Wednesday, March 2, 2022

சரவண பெருமாள் கவிதைகள்

 


    

  1.பேராச்சி

சர்க்கரைப் பொங்கலில் கண்
வைத்திருந்த மழலைகளையும்,
காதலியின் கனவில்
இருந்த காதலனையும்,
அடுத்தவள் அலங்காரத்தில்
இருந்த மாதரையும்,
புது மகிழுந்து -சாவியின்
இருந்து கணவர்களையும்,
எழுப்பியது கோவில் மணி!

மணந்தது பூவும் ,புனுகும்!
மயக்கியது சந்தனமும் -
சாம்பிராணியும்!
செம்பட்டு விரைவாய் விலக,
வெண்படல புகை மெதுவாய் அகல,
சந்தன காப்பில் அவள் சிரித்த முகம்!
சிலர் சிரிக்க ,
சிலர் விழிநீர் சிந்த,
சிலர் சன்னதம் கொள்ள
நின்றிருந்தேன் நானும்!

பொருநை நீர் சொட்டிய உடலுடன்
மயிர்கள் கூச்செரிய
கைகூப்பி
நிற்கிறேன் நானும்!

என்று அந்து முண்டாசுக்கவி
சொல்லடி சிவசக்தி
என்றானோ,
அன்றிலுருந்து‌ அவள்
அணுக்கம் எனக்கு!
தாயாய் கொடுப்பாள்,
பிள்ளையாய் பிடுங்குவாள்,
தோழியாய் விளையாடுவாள்,
இடும்பையாயினும்
இன்பமாயினும்
நிற்பேன் அவள் முன்!



2.அவளும் நானும்!

முகிலாய் அவள் சுற்றம்
இருந்தும் விழுந்தாள்
நிலவாய் கடலில்…!
அலைகளாய் அவன் சுற்றம்
இருந்தும் பிடித்தான்
நிலவை கடலில்..!


  3.கடலை மிட்டாய் டப்பா….

கடலை மிட்டாய்
டப்பா காலியாவதில்லை!
தாய்க்கென்று தந்தையும்,
மகனுக்கென்று அம்மையும்,
தம்பிக்கென்று அண்ணனும்,
யாருக்கோ என்று தம்பியும்,
கடைசி மிட்டாயயைத்
தின்னாமல் இருப்பதால்
கடலை மிட்டாய்
டப்பா காலியாவதில்லை!

ஒளியும், நுகர்வும் - சிறுகதை - விஜி

 

ஞாயிற்று கிழமை.  எத்திசையிலும் வயல்வெளி.  நீள்செவ்வக மற்றும் சதுர வடிவில் பச்சை பசேலென வயல்கள். தூரத்தில் மரங்களுடன் நெல் அடிக்கும் களம். வயல்களின் வரப்புகள் வளைந்தும், கோணியும் குழந்தையால் வரையப்பட்ட வடிவங்கள் போன்றிருந்தன. வயலில் நெற்கதிர்கள் நன்றாக முற்றி வயலை செறிவாக நிரப்பியிருந்தன. பெரும்பாலான வயல்களில் நெற்கதிர்கள் பச்சை பசேலென ேராக நின்று காற்றில் ஆடின. சில வயல்களில் பசும்மஞ்சள் நிறத்தில் அன்னையின் மடியில் படுத்திருந்தன. புற்கள் நிரம்பிய வரப்பில் ஆங்காங்கே பனைமரங்கள், மஞ்சள் மற்றும் கருணை கிழங்குச்செடிகள். அவர்கள் முன் இருந்த ரு வயல்வெளி தேசங்களை ஒர் சிறு வாய்க்காலின் தண்ணீர் கை குலுக்கி இணைத்தது. பதினைந்து வயது விஜயபாலனும், அவன் நெருங்கிய நண்பன் அறிவழகனும், பாலனின் சித்தப்பாவை பார்ப்பதற்க்காக அந்த வாய்க்காலின் வரப்பில் கிழக்கு திசையில் வீடு நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள்.

இருவரும் நடக்கையில் காற்றின் அமைதியான சத்தமும் அங்குள்ள  சிறு பூச்சிகளை உண்ணும் கரிச்சான் குருவிகளின் சத்தமும் ஒலித்து கொண்ட வந்தது. நெற்கதிரின் வாசம் பாலனின் மூக்கை தொலைத்து. அது பசும்புல்லுக்கும், வைகோலுக்கும் இடைப்பட்ட எதோ அரிதான பால் ஒன்றின் வாசம். சூரிய ஒளி பட்டு மிண்ணிகொண்டிருந்த நல்ல பச்சையாக உள்ள நெற்கதிரை ஓரு பிடி உருவி அவன் வாயில் போட்டு அரைத்தான் பாலன். நெற்கதிரின் சுனை லேசாக நாக்கை அறுத்தது. அவன் மேலு‌ம் மேலும் அதை மென்றுத்திங்க அரிசியும், பசுந்தவிடும் அரைப்பட்டு வாயில் அரிசி பாலாக உறியது.  பாலை குடித்துவிட்டு, நெற்கதிரின் சக்கையை வயிலின் ஓரத்தில் உள்ள வரப்பில் துப்பினான்.

மாரியம்மன் கோவயிலருகே உள்ள செந்தாமரை  குளத்தில் காலை ஏழு மணிக்கு குளிக்க போன அவர்கள், மணி இப்பொழுது பத்தரையிருக்கும். அவன் மீதும் அறிவழகன் மீதும், தாமரை குளத்தின் சேறு  ஒர் மெல்லிய படலமாக படிந்திருந்தது. தாமரைக்குளத்தின் கும்பியை கிளப்பாமல் அவர்கள் குளியல் முடிய வாய்ப்பில்லை. பாலன் பெரும்பாலும் மேல் சட்டை போடுவதில்லை, பள்ளிக்கூடத்தில் கொடுத்த பெரிய காக்கி அரை டவுசர். டவுசர் பின்புறம் நன்றாக தேய்ந்திருந்தது. இன்னும் ஓட்டையாகவில்லை. ிவப்பு உடம்பு வெயிலில் கருத்து மாநிறமாக  இருந்தது. குண்டான கண்ணம், லேசான தொந்தி, இடுப்பை சுற்றி சற்றுமிதமான சதை. ஊரில் பாலனுக்கு பேர் பால்வாடி. அறிவழகனுக்கு சற்று கடினமான இறுகிய கருப்பு உடம்பு. அவன் சிறிய கைலியை பாலனின் அரை டவுசர் அளவுக்கு மடித்து கட்டிருந்தான். ரப்பில் பாலன் முன்னால் நடக்க, அறிவழகன் அவன் பின்னால் தொடர்ந்து வந்தான். பாலன் அவ்வப்போது வாயை துப்பிக்கொண்டே  வந்தான். அறிவழகன் மீது எச்சில் தெறிக்க   டேய் வாய முதல்ல கொப்பிளிச்சுத்தொலஎன்றான். பாலன்  வாய்காலில் ஓர்வாய் தண்ணீர்  மொண்டு வாயை கொப்பளித்தான். வாயில் இடுக்கிள் ஒட்டியிருந்த அனைத்து பசுந்தவிடும் ெளிவந்தது.

வாய்க்காலில் தண்ணீர் அவர்களுக்கு எதிரே சென்றது. தண்ணீரில், சிறு சிறு மூங்கில் குச்சி, காய்ந்த  மரக்குச்சிகள், சருகு, சக்கை, புல் என ஒவ்வொன்றும் சற்று வேகமாக அவர்களை கடந்தன.  கருப்பாக காய்ந்த நத்தை ஓடு ஒன்று தண்ணீருக்கு அடியில் அங்கபிரதக்சணம் செய்து உருண்டோடி கடந்தது. பாலன் டேய் அறிவு, விநாயபத்தர் புளிய மரத்துல புளியங்கா அடிக்கலாமாஎன்றான். “டேய் லேட்டாயிடும்என்றான் அறிவழகன். பதிலுக்கு பாலன் போற வழிதானட அறிவு என்றான். “டேய் உனக்கு ஏதாச்சும் அரைச்சிகிட்டே இருக்கனுமாட" என்றான் அறிவழகன் சற்று எரிச்சலுடன். “இல்லடா நீ வரப்ப  அந்த புளிய மரத்த பாத்தியானு தெரியல அறிவு, புளியங்கா நல்லா சாட்ட சாட்டையா இருந்துச்சுடா, அதும் அந்த செங்காய் செம இனிப்புடா" என்றான் பாலன். இருவரும் பேசிக்கொண்டே நெல் அடிக்கும் களத்தில் உள்ள புளிய மரத்தடிக்கு வந்தார்கள்.

பாலன் புளிய மரத்தை அண்ணாந்து பார்த்தான். சூரிய ஓளி பாலவின் கண்ணை கூசிய அதேசமயத்தில் அறிவழகன் கல்லை மரத்தில் புளியங்காய் அதிகமாக உள்ள ஓர் பகுதியை நோக்கி வீசினான் அறிவின் குறி தப்பவில்லை. எப்போதும் தப்புவதும் இல்லை.  புளியங்காய் சொட சொடவேன வீழ்ந்தது. “சூப்பர்டா அறிவு" என்ற குதுகலத்துடன் பாலன் புளியங்காய்களை பொறுக்கி தன் டவுசர் பாக்கெட்டில் தினித்தான். அறிவழகன் அருகில் வந்து  உங்க சித்தப்பா எதுக்காகட வந்துருக்காங்கஎன்றான். புளியங்காய்களை பொறுக்கிக்கொண்டே பாலன் நீ டிப்ளமா படிச்சா சீக்ரம் வேலைக்குப்போலனு சொன்னால அத அம்மாட்ட சொன்ன , சரின்னு, சேத்துவிட சித்தப்பாவ  வர சொன்னங்கடா". அறிவு உடனே டேய் நீங்களே சாப்பாட்டுக்கே கஷ்டபடர்வங்க நீ  எப்படர டிப்ளமா சேர்வ" என்றான் ஆச்சரியத்துடன். பாலன் தெரியலடா, ஏதாச்சும்...  என்று முடிப்பதற்க்குள் புளியங்காயை கடித்தான். புளிப்பு பல்லிருந்து தலைக்கேறி தலையை ஓர்வெட்டு வெட்டியது. திடீரென பாலன் டேய் பத்தர் வர்ரார்டா வாடா ஓடிர்லாம்" என்று கத்தினான்.

இருவரும் தெருவுக்குச் செல்லும் வரப்பை நோக்கி ஓடினார்கள். வரப்பிலும் ஓட்டம்தான்.  வாய்க்காலின் வரப்பில் களைச்செடிகளும் ஆங்காங்கே உள்ள கோரைப்புதர்களும், அவர்களை வேகமாக உரசி சென்று கொண்டிருந்தன. பாலனின்  காலில்லிருந்து இடுப்புக்கு வரைக்கும் தாமரை குளத்தின் சேறு படிந்திருந்த சருமத்தில் குச்சிகளும், செடிகளும் உரசி வெள்ளைக்கோட்டு ஓவியங்களை உருவாக்கி கொண்டேவந்தன. பாலனின் டவுசர் புளியங்காயின் எடையால் அடிக்கடி கீழே இறங்க அவன் டவுசரை மேல தூக்கி கொண்டே ஓடினான். சூரியனும் தன் பங்குக்கு டவுசர் அவிளும்போது பாலனின் பின்பக்க அந்தரங்கத்தில் ஒளியை பீச்சி அடித்தது. அறிவு முன்னேவும்  பாலன் பின்னயும் பேசிக்கொண்டே ஓரே வேகத்தில் ஓடி தெருவை அடைந்தனர்.

தெருவில் பெரும்பாலும் கூரை வீடுகள், சில ஓட்டு வீடுகள், ஓர் மாடி வீடு.  ஓர்  குட்டி சுவரில் இரு ஆட்டுக்குட்டிகள் துள்ளி குதித்தன.  ஜல்லி மற்றும செம்மண்னாலான ரோட்டில் பாலன் புளியங்காயை கொட்டையோடு சேர்த்து மென்று கொண்டே டவுசரை தன் இடக்கையால் தூக்கி பிடித்துக்கொண்டு நடந்தான். தெருவில் பாலனை பார்த்த மோகனா மாமி சிரித்துக்கொண்டேவீட்ல கேட்ட காசுல்லங்குதுவோ ஆனா இந்த பாளையம் மட்டும் ரோட்ல உருண்டுகிட்டுதான்யா போகுது. ஓன்னுவுடம எல்லாத்தையும் புடிச்சு மாட்டுதுவயா, பாரன் சூத்ல டவுசர் நிக்குதானுஎன்றாள். பாலனுக்கு மோகனா மாமி சொன்னது காதில் விழ சிரித்துகொண்டே ஓடினான். அவனுக்கு தெருவில் அனைவருமே மாமா,மாமி தான். பாலனும் அறிவழகனும் வீட்டை நெருஙகினர். வீட்டு வாசலில் சித்தப்பா பேண்ட் சட்டையுடன் பாலனுக்காக காத்திருந்தார்.

பாலனின் வீடு குடிசை வீடு. வீட்டை சுற்றி ஒர் சிறிய இடம். வீட்டின் கீற்று மாத்தி எப்படியும் ஏழு வருடத்திற்கு மேல் இருக்கும். ஆங்காங்கே ஒருசில புது கீற்று இடையில் செருகி இருந்தது. இருபக்கமும் மண் சுவர். வீட்டில் நிலை இல்லை. மூங்கில் சட்டத்தால் செய்யப்பட்ட தட்டி நிலைகதவாக இருக்கி கட்டப்பட்டிருந்தது. வீட்டின்னுள் பாலனின் அம்மா மூங்கில் கதோவரம் லட்சுமியின் திருவுருவமாய் நின்றிருந்தாள். ஊரில் கணகவேல் பிள்ளை  சம்சாரம் பாக்கமட்டும் ஐயர் இல்ல ஆச்சரத்திலையும் ஐயர்" என்பார்கள். மறைந்த பாலனின் ஆத்தா மோகனா மாமியிடம்கும்போணத்தா அவ லட்சுமிடி, இந்த மண்ண பொன்னா மாத்த வந்தவடி என அடிக்கடி கூறுவாள். பாலன் அவனது சித்தப்பாவை பார்த்து நன்றாக சிரித்து எப்படி இருக்கீங்க சித்தப்பாஎன்றான்.

பாலனின் சித்தப்பா வாசலில் நின்ற பாலனை பாசத்துடன் பார்த்து சிரித்துக்கொண்டே டேய், பாத்த நீ பத்தாவதுல ஸ்கூல் பர்ஸ்ட் வந்த பையன் மாதிரியே இருக்க, இதுள நீ காலேஜ் வேற போனுங்கறாங்க உங்கம்மா, சட்டை எங்கடா என்றார். பாலன் சற்று வேகமாக ஓடி வீட்டுக்குள்ளே சென்றான். அறிவு வீட்டின் வாசல் ஓரமாக நின்றுவிட்டான். அம்மாவை தாண்டி செல்லும்போது பாலனை முறைத்து எப்ப போன நீஎன்றாள். அவன் அவளை வேகமாக கடந்து டவுசரில் உள்ள புளியங்காய்களை எடுத்து வீட்டின் மூலையில் இருந்த அரிசிபானை மீது வைத்தான். வீடு முழுவதும் சற்று மங்கலாக சூரிய ஓளி வட்ட வட்டமாக கீற்றின் வழியாக ஊடுருவி கொண்டிருந்தது. அரிசிபானையை திறந்த போது அங்காடியில் வாங்கிய புழுங்கல் அரிசின் நெடி முக்கை துளைத்தது. அவன் ஒருபிடி அரிசியைப் மென்றான். கூசிய பல்லுக்கு சற்று இதமாக இருந்தது. சித்தப்பா காசுக்கு என்ன அத்தாச்சி பண்ணப்போறிங்க" என்பது மெலிதாக அவன் காதில் விழுந்தது. வேகமாக வாசலுக்கு சென்றான்.

அம்மா பதில் சொல்ல தயங்க பாலன் வாசலுக்கு வந்து அம்மா தாலி செயினை வைச்ச போதுமா சித்தப்பாஎன்று கேட்டு அறிவோடு சென்று நின்றான். அம்மா ஏதும் சொல்லாததால் அம்மா எதிரே நின்ற சித்தப்பா சற்று சங்கடத்துடன் அது ஒர் செமஸ்டர்க்குதான் பத்தும் அத்தாச்சி என்றார். ஓரத்தில் நின்ற பாலன் உடனே நம்ம வயல வித்தாஎன்று சொல்லி அம்மாவை பார்த்தான். முதலில் குழம்பிய அம்மா சட்டேன்று சுதாரித்தாள். சித்தப்பா திடுக்கிட்டு அம்மாவை பார்த்து அதையும் வித்துட்டு, என்னா அத்தாச்சி..., சாப்பாடு மத்த செலவுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க என்றார் சற்று உடைந்த குரலில். “நானும் அவரும் நாடு ரோட்டில் பிச்சை எடுத்தாலும் பரவால்ல, அவன்ட்ட இருக்க சரஸ்வதிய துரத்திடக்கூடாது தம்பிஎன்றாள் திடமாக. “அண்ணட்ட ஒர் வார்த்த..” என்று சித்தப்பா முடிப்பதற்க்குள் இந்த விஷயத்தில் எப்போதும் என் முடிவுதான் அவர் முடிவும்என்றாள் இரும்பு திடத்தில். சித்தப்பா மேற்கொண்டு எதும் பேசாமல் மனக்கணக்கு போட்டார். “இன்னுமுமே கடைசி வருசத்துக்கு இடிக்கும்போல அத்தாச்சி என்றார். பாலன் கண்ணில் ஓன்று மிண்ணி அம்மாவிடம் ஏதோ சொல்ல வாயை எடுக்கும் தருணத்தில் சித்தப்பா முதல் முறையாக அறிவழகனும் பாலனுடன் ஓன்றாக நின்றிருப்பதை கண்டார். அந்நேரத்தில் நேர்உச்சியிலிருந்த சூரிய ஓளி தன்முன்னிருந்த சிறு மேகத்தை கலைத்து அந்த இடத்தை முழுபிராகசமாக நிரைத்தது.


Tuesday, March 1, 2022

பைரவி - சிறுகதை - சூர்யப்ரகாஷ் பிச்சுமணி

 வாசலில் அவள் செருப்பை கழற்றும் ஓசை கேட்டது, இன்று வழக்கத்திற்கு மாறாக அம்மா சீக்கிரமாக வீட்டிற்கு திரும்பிவிட்டிருக்கிறாள். ஆனால் இன்னும் அவள் உள்ளே நுழையவில்லை, என்னடா இது…..

ஒரு நாய்க்குட்டியின் குரைப்பொலி கேட்டவுடன் இது அவளின் வேலை தான் என நான் எழுதுவதை நிறுத்திவிட்டு வெளியில் சென்றேன்.

அம்மாதான்.. கையில் ஒரு நாய்க்குட்டியை எடுத்துக்கொண்டு வந்திருந்தாள்.

 

ஐய்ய….என்னமா பண்ணிட்டு இருக்க?’

 

டே..நம்ம பிங்கி ஆண்ட்டி வீட்டு கேட்டுகிட்ட நின்னுட்டு இருந்துச்சு டா அதான் தூக்கிட்டு வந்தேன்….’

 

ம்மாஅவங்க அண்ணன் பசங்களுக்காக கொண்டு வந்துருப்பாங்கம்மாநீங்க எதுக்கு எடுத்துட்டு வந்தீங்க இப்ப….?”

 

அதுனால என்ன டா….நாம்பாட்டுக்கு தான் டா போய்ட்ட்ருந்தேன் இத கவனிக்காம….இது என் கால் கிட்ட வந்து குரச்சுதாகொழந்தயாட்டம் இருக்கேண்ட்டு தூக்கிட்டு வந்துட்டேன்..’

 

நான் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்

 

சரிகுடுங்க நான் போய் விட்டுட்டு வந்துடுரேன்என்றேன்

 

இருடாமுதல்ல சாமிகிட்ட இருக்க பால எடுத்துவாஇதுக்கு ரஸ்க்க அதுல போட்டு குடுப்போம்அப்புறம் போய் நானே வுட்டுட்டு வரேன்என்றபடி கைப்பையில் இருக்கும் ரஸ்க்கை எடுத்து பிரிக்க ஆரம்பித்தாள்.

 

நான் அந்த நாய்க்குட்டியையே பார்த்துக்கொண்டிருந்தேன்…..மெலிதான ப்ரவுனும் வெள்ளையும் கலந்த நிறத்தில் சுறுசுறுப்பாக துள்ளிக்கொண்டே இருந்தது. எப்படியும் பிறந்து ஒரு மாதத்திற்குள் தான் இருக்க வேண்டும். பார்த்தால் தெரு நாயை போல் தெரியவில்லை நிச்சயம் காசு கொடுத்து தான் வாங்கியிருப்பார்கள். சீக்கிரம் கொண்டுபோய் விட்டு விட வேண்டும் என்று எண்ணிக்கொண்டே பாலை எடுக்க பூஜையறைக்குள் நுழைந்தேன்.

 

அவள் நாய்க்குட்டியை கொஞ்சும் சத்தம் கேட்டது

 

நாய்க்குட்டி தன் சிவந்த நாவால் அவள் கையிலிருந்த நுணுக்கிய ரஸ்க்கை நக்கிக்கொண்டிருந்தது. அவள் கைகளை அசைக்க விடாமல் ஒற்றைக்காலால் அழுத்திக்கொண்டு இருந்தது.

 

அவளிடம் பால் பாத்திரத்தை நீட்டினேன்,

 

இதுல எப்டி டா சாப்புடும்..போய் நம்ம பைரவியோட தட்ட எடுத்துட்டுவா..’

 

நான் அதை எடுத்துக் கொடுத்தவுடன்..பாலை அதில் ஊற்றி ரஸ்க்கை உடைத்து போட்டாள்.

நாய் தன் வாலை ஆட்டியபடி தட்டை நோக்கி விரைந்தது….மீண்டும் அதன் நாக்கு வேகமாக இயங்கத்தொடங்கியது…..அம்மா வாசலில் உட்கார்ந்து அதை வேடிக்கைபார்க்க ஆரம்பித்தாள்.

 

நாய்க்குட்டி அழகா இருக்குல்ல டா

 

ஆமாஆன தெருநாய் இல்லன்னு நெனைக்கிறேன்

 

அவங்க தெருநாயெல்லாம் வளப்பாங்களா டா….நல்ல சாதி நாயா தான் இருக்கும்’.

 

ஆமா..அதான் சொல்றேன் சீக்கிரம் கொண்டு போய் விட்டுட்டு வந்துருங்க

 

இருடா கொஞ்ச நேரம் அது விளையாட்ரத பாத்துட்டு அப்புரமா கொண்டு போயி குடுத்துட்ரேன்

 

ம்மா…..நீங்க அவங்கட்ட பேச்சு வாங்காம வரமாட்டீங்க போல இன்னிக்குஎன்றபடி நான் திரும்பவும் அறைக்குள் நுழைந்தேன்.

 

அவள் மீண்டும் அதை கொஞ்ச ஆரம்பித்தாள். அதன் குரைப்பொலியில் இப்பொழுது ஒரு சின்ன வித்தியாசம் தெரிந்தது.

 

சற்று நேரத்தில் அதனுடன் ஒரு பெரிய குரைப்பொலி கலந்து கொண்டிருந்ததுஅது பைரவியின் சத்தம் தான்.

நான் மீண்டும் வெளியே போன போது அம்மாவின் கையில் இந்த குட்டியும் அவளைச்சுற்றிக்கொண்டே பைரவியும் மாறி மாறி குரைத்துக்கொண்டிருந்தார்கள்.

 

டேஇவளக்கு பிஸ்கட் போடுடாஇந்த குட்டிய பயமுறுத்திட்டா வந்த ஒடனேயெ..’

 

நான் பைரவிக்கு எப்பொழுதும் போடும் டைகர் பிஸ்கட்டை பிரித்துக்கொண்டே அவளை வழக்கமாக நான் கூப்பிடும் அந்த சமிஞ்ஞையை எழுப்பினேன்..பைரவி அவளுடைய பாத்திரத்தை நோக்கி வந்தது. பிஸ்கட்டை உடைத்து பாத்திரத்தில் போட்டவுடன் பைரவி தன் பற்களைகொண்டு மேலும் பிஸ்கட்டுகளை நொறுக்கிக் கொண்டு உண்ணத்தொடங்கியது.

 

அம்மாவின் கைகளிலிருந்து விலக்கிக்கொண்டு அந்த குட்டி என்னை நோக்கி வந்தது. தன் நாக்கால் என்கைகளை நக்கத்தொடங்கியதுஅதன் உமிழின் ஈரப்பதம் என்கைகளை தொட்டு நீங்கியது. நிச்சயம் அது குழந்தையேதான்…..நான் பைரவியிடமிருந்து அதை நகர்த்தி தள்ளிச்சென்று மீதமிருந்த பிஸ்கட்டுகளை நுணுக்கி அதன் வாய்க்கருகில் நீட்டினேன். என் கைகள் அசையாமலிருக்கும் பொருட்டு தன் முன்னங்கால்களால் என்னை அழுத்திக்கொண்டு பிஸ்கட் துணுக்குகளை நக்கத்தொடங்கியது.

 

அம்மா அதை பார்த்துவிட்டு, “ச்ச அழகா இருக்குதுல்லநாமலே வச்சுப்பமா டாஎன்றாள்.

 

நான் அவளை முறைத்துக்கொண்டே பேசாம இருங்க…..நா இப்ப அத போய் விட்டுட்டு வரப்போறேன்என்றபடி அதன் துடிப்பை பார்த்துக்கொண்டிருந்தேன்.

 

பிஸ்கட் தீர்ந்தவுடன் அது என்னை உற்றுப்பார்த்துவிட்டு தன் முனகும் குரைப்பால் என்னை சுற்றிக்கொண்டே வந்தது.

 

நான் பிஸ்கட் பாக்கெட்டினுள் மீதமிருந்த துகளை பாக்கெட்டோடு அதன் வாய்க்கருகில் நீட்டினேன்..அது மீண்டும் அதன் நாக்கை குரைத்துக்கொண்டே என் கைகளுக்கருகே வந்தவுடன் சட்டென்று பைரவி அதை நோக்கி பாய்ந்தது. ஒரே ஒரு உறுமல் ஒளி அந்த குட்டி நாய் தெருவே அலறும்படி முனகிக்கொண்டே ஓடியது.

 

அம்மா வாசலில் இருந்த துடைப்பத்தை பைரவியை நோக்கி எறிந்துவிட்டு கத்திக்கொண்டே தெருவில் இறங்கி அந்த குட்டியை தேடினாள்.

 

சுற்றும் இருந்த ஆட்கள்.. நாய் முனகும் ஓலியை வந்த திசையை நோக்கி பார்க்க ஆரம்பித்தார்கள்.

 

அம்மா அது ஓடிய திசை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தாள். நான் என்ன செய்வதென்று தெரியாமல் வாசல் கதவை வெறுமனே சாத்திவிட்டு தெருவில் இறங்கினேன். பைரவி என் எதிரில் சலனமில்லாமல் நின்று கொண்டிருந்தது. ஒரு கல்லை எடுத்து அதை நோக்கி குறிபார்த்தேன்நான் எறியும்முன் பைரவி வெருண்டபடி ஓடியது.

 

அம்மாவை கூப்பிட்டுக்கொண்டே நான் தெருவில் நடக்க ஆரம்பித்தேன். எப்படியும் அந்த குட்டி நாய் இந்நேரம் பிங்கி ஆண்ட்டி வீட்டிற்க்கு போய்விட்டிருக்கும், அம்மா அங்கே போவதற்க்குள் அவளை கூட்டிக்கொண்டு வந்துவிட வேண்டும் என்று நெஞ்சு படபடத்தது.

 

தூரத்தில் அவள் அழுதபடி பிங்கி ஆண்ட்டியின் வீட்டிற்க்கு முன் நின்று கொண்டிருந்தாள். நான் வேஷ்டியை மடித்துக்கட்டிக்கொண்டே ஓட ஆரம்பித்தேன். இதற்குள் அங்கு கூட்டம் சேர்ந்துவிட்டிருந்தது. பிங்கி ஆண்ட்டி என் அம்மாவை திட்டத்தொடங்கிவிட்டிருந்தாள். நான் கூட்டதிற்க்குள் நுழைந்து அழுதுகொண்டிருந்த அம்மாவை அழைத்தேன்….

 

பிங்கி ஆண்ட்டியின் வீட்டு வாட்ச்மேன் அந்த நாய்க்குட்டியை பிடித்து அதன் மீது வழிந்த ரத்தத்தை துடைத்துக்கொண்டிருந்தான். நான் அதை கவனிப்பதற்க்குள் என்னை நோக்கி வசவுகள் வரத்தொடங்கின.

 

அம்மாவும் புள்ளயுமா சேந்து என் நாய்க்குட்டிய கொல்லலாம்னு பாத்தீங்களா, கண்ட நாய விட்டு அத கடிக்க உட்றுக்கீங்க..அதுக்கு எதாச்சும் ஆச்சுன்னா உங்க ரெண்டு பேரையும் போலீஸ்ல புடிச்சு குடுத்துருவேன்

 

சும்மா வாய்க்கு வந்தபடி பேசாதீங்க, நாங்க ஒன்னும் கொல்லப்பாக்கல!!!, அதுக்கு பிஸ்கட் போட்டோம் அவ்ளோதான்…..பைரவி தான் அதகடிச்சுருச்சு

 

அது கடிக்குற வரைக்கும் வேடிக்கை பாத்துட்டு இருந்தீங்களா?? இருங்க அவரு வரட்டும் உங்கள என்ன பண்றேன்னு பாருங்க….

 

அம்மா நாந்தான்மா அந்தக்குட்டி அழகா இருக்குன்னு தூக்கிட்டு போய் விளையாண்டுட்டு இருந்தேன் கவனிக்கறதுக்குள்ள இப்புடி ஆகிருச்சுமன்னிச்சுக்கங்க, அத என்ட்ட குடுங்கம்மா நான் மருந்து போட்டு உடறேன்என்றபடி அந்த குட்டியை பார்த்து நடந்தாள்.

 

உடனே பிங்கி ஆண்ட்டி குறுக்கே புகுந்து கொண்டு, “பேசாம போய்ரு சரசு, நாய்குட்டி பக்கத்துல வந்த உன்ன கொன்னுடுவேன்என்றபடி வாட்ச்மேனிடம் ஹிந்தியில் நாய்குட்டியை உள்ளே கொண்டுபோகச்சொன்னாள்.

 

டே உங்க அம்மாவ கூட்டிட்டு போயிரு, அவளுக்கு புத்தி சரியில்லன்னு பாக்குறேன் இல்லன்னா நடக்குறதே வேற

 

தேவையில்லாத பேச்செல்லாம் பேசாதீங்க, அவுங்க புத்தி எப்புடி இருந்தா உங்களுக்கென்ன!! நடந்த தப்புக்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேன். உங்க நாய்க்கு ஒன்னும் ஆகாது இதோட பேச்ச விடுங்கஎன்றபடி அழுதுகொண்டிருந்த அம்மாவை இழுத்தபடி நடக்க ஆரம்பித்தேன்.

 

அந்த வீட்டினுள் இருந்து நாய்குட்டியின் முனகல் ஒலி கேட்டு பிங்கி ஆண்ட்டி வீட்டிற்குள் சென்று கேட்டை அடைத்துக்கொண்டாள்.

 

கூட்டம் கலையத்தொடங்கியது ஆளாளுக்கு வாய்க்கு வந்தபடி முணுமுணுத்துக்கொண்டே சென்றார்கள்.

 

நீண்டகாலமாக இந்த முணுமுணுக்கும் கூட்டம் அம்மாவை பேசு பொருளாக்கி பேசும் பேச்சுக்களை கண்டு கொள்ளாமல் இருக்க பழகியிருந்தேன். பெரிதாக இவர்கள் என்ன பேசிவிடப்போகிறார்கள், வெட்கமில்லாத ஜென்மங்கள்.

 

வீட்டு வாசலை நெருங்கிய போது பைரவி இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டே வந்தேன். நல்ல வேளை அது இருப்பதற்க்கான அறிகுறி ஏதும் தெரியவில்லை. அம்மா வேகமாக உள்ளே சென்று அவளது அறைக்குள் போய் கதவை சாத்திக்கொண்டாள். நான் கதவையே பார்த்துக்கொண்டு தரையில் உட்கார்ந்தேன். மொபைல் வழக்கமாக அடிக்கும் அலாரத்தை அடித்தது

 

ம்மா, நீங்க மாத்திரை சாப்பிடற நேரம் ஆச்சு கதவ திறங்க!!!”

 

நீ போய் பைரவியை புடிச்சுட்டு வா முதல்ல, அப்ப தான் நான் மாத்திரை சாப்புடுவேன்

 

முதல்ல நீங்க மாத்திரைய போடுங்க அப்புறம் நான் போய் அத கூட்டிட்டு வரேன்

 

முடியாது, நா இப்பவே அத பாக்கனும் நீ என்னய ஏமாத்திருவ!!!”

 

கண்டிப்பா கூட்டிட்டு வரேன், நீங்க மாத்திரைய சாப்புடலன்னா டாக்டர் என்னய தான் திட்டுவாரு

 

அவன் உன்ன திட்டிட்டு உயிரோட போயிருவானான்னு நான் பாக்குறேன், வர சொல்லு அவன என்றாள்.

 

அவள் பேச்சில் மெலிதான மாற்றம் தெரிந்தது, நான் கஷ்டப்பட்டு சிரிக்க முயன்றபடி என்ன பேசுறீங்க, டாக்டர் நல்லதுக்கு தான சொல்றார். கதவ திறங்க முதல்ல

 

வாசலில் பைரவியின் குரல் கேட்டது, நான் திடுக்கிட்டபடி அறைக்கதவை வெளிப்பக்கமாக பூட்டினேன். ட்ராவைத்திறந்து டயாஸீபத்தை இஞ்செக்‌ஷனில் பொருத்திக்கொண்டு தயாராக வைத்துக்கொண்டேன்.

 

மெதுவாக அம்மாவை அழைத்தேன், அமைதியைத்தவிர அவள் பதிலெதுவும் தரவில்லை.

 

டாக்டருக்கு மூன்று மிஸ்டுகாலை குடுத்துவிட்டு, மீண்டும் அம்மாவை அழைத்தபடி கதவைத்தட்டினேன். இம்முறை அவள் மெதுவாக பைரவி பைரவி பைரவிஎன்று முனக ஆரம்பித்தாள்.

 

வெளியே சென்று பைரவி இருக்கும் திசையை நோக்கி துடைப்பத்தை எறிந்தேன் அது விலகிக்கொண்டு போக மறுத்தது, என் பாக்கெட்டில் இருந்த பேனாவை அதை நோக்கி விட்டெறிந்தேன்இப்போது அது தெருவை நோக்கி ஓடியது

 

வீட்டினுள் நுழைந்து மீண்டும் கதவைத் தட்டினேன்

 

கதவ திற டா நாயே, என்கிட்டயிருந்து அவள காப்பாத்திடலாம்னு பாக்குறியா”!!

 

இதயம் படபடவென்று அடித்துக்கொண்டது….நெற்றியில் முளைத்த வியர்வையை துடைத்துக்கொண்டுதாழ்ப்பாளை பின்னுக்கிழுத்தேன்

 

உள்ளே தாழ்ப்பாளை திறக்கும் சப்தம் எதுவும் கேட்கிறதா என்று பார்த்தேன்

 

அம்மா கதவ திறங்க….நான் மாத்திரை……!!” சொல்வதற்க்குள் சடாரென்று என்னை நோக்கி பாய்ந்தாள்….நான் தடுமாறியதை உணர்வதற்குள் வெளிக்கதவை திறந்து பைரவியை நோக்கி முன்னேறியிருந்தாள்…..

 

பைரவி உச்சஸ்தாயியில் அலறும் சத்தம் கேட்டது…..

 

எழுந்து வெளியே வருவதற்க்குள், அருகிலிருந்த வீடுகள் விழித்துக்கொண்டன….வாசலைச்சுற்றி ஆட்கள் கூடி சத்தமிடத்துவங்கினார்கள்.

 

துரிதகதியில் அவள் தோள்பட்டையில் இன்ஜெக்‌ஷனை சொருகினேன்.

 

அம்மா திரும்பி என்னைப் பார்த்தாள்…..கீழே சரிந்த அவளைத்தூக்கி மடியில் கிடத்தினேன். அவள் கைகளெங்கும் இரத்த விளாராக இருந்தது.

கலங்கிவிட்டிருந்த என் கண்களை சேலைத் தலைப்பால் துடைத்துவிட்டு, வயிற்றில் என் பேனாவை வாங்கி முனகியபடி கிடந்த பைரவியை பார்த்தபடி பிதற்றத்தொடங்கினாள்.

 

கூட்டதிற்கு நடுவில் டாக்டரின் கார் புகுந்தது.