Thursday, March 7, 2019

ஆட்கொணர்வு - சிறுகதை - பிரவீன் குமார்


ஆட்கொணர்வு

“டிரைவிங்ல இருந்தேன்பா அதான் கால் அட்டெண்ட் பண்ண முடியல... ப்ரீ ஆய்ட்டு நானே உனக்கு கால் பண்ணுவேனு தெரியும்ல”

“சாரி பார்த்தி நேத்து நான் கேட்டதுக்கு நீ எந்த ரிப்ளேவும் கொடுக்கல அதான் கால் பண்ணேன்”

“அப்பிடி எல்லாம் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வரமுடியாதுப்பா.. எனக்கு கொஞ்சம் யோசிக்கணும் டைம் கொடு...”

உயர் நீதிமன்ற வளாகத்தில் எனது பைக்கை பார்க்கிங் செய்துவிட்டு தம்புசெட்டி தெருவில் உள்ள “Madhavan Associates”ற்கு விரைந்து கொண்டிருந்தேன். வெயிட்டிங் காலில் எனது சீனியர் மாதவனின் முகம். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முயற்சிக்கும் இந்நேரத்தில் காதலியுடன் விவாதித்துகொண்டிருக்கும் அவகாசம் என்னிடம் இல்லை. அவளது அழைப்பை ஹோல்ட் செய்துவிட்டு என் சீனியரிடம் வழக்குகளின் விவரங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தேன்.

சீனியர் நீதிமன்றத்திற்கு செல்ல கழுத்து பட்டையை அணிந்துகொண்டு ஆயுத்தமாக இருந்தார். அவரது அங்கியையும், நாடாவால் முடித்திருந்த பச்சை நிற வழக்கு கட்டுகளையும் வைத்துக்கொண்டு இன்னொரு ஜூனியர் அவர் அருகில் நின்றிருந்தான்.

“என்ன பார்த்தி இவ்ளோ லேட்ஹா வர?”

“சாரி சார் பேசின் பிரிட்ஜ்ல டிராபிக் அதான் லேட்”

“என்னபா நீ மட்டுமா வியாசர்பாடில இருந்து வர... எவ்ளோ பேரு வராங்க இப்படி தினமும் லேட்ஹா வந்தா தொழில் கத்துக்க முடியாது தம்பி...”

அவருக்கு மறுமொழிய காரணம் இருந்தும் அமைதி காத்தேன்... மீண்டும் சீனியரின் குரல் அதிகாரம் செலுத்தியது

“சரி பார்த்தி.. லட்சுமணன் கேஸ் பேப்பெர்ஸ் வந்துருக்கு அத ஜெராக்ஸ் போட்டு “Type Set” ரெடி பண்ணிடு நான் பேமிலி கோர்ட் வரைக்கும் போய்ட்டு வந்துடுறேன்”

எனக்கான வேலையை அவர் யோசிக்கவில்லை சட்டம் படித்த எனக்கு எப்பொழுதும் கிளார்க் வேலை தயாராகவே இருந்தது. நான் மட்டுமல்ல சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதாடிகொண்டிருக்கும் வழக்கறிஞர் பலரும் ஆரம்பகாலத்தில் தைப்பதையும், ஒட்டுவதையும் தான் முதல் பயிற்சி வேலையாக செய்திருப்பார்கள்.

வழக்கமாக செல்லும் ஜெராக்ஸ் கடைக்கு சென்று ஆவணங்களை நகல் எடுத்து கொண்டிருந்தேன். மின்னல் போன்று பச்சை நிற லேசர் லைட் வடிவிலான ஒரு வெளிச்சம் ஆவணங்களை நகல் எடுத்து வலது புறமாக தள்ளிக்கொண்டிருந்தது. உண்மையை பிரதிபலிக்கும் போலி ஆவணங்களாக உருமாறும் வெள்ளை காகிதங்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். விழி அசையாது அதை பார்த்துகொண்டிருப்பதும் ஒரு பயிற்சி தான் உண்மையை  போலியாக்கும் ஒரு வித்தை. நான் படித்த சட்டமும் எனக்கு இதை தான் வலியுறுத்துகிறது நீதிமன்றத்திற்குள் நுழையும் ஒவ்வொரு தருணமும் நான் கற்பிதம் செய்துகொண்டிருக்கும் விஷயம்.

எப்போதோ கண்ட கனவு வீட்டின் முகத்து சுவரில் காட்சி தரும் “வழக்கறிஞர் பார்த்திபன்’ கருமையில் மொழுகிய பலகை, வெண்மையில் வரைந்த எழுத்துக்கள். அச்சிட சமயம் நேர்ந்தும் போலி சித்திர சாயலை பிரதிபலிக்குமோ என்னும் அச்சம். அதனாலேயே பொதுவெளியில் என் வழக்கறிஞர் பிம்பத்தை கழட்ட முயற்சி செய்கிறேன் இருந்தும் நான் அணியும் வெள்ளையும், கருப்பும் என்னை அடையாளப்படுத்துகிறது. வெப்ப காற்றை உமிழ்ந்து கொண்டிருக்கும் ஆவணங்களை எடுத்துக்கொண்டு அலுவலகத்திற்கு சென்றேன்.
குப்பாயம் அணிந்து திரிந்து கொண்டிருக்கும் வழக்கறிஞர்கள். தேனீர் கடையில் மாநாடு நடத்திகொண்டிருக்கும் இளசுகள், பொருட்களை ஏற்றுமதி செய்யும் கூலிகள், விளம்பர தாள் விநியோகம் செய்யும் ஊழியர்கள் தினசரி காணும் காட்சிகள் தம்புசெட்டி தெருவில் அரங்கேறிக்கொண்டிருந்தது.

அலுவலக பெயர்களையே நோட்டம் விட்டுக்கொண்டு குழம்பிய நிலையில்  தம்புசெட்டி தெருவை ஒருவன் கடந்துகொண்டிருந்தான். வழக்குகளை நடத்த பாரிமுனையில் விலாசம் தேடி அலைந்துகொண்டிருக்கும் மனிதர்களை பார்ப்பது வாடிக்கையாகிவிட்டது. எப்படியேனும் அவன் தேடிக்கொண்டிருக்கும் விலாசம் அவனை கண்டடையும் நான் எனது அலுவலகத்திற்கு விரைந்தேன். மூன்றாவது மாடியில் என் அலுவலகம் லிப்ட்டிற்காக காத்துகொண்டிருக்கும் பலருக்கு மத்தியில் நானும் ஒருவனாக இருக்க விரும்பவில்லை என் சுய முயற்சியிலேயே மேல வர எத்தனித்து படி ஏறி அலுவலகத்திற்கு சென்றேன். அவ்வப்போது வாட்ஸ்சப்பில் குறுஞ்செய்தி வந்ததற்கான ஒலி கேட்டுகொண்டே இருந்தது. நிச்சயம் அவள் தான்... கொஞ்ச நாட்களாகவே அவள் பயத்தோடு போராடுகிறாள். எதிர்காலத்தை நினைத்து.. அவள் குடும்பத்தை நினைத்து... என்னை நினைத்து...

ஆவணங்களை தயார் செய்து வரிசை எண்களை போட்டுக்கொண்டிருந்தேன்.. கதவை தட்டிக்கொண்டு லேசாக உள்ளே நுழையும் ஒர் உருவம். தம்புசெட்டி தெருவில் உள்ள பெயர் பலகையை பார்த்துக்கொண்டு திரிந்த அதே உருவம்.. அவன் தேடிக்கொண்டிருந்த விலாசம் இது தானோ...

“மாதவன் சார் இருக்காங்களா...”

வெயிலின் நீர் அவன் முகத்தில் பிரதிபலித்தது, கழுத்திலும் நெற்றியிலும் வழிந்துகொண்டிருந்த வியர்வை நீண்ட நேர தேடுதலின் குறியீடாக எனக்கு தோன்றியது.

“கோர்டுக்கு போய் இருக்காங்க... நீங்க?”

“நான் பாலு பெரம்பலூர்ல இருந்து வரேன் ஒரு கேஸ் விஷயமா அவர பார்க்கனும் நேத்தே பேசிட்டேன் அவரு தான் இன்னைக்கு வர சொன்னாரு... அவருக்கு கால் பண்ணேன் ரீச் ஆகல...”

சீனியரின் அறைக்கு அவனை அழைத்துசென்றேன். அந்நியதேசத்தை தஞ்சம் அடைந்த ஓர் பதற்றம் அவன் உடல் அசைவுகளில் தெரிந்தது. சற்று குள்ளமாக கிராமத்து இளைஞனின் அடையாலங்களோடு காட்சியளித்தான்.

“வெய்ட் பண்ணுங்க... சார் கொஞ்ச நேரத்துல வந்துடுவாரு”

ஏ.சி.யை ஆன் செய்துவிட்டு குடிக்க தண்ணீர் எடுத்து வந்து வைத்தேன். வேலைக்கு சேர்ந்த இந்த எட்டு மாதங்களில் நானாக எந்த ஒரு கிளைன்ட்டிடம் சென்று பேசியதில்லை பெரும்பாலும் நேரங்களில் சீனியர் கோர்ட்டுக்கும், கிளப்பிற்கும் சென்றுவிடுவார் அவர்களுடனான உரையாடல் சீனியர் எப்போது வருவார், எங்கு இருப்பார்... இது போன்ற வழமையான உரையாடல்களே நீண்டுக்கொண்டிருக்கும். ஆனால் இந்த கிராமத்து இளைஞனின் நிலை அறிய மனது ஏனோ துடித்துகொண்டிருந்தது.

‘என்ன கேஸ் விஷயமா பார்க்கணும்...?”

நீண்ட நேர யோசனைக்குப்பின் அவன் மறுமொழிந்தான்

“என் வேய்ப் கானும்னே அவங்க அப்பா அம்மா தான் எங்கியோ மறைச்சு வெச்சுருக்காங்க.. மாதவன் சாரு ஏதோ பெட்டிஷன் போட்டு ஆர்டர் வாங்கலாம்னு சொன்னாரு அதான் மெட்ராஸ்க்கு வந்தேன்”

என்னால் யூகிக்க முடிந்தது காதல் விவகாரத்தில் தன் மனைவியை தொலைத்திருக்கிறான் என்று.

“ஓ... மேரேஜ் ஆகி எத்தன மாசம் ஆகுது”

“ஆறு மாசம் ஆச்சுனே ஆனா ரெண்டு மாசத்துக்கு முன்னாடி தான் அவங்க வீட்டுக்கு தெரியும்”

அவன் நிலை முழுவதும் புரிந்தது ஜாதியால் கடத்தப்பட்ட தன் காதலியையும், காதலையும் மீட்டெடுக்க சென்னைக்கு வந்திருக்கிறான். கண்ணை கட்டிகொண்டிருக்கும் நீதி தேவதையின் பார்வை அவன் திசை திரும்பாமலா போய்விடும்...

சற்று நேரத்தில் சீனியர் கழுத்துபட்டையையும், குப்பாயத்தையும் கழட்டிக்கொண்டே உள்நுழைந்தார். தாமாகவே இருவரும் எழுந்து நின்றோம்.

“நீங்க தான் பாலுவ தம்பி சேகர் எல்லாத்தையும் சொன்னாரு.. என்னால எதுவுமே நிச்சயமா சொல்ல முடியாது H.C.P. பெட்டிஷன் போட்டு பாப்போம் ஆர்டர் கிடைச்சா கிடைக்கலாம்”

“சரிங்க ஸார்”

எந்த ஒரு முக மாறுதலுமின்றி தலையசைத்தான் கூடவே அவனது சிரிப்பையும் தொலைத்திருக்கிறான் என்பதையும் உணரமுடிந்தது.

ஆட்கொணர்வு மனுவை தட்டச்சு செய்ய சீனியர் என்னை அழைத்தார். சீனியர் ஒப்புவிக்கும் வார்த்தைகளை கவனித்து விரல்களின் வழியே கணினி திரையில் பிரதிபலித்தேன். சீனியர் கேட்கும் சந்தேகங்களுக்கு பாலு யோசனையின்றி விடையளித்துகொண்டிருந்தான். கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் தன் காதலி லாவண்யாவை சந்தித்ததும், அவள் மேல்வர்க்க சாதியின் குடும்பத்தை சேர்ந்தவள் என்பதும், நண்பர்களின் துணையோடு இருவரும் பதிவு திருமணம் செய்துகொண்டதும், இருவரையும் சேர்த்து வைப்பதாக சொல்லி லாவண்யாவை அவள் குடும்பத்தினர் ஏமாற்றி அழைத்து சென்ற விஷயமும் தட்டச்சு செய்துகொண்டிருந்த மனுவின் மூலமாக தெரிந்துகொண்டேன்.

இடையில் நிறுத்தி சீனியர் அவனது சொந்த கதைகளை கேட்டுக்கொண்டிருந்தார். அவன் மனைவியை இழந்த இந்த மூன்று மாதத்தில் ஜாதியாலும், பணத்தாலும் விரட்பட்டு வழி தேடி இங்கு வந்திருக்கிறான். அவன் அனுபவித்த வேதனைகளையும், போராட்டங்களையும் கேட்கும் பொழுது தட்டச்சு செய்துகொண்டிருந்த என் விரல்களுக்கு நடுக்கம் ஏற்ப்பட்டது.

மனு தயார் ஆனதும் அதை பச்சைநிற பேப்பரில் பிரிண்ட் எடுத்து நானே அவனிடம் கையொப்பம் வாங்கினேன். கூடவே அவனது திருமண சான்றிதழையும், இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தையும், காவல் நிலையத்தில் கொடுத்த புகாரையும் எடுத்து வந்திருந்தான். அதையும் நகல் எடுத்து ஆவணங்களாக திரட்டி நீதிமன்றத்தில் பதிவு செய்ய விரைந்தேன்.
நீண்ட நேரமாக பேண்ட் பாக்கெட்டிற்குள் புதையுண்டு இருந்த செல்போனை எடுத்து பார்த்தேன் என் காதலியிடம் இருந்து பதினாறு வாட்ஸ்சப் மெசேஜ்களும் இரண்டு மிஸ்டு கால்களும் வந்திருந்தது. அவளை காக்க வைத்த என் மீதே எனக்கு எரிச்சலாய் வந்தது. சட்டென்று அவள் எண்ணிற்கு அழைத்தேன்.

ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துவிட்டு அலுவலகத்திற்கு திரும்பிக்  கொண்டிருந்தேன். அவளை பற்றிய சிந்தனைகள் மீண்டும் மனதுக்குள் ஊடுருவியது. எதிர்காலத்தை பற்றிய கனவு, ஆசை, காத்திருப்பு அனைத்தும் சாதியால் சிதைந்துபோகுமோ என்று ஒவ்வொரு நாளும் பயம் கொள்கிறாள். படிப்பை காரணம்காட்டி, வேலையை காரணம்காட்டி இத்தனை வருடம் எனக்காக காத்திருந்தவள் இனி எதை காரணம்காட்டி காத்திருப்பாள். வரன் கேட்டு ஜாதிகள் அவள் வீட்டு வாசலை குழுமி இருக்கிறது தனி ஒரு நபராய் எத்தனை நாட்களுக்கு அதை விரட்டிகொண்டிருப்பாள். என் கரம் பிடிக்க அவள் துணிந்த பொழுதும் உதறி தள்ளி மௌனம் காத்துகொண்டிருக்கிறேன். வெகுண்டு எழ துணிச்சல் இல்லை என்று ஒருபோதும் அவள் நினைத்தது இல்லை. என் குடும்பம் கட்டமைத்த பொறுப்புகளும், இந்த சமூகம் கொடுத்த ஏற்ற தாழ்வுகளே என்னை ஆட்கொணர்வு செய்துகொண்டிருப்பதை அவள் அறிந்திருப்பாள். அதிலிருந்து மீளமுடியாமல் தவிக்கும் இந்நிலையில் அவளின் கரம்பிடிக்க எப்படி நான் துணிவது...?

சீனியர் வாட்ச்மேனை அனுப்பி சங்கீதா ஹோட்டலிலிருந்து பாலுவுக்கு மதிய உணவு வாங்கிவர ஏற்பாடு செய்தார். பாலுவும் எங்களுடன் மதிய உணவில் கலந்துகொண்டான். கோர்டில் இருந்து வந்த மற்ற ஜூனியர்களும் ஒவ்வொருவராக எங்களுடன் கலந்து கொண்டனர். பாலு சங்கோஜத்தில் சரியாக சாப்பிடாமல் பாதியிலேயே எழுந்துகொண்டு சீனியரின் அறைக்கு சென்று காத்திருந்தான். அவன் சென்றபின் சீனியரும் மற்ற ஜூனியர்களும் அவன் வழக்கை பற்றி விவாதித்துகொண்டிருந்தனர்.

நான் மீண்டும் மனுவை பதிவு செய்யும் பிரிவிற்கு சென்று ஆட்கொணர்வு வழக்கு எண்ணை பெற்று வந்து சீனியரிடமும் பாலுவிடமும் கொடுத்தேன். நாளை பாலுவின் வழக்கு விசாரணைக்கு வருகிறது. இன்று இரவு எங்கு தங்குவதாக உத்தேசம் என்று சீனியர் கேட்டதற்கு வேளச்சேரியில் உள்ள தன் நண்பனின் அறையில் தங்க இருப்பதாக சொல்லி பாலு எங்களிடமிருந்து விடைபெற்றான்.

நானும் பாலுவும் படியிறங்கி கீழே வந்தோம் அவன் விருப்பமின்றி நம்பிக்கை வார்த்தைகளை அவனுள் திணித்தேன். அவன் கடந்துவந்த மனிதர்களிடம் ஒப்பிட்டால் என்னுடைய வார்த்தைகள் வலுவற்றதாகவும், அர்த்தமற்றதாகவும் அவனுக்கு தோன்றும். தனது செல்போனில் யாருக்கோ மீண்டும், மீண்டும் தொடர்பு கொண்டிருந்தவனுக்கு விரக்தியும், ஏமாற்றமுமே பரிசாக கிடைத்தது.

“என்ன ஆச்சு பாலு யாருக்கு ட்ரை பண்ணிட்டு இருக்க...?”

“என் பிரண்ட்டுக்கு தான்னே.. அவனோட நம்பர் ஸ்விட்ச் ஆப்னு வருது அவனோட அட்ரஸ் வேற என் கிட்ட இல்ல... இங்க எதனா லாட்ஜ் இருக்கா...?”

இன்று இரவு மட்டும் எங்கேயாவது அவன் தங்க நேர்ந்தால் நாளை அவன் வழக்கை முடித்துக்கொண்டு ஊருக்கு திரும்பிவிடுவான் சென்னை நாளை அவனை சிரிக்க வைக்கிறதோ இல்லை அழவைக்கிறதோ... சட்டென்று ஒரு யோசனை தோன்றியது பெரம்பூரில் அறை எடுத்து தங்கியிருக்கும் என் நண்பனுக்கு கால் செய்து பாலுவை இவ்விரவு தங்கவைப்பதற்கான அனுமதியை பெற்றேன். பாலு அங்கு தங்க அசௌகரியமாக உணர்ந்தானோ தெரியவில்லை நானும் இரவு தங்குவதாக சொன்னவுடன் ஒப்புக்கொண்டான். நண்பனின் எண்ணும் விலாசமும் கொடுத்து அவனை வழியனுப்பினேன். அலுவலகத்தில் உள்ள பிற வேலைகளை முடித்துக்கொண்டு வியசார்பாடியில் அத்தோவும், பரோட்டாவும் வாங்கிக்கொண்டு இரவு ஒன்பது மணியளவில் நண்பனின் அறைக்கு சென்றேன்.

பாலு என் நண்பனின் கைலியை கட்டிக்கொண்டு தன் காதலியுடன் எடுத்த புகைப்படங்களை பார்த்துக்கொண்டிருந்தான். மூவரும் சாப்பிட்டோம் பாலு அதிகமாக எங்களுடன் உரையாடலில் கலந்துகொள்ளவில்லை எங்கள் கேள்விக்கு ஆமானே... இல்லனே... இதுபோன்ற பதில்களையே தொடர்ச்சியாக கொடுத்துகொண்டிருந்தான். என் காதலியுடனான வாட்ஸ்சப் உரையாடல்களை தள்ளிவைத்துவிட்டு பாலுவிடம் பேசிக்கொண்டிருந்தேன். பெரும்பாலும் லாவண்யா என்னும் பெயரையே நிமிடத்திற்கு நிமிடம் உச்சரித்துகொண்டிருந்தான். லாவண்யாவை சந்தித்தது, அவளுடன் பழகியது, அவளை திருமணம் செய்தது இப்படியே அவ்விரவு முழுவதும் பேசிக்கொண்டிருந்தான். இந்நேரம் லாவண்யா அவனுடன் இருந்திருந்தால் என்னுடன் புலம்பிகொண்டிரும் அவசியம் அவனுக்கு நேர்ந்திருக்காது.

பாலுவை பதினோரு மணிக்கு நீதிமன்றத்திற்கு வரசொல்லிவிட்டு விடியற்காலை எழுந்து என் வீட்டிற்க்கு திரும்பினேன். வழக்கத்தைவிட விரைவாகவே அலுவலகத்திற்கு சென்றேன், அலுவலகம் வந்து சேரும் வரையிலும் பாலுவின் வழக்கை பற்றிய சிந்தனைகளே மனதில் ஓடிக்கொண்டிருந்தது. பாலுவின் வழக்கிற்காக சீனியருடன் செல்ல உத்தேசித்திருந்தேன் ஆனால் வழக்கமாக எழும்பூர் நீதிமன்றத்திற்கு செல்லும் ஒரு ஜூனியர் என்னிடம் வழக்கின் கட்டுகளை கொடுத்து வாய்தா வாங்கிவரும்படி சொல்லி அனுப்பிவிட்டார். அவருடன் விவாதிப்பதற்கோ, அவர் கொடுத்த வேலையை புறகணிப்பதற்கோ எனக்கு உரிமை இல்லை அனுபவத்தின் பார்வையில் பார்த்தால் அவரும் எனக்கு சீனியர். அனுசரித்து போவதே இங்கு எழுதப்படாத விதி அதை கடைபிடித்தாகவேண்டிய கட்டாயத்தில் அலுவலகத்தைவிட்டு வெளியேறினேன்.

பாம்பின் ஓட்டமாய் எழும்பூர் நீதிமன்றதிற்கு சென்று வாய்தா வாங்கினேன். இடையில் பாலுவின் எண்ணிற்கு அழைத்தும் அவன் எடுக்கவில்லை. தன் மனைவியின் வருகைக்காக எதிர்பார்த்துகொண்டிருந்தவனுக்கு ஜாதியால் பூட்டப்பட்ட கதவை உடைத்து வழிவகுக்க நீதிமன்றம் அவனுக்கு கருணை காட்டியிருக்க கூடும் ஒருவேளை அவன் கரங்களை அப்பூட்டுடன் சங்கிலியால் பிணைக்கப்பட்டு கலப்பு திருமணம் செய்பவர்களுக்கு இந்நீதிமன்றம் எச்சரிக்கை விடுக்கலாம். ஜாதியும் காதலும் தொங்கிக்கொண்டிருக்கும் நீதி தராசில் ஜாதியின் அழுத்தமே காதலர்களின் கழுத்தை நெருக்கிக்கொண்டிருக்கிறது.

அலுவலதிற்கு வந்ததும் நேராக சீனியரின் அறைக்கு சென்றேன், சீனியரின் வார்த்தைகளுக்கு பாலு மௌனம் காத்தபடி இருந்தான்.

“இத எல்லாம் தூக்கி போடுங்க தம்பி உனக்கான குடும்பத்த காலம் அமைச்சு கொடுக்கும் இப்போ நீ உன் குடும்பத்த பாரு, உனக்கும் பொறுப்பு இருக்கு தங்கச்சி வேற இருக்குதுனு சொல்லுற அந்த பொண்ணுக்குனாச்சு ஒரு நல்ல வாழ்க்கைய நீ அமைச்சு கொடுக்க வேணாமா..?”

சீனியர் என் பக்கம் திரும்பினார் நான் சென்று வந்த வழக்கு அடுத்து இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்திருப்பதாக சொன்னேன். இருவரின் முகபாவனைகளும், அறையில் சூழ்ந்த அமைதியுமே நிலவரத்தை எடுத்துசொல்லியது. நீதிக்காக காத்திருந்தவனை நீதிமன்றம் விரட்டியடித்திருக்கிறது. சீனியரின் செல்போனிற்கு வேறொரு அழைப்பு வர அறையில் இருந்து பேசிக்கொண்டே வெளியேறினார். நான் பாலுவிடம் பேச்சு கொடுத்தேன்.

“என்ன ஆச்சு பாலு...?”

என் முகத்தை திரும்பி பார்த்தவனின் கண்கள் சிவந்திருந்தது, தொண்டையில் சிக்கியிருந்த வார்த்தையை வெளிக்கொண்டுவர பிரயத்தனப்பட்டுகொண்டிருந்தான்.

“பொண்ணு பெத்தவங்க கூட இருக்குறதுனால கடத்தல் ஆகாதாம் அது இல்லீகல் இல்லனு கோர்ட் கேஸ்ச டிஸ்மிஸ் பண்ணிடுச்சுனே”

அதன்பின் பேச எனக்கும் எந்த வார்த்தைகளும் இல்லை அவன் நிலை உணர்ந்து பரிதாபப்பபடுவர்தற்கான நேரம் மட்டுமே என்னிடம் இருக்கிறது. சிறிது நேரத்திற்குப்பின் சீனியரும் அறைக்குள் நுழைந்தார்.

“சரி தம்பி நீங்க ஊருக்கு கிளம்புங்க இப்போ தான் சேகர்கிட்ட பேசுனேன் நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்க... வேற எதனா பண்ணமுடியுதானு பாப்போம்”

பாலுவும் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு கிளம்புவதற்கு தயாரானான் சட்டென்று என் பக்கம் திரும்பிய சீனியர் பாலுவை கோயம்பேடு வரை அழைத்து சென்று விடமுடியுமா என்று கேட்டுக்கொண்டார். நானும் பைக் சாவியை எடுத்துக்கொண்டு பாலுவை வழியனுப்ப கீழ் இறங்கினேன் பாலும் என்னை பின்தொடர்ந்தான்.

கோயம்பேடு செல்லும் வரையிலும் பாலு எதுவும் பேசவில்லை. எனக்கும் அவனிடம் பேச வார்த்தைகளை தேடவேண்டி இருந்தது. வந்தாரை வாழவைக்கும் சென்னை அவன் வாழ்கையை நடு நட்டாந்தரையில் நிற்க வைத்து அவனை திருப்பி அனுப்புகிறது.

பாலுவுக்கு கை குலுக்கி லேசாக அவனை அரவனைத்தேன்.

“இன்னும் நிறைய போராடவேண்டி இருக்கு பாலு, எதுக்கும் வருத்தப்படாத எல்லா மனிதர்களும் மாறத்தான் போறாங்க நிச்சயமா நல்லது நடக்கும்”

“ஒவ்வொரு நாளும் லாவண்யா உயிரோடு இருக்கணும்னு தான்னே வேண்டிட்டு இருக்கேன். அவ எதனா பண்ணிப்பாளோ இல்ல அவ பெத்தவங்க எதனா பண்ணிடுவாங்களோனு தான்னே பயமா இருக்கு”

புரியுது பாலு காதலிக்குற உரிமைய மட்டும் தான் இந்த சொசைட்டி நம்மளுக்கு கொடுத்திருக்கு சேர்ந்து வாழுற உரிமைய இன்னும் கொடுக்கல.. பார்த்து போ ஊருக்கு போனதும் மெசேஜ் பண்ணு”

பாலு என்னிடமிருந்து... நீதிமன்றத்திடமிருந்து... சென்னையிடமிருந்து... விடைபெற்றான். நீதி தேவதையின் கண்கள் மட்டுமல்ல உடலும், மனதும் கூட கட்டப்பட்டிருப்பதை இந்நேரம் அவன் உணர்ந்திருப்பான்.

என் காதலி லாவண்யா என் எண்ணிற்கு அழைத்திருந்தாள். ஆனால் நான் பாலு அல்ல என் பெயர் பார்த்தி, நாளை பாலுவாக மாறும் நிலைமையும் எனக்கு ஏற்படலாம். என் காதலியிடம் வந்த அழைப்பை தவிர்ப்பதா இல்லை எடுப்பதா என்று யோசித்துக்கொண்டே பைக் பார்க்கிங் செய்திருந்த இடத்திற்கு சென்றேன்.

No comments:

Post a Comment