வாசலில் அவள் செருப்பை கழற்றும் ஓசை
கேட்டது, இன்று வழக்கத்திற்கு மாறாக அம்மா சீக்கிரமாக வீட்டிற்கு
திரும்பிவிட்டிருக்கிறாள். ஆனால் இன்னும் அவள் உள்ளே நுழையவில்லை, என்னடா இது…..
ஒரு நாய்க்குட்டியின் குரைப்பொலி
கேட்டவுடன் இது அவளின் வேலை தான் என நான் எழுதுவதை நிறுத்திவிட்டு வெளியில்
சென்றேன்.
அம்மாதான்.. கையில் ஒரு நாய்க்குட்டியை
எடுத்துக்கொண்டு வந்திருந்தாள்.
’ஐய்ய….என்னமா பண்ணிட்டு இருக்க?’
‘டே..நம்ம பிங்கி ஆண்ட்டி வீட்டு கேட்டுகிட்ட நின்னுட்டு இருந்துச்சு டா அதான்
தூக்கிட்டு வந்தேன்….’
“ம்மா…அவங்க அண்ணன் பசங்களுக்காக கொண்டு வந்துருப்பாங்கம்மா…நீங்க எதுக்கு எடுத்துட்டு வந்தீங்க
இப்ப….?”
‘அதுனால என்ன டா….நாம்பாட்டுக்கு தான் டா போய்ட்ட்ருந்தேன் இத கவனிக்காம….இது என் கால் கிட்ட வந்து குரச்சுதா…கொழந்தயாட்டம் இருக்கேண்ட்டு
தூக்கிட்டு வந்துட்டேன்..’
நான் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்
”சரி…குடுங்க நான் போய் விட்டுட்டு வந்துடுரேன்” என்றேன்
”இருடா… முதல்ல சாமிகிட்ட இருக்க பால எடுத்துவா…இதுக்கு ரஸ்க்க அதுல போட்டு குடுப்போம்…அப்புறம் போய் நானே வுட்டுட்டு வரேன்” என்றபடி கைப்பையில் இருக்கும் ரஸ்க்கை
எடுத்து பிரிக்க ஆரம்பித்தாள்.
நான் அந்த நாய்க்குட்டியையே
பார்த்துக்கொண்டிருந்தேன்…..மெலிதான ப்ரவுனும் வெள்ளையும் கலந்த நிறத்தில் சுறுசுறுப்பாக
துள்ளிக்கொண்டே இருந்தது. எப்படியும் பிறந்து ஒரு மாதத்திற்குள் தான் இருக்க வேண்டும். பார்த்தால் தெரு நாயை போல் தெரியவில்லை
நிச்சயம் காசு கொடுத்து தான் வாங்கியிருப்பார்கள். சீக்கிரம் கொண்டுபோய் விட்டு விட
வேண்டும் என்று எண்ணிக்கொண்டே பாலை எடுக்க பூஜையறைக்குள் நுழைந்தேன்.
அவள் நாய்க்குட்டியை கொஞ்சும் சத்தம்
கேட்டது…
நாய்க்குட்டி தன் சிவந்த நாவால் அவள்
கையிலிருந்த நுணுக்கிய ரஸ்க்கை நக்கிக்கொண்டிருந்தது. அவள் கைகளை அசைக்க விடாமல்
ஒற்றைக்காலால் அழுத்திக்கொண்டு இருந்தது.
அவளிடம் பால் பாத்திரத்தை நீட்டினேன்,
‘இதுல எப்டி டா சாப்புடும்..போய் நம்ம பைரவியோட தட்ட எடுத்துட்டுவா..’
நான் அதை எடுத்துக் கொடுத்தவுடன்..பாலை அதில் ஊற்றி ரஸ்க்கை உடைத்து
போட்டாள்.
நாய் தன் வாலை ஆட்டியபடி தட்டை நோக்கி
விரைந்தது….மீண்டும் அதன் நாக்கு வேகமாக இயங்கத்தொடங்கியது…..அம்மா வாசலில் உட்கார்ந்து அதை
வேடிக்கைபார்க்க ஆரம்பித்தாள்.
”நாய்க்குட்டி அழகா இருக்குல்ல டா”
‘ஆமா…ஆன தெருநாய் இல்லன்னு நெனைக்கிறேன்’
‘அவங்க தெருநாயெல்லாம் வளப்பாங்களா டா….நல்ல சாதி நாயா தான் இருக்கும்’.
‘ஆமா..அதான் சொல்றேன் சீக்கிரம் கொண்டு போய் விட்டுட்டு வந்துருங்க’
‘இருடா கொஞ்ச நேரம் அது விளையாட்ரத பாத்துட்டு அப்புரமா கொண்டு போயி
குடுத்துட்ரேன்’
”ம்மா…..நீங்க அவங்கட்ட பேச்சு வாங்காம வரமாட்டீங்க போல இன்னிக்கு” என்றபடி நான் திரும்பவும் அறைக்குள்
நுழைந்தேன்.
அவள் மீண்டும் அதை கொஞ்ச ஆரம்பித்தாள். அதன் குரைப்பொலியில் இப்பொழுது ஒரு
சின்ன வித்தியாசம் தெரிந்தது.
சற்று நேரத்தில் அதனுடன் ஒரு பெரிய
குரைப்பொலி கலந்து கொண்டிருந்தது…அது பைரவியின் சத்தம் தான்.
நான் மீண்டும் வெளியே போன போது
அம்மாவின் கையில் இந்த குட்டியும் அவளைச்சுற்றிக்கொண்டே பைரவியும் மாறி மாறி
குரைத்துக்கொண்டிருந்தார்கள்.
‘டே…இவளக்கு பிஸ்கட் போடுடா…இந்த குட்டிய பயமுறுத்திட்டா வந்த ஒடனேயெ..’
நான் பைரவிக்கு எப்பொழுதும் போடும்
டைகர் பிஸ்கட்டை பிரித்துக்கொண்டே அவளை வழக்கமாக நான் கூப்பிடும் அந்த சமிஞ்ஞையை
எழுப்பினேன்..பைரவி அவளுடைய பாத்திரத்தை நோக்கி வந்தது. பிஸ்கட்டை உடைத்து பாத்திரத்தில்
போட்டவுடன் பைரவி தன் பற்களைகொண்டு மேலும் பிஸ்கட்டுகளை நொறுக்கிக் கொண்டு
உண்ணத்தொடங்கியது.
அம்மாவின் கைகளிலிருந்து
விலக்கிக்கொண்டு அந்த குட்டி என்னை நோக்கி வந்தது. தன் நாக்கால் என்கைகளை
நக்கத்தொடங்கியது…அதன் உமிழின் ஈரப்பதம் என்கைகளை தொட்டு நீங்கியது. நிச்சயம் அது குழந்தையேதான்…..நான் பைரவியிடமிருந்து அதை நகர்த்தி
தள்ளிச்சென்று மீதமிருந்த பிஸ்கட்டுகளை நுணுக்கி அதன் வாய்க்கருகில் நீட்டினேன். என் கைகள் அசையாமலிருக்கும் பொருட்டு
தன் முன்னங்கால்களால் என்னை அழுத்திக்கொண்டு பிஸ்கட் துணுக்குகளை நக்கத்தொடங்கியது.
அம்மா அதை பார்த்துவிட்டு, “ச்ச அழகா இருக்குதுல்ல…நாமலே வச்சுப்பமா டா” என்றாள்.
நான் அவளை முறைத்துக்கொண்டே “பேசாம இருங்க…..நா இப்ப அத போய் விட்டுட்டு வரப்போறேன்” என்றபடி அதன் துடிப்பை
பார்த்துக்கொண்டிருந்தேன்.
பிஸ்கட் தீர்ந்தவுடன் அது என்னை
உற்றுப்பார்த்துவிட்டு தன் முனகும் குரைப்பால் என்னை சுற்றிக்கொண்டே வந்தது.
நான் பிஸ்கட் பாக்கெட்டினுள்
மீதமிருந்த துகளை பாக்கெட்டோடு அதன் வாய்க்கருகில் நீட்டினேன்..அது மீண்டும் அதன் நாக்கை
குரைத்துக்கொண்டே என் கைகளுக்கருகே வந்தவுடன் சட்டென்று பைரவி அதை நோக்கி
பாய்ந்தது. ஒரே ஒரு உறுமல் ஒளி அந்த குட்டி நாய் தெருவே அலறும்படி முனகிக்கொண்டே ஓடியது.
அம்மா வாசலில் இருந்த துடைப்பத்தை
பைரவியை நோக்கி எறிந்துவிட்டு கத்திக்கொண்டே தெருவில் இறங்கி அந்த குட்டியை
தேடினாள்.
சுற்றும் இருந்த ஆட்கள்.. நாய் முனகும் ஓலியை வந்த திசையை நோக்கி
பார்க்க ஆரம்பித்தார்கள்.
அம்மா அது ஓடிய திசை நோக்கி வேகமாக
நடக்க ஆரம்பித்தாள். நான் என்ன செய்வதென்று தெரியாமல் வாசல் கதவை வெறுமனே சாத்திவிட்டு தெருவில்
இறங்கினேன். பைரவி என் எதிரில் சலனமில்லாமல் நின்று கொண்டிருந்தது. ஒரு கல்லை எடுத்து அதை நோக்கி
குறிபார்த்தேன்… நான் எறியும்முன் பைரவி வெருண்டபடி ஓடியது.
அம்மாவை கூப்பிட்டுக்கொண்டே நான்
தெருவில் நடக்க ஆரம்பித்தேன். எப்படியும் அந்த குட்டி நாய் இந்நேரம் பிங்கி ஆண்ட்டி வீட்டிற்க்கு
போய்விட்டிருக்கும், அம்மா அங்கே போவதற்க்குள் அவளை கூட்டிக்கொண்டு வந்துவிட வேண்டும் என்று
நெஞ்சு படபடத்தது.
தூரத்தில் அவள் அழுதபடி பிங்கி
ஆண்ட்டியின் வீட்டிற்க்கு முன் நின்று கொண்டிருந்தாள். நான் வேஷ்டியை மடித்துக்கட்டிக்கொண்டே
ஓட ஆரம்பித்தேன். இதற்குள் அங்கு கூட்டம் சேர்ந்துவிட்டிருந்தது. பிங்கி ஆண்ட்டி என் அம்மாவை
திட்டத்தொடங்கிவிட்டிருந்தாள். நான் கூட்டதிற்க்குள் நுழைந்து அழுதுகொண்டிருந்த அம்மாவை அழைத்தேன்….
பிங்கி ஆண்ட்டியின் வீட்டு வாட்ச்மேன்
அந்த நாய்க்குட்டியை பிடித்து அதன் மீது வழிந்த ரத்தத்தை துடைத்துக்கொண்டிருந்தான். நான் அதை கவனிப்பதற்க்குள் என்னை
நோக்கி வசவுகள் வரத்தொடங்கின.
”அம்மாவும் புள்ளயுமா சேந்து என் நாய்க்குட்டிய கொல்லலாம்னு பாத்தீங்களா, கண்ட நாய விட்டு அத கடிக்க
உட்றுக்கீங்க..அதுக்கு எதாச்சும் ஆச்சுன்னா உங்க ரெண்டு பேரையும் போலீஸ்ல புடிச்சு
குடுத்துருவேன்’
சும்மா வாய்க்கு வந்தபடி பேசாதீங்க, நாங்க ஒன்னும் கொல்லப்பாக்கல!!!, அதுக்கு பிஸ்கட் போட்டோம் அவ்ளோதான்…..பைரவி தான் அதகடிச்சுருச்சு
அது கடிக்குற வரைக்கும் வேடிக்கை
பாத்துட்டு இருந்தீங்களா?? இருங்க அவரு வரட்டும் உங்கள என்ன பண்றேன்னு பாருங்க….
அம்மா “நாந்தான்மா அந்தக்குட்டி அழகா
இருக்குன்னு தூக்கிட்டு போய் விளையாண்டுட்டு இருந்தேன் கவனிக்கறதுக்குள்ள இப்புடி
ஆகிருச்சு…மன்னிச்சுக்கங்க, அத என்ட்ட குடுங்கம்மா நான் மருந்து போட்டு உடறேன்” என்றபடி அந்த குட்டியை பார்த்து
நடந்தாள்.
உடனே பிங்கி ஆண்ட்டி குறுக்கே புகுந்து
கொண்டு, “பேசாம போய்ரு சரசு, நாய்குட்டி பக்கத்துல வந்த உன்ன கொன்னுடுவேன்” என்றபடி வாட்ச்மேனிடம் ஹிந்தியில் நாய்குட்டியை
உள்ளே கொண்டுபோகச்சொன்னாள்.
டே உங்க அம்மாவ கூட்டிட்டு போயிரு, அவளுக்கு புத்தி சரியில்லன்னு
பாக்குறேன் இல்லன்னா நடக்குறதே வேற
”தேவையில்லாத பேச்செல்லாம் பேசாதீங்க, அவுங்க புத்தி எப்புடி இருந்தா
உங்களுக்கென்ன!! நடந்த தப்புக்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேன். உங்க நாய்க்கு ஒன்னும் ஆகாது இதோட
பேச்ச விடுங்க” என்றபடி அழுதுகொண்டிருந்த அம்மாவை இழுத்தபடி நடக்க ஆரம்பித்தேன்.
அந்த வீட்டினுள் இருந்து
நாய்குட்டியின் முனகல் ஒலி கேட்டு பிங்கி ஆண்ட்டி வீட்டிற்குள் சென்று கேட்டை
அடைத்துக்கொண்டாள்.
கூட்டம் கலையத்தொடங்கியது ஆளாளுக்கு
வாய்க்கு வந்தபடி முணுமுணுத்துக்கொண்டே சென்றார்கள்.
நீண்டகாலமாக இந்த முணுமுணுக்கும்
கூட்டம் அம்மாவை பேசு பொருளாக்கி பேசும் பேச்சுக்களை கண்டு கொள்ளாமல் இருக்க
பழகியிருந்தேன். பெரிதாக இவர்கள் என்ன பேசிவிடப்போகிறார்கள், வெட்கமில்லாத ஜென்மங்கள்.
வீட்டு வாசலை நெருங்கிய போது பைரவி
இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டே வந்தேன். நல்ல வேளை அது இருப்பதற்க்கான அறிகுறி
ஏதும் தெரியவில்லை. அம்மா வேகமாக உள்ளே சென்று அவளது அறைக்குள் போய் கதவை சாத்திக்கொண்டாள். நான் கதவையே பார்த்துக்கொண்டு தரையில்
உட்கார்ந்தேன். மொபைல் வழக்கமாக அடிக்கும் அலாரத்தை அடித்தது
”ம்மா, நீங்க மாத்திரை சாப்பிடற நேரம் ஆச்சு கதவ திறங்க!!!”
”நீ போய் பைரவியை புடிச்சுட்டு வா முதல்ல, அப்ப தான் நான் மாத்திரை சாப்புடுவேன்”
”முதல்ல நீங்க மாத்திரைய போடுங்க அப்புறம் நான் போய் அத கூட்டிட்டு வரேன்”
”முடியாது, நா இப்பவே அத பாக்கனும் நீ என்னய ஏமாத்திருவ!!!”
”கண்டிப்பா கூட்டிட்டு வரேன், நீங்க மாத்திரைய சாப்புடலன்னா டாக்டர் என்னய தான் திட்டுவாரு”
அவன் உன்ன திட்டிட்டு உயிரோட
போயிருவானான்னு நான் பாக்குறேன், வர சொல்லு அவன என்றாள்.
அவள் பேச்சில் மெலிதான மாற்றம்
தெரிந்தது, நான் கஷ்டப்பட்டு சிரிக்க முயன்றபடி “என்ன பேசுறீங்க, டாக்டர் நல்லதுக்கு தான சொல்றார். கதவ திறங்க முதல்ல”
வாசலில் பைரவியின் குரல் கேட்டது, நான் திடுக்கிட்டபடி அறைக்கதவை
வெளிப்பக்கமாக பூட்டினேன். ட்ராவைத்திறந்து டயாஸீபத்தை இஞ்செக்ஷனில் பொருத்திக்கொண்டு தயாராக
வைத்துக்கொண்டேன்.
மெதுவாக அம்மாவை அழைத்தேன், அமைதியைத்தவிர அவள் பதிலெதுவும் தரவில்லை.
டாக்டருக்கு மூன்று மிஸ்டுகாலை
குடுத்துவிட்டு, மீண்டும் அம்மாவை அழைத்தபடி கதவைத்தட்டினேன். இம்முறை அவள் மெதுவாக ”பைரவி பைரவி பைரவி” என்று முனக ஆரம்பித்தாள்.
வெளியே சென்று பைரவி இருக்கும் திசையை
நோக்கி துடைப்பத்தை எறிந்தேன் அது விலகிக்கொண்டு போக மறுத்தது, என் பாக்கெட்டில் இருந்த பேனாவை அதை
நோக்கி விட்டெறிந்தேன்…இப்போது அது தெருவை நோக்கி ஓடியது
வீட்டினுள் நுழைந்து மீண்டும் கதவைத்
தட்டினேன்
”கதவ திற டா நாயே, என்கிட்டயிருந்து அவள காப்பாத்திடலாம்னு பாக்குறியா”!!
இதயம் படபடவென்று அடித்துக்கொண்டது….நெற்றியில் முளைத்த வியர்வையை
துடைத்துக்கொண்டு…தாழ்ப்பாளை பின்னுக்கிழுத்தேன்…
உள்ளே தாழ்ப்பாளை திறக்கும் சப்தம்
எதுவும் கேட்கிறதா என்று பார்த்தேன்…
”அம்மா கதவ திறங்க….நான் மாத்திரை……!!” சொல்வதற்க்குள் சடாரென்று என்னை நோக்கி பாய்ந்தாள்….நான் தடுமாறியதை உணர்வதற்குள்
வெளிக்கதவை திறந்து பைரவியை நோக்கி முன்னேறியிருந்தாள்…..
பைரவி உச்சஸ்தாயியில் அலறும் சத்தம் கேட்டது…..
எழுந்து வெளியே வருவதற்க்குள், அருகிலிருந்த வீடுகள் விழித்துக்கொண்டன….வாசலைச்சுற்றி ஆட்கள் கூடி
சத்தமிடத்துவங்கினார்கள்.
துரிதகதியில் அவள் தோள்பட்டையில்
இன்ஜெக்ஷனை சொருகினேன்.
அம்மா திரும்பி என்னைப் பார்த்தாள்…..கீழே சரிந்த அவளைத்தூக்கி மடியில்
கிடத்தினேன். அவள் கைகளெங்கும் இரத்த விளாராக இருந்தது.
கலங்கிவிட்டிருந்த என் கண்களை சேலைத்
தலைப்பால் துடைத்துவிட்டு, வயிற்றில் என் பேனாவை வாங்கி முனகியபடி கிடந்த பைரவியை பார்த்தபடி
பிதற்றத்தொடங்கினாள்.
கூட்டதிற்கு நடுவில் டாக்டரின் கார்
புகுந்தது.