Tuesday, February 12, 2019

முகலாயன் - சிறுகதை - ஸ்வேதா



எண்ணங்களாலான ரயில் மிதவேகத்திலிருந்து அபாய நிலைக்குச் சென்று சுமார் எழுபது நிமிடங்களாகிவிட்டிருந்தன. பூண்டைத் துண்டாக்கி  வகிடெடுக்கும் இடத்தில் தேய்த்தால் முடி நன்கு வளரும் என்று காவி உடுத்திய வைத்தியர் நம்பிக்கையளிக்கிறார். நீண்ட பற்களுடன் எங்கிருந்தோ நுழைந்த  ட்ராக்குலா பூண்டைக் கண்டு மிரண்டு அங்கிருந்து நகர்கிறான். நான் ரத்த தானமளித்துக் கொண்டிருக்கும் இடம் நோக்கி நேரே ஓடி வரும் அவனை இடைமறித்து, என் கணக்கு வாத்தியார் O என அவன் முதுகில் ஒரு முத்திரை போடுகிறார்.  "O பாஸிட்டிவ் ரத்த வகுப்பினர் ஆரஞ்சு பழம் சாப்பிடாதீர்" என்று கூறி மன உளைச்சலை ஏற்படுத்திய டாக்டர், நாற்பது வயதில் இறந்த செய்தித்துடுக்கு காட்சியின் முன்னணியில் ஓடுகிறது. ஆரஞ்சு பழத்தோளை கண்களருகே கசக்கி என்னை ஐந்து நிமிடம் குருடாக்கிய கண்ணன் ஓர் ஓட்டைப்பல் சிரிப்புடன் வெயிலில் நிற்கிறான். "கண்ணன் என்னும் மன்னன் பெயரைச் சொல்ல சொல்ல.." என இன்னும் இரும்பாக மாறாத அழகுப்பதுமை தன் தோள்களை மட்டுமே அசைத்து அவனைப் பார்த்து நடனமாடுகிறாள். 

தெரியாமல் பிருஷ்ட்டத்தால் அழுத்தப்பட்டிருக்கும் ரிமோட் பட்டன் போல மனம் சேனல்களை விடாது மாற்றிக்கொண்டே இருந்தது. 

இன்றிரவு நித்திரா தேவி என்னை முழுவதும் ஆட்கொள்வாள் என நம்பி கண்களை மூடியிருந்தேன். நூலறுப்பட்ட பாசி மணிகள் போல ஏதேதோ எண்ணங்கள் என் இரவை சிதற விட்டு எட்டுத் திக்கிலும் உருண்டோடின. கனவுகள் அல்ல. காட்சிகள். என் அபோத மனம் என்றோ சேர்த்த நினைவுகளைக் கொண்டு சரியாகத் தொகுக்கப்படாத ஆவணப்படம் ஒன்றைத் திரையிட்டு என்னை வழக்கம் போல தூங்க விடாமல் செய்தது. 

"ஆள விட்டுங்கடா" என்னும் தோரணையில் நான் விடுக்கென கட்டிலில் நிமிர்ந்து உட்கார்ந்தேன். மணி 1.40 என்று கைப்பேசி காட்டியது. காலையில் நடேசன் எட்டு மணிக்கெல்லாம் வந்து விடுவார். புரஃபசர் வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்துவதே திட்டம். எனக்குப் பெரிய ஆர்வம் ஒன்றுமில்லை. அதற்குக் காரணம் அவர் என் மேஜை மீது கிழிந்த நிலையிலிருக்கும் கணக்கு கைட் எழுதிய முனைவர் கங்காதர் என்பதனால் கூட இருக்கலாம். 

பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வரவிற்கும் பொறியியல் கலந்தாய்விற்கு ஏற்ப அமைய, ஒருவித அலட்சியத்துடனே எஞ்சியிருந்த விடுமுறை நாட்களைக் கழித்தேன். பகலில் தூங்கினேன், கணினியில் படம் பார்த்தேன், காந்தி பரிந்துரைப்படி ஒவ்வொரு வாய் உணவையும் முப்பத்திரண்டு தடவை நன்கு மென்று (அவர் பரிந்துரைக்காதபடி) நான்கு வேளை சாப்பிட்டேன்.

நடேசனிற்கு நான் கங்காதரிடம் உரையாடினால் மன எழுச்சி ஏற்பட்டு மாதிரி இளைஞியாக வலம் வருவேன் என்ற எண்ணம். அவர் பேச்சை என்னால் தட்ட முடியாது. பிள்ளை போல் என் பேரில் பாசம் வைத்திருந்தார். அதற்கு ஒருவகையில் என் ஜாதகம் தான் காரணம் என்ற ஐயம் எனக்கு இருந்து கொண்டேயிருக்கிறது. ஒரு வருடம் முன், குடும்ப சோதிடரை பார்க்கச் சென்றவர், என்ன நினைத்தாரோ கிளம்பும் முன் அம்மாவிடம் என் ஜாதகத்தைக் கேட்டு பெற்றுக் கொண்டார். அதுவரையில் பக்கத்து வீட்டுப் பணக்கார அங்கிள் என்றே எனக்கு அவர் பரிச்சயம். சோதிடர் என்ன கணித்தாரோ தெரியவில்லை, என்னைப் பார்க்கும் போதெல்லாம் கண்கள் மினுங்க ஆத்மார்த்தமாய் வாழ்த்த ஆரம்பித்தார். 
 “அபார யோகம் உனக்கு இருக்கு. நீ பெரிய ஆளா வருவ பாப்பா. பெரிய பதவி வகிப்ப .நீ எங்க போனாலும் செல்வம் பன்மடங்கா பெருகும்”. என் அம்மாவிடமும் அதே பரவசத்துடன் என் ஜாதகத்தின் பாராம்சம்களாக அவர் நினைப்பதைப் பற்றி சொல்லி என்  அம்மாவையும் பகற்கனவு காணச் செய்தார். "செளமி பாப்பா நிச்சயம் ஃபாரின் செட்டில்…”

அதன் பின் புத்தகங்கள், கலை இலக்கிய இதழ்களுக்கு வருடச் சந்தாக்கள் என நான் அடையப் போகும் உச்சத்திற்கு அவருடைய பங்களிப்பாக கருதும் பொருட்களை தொடர்ந்து வாங்கித்தந்தவாறு இருந்தார். தரும் முன்பு ஒரு வார்த்தை அம்மாவிடம் சொல்லிவிடுவதால்  "எதுக்குங்க இதெல்லாம், வீண் செலவு“ தவிர நடேசன் மீது எந்த வித பெரிய சங்கடமும் எதிர்ப்பும் அம்மாவிடத்தில் இருந்ததில்லை. 
                                    ***

கண்ணன் இரண்டு முறை நான் கிளம்பி விட்டேனா என்ற தகவலறியும் சாக்கில் அம்மாவிடம் முதல் தடவை க்ரீம் பிஸ்கட்டும் இரண்டாம் முறை தட்டை முறுக்கும் வாய்பேசி வாங்கிச் சாப்பிட்டு விட்டிருந்தான். நான் சரியாக ஒன்பது மணிக்கு  வீட்டு வாசலில் வந்து நின்றேன். நடேசன் காரை வெளியே நிறுத்தி அரை மணி நேரமாவது இருக்கும். கண்ணன் இடது கையில் தட்டை முறுக்கை வைத்துக் கொண்டு வலக் கை விரல்களால் கார் பின்கண்ணாடியில் படிந்த தூசை கலைத்து ஒரு குதிரைப் படையையே(?)  வரைந்திருந்தான்.  நடேசன் நான் வந்ததை உணர்ந்து கண்ணனின் முதுகில் ஓங்கி ஒரு அடி அடித்தார். “இவ்வளவு நேரம் இத கிறுக்கறதுக்கு துணிய வச்சு தூச தொடச்சிருக்கலாம்ல?” அவர் “இவ்வளவு” -இல் கொடுத்த அழுத்தம் கேட்டு சில வினாடி திகைத்து அங்கேயே நின்றேன். அதைப் புரிந்தவராய் "வா மா மின்னனனல்ல்” என்று  என்னை வரவேற்க,  ஆறுதலாகவும் பின் சற்று அவமானமாகவும் இருந்தது. “இப்பவாச்சும் வந்தியே ஏறு…”

கண்ணன் அடி வாங்கிய நினைவேதுமின்றி கைகளில் சேர்ந்த தூசை இரண்டு தட்டி தட்டி கார் முன் இருக்கையில் ஒரே பாய்ச்சலில்  ஏறலானான். அவனுடைய அப்பா ஓட்டுநர் இருக்கை வழக்கத்திற்கு மாறாகச் சாய்வாக இருப்பதைக் கண்டு முணுமுணுத்துக் கொண்டே  சரி செய்தார். நான் கண்ணனுக்கு பின் இருக்கையில் அமர்ந்து கொண்டேன். 

கார் முதலில் ரிவர்ஸில் செல்ல ஆரம்பித்தது. நடேசன் அணிந்த சட்டை அன்றைய அனுகுலமான நிறத்தில் இல்லை போலும். அந்த காரில் ரிவர்ஸ் கியரும் முதல் கியரும் ஒன்றே. அழுத்தம் சற்று கூடுதலாக செலுத்தியதால் நாங்கள் பின்னோக்கி நகர்ந்தோம். கண்ணனுக்கு இது குதூகலத்தை அளித்தது. அவன் குழந்தைகளுக்கேயுரிய தொண்டையில் ஆரம்பித்து அங்கேயே முடியும் சிரிப்பை சிரித்தான், விக்கல் வருவது போல. எனக்கு ஆரஞ்சு தோள் ஞாபகம் வந்தது. ஒரு வழியாக கார் முன்னே செல்ல ஆரம்பித்தது. அதனுடன் சேர்ந்து என் எண்ணங்களின் வேகமும் மெல்லக் கூடியது.
                                     ***

அது ஒரு நீல பூச்சு பூசிய இரண்டு அடுக்கு வீடு. அரை மணி நேரம் முன்பு வரை மழை பேய்ததிற்கான தடையங்கள் தெரிந்தன. அவ்வீட்டின் வெளிச்சுவர் ஆங்காங்கே வெளுத்த நீலமாகவும் உலராத இடங்கள் அடர்ந்த நீலமாகவும் இருந்தது. கீழ்த்தள வீட்டின் கதவு ஜன்னல்கள் எல்லாம் மூடியிருந்தது. 

காத்திருந்து கையும் களவுமாகப் பிடித்தது போல, நடேசன் அழைப்பு மணி அடிக்கும் ஒரு வினாடி முன்பு கதவுத் திறந்தது. ஒரு சிறுமி முடி தேகமெல்லாம் எண்ணையொழுக சனி நீராடலுக்குத் தயாராகிய நிலையிலிருந்தாள். அம்மா... அம்மா... அம்மா… என்று அவள் கூப்பிட்ட ஒரு அம்மா பல முறை அசிரிரியாக ஒலிக்க, அவ்வீடு எவ்வளவு காலியாக இருந்தது என்று அப்போது தான் உணர்ந்தேன். பெரிய ஹாலில் ஒரு பாயும் கலைஞர் டி.வியும் மட்டும் தான் இருந்தது. வெற்றிடத்தை நிரப்ப ஒரு வயோதிகர் கூட இல்லை. முப்பத்தைந்து வயதுமிக்க ஒரு பெண்மணி சமையலறையிலிருந்து வந்தார். கறுப்பு சுடிதாரில் இட்லி மாவின் திட்டுக்கள். "நல்லாயிருங்கீங்களா?” பதிலுக்குக் காத்திருக்காமல் "ஐயா மேல தான் இருக்கார். போங்க” என்றார்.

கண்ணன் வழி தெரிந்தவனாய் குடுகுடு வென மேலே ஓட அவனைப் பின் தொடர்ந்தோம். நடேசன் "சார்?” என்றழைத்தார். "நடேசனா? தோ வந்துடறேன்” என்று உள்ளிருந்து ஒரு குரல் கேட்டது. நாங்களிருந்த அறையில் என் கண்ணுக்குத்  தென்பட்டவையெல்லாம் புத்தகங்கள். டீப்பாயில், நாற்காலியில், தரையில் என எங்கும் பழையதும், புதிதுமாய் புத்தகங்கள், தெய்தித்தாள்கள். டீப்பாய் மீது மட்டும் புத்தகங்கள் அதன் அளவுக்கேற்றவாறு வரிசைப்படுத்தப்பட்டிருந்தது.  மற்ற இடங்களில் எல்லாம் குவியலாகவே இருந்தது. நான் கணக்கு புத்தகங்கள் ஏதேனும் தட்டுப்படுகிறதா என்று நோட்டமிட்டேன்.  பெரும்பாலும் வரலாறு,  தத்துவ, சைவ சித்தாந்த நூல்கள். குவியல்களுக்கு நடுவே ஒரு சிகப்பு அட்டைப் புத்தகம் ஒன்று என் கண்ணில் அகப்பட்டது. நூற்றைம்பது பக்கங்களே கொண்ட மெலிந்த நூல். நூலின் தலைப்பு பெரிய வெள்ளை எழுத்துகளாலும் நூலாசிரியரின் பெயர் மிகச் சிறிய மஞ்சள் எழுத்துகளாலும் அச்சிடப்பட்டிருந்தது.
“முகலாயர்” “வ.கங்காதர்” 

அந்தக் குவியலில் ஐந்து பிரதிகளுக்கு மேல் அந்தப் புத்தகம் கிடந்தது எனக்கு சந்தேகத்தை எழுப்பியது. “இது இவரா எழுதினார்?” நடேசன் "ஆமா” என்றார். எனக்கு ஒவ்வாத கணக்கு கைடு எழுதிய Dr. V.கங்காதர் PhD யையும் என் சிறந்த குழந்தைப் பருவ நினைவுகளில் ஒன்றைப் படைத்த வ. கங்காதரையும் என்னால் ஒரே பாத்திரமாக பார்க்க முடியவில்லை. "இத இல்லையா நீங்க முன்னாடி சொல்லியிருக்கனும்?!”

ஆறாம் வகுப்பு மாணவர்களுக்குக் கிடைத்த சலுகைகளில் ஒன்று பள்ளி நூலகத்தில் இரண்டு வாரத்திற்க்கொருமுறை ஒரு நூல் எடுக்கலாம். நான் முதன்முதலில் தேர்ந்தெடுத்த புத்தகம்  ஒல்லியாகவும் எனக்குப் பிடித்த நிறத்தில் அதன் அட்டை இருந்ததினாலும் ஸ்டாம்பு அச்சு பெற்று வீட்டிற்கு உற்சாகத்தோடு எடுத்து வந்தேன். படங்கள் எதுவும் இல்லாமல் வாசித்த முதல் புத்தகம் என்பதால் மலைப்பாகயிருந்தது. பின்பு சற்று சிரம் கொண்டு முப்பதுப் பக்கங்களை தாண்டிய பின் முழு வீச்சோடுப் படித்து முடித்தேன். முகலாய அரசர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு புனைவாக எழுதப்பட்டிருந்த சிறுகதைத் தொகுப்பது. நான் வாசிக்கையில் அம்மா பாதாமையும் ஏலக்காயையும் அரைத்து பாலில் கலந்துக்கொடுக்க, வாசமும் சொற்களும் ஒன்றோடொன்று பிணைத்துக் கொண்டு என் நினைவில் தங்கிவிட்டிருந்தன.  சொற்கள் மங்கலாகவும் ஏலக்காய் வீச்சு சற்றுத் தூக்கலாகவும் மனதை நிறைத்து பதினேழு வயதிலேயே எனக்குள் நாஸ்டால்ஜியாவை துளிரச் செய்தது. 

ஆவலும் பதட்டமும் உருவாய் நான் கங்காதர் வரும் திசையைப் பார்த்திருந்தேன். பனியனும் வேட்டியும், வெள்ளை தாடியும், பெரிய கண்ணாடியும், உலகத்தில் இனி என்ன நடந்தாலும் தன்னைப் பாதிக்காது என்ற பாவனையுமாக ப்ரஃபசர் மெல்ல நடந்து வந்து புத்தக குவியலை அப்புறப்படுத்தி நாற்காலியில் அமர்ந்தார். சைகையால் எங்களை அமரச் சொல்ல, நடேசன் வேறிரண்டு குவியல்களை விலக்கி அவர் வேண்டுகோளுக்கு  இணங்க வழிசெய்தார். 

“கண்ணா வாடா” என கண்ணனைத் தூக்கி அவர் மடியில் வைக்க முயல, அவன் துள்ளிக்குதித்து என்னருகே வந்தமர்ந்தான். "கையில என்ன?” கண்களை சுருக்கி நூலை இறுக்கிப் பிடித்திருந்த என் கைகளை பார்த்தவர், பார்வையை உயர்த்திக் குழம்பியவராக நடேசனிடம் “யாரிது?” என்று கேட்டார்.

“செள -செளமித்ரா” என்றேன்.

“அது ஆணின் பெயராச்சே.”

"அப்பா வங்காள சினிமா பார்ப்பார்”

“ஆங்... செளமித்ரா சாட்டர்ஜி. ரேவோட படங்கள் - ல நிறைய நடிச்சிருந்தாலும் அப்புவா நடிச்சது தான் எனக்குப் பிடிச்சிருந்தது.  நல்ல வங்காள முகம். உருண்டையான கண்கள். உருளையான கண்ணங்கள்..”

ஒரு நிமிடம் என் முகத்தை உற்றுப் பார்த்தார். அப்பார்வை சிறிய கண்களும் ஒடுங்கிய  கண்ணங்களும் கொண்ட என்னை என் பெயருக்கு நான் அருகதையற்றவள்ளோ என்ற ஐயத்தை எழுப்பியது. 

“இராமயணத்தில சுமித்ராவின் மகன் லட்சுமணன் - அதனால செளமித்ரன்னும் ஒரு பெயரிருக்கு” என்றார்.

நான் தலையசைத்தேன்.

"இங்க பிரச்சினையில்ல. பெண் பெயர் மாதிரி தான் தெரியும். நம்ம ஊரில செளமித்ராணு ஒரு ஆண் வந்தாதான் எல்லாரும் முழிப்பாணுங்க” என்று சிரித்தார். 

நான் சொல்வதறியாது கண்களைத் தாழ்த்தி என் கையிலிருந்த புத்தகத்தைப் பார்த்தேன். அன்றே நூலகத்தில் நான் பின்னட்டையை கவனித்திருந்தால் அதை இருந்த இடத்திலே வைத்திருப்பேன். கடைசி முகலாய மன்னனின் புகைப்படம் அதில் அச்சிடப்பட்டிருந்தது. பிரிட்டிஷ் அரசாங்கத்தால் ரங்கூனுக்கு நாடு கடத்தப்படும் முன் எடுக்கப்பட்ட புகைப்படம் -  நலிவுற்ற பகதூர் ஷா சஃபர் உயிர்த் துளைக்கும் பார்வையுடன் நம்மை  உற்று நோக்கியவாறுப் படுத்திருப்பார். கருஞ்சிலையின் கண்கள் போல் அச்சுறுத்திய அசைவற்ற விழிகள் எனக்கு அந்த வயதில் பலவித கனவுகளையளித்திருக்கிறது. அதுவரை தனியறையில் எவ்வித பயமுமின்றி  உறங்கியவள் என் பாட்டியுடன் தூங்க ஆரம்பித்தேன். 

"அந்த புத்தகத்த நீயே வச்சிக்கோ. போட்ட இருநூறு பிரதிகள்-ல உற்றார் உறவினர் கொடுத்தது போக நூத்தம்பது எங்கிட்ட அப்படியே இருக்கு”

“நான் ஏற்கனவே படிச்சிருக்கேன்.”

"அப்படியா. சரி” அவர் கூறிய தொனியில் எந்தவித உணர்ச்சியும் இல்லை.

அவரிடம் எப்படிச் சொல்வது - பாபர் லோடியை பானிப்பட் போரில் வீழ்த்தும் போது நான் களத்தில் செயலற்று நின்று பார்த்திருந்தேனென்று. அக்பர் ஆக்ராவிலிருந்து ஃபத்தேப்பூர் சிக்ரிக்கும், ஃபத்தேப்பூர் சிக்ரியிலிருந்து லாகூரிருக்கும், லாகூரிலிருந்து மீண்டும் ஆக்ராவிற்கும் தலைமையகத்தை மாற்றும் போது அவர் அரண்மனை குடிகளில் ஒருத்தியாய் நானும் அலைக்கழிக்கப்பட்டேனென்று. ஜஹாங்கிர்  சொந்த மகனான குஸ்ராவை குருடாக்கிய போது தான் பெற்ற மகனைத் தீண்டியது போல் இதயம் பதறியதென்று. தன்னிலை மறந்து ஹிரா பாய் மாங்கனியைப் பறித்த போது மனதைத் தொலைத்தது ஒளரங்கசப் மட்டுமல்ல என்று. அழிவு உறுதி என்றானபின் பகதூர் ஷா சஃபர் மகள் குல்சுமை பிரியும் தருவாயில் கண்கள் எப்படிக் கலங்கியதென்று...

“ப்ளஸ் டூ ல நல்ல மார்க் எடுத்திருக்கா. இஞ்சினியரிங் சேரலாம்னுட்டு இருக்கா...” நடேசன் சொல்லத் தொடங்கினார்.

கங்காதர் என்னிடம் “கட்-ஆஃப் மார்க் எவ்வளவு?”

“192.75”

"எதில போய்டுச்சு?”

“கணக்கு”

“எத்தனாவது நாள் கெளன்சலிங்?”

“அஞ்சு”

"பெரிய காலேஜ் ஒன்னும் தேராது”

என் வகுப்பினருக்கு ஒதுக்கீடு உண்டு. ஒரு வேகத்தில் வாய் வரைக்கும் வந்துவிட்டது நல்ல வேளை ஓசை ஏதும் எழவில்லை. 

“உனக்கு எதில ஈடுப்பாடு?”

"வரலாற்றாய்வு”

"சுத்தம்...”

எனக்குத் தொண்டையில் ஏதோ கனத்தது. இவர் கணக்கு கைடு எழுதிய கங்காதரே தான். 

என் படிப்பாற்றல் விலைபோகாததால் நடேசன் என்னுடைய வேறு ஒரு சிறப்பை எடுத்துவிட்டார் “லட்சுமி யோகம், சரஸ்வதி யோகம் இரண்டும் இருக்கு இவ ஜாதக்கத்தில்..” 

கங்காதர் ஆர்வம் வந்தவராய் "அதெப்படி?” என்றார்.

"ஒன்பதில குருவும், சுக்கிரன், குரு, புதன் கேந்திர திரிக்கோணத்திலயும் அமஞ்சிருக்கு. குரு உச்சத்தில இருக்கார்...”

"அட” கங்காதர் என்னை அதிசயப் பிறவி போல் பார்த்தார். ஆச்சரியம் தணியாதவராய்,  கண்ணன் கிறுக்கிக் கொண்டிருந்த ஏட்டைப் பிடுங்கி கட்டம் கட்டமாய் வரைந்தார். "இப்படியா?” எனக் கிரகங்களை நடேசன் வர்ணித்தபடி அந்தந்த கட்டங்களுக்குள் அடைத்தார். எனக்கிருந்த அதிர்ச்சி கூட கண்ணனுக்கு இருக்கவில்லை. அவன் பக்கத்திலிருந்த செய்தித்தாளை எடுத்து பெண் மந்திரிகளுக்கு மீசை வரைய ஆரம்பித்திருந்தான்.

"சுக்கிரன் அங்க இல்ல சார். இங்க …”


நடேசனுடன் தீவிரமாகக் கோள்கள் கிரகங்கள் ஆண்டு பலன்கள் பற்றி விவாதிக்க ஆரம்பித்தார். எந்த ஒரு எழுச்சி உரையையும் அதன் பின் அவர் எனக்களிப்பதாயில்லை. நானும் “முகலாயர்” பற்றிக் கேட்கவும் முயலவில்லை. அது என்றுமே ஏலக்காய் வீச்சுடன் என் மனதில் தங்கியிருக்கட்டும். கங்காதர் என் கணக்கு கைட் எழுதியவராகவே நினைவில் இடம்பெறட்டும். ஒரு படைப்பை பற்றிய புரிதல் படைத்தவனை விட நுகர்ந்தவனுக்கே அதிகம் உண்டோ? காட்டு யானைகளும் எழுத்தாளர்களும் தூரத்திலிருந்து ரசிக்கப் படவேண்டியவர்களோ?

“ஐந்தாம் நாள் கெளன்சலிங்னு பயப்படாதே. சீட் கிடைக்கும். எல்லாம் குரு பார்த்துப்பார்” என்று மட்டும் சொல்லி மூன்று கோப்பை ராகி மால்ட் கலந்து விருந்தோம்பல் செய்து வழியனுப்பி வைத்தார். ராகி மால்ட் என் கனத்த மனதை சற்று இலகுவாக்க உதவியது.
                                    ***

கைப்பேசி 2.15 எனக் காட்டியது. இரவு நான் மட்டுமே அரங்கிலிருக்க, என் அபோத மனம் அன்றே தொகுத்த ஆவணப்படம் ஒன்றைத் திரையிட்டது. எண்ணை ஒழுக நின்ற கண்ணனை நான் இடுப்பில் தூக்கிவைத்து நிற்கிறேன். ஒரு கையில் க்ரிம் பிஸ்கட்டும் மறு கையில் தட்டை முறுக்கையும் மாறி மாறிக் கடித்து தின்று கொண்டிருக்கும் அவன் காரை கண்டதும் துள்ளிக் குதித்து முன் இருக்கையில் ஏறுகிறான்.  நடேசன் காரை ரிவர்சில் செலுத்த, பொடியன் என்னைப் பார்த்து விக்கல் சிரிப்பு சிரித்துக்கொண்டே கையசைக்கிறான். “முகல்-இ-அசாம்” இல் அனார்கலியாக நடித்த மதுபாலா அணிந்திருந்த அதே உடையை  நான் உடுத்தியிருப்பதை உணர்ந்து என்னை நானே ரசிக்க கண்ணாடியைத் தேடுகிறேன். அதளித்த பிம்பத்தில் உடை முழுதும் இட்லி மாவு திட்டுகள் படிந்திருப்பதைக் கண்டு மனமுடைந்து அழுகிறேன். "மகளே..!” என்ற அலறல் கேட்டு பதறி நான் ஓடிச் செல்ல, ஒரு மெத்தையில்லாத மரக்கட்டிலில் பனியனும் வேட்டியும் கருப்பு-வெள்ளையுமாய் கங்காதர் காட்சியளிக்கிறார். அசைவற்ற கருஞ்சிலை கண்களுடன் வலக்கை நீட்டி “உன் ஜாதகத்தைக் கொடு” என்கிறார். அருகே சிகப்பு அட்டைக்கொண்ட சுமார் நூற்றைம்பது பிரதிகள் குவியலாய் கிடக்கின்றன.

கவிதைகள் - சூர்ய பிரகாஷ்


இயற்கை

பௌர்ணமி-இரவு

கருந்திட்டுக்களாய் கரைகள் இருந்தும்
காரிருளிலோர் அழகு வெள்ளிப் பிழம்பாய்
சூரியன் விட்டெரிந்த சில்லறையாய்
வான்நிறைக்கும் விண்மீன் சிதறல்
நிலவொளியின் அரிதாரப் பூச்சில்
ஆகாயத் திட்டுகளாய் வெண்முகில்கள்
இரவு ராஜ்ய பிரதிநிதிகளாய்
வான் அளக்கும் துரிஞ்சிக் கூட்டம்
பௌர்ணமி காலம்
குரலெடுக்க மறந்த ஊரோடு
ஒன்றிச் செல்லும் நீள் இரவு!

*
பின் அந்தி யுத்தம்

கிழக்கே இருள் விரிக்கும் வானம்
மேற்கே மேகங்களில் கரைந்து மறையும்
நாளின் கடைசி ஒளிக்கீற்று
விண்மீன்களுக்கு எதிராய்
தெருவெங்கும் மண்மீன்கள்
குயிலோசையை மிஞ்சும்
கோயிற் குழலோசை
இரை சேர்த்து
கூடு திரும்பும் பட்சியும்
பணம் சேர்த்து
வீடு திரும்பும் மனிதனும்
ஒன்றாய் ஓர் வழியில்
இயற்கையும் செயற்கையும்
நிகழ்த்தும் பின் அந்தி யுத்தம்
ஒலியும் ஒளியாய் போர் மேகம்.

காலம்

இறந்தகாலம்
தொடர்ந்து பயணிக்கும்
நினைவுகளாய் என்னோடு

எதிர்காலம்
என்றும் இருக்கும்
திட்டங்களாய் மனதில் 

நிகழ்காலம்
மறைந்துபோகும் இக்கவிதையிலே
முன்தொடங்கி பின்கரைந்து

*

காதல்
 
உன் மேலுள்ள காதலை முடிந்த வரை
மறைக்கவே பார்க்கிறேன்
என்ன செய்வது?
பொருக்கயியலாமல்
கவிதையில் எழுதி விடுகிறேன்..
*

நீ தந்த காயங்கள் எவ்வளவு அழகானவை தெரியுமா?
கொஞ்சம் என் கவிதைகளைப் பார்
*
தருவதற்கு உன்னிடம் எவ்வளவோ இருந்தும்
ஏன் வலிகளை மட்டும் தருகிறாய்.
*
முதலில் என்னை முழுதாய் களவாடினாய்
இப்பொழுது சிரிக்கிறாய்
*
கொஞ்சம் காயங்களையாவது தா !
தழும்புகளாவது நிறந்தரமாக இருக்கட்டும்.
*
பார்வையில் கல் எரிகிறாய்
தோப்பாய் இருந்தால் பழங்கள் தருவேன்
ஆனால் நானோ இங்கு கண்ணாடி
*
என்னை முழுதாய் கொள்ளையடித்தாய்
பொறு!  உன் பெயராவது சொல்லிவிட்டுப் போ
*
குழந்தைக்கு ஒரு பொம்மை
உனக்கு என் இதயம்
*
உன்னைக் கண்டதுமே கடந்து செல்ல நினைக்கிறேன்
காதல் வலியில் நானாவது கவிதை எழுதிப் பிழைத்துக்கொள்வேன்
பாவம் நீ என்ன செய்வாய்
*
இந்த விதைகள் யாருக்காகவோ காத்திருக்கின்றன
என்னைப் போல்
பெண்ணே!
என்னுள் நீங்காமல் இருந்துவிடேன்
ஒரு வியாதியைப் போல்.

*

கோபம்

கடந்தகாலம் எரித்திரவமாய்
நிகழ்காலம் அதிலே அழுத்தமாய்
நான் இங்கு ஏவுகணை

நிகழ்வுகளின் எரியூட்டலில்
சிந்தனையின் வேகத்தில்
நான் இங்கு ஏவுகணை

இலக்கு நோக்கிய பாய்ச்சலில்
அதைத் தகர்த்தெரியும் உந்துதலில்
நான் இங்கு ஏவுகணை

முடிவில்,
அழிப்பதும் நானாய்
அழிவதும் நானாய்
நான் இங்கு ஏவுகணை
*

தத்துவம்


அண்ணம் பிரித்து
கிண்ணம் அடைத்து
உணவகத்தில் தரப்பட்ட
மதியச் சாப்பாடு
அழகாய்ச் சொல்லிப்போனது
வாழ்க்கைத் தத்துவம்

உண்பவரின் மனநிலை
பொருத்தது, சாப்பாடு
அளவாய் இருப்பதும்
குரைவாய் இருப்பதும்

அளவாய் நினைப்பவன்
நிறைவாய்ச் சொல்வான்
"அனுதினமும் ஆயிரம்
பேருக்குக் கொடுக்கிறான்
அவனுக்குத் தெரியாதா?
உண்பவன் எவ்வளவு
உண்பான் என்று"

ஆனால்
குறைவாய் நினைப்பவன்
கடிந்து சொல்வான்
"என்விரலே கிண்ணம்
நுழைய மறுக்கிறது" என்று

வாழ்க்கையும் இதுபோலத்தான்
கிடைப்பதில் திருப்திபடாதே
கேட்டுப் பெறு
கூட்டோ பொரியலோ
அதனளவை நீயே
முடிவு செய்

*

என் அறை முழுதும் தூசி!
அதன் ஒவ்வாமை ஒருவாறு உறுத்துயது
மொத்தமாக அதை அப்புறப்படுத்த நினைத்தேன்
துடைப்பம் கொண்டு, அதை கலைத்துவிடாமல்
சிறு விசை மூலம் அள்ளி எடுத்தேன்

விசையின் மிகமெல்லிய தூண்டலில்
தூசித் துகளனைத்தும் மேலும்பி
காற்று வெளியை நிறைத்தன
அறையில் கசிந்த சூரிய வெளிச்சத்தில்
பொன்னொளி கொண்டு மின்னின
தன் இருப்பை பன்மடங்காக
பெருக்கிக் காட்டின
மிரண்டு நின்றேன்

சில நொடி அதிர்ச்சிக்கு பின்னர்
அவற்றை கூடியெடுக்க மீண்டுமொறு விசை
அப்போது சில துகள்கள் வந்து என் மூக்கைச் சூழ்ந்தன
பின்னர் என்னை நிலைகுலைய வைக்கும் இரு பெரும் தும்மல்
கட்டுக்குள் வைக்க முடியாமல் திணறினேன்
கோபம் என் தலைக்கேறியது
சபித்தேன் ‘ இந்தத் தூசியும் அதன் காரணிகளும் அழிந்து போக,
சுவடே இல்லாமல் இங்கிருந்து மறைந்து போக’

சொல்லி முடித்த மறு நொடி என் முன் கும்மாளமடித்த தூசியாவும் காணமல்போனது
அப்பழுக்கற்ற தூய்மை
காணும் திசை எங்கும் நிறைந்தது
மாற்றம் மேலும் தொடர்ந்தது
என்னை சுற்றி அத்தனையும் அழிந்தது
சுவடில்லாமல் மறைந்தது
நான் சபித்தத்தைப் போலவே..
சூன்யம் கட்டற்று என்முன் நீண்டு கொண்டே செல்ல
காரணம் புரியவில்லை

இறுதியாக நானும் மறையத் தொடங்கினேன்!

*
பயணம்

ரெயிலின் தொடர் ஓட்டம்
பொடிநடையாய் ஆகும் தருணம்
ரெயில் தன்னை ஆசுவாசப்படுத்தும்
அந்த 15 நொடிகள்
நான் அவனைப் பார்த்தேன்
ரெயிலைப் பிடிக்க எண்ணிய அவனது பதற்றம்
ஓட்டமாய் அவனது கால்களில் தெரிந்தது

அடுத்த சந்திப்பை நோக்கிய நகர்வு
நரம்புகளில் அண்ணீர் பாய்ச்சும்
ரெயிலின் கூவலோடு
'அவன் எங்கே? ஏறி விட்டானா? '
இல்லை, தொடுமளவு தூரத்தில் இருக்கிறான்
தொடுவானம் தொடும் அந்திச் சூரியனாய்
"அருகிலிருப்பவர் யாரேனும் சற்று கை கொடுக்கூடாதா அவன் உள்ளே வர"
ஒலிகளற்ற மனக்குரல்
நகரும் காட்சிகளில் கரைந்தது

கட்டப்பா பாகுபலியை கொன்ற காரணத்தை அறியவும்,  பகிரியின் முணுமுணுப்பிற்கு சிரம் தாழ்த்தியும்
இன்ன பிற செயலிகளிலும் லயித்திருந்தார்கள் ரெயில் ஏறிகள்
அவனது பதற்றம், துன்புறுத்த ஆளின்றி
ரெயில் சக்கிரங்களில் சிக்கி உடைந்து போனது

நிகழ்வுகளில் சிறு மாற்றம் நொடிகளில் நிகழ்கிறது
அவனது நெற்றிச் சுருக்கம் தளர்ந்து
நிம்மதியின் அச்சு திட்டு திட்டாய் அவன் முகத்தில்..
யாரேனும் கைகொடுக்கிறார்களா?
இல்லைவே இல்லை
அவன் பிடிப்பதற்கான கை-யை காட்டுகிறார்கள்
இந்த அவசர யுகத்தில் கை காட்டினாலே புண்ணியம் தான்

புண்ணிய ஆத்மாவை
பயணிகளுக்கும் , பழக்கூடைகளுக்கும் மத்தியில் தேடுகிறேன்
அவர் ஆணா? பெண்ணா? அலியா?
இவர்களில் யாரும் இல்லை.
அது 'அது'
அது தனது கம்பிகளில் ஒன்றைக் காட்டி ,
அவனது கை பிடிக்கச் சொல்லி
தன்னுள் ஏற்றுகிறது
இப்போது அவன் அதனுள்.. இல்லை ரெயிலினுள்
எங்களில் ஒன்றாய்
என்னுடைய நிம்மதி, பெருமூச்சாய்
ஜன்னல் காற்றில் கலக்கிறது

ஒரு நிமிடம் .....
நான் இதையெல்லாம் சொல்வது அவனைப் பார்த்ததாலா?
இல்லை
முந்தைய சந்திப்பில் நான் ரெயில் துரத்திப் பிடித்த போது
என்னுடைய பதற்றம் உணர்ந்தவரின்
சிந்தனை வளையில் நான் சிக்கியதன் விளைவா?

எது என்னவோ
சந்திப்பு நெடுகிளும்
புண்ணியம் சேர்த்துப் போகும்  அசட்டையாய் தன் பயணத்தை தொடர்கிறது
யாரோ ஒருவரின் நரம்புகளில்
அண்ணீர் பாய்ச்சும் கூவலோடு

அண்ணீர் - Adrenalin
*


பயணம் - பாலசுந்தர்



இயற்கை உலா – சொல்-காட்சியாதல்

எப்பொழுதும் இயற்கையை ரசிப்பதென்பது தீராதது. சிற்பங்கள் நிலையாக இருந்து பல படிமங்களை மனதுள் ஏற்படுத்தி உளக்கிளர்ச்சியை உண்டாக்குகிறதென்றால், இயற்கை கணந்தோறும் புதுபுது உருவம் எடுத்து கணந்தோறும் நம் உளக்கிளர்ச்சியை பல படிமங்களில் தக்க வைத்துக்கொள்கிறது. அவ்வகையில் இளம்புலரியின் அழகை கடற்கரை பரப்பில் நின்று ரசிக்க வேண்டும் என்று விருப்புற்று அதிகாலையே மெரினா கடற்கரைக்கு நண்பர்களுடன் சென்றிருந்தேன். மெரினா என்றாலே நம் நினைவிற்கு வருபவை கூட்டமும், சுண்டல், கருவாடு போன்ற இதர பொருட்களை விற்கும் சிறுவர்கள், பெண்கள் கூட்டமும் தான். அதிகாலை மெரினா வேறொரு உலகத்தை கொண்டிருக்கிறது. தினமும் அது பாம்பு போல் அதை விழுங்கி விழுங்கி உமிழ்கிறது. நாங்கள் சென்ற நேரம் கடற்கரையில் பத்து நபர்கள்கூட இல்லை. 

இளங்காலை கதிரவன் உதிப்பதற்கு முன்பும், முழுவதுமாக மறைவதற்கு சில நிமிடங்கள் முன்பும் கடல் சிவன் அம்சமான கஜசம்ஹாரமூர்த்தமாக கடல் உருக்கொள்கிறதா என்று எண்ணுமளவிற்கான கருமை. கஜசம்ஹார சிற்பத்தில் சிற்பி நிலையான கல்லில் யானையின் தோலை சிவபெருமான் போர்வையாக போர்த்தி நடனமாடுவதாக அமைத்திருப்பான். அந்த தாண்டவத்தின் நேரடி நிலையை அந்நொடிகளில் கடலிலே கண்டேன். சிவன் சம்ஹாரம் செய்த அந்த யானை அரக்கனின் விடாய், அதன் கால் நகங்களுக்குள் சென்று கடல் அலைகளாக உருமாறி என் கால் பாதங்களை அதன் விடாய் தீர்க்க வந்து இழுக்கிறதோ என்று தோன்றுமளவிற்கு அலைகள் வந்தறைந்து அறைந்து சென்றது.
  கொஞ்சம் கொஞ்சமாக புலரத்தொடங்கியது… அக்காட்சிகளை காண இருகண்கள் கண்டிப்பாக போதாது. வானத்தை பார்ப்பதா தங்க தோணிகள் போல் மிதக்கும் கடல் அலைகளை ரசிப்பதா என்று மயங்க வைத்துவிட்டது. அக்காட்சிகளை பார்க்க பார்க்க மனம் ஊழ்க நிலைக்கு சென்றுவிட்டது. அன்றுவரை கற்றறிந்த சொற்கள் பயனற்றதோ, மௌனம்தான் சிறந்த சொல்லோ என்று எண்ணுமளவிற்கு என்னுள் மௌம் குடிக்கொண்டது. இந்நிலையில் என் மனம் தானாக பாரதியை நாடியது. எத்தனயோ கவிஞர்கள் எண்ணற்ற வகையில் இயற்கையை வருணித்திருந்தாலும், என்னை பொருத்தவரை அவர்கள் அனைவரும் பாரதியிடம் தோற்றவர்களே! கண்ட காட்சியை சொல்லாக, உணர்வெழுச்சியாக வடித்தெடுத்துவிட்டான். நான் கண்ட காட்சியை அன்றே பாரதி கண்டு கவியாக எழுதி கடலன்னைக்கும் கதிரவனுக்கும் கவிமனம் புரிந்துவிட்டான் போலும்! அந்திசாயும் பொழுது ஏற்பட்ட இயற்கை மாயங்களை கூறுவதாக பாஞ்சாலி சபதத்தில் அமைந்துள்ள இப்பகுதி, புலரிக்கும் அப்படியே பொருந்துவது வியப்பான விடயம். அக்கவிதை இதோ

பார்சுடர்ப் பரிதியைச் சூழவே படர்முகில்
எத்தனை தீப்பட் டெரிவன! ஓகோ!
என்னடி இந்த வன்னத் தியல்புகள்!
எத்தனை வடிவம்! எத்தனை கலவை!
தீயின் குழம்புகள்! — செழும்பொன் காய்ச்சி
விட்ட ஓடைகள்! — வெம்மைதோன்றாமே
எரிந்திடுந் தங்கத் தீவுகள்! — பாரடி!
நீலப் பொய்கைகள்! — அடடா, நீல
வன்ன மொன்றில் எத்தனை வகையடி!
எத்தனை செம்மை! பசுமையுங் கருமையும்
எத்தனை! — கரிய பெரும்பெரும் பூதம்!
நீலப் பொய்கையின் மிதந்திடுந் தங்கத்
தோணிகள் சுடரொளிப் பொற்கரை யிட்ட
கருஞ் சிகரங்கள்! — காணடி, ஆங்கு
தங்கத் திமிங்கிலம் தாம்பல மிதக்கும்
இருட்கடல்! — ஆஹா! எங்குநோக்கிடினும்
ஒளித்திரள்! ஒளித்திரள்! வன்னக் களஞ்சியம்!’

கணந்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும்;
கணந்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும்;
கணந்தோறும் நவநவமாங் களிப்புத் தோன்றும்;
கருதிடவும் சொல்லிடவும் எளிதோ? ஆங்கே,
கணந்தோறும் ஒருபுதிய வண்ணங் காட்டிக்
காளிபரா சக்திஅவள் களிக்குங் கோலம்
கணந்தோறும் அவள்பிறப்பாள் என்று மேலோர்
கருதுவதன் விளக்கத்தை இங்குக் காண்பாய்.

உண்மையாகவே, புலரியில் கடல் செழும்பொன் காய்ச்சி விட்ட ஓடைகள் போன்றும், தங்கத்திமிங்கிலம் மிதக்கும் இருட்கடல் போன்றும், ஒளித்திரளாக கணந்தோறும் வியப்புக்களும், புதியனவும் தோன்றிக்கொண்டே இருந்தன

கடைசியாக சென்னை மெரினாவில் இளங்காலை புலரியை கண்டுமுடித்துவிட்டு புதுச்சேரிக்குச் செல்ல நானும் நண்பர்களும், ஆயுத்தமானோம். சமீபத்தில் நமது தமிழக அரசு புதிய பேருந்துகளை பயன்பாட்டிற்கு கொண்டுவந்திருக்கிறது. முதலில் நாங்கள் அது புதுச்சேரி பேருந்து என்றுதான் எண்ணியிருந்தோம், உள்ளே கைப்பிடியில் நமது அரசியல்வாதிகள் புன்முறுவலுடன் காட்சியளித்தவுடன் தான் தெரிந்தது அட இது நம் தமிழக அரசு பேருந்து என்று. புது பேருந்து என்பதால் எந்தவித குலுக்கலோ, சத்தமோ இல்லை, அலுங்காமல், குலுங்காமல் மிக அருமையாக பயணம் அமைந்தது, அதுவும் எனக்கு ஜன்னல் சீட்டு, கேட்கவா வேண்டும் என் மனம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டே எங்கெங்கோ சஞ்சரித்துக் கொண்டுயிருந்தது. மரக்காணம் அருகே ஒரு நீர்நிலையைக் கண்டேன் ஒரு 5 நிமிடங்கள் அவ்வழியாக சென்றிருப்போம். மாலை மயங்கும் நேரம், வெள்ளித்தாள்களை கடலில் மிதக்கவிட்டது போன்று இருந்தது அக்காட்சி. கண்ணை சிமிட்டவோ அகலவோ முடியா அளவிற்கு நீர்நிலை முழுவதும் வெள்ளித் திரட்சி பார்த்து பார்த்து தீரா விடாயுடனும், ஏக்கத்துடனும் பார்த்துச்சென்றேன்.
நண்பர் புதுச்சேரியில்தான் இருக்கிறார் அதுவும் அரிக்கமேடு அமைந்திருக்கும் அரியாங்குப்பத்திற்கு மிக அருகில் இருக்கும் வீராம்பட்டிணத்தில் தான் அவரின் பிறப்பு முதல் வளர்ப்பு வரை. இதற்கு முன்பு இரண்டு முறை சென்றிருந்தாலும், இந்த முறைதான் என் சிறுவயதில் உளக்கிளர்ச்சியை ஏற்படுத்திய பல நாட்கள் செல்ல  வேண்டும் என்றிருந்த அரிக்கமேடு இவ்வளவு அருகில் இருக்கிறது என்று தெரிந்தது. சென்ற முறை சென்றிருந்த பொழுது பாரதியார் இல்லத்தில் காலம் மறந்து காலயந்திரப் பயணத்தில் பாரதியுடன் உலவிய மனபிறழ்ச்சி ஏற்பட்டது. புதுச்சேரிக்கு சென்றதன் முக்கிய நோக்கம் நண்பர் தேர் திருவிழாவிற்கு அழைப்பு விடுத்ததற்குதான். இதை நல்வாய்ப்பாக பயன்படுத்தி, கி.ரா. வை சந்திக்கவும், அரிக்கமேடு செல்லவும், லே கபேவில் குளம்பி குடிக்கவும், பாரதிதாசன் இல்லத்திற்கு செல்லவும், புதுச்சேரி அருங்காட்சியகம் உலாவவும் உள்திட்டம் ஏற்படுத்தி இதுபற்றிய கனவுகளுடன் பேருந்தில் பயணப்பட்டுக்கொண்டிருந்தேன்.
சுமார் 7மணியளவில் புதுச்சேரிக்கு வந்துசேர்ந்தோம் பேருந்துநிலையத்திற்கு வந்து நண்பன் வரவேற்று, முதல் வேலையாக லே கபே விற்கு அழைத்துச்சென்று மனநிறைவுடன் நண்பர்களுடன் குழாவி குளம்பி குடித்தது மகிழ்ந்திருந்தோம். என் மனமும் அவ்வப்பொழுது லே கபேவின் வரலாற்றை எண்ணிக்கொண்டிந்தது.  புதுச்சேரியின் முக்கிய இடங்களில் இது ஒன்று. இதற்கு முன்பு கடற்கரைசாலை அருகே ரயில் சென்றுக்கொண்டிருந்தது. அதற்கு அருகிலேயே துறைமுக அலுவலகமாக செயல்பட்ட பிரஞ்ச் பாணியிலான தொன்மை கட்டிடத்தில்தான் லே கபே அமைந்துள்ளது. கடற்காற்றின் ரம்மியமான தொடுகையை உணர்வதற்கும், வானத்தின் வர்ணஜாலங்களை எவ்வித இடையுறும் இல்லாமல் கண்டு ரசிக்கவும் ஏற்ற இடம் லே கபே. அதுவும் இதுபோன்ற ரம்மியமான இடத்தில் நண்பர்களுடன் சேர்ந்து இருந்தால் நம் மனமும் கொண்டாட்டத்திற்கான மனநிலைக்கு சென்றுவிடும். லே கபேவில் வரலாற்றுடன் குளம்பியும் சேர்ந்து குடித்துவிட்டு கடற்கரையில் சற்று காலாற உலவிவிட்டு வரலாற்றின் தடம் பதிந்த வீராம்பட்டினம் எனும் சிறப்புமிக்க பாக்கத்திற்கு சென்று சேர்ந்தோம். பயண அலுப்பு காரணமாக தானாக நித்திரைதேவி தேடிவந்து குடிகொண்டாள். நிம்மதியான தூக்கம். அடுத்தநாள் மேலும் திருவிழாக் கொண்டாட்டத்திற்கான மனநிலையுடன் தயாராக கதிரவன் நித்திரதேவியை விரட்டிவிட்டு எங்களிடம் வந்து சேர்ந்தான்.
அதற்கடுத்தநாள் காலை தேரோட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தோம். மிகப்பெரிய தேர் என்றும் சொல்ல முடியாது, சிறிய தேர் என்றும் சொல்ல முடியாது, மக்கள், இளைஞர்கள் அனைவரும் தேரை வடம் பிடித்து இழுக்க தயாராக இருந்தனர். நண்பர்கள் என்னையும் கூட்டத்தோடு ஐக்கியமாகி வடம் பிடித்து இழுக்க வற்புரித்தனர். ஆனால் நான் தோரோட்டம் கண்டிராதலாலும், தேர் அசைவின் அழகை காணும் வாய்ப்பை நழுவவிடக் கூடாது என்பதாலும் அவர்களுடன் செல்ல மறுத்துவிட்டு, தேர்அசைவின் முதல் அசைவை என் மனதில் அசைத்துக்கொண்டு நின்றிருந்தேன். ஊர்கூடி தேர் இழுப்பதன் உண்மை அர்த்தத்தை அங்குதான் கண்டுணர்ந்தேன். நான் அதுவரை தேர் அனைவரும் பிடித்து இழுத்தவுடன் அழகாக நகர்ந்து சென்றுவிடும் என்றுதான் நினைத்திருந்தேன், அங்கு தான் என் எண்ணம் தவறு, இயந்திர தேர் போன்று மிக எளிதாக நேராக சென்றுவிடாது என்று உணர்ந்தேன், பல்லாயிரம் பேர் இழுக்கவும், தேர் அழகாக பக்கவாட்டில் அசைந்தசைந்து செல்லவும் ஒரு குட்டியானையின் அசைவை காண்பது போன்றிருந்தது. காட்டில் பல்லாயிர எறும்புகள் ஒரு குட்டி யானையை இழுக்கும் முயற்சிக்கு அது அசைந்துகொடுத்து நகர்வது போன்றிருந்தது, அந்த தேரோட்டம், கடைசியாக வீதியின் முக்குவரை திரும்பி மறையும் வரை தோரோட்டத்தின் அழகை ரசித்து என்னை மறந்து நின்று கொண்டிருந்தேன், ஒரு சின்ன ஏமாற்றம், அந்த தேரோட்டம் நடப்பதற்கருகில் ஒரு சிறு யானையையும் சேர்த்து நடக்க வைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது. தேர் இழுத்து முடித்து, ஆரம்பித்த இடத்தில் வந்து சரியான நிறுத்துவதில் கிடைக்கும் ஆனந்தம், வாழ்வில் எதிலும் வெற்றி கிடைக்கவில்லை என்று கருதுபவனுக்குக் கூட எளிதாக கிடைக்கும் வெற்றி போன்றது. தேர் இழுத்து மீண்டும் அதே இடத்தில் சரியாக நிறுத்தவைப்பதில் கிடைக்கும் பேரானந்தத்தை வேடிக்கைபார்த்த என்னாலேயே உணர முடிந்தது என்றால், தேர் இழுத்தவர்கள் எவ்வளவு பேரானந்தத்தை கண்டிருப்பார்கள் என்று எண்ணிக்கொண்டேன். அப்பொழுது ஒன்று முடிவுசெய்தேன், இந்த தேரே இவ்வளவு பரவசத்தை தருகிறதென்றால், திருவரூர் தேர் எவ்வளவு பரவசத்தையும், பேரானந்தத்தையும் தரும், அதை வாழ்நாளில் ஒரு முறையேனும் நேரில் சென்று பார்த்துவிட வேண்டும் என்று முடிவுசெய்துள்ளேன். கண்டிப்பாக அந்த நாள் கைகூடும்.
தேரோட்டம் முடித்த கையோடு என்னையும் அழகாக தூக்கிக்கொண்டு கடலில் போட்டு, கும்மாளம் அடித்துக்கொண்டு, கடலலைகளோடு மோதி, விளையாடி மீண்டுவந்து மதியம் சாப்பிட்டு அரிக்கமேட்டிற்கு செல்ல ஆயுத்தமானோம்.
அரிக்கமேடு என் கனவுகளின் பண்டைய நகரம், பல்லாண்டுகளாக நான் சென்று பார்க்கவேண்டும் என்று எண்ணியிருந்த தொல் குடியிருப்பு அன்ன புதுக்காடு. நண்பர் வீட்டிலிருந்து நடந்து செல்லும் தூரமேயாதலால் களைப்பு நீங்க அரட்டையடித்துக் கொண்டும், அரிக்கமேடு வரலாற்று செய்திகளை பரிமாறிக்கொண்டும் சென்றோம். அப்பொழுதெல்லாம் அரிக்கமேட்டில் மிகச்சாதாரணமாக பண்டைய ரோம், எகிப்திய நாணயங்கள் கிடைத்தன என்றும், அதை மக்கள் வரலாற்று முக்கியத்துவம் தெரியாமல் அங்கு சுற்றிப்பார்க்க வந்தவர்களுக்கு அன்பளிப்பாகவும், செல்லத்தக்க காசு கொடுத்து மாற்றிவிட்டார்கள் என்றும் அதுபோன்று எங்கள் வீட்டில் உள்ளவர்களும் செய்தனர் என்றும் என் நண்பர் கூறினார். நம் மக்களும், அரசாங்கமும் வரலாற்றிற்கு எவ்வளவு தூரம் முக்கியத்துவம் தருகிறார்கள் என்பதன் நேரடி சாட்சி அரிக்கமேடு. எந்தவிதமான பாதுகாப்பு வசதிகளோ அல்லது அந்த உலக வரலாற்று சிறப்புமிக்க இடத்தை பற்றிய அறிவிப்புகளோ, என எதுவும் இல்லாமல், பாழடைந்த கட்டிடம் மட்டும் காலத்தின் எச்சத்தில் உறைந்துபோய் வெறும் கல்லாகவே நின்றுக்கொண்டிருக்கின்றன. இதுபோன்ற ஒரு இடம் வெளிநாட்டில் இருந்திருந்தால் எப்படி வைத்திருப்பார்கள்? எது எதற்கோ வெளிநாட்டினருடன் ஒப்பீடு செய்துக்கொள்கிறோம் எதற்கு செய்ய வேண்டுமோ அதற்கு செய்ய தவறிவிடுகிறோம்.
நம்மவர்களும் வரலாற்றில் எந்தளவிற்கு தேர்ச்சியுடன் இருக்கிறார்கள் என்று அன்று வியந்துவிட்டேன். அந்த இடிந்தநிலையில் உள்ள கட்டிடம் மிக நிச்சியமாக கி.மு. காலத்தில் கட்டப்பட்டதுதான், அப்பொழுதே நம்மவர்கள் செங்கல் வைத்து எந்தளவு கட்டியுள்ளனர் என்று என் நண்பர் ஒருவர் கூறியபொழுது அதிர்ச்சியடைந்துவிட்டேன். பிறகு அவருக்கு அந்த பேராலய வரலாற்றைப்பற்றி எடுத்துக்கூறுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. நம் இணையப்பக்கத்திலும் மிகச்சரியாக அந்தப் பேராலயத்ததைப்பற்றிய குறிப்பிகள் கிடைக்கவில்லை பின்பு நீங்கள் ஒரு சமயத்தில் புதுச்சேரிக்கு கம்பன் விழாவிற்கு வந்த பொழுது அரிக்கமேட்டிற்கு சென்றதுப் பற்றிய ஒரு கட்டுரையிலிருந்து அவருக்கு ஆதாரங்களை சுட்டிக்காட்டி காண்பித்து உண்மை நிலையை எடுத்துக் கூறுவது போன்ற நிலை ஏற்பட்டது. ஏனென்றால் தமிழகத்தில் செங்கல் கட்டுமானம் கொண்ட மிகப் பழைய கட்டிடமாக அதுவும் முக்கால்வாசி இடிந்தநிலையில் மாமல்லபுரம் அருகே இருக்கும் சாலுவன்குப்பத்தில் அகழ்ந்தெடுத்த சங்க காலம் சார்ந்த கி.மு. 2ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட முருகன் கோயில் மட்டும்தான் நமக்கிருக்கும் ஒரே பழைய செங்கல் கட்டுமான அத்தாட்சி. மேலும் சாலுவன் குப்பத்தில் காணப்படும் செங்கல்கள் வடிவம் சிறியதுதான் தற்கால பயன்பாட்டில் இருக்கும் செங்கள் அளவேயானது. ஆனால் அரிக்கமேட்டில் நாங்கள் பார்த்த செங்கல்களின் நீளம் ஒவ்வொன்றும் மிகப்பெரியது. பேராலயத்தின் கட்டுமான செங்கல்கள் அளவு மிகப்பெரியதாக காணப்படுகிறது. இது ப்ரெஞ்ச் கட்டிடத்தில் தான் முதன்முதலாக பயன்படுத்தப்பட்டதா? அல்லது அரிக்கமேட்டில் இருந்த மிகப்பழைய செங்கல்கள் கொண்டு எழுப்பப்பட்டதா என்பது தெரியவில்லை, இதைப் பற்றி யாரேனும் விரிவாக ஆய்வு செய்து எழுதியுள்ளார்களா என்றும் தெரியவில்லைஎன இதுபோன்று பல விடயம் நண்பர்களுடன் அலவலாவிக் கொண்டு அப்படியே அரிக்கமேட்டிற்குள் நடந்து பொதுக்கே என்று அறியப்பட்ட அந்த பழைய துறைமுகம் இருந்த இடத்திற்கு வந்து அரியாங்குப்பம் ஆறு மற்றும் சதுப்புநிலக்காடுகளை பார்த்த பொழுது என் மனம் காலம் கடந்து சென்றுக்கொண்டிருந்தது. இந்த இடத்தில்தானே பன்னாட்டு வணிகர்கள் வந்து மாற்றுக்கொண்டு சென்றிருப்பர், இந்த இடத்தில்தானே கறுப்பு தங்கம் என்றறியப்பட்ட ரோம சாம்ரைாஜ்யத்தை வீழ்த்திய அந்த குண்டுமணியளவேயான மிளகு ஏற்றுமதி நடத்தியிருப்பர், இந்த இடத்தில் எத்தனை எத்தனை மக்களின் வாழ்வாதாரம் நம்பியிருந்தது, இந்த இடத்தில் எத்தனை எத்தனை யவனர்கள், காப்பிரியர்கள். சோனர்கள் என மொழிக்கு புதுச்சொற்கள் சேர்க்கப்பட்டது என மனம் சென்றுக்கொண்டிருந்தது.
மேலும் அரிக்கமேட்டின் வரலாற்று முக்கியத்துவமான சம்பங்கள் தாங்கள் அந்த கட்டுரையில் குறிப்பிட்டபடியால் கூறியது கூறல் வேண்டாம் என்ற இலக்கிணத்திற்குட்பட்டு அரிக்கமேட்டைப்பற்றி இங்கு எதுவும் குறிப்பிடவில்லை. அரிக்கமேட்டில் கண்டெடுத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை புதுவை அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைத்துள்ளனர் என்று கேள்விப்பட்டு அதற்கடுத்த நாள் புதுவை அருங்காட்சியகத்திற்கு செல்லவும், எழுத்தாளர் கி.ரா. விடம் முந்தைய நாளே சந்திப்பதற்கான அனுமதி வாங்கியதால் அவர் குறித்த நேரத்தில் செல்லவும் திட்டமிட்டோம். அன்றிரவும் கொண்டாட்ட மனநிலையில் நண்பர்களுடன் அரட்டையடித்துக்கொண்டு அடுத்தநாளிற்காக காத்திருந்தேன்.
புதுச்சேரியில் இருந்து நண்பன் வீட்டில் முந்தைய நாளிலேயே கி.ரா. வுடன் தொலைப்பேசியில் நேர அனுமதிப்பெற்றிருந்தேன். அடுத்தநாள் கி.ரா.தான் என் மனம் முழுவதும் ஆக்கிரமித்திருந்தார். அதற்கேற்றார்போல் தங்களின் தளத்திலும் அன்றைய தினத்தில் கி.ரா. எழுதிய கன்னிமை சிறுகதை பற்றிய தங்களின் விமர்சனக் கட்டுரையும் இடம்பெற்றிருந்தது. மிக ஆனந்தமடைந்தேன். கி.ரா. சந்திப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பிருந்தே தங்கள் தளத்தில் தேடி தேடி கி.ரா. பற்றி தாங்கள் எழுதிய கட்டுரைகள், கதைகள் என அந்த விமர்சனத்திலிருந்து நேரடியாக கதைக்குச் சென்று படித்தது என்று முழுவதும் இரண்டு நாட்கள் கி.ரா. ஆக்கங்கள் பற்றித்தான் வாசித்துக்கொண்டிருந்தேன். நாற்காலி, கன்னிமை, கதவு போன்ற சிறுகதைகளையும், தாங்கள் கி.ரா. பற்றி எழுதிய சில கட்டுரைகளையும் மனதில் இருத்திக்கொண்டு, அதில் இருந்து அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள், சொல்ல வேண்டிய கருத்துகள் மனதில் அசை போட்டப்படி கி.ரா. வை சந்திக்கும் அந்த இளங்காலைப் பொழுது கடந்தது.
சுமார் 10 மணிக்கு கி.ரா. தன்னுடைய நேரத்தை என்னுடைய சந்திப்பிற்கு ஒதுக்கியிருந்தார். அவரைப்பற்றி தடம் இதழில் வெளிவந்த பேட்டி கட்டுரைகள் எடுத்துக்கொண்டு செல்லலாம் என்று திட்டமிட்டிருந்தேன் ஆனால் வழக்கமான பதற்றத்தின் காரணமாக நண்பனின் வீட்டிலேயே மறந்து விட்டு வைத்துவிட்டேன். செல்லும்வழியில் அவருக்கு பழங்கள் வாங்கிக்கொண்டோம். நான் அவருக்கு பரிசளிப்பதற்காக முந்தைய நாள் கடையில் பிரபஞ்சனின் ஒரு புத்தகத்தை வாங்கியிருந்தேன் நல்ல வேலை அதையாவது கவனமாக நான் எடுத்துக்கொண்டேன். பயண வழி முழுவதும் அவரைப்பற்றிய எண்ண ஓட்டங்கள் 10 நிமிட பயணத்தில் அவரிருக்கும் அடுக்ககத்திற்கு வந்து சேர்ந்தோன். பிறகு ஒரு ஐந்து நிமிடம் எந்த வீடு என்று கண்டுபிடிப்பதில் தத்தளித்து சரியாக 10.30 மணிக்கு அவர் வீட்டிற்கு சென்று சேர்ந்தோம். நண்பர்களுக்கு இலக்கிய பரிட்சியம் இல்லையாதலால் நான் மட்டும் பழங்கள் புத்தகங்கள் எடுத்துக்கொண்டு ஒருவித படபடப்புடன் அவர் வீட்டின் முன்பு வந்தேன் முகப்பில் அவர் மகன் நீங்கள் தானே கால் செய்தது என்று விசாரித்து வரவேற்றார். உள் முகப்பிலேயே உடலில் ஒரு துண்டை போர்த்திக்கொண்டு, தாடியுடன் விட்டத்தை பார்த்தபடி ஏதோ யோசித்துக்கொண்டிருந்தார் எழுத்தாளர் கி.ரா. அவர் மகன் நேற்று போனில் பேசியவர் வந்திருக்கிறார் என்று கூற திரும்பி என்னைப் பார்த்தார் நான் சிறிய புன்னகையுடன் வணக்கம் ஐயா என்று கூறினேன், அமரும்படி கூறினார். கையிலிருக்கும் பழங்கைளைப் பார்த்து இது என்ன? என்று கேட்டார், தாங்கள் சாப்பிடுவதற்கு பழங்கள் என்று கூறினேன் இவ்வளவா? இனிமேல் எல்லாம் பழத்தோடு வந்து சந்திக்காதே என்று அறிவுறுத்தினார். நான் பரவாயில்லை என்றேன். சற்று நேரம் அமைதி. அவர் எதுவும் பேசவில்லை. மீண்டும் பழையபடி விட்டத்தைப்பார்க்க ஆரம்பித்துவிட்டார். அவர் அமர்ந்திருந்த நாற்காலியைக் கண்டவுடன் எனக்கு நாற்காலி கதையில் வந்த நாற்காலிதான் ஞாபகத்திற்கு வந்தது. அதை அவரிடம் கூறினேன். ஒரு சின்ன சிரிப்பு மீண்டும் அமைதி, விட்டத்தை பார்க்க ஆரம்பித்துவிட்டார்.  கொஞ்ச நேரம் கழித்து  என்னால் அதுவரை படப்படப்பை அடக்க முடியவில்லை ஒருவித கனவுலகத்தில் இருந்ததாகத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன்.அவரே பேச ஆரம்பித்தார்.  அப்புறம் என்ன விஷயமா வந்திருக்க? என்ன பன்ற? என்று விசாரித்தார். நான் பதில் கூற ஆரம்பிப்பதற்குள் அவரின் துணைவியார் வந்தார். அவருக்கு வணக்கம் கூறினேன். அவரும் புன்முறுவலுடன் வணக்கம் செய்து சென்றுவிட்டார். பிறகு  என்ன குடிக்கிறாய் காபியா?, டீயா? என்று கேட்டார். நான் அதெல்லாம் வேண்டாம் பரவாயில்லை என்றேன். அவர் மீண்டும் கேட்டார் காபி என்றேன். அவரின் மருமகள் காபி கொண்டுவந்து  எங்கள் இருவருக்கும் கொடுத்து உள்ளே சென்றுவிட்டார். சற்று நேரத்தில் அவரின் மகனும் வங்கி வேலை விஷயமாக சென்றுவிட்டார். 
வழக்கமான விசாரிப்புகள் சென்றது. பிறகு நான் எழுத்தாளர் ஜெயமோகனின் உதவியுடன் தான் தங்களின் எண் வாங்கினேன் என்றேன். அன்றைய தினம் தங்களின் விமர்சனக் கட்டுரைப் பற்றியும் கூறினேன். அமைதியாக கேட்டுவிட்டு. He is good writer என்று தங்களை ஒரு வரியில் பாராட்டி பின்பு அமைதியடைந்தார். இடையிடையே அவர் பலமாக சிந்தித்துக்கொண்டேயிருந்தார். அப்படி சிந்திக்கும்பொழுது விட்டத்தை பார்த்துக்கொண்டிருந்தார். அந்தப்பொழுது அவரின் முகபாவனைகளில் பலவிதமாக மாறின. ஒவ்வொரு யோசனைக்கும் ஒவ்வொரு முகபாவனை போன்று என்று எண்ணிக்கொண்டேன். அந்த முகபாவனையை கொஞ்ச நேரம் நான் ரசித்துக்கொண்டிருந்தேன். பிறகு இலக்கியங்கள் பற்றி பேச்செடுத்த பொழுது அதிகமாக புத்தகங்களை படிக்காதே, என்றார் நான் சிவில் சர்வீஸ் தேர்விற்கு தயாராகிக்கொண்டிருக்கிறேன் என்று சொல்லியிருந்தேன். அதனால் அவர் நன்றாக படித்து நல்ல அதிகாரியாக வா, அதிகமாக இலக்கியம் படிக்காதே, ஒரு பயனும் இல்லை. தமிழகத்தில் என்னைப் போன்ற சில எழுத்தாளர்கள் மட்டும்தான் நல்ல நலையில் இருக்கிறோம் என்று மனம் வெதும்பி கூறினார். இந்தக் கூற்றை அவரிடம் சற்றும் நான் எதிர்பார்க்கவில்லை.
பிறகு கொஞ்ச நேரம் அமைதி, திடீரென்று புன்முறுவலுடன் என் பக்கம் திரும்பி அம்மா அப்பா பற்றி விசாரித்தார். என்ன ஊர் என்று கேட்டார். நான் கொண்டலாம்பட்டி என்றேன். கிராமமா? என்று ஒருவித புன்னகையும், உவகையும் கலந்த முகப்பாவத்தோடு கேட்ட அந்தக் கேள்வி என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத தருணம். நான் இதுவரை எவரிடமும் அத்தகைய ஒரு முகபாவனையைக் கண்டதில்லை. மிக மிக குழந்தைதனமான கல்லமற்ற அந்த புன்முறுவல் பூத்த முகம் என் அகத்தில் அன்றலர்ந்த மலர் போல் எப்பொழுதும் இருக்கிறது. ஆனால் என் நேரம் நான் இருந்த ஊர் கிராமம் இல்லை. நான் கிராமம் இல்லை கிட்டத்திட்ட டவுண் போன்றது என்றவுடன் மீண்டும் புண்ணகை மறந்து அதே போல் பழைய நிலைமைக்கு சென்றுவிட்டார்.
கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு தற்பொதைய education system சுத்தமா சரியில்ல... வாத்தியாருக்கு எங்க மரியாதை இருக்கு நாம பேசர இங்கிலிஷ்லா ஒரு இங்கிலிஷா இந்த ஆங்கிலம் நம்மல அடிமைபடுத்தறவன் பேசனது. அப்ப அவன் எப்படி பேசுனானோ அப்படித்தான் இன்னும் நாம பேசறோம். ஆனா லண்டன்ல இந்த ஆங்கில அறிவோட போய் பேசுண நம்மல ஒரு மாரி பாப்பாங்க, காலத்துக்கு ஏத்தமாதிரி நம்ம மொழியிலும் மாற்றத்த கொண்டுவரணும், இன்னும் இலக்கண சுத்தத்தோட, சங்க இலக்கியத்திலேயே இருந்து பெரும பேசக்கூடாது. அப்டினா கி.ரா. சங்க இலக்கியம் வேண்டாங்கிரானா னா அப்படியில்ல நமக்கு சங்க இலக்கியமும் வேணும், உலகத்துல இந்தளவுக்கு செறிவான ஒரு மொழியா நம்ம மொழி இருந்திருக்குன்னா அதுக்கு ஆதாரம் சங்க இலக்கியம் தா... ஆனா அந்த சங்க இலக்கியத்தை இப்ப படிச்ச எத்தன பசங்களுக்கு புரியுது ஒருத்தனுக்கும் புரியாது. அதுனால இப்ப எழுதுற நாவல்கள், இலக்கியங்கள் எல்லாமே பேசுற மொழியில தான் எழுதனும், இங்கிலிஷ் காரன் பேசுறது ஒரு மாரி எழுதுறது ஒருமாரியா எழுதுறான். நாமதான் உரைநடை தமிழ் பேச்சு தமிழ் அப்டின்னு நிறையா வெச்சிட்டுயிருக்கோம். இப்ப பேசுறப்ப நீயும் நானும் இங்கிலிஷ்னுதான் சொல்லுவோம் ஆனா எழுதுறப்ப ஆங்கிலம் னு எழுதுவோம் நான் என்ன சொல்றன்ன எழுதுறதையும் இங்கிலிஷ்னு எழுது யார் என்ன கேக்க போறா அப்படி பேசுற மொழியில எழுதுனா தா நம்ம மொழிய உலகம் முழுசா நாம கொண்டுட்டு போக முடியும். என்று தன் கருத்தை கூறினார்.
ஆய்வியல் நிறைஞர், முனைவர் போன்ற ஆய்வு படிப்புகளில் பெரும் மாற்றத்தை கொண்டுவரவேண்டும். மீண்டும் மீண்டும் எழுதுனதே எழுதி இதுதா ஆய்வுனு சொல்றதுக்கு எதுக்கு டாக்டர் பட்டம். இது எவ்ளோ பெரிய ஏமாத்து வேலை. டாக்டர் பட்டம் எதுக்கு தரானுங்க சொந்தமா யாரும் சொல்லாத கருத்த, எழுதாதத எழுதுறவனுக்கு தரது. இப்ப வர்ற 90 சதவீத ஆய்வேடுக்கள் சொல்றதேதா திரும்ப திரும்ப சொல்றது. நான் பேராசிரியரா போன கல்லூரில அங்க இருக்கிற லைப்ரரில எடுத்து பார்த்த எல்லா ஆய்வேடும் காப்பி அடிச்ச மாரி ஒன்னா யிருந்தது. இதுக்கெதுக்கு டாக்டர் பட்டம். அதுல வேர ஒருத்தன் எப்படி கவிதை எழுதியிருக்கான், என்று சமீபத்தில் தான் தொகுத்த கட்டுரைகள் தொகுப்பு நூலாக பதிவுகள் எனும் நூலில்  இடம்பெற்றிருந்த ஒரு மாணவன் எழுதிய கவிதை ஒன்றை எனக்கு அவரே வாசித்துக்காண்பித்தார்.
கவிஞர் தபரா என்பவர் எழுதிய அந்தக் கவிதையை தருவதற்கு முன்பு அவருக்கே உரித்தான அந்த அங்கத நடையில் இப்படி கூறுகிறார். “கவிஞர் தபிரா எழுதிய அந்த எழுத்தை பிரபலப்படுத்தும் நோக்கம் எனக்குக் கிடையாது. நான் வாசித்தத்தை எனது நாட்கறிப்பில் பதிவு செய்யனும் என்றுபட்டது. பேராசிரியர்கள் மன்னிப்பார்களாக.” அடுத்ததாக அந்தக் கவிதை தருகிறார். இதோ கவிதைத் தலைப்பு பேராசிரியன் படிக்கிற கவனி, என்றார் கி.ரா.
ஒரே கட்டுரையை
திரும்பத் திரும்ப
ஒன்பது இடங்களில்
படித்து படித்து
பணம் பண்ணும்
ஏமாற்றுப் பேர்வழி   
(யாரு பணம் பன்றா பேராசரியன் நல்லா கவன்ச்சியா ஒரே கட்டுரை திரும்பத் திரும்ப ஒன்பது இடங்கள்ல படிச்சு ஒவ்வொரு டைம் பணம் பன்றான்னு எழுதியிருக்கான்  - இது கி.ரா. விளக்கம். அடுத்துப் படிக்கிற கவனி)
அங்கும் இங்கும்
பார்த்து எழுதி
புத்தகம் போட்டு
அதையும் விற்க
ஆளைப் பிடிக்கும்
அறிவுக் கொழுந்து (சற்று அழுத்தமாக வாசிக்கிறார்)

வாய்ப்புக் கொடுத்து
வாய்ப்பு வாங்கி
பணத்துக்கு மேல்
பணத்தைப் பெருக்கும்
கொடுக்கல் வாங்கல்
ஈட்டிக் காரன்

பாடம் நடத்த
பேப்பர் திருத்த
வேவு பார்க்க
ஆய்வு மாணவரை
அடிமையாய் நடத்தும்
கொடுங்கோல் பண்ணை

மாணவர் எவனும்
மாட்டிக் கொண்டால்
சீமைச் சரக்கும்
கோழிக் கறியும்
உள்ளே தள்ளும்
குப்பைத் தொட்டி

வெளியூர் போன
படிப் பணம்
எவ்வளவு பெற்றும்
ஓசியில் தின்றே
வயிறு வளர்க்கும்
ஈனப் பிறவி (மீண்டும் இந்த இடத்தில் அழுத்தம் கொடுத்து வாசிக்கிறார்)
கேட்டியா? ஒரு மாணவன் ஒரு பேராசிரியன் பத்தி எழுதியிருக்கிற கவிதைய... இப்டிதான் நம்ம கல்வி முற இருக்கு. நாம சுதந்திரம் வாங்கி எவ்ளோ வருஷம் இருக்கும் இன்னும் நம்ம கல்வி முறல பெரிய மாற்றத்த எடுத்துட்டு வரணும். என்று கூறினார்.
பொதுவாக கி.ரா. கவிதைகளை அவ்வளவு ரசித்து படிப்பதில்லை. கி.ரா. விற்கு கவிதை வடிவத்தில் ஈடுபாடு இல்லை என்ற பொதுக்கருத்து ஒன்று உண்டு. ஆனால் அவரே அந்தக் கவிதையை மிக ரசித்து ஒவ்வொரு ஒரியாக நிறுத்தி நிதானமாக மீண்டும் மீண்டும் வாசித்துக் காண்பித்தார். அந்த சமயம் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
இதுபோன்று கொஞ்சம் பேசிக்கொண்டிருந்தோம். 10.30 மணியிலிருந்து ஒரு மணி வரை கி.ரா. வுடன் நேரம் சென்றது தெரியாமல் அவரின் புன்முறுவல்கள், அவரின் கருத்துக்கள், அவரின் முகபாவங்களை ரசித்துக்கொண்டிருந்தேன். பின்பு அவரே கேட்கனும் நினைச்சதுல்லாம் கேட்டுட்டயா? எதுவும் மறக்கலல்ல? என்று கேட்டார் எங்கே நிறை கேட்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன் படபடப்பில் ஒன்றும் கேட்வில்லை. ஆனால் அவரைப் பார்த்தது பேசியது, மிகுந்த மனநிறைவை கொடுத்தது. வருகிறேன் என்று சொன்னபொழுது, இன்னொருவாட்டி வரப்பலா எதுவும் வாங்கிட்டு வராதா... என்று மீண்டும் அறிவுறுத்தி, அப்ப உன்ன பாத்ததுல ரொம்ப சந்தோஷம் என்று கூறி எல்லாம் சம்பிரதாயத்துக்குத்தான், என்று புன்முறுவலுடன் விடைகொடுத்தார். மிகுந்த மனநிறைவுடன் நான் வெளிவந்தேன்.
அங்கு காத்துக்கொண்டிருந்த நண்பர்களுடன் சென்றேன், அன்றைய மதியப்பொழுது புதுச்சேரி அருங்காட்சியகத்திற்கு சென்றோம். அரிக்கமேட்டில் கிடைத்த தொல்பொருட்களுக்கென்று பிரத்யேகமாக ஒரு அறை ஒதுக்கி காட்சிப்படுத்தியிருந்தனர். ஒவ்வொரு பொருளும் என்ன என்று விளக்கியிருந்தார்கள். செப்புத்திருமேனிகள், ஓவியங்கள், பிரெஞ்சு கவர்னர்கள் பயன்படுத்தி மேஜை, பொருட்கள், டுப்ளக்ஸின் அலுவலக அறை மாதிரி, அக்காலத்திய சாரட் வண்டி, புவியியல் சார்ந்த பொருட்கள் என நிறைய கண்குளிர கண்டு, வரலாற்றை நேரடியாக அனுபவித்து தெரிந்துக்கொண்டோம். அன்றைய பொழுது எனக்கு மிகுந்த மனநிறைவை தந்தது. பல நாட்கள் இந்த நாளை நினைத்து நினைத்து உவைகைக்கொள்வேன் என்று எண்ணியிருந்தேன்.

நெய்ப் பந்தம் - சிறுகதை - பிரதீப் கென்னடி


நெய்ப் பந்தம்

 எது நேர்ந்துவிடக்கூடாது என மறந்தாற்போல் இருந்தானோ அதுவே நேர்ந்துவிட்டது போல் அவன் மனதை பதைபதைக்க செய்தது. அந்தி மங்கி மறைந்து போகபோகும் இந்த வேளையில், இருபுறமும் கண்ணுக்கெட்டிய தூரம்வரை பச்சிளம் நாத்துகளைத் தாங்கிய வயல்பரப்புகளின் நடுவே வகுடெடுத்தாற்போல் நீண்டு செல்லும் அந்த தார்சாலையில், தன் சைக்கிளின் பெடல்களை அழுத்தி மிதித்தான். ஆத்தாவீட்டுக்கு விரைந்துவிட்டு எப்படியாவது வீடு திரும்பிவிட நினைத்தான். எங்கும் அமைதியும் நிசப்த்தமும் நிலைத்திருக்க அவனுக்கு மட்டும் கேட்க்கும் செய்ன் கவரில் செய்ன் உரசும் 'கிரீச் கிரீச்'  கிலியை தருவதுபோல் இருந்தது.

இதேபோல் அந்தி மங்கிய பல வெள்ளி இருளின் துவக்கத்தில் இந்த ஆரேழு மைல் தூரத்தை "ஆத்தாவூட்டுக்கு போறோம்" என சந்தோசம் தழும்ப கடந்தறியாமல் கடந்திருக்கிறான். ஒருநாளும் ஆத்தாவீடு இன்றுபோல் அவனுக்கு தூரமாய் இருந்ததில்லை.

"அப்பாட்ட செலவுக்கு எவ்ளோ  காசு கேக்குறது? மத்த பயலுவோலாம் ஐநூருவா கொண்டு வாரானுவோ, அப்பா ஐநூருவா கேட்டா தருவாரா? அங்க குளுருமாமா, அப்பத்தாவ  சொட்டரத் தொவச்சு போட சொன்ன. போட்டுச்சா? ஸ்கூல்ல காலைல அஞ்சு மணிக்கெல்லாம் பஸ் எடுத்துருவாங்க, ஸ்கூலுக்கு  அஞ்சுமணிக்கெல்லாம் போயிர இங்க நம்மூர்லெந்து நாழுமணிக்கெல்லாம் பஸ் கெடைக்குமா? கெடைக்கலன்னா?" இப்படி எண்ணற்ற கேள்விகளோடு பள்ளியில் இருந்து வீடு திரும்பியவனுக்கு ஆத்தாவைப்  பற்றி எந்த கேள்விகளும் எழுந்திருக்கவில்லை.

ப்ரின்ஸ்பல் சார் எட்டாம் வகுப்பு 'ஏ' சக்ஸனுள் நுழைந்து இரண்டு நாள் டூர் அறிவிப்பு செய்து ஊட்டியையும் ப்ளாக்தண்டரையும் பற்றி செய்த விவரணைகளிலேயே  அவன் டூர் போக முடிவெடுத்துவிட்டிருந்தாலும்  அப்பொழுது ஆத்தாவை பற்றி இவ்வளவு பயம் இருந்திருக்கவில்லை. டூர் பணம் ஆயிரத்தைனூரு எண்ணி கொடுத்த அப்பா, "ஒங்க ஆத்தா இப்டி இருக்கடா" என்ற பொழுது வெளிரித்தான் போனாலும் எப்படியோ "அதெல்லா ஒண்ணூ  ஆவாது" என நம்பி இருந்தவனாய்  இன்று இருக்கமுடியவில்லை.
இவ்விருதினங்களாக ஆத்தாவை மறந்து வேறெந்த நினைவுமின்றி, டீவியில் ப்ளாக்தண்டர்  விளம்பரம் போடச்சொல்லி ஏங்குவதும், நண்பர்களோடு சேர்ந்து எப்படி ஆறுபேர் சீட்டை பிடிப்பது அதில் நாமெப்படி சன்னலோர சீட்டைப்பிடிப்பது  என்ற யோசனையுமாய் ஊட்டியின் உருவ அமைப்புகளை அவனாக உருவகப்படுத்தி கொண்டிருந்தான். விரல் விட்டு எண்ணி ஒவ்வொருநாளைக் கழித்து நாளை டூர் கிளம்பிவிடலாம் வென்றிருக்கையில் "ஆத்தாவுக்கு ரொம்ப முடியல, ஆத்தா ஒன்னப்  பாக்கணுங்குது அப்பு" என்ற சின்னமாமி யின் அழைப்பு அவன் ஆசைகள் யாவையும் உடைத்து அவனை உடனடியாக ஆத்தாவீட்டுக்கு கிழம்ப்பசெய்தது.

"நா போன வாரோ பாத்தப்பக்கூட ஆத்தா நல்லாத்தான் இருந்துச்சு, யேன் எல்லாரு என்ன ஏமாத்ரிய" என உள்ளார புழுங்கியப்படி  யாரும் ஏமாற்றவில்லை என்ற உண்மையறிந்தும் அதை ஏற்றுகொள்ள  மனமில்லாதவனாய் - இடக்கையால் ஹேன்டில்பாரை  பற்றி வலக்கையால் கண்ணீரைத்  துடைத்து, "கடவுளே ஆத்தா இன்னைக்கி செத்தரக்கூடாது கடவுளே, நா நாளைக்கி எப்டியாது டூர் போவனு கடவுளே, ப்ளீஸ் கடவுளே ப்ளீஸ் கடவுளே" என வேண்டியழுதவாறே சைக்கிளை இன்னும் வேகமாக அழுத்தி மிதித்தான்.

ஆத்தாவின் நிலைமைபற்றி சின்னமாமி இவன் அப்பாவுக்கு போன் செய்து இவனிடம் கொடுக்க சொல்லி சேதி பேசுவதெல்லாம் புத்தம் புதிய வழக்கம், ஒருவேளை பெரியமாமி போல் ஆத்தாவின் அண்ணன் மகளாய் பிறந்துவிடாதவள், புதிதாய்தான் புகுந்தவள் என்பதனால் பகையில் பாத்துசம் இல்லாமலிருக்கலாம். ஆத்தாவீட்டிற்கும், இவன்வீட்டிற்கும் பேச்சு மூச்சு அற்றுப்போய் பத்து வருடங்களாவது இருக்கும். இவனின் மூன்று வயதில் அவன் அம்மா தன்னைத்தானே மாய்துக்கொண்டபின் இருகுடும்பங்களுக்கிடையே ஒட்டு-ஒறவு நல்லது-கெட்டது என எதுவுமில்லை. "என் ஒத்த புள்ளையே பொய்த்து ஒங்க ஒறவெதுக்கு எங்களுக்கு" என ஆத்தா வீட்டில் அப்படியே இருந்து விட்டார்கள். இரு மாமன்களின் கல்யாணத்தின் போதும்கூட இவனப்பா உயிரோடிருக்க பத்திரிக்கையில் மாப்பிள்ளை என இவன் பெயரைத்தாம் அடித்தார்கள். அவர்களுக்கு இவன் மட்டும் போதும்.

இவனும் தீபாவளி, பொங்கல், வார விடுமுறை, கோடைவிடுமுறை என அங்கு தான் கிடப்பான். ஏன் கிடக்கமாட்டான் ?  மாமன்கள் "திங்க மெல்லதான் செல்லம்" என அவ்வபோது அதட்டினாலும் தாயில்லா பிள்ளை என  ஏகபாசம். 'டங்' என ஊரில் இருந்து வந்தவனின் சைக்கிள் ஸ்டாண்ட் சத்தம் கேட்டதுமே சத்தமின்றி எண்ணெய்சட்டியை அடுப்பில் ஏற்றுவிட்டு முந்தானையால் கண்ணைத் துடைத்தவாறே  இவன் முகம் பார்க்க ஓடிவரும் ஆத்தா, இவனை நினைத்தும் இவனை இப்படிவிட்டுவிட்டு போன தன் பெண்னை நினைத்தும் அவள் அழாத நாளே இல்லை . இந்த ஆத்தாவை  இதுநாள்வரை இறந்துவிடக்கூடாது என நினைத்துவிட்டு இன்று  "இன்று இறந்துவிடக் கூடாது" என்று நினைப்பது சரியா என்ற கேள்வி சுருக்கென குத்தினாலும் அவனால் அப்படிதான் நினைக்கமுடிந்தது.

அன்று இதேபோல் சின்னமாமி, "ஆத்தா ஒன்ன பாக்கணுங்குது அப்பு"  என்று  போன் செய்த பின் ஆத்தாவீட்டிற்குப் போய் அங்கிருந்து சின்னமாமனுடன் மோட்டர்சைக்கிளில் ஆஸ்பத்திரியில்  சேர்க்கபட்டிருந்த  ஆத்தாவை முதன் முதலாய் பார்க்கப் போனவன், "தஞ்சாவூர் புற்றுநோய் மருத்துவமனை" என்ற பெயரிடப்பட்ட ஆஸ்பத்திரியை பார்த்துவிட்டு, ஆத்தாவுக்கு கெர்பப்பை ஆர்பரேஷன் என்றிருந்தவன்(அவனுக்கு அப்படித்தான் சொல்லப்பட்டிருந்தது) குழம்பியவானாய் நின்றான். ரேடியேஷன் அறையில் இருந்து வார்டுக்குள் நுழைந்த ஆத்தா 'நானும் ஒன்ன விட்டுட்டு போப்போரனடா' என்று அவனை வாரியணைத்து அழுத பொழுது புரிந்தும் புரிந்துகொள்ள முடியாதவனாய் அழுதான் - அன்று மூக்குறுஞ்சலும் கண்துடைத்தலும் இடர்பட ஆத்தா "நீ ஒன்னாப்பு படிச்சப்ப ஒன் தாத்தா இப்படித்தான் படுத்த படுக்கையா கெடந்தாரு. ஹார்ட்டடாக்கு . ஒன்ன பாக்கனு பாக்கனுட்டு இருந்தாரு. பள்ளியோடத்லேருந்து ஒன்ன அலச்சார ஆள் போய்ருந்தது .நான் சும்மா இருக்காம சும்மானாச்சுக்கும் 'அப்பு  வந்துட்டாயா'ன்ன. 'எங்க எங்க' ன்னு படக்குன்னு எந்துருச்சு பாத்துட்டு படுத்தவருதான் அப்டியே போய்த்தாரு' என்றுவிட்டு "நா சாவயில நீ என் கண்ணு  முன்னாலயே நிக்கனுயா" என்று சொன்னதன் நினைவு வந்ததும் என்ன நினைத்தானோ "ஆத்தா இன்னிக்கி சாவவே கூடாது கடவுளே" என்ற வேண்டுதலை  "ஆத்தா சாவவே கூடாது கடவுளே" என்று மாற்றிகொண்டு "எப்டியாது டூர் போவனு கடவுளே"என்பதையும் சேர்த்துக்  கொண்டான்.

"ஆத்தா ஒன்ன பாக்கனுங்குது  அப்பு " என்று ஃபோன் செய்த சின்னமாமியின் மீதும்,   'டங்' என இவனின் சைக்கிள்  ஸ்டாண்ட் சத்தம் கேட்டு வாசலுக்கு வந்து எட்டி பார்த்துவிட்டு உள்ளே போய் ஆத்தாவிடம் "அம்மா அப்பு வந்துடான் மா" என்ற சின்னமாமன் மீதும், ஆத்தா மீதும்  எல்லோரின் மீதும் அவனுக்கு ஏவெரிச்சலாய் வந்தது-ஊட்டி மலைத்தொடர்களும் ப்ளாக்தண்டர் நீர் விளையாட்டுகளும் "ஹேர்பின் பெண்டுல பஸ்சு எப்டி போவும் தெரியுமா" என்ற முன்னமே ஊட்டி போய் வந்திருந்த நண்பர்களின் சிலாகிப்பும், "நாளைக்கு நம்ம ரெண்டு பேரும் பக்கத்து பக்கத்துல உக்காந்துக்கலாம்" என்றுவிட்டு இந்நேரம் தூக்கம் வராமல்  புரண்டு படுத்துக்  கொண்டிருக்கும் உயிர்நண்பனும், காலை கிளம்பிவிட இருக்கும்  கலர் விளக்குகள் பொருத்தப்பட்ட  ஸ்லீப்பர் பஸ்சும், இரவு மேட்டுப்பாளையம் ஹோட்டல் அறையில் நண்பர்களோடு சேர்ந்து போடப்போகும் குட்டி குட்டி கும்மாலங்களும் அவனை வா வா என்றழைத்தது.

                                                                        *****

கன்னத் தசைகள் வற்றிப்போய் மருக்கள் மட்டுமே முகமாய் , சுண்டுவிரலால் உச்சந்தலையில்  கொண்டை போடுமளவு தலைமுடி கொட்டிப்போய், கேன்சர் கட்டி உறுஞ்சிவிட்டு போட்ட மீதியாய் கட்டிலில் உருகுலைந்து கிடந்த அவளைப் பார்க்க அங்கு அழும் மாமா, மாமி, உறவுமுறைகள், அக்கம் பக்கத்து பெண்கள் என யாருக்கு எப்படி இருந்ததோ? அந்த அறையின் ஒரு மூலையில் சம்மனங்காலிட்டு  அமர்ந்திருந்தவனுக்கு ஆத்தாவும், அந்த அழுகுரலுக்கு மத்தியில் இருந்து அவனுக்கு மட்டும் கேட்க்கும் அவளின் மூச்சு காற்றும் ,  அவனையும் "நாளைக்கு எப்டியாது டூர் போவனு கடவுளே" என்ற அவனின் பிரார்த்தனையையும் தாக்கியது.

பேச்சுமூச்சற்று அடித்துப்போட்டாற் போல் கிடந்த ஆத்தா அவனை முற்றிலும் நம்பிக்கையிழந்தவனாகச்  செய்தாள். அவன் மாமா மாமி என யாரிடமும் நாளை டூர் போகவேண்டும் என்ற செய்தியைச் சொல்லவில்லை, எதோ ஒரு சனிக்கிழமை மதியம் இவன் தலையில் எண்ணெய்  தேய்த்துக் குளிப்பாட்டிய போது முதுகில் வழிந்தோடும் நாலைந்து பேன்களை  பார்த்துவிட்டு முச்சந்தியில்  'ஒனக்கு ஒருத்தி அம்மானு இருந்துருந்தா ஒன் தல இப்புடி இருக்குமாடா' என மாரில் அடித்துகொண்டு அழுதுவிட்டு அரப்பை தலையில் தேய்த்து குளிப்பாட்டிய ஆத்தா, வார வாரம் சனி ஞாயிறுகளில்  வந்து இருந்துவிட்டுப் போகும் அவனுக்கு வாரத்தின் ஒவ்வோரு நாளும்  செருவாடு சேர்த்து கையில் நூறுகளில்  கொடுத்தனுப்பும் ஆத்தா,இப்படி இன்னும் எத்தனையோ 'ஆத்தா' முக்கியமா 'டூர்' முக்கியமா  என  அவர்கள் நினைத்தவிடக் கூடும் என்று பயந்தான்.

"அழுவாத அப்பு அழுவாத அப்பு" என்று பெரியமாமன் இவன் கண்ணைத் துடைத்தபோது 'டாக்டர் சொன்னப்பயே கெர்பபைய எடுத்துருந்தா அம்மா வுக்கு இந்த நெலம வந்துருக்குமா' என்ற குற்றவுணர்வு அவனுக்கிருந்ததோ இல்லையோ 'டூர் போவ முடியாதோ' என அழுதவனுக்கு அவனின் கண்துடைப்பு அருவருப்பை தந்தது. ஒரு கணம் 'டூர் போவேனாம்' என நினைத்தான்.

ரா சாப்பாட்டிற்கு நேரமாகி விட்டதால் அக்கம் பக்கத்து பெண்கள் கிளம்பினார்கள், எதாவது சேதி என்றால் சொல்ல சொல்லி விட்டு பக்கத்து ஊரில் இருந்து வந்த ரத்த பந்தங்கள் உறவுமுறைகளும் கிளம்பிற்று. மாமா மாமி அந்தன்ட இந்தன்ட நகர தன்னந்தானியாய் கட்டிலில் கிடந்த ஆத்தாவின் தலைமாட்டருகில் முட்டி இட்டு அமர்ந்து  ஆத்தா நாளைக்கி நா டூர் போரந்தா ஊட்டி த்தா ஒனக்கு ஒண்ணுமில்லத்தா நீ நல்லாதான் ஆத்தாயிருக்க ப்ளீஸ் த்தா ( செத்துராதத்தா என சொல்ல நினைத்தாலும் அதை சொல்லவில்லை) நா டூர் போவனுத்தா ப்ளீஸ்த்தா நா டூர் போவனுத்தா"என  அவளுக்கு மட்டும் கேட்கும்படி இதை திரும்ப திரும்ப சொல்லி கேவியழுது ஆத்தாவின் காதுமடல்களை கண்ணீரால் நனைத்தான்.

ஆசரியம்தான், எதற்கோ  கோபித்துக் கொண்டு குப்புறப்  படுத்த குழந்தை அது கிடைத்துமே படக் என எழுந்துவிட கூடாது என பொறுமையாக  எழுவதுபோல ,அடுத்த அரைமணி நேரத்தில் ஆத்தா அப்படி இப்படி அசைந்து ஒருஒரமாக ஒருகணித்துச் சாய்ந்து அரை டம்ளார் பால் குடித்தாள்,பின் சீனி போட்டு சுடுதண்ணி விட்டு ஒரு இட்லியும் தின்றாள்,ஓரிரு வார்தைகளும் பேசினாள்.            
      
ஆத்தா தேறியதைக் கண்டு உடனே கிளம்பிவிடலாம் என மனம் துடியாய்துடித்தாலும் அவன் அப்படி செய்துவிடவில்லை ." இருந்துட்டு நாளைக்கு போலம்லடா" என்ற பெரியமாமனுக்கு " இல்ல மாமா நாளைக்கி கண்டிப்பா வரணுமாமா டெஸ்ட் இருக்கு"என்றுவிட்டான் " மணி ஒம்போதுக்கு மேல ஆவபோவுதடா  யாரையாச்சும் கொண்டாந்து விட சொல்லவா" என்றதுக்கு " இல்ல மாமா நான் போய்ருவன்,போய்த்து சின்னமாமிக்கி போன் பண்ணி  சொல்லியரன்" என முடித்துவிட்டு அடுத்த அரைமணி நேரத்தில் சைக்கிளை எடுத்துவிட்டான். "போய்த்து வாரன் த்தா" என்றதுக்கு ஆத்தா காற்றில் அவனுக்கு மட்டும் கேட்க்கும்படி இரண்டு வார்த்தைகள் பேசி கண்ணால்  அனுப்பி வைத்தாள்.

நட்சத்திரங்கள் நிறைந்திருந்த அவ்விருளில் அழகாய் சிரித்துச்சென்றவனை, கருமேகங்கள் கைபிடித்து ஊட்டி அழைத்துச் சென்றது. சைக்கிள் செய்ன் கவரில் செய்ன் உரசும் 'கிரீச் கிரீச்', "பாத்து  பத்ரமாபோ" என்ற ஆத்தாவின் அசரிரியாய் ஒலித்தது.
பொட்டனிக்கல் மலர்பூங்காவின் பூக்களின் மத்தியுள்ளும்,  தொட்டபெட்டா மலை சிகர உச்சியிலும், ப்ளாக் தண்டர் ஜெயண்ட்வீல் ராட்டனங்களிலும் ஆத்தாவின் உயிரை அவன்தான் தன் கையில் கெட்டியாய் பிடித்துவைத்திருந்தான் - " இந்த ஊர்ல இது பேமஸ்" என்று கிளாஸ் டீச்சர் சொன்னதும் வாங்கி எங்கு மாமாவோ மாமியோ என்ன?ஏது? என கேட்டுவிடுவார்களோ எனப் பயந்து அவன் சம்படத்தில் எடுத்து வந்திருந்த ஊட்டி வறுக்கிகளில்  ஒன்றை பாலில் ஊற வைத்து மசித்து ஆத்தா உண்ட போது இருவர் கண்களிலும் நீர் நிறைந்தது.
                                              
                                                                             *****
ஆத்தா இறந்தபின், ஆத்தா இல்லாத ஆத்தாவீட்டில் அவளின்  நினைவுகள் நிழற்படமாய் ஓட அவன் எவ்வளவோ அழுதிருக்கிறான். ஆனால்  ஆத்தா இறந்த  அன்றிரவு, இந்திய கிரிக்கெட் அணி விளையாடி அந்த பிரம்மாண்ட  தொடரின் ஒவ்வொரு  போட்டியையும் பார்த்துவிட்டு அன்று நடக்கபோகும் இறுதிபோட்டிக்காக காலையில் இருந்து கடிகார முள்ளைக் கவனித்து கொண்டிருந்தவன், ஆத்தாவிற்கு நெய்ப் பந்தம்  ஏந்திய கைகளோடு "இந்தியா ஜெலிச்சுருச்சா?" என யாரிடம், எப்படி ? கேட்ப்பது என்பதறியாமல் தவித்தான்.
                                                                                                                                          (08-07-17)
                                                                                                                                    பிரதீப் கென்னடி