எடையற்றிருக்கிறது
உடல். நகர்கிறதா இல்லையா என்று எதையும் உணர முடியவில்லை. மெல்ல மினுங்கும் ஒளி
மட்டுமே புலனாகிறது, தளும்பலுடன். மெல்ல மிதந்திறங்கும் நீரோட்டமாய் மிதந்தபடியே
இருக்கிறேன்.
வெளியோ
மினுங்கும் நீலம். அசையா உடல்,
பிடிப்பின்றி, நிலைகொள்ள இயலாமல் அந்தரத்தில் துவள்கிறது.
எடையற்ற நூலாடையை மென் காற்று அலைவது போல ஓருடல். மீனா ?, ஆம்.
வாலும் துடுப்புகளும் நீரில் அலைய, மெல்ல நகர்கிறது. அத்தனை மெல்லிய வாலுடைய வகை
மீனை, இக்கணம்வரை கண் கண்டதில்லை. நீலத்தில் மிதக்கும் நீலம் அது. கண்ணுறுத்தாத
ஒளி பட்டுத்தெறிக்கும் உடல்.
மென்
நகையுதிர்க்கும் முகம் போல, அது சற்று தொலைவில் அசைந்தாடியபடியே இருக்கிறது.
அணுகினால் விலகுகிறது. அந்த மென்மை என்றும் கைகளில் சிக்க மறுப்பதுபோலப் படுகிறது.
நான் விலகினால் மெல்ல அணுகி வந்து நாணத்தோடு தன் இருப்பை மட்டும்
உணர்த்திவிடுகிறது. மேலும் விலக முற்பட்டால் தன் உடல் மென்மையை அந்த நீராழத்தில்
ஒளியில் வழிய அலையாய் மிதந்து வருட வருவதாய் முன்னகர்ந்து விலகி நிற்கிறது. அந்த
நகைப்பை உணர்த்தும் உணர்வை மட்டுமே அளித்துவிட்டு கொந்தளிப்பில் ஆழ்த்துகிறது.
அந்தக்
கண்கள், இமையாது நோக்கும் கண்கள், சுழலுள் சுழல் கொண்ட கண்கள், பழிங்கென
மினுங்கும் மணிகள், எனையே காண்கின்றன, ஏறி, இறங்கி, என்னுள் ஆழ்ந்து, எதைத்தான்
தேடுகிறது இந்த உடலில். மெய்யாக அது காண்பது என் உடலையா, அதன் வழியாக வேறேதோ ஒரு
மாய மெய்யையோ ?. உருளாது, அசையாது, இமையாது, விழிப்பதை
மட்டுமே உணர்கிறேன். இல்லை அவ்வாறு எண்ணுகிறேனோ ?.
ஒளி
நலுங்கும் நிலம் என் பாதம் தாங்கி நிற்கிறது. என் புருவ மத்தி இணைந்து விரிகிறது,
என் உடலே நலுங்குவதாய் ஒரு கணம். இல்லை..., நான் நினைக்கிறேனோ அவ்வாறு ?. உறுதியாக, வலுவில், ஊன்றி, நிலை கொண்ட மரம் போல இருக்கிறேன்.
சுற்றம் மட்டுமே நீலத்தில் நலுங்குகிறது.
சட்டென
என் விழிகள் தேடுகின்றன, எங்கே, அது எங்கே, அந்த நீல, மகரம், மச்சம், மீன், ஏதோ
ஒன்று, நான் இதற்கு முதற்கணம் வரை காணாத அது, எங்கே.
அசையாத என்னுடல் என் கட்டுப்பாடு ஏதுமின்றித்
திரும்புகிறது. ஒரு கணம் கூட என்னால் உணரமுடியாத என்னுடல், மெல்லச் சரியும்
பழுத்து, காய்ந்து, இடை முறியும் மரம் போலவே சரிகிறது.
அக்கணம், என் விழிகளில் அந்த மென்மை சூடிய வால், வளைந்து, மடங்கி, சுருங்கி,
விரிந்தது. சட்டென என் பின்னிருந்து அந்த
வால், மெல்ல கன்னத்தில், இலைமேல் நீரென, இல்லை, நிலம் மேல் நிழலென, ஒரு தொடுகை,
ஒன்றே ஒன்று, வாழ்வு முழுவதும் ஏங்கி, நினைந்து, உருகி, உருவழிந்து, உணர்வு
மட்டுமேயாக ஆன, ஒரு கனவு போல. ஒரு தொடுகை, மெல்லிய தொடுகை, அத்தகைய தொடுகையை
உணர்ந்து கொள்ள, அத்தகைய கூரிய உணர்வுடல் வேண்டும், நீர் அறியும் நீர் போல, தீ
அறியும் தீ போல. எப்படியோ, அக்கணம் நான் உணர்ந்தேன்.
அந்த
உணர்வை, எண்ணி எண்ணி விழிப்படையும் தருணம், மெல்லச் சரிந்தது என்னுடல், அந்த
நலுங்கும் நீலமேந்திய நிலத்தின் மீது, நீருள் ஆழும் சிறுமண் துகளெனப் படிந்தது.
எடையுணரா அதே நிலைதான் இக்கணமும்.
எதிரே, அந்த நீலத்தில் நீலமெனக் கலந்து,
நீலத்தின் சாரமென உருக்கொண்டு, நீலத்தின் மென்மையில் ஒரு துளியென மென்மை கொண்ட
உடலில், மென்மையும் இதுவும் வேறில்லாத செதில்களும், துடுப்புகளும் வாலும் அலைய,
அந்தக் கண்கள், என் முன்பு நேர் நோக்கி நிற்கிறது.
அந்த விழிகள்....,
இப்பேறியற்கையின் பேரமைதியினைக் கொண்ட அந்த விழிகள், கூர்ந்து நோக்க, நீலம்...,
நீலம்..., நீலம்.... அடர் நீலம், கருமை மிகும் நீலம், கருமையே மெய்யெனவாகும்
நீலம், இறுதியில் கருமை மட்டுமே எஞ்சும் நீலம். அதன் இருள் கொண்டு கூதல்
நிறைக்கிறது வெளியெங்கும். வெளியெங்கும் இந்தக் கூதல் தாங்காதே நீலம்
நலுங்குகிறதா...., ஆம், அந்த விழியின் கருமையே வெளியைக் கூதல் கொண்டு நிறைக்கிறது.
என் விழிகளின் ஒளியும் அந்தக் கருமைக்குள் ஊழ்கத்தில் மூழ்க எத்தனிப்பதை
உணர்கிறேன்.
அந்த
மயங்கிய கார் ஒளியில், அந்த செதில்களும் வாலும் மட்டுமே மினுங்க அது நகர்கிறது,
மெல்ல அசைந்து, அசைந்து எனை நோக்கி வருகிறது, மென் விசை கொண்ட அதன் செதில்கள்
ஒவ்வொன்றும் இருளாகவே ஒளிர, அது வருகிறது. அதன் வாய், அது புன்னகையோ, இல்லை, ஏதோ
நற்சொல் கூறல், இல்லை, தீச்சொல்லோ. அதன் மென்மை இப்போது இல்லை. உக்கிர இருண்மையில்
கூதல் மிக்கு ஒளிரும் அது, என் சுருங்கிய தோல் புகைய, வற்றிய தசைகள் உருக, தளர்ந்த
நரம்புகள் துடித்து வெடிக்க, உள்ளோடிய எலும்புகள் துகளெனப் போக, தூற்றி நோக்கும்
கண்கள் போலிருக்கின்றன.
நான்
இமைத்த பொழுதில் அது தொடுமளவு நெருங்கிவிட்டது. என் உடல் அசையவில்லை. வாழ்வின்
மொத்த விழைவும் கொண்டு முயன்றும் அசையவில்லை. நீர் இமைகளுக்கு இடையே நலுங்கும்
இக்கணம், அது என்னைத் தொடுகிறது. ஆம், அதுவேதான். தொட்டுவிட்டது. தன் இதழ் கொண்டே,
மெல்லிய மலர் தொடுகை. அக்கணம், என் இமைகளில் நலுங்கிய நீர் வழிய தெளிவுரக்
காண்கிறேன். அருகில், மிக அருகில், முழுவுருவும் காணமுடியா அண்மை. விழிகளில்
விழிகள். விழிகளுக்குள், முடிவிலா விழிகள் கிளைத்து முளைத்து விழித்துக் கொண்டன.
அக்கணம்,
அது தன் இதழ் திறந்து எனை விழுங்கத் தொடங்கியது. ஈரம் காய்ந்து நிற்கும்
மணற்குன்றெனப் பொடிந்து, அதன் மெல்லிய இதழ் தீண்டலில் அதனுள் என்னுடல் துண்டுகள்
செல்கின்றன. ஒவ்வொரு தொடுகையிலும் பொடிந்து மறைகிறது ஒரு துளி. என்னுடல்,
கரைந்தழிகிறது என் விழிகளில். ஒரு கணம். நான் விழிகள் மூடினேன். நீலம்...., அந்தக்
கரிய நீலத்தில், கருமையில், கூதல் கொண்ட கருமையில், நானும் கரிய நீலம்.
No comments:
Post a Comment