எழுத்தாளர் சு. வேணுகோபாலின் சிறுகதை வல்லினம் இதழில்:
https://vallinam.com.my/version2/?p=7295
எழுத்தாளர் சு. வேணுகோபாலின் சிறுகதை வல்லினம் இதழில்:
https://vallinam.com.my/version2/?p=7295
அலுவலகம்
செல்லும் வழியில் அந்த கழுதைக்குட்டியை மட்டும் பார்க்காமல் இருந்திருந்தால்
எனக்கு சூர்யாவின் ஞாபகமே வந்திருக்காது. வெகுநாட்களாக
அவனுடன் பேசக்கூடாது என்றுதான் இருந்தேன். அவனிடம் இருந்து விலகி இருப்பதே நல்லது
என்று எனக்குத் தெரியும். ஆனால் அவனுடன் இருக்கும்போது அது தோன்றுவதில்லை. இன்று
எப்படியும் என்னை அழைப்பான்.
இப்போது
யோசித்துப் பார்த்தால் சூர்யாவிடம் ஈர்ப்பும் அற்ற விலக்கமும் அற்ற ஏதோ உறவு நான் பாவித்து
வந்திருக்கிறேன் என்று புரிகிறது. எந்த வயதில் அவனுடன் பழக ஆரம்பித்தேன் என்று
அறுதியாகச் சொல்ல இயலாது. ஆனால் இந்தக் கழுதைக்குட்டி சமாச்சாரம் மட்டும் நன்றாக
நினைவில் இருக்கிறது. அதுதான் எங்கள் முதல் சாகசம் என்று நினைக்கிறேன்.
அந்த
முதல் சாகசம்தான் சூர்யா என் மனதில் இட்ட முதல் கீறல். பால்யத்தில் இருவரும் ஊரையே
சுற்றி வருவோம். எல்லா சிற்றுயிறுகளும் எங்களுக்கு கல் எரிய தகுந்ததே. ஓணான், தெரு
நாய், வீட்டு நாய்., பூனை, காக்கை, குருவி, கிளி என்று
எதுவும் தள்ளுபடி இல்லை. ஒருநாள் சூர்யா ஒரு கழுதைக் குட்டியை துரத்திச் சென்றான்.
நானும் பின்னாலேயே ஓடினேன். அதன் வாலைப் பிடித்து இழுத்து அதன் மேல் சவாரியிட்டான்;
தரையில் அதன் முகத்தை தேய்த்தான்; அதன்
கழுத்தில் இருக கயிறு கட்டி மறுமுனையைப் பிடித்து ராட்டினம் போல் பக்கவாட்டில்
சுற்றி சுவற்றில் எறிந்தான். சூர்யா அப்போதெல்லாம் அழகாய்த் தெரிவான். நான்
சிரிப்பிற்கும் சந்தேகத்திற்கும் நடுவில் நின்று வேடிக்கை பார்ப்பேன். ஏதாவது சிறு
சிறு உதவிகள் மட்டும் செய்வேன். கூறுகெட்டுப் போன குட்டி ங்யே.. ங்யே.. என்று
கத்திக் கலைத்துப்போனது. அந்த சத்தம் சூர்யாவிற்கு பிடித்துப் போய் விட்டது. அது
சத்தமிடும்தோறும் சூர்யா சன்னதம் கொண்டான். சுவற்றில் மாறி மாறி அடித்தான்; பனை
மரத்தில் வீசினான்;
அம்மிக்கல்லை எடுத்து அதன் நடு முதுகில் போட்டான். நல்ல
வேடிக்கைதான். ஒரு கட்டத்திற்கு மேல் கழுதைக்குட்டி மனிதக் குழந்தை கணக்காக
சத்தமிட்டு அழுதது. நான் திகைத்து நிற்க;
சூர்யாவிற்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. புது சக்தியோடு அம்மிக்கல் சிகிச்சை
நடந்தது.
ஆரம்பத்தில்
சூர்யாவிற்கு ஈடுகொடுத்து விளையாடிவந்த நான்
பிறகு வெறும் சாட்சியாக மட்டும் நின்றிருந்தேன். எனக்கு தெரிந்திருந்தது இனி
சூர்யாவை யாரும் தடுத்து நிறுத்த முடியாது என்று. சூர்யா மேலும் மேலும் என்று
விளையாட்டில் திளைத்தான். சூர்யாவும் கழுதைக் குட்டியும் இந்த விளையாட்டை மீண்டும்
மீண்டும் நடத்தி, அதை ஏதோ ஒரு கலைநிகழ்ச்சி போல
கொண்டுவந்திருந்தார்கள். கடைசியாக குட்டி மயங்கியது. அது மண்முழுதும் குருதியால்
கோலமிட்டிருந்தது.
இருட்டிவிட்டது
போதும் என்றேன். சூர்யா ஒரு வழியாக சம்மதித்தான். இதைக் குட்டியை இனி என்ன செய்வது
என்று நான் யோசிக்கொம்போதே. சூர்யா அதை ஒரு சாக்கில் கட்டி முடிந்து ஒரு
மரத்திற்கு அடியில் பத்திரப்படுத்தி வைத்தான்.
"இருட்டிக்கிட்டு
வருது நாளைக்கு வந்து மிச்சதை விளையாடலாம்" என்றான். அந்த
சிறுவயது அக நடுக்கம் இன்று எனக்கு நினைவு வருகிறது.
யாரும்
பார்த்து விடுவார்களோ?
நானும் அகப்படுவேனோ? என்ற பயம். அன்று
நெஞ்சத்தில் ஆழமான கீறல் விழுந்தது.
"நாளைக்கு
நேரமே வாடா.." என்று விட்டு சந்தோசமாக ஓடியவனை வெறுமனே பார்த்துக்கொண்டு
நின்றேன்.
இன்றுபோல்
அன்றும் வெகு நாட்களாக அவனுடன் பேசாமல் இருந்தேன். மீண்டும் எப்போது எந்த
சாகசத்தின் பொருட்டு அவனுடன் பேசத்தொடங்கினேன் என்று நினைவில் இல்லை.
[2]
அலுவலகம்
வந்து அமர்ந்தவுடனேயே என் கைப்பேசி வரிசையாக சிணுங்கி சிணுங்கி நின்றது. அது
அம்மாவோ அப்பாவோ தங்கையோ அல்லது தம்பியாகவோ தான் இருக்கும் என்று சலிப்பாக
இருந்தது. யார் எதற்கு எவ்வளவு பணம் கேட்கப் போகிறார்களோ? மாதத்தின்
கடைசி நாள்; வருடத்தின் கடைசி நாள் இது. சம்பளம்
வந்திருக்கும் என்று அவர்களுக்கு தெரியும். இவர்களைப் பொறுத்தவரை நான் பணம்
காய்க்கும் மரம்.
எடுத்துக்
பார்த்தேன். "அட்வான்ஸ்ட் ஹாப்பி நியூ இயர்…"
என்று சூர்யாவிடம் இருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது. அத்துடன் நிரை நிற்கும்
நிர்வாணப் பெண்களின் புகைப் படங்களும் ஒரு கண் சிமிட்டும் இமோஜியும். என் அலுவலக மேஜைக்கு கீழ் கைபேசியை கொண்டு சென்று
யாரும் காண வண்ணம் அவசர அவசரமாய் ஒவ்வொன்றாய் நகர்த்திப் பார்த்தேன்.
மேனேஜர்
லீனா சட்டென்று மேஜை எதிர் வந்து நின்ற போது பட்டென்று கைபேசியை நிறுத்தி பைக்குள்
போட்டேன். "ரிப்போர்ட் இன்னும்
வரவில்லை. சீக்கிரம் வேண்டும்.." என்றுவிட்டு என் பதிலை எதிர்பார்க்காமல்
திரும்பிச் சென்றாள். என் நெஞ்சம் டம் டம் என்று அடித்துக்கொண்டது. மேனேஜர் லீனா
சென்ற உடனேயே பக்கத்து இருக்கை கீர்த்தி, "காஃபீ?" என்று
கேட்டாள். நான் சீற்படாத மூச்சுடன், "நீ முன்னே போ. நான்
வருகிறேன்" என்றுவிட்டு கனமாக மூச்சு
இழுத்து விட்டேன். கீர்த்தி சென்ற அடுத்த நொடியே கூட்டிப் பேருக்கும் வேலைக்கார
அம்மா,
" சார் ஒரு நிமிஷம் தள்ளிக்கோங்க மேஜையை சுத்தம் செஞ்சுட்டுப்
போறேன்" என்று அருகில் வந்து நின்றாள். இன்னும் மூச்சு சீராகாத எரிச்சலும்
படபடப்புமாக,
"அப்புறம் வாம்மா.. " என்று கத்தியதுகூட பாதிதான்
வெளியே வந்தது. ஒரு நிமிடம் அமர்ந்து எழுந்து காஃபீ குடிக்கச் சென்றேன். கைபேசியை
கொஞ்ச நேரத்திற்கு எடுக்கக்கூடாது என்ற முடிவுடன்.
யார் யாரோ
அட்வான்ஸ்ட் ஹாப்பி நியூ இயர் சொன்னார்கள் ஆனால் எனக்கு சூர்யாவிடம் இருந்த வந்த வாழ்த்து
மட்டும்தான் மீண்டும் மீண்டும் மண்டையில் ஓடிக்கொண்டிருந்தது. இனி இந்த எண்ணச்
சசுருள் ஓடிக்கொண்டே தான் இருக்கும். அதை நிறுத்தும் யுக்தி என்னிடம் எப்போதும்
இருந்ததில்லை. அதுவாக மட்டுப்படும் வரை காத்திருக்க வேண்டும்.
கண்களை
மூடி வலுக்கட்டாயமாக அந்த எண்ணங்களை நிறுத்தினேன். அது வீரியம் கொண்டு மூடிய
கண்கள் முன் நிழலாடியது. நொந்து கொண்ட தருணம் அம்மாவிடமிருந்து போன் வந்தது.
எனக்கு அது மேலும் சோர்வூட்டுவதாக இருந்தது.
"ஹலோ..";
"ஹலோ.. கண்ணு.. நான் அம்மா பேசுறேன் டா.."; "என்னம்மா..
சொல்லு..";
"இல்ல.. பணம் அனுபுறேன்ன்னு சொன்னியே.."; "எதுக்கு?"; "அதுதான்
சொன்னேனே கண்ணு." அம்மா பேசிக்கொண்டிருக்கும் போதே மற்றோரு அழைப்பு
காத்திருப்பில் வந்தது. எடுத்துப் பார்த்துவிட்டு மீண்டும் காதில் வைத்தேன் .
அம்மா
தொடர்ந்து பேசினாள்,
"இவளுக்கு கால்லேஜ் பீஸ் கட்டணும்,
நகை எடுக்கனுன்னு."; "அம்மா.... இன்னும்
சம்பளம் வரல. இப்படி எல்லாச் செலவையும் என்கிட்டயே சொன்னா எப்படி? நகை இப்போ
அவசியமா?
நான் இங்க நல்ல சோத்துக்கே வழியில்லாம இருக்கேன். அவ
கல்லேஜ் பீசுக்கே நான் யார்கிட்டயாவது கை நீட்டனும். எப்படியோ அனுப்பி
வைக்கிறேன்." என்று சலிப்புடன் சொன்னதை அம்மா உணர்ந்திருப்பாள்.
"சரி" என்றுமட்டும் சொல்லிவிட்டு வைத்துவிட்டாள்.
போனை
அமுத்தியவுடன். எண்ண வாசாலில் நின்றிருந்த நிர்வஸ்த்திர ஸ்திரீக்கள் நிரை நிரையாய்
எண்ணத் திரையில் வந்து அட்வான்ஸ்ட் ஹாப்பி நியூ இயர் சொல்ல ஆரம்பித்தார்கள்.
நான் செய்வதற்கு ஒன்றுமில்லாமல்; கண்டிக்காமல்; திளைக்காமல்
அவர்களை நிகழ விட்டுக்கொண்டிருந்தான்.
அந்த
ஸ்திரீக்கள் ஆடிப்பாடி ஓய்ந்து போவார்கள் என்று நினைத்தான். ஆனால் செல்லச்செல்ல புது விசைகொண்டு புது அவதாரம்
எடுத்து வெறியாட்டம் போட்டார்கள். அவர்களின் வெறியாட்டு என் முகத்தில் சங்கடமாகவும் சுருக்கங்களாகவும்
தெரிந்தது. யாரும் பாக்காத வண்ணம் தலைமேல் கைகோர்த்து குனிந்து அமர்ந்தேன்.
மீண்டும்
கைபேசி ஒலித்தது. மீண்டும் சூர்யா கூப்பிட்டான். இம்முறை எடுத்தேன்.
மறுமுனையில், "டேய்
புளித்தி,
செகண்ட் ரிங் வந்தா மறுபடியும் கூப்பிட மாட்டிய. எந்த
மிண்டைகிட்ட பேசிட்டு இருந்த?"
என்று சூர்யா கேட்டான்.
அவனுக்கு
பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தேன்.
"பேசுடா..
ஏன் பேசமாடீங்கிற?"
"என்ன
பேசுறது. நீ பண்ணுவது எல்லாம் நல்லவா இருக்கு? உன்கிட்ட
என்னான்னு பேசுறது?"
என்றேன்.
"இங்க
பாரு.. யாரோ செத்ததுக்கு எல்லாம் நான் பொறுப்பாக முடியாது."
"யார்
செத்தா?"
நான் ஆர்வமாகக் கேட்டேன்.
"அந்த
பார்க்கிங் டோக்கன் போடுறவன்கிட்ட சண்டை வந்தப்ப அவனும் அவன் ஆளுங்களும் நம்ம
ரெண்டு போரையும் போட்டு சாத்து சாத்துன்னு சாத்துனானுல்ல. மறந்துட்டியா?"
"ஆமா.
அதுக்குத்தான் அண்ணைக்கு ராத்திரியே அவன் பார்க்கிங்கில் நின்ன எல்லா வண்டிலையும்
காத்த புடுங்கிவிட்டியே."
"விட்டோம்ன்னு
சொல்லு." என்றான்.
"நான்
வேணான்னுதான் மொதல்ல சொன்னேன். நெனப்பு இருக்கட்டும்."
"எப்படியோ
ரெண்டு பெரும் தான் எல்லா வண்டிலையும் காத்த புடிங்கி விட்டோம். நீ போனததுக்கு
அப்புறம் நான் ஒரு அம்புலன்சுக்கும் புடிங்கி விட்டேன்."
"அடப்பாவி.
அப்புறம்?"
"சரி
அதைவிட்டு.." என்று பேச்சை மாற்றினான். நானும் மாறிக்கொண்டேன். ஆனால் மனதின்
ஒரு பகுதி,
யாரோ இறந்திருப்பார்களோ?
அதன் பழி
என்மீதுவந்து விழுமோ? என்று எண்ணியது.
"சரி யாருகிட்ட பேசிகிட்டு இருந்த நான் போன் பண்ணுனப்ப?"
"யாரோ விளம்பரக்காரிடா.. ஏதோ ஹாலிடே பாக்கேஜாம்.. நல்ல ரேட்டாம்..
கோவாவாம்.. வாங்கிக்கிறியான்னு கேட்டா?" என்றேன்.
"வாங்கிக்குறேன்.. நீயும் வாரியா? உனக்கு என்ன ரேட்டு?
ரெண்டு பெற சமாளிப்பியா ன்னு கேக்கவேண்டியது தானேடா?"
"என்ன வாய்டா உனக்கு? பொழுதன்னைக்கும் இதே
நினைப்புலதான் இருப்பியா? வாய் மட்டும் இல்லேன்னா உன்ன நாய்
தூக்கிட்டு போய்டும்.." என்றேன்.
"தூக்கிட்டு போறதுதான் போகுது, பொட்ட நாயா பாத்து
தூக்கட்டும்." என்றுவிட்டு சிரித்தான் சூர்யா. நானும் சிரித்தேன்.
சூர்யா
தொடர்ந்தான்,"நாயோட செய்ற மாதிரி வீடியோ ஒன்னு
இருக்கு அனுப்பி வைக்கட்டா?" என்று சலனமில்லாமல்
கேட்டான்.
"கருமோ கருமோ.. கழிசடை.. நீயே அதை வெச்சுத் தொலை."
"என்னடா இப்படி சொல்லிட்ட.. அமெரிக்கால ஓர் ஆராய்ச்சி நடக்குது. ஒரே
ரூமுக்குள்ள ஒரு மனுஷனையும் நாயையும் ஒரு வருஷம் தனியா அடைச்சு வெச்சாங்க."
"அப்புறம்?"
"அப்புறம் என்ன? எல்லாம் டாக்கி ஸ்டைலு தான்.."
"உவேவ்.." என்று வாந்தி எடுப்பதுபோல் செய்தேன்.
சூர்யா
கெக்கு கெக்கு என்று சிரித்தான். சிரித்துவிட்டு, "சரி.. டேய்.. இது நியூ இயர் நைட் டா.. கிளம்பி வா.. சரக்கு எல்லாம் எப்பவோ
ரெடி. வரும்போது சைடு டிஸும் டின்னரும் வாங்கிட்டு வந்திடு. சட்டுபுட்டுன்னு நாலு ரவுண்டு அந்நாக்கு
விட்டுட்டு பைக்குல ஊர் சுத்தப் போவோம். மொத்த சென்னையே வெளிலதான் இருக்கும்.
மவுண்ட் ரோடு, மெரினா பெசன்ட் நகர் எல்லாம் ஒரே ஜே ஜே ன்னு
இருக்கும்."
"பைக்லயா? பிரச்சனை ஒன்னும் வந்துடாதே?" என்று
சந்தேகமாகக் கேட்டேன்.
"பிரச்சனையா? டேய்.. என்னைப் பத்தி என்ன நினைச்சுட்டு
இருக்க? ஒக்காளி பிரச்சனை பன்ன போறதே நான்தான் டா."
என்று பெருமிதம் பேசினான் சூர்யா.
"இப்பவே உன் அலப்பறை தங்குல" என்று சிரித்தேன்.
"சரக்கு ஏத்துனமா ஊரைச் சுத்துனமா நாலு கைகலப்பு பண்ணுனமா வீட்டுக்கு வந்து
பொட்டிய கவுத்துணுமா அடுத்தநாள் எந்திரிச்சு ஜோலிய பாக்க போனமான்னு இருக்கணும்.
எல்லாம் கன் மாதிரி நடக்கணும் பாத்துக்க. இதுல ஏதாவது பங்கம் வந்துது.. அப்புறம்
அமெரிக்கால நடந்த ஆராய்ச்சி நியாபகம் இருக்குல்ல.."
"சரி வாறேன், நீ சரக்க ஓபன் பண்ணி வையீ."
என்றேன்.
"சரி வரும்போது உன் ஆஃபீஸ்ல இருக்கவளை எவளையாச்சும் கூட்டிகிட்டு வாடா. ஒன்
அவருல திருப்பி அனுப்பீரலாம்." என்று சூர்யா சிரித்தான்.
"அடைசீ நாயே.." என்று விட்டு துண்டித்தேன்.
கைப்பேசியைத்
துண்டித்தவுடன் எண்ண வாசலில் காத்திருந்த ஸ்திரீக்கள் தத்தம் நாய்களுடன் வந்து
வேலையை ஆரம்பித்தார்கள். இப்படி எத்தனையோ
எண்ண அலைச்சல்களும் தொந்தரவுகளும் என்
நியாபக அடுக்கில் அமர்ந்து இருக்கின்றன. அதது அதனதன் தூண்டு விசையை
சந்திக்கும்போது இப்படி வெளியே வந்து ஆடும். அவற்றுள் இன்னுமொன்று
சேர்ந்துகொண்டது. இனி ஒன்றும் செய்ய இயலாது. சிறிது நாட்கள் உச்ச கதியில் நடந்தேறி
பின்பு சலித்து பின்னால் பின்னால் சென்று மனதிற்குள் புதைந்து கொள்ளும். அப்புறம்
வேண்டிய சமயத்தில் மட்டும் வெளியே வரும். நான் மணிக்கட்டோடு சேர்த்து ஒருமுறை
கைகளை நன்கு உதறிக்கொண்டேன்.
அன்றிரவு
சூர்யாவைப் பார்க்க செல்லலாம் என்றும் வேண்டாம் என்றும் மாறி மாறி தோன்றியது. அவனை
விட்டு விலகி இருப்பதே நல்லது என்று முடிவாகும்போது கைபேசி மீண்டும் அடித்தது.
தம்பி அழைத்துக்கொண்டிருந்தான். எரிச்சலும் சங்கடமுமாக இருந்தது. கைபேசி மீண்டும்
இரண்டு முறை அடித்து ஓய்ந்தது. உளம் சோர்வடைந்து. ஏதேதோ எண்ணங்கள் சுருள் சுருளாக
வந்து என்னை ஆக்கிரமித்தது. இனி ஒரே விடுதலை சூர்யாவைப் பார்க்கச் செல்வது
மட்டும்தான்.
[3]
சூர்யாவின்
வீட்டின் முன் வந்து நின்றவுடன் எனக்கு கிளர்ச்சி கிளம்பியது. கதவைத்
திறந்துகொண்டு வந்த சூர்யா ஒரு பெரிய விஸ்க்கி பாட்டிலை முகரத்திற்கு நேராக வைத்து
ஆட்டினான். இருவர் முகத்திலும் பூரிப்பு.
"எந்த ஊர்
சரக்குடா..?"
"எல்லாம்
வெளிநாடு."
"சரி சரி
வா. சீக்கிரம் சட்டுபுட்டுன்னு ஆரம்பிப்போம். பத்து மணிக்கெல்லாம் ஊத்தி
முடிச்சுட்டு கிளம்புனாத்தான். பன்னெண்டு மணிக்கு ஏதாவது பீச்சுல இருக்க முடியும்.
பார்க்கிங் வேற எங்கயும் கிடைக்காது.
நாங்கள்
இருவரும் மதுவில் திளைத்தோம். புர உலக பிடுங்கல்கள் ஏதும் என்னைத் தொந்தரவு
செய்யவில்லை. என் மன இறுக்கம் தளர்ந்திருந்தது. மறுமுனையில் சூர்யா போதையில்
ஒளிவீசிக்கொண்டிருந்தான். அந்த ஒளி என் மீதும் விழுந்து என்னை
நிரப்பிக்கொண்டிருந்தது. அவன் உடல் மொழி மற்றுமோர் சாகசத்திற்கு தயாராக இருந்தது.
இத்தனை நாட்கள் அவனை தவிர்த்து வந்த எனக்கு இன்று அவன் பிடித்தமானவனாகத்
தெரிந்தான்.
சூர்யா, " சரி..வா...
வா... சீக்கிரம்... நேரம் ஆச்சு. ஊர் சுத்தப் போலாம். என்றுவிட்டு சமையலறை போய் ஏதோ
பொட்டலம் எடுத்து பாக்கெட்டில் போட்டுக்கொண்டு வெளியே சென்று பைக்கில் அமர்ந்தான்.
நான், "டேய், வீட்டை
பூட்டனும்." என்றான்.
"அதுக்கெடக்கு
வாடா. திஸ் ஐஸ் நியூ இயர்." என்று விட்டு பைக்கை கிளப்பி முன் சக்கரத்தை
அந்தரத்தில் விட்டு எடுத்தான். நான் பைக்கில் உட்கார்ந்துதான் மாயம். அது
மின்னலுக்க சவால் விடும்படி கடற்கரை நோக்கிப் பறந்தது.
[4]
கடற்கரை
ஜே ஜே என்று இருந்தது. லட்சம் பேராவது இருந்திருப்பார்கள். அனைவரும் போதை ஆண்கள்.
கடற்கரையின் ஒரு ஓரத்தில் பாட்டுச் சத்தம், மறு
ஓரத்தில் மேடை நடனம்,
வேறொரு பக்கம் இலவச குடி,
பிறிதொரு பக்கம் வெற்றுடல் ஆட்டம் என்று ஆலோலமாய் இருக்க எங்கோ ஒரு மூலையில் விழிபிதுங்கி
சில போலீசார் கம்மென்று நின்றிருந்தனர்.
கெக்கலிப்புடன்
அந்த பெரும் கடலை நோக்கி சூர்யா முன்னாள் ஓடினான். நானும் கத்திக்கொண்டே பின்
தொடர்ந்தேன். இருவரும் அந்த கலியாட்ட பெருங்கடலில் உள் நுழைந்தோம்.
நடனம்
ஆடிய இடத்தில் கண்டபடி கை கால் அசைத்து குதித்தோம். பாட்டுப் பாடும் இடத்தில்
கத்திக் கூச்சல் போட்டோம். யாரோ ஒருவன் சட்டையை கிளைத்துக்கொண்டு கத்தினான்.
சூர்யா அவன் சட்டையை மேலும் கிழித்து கத்தினான். இன்னொருவன் தலைகீழாய் நின்றான், அவனை
கால்களைப் பிடித்து சுழற்றி வீசியெறிந்தான். விழுந்தவன் முதற்கொண்டு அனைவரும்
கொண்டாடினோம். இன்னொருவன் கூட்டத்தின் மேல் தண்ணீர் பம்ப் வைத்து அடித்தான். அதை
பிடிங்கி அவனை சூர்யா துவம்சம் செய்ய கும்பல் அவனுடன் சேர்ந்து கொண்டது. நானும்
முடிந்தவரை சூர்யாவிற்கு ஈடுகொடுத்தேன்.
இருவரும்
குதூகலிக்கும் கூட்டத்திற்குள் வந்து நின்று முழங்கால்களில் கைகளை ஊன்றி மூச்சு
வாங்கி ஒருவரை ஒருவர் பார்த்து
சிரித்தோம். சூர்யா ஏதோ கேட்க வந்ததை ஊகித்து "செம
என்ஜாய்மென்ட்.." என்று நான் சொல்லி சந்தோஷப்பட்டேன்.
அப்போது
தான் நாங்கள் இருவரும் அந்த காட்சியை தூரத்திலிருந்து பார்த்தோம்.
அலையலையாய்
இருந்த ஆண்கள் கூட்டத்திற்கு நடுவே ஒரு இளம் பெண் காரின் மீது ஏறி நின்று
பாட்டுக்குத் தகுந்தவாறு நடனமாடிக் கொண்டிருந்தாள். காந்தத்தைப் பார்த்து திரும்பி
நிற்கும் இரும்புத் துகள்கள் போல ஆண் கூட்டம் அவளை மட்டும் நோக்கி நின்றது.
சூர்யா, "கோழி
சிகிடுச்சு.. வாடா.." என்று என்னைப் பார்க்காமல் கூட கூட்டத்திப் பிளந்து
அவள் திசை நோக்கி ஓடினான். நான் கயிற்றில் கட்டி இழுபட்டு கன்றுக்குட்டி போல
துள்ளிக்குதித்து அவன் பின்னால் ஓடினேன். பிராந்தியின் நெடியும் வியர்வை நெடியும்
அந்த கடைக்கரை சாலை முழுதும் வீசி அனைவரையும் வெறிபிடிக்க வைத்த்திருந்தது.
மொய்த்து
நிற்கும் கூட்டத்தை ஆன பலம்கொண்டு விளக்கி சூர்யா அந்தக் காரின் பக்கவாட்டில்
வந்து நின்றான். அவள் கணுக்கால் கைக்கெட்டும் தூரத்தில். சூர்யா என்னைப் பார்த்து
"எப்படி?" என்று ஜாடை
காட்டினான். நான்,
"சூப்பர்" என்று சமிங்கை செய்தேன்.
தெருவிளக்கின்
பிரகாச வெளிச்சத்தில் அவள் மின்னிக்கொண்டிருந்தாள். இலகுவான உடை அணிந்திருந்தாள்.
அவளது இளமையின் உச்ச காலத்தில் இருந்தாள்.
அந்த உச்ச காலத்தின் உச்ச கணத்தின் உச்ச சாத்தியத்தின் உச்சியில்
ஆடிக்கொண்டிருந்தாள். கைகளை சுற்றி இடுப்பை சுற்றி வட்டமடித்து நடனமாடினாள்.
காருக்குள் ஏதோ இன்னொரு பெண் பாட்டை மாற்றி மாற்றி போட்டு உள்ளுக்குள்ளே தலையையும்
உடலையும் அசைத்துக் கொண்டிருந்தாள். "குடிச்சிருப்பா போல.." என்று
சூர்யா சொன்னான்.
பாட்டு
நின்ற இடைவேளையில் "இந்த பொண்ணு.. உன் பேர் என்ன?" என்று சூர்யா
கத்தினான். கூட்டம் அமைதியானது. நான் கண்களை விரித்துப் பார்த்தேன். சூர்யா எல்லை
உடைத்திருந்தான். விளிம்பு தாண்டியிருந்தான். அவள், "ஸ்வாதி.."
என்றுவிட்டு அங்கிருந்தே கேட்டாள் , "வாட்ஸ் யுவர் நேம்?"
ஒரு கேட்ட வார்த்தை பதிலாகச் சொன்னான். "வாவ் ஸ்வீட் நேம்.." என்றாள். கூட்டம் சிரித்தது. சூர்யா முகம்
சிறுத்து.
அடுத்த
பாட்டு ஆரம்பித்தது. சூர்யா டக்கென்று அவள் ஆடையைப் பற்றி அவளை கீழே இழுத்தான்.
அந்தக் கனி குரங்குக் கூட்டத்திற்கு நடுவில் விழுந்தது. சூர்யா முதலில் குனிந்து
அவள் மேல் கை வைத்தான். வெறிகொண்ட கூட்டம் குனிந்து அவளை பற்றி மேலே தூக்கி
நாலாபுறமும் இழுத்தது. சூர்யா அவள் இடுப்போடு ஒட்டியிருந்த மெலிதான ஆடையை முழுக்க
உருவி காற்றில் வீசினான். இடுப்புக்கு மேல் உள்ள ஆடையை கூட்டம் பார்த்துக்கொண்டது.
அந்த வெறியாட்டக் கூட்டத்தின் வெறிச் சத்தத்தில் அவள் ஓலம் எங்கோ தூரத்தில்
அலறியது. அதை யார் இனி பொருட்படுத்துவர். அவள் நாலா புறமும் இழுபட கூட்டத்தின் முன் நின்ற சூர்யா அவள் உடல் மேல்
அலைந்து திரிந்தான். என்னை நோக்கித்
திரும்பி நீயும் வாடா என்றான். நான் குனிந்து கூட்டத்திற்குள் வந்து இரண்டு
கைகளையும் உள்ளே நீட்டி கைக்கு கிடைத்த இரண்டையும் கவ்வினேன். இரண்டு
உள்ளங்கைகளையும் நன்கு பதியவிட்டேன். என் கைகளை யார்யாரோ அவர்களுக்கான இடம் கேட்டு
பிறாண்டினார்கள். நான் ஆனமட்டும் அவைகளை விடாமல் பற்றியிருந்தேன். என் கைகள் இழுபட இழுபட அவன் அழுத்திப்
பிடித்திருந்தேன். சூர்யாவின் அதே முகத்தை அதன் கோணல்களை இன்று வெற்றிகரமாக நான்
பிரதி செய்திருந்தேன்.
இருவரையும்
கூட்டத்திற்கு வெளியே தள்ளிவிட்டார்கள் . கூட்டம் தன் பங்கை தான்
நிகழ்த்திக்கொண்டிருக்க நான்
சிரித்துக்கொண்டு "போலாம். போலீஸ் வந்துடும்.” என்றேன்.
சூர்யா, "அதுக்குள்ளயா?
இருடா… இனிமேதான் கச்சேரியை…" என்றவன்
பாக்கெட்டில் இருந்து பொட்டலத்தை
எடுத்துப் பிரித்து உள்ளங்கையில் தேய்த்தான். அது மிளகாய் நெடி அடித்தது.
என்னை நோக்கி கண் அடித்துவிட்டு
கூட்டத்திற்குள் நுழைந்தவனை பீதியுடன் பார்த்துக்கொண்டு நின்றேன்.
[5]
அடுத்த நாள் பின் மதியத்தில் தான்
எழுந்தேன். முந்தய நாள் சம்பங்கள் முழுதும் நினைவிலிருந்து தவறியிருந்தது. மதுவின்
கிரக்கத்திலேயே வெகு நேரம் அமர்ந்திருந்தேன். வயிறு பிரட்டவே கழிவறை சென்று
வந்தேன். பின்பு பசிக்கவே கையில் கிடைத்ததை வாயில் போட்டேன். சென்று படுத்தேன்.
சிறிது நேரம் கழித்து எழுந்தேன். மீண்டும் படுத்தேன். கிரக்கம் குறையக்குறைய
எண்ணமாக மாறாத கணத்த உணர்வு ஒன்று நெஞ்சில் கூடிக்கூடி வந்தது. நெஞ்சின் இறுக்கம்
தாளாமல் எழுந்து அமர்ந்தேன். முழு விழிப்பு தட்டியிருந்தது. மூச்சுக்காற்று
சீரற்று இருந்தது. இரு உள்ளங்கைகளையும் உஷ்ணம் கிளம்ப தேய்த்தது மூடிய கண்களில்
ஒற்றி எடுத்து அவற்றைப் பார்த்தேன். அதில் சட்டென்று அவள் முகம் தோன்றி மறைந்தது. ஒரே
எண்ணக் கீற்றாக முன்தின நிகழ்வுகள் நெஞ்சைக் கவ்விக்கொண்டது.
நெஞ்சின் எடை உடலைப் பிளந்து வெளியே
வந்துவிடும் போல் இருந்தது. உள்ளங்கைகளில் எடை பொதிந்தாற்போல் இருந்தது. எதையோ
இன்னும் பற்றி இருப்பது போலவும். அதில் மிளகாய் நெடி அடித்தது. மணிக்கட்டோடு
சேர்த்து கைகளை உதறி உதறி எடுத்தேன். அதில் பொதிந்திருந்த எடையை என்னால்
உதறவே முடியவில்லை. தலையைப் பிடித்துக்கொண்டேன். வீட்டிற்குள்ளேயே
மேலும் கீழும் நடந்தேன். ஓடிச் சென்று டீவியை போட்டேன். செய்திகளை அலசினேன். நான்
ஊகித்ததுபோலவே நேற்றைய நிகழ்வு அன்றைக்கான முக்கியச் செய்தியாக வந்திருந்தது.
என் நெஞ்சம் அடித்துக்கொண்டது.
"ஒரு பெண்ணுக்கு இது நடந்துவிட்டது. ஒரு உயிருக்கு இது நடந்துவிட்டது. அதற்கு
காரணம் நான். நான்.... நான்... அதன் பழி என்மீது. அதற்கு நான் தான் பொறுப்பு.
அப்படியானால் தண்டனையும் எனக்குத்தான். தண்டனை... ஐயோ தண்டனை... தண்டனை வலிக்குமா?
வலிக்காத
தண்டனைதான் உண்டா? வலியை தாங்கிக்கொள்ள முடியுமா?
உடல் வழியை
தாங்கிக்கொள்ள முடியும். ஓரளவேனும் முடியும். ஆனால் இது செய்திகளில் வருமே.
அதுவும் என் புகைப்படத்தோடு. எல்லோரும் பார்ப்பார்கள். பார்ப்பவர்கள் முதலில் நம்ப
மறுப்பார்கள், அப்புறம் ஆச்சரியப் படுவார்கள். ஆச்சர்யம் சிறிது நேரத்தில் பழகிப்போகும்.
பழகிய பின்னர் அதை அவர்கள் ரசிப்பார்கள். அந்த ரசனை அவர்களை கற்பனையில் இட்டுச்
செல்லும். கற்பனை மேலும் புனையும். என்னுடைய பழைய தவறுகள் தோண்டி எடுக்கப் படும்.
என் எல்லா தவறுகளுக்கும் நானே பொறுப்பாளி ஆவேன். என்ன மாதிரி உலகம் இது?
இவ்வுலகத்திடம்
இருந்து எதையாவது மறைக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் தேவைப்படும். அது இனி எனக்கு
இல்லாமல் போகும். அப்புறம் எப்படி நான் உயிர் வாழ்வது. அப்படியானால் என் உயிரும்
போகுமா? அம்மா... அம்மாவின் கதி?
தங்கை. ஐயோ தங்கை.
அவள் கல்யாணம்? நான் உயிருடன் இருக்க வேண்டும். எனக்கு என் உயிர்
முக்கியம். என் ரகசியங்கள் முக்கியம். நான் மறைத்து வைத்தவை மறைந்தே இருக்க
வேண்டும். அப்போது தான் நான் நடமாட முடியும். வாழமுடியும்.”
உள்ளங்கைகள் வியர்த்து இருந்தது. அது
மிளகாய் நெடியுடன் சொட்டிக்கொண்டிருந்தது. அதன் பிடிமான உணர்ச்சி இன்னும் தீவிர
கதியில் நடந்து கொண்டிருந்தது. நான் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல்
இருந்தேன். ஆனால் எனக்கு என்ன நேரக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன்.
உயிர் வாழவேண்டும் என்ற இச்சை என்னுள்
தீவிரமாக இருந்தது. வீட்டை விட்டு வெளியே சென்றால் மாட்டிக்கொள்வோம் என்ற பய உணர்வு ஏற்பட்டது.
அவ்வுணர்வை வெல்லும் பொருட்டு நான் வெளியே சென்று வந்தேன். செல்லும் இடங்களில்
எல்லாம் அவள் முகம் நிழலாடியது. அவள் ஜாடை கொண்ட அநேகப் பெண்களை நான் பார்த்தேன்.
திரும்பும் திசையேங்கும் அவள். ஸ்வாதி... ஸ்வாதி.... என்று அவளின் பெயர் எங்கும்
ஒலித்துக்கொண்டே இருந்தது. மனம் அப்பெயரை உச்சாடனம் செய்தது. வியர்த்து ஒழுக விறு
விறுவென்று வீடு வந்து கதைவடைத்து கதறி அழுதேன்.
உச்சகட்ட வலி அனுபவித்தேன். என் மீதே
கழிவிரக்கம் கொண்டேன். வாழ வேண்டும் என்று நினைத்தேன். இவ்வுலகின் 'தான்' என்ற எந்த பதமும் வாழவேண்டும் என்று நினைத்தால் அது கொலை
செய்துதான் தீரவேண்டும் அல்லவா. உயிர் பலி
எடுத்தே ஆகவேண்டும் தானே. நான் வாழ வேண்டுமென்றால் அவள் இறக்க வேண்டும். இவ்வளவு
நடந்த பின்பும் அவள் இப்படி உயிருடன் இருப்பாள்?
அவள் நல்ல பெண்
அவளாகவே இறந்துவிடுவாள். நல்ல குடும்பத்தில் தான் பிறந்திருப்பாள். குடும்பப்
பெயர் காப்பாற்றும் பொறுப்பு அவளிடம் இருக்கும். நெருப்பில் வெந்தோ;
தண்ணீரில்
மூழ்கியோ; குளிரில் குறைந்தோ; கழுத்தறுத்தோ கையறுத்தோ. ஒருவேளை அவள் சாக விரும்பவில்லை
என்றால்? ச்சீ.. என்ன மாதிரி பெண் இவள். அவள் பொருட்டு அவளை நானே
கொலை செய்வேன். நானே செய்வேன். நானே... நானே...
தொண்டை விக்கியது. கன்னங்கள்
இருகிக்கொண்டது. தாடை வலித்தது. கண்களில் நீர் வலிந்து வலிந்து மேலாடையை
நனைத்துக்கொண்டே இருந்தது. தரையில் விழுந்து குத்திக் குத்தி அழுதேன். நான்
சாகிறேன் நான் சாகிறேன். நானே சாகிறேன்..
என் தலை இரவு முழுது கவிழ்ந்து
இருந்தது. கவிழ்ந்திருந்த தலை மறுநாளும் அப்படியே தன்னை பழகிக்கொண்டது. இனி வீட்டில் இருந்தால் தற்கொலை
செய்துகொள்வோம் என்றெண்ணி தலை கவிழ்ந்தவாறே அலுவலகம் சென்றேன். என் உடல் இடைவிடாது
மெல்லிய நடுக்கத்துடன் இருப்பதை பீதியுடன் உணர்ந்தே இருந்தேன்.
ஒவ்வொரு பெண் எதிரில் வரும்தோறும்
ஸ்வாதி ஸ்வாதி என்றே மனம் எதிரொலித்தது. "அவள் இங்கு வருவாளோ?
வந்து என் முன்
நிர்ப்பாளோ? அவள் சுட்டுவிரல் என்னை நோக்கி காண்பிக்குமோ?
இவன்தான் அவன்
என்று உலகிற்கு அடையாளம் செய்வாளோ? என் மறுமொழி என்ன? அதிர்ச்சியாகவும் பதட்டமாகவும் நடப்பவையை வேடிக்கைப் பார்ப்பதைத் தவிர. நான் மறுக்க
வேண்டும்,
ஆதாரம் கேட்க வேண்டும். அவள் ஆதாரம் கொடுக்கவியலாது. நான் அக்கணமே
நிரபாராதியாவேன்." என் மனம் ஒப்புக்கொண்டும் நிரூபித்துக்கொண்டும்
அலையடைத்தது.
"அவள் இங்குதான் இருக்கிறாள். இங்கு எங்கோ இருந்து என்னை
கவனித்துக் கொண்டிருக்கிறாள். அவள் இருப்பை உள்ளும் புறமும் நான்
உணர்கிறேன்." அலுவலகம் நோக்கி நடந்து செல்லச் செல்ல இப்படி மடைதிறந்த பாயும்
இந்த எண்ண அலைகளை என்னால் நிறுத்தவே முடியவில்லை. அலுவலகம் நெருங்கி வரவர நான்
வேகமெடுத்து நடந்தேன். நடை வேகம் போதவில்லை என்று ஓட்டம் எடுத்தேன். என் அலுவலக
இருக்கையே தற்போது பாதுகாப்பான இடம். அங்கே ஒளிந்து கொள்ளலாம். அவள் இனி எப்படி
கண்டுபிடிப்பாள்? என் உலகில் நானும் அவளும் மட்டுமே இருந்தோம்.
அலுவலகம் நுழைந்தேன். படி தடுமாறியது;
கைப்பிடி
வழுக்கியது; கதவு பிடிமானம் இல்லாமல் இடறியது. தட்டுத்தடுமாறி மேஜையைப்
பிடித்து இருக்கையை நகர்த்தி அதில் என்னை வீசி எறிந்தேன். மூச்சு மேலும் கீழுமாக
ராட்டினம் சுற்றியது. தலை கிர்ரென்று இறுகி இறுகி தளர்ந்தது. உடல் வியர்வையால்
நனைந்திருந்தது.
என்னுடைய மனம் அடியாழத்தில் முடிவிலி
வரை நீண்டு கிடந்தது. இனி எந்த சாகசத்தினாலும் அதை மீட்டெடுக்க முடியாது என்று
உணர்ந்த உடனேயே என்னை ஒரு கண் கவனித்துக்கொண்டிருப்பதை உணர்ந்தேன். அது என்னைப்
பார்க்கிறது. பார்ப்பதால் என்னை அழக்கிறது. அதன் தீவிரம் கூடிக்கூடி வருகிறது.
என்னை துளைத்து ஊடுருவி செல்கிறது. அதனிடம் இருந்து நான் எதையும் மறைக்க முடியாது.
கைப்பேசி அலறியது. சட்டென்று என்
உள்ளங்கையில் அதே கனத்தை உணர்ந்தேன். மணிக்கட்டோடு சேர்த்து உதறினேன். அருகாமையில்
மிளகாய் நெடி வீசியது. மனிதக்
குழந்தையின் அழுகுரல் எங்கோ ஒலித்தது. என் மனம் மேலும்கீழும் தாண்டவமாடியது.
கைப்பேசி அலறியது. மனதில் பள்ளம் உருவாகியது. கைப்பேசி அலறியது. கைகள் கணம்
கூடியது. பள்ளம் உள்ளே இழுத்தது. கைப்பேசி நின்று மீண்டும் ஒலித்தது. பள்ளம் விசை
கொண்டது. உள்ளங்கைகளின் பிடிப்பு எரிந்தது.
பள்ளம் நிறைய வேண்டும். உள்ளங்கை
சுமையை இறக்கி வைக்க வேண்டும். கைபேசிக்கு பதில் சொல்ல வேண்டும்.
அப்போது ஸ்வாதி என் முன் வந்து நின்றாள்.
[6]
வந்தவள் என்னை மேலும்கீழும்
பார்த்துவிட்டு "ரிப்போர்ட் இன்னும் வரவில்லை. சீக்கிரம் வேண்டும்.."
என்றுவிட்டு என் பதிலை எதிர்பார்க்காமல் திரும்பிச் சென்றாள். பக்கத்து
இருக்கையில் இருந்த இன்னொரு ஸ்வாதி
"காஃபீ?" என்று கேட்டாள். அப்போது கையில் துடைப்பத்துடன் வேறொரு
ஸ்வாதி,
சார் ஒரு நிமிஷம்
தள்ளிக்கோங்க மேஜையை சுத்தம் செஞ்சுட்டுப் போறேன்" என்று அருகில் வந்து
நின்றாள்.
உள்ளங்கைகளை விசிறிபோல் வீசிக்கொண்டு
நிமிர்ந்து அவர்களைத் தாண்டிப் பார்த்தேன். அலுவலகத்தில் உள்ள அனைத்து ஸ்வாதிக்களும்
என்னை நோக்கி நின்றிருந்தனர். ஒரு ஓரத்தில் அம்மா ஸ்வாதியும் தங்கை ஸ்வாதியும் தத்தம் நாய்களுடன் நின்றிருந்தனர். மறு ஓரத்தில்
ஒரு ஸ்வாதி அம்மிக்கல்லை முதுகில் சுமந்து நின்றாள். வேறொரு இடத்தில் காற்றுப் போன
ஆம்புலன்ஸ் வண்டியில் ஒரு ஸ்வாதி உயிர் நீத்துக்கொண்டிருந்தான்.
மனச் சுருள் என்னை இழுத்தது. அதை
ஏதாவது கொண்டு கலைக்க வேண்டும்.. இல்லையேல் என்னையே அதற்கு பலிகொடுக்க வேண்டும்.
கைப்பேசி மீண்டும் ஒலித்தது.
சூர்யா…
தொடரும்
நடிப்பு
‘நாம
ஒன்னும் ஜட்ஜஸுக்காக நாடகம் நடத்தல. ஆடியன்ஸுக்காக நடத்தறோம். நம்ம நடிப்பப் பார்த்து
மார்க் போடுறதுக்கு ஜட்ஜஸுக்கு என்ன தகுதி இருக்கு? வெற்றி தோல்விய பத்தி கவலப்படாதிங்க.
நமக்கு ஆடியன்ஸோட கைதட்டல்கள் தான் முக்கியம். அதுதான் நமக்கு கிடைக்குற உண்மையான அங்கீகாரம்!’
இந்தப்
பொய்யை முதன்முறையாக கேட்டு இரண்டு வருடங்கள் ஆறு மாதங்கள் முப்பத்திரண்டு நாட்கள்
ஆகியிருந்தன. இது பொய்யென்று எனக்குத் தெரிந்து பத்து மாதங்கள் பன்னிரண்டு நாட்கள்
ஆகியிருந்தன.
இந்தப்
பொய் மட்டுமல்ல. அவர்கள் சொல்வதில் நூற்றில் தொண்ணூறு சதவிகிதம் பொய் மட்டுமே என்பது
எனக்கு கொஞ்சம் கொஞ்சமாகத் தான் தெரிய வந்தது. எதற்காக இவ்வளவு பொய் சொல்கிறார்கள்?
போட்டியில் தோற்றுவிட்டால், அடுத்தமுறை பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டால்
போகிறது. எதற்காக நாடகம் முடிந்த பின்னரும் நடிக்க வேண்டும்?
”அப்ப
தான் டா ஜூனியர்ஸ் நம்ம டீம் விட்டுப் போக மாட்டாங்க!” என்று என் சீனியர் ப்ரீத்தம்
எனக்கு விளக்கம் கொடுத்தான். எனக்கு அது போதவில்லை. தோல்வி தரும் கவலையை மறைக்க கூறப்படும்
ஆறுதல் அது என்று தோன்றியது. அவை வெறும் சொற்களே. கேட்டுக் கேட்டுச் சலித்துவிட்டது.
நான்
சொல்வதில் நியாயம் இருக்கிறது. ஏனென்றால், நாங்கள் போட்டியில் வெற்றி பெற்றால் இவர்கள்
இதை ஒருபோதும் சொல்ல மாட்டார்கள். அடுத்த போட்டி வரும்வரை வெற்றியைக் கொண்டாடிக் கொண்டே
இருப்பார்கள்.
யார்
நாங்கள்? ‘ட்ரீம் பிக் தியேட்டர் புரொடக்ஷன்ஸ்’ அணியின் உறுப்பினர்கள். ‘ப்ரொபஸனல் ஸ்டடீஸ்’ டிபார்ட்மெண்ட் மாணவர்கள். ஒவ்வொரு
டிபார்ட்மெண்ட்டிற்கும் ஒவ்வொரு தியேட்டர் அணி இருக்கின்றது. ஒவ்வொரு ஆண்டிலும் நடக்கும்
‘இண்ட்ரா காலேஜ்’ போட்டியில் அனைத்து டிபார்ட்மெண்ட் மாணவர்களும் பங்கெடுத்துக் கொள்வார்கள்.
இரண்டு
நாட்கள் தொடர்ந்து நடக்கும் நாடகப் போட்டியில் வெற்றி பெறும் மூன்று தியேட்டர் அணிகளுக்கு
ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டி. போன்ற இன்ஸ்டிட்டியூட்களில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு
கிடைக்கும். ஆதலால், ‘இண்ட்ரா காலேஜ்’ போட்டியில் முதல் மூன்று இடங்களுக்கு வர அனைத்து
தியேட்டர் அணிகளும் கடுமையாக உழைப்பார்கள்.
”வெல்கம்
டூ ட்ரீம் பிக் தியேட்டர் புரொடக்ஷன்ஸ். வி ஆர் நாட் அ டீம். வி வொர்க் ஹியர் ஆஸ் அ
ஃபேமிலி” என்று சொல்லி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தியேட்டர் பற்றி அறிமுகம் செய்து
வைப்பார்கள்.
இதில்
மட்டுமே உண்மை இருப்பதாக எனக்கு அடிக்கடி தோன்றும். ஏனென்றால் இவர்கள் சொல்லும் ஃபேமிலியில்
மொத்தம் நாற்பது பேர். அதில் முப்பது பேர்களின் பெயர்கள் ‘திவாரி, பாண்டே, கபூர், சிங்’
இதில் ஏதேனும் ஒன்றைக் கொண்டே முடியும்.
மீதமுள்ள
பத்து பேர்கள் டிபார்ட்மெண்ட்டின் பிரதிநிதிகள் மட்டுமல்ல. தென்னிந்தியாவிற்கே அவர்கள்
தான் பிரிதிநிதிகள். நான் அந்தப் பத்தில் ஒருவன். என் பெயர் கலைச்செல்வன்.
இயக்குனர்,
நடிகர்கள், நாட்டியக்காரர்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள், கதை வசனம் எழுதுபவர்கள்,
ஆடை வடிவமைப்பாளர்கள், காட்சிக்கு தேவையான ப்ராப்பர்ட்டிஸ் டிசைன் செய்பவர்கள் மற்றும்
லைட்ஸ் கையாளுபவர்கள் என எங்கள் அணியில் மொத்தம் நாற்பது பேர். ஒப்பனைக்கு என்று யாரையும்
தனியாக வைத்துக் கொள்வதில்லை.
இந்த
நாற்பது பேர்களில் மூன்று ஆண்டு மாணவர்களும் அடக்கம்.
மூன்றாம்
ஆண்டு மாணவர்களே சூப்பர் சீனியர்ஸ். அவர்களே அணிக்குத் தலைமை தாங்குபவர்கள். அவர்கள்
பேச்சுக்கு மறு பேச்சு கிடையாது.
இரண்டாம்
ஆண்டு மாணவர்களே சீனியர்ஸ். மூன்றாம் ஆண்டில் அணிக்கு தலைமை ஏற்க உள்ளவர்களாதலால் பொறுப்புடன்
நடந்து கொள்பவர்கள்.
முதலாம்
ஆண்டு பயிலும் மாணவர்களே ஜூனியர்ஸ். பொய்களை நம்பும் அப்பாவிகள் என்றும் சொல்லலாம்.
ஃபைனல் இயர் பேட்ச் பாஸாகி சென்றுவிட்டால் அணியில் ஏற்படும் காலி இடங்களை நிரப்புவது
இவர்களே.
‘திறமை
உள்ளவர்களுக்கு மட்டுமே டீமில் இடம் உண்டு’ என்று அவர்களிடம் சட்டம் பேசுவார்கள். நாடகத்தில்
விருப்பம் உள்ள எல்லோரையும் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். ஆடிஷன்ஸ் வைத்தே தேர்வு
செய்வார்கள். எப்பேர்பட்ட நுழைவுத்தேர்வுகளிலும் கூட பாஸ் ஆகிவிடலாம். ஆனால், இதில்
தேர்வாவது சற்றுக் கடினமானது. யாரை எப்படித் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதை அவர்கள்
இடத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும்.
ஏனெனில்,
திறமை உள்ளவர்களும் தேர்வு ஆவார்கள். திறமை இல்லாதவர்களும் தேர்வு ஆவார்கள். தேர்வானவர்களுள்
நடிகர்கள் படும் பாட்டை எழுதித் தீர்க்க முடியாது.
அவர்களின்
முதல் அரங்கேற்றம் ஒருபோதும் அரங்கேற்றமாக இருக்காது. வேண்டுமென்றால் அதை ‘அரங்கிறக்கம்’
என்று சொல்லிக் கொள்ளலாம். மேடையின் ஓரத்தில் நிற்கும் வாய்ப்பையே முதலில் பெறுவார்கள்.
சினிமாவில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் இருப்பார்களே! அவர்கள் நிலைமை தான் இந்த ஜூனியர்ஸ்களுக்கும்.
மேடையின்
வெளிச்சமற்ற இடத்தில் நிற்கும் அவர்களுக்கு நாடகத்தில் ஒரு வரி வசனம் கிடைப்பதே அபூர்வம்.
உண்மையில் அதற்கு அவர்கள் தவம் இருந்தே ஆக வேண்டும்.
ஒரு
வருட அனுபவத்துடன் அவர்கள் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கையில் சிறிது வெளிச்சம்
அவர்கள் மீது படும். கதாநாயகன் பாத்திரம் கிடைக்காது தான். ஆனாலும், நாடகத்தில் வரும்
சில முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைக்கும்.
வெளிச்சமற்ற
இடத்தில் நின்றவன் மேல் சிறிது மங்கலான வெளிச்சம் படும். அதைப் பயன்படுத்திக் கொள்வது
அவனவன் திறமையைப் பொறுத்தே. இப்படியே இரண்டு ஆண்டு காலம் தவம் முடிவடைந்ததும் முதன்முறையாக
கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு வரும். தவத்திற்கு கிடைக்கும் பலன் அதுதான்.
மேடையின்
முழு வெளிச்சமும் அவன் மீது படும். மேடையை ஆளும் தருணம் அது. உண்மையான நடிகன் அத்தருணத்தில்
தன் முழு நடிப்புத் திறமையையும் வெளிக்காட்டி பாராட்டுப் பெற வேண்டும் என்று நினைக்க
மாட்டான். தன்னையும் மறந்து கதாப்பாத்திரத்தில் லயித்துக் கிடப்பவனே உண்மையான நடிகன்.
ஒத்திகையில்
மட்டுமல்ல. ஒப்பனை செய்துகொள்ளும் போதும் அவன் நடித்துப் பார்த்துக் கொள்கிறான். மூன்றாம்
ஆண்டில் தான் நடிக்கும் நாடகத்தில் கதாநாயகப் பாத்திரம் கிடைப்பதே அவனுக்கு கிடைக்கும்
முதல் அங்கீகாரம். பார்வையாளர்களின் கைதட்டல்களும் விருதுகளும் அவனுக்கு இரண்டாம் பட்சமே.
‘உன்ன
தவிர அந்த கேரக்டர்ல நடிக்க யாருக்குமே தகுதி இல்ல!’ என்று அவனைச் சுற்றியுள்ள சக கலைஞர்கள்
அவனிடம் சொல்ல வேண்டும். அதுதான் அவனுக்கு கெத்து. இரண்டு வருடங்கள் அணியில் குப்பைக்
கொட்டியதற்காக யாரும் அதை எளிதில் சொல்லிவிட மாட்டார்கள். உண்மையில் அந்தத் தகுதியை
அவன் பெற்றிருக்க வேண்டும்.
நான்
நடிகனாக இரண்டு ஆண்டுகள் தவமிருந்து மூன்றாம் ஆண்டு அடியெடுத்து வைத்தேன். சீனியர்ஸ்
அணியின் பொறுப்பை எங்கள் கைகளில் ஒப்படைத்து விட்டு விடைபெற்றுச் சென்றார்கள். மொத்தம்
பத்து பேர்கள் அணியின் சூப்பர் சீனியர்களாக இருந்தோம்.
பத்து
பேர்களுக்கும் சம உரிமை வழங்கப்பட்டிருந்தது. எந்தவொரு முடிவையும் தனிப்பட்ட நபரின்
நலனுக்காக எடுக்கக் கூடாது என்றும் அணியின் நலனுக்காகவே அது இருக்க வேண்டும் என்றும்
எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆதலால், சிக்கலான சமயங்களில் முடிவெடுக்கும்
முன் அணியில் உள்ள அத்தனை பேருடனும் கலந்து ஆலோசித்த பின்னரே முடிவெடுப்பது அவசியமாயிற்று.
இதில்
ஒரு பிரச்சனை இருந்ததை நான் மெல்ல மெல்ல தான் உணர்ந்தேன். எங்கள் அணியில் வட இந்தியர்கள்
அதிகம் இருந்ததால் ஒவ்வொரு முறையும் எடுக்கும் முடிவுகள் யாவுமே அவர்களுக்குச் சாதகமாகமே
அமைந்தது.
வெளிப்பார்வைக்கு
ஜனநாயக முறைப்படி தான் எல்லாம் நடக்கிறது என்று தோன்றும். ஆனால், நெற்றிக்கண்ணால் பார்த்தால்
தான் எல்லாமே திட்டமிட்ட நாடகம் என்ற உண்மை நமக்குப் புரியும். பெரும்பான்மையினர் தங்களுக்குள்
கேங் சேர்த்துக் கொண்டு சிறுபான்மையினரை ஏமாற்றிக் கொண்டிருந்தார்கள்.
கதாப்பாத்திர
தேர்வில் தொடங்கி கைதட்டல் பெற்றுக் கொடுக்கும் வரை அனைத்திலும் அவர்கள் அரசியல் தான்.
நடுவர்கள்
நாடகங்களை மதிப்பீடு செய்வதில் ஒரு முறையைப் பின்பற்றினார்கள். தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்
ரியலிட்டி ஷோக்களில் வரும் நடுவர்களைப் போல விருப்பமான மதிப்பெண்களை அள்ளிக் கொடுக்கும்
முறை இங்கு இல்லை.
நடிப்பு,
இசை, நடனம், இயக்கம், ஒளி, ஆடை வடிவமைப்பு, ஒப்பனை, கதை மற்றும் கைதட்டல் ஆகிய அனைத்தையும்
கொண்டே ஒரு நாடகத்தை மதிப்பீடு செய்வார்கள். கைதட்டல்களுக்கு எப்போதும் முழு மதிப்பெண்
கிடைத்துவிடும். காரணம் டிபார்ட்மெண்ட்டில் உள்ள அத்தனை மாணவர்களும் நாடகம் பார்க்க
வருவார்கள். தங்கள் டிபார்ட்மெண்ட் மாணவர்கள் நடிக்கும் போது மட்டுமே அவர்கள் கைதட்டுவார்கள்.
எவ்வளவு சுமாராக நாடகம் இருந்தாலும், ‘ஆஹா, ஓஹோ!’ என்பார்கள்.
இதுவே
மற்ற தியேட்டர் அணி என்றால் கைகளை இறுகக் கட்டிக் கொள்வார்கள். இடையிடையே கமெண்ட் அடிப்பார்கள்.
நாடகம் பிரமாதமாகவே இருந்தாலும் இவர்கள் அதை அலட்சியம் செய்வார்கள். எனவே, கைதட்டல்
பெறுவதில் எங்களுக்குப் பஞ்சம் இருந்தது இல்லை.
கதை
சொந்தக் கதையாக இருந்தால் மட்டுமே கதைக்கான பிரிவில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். புத்தகத்தைத்
தழுவியோ சினிமாவைத் தழுவியோ நாடகம் போட்டால் நல்ல மதிப்பெண் கிடைக்காது. சிலப்பதிகாரத்தையே
அரங்கேற்றினால் கூட, சிங்கிள் மார்க் வருவது கடினம்.
இப்படியாக
மூன்று நடுவர்களின் தனித்தனி மதிப்பெண்களைக் கூட்டல் செய்து முடித்த பிறகே வெற்றியாளர்களை
அறிவிப்பார்கள்.
நடிப்பில்
மதிப்பெண் பெறுவது சுலபமானது இல்லை. தேர்ந்த நடிப்பை நடிகர்கள் ஒவ்வொருவரும் வெளிப்படுத்தியே
ஆக வேண்டும்.
கதையை
முடிவு செய்த பிறகு ஒவ்வொரு கதாப்பாத்திரத்தைப் பற்றியும் இயக்குனர் விவரிப்பார். அந்த
விவரணையிலேயே நடிகர்கள் தங்களுக்கு ஏற்ற கதாப்பாத்திரம் எதுவென்று ஒருவாறு ஊகித்து
அறிந்து கொள்வார்கள். அந்தக் கதாப்பாத்திரத்தின் உடல்மொழியை கற்பனை செய்து கொண்டு ஆடிஷன்ஸில்
நடித்துக் காட்டுவார்கள். யார் சிறப்பாக நடிக்கின்றார்களோ அவர்களுக்கே அந்தக் கதாப்பாத்திரம்
கொடுக்கப் படும்.
ஆனால்,
எப்போதும் கதாநாயகன் வேடம் சூப்பர் சீனியருக்கே கிடைக்கும். திறமையும் அனுபவமும் ஒரு
பக்கம். சூப்பர் சீனியர் என்கிற கர்வம் மறுபக்கம். ஆணவமும் கர்வமும் அவன் கண்களை மறைத்துக்
கொள்வதால், தன்னைவிட சிறப்பாக நடிக்கும் நடிகர்களை அவன் அடையாளம் கண்டு கொள்ளத் தவறிவிடுவான்.
நானும்
ஒரு நாள் கதாநாயகப் பாத்திரம் ஏற்று மேடையில் நடிப்பேன் என்று கனவு கண்டு கொண்டிருந்தேன்.
என் திறமை மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. கதாநாயக வேடத்தில் நடிக்க என்னைக் காட்டிலும்
வேறு யாருக்கும் தகுதி கிடையாது என்று நான் ஆழமாக நம்பினேன்.
என்
சீனியர் ப்ரீத்தமின் சொற்கள் அந்நம்பிக்கையை மென்மேலும் வளர்த்தது. இரண்டாம் ஆண்டு
படிக்கும் போது ‘இண்ட்ரா காலேஜ்’ போட்டியில் கலந்து கொண்டு நடித்தேன். அப்போது ப்ரீத்தம்
தான் கதாநாயகனாக நடித்தான். நான் இரண்டாம் நிலை நாயகனாக நடித்தேன்.
எங்கள்
நாடகத்தில் ப்ரோலாக் எபிலாக் தவிர்த்து மொத்தம் ஐந்து காட்சிகள் இருந்தன. ப்ரோலாக்கில்
மேடையில் நான் ஒருவன் மட்டுமே நடிப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருந்தது. வசனம் ஏதும்
கிடையாது. உணர்ச்சிகளை மட்டும் வெளிப்படுத்தும் காட்சி அது. பின்னணியில் ஒருவர் கதைக்களத்தையும்
என் கதாப்பாத்திரத்தைப் பற்றியும் விவரிப்பார். அதற்குத் தகுந்தாற் போல நான் உணர்ச்சிகளை
வெளிப்படுத்த வேண்டும்.
நான்
வெளிப்படுத்திய உணர்ச்சிகள் யாவும் பார்வையாளர்களை நாடகத்திற்குள் ஈர்த்து விட்டது.
கேர்ல் ஃப்ரண்ட்டுகளிடம் மும்முரமாக பேசிக் கொண்டிருந்தவர்கள் கூட நாடகத்தில் கவனம்
செலுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.
ப்ரோலாக்
முடிந்ததும் முதல் காட்சி துவங்கியது. ப்ரீத்தம் முதன் முறையாக கதாநாயகனாய் நடித்தான்.
கம்பீரமான நடிப்பு அது.
வசனம்
பேசுவது மட்டுமே நடிப்பாகாது. நடிகனின் நடையையும் கை அசைவையும் வைத்தே அவன் நல்ல நடிகனா
இல்லையா என்பதைச் சொல்லிவிடலாம்.
போரில்
புறமுதுகு காட்டி ஓடுபவன் வீரன் அல்ல என்பார்கள். அது போலவே நடிகன் மேடையை விட்டு வெளியேறும்
வரையில் ஒருபோதும் தன் முதுகுப்புறத்தை பார்வையாளர்களுக்கு காட்டிவிடக் கூடாது.
வசன
உச்சரிப்பில் மூச்சை உள் இழுப்பதும் வெளியிடுவதும் மிக முக்கியமானது. பேசும் வசனமானது
பால்கனியின் கடைசி வரிசையில் உட்கார்ந்திருப்பவர்களின் காதுகள் வரை எட்ட வேண்டும்.
எடுத்த எடுப்பிலேயே இவை யாவும் கைகூடி விடாது. பொறுமையும், கவனமும் வேண்டும். ஜூனியர்ஸ்களுக்கு
கதாநாயகப் பாத்திரம் கிடைக்காததற்கு இதுவும் ஒரு காரணம்.
ப்ரீத்தமின்
நடிப்பில் ஒரு குறையும் தென்படவில்லை. அவனுடைய தேர்ந்த நடிப்பு எல்லோரையும் பிரமிக்க
வைத்தது. அவன் உச்சரித்த ஒவ்வொரு சொல்லும் எல்லோரையும் சென்றடைந்தது. அவன் உணர்ச்சிகள்
எல்லாம் பார்வையாளர்களை பாரபட்சமின்றி பாதித்தது.
அவசரமில்லாமல்
நிதானமாக நடித்தான். ஐந்து காட்சிகள் முடிவடைந்தன. சக நடிகர்களின் நடிப்பை முழுவதும்
மறக்கடித்துவிட்டு பார்வையாளர்களைத் தன் பக்கம் ஈர்த்து வைத்துக் கொண்டான்.
இறுதியாக
எபிலாக் காட்சி. நானும் ப்ரீத்தம் மட்டுமே மேடையில் நடிக்கிறோம். எனக்கு இரண்டு பக்க
வசனம் இருந்தது. ப்ரீத்தமிற்கு ஒரு வசனம் கூட கிடையாது. என் சொற்களுக்கு அவன் ரியாக்ட்
செய்வதுடன் நாடகம் முடிவடைகிறது.
நான்
நடிக்கிறேன். இரண்டு மாதங்களாக நன்றாக ஒத்திகை பார்த்திருந்தேன். ப்ரீத்தம் தான் எனக்குப்
பயிர்ச்சி கொடுத்திருந்தான். கதாப்பாத்திரமாகவே நான் உருமாறி நடித்தேன். நான் மட்டுமல்லாது
நாடகம் பார்த்த எல்லோரும் அதை உணர்ந்தார்கள். நாடகம் முடிந்ததும் நடுவர்கள் உட்பட அனைவரும்
எழுந்து கைதட்டினார்கள்.
எங்களில்
யாருக்கு கைதட்டல்கள் கிடைக்கிறது என்று நான் குழம்பினேன். என் நடிப்பிற்கா அல்லது
ப்ரீத்தமின் நடிப்பிற்கா என்று தெரியவில்லை. கைதட்டல் கிடைக்கும் போது இருகரம் கூப்பி
நன்றி தெரிவிப்பது நடிகனின் கடமை. நான் ப்ரீத்தமைப் பார்த்தேன். அவன் நன்றி தெரிவிக்காமல்
வெறுமனே நின்று கொண்டிருந்தான்.
நான்
நன்றி தெரிவித்தால் கைதட்டல்கள் எனக்குத் தான் சொந்தம் என்று அர்த்தமாகி விடும். சீனியர்களின்
வெறுப்பை வேண்டுமென்றே சம்பாரித்துக் கொள்ள நான் விரும்பாததால் அசையாமல் நின்று விட்டேன்.
பின்,
ப்ரீத்தம் என்னைத் தனியாக அழைத்தான். “கலை! பொல்லாதவன் டா நீ! என்னையே தூக்கி சாப்பிட்டுட்டே!”
என்றான்.
”அதெல்லாம்
ஒன்னுமில்ல!” என்றேன் அடக்கத்துடன். ”அடுத்த வருசம் என் இடம் உனக்குத் தான்!” என்று
சொல்லி தட்டிக் கொடுத்துவிட்டுச் சென்றான். அன்று என் நடிப்பைப் பாராட்டிய அனைவரின்
தலைகளிலும் ஏறி நிற்பதைப் போல உணர்ந்தேன்.
நாங்கள்
சில மதிப்பெண் வித்தியாசத்தில் தோற்றுப் போனோம். எங்கள் அணியின் பாணியில் சொல்ல வேண்டுமென்றால்
‘வெற்றியடையவில்லை! தோற்றுப் போகவுமில்லை!’
சூப்பர்
சீனியர்கள்,”வின் ஆர் லூஸ், இட் டஸிண்ட் மேட்டர் ஃபார் அஸ்” என்று ஜூனியர்ஸ் முன் சொல்லிவிட்டு,
எங்களிடம் தனியாக “நீங்க என்ன பண்ணுவிங்களோ தெரியாது! அடுத்த வருசம் நாம ஜெயிச்சே ஆகனும்!”
என்று சொல்லிவிட்டுச் சென்றார்கள்.
வெற்றி
பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் மூன்றாம் ஆண்டில் சூப்பர் சீனியர்ஸ்களாக அடியெடுத்து
வைத்தோம்.
கதைக்
கருவை முடிவு செய்வதில் தொடங்கி எல்லாவற்றையும் நிதானமாகவும் மிகுந்த அக்கறையுடனும்
செய்து வந்தோம். இருந்தும் அவர்கள் அரசியல் இருக்கத்தான் செய்தது. நான் அதைத் தெரிந்தும்
தெரியாதவன் போல் காட்டிக் கொண்டேன். குறைகளைப் பெரிது படுத்தவும் இல்லை, தவறுகளைச்
சுட்டிக் காட்டவும் இல்லை. ஏனெனில், என் கனவு கதாநாயகன் பாத்திரத்தில் நடிப்பது மட்டுமே.
கதாப்பாத்திர
தேர்வுக்கான ஆடிஷன்ஸ் துவங்கியது. நடிகர்கள் எல்லோரும் மூன்று நிமிடங்கள் நடித்துக்
காட்ட வேண்டும். அதிலேயே யார் நன்றாக அந்தந்தப் பாத்திரங்களுக்குப் பொருந்துகிறார்கள்
என்று தெரிந்துவிடும். இயக்குனர் அவர்களைத் தேர்வு செய்வார்.
தேர்வு
செய்த பின், ‘யாருக்காவது இதில் ஆட்சேபனை இருக்கிறதா?’ என்று சம்பிரதாயமாக கேட்பார்.
ஆட்சேபனை இருந்தாலும் ‘இல்லை’ என்றே எல்லோரும் சொல்லப் பழகி இருந்தார்கள்.
நான்
ஆடிஷன்ஸில் கலந்து கொண்டு நடித்தேன். என்னுடன் அனைத்து நடிகர்களும் போட்டி போட்டு நடித்தனர்.
ஒவ்வொருவரின் நடிப்பிலும் ஒவ்வொரு குறை கண்டேன். அவர்கள் என் கருத்தைக் கேட்ட போது,
‘இந்த வசனத்த இப்படிக் கொஞ்சம் பேசியிருக்கலாம். அந்த எக்ஸ்ப்ரெஷன இன்னும் கொஞ்சம்
வெளிப்படுத்தி இருக்கலாம்! இந்த இடத்தில உன் நடிப்பு கொஞ்சம் செயற்கையா இருந்துச்சு’
என்றெல்லாம் சொன்னேன்.
அதைக்
கேட்டுவிட்டு, ‘சீனியர்! எப்படியும் உங்க அளவுக்கு எங்கனால நடிக்க முடியாது!’ என்றார்கள்.
“ஒருத்தரோட பாடி லாங்குவேஜ் இன்னொருத்தருக்கு வராது. உன்ன மாதிரி என்னால நடிக்க முடியாது.
என் மாதிரி உன்னால நடிக்க முடியாது!” என்று சொல்லி மழுப்பினேன்.
ஏனென்றால்
என் மனதிற்குள் ஒரு குரல், ‘உங்க யாராலயும் என் நடிப்புக்கு பக்கத்துல கூட வர முடியாது’
என்று சொல்லியது.
ஆடிஷன்ஸ்
முடிவடைந்தது. இயக்குனர் தேர்வானவர்களின் பெயர்களைப் படிக்கையில் அவர்கள் எழுந்து நிற்பது
வழக்கம். மற்றவர்கள் கைதட்டி அவர்களைப் பாராட்டுவார்கள்.
எல்லோரும்
ஒன்றாக உட்கார்ந்திருந்தோம். இயக்குனர் படிக்கத் துவங்கினான். ‘கதாநாயகன் பாத்திரம்
– கலைச்செல்வன்’ என்று அவன் சொல்லியவுடன் எழுந்து நிற்க வேண்டும் என்பதற்காக என் அருகில்
உட்கார்ந்திருந்தவர்களைச் சற்று விலக்கினேன்.
’கதாநாயகன்
பாத்திரம்…’ என்று சொல்லி அவன் நிறுத்தினான். என் அருகில் இருந்தவர்கள் என் தோளைத்
தட்டினார்கள். நான் எழுந்து நிற்கத் தயாரானேன். ஆனால், அவன் ‘முகுந்த்’ என்று சொல்லி
நிறுத்தினான்.
அவன்
விளையாட்டிற்காகச் சொல்கிறான் என்று தான் நான் முதலில் நினைத்தேன். ஆனால், அதற்கான
அறிகுறிகள் அவன் முகத்தில் தென்படவில்லை. ‘ஒருவன் நடிக்கிறானா இல்லையா என்று என்னால்
சொல்லிவிட முடியாதா?’ அவன் நடிக்கவில்லை. உண்மையாகத் தான் சொன்னான்.
முகுந்த்
எழுந்து நின்றான். அவன் என்னைவிட ஒரு வயது இளையவன். என் ஜூனியர். எல்லோரும் கைதட்டினார்கள்.
என் முகம் இறுக்கமானதை மற்றவர் யாரும் கவனிக்கவில்லை. ஆனால், உண்மையில் நான் இயல்பாக
இருப்பது போல் நடித்துக் கொண்டிருந்தேன்.
கதாநாயக
பாத்திரத்திற்கு அடுத்தபடியான இரண்டாம் நிலை பாத்திரம் எனக்குக் கிடைத்தது. எல்லோரும்
கைதட்டினார்கள். நான் எழுந்து நிற்கவில்லை. ’கம் ஆன் மேன். கெட் அப்’ என்றார்கள். இதற்கு
மேல் ஒரு அவமானம் நடிகனுக்குக் கிடையாது என்று தோன்றியதால் நான் எழவில்லை.
ஒரே
தருணத்தில் முகுந்த் என்ற நடிகனுக்கு பெருமிதமும் எனக்கு அவமானமும் கிடைத்தது. நடிகர்களுக்கு
கைதட்டல்கள் தான் ஆங்கீகாரம். ஆனால், அன்று எனக்கு கிடைத்த கைதட்டல்களோ என்னை இழிவுபடுத்தின.
பேசாமல்
அமைதியாக இருந்துவிட்டேன். சட்டென்று எனக்குப் ப்ரீத்தமின் ஞாபகம் வந்தது. அரங்கத்தில்
அன்று கிடைத்த கைதட்டல்களை ப்ரீத்தம் ஏன் ஏற்காமல் நின்றான் என்று புரிந்தது.
அது
எனக்குக் கிடைத்த கைதட்டல்கள் என்று அவன் எண்ணியிருக்க வேண்டும். அது உண்மையாக கூட
இருந்திருக்கலாம். அதை ஏற்பது பிச்சை எடுப்பதற்குச் சமம். என் உடல் கூசியது.
”முகுந்த்தை
ஏன் தேர்ந்தெடுத்தன்னு நான் உன்ன கேட்கல. என்னை ஏன் தேர்ந்தெடுக்கலன்னு நான் கேட்குறேன்!”
என்று இயக்குனரிடம் கேட்டேன்.
“உன்
அளவுக்கு அவனால நடிக்க முடியாது. நடிப்புல உன் கூட போட்டி போடுறதுக்கு அவனுக்குத் தகுதியே
இல்ல! ஆனா, இந்தக் கேரக்டர்ல அவன் நடிச்சா ரொம்ப இயல்பா இருக்கும். ஏன்னா, இந்தக் கேரக்டரோட
குணத்துக்கும் அவனோட குணத்துக்கும் சின்ன வித்தியாசம் கூட இல்ல. இதுவே, நீ உயிர கொடுத்து
நடிச்சாலும் அதுல கொஞ்சம் செயற்கைத்தனம் வெளிப்பட்ரும்.” என்றான்.
“என்
நடிப்பு செயற்கையா இருந்தா தான் என்ன இப்போ? ஆடியன்ஸ் கண்ணுக்குத் தெரியவா போகுது?”
என்று திமிராக கேட்டேன்.
“அவங்க
கண்ணுக்கு தெரியலைன்னா பரவால்ல. என் கண்ணுக்கு அது தெரியக்கூடாது!” என்று பதிலளித்தான்.
நடிகனாய் நான் சொல்லியிருக்க வேண்டியதை இயக்குனராய் அவன் சொல்லிவிட்டான்.
நான்
அணியை விட்டு வெளியேறினேன்.
‘போனா
போகுதுடா! வா! நீயே வந்து அந்த கேரக்டர்ல நடி. முகுந்த் கிட்ட பேசிட்டோம். அவன் சரின்னு
சொல்லிட்டான்’ என்று என்னிடம் கேட்டுப் பார்த்தார்கள்.
நான்
சம்மதிக்கவே இல்லை. ‘அவன் தான் நல்ல நடிகனாச்சே! போய் அவனையே மேடைல ஏத்தி அழகு பாருங்க!’
என்று சொல்லிய பின், என்னிடம் வருவதை நிறுத்திக் கொண்டார்கள்.
’உன்ன
தவிர அந்த கேரக்டர்ல நடிக்க யாருக்குமே தகுதி இல்ல!’ என்று முகுந்த்திடம் நிச்சயம்
அவர்கள் சொல்லியிருப்பார்கள். ஏனென்றால், அதுவே ஒரு நடிகனை ஊக்கப்படுத்தும் மருந்து
என்று அவர்களுக்குத் தெரியும்.
நான்
அணியில் இல்லாததை நினைத்து கவலைப்படுபவர்கள் ஒருவர் கூட இல்லை என்பதைத் தெரிந்து கொண்டேன்.
என் முக்கியத்துவத்தை யாரும் உணரவில்லையோ என்று தோன்றியது. நான் இல்லையென்றாலும் நன்றாகத்
தான் அணி செயல்பட்டது.
என்னை
இழந்ததற்காக அவர்களை வருத்தப்பட வைக்க வேண்டுமென்று முடிவு செய்தேன். ‘அரங்கேற்றம்
தியேட்டர் புரொடக்ஷன்ஸ்’ என்று புதிதாக ஒரு அணியைத் துவங்கினேன்.
”இப்ப
எதுக்கு தேவையில்லாம டிபார்ட்மெண்ட்டுக்கு இரண்டாவது டீம்?” என்று ஹெச்.ஓ.டி. கேட்டார்.
நான் விளக்கம் கொடுக்கவில்லை. அவர் மறுத்தால் டிபார்ட்மெண்ட்டின் துணையில்லாமல் தனியாக
செயல்படலாம் என்று தீர்மானித்திருந்தேன். அவர் மறுத்துவிட்டார்.
எங்கள்
டிபார்ட்மெண்ட் மட்டுமின்றி அனைத்து டிபார்ட்மெண்ட் தியேட்டர் அணிகளில் இருந்தும் வெளியேற்றப்பட்டவர்களைச்
சேர்த்துக் கொண்டேன். கணக்கில்லாமல் வந்தார்கள். நானும் வருபவர்கள் எல்லோரையும் ஆடிஷன்ஸ்
வைக்காமல் சேர்த்துக் கொண்டேன்.
ஒத்திகைக்கு
தவறாமல் வருபவர்களுக்கு மட்டுமே மேடையில் நடிக்க வாய்ப்பு தருவேன் என்று தீர்க்கமாகச்
சொல்லிவிட்டேன். அதன்படியே வாய்ப்பளித்தேன். என் அணியை ஆரம்பித்த புதிதில் மற்ற அணிகளின்
ஏளனப் பேச்சுக்கள் என் காதில் விழுந்தன. நான் அதைப் பொருட்படுத்தவில்லை.
மற்ற
தியேட்டர் அணிகளின் நாடகத் தரத்திற்கு ஈடாக என் நாடகமும் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.
அதனால், எல்லோரிடமும் மிகக் கடுமையாக வேலை வாங்கினேன்.
என்னைத்
தவிர மற்ற எல்லோரும் முதன்முறையாக மேடை ஏறி நடிக்கிறார்கள். அவர்களின் அனுபவமின்மை
பார்வையாளர்களுக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதை மனதில் கொண்டு நடிகர்கள் அனைவருக்கும்
நானே பயிற்சி கொடுத்தேன். ஒரு காட்சியைக் குறைந்தபட்சம் முப்பது முறை ஒத்திகை பார்த்திருப்போம்.
முழு
ஒத்திகையின் போது எனக்கொரு அதிர்ச்சி காத்திருந்தது. நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக
பயிற்சி அளித்திருந்தேன். அவர்களது நடிப்பை ஒருசேர பார்க்கையில் தான் நான் செய்த தவறை
உணர்ந்தேன். எல்லோரும் என்னைப் போலவே நடித்தார்கள். என் நடிப்பைப் பிரதிபலித்தார்கள்.
நான்
நடித்துக் காட்டி பயிற்சி அளித்தது தவறாகப் போய்விட்டது. ஒரே விதமான உணர்ச்சி, உச்சரிப்பு
மற்றும் உடல்மொழி அனைத்து நடிகர்களிடமிருந்தும் வெளிப்பட்டது.
மீதமிருந்த
மூன்று நாட்களுக்குள் என்னால் இயன்றவரை அவர்களின் தனித்துவ நடிப்பைக் கொண்டு வர முயற்சித்தேன்.
’தி
சீக்ரெட் ஃபேஸ் ஆஃப் அன் ஆக்டர்’ என்பதே எங்கள் நாடகத்தின் தலைப்பு. கதாநாயகப் பாத்திரத்தில்
நான் நடித்தேன். புதிய அணி என்பதால் மாணவர்களிடையே நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. அவர்களின்
எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் எங்களது நாடகம் அமைந்தது.
ட்ரீம்
பிக்’ தியேட்டர் அணியின் நாடகத்தைப் பார்த்தேன். முகுந்த் நன்றாகவே நடித்திருந்தான்.
நேரில் சந்தித்துப் பாராட்டினேன். ‘என் இடம் உனக்குத் தான்’ என்று ப்ரீத்தம் எனக்குச்
சொல்லியது போல் அவனிடம் சொல்ல வேண்டுமென்று தோன்றியது. ஆனால், சொல்லாமல் திரும்பிவிட்டேன்.
அவர்கள்
வெற்றி பெற்றுவிட்டார்கள். நாங்கள் தோற்றுவிட்டோம். என் அணியில் உள்ளவர்கள் வருத்தப்படக்கூடாது
என்பதற்காக நான் கேட்டுச் சலித்த எல்லா பொய்களையும் முதன்முறையாக அவர்களிடம் சொன்னேன்.
அவை யாவும் பொய்கள் இல்லையோ என்று எனக்குத் தோன்றியது.
என்
நம்பிக்கைக்கு உரியவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தேன். “அடுத்த வருசம் நான் நாடகம் பார்க்க
வருவேன்! நீங்க தான் நம்ம டீம ஜெயிக்க வெக்கனும்!” என்று சொன்னேன். அவர்களும் ‘நிச்சயமா
நாங்க ஜெயிப்போம்!’ என்று எனக்கு வாக்குறுதி கொடுத்தார்கள்.
ஒரு
வருடம் கழிந்தது. அணி பற்றி எனக்கு எந்தவொரு தகவலும் வரவில்லை. என்னை யாரும் தொடர்பு
கொள்ளவுமில்லை. ’இண்ட்ரா காலேஜ்’ போட்டி நடக்கையில் நான் கல்லூரிக்குச் சென்றிருந்தேன்.
அரங்கேற்றம்
அணி எப்போதோ கலைந்துவிட்டது என்று கேள்வி பட்டேன். என் ஜூனியர்களை அழைத்துப் பேசினேன்.
”நாங்க ட்ரை பண்ணோம். யாருக்கும் பெருசா இண்ட்ரஸ்ட் இல்ல. எல்லாரும் ஒவ்வொரு காரணத்த
சொல்லி வெளிய போயிட்டாங்க!” என்றனர். நான் மேற்கொண்டு அவர்களிடம் பேசவில்லை.
‘ட்ரீம்
பிக்’ தியேட்டர் அணி அரங்கேறத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். ப்ரீத்தம் வந்திருந்தான்.
அவனுடன் சேர்ந்து நாடகம் பார்க்கச் சென்றேன்.
ட்ரீம்
பிக்’ அணி அதே உயிர்ப்புடன் இருந்தது. நல்ல நாடகம் பார்த்த திருப்தி ஏற்பட்டது. எல்லோரும்
சிறப்பாக நடித்திருந்தார்கள். புதிதாகச் சேர்ந்திருக்கும் ஜூனியர்ஸ்களை நானும் ப்ரீத்தமும்
சந்தித்துப் பாராட்டினோம்.
விடைபெறும்
தருணத்தில் ப்ரீத்தம் என்னைத் தனியாக அழைத்தான்.
”ஒருத்தர
மட்டுமே நம்பி தொடங்கப்பட்ட டீம் என்னைக்குமே நிலைக்காது. போன வருசம் நீ நடத்துன நாடகத்த
பத்தி எல்லாரும் சொன்னாங்க. நீ யாரு உன் திறமை என்னன்னு எல்லாருக்கும் காட்டிட்ட! ஆனா,
உன் தனித்திறமைய காட்டுறதுக்கு நீ ஒருத்தன் மட்டுமே போதும். அதுக்கு ஒரு டீம் அவசியம்
இல்ல!” என்றான் ப்ரீத்தம்.
”அதிகாரத்துல
இருக்குறவங்களோட விருப்பத்த நிறைவேற்த்த தான் உன் மொத்த டீமும் செயல்பட்டுது. ஆனா நான்,
என் டீம்ல உள்ள ஒவ்வொருத்தரோட தனிப்பட்ட விருப்பத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்தேன்!”
என்று நான் சொன்னேன்.
”கலை!
எங்களோட விருப்பத்த மொத்த டீமோட விருப்பமா மாத்துறதுல தான் எங்க வெற்றி இருக்கு. நாங்க
ஒன்னும் சும்மா பேசல. ஜெயிச்சு நாங்க யாருன்னு நிரூபிச்சிட்டுப் பேசுறோம்!” என்றான்
அழுத்தமாக.
”அப்பறம்
ஏன் போட்டில ஜெயிக்குறது முக்கியமில்ல, நாம ஆடியன்ஸுக்காகத் தான் நாடகம் போடுறோம்னு
ஜூனியர்ஸ் முன்னாடி நடிக்கிறிங்க?” என்று கேட்டேன்.
“நாடகம்
ஆடியன்ஸுக்காகத் தான் போடுறோம். ஆனா, நாம ஜெயிச்சா தான் டீம் செயல்படும். இல்லன்னா
நம்ம பேச்ச நம்ம டீம்ல இருக்குறவங்களே கேட்க மாட்டாங்க! புரிஞ்சுதா?” என்று கேட்டான்.
”புரிந்தது” என்றேன்.