசை பிரித்துப் பார்த்தேன். சிவப்பு நிறத்திலான பேப்பரில் சுற்றப்பட்டு இருந்த சிறிய பெட்டியில் கருப்பு நிற இங்குப் பேனா ஒன்றை வைத்திருந்தான். உடனே எழுதி பார்க்க வேண்டும்போல் தோன்றியது எனது குறிப்பேட்டின் கடைசி பக்கத்தில் எழுதுவதற்கு தயாராய் அப்பேனா என் விரல்களின் பிடியில் நின்றுகொண்டிருந்தது. என்ன எழுதுவது...? ஐசக்கின் பெயரை எழுதி பார்க்கவே எத்தனித்தேன் ஐசக்... உடலின் ரோமங்களின் மேல் ஊர்ந்து செல்கிறானோ ஒவ்வொன்றும் தலை தூக்கியது. அவன் பெயருக்கு கீழ் என்னுடைய பெயரையும் எழுதினேன் செலஸ்டினா... இருவரின் பெயரையும் ஒரு ஆர்ட்டின் வடிவத்திற்குள் அடைத்தேன்.

காலையில் வேலைக்கு கிளம்ப இருக்கையில் ஐசுவின் அப்பாவிடம் இருந்து போன் வந்தது. அடுத்த வாரம் ஈஸ்டர் தினத்தன்று கிளம்பி வர இருப்பதாக சொன்னார். ஐஸ்வர்யா மெர்லின் பிறந்தபோது அவள் நெற்றியில் இதழ் பதித்து அன்றிரவே வெளிநாட்டிற்கு விமானம் ஏறியவர் அவளின் முதல் பிறந்தநாள் அன்று கூட வீடு திரும்பவில்லை. தோன்றும் நேரங்களில் தொடு திரையில் ஐஸ்வர்யா மெர்லின் முகத்தை பார்த்துக்கொண்டு இருந்தாலும் இருவருக்கான ஸ்பரிசம் பல மைல்களுக்கு இடையில் நின்று கையசைத்துக்கொண்டிருந்தது. வங்கிக்கு கட்டவேண்டிய வீட்டு கடன் பணத்தை என் கணக்கிற்கு பரிமாற்றம் செய்திருப்பதாக சொல்லி அழைப்பை துண்டித்தார்.

வாழையடி வாழையாக கடன் சுமையும் துரத்திக்கொண்டு தான் இருக்கிறது. ஐசக்கின் அம்மாவை விட்டால் கடன் வாங்குவதற்கு சுற்று வட்டாரத்தில் வேறு ஆட்களும் இல்லை. அன்றிரவு ஐசக் என் வீட்டிற்கு வந்திருந்தான். எப்பொழுதும் வட்டி பணத்தை வசூலிக்க அவன் வருவது தான் வாடிக்கை. அவன் அம்மாவின் வசை சொற்கள் எங்கள் வீட்டு வீதியில் தாண்டவமாடுவதை அவன் விரும்புவதில்லை. என் பெற்றோர்கள் வேண்டுவதும் கூட அது தான். அவன் ஒருவனே என் குடும்பத்தின் நிலை அறிந்தவன். எப்போதும் போல் அப்பா வாஞ்சையாகவே அவனிடம் “ரெண்டு வாரமா வேல இல்லாம வீட்ல தான் இருக்கேன் தம்பி இன்னும் எந்த ஒரு காண்டிராக்டும் வரல அடுத்த வாரம் கொடுத்திடுறேனு அம்மா கிட்ட சொல்லிடுறியா...?” அவன் எதிர்பார்க்கும் பதிலை கொடுக்க என் அப்பா எப்போதும் தவறியது இல்லை. “சரிங்கனா பொறுமையாவே கொடுங்க நான் அம்மா கிட்ட சொல்லிடுறேன்” சிரித்த முகத்துடன் அங்கிருந்து நகர்ந்தான். அந்த முகத்தை நினைத்துக்கொண்டே வேலைக்கு சென்றேன்.

பள்ளியில் சந்திப்பதற்கு முன்பே தெருவில் பார்க்கும் மாணவர்கள் “குட்மார்னிங் மிஸ்” என்று என் மீதான மதிப்பை வெளிபடுத்தினார்கள். அன்னை மரியாள் தேவாலயத்து ஊழியர்கள் சென்ற வருடம் குருத்தோலை ஞாயிறில் வைத்து வழிபட்ட ஓலையை சாம்பல் புதன் தினத்தில் வைத்து எரிப்பதற்காக ஒவ்வொரு வீடாக சென்று சேகரித்துக்கொண்டிருந்தனர். அதில் நன்கு பரிட்சயமான ஒரு ஊழியர் என்னை பார்த்ததும் நெருங்கினார்.

“செலஸ்டினா டீச்சர் உங்க வீட்லியும் போன வருஷம் குருத்தோலை இருக்குல”

“இல்லீங்க பிரதர் நான் கொஞ்ச வருஷமா எதிலும் கலந்துகுறது இல்ல”

“ஓ.. சரி ஈஸ்டர் அப்போவாவது சர்ச்சுக்கு வந்துட்டு போங்க...”

பள்ளியை நோக்கி விரைய துடங்குகையில் மீண்டும் ஐசக் மனதிற்குள் தடம் பதித்து உலாவினான். சாம்பல் புதன், புனித வெள்ளி, ஈஸ்டர் தினம், சிலுவை பாதை என்று பாதரிகளின் கட்டளைப்படி அனைத்து வேலைகளையும் முன்னமே செய்துமுடிப்பான். அன்றைய குருத்தோலை ஞாயிறிலும் கூட அதற்கான வேளையில் இயங்கிக்கொண்டிருந்தான் ஐசக்.

ஓலையில் சிலுவையை வடிமைத்து கொடுப்பதில் ஐசக் கைதேர்ந்தவன் அவனை சுற்றி சிறுசுகள் ஓலையை கையில் வைத்துக்கொண்டு “எனக்கு அண்ணா.. எனக்கு அண்ணா...” என்று அவனிடம் மன்றாடிகொண்டிருந்தார்கள். சிலுவையை வடிவமைக்க தெரியாமல் வெற்று ஓலையை வைத்துக்கொண்டு நான் அதனுடன் போராடிகொண்டிருந்ததை ஐசக் கவனித்தும்விட்டான். ஐசக்கின் மனம் என் கையில் இருக்கும் ஓலை அவன் கரங்களில் தஞ்சம் அடையவே காத்துக்கொண்டிருந்தது. சட்டென்று ஐசக்கின் தங்கை என்னிடம் இருந்த ஓலையை பிடுங்கிக்கொண்டு அவனிடம் விரைந்தாள் “இந்தானா இது செலஸ்டினா அக்காது அவங்களுக்கும் சிலுவ செஞ்சு கொடு” அவனிடம் கொடுத்துவிட்டு வரிசையில் நிற்க சென்றுவிட்டாள். உதடுகள் விரிய ஐசக் அந்த ஓலையை சிலுவையின் வடிவில் அவன் இதயத்தை உருமாற்றிகொண்டிருந்தான்.

ஓசான்னா பாடல் ஒலிக்க மரியாள் தேவாலயத்தை நோக்கி பாதிரிகள் எங்களை வழிநடத்தி சென்றார்கள். என் பின்னே ஐசக்கும் அவனது நண்பர்களும் சலசலத்தபடி இருந்தனர். நீண்ட நேரமாக மெல்லிய குரலில் ஐசக் என்னை அழைத்துகொண்டிருந்தான் என்னவென்று திரும்பி பார்க்கவோ, அவனுக்கு மருமொழியவோ அப்போதைய சூழலில் என் மனம் தைரியம் கொள்ளவில்லை. தேவாலயத்தை நெருங்கும் வரையிலும் அவனது முயற்சிகள் தோற்றுக்கொண்டிருந்தது. குருத்தோலை பவனி முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் தேவயாலத்தின் பின்புறம் அமைந்த சூசையப்பர் சிலை அருகே ஐசக் எனக்காக காத்திருப்பதை அவன் தங்கை என்னிடம் வந்து சொல்லிவிட்டு சென்றாள். அவன் மீதான கோபமே என்னை அவனிடம் கொண்டு சேர்த்தது.

“ஏன் ஐசக் ஊர்வலம் அப்போ அப்படி நடந்துக்குற... என்ன அவசரம் உனக்கு...?”

தன் சிகையை கோதிக்கொண்டே “ஸாரி செலஸ்டினா... இன்னைக்கு நான் தான் வட்டி காசு வாங்க போவேன்னு அம்மா அடம் புடிக்குது இன்னைக்கு நைட் நான் வர மாட்டேன். அதான் முன்னாடியே சொல்லிடலாம்னு உன்ன கூப்டேன்”. அவனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தேன். தேர்தல் நெருங்கும் நேரம் என்பதால் அரசியல் உருவங்களை சுவற்றில் வரைந்து காட்சியளிக்க அப்பா ஊரெங்கும் சுற்றிக்கொண்டிருந்தார். அப்படி கிடைக்கும் பணத்தில் அவரின் குடிக்கு போக துளியாய் விழும் சில்லறைகளில் தான் எனக்கும் அம்மாவுக்குமான வாழ்கை நகர்ந்துகொண்டிருந்தது.

சற்றும் எதிர் பார்க்காத நேரத்தில் அப்பா கொடுக்க வேண்டிய வட்டி பணத்தை ஐசக் என் கையில் திணித்தான். “அம்மா வந்து நைட்டு கேட்டா இந்த பணத்த கொடுத்துடு செலஸ்டினா”  நான் வேண்டாம் என்று எவ்வளவு தடுத்தும் அவன் விடுவதாக இல்லை இம்முறை மட்டும் வாங்கிகொள்ளும்படி கட்டாயப்படுத்தினான். அதற்க்கு பிறகான வட்டி பணம் முழுவதும் அவன் மூலமாக தான் கட்ட நேர்ந்தது. கடைசியாக நான் ஊர்வலத்தில் வைத்து வழிபட்ட குருத்தோலையை என் ஞாபகமாக வைத்து கொள்வதாக சொல்லி என்னிடம் இருந்து வாங்கி சென்றான். நிச்சயம் அந்த குருத்தோலை உயிர்ப்புடன் இப்பொழுதும் அவனிடம் இருக்கும்.

மதியஉணவு இடைவேளையின் போது என்னுடன் பணிபுரியும் சக ஆசிரியை ஒருவர் பிறந்தநாள் என்று அனைவருக்கும் இனிப்பை பகிர்ந்துகொண்டிருந்தார். கலகலப்பான பேச்சுகளோடும் சிரிப்புகளோடும் ஆசிரியர்கள் அவரை வாழ்த்தி கொண்டிருந்தார்கள். என் ஒருத்தியால் மட்டும் ஆர்வமின்றி அதிலிருந்து விலகி செல்ல மனது முனைந்தது. வெளியே வந்து பால்கனி வழியாக செம்மண் போர்த்திய மைதானத்தை வெறித்து பார்த்தேன். இதே மைதானத்தில், இதே பள்ளியில் என் பிறந்தநாளையும், நான் தேர்ச்சி பெற்றதையும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இனிப்பு கொடுத்து ஐசக் என்னை கொண்டாடி இருக்கிறான். வேலைக்காக எக்ஸ்போர்ட் கம்பெனி வாசலை மிதிக்க இருந்த என்னை படிப்பிற்காக கல்லூரி வாசலை மிதிக்க வைத்தான். என் பெயருக்கு பின்னால் இருக்கும் B.A. B.Ed., என்னும் பட்டம் அவன் உழைப்பினால் ஆனது, கை நீட்டி வாங்கும் சம்பளங்களில் கூட அவனது முகம் தான் பிரதிபலிக்கிறது. எத்தனையோ முறை என் கைசெலவிற்க்கும் வீட்டு செலவிற்கும் பணம் கொடுத்து உதவி இருக்கிறான் என் சம்பள பணத்தை அவனது சட்டை பாக்கெட்டில் திணித்து உரிமை கொண்டாட நினைத்த சந்தர்ப்பம் இதுவரை நிறைவேறாமலே போய்விட்டது.

ஐஸ்வர்யா மெர்லின் பிறந்தநாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது ஐஸ்வர்யா அப்பாவும் இன்று இரவு வந்துவிடுவதாக செய்தி அனுப்பினார் முதல் வருட பிறந்தநாளை விட இந்த வருட பிறந்தநாளை விமர்சையாக கொண்டாட ஐஸ்வர்யாவின் அப்பா எண்ணி இருக்கிறார். வேலைகள் பல வரிசையில் காத்துக்கொண்டிருந்தது தலைமை ஆசிரியரிடம் இரண்டு நாட்களுக்கு விடுமுறை சொல்லிவிட்டு பள்ளியை விட்டு வெளியே வந்துகொண்டிருந்தேன்.

ரோட்டோரத்தில் அமைந்த ஒயின் ஷாப்பிற்குள் இருந்து ஒரு சிலரை மிரட்டல் தொனியுடன் போலீஸ்காரர்கள் ஜீப்பில் ஏற்றிக்கொண்டிருந்தனர். ஒயின் ஷாப்பிற்கு வருகை தந்தவர்கள் போலிஸ் வண்டியை சுற்றி சலசலத்தபடி குழுமி இருந்தார்கள். நிச்சயம் ஏதாவது அசம்பாவிதம் நடந்திருக்க வேண்டும் சைரின் சத்தத்தை கிளம்பிக்கொண்டு போலிஸ் ஜீப்பிற்கு முன் சென்ற ஆம்புலன்ஸ் வண்டி அதை தான் உணர்த்தியது.

அங்கே நின்றிருக்க பிடிக்காமல் நடையில் வேகத்தை கூட்டினேன். ஐசக்கை முதுகில் அடித்து தரதரவென ஜீப்பில் ஏற்றிய சம்பவம் மீண்டும் மனத்திரையில் ஓடத் துடங்கியது. அப்போது நான் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்துகொண்டிருந்த சமயம். எங்கள் காதல் விவகாரம் வீட்டிற்க்கு மட்டுமல்ல எங்கள் குடியிருப்பு பகுதியிலும் கூட அனைவருக்கும் தெரிந்திருந்தது. பெரிதாக எந்த ஒரு தடையும் இல்லை ஐசக் தனக்கு  மருமகனாக அமைய நேர்ந்தால் தோன்றும் நேரங்களில் பணம் வாங்கிக்கொள்ளலாம் என்பது அப்பாவின் எண்ணம். ஐசக்கின் வீட்டிற்கு நான் மருமகளாக செல்ல நேர்ந்தால் தன் மகன் படித்த பெண்ணை திருமணம் செய்துகொண்டிருக்கிறான் என்று கௌரவமாக தம்பட்டம் அடித்துக்கொள்ளலாம் என்பது ஐசக் அம்மாவின் எண்ணம். இதில் என் அம்மா மட்டும் தான் எந்த ஒரு முக சாயலையும் வெளிபடுத்தாமல் முழித்துக்கொண்டிருந்தாள்.

நான் கல்லூரி முடித்து தினமும் வீட்டிற்கு திரும்பும் பேருந்தில் என்னை காதலிப்பதாக சொல்லி ஓயாது நச்சரித்து பின்தொடர்ந்துகொண்டிருந்தவனை பற்றி ஐசக்கிடம் நான் பேசியதே இல்லை. ஆனாலும் அந்த விஷயம் ஐசக்கின் நண்பர்கள் மூலம் எப்படியோ அவன் காதிற்கு எட்டி விட்டது. அன்றிரவே ஐசக் எங்கெங்கோ அலைந்து அவனை பற்றி விசாரித்து நேரில் சென்று அவனை எச்சரித்திருக்கிறான். பேச்சுவார்த்தையில் துடங்கிய சம்பவம் கடைசியில் அடிதடியில் போய் முடிந்திருக்கிறது. ஐசக் அவசரத்தில் கையில் கிடைத்த கம்பியை கொண்டு வெறியோடு அவனை அடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பி இருக்கிறான். மறுநாள் காலையில் ஐசக்கை போலிஸ்காரகள் கைது செய்யும் பொழுது தான் தெரிந்தது அவன் இறந்துபோன விஷயம். மாரில் அடித்துக்கொண்டு ஐசக்கின் அம்மா ஜீப்பின் பின்னால் ஓடியதும், கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த என்னை கண்டடைந்து கண்களாலே ஐசக் எனக்கு சமாதானம் சொல்லியதும் இப்பொழுதும் நெஞ்சில் நீங்கா தழும்புகளாய் பதிந்திருக்கிறது.

அதற்கு பிறகான நாட்களில் விசாரணைக்காக நீதி மன்றத்திற்கும் காவல் நிலையத்திற்கும் அலைந்துகொண்டிருந்தேன். தான் கைது செய்யப்பட்டதை விட தன் காதலி அடிக்கடி வீட்டிற்க்கும், நீதி மன்றத்திற்கும் அலைந்துகொண்டிருந்தது தான் ஐசக்கிற்கு வருத்தத்தை கொடுத்தது. எவ்வளவு பணம் செலவழித்தும் ஐசக்கிற்கு சாதகமாக எதுவும் அமையவில்லை என்னை சந்திப்பதையும் ஐசக் தவிர்த்து வந்தான். கடைசி சந்திப்பில் தான் ஐசக் முதல் முறையாக அழுததை என்னால் பார்க்க நேர்ந்தது. அழுதுகொண்டே என்னிடம் அவன் கேட்டுக்கொண்ட விஷயம் “என்னைய அவ்ளோ சீக்கிரம் மறக்க முடியாது செலஸ்டினா ஆனா கண்டிப்பா பார்க்காம இருக்க முடியும், இனி என்ன பார்க்க வரதா” என் பதிலுக்காக காத்திருக்காமல் கண்களை துடைத்துக்கொண்டு வேகமாக சென்றான். வருடங்கள் ஓடி விட்டது அவனுடன் கழித்த நாட்களின் ஏதோ ஒரு நினைவில் தினமும் என்னை சந்தித்து கொண்டு தான் இருக்கிறான் சிரித்துக்கொண்டும்... அழுதுகொண்டும்...

ஆயிரம் புன்னகை உதட்டில் தவழ ஐஸ்வர்யாவின் அப்பா இரவு வீட்டிற்குள் நுழைந்தார். முத்தங்களாலே ஐசுவின் உறக்கத்தை கலைத்தார். நீண்ட நாட்களுக்கு பிறகான அரவணைப்புகளும் தழுவல்களும் அவ்விரவு நீண்டுக்கொண்டே இருந்தது. பல வடிவங்களில் பரிசு பொருட்களும் துணிமணிகளும் என்னையும் ஐசுவையும் சூழ்ந்துகொண்டிருந்தது. ஐசுவின் அப்பா எனக்கென்று பிரத்தியேகமா வாங்கி வந்திருந்த பரிசை என்னிடம் கொடுத்தார் வெளிநாட்டில் தங்கத்தால் செய்யப்பட்ட பேனா ஒன்று இருந்தது மீண்டும் பழைய காதலனின் நினைவுகளை என் கணவன் வாங்கிக்கொடுத்த பேனாவே தோண்டிக்கொண்டிருந்தது. எழுதி பார்க்க மனமின்றி அப்பேனாவை பீரோவில் வைத்து பூட்டினேன்.

மறுநாள் ஐஸ்வர்யாவின் அப்பா ஐசுவின் பிறந்தநாள் ஒட்டியும் ஈஸ்டர் தினத்தை ஒட்டியும் துணிமணிகள் வாங்க எங்கள் இருவரையும் கடைக்கு அழைத்துச்சென்றார். ஐஸ்வர்யாவிற்கு துணியை எடுத்தபின் எனக்கு புடவை எடுத்து கொடுக்க இரண்டாம் மாடிற்கு அழைத்து சென்றார். ஈஸ்ட்டர் தினம் நெருங்கிக்கொண்டிருப்பதால் கூட்டம் அலைமோதியது எப்படியோ கூட்டத்தை சமாளித்துக்கொண்டு கடைசியாக ஒருவரை அணுகினோம்.

வார்த்தைகளின்றி கேட்க்கும் நிறங்களில் புடவைகளை சரசரவென  விரித்துக்கொண்டிருந்தான் அவன். பார்த்த மாத்திரத்தில் அவனால் என்னை அடையாளம்கொள்ள முடிந்தது என்னால் தான் சட்டென்று அடையாளம்கொள்ள முடியவில்லை மொட்டை அடித்து பாதி முளைத்திருந்த மயிர், உடல் மெலிந்து கூனி குறுகி நேருக்கு நேர் சந்திக்க வலுவற்று கீழே குனிந்தபடி சுழன்று கொண்டிருந்தது அவன் பார்வை. அவனே தான் ஐசக்...! வெளிவர துடித்துக்கொண்டிருந்த கண்ணீரை மனதின் பலம் கொண்டு முடிந்தவரை தடுத்தேன். ஐஸ்வர்யாவின் அப்பா சுட்டிகாட்டிக்கொண்டிருந்த புடவைகளை சலிப்பின்றி கான்பித்துக்கொண்டிருந்தான். அவனது கண்கள் சிவந்துகொண்டிருந்தது அவனும் கண்ணீரோடு போராடுகிறான். எங்கள் இருவருக்குமான சந்திப்பு இப்படியா அமைய வேண்டும்..? செலஸ்டினா... செலஸ்டினா... என்று தன் வாழ்நாளை கொண்டாடிகொண்டிருந்தவன் அதே செஸ்டினாவை பார்க்க விருப்பமில்லாமல் நாதியற்று நிற்கும் நிலைமை. என் மீதும், ஐஸ்வர்யா மீதும், ஐஸ்வர்யாவின் அப்பா மீதும் அவனது பார்வை வீசிக்கொண்டே இருந்தது. அவன் படும் அவஸ்த்தையை என்னால் பார்த்துகொண்டிருக்கமுடியவில்லை. உடல் எரிந்து சாம்பலாகிகொண்டிருப்பதை உணர்ந்தேன். அங்கிருந்து உடனே நகர வேண்டும் போல் இருந்தது கையில் சிக்கிய ஏதோ ஒரு புடவையை எடுத்துக்கொண்டு காரணங்கள் தேடி சமரசம் செய்து ஐஸ்வர்யாவையும், ஐஸ்வர்யா அப்பாவையும் அழைத்துக்கொண்டு வெளியே வந்தேன். படி இறங்கும் நேரத்தில் திரும்பி பார்க்கும் பொழுது இதழ்கள் விரிய ஐசக் லேசாக சிரித்துக்கொண்டிருந்தான். அனைத்தையும் இழந்து வெறுமையின் அரவணைப்பில் வாழ்ந்துகொண்டிருப்பதை உணர்த்தியது அந்த சிரிப்பு.

மேற்கொண்டு வேறு எந்த கடைக்கும் செல்லாமல் அர்த்தமற்ற காரணங்களை சொல்லி விடாப்படியாக இருவரையும் வீட்டிற்கு அழைத்து வந்தேன். சுதந்திரமாக கத்தி அழுவதற்கு ஒரு சுவர் கிடைத்தால் போதும் என்றிருந்தது. வீட்டிற்கும் வந்ததும் தாழ்பாளின் துணைகொண்டு கதவை அடைத்தேன். தரையில் சரிந்து கால்களை மடக்கி கழுத்தை தொங்கவைத்து அழுது தீர்த்தேன்.. ஒரு புறம் ஐசக்கின் குரல் என்னை சமாதானப்படுத்த முயற்சி செய்துகொண்டிருந்தது...

பீரோவின் மேல் இருந்த பெட்டியை கீழே இறக்கினேன் ஐசக் கொடுத்த இங்குப் பேனா பொலிவிழந்து உறங்கிக்கொண்டிருந்தது. ஆசையா... தோல்வியா... ஏமாற்றமா... எதுவென்று தெரியவில்லை ஐசக்கின் பெயரை எழுதி பார்க்க முனைந்தது. கட்டில் மேல் இருந்த என் டைரியை எடுத்து கடைசி பக்கத்தில் ஐசக்கின் பெயரை எழுதினேன்.. காற்றில் வரைய முயற்சிக்கும் எழுத்தக்களை போல் உருபெறாமலே இருந்தது ஐசக்கின் பெயர்... அந்த இங்குப் பேனா எழுதவில்லை. பேனாவை தரையில் உதறினேன் அந்த மை திட்டு திட்டுகளாக ஐசக்கின் ரத்தத் துளிகளை போல் காட்சியளிதுக்கொண்டிருந்தது. எவ்வளவு முயற்சித்தும் அந்த இங்குப் பேனா எழுதவில்லை... இனி எழுதப்போவதும் இல்லை. இந்நேரம் ஐசக் நான் கொடுத்த குருத்தோலையை வைத்து அழுதுகொண்டிருப்பான் என்று மட்டும் தோன்றியது.