Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Tuesday, March 1, 2022

பூவன்னா சந்திரசேகர் கவிதைகள்

 

                                      

1

 

முன்பொரு காலத்தில்

பச்சையும் பனையுமாயிருந்த

நிலத்திலிருந்து

கட்டை விரலாய் விரியும்

சப்பாத்திக் கள்ளியைக்

கொணர்ந்திங்கு வந்தோம்

வெம்மை வேண்டுமதற்கு

வாடையான காற்று ஆவதில்லை

நீரற்றுப் போகும்

உலக இறுதிக் கோடையில்

ஒற்றைக் கனி வேண்டினோம்

மழை தீரும்

நாளொன்றில்

அது விரிக்கும்

ஒற்றைச் செம்மலரை

மலைச் சுடர் நோக்கும்

சிறு பிள்ளை பாவனையில்

தரிசிப்போம்

 

 

 

2

 

காற்றுக்குக் கலையும்

மேகத் திட்டென

திரியாது பேசியவன்

சட்டென்று நிறுத்திக் கொண்டான்

முகம் உதைக்கும்

மிருது பாதங்கள்

கரட்டில் பழகி

உறுதிப்பட்டிருக்கின்றன

வார்த்தைகளைத் திரட்டி

பந்தெனவாக்கி

உதைக்கத் தந்தான் கால்களுக்கு

கூப்பிடக் கேட்காத தொலைவில்

விழும் அது

பச்சைப் பிள்ளையின் குரலால்

அழுதுகொண்டு நடக்கத் துவங்கியது

 

 

3

 

சுவரில் மோதித் திரும்பும்

ஒரு பந்து

கைக்கும் சுவற்றுக்கும்

பெருவெளியின் இரட்டிப்பை

வீச கடந்திடும்

அதே உச்ச வேகத்தில்

திருப்பி எறிகிறது சுவர்

முறுக்கேறிய என் கரமே

சற்று வழு குழைய வீசு

அந்த சுவருக்கு உண்டு

உன்னிலும் மேலதிக ரோசம்

மற்றும்

சமன்பாடுகளும் அதற்கு தான்

வக்காலத்து

 

 

4

 

வயலோர வரப்புகள்

வயிற்றையும் சேர்த்தே அணைத்தவாறு

வரப்பின் மார்பில்

குஞ்சங்களாய் கட்டப்பட்டு

அடுக்கும் நாற்றுகளில்

விளைந்திராத நெல்மணிகளைக்

கொத்திப் பறக்குமொரு

செம்போத்துக் குருவி

பசிக்கும்

மறந்து வற்றிய

சதைத் துண்டத்துக்குமிடையே

உழாத நிலக் கீறலாற்ற

பச்சைக் கண்களால்

விதைத்துக்கொண்டே இருக்கும்

 

5

 

வழி தப்பிய நாய்க்குட்டிக்கு

எறும்புச் சாரை புற்று திரும்புதல்

வேடிக்கையாயிருக்கிறது

வாலைக் கவ்வத் துடித்து

தோற்கும் நீட்டல் நக

பஞ்சு பாதங்களால்

புற்றைக் கலைத்துப்

பொழுது போக்குகிறது

குரைப்பிழந்த வீடு

குறையுறக்கத்தில்

சாலை நோக்கி ஊளையிடுகையில்

ஒன்றோடொன்று சந்திக்கும்

விளக்கற்ற முனையிலிருந்து

திரும்புதல் சாத்தியமிலா

பாதை நீளத் தொடங்குகிறது

 

6

 

வெளி மொத்தமும்

மேய்ச்சல் நிலமாய்

பனிநீர் கனக்கும் புல்லை

அதக்கி கடவாயில் ஒடுக்கும்

எருமையின் திமிலேறி

அமர்கிறது ஒரு காகம்

சிலுப்பலொன்றுக்கு மேலெழுந்து

மீண்டமர்ந்து

மேலெழுந்து மீண்டமர்கிறது

நீர் விட்டு எவ்வி

நீரையே தொடும்

தவளைக் கல்லில்

ஒரு காகத்தின் எச்சம்

கரையாது படிந்தேயிருக்கிறது

 

7

 

குருடான நகரத்தின் சாலையோரம்

விரல் பிள்ளையை

கைமாற்றிக் கை மாற்றிப்

பிடிக்கிறாள்

ஒரு பந்து விளையாட்டு போல்

கொதிப்படங்கிய பாதை

மூச்சடைக்கும் நேரம்

விளக்குப் பரிமாற்றத்தினூடே

கொலை

நடந்தேறுகிறதைப் பாருங்கள்

 

8) நித்தியம் (எ) டாமி

 

வால் குழைய

தோளுக்குத் தாவும் 

நித்தியத்தை 

கிணற்றுக் கரையில்

புதைக்கத் தலைபடும் நாளில்

எவரும்  புத்தனாவதேயில்லை

 

9) ONCE UPON A TIME IN EAST

 

வெகுதூரம் ஓடி வந்த

பேருந்து முன் நின்றது

எதோ ஒன்றை

தவறவிட்ட நியாபகத்தில்

பின் வாயில் ஏறி

முன்னது பக்கம் அமர்கிறேன்

கரைவேட்டிக்காரரொருவர்

நெட்டி இழுத்து

சீட்டை விட்டிறக்கினார்

அவர் கைக்குட்டையால்

முன்பதிவு செய்திருந்த இடம் போல அது

பெரிய மீனை

விசிலால் விரட்டுபவர்

முகத்தைத் திருப்பிக் கொண்டார்

முன் வாய் வழியிறங்கி

விட்டு வந்த ஒன்றைத்

தேடி எடுக்க

அதே குடைக்கு

மீண்டும் விரைந்துகொண்டிருக்கிறேன்

 

10

 

பாதி பழுத்த ஆப்பிளை

நறுக்கும் கத்தி

நரம்புகளை விட்டு

கரிசனமாய்

விரலைக் கீறுகிறது

கூரற்ற பின்புறம்

வழியும் திரவத் துளி

நன்கு பழுத்த

மாதுளை போல

மதுரமாயிருக்கு

தொண்டைக் குழி தாண்டிய

ஒன்றின் ருசியை

மீட்டெடுக்க தோற்ற நாளில்

எல்லாம் சுவையிழந்து போகிறது

பாதி பழுத்த ஆப்பிள் போல

பாதி பழுத்த பொழுது

அரை குறையாய்

சாணை பிடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது

 

 

11) பூதம் மிரளும் பயந்த

 

ஒளியைத் தொலைத்த

கம்பத்தடியில் 

கிளறித் தேடும் நாய்

திடுக்கென ஒழுகும்

வெளிச்சத்தினால் அருள்கிறது

கிளறி

மீண்டும் கிளறி

மேலும் கிளறி

மூடுகிறது

இடைவிட்டு வழிந்த

ஒளியின் கண்ணுக்கு

அப்பகலில்

நாயும் காணோம்

இருளும் காணோம்

 

 

 

12 இருட்டு ஒரு கவலையற்ற பறவை

 

~

கடைந்தெடுத்த பொறியின்

விரல் தீண்ட

மூளும் நெருப்பு பெருகுமிரவில்

ஓடுடைக்கும் செம்போத்துக் குருவி

தடுமாறிக் கூட்டைக் கடக்கிறது

கூடுடையும் பிறிதொன்றில்

தலை நீட்டும் பகல்

வழி தப்பும் பறவைக்கு

மற்றுமோர் இரவை

அலகில் திணிக்கிறது.

 

~

மின்மினிகள் தொலையும் காட்டில்

பொறுதும் விளக்கு

இல்லாத வழிகளை காட்டித் தரும்

நினைவு தப்பி இரவுதோறும்

எங்கெல்லாமோ அலையும் பறவை

காடு பற்றிக் கொள்வதை

உச்சி மலையமர்ந்து காண்கிறது

 

~

கங்கு மணல் காட்டில்

அரக்கு மரம் பாரிப்பாய்

துருத்தி நிற்கிறது

ஓடிந்து விழும் சுள்ளிகளை

கூடாக்கும் கற்றாழைக் குருவி

சிதையும் கன்றினுடல் கிழித்து

நீர்ப்பை உடைக்கிறது

நனைந்த மணல் துளிர்க்கும்

கள்ளியின் மலர்களைக் காண

இருட்டு வரை கத்திருக்கும்

அச்சிறு பறவை

 

~

உப்பு தோய்ந்த அலகில்

கொத்தும் கெழுத்திகளை

பனைச் சிலாம்பிலுரசி

செதிலுரித்து

திறந்த அலகினுள்

திணிக்கிறது ஆக்காட்டி

இரவில் தொலையும் கடலின்

பரப்பை அளக்கும் அதற்கு

பெரும் வயிற்றுக் கடல்

கிண்ண நீராய் தழும்புகையில்

வாய் திறந்து அலையும் கடலுக்கு

உவர் மணலைத் தின்னக் கொடுக்கும்

கரை மரப்பழங்கள்

எப்போதும் தித்திப்புக் குறையாதவை

என்பதும் தெரியும்

Thursday, February 10, 2022

நி.அகிலா - கவிதைகள்

 

நம்மைப்போல் ஒருவன்

 

பசி நெருப்பு துரத்த

அந்நெருப்பணைக்க வழியின்றி

சொற்பக் கூலிக்காய்...

உற்றார் உறவு உதறி

சொந்த மண் பிணைப்பறுத்து

மைல்கள் பல கடந்து

வந்தடைகிறான்

வேலைக்காய்...

பசியற்ற வாழ்விற்காய்...

 

இங்கு அவனுக்கு

ஓய்வில்லை...

கால நேர கணக்கில்லை

எதை உண்டு எங்கு உறைகிறான்?

என்பது எவருக்கும் பொருட்டில்லை...

ஆப்ட்ரால் அவன் ஒரு பீகாரிதானே?

 

கழிவறை சுத்தம் முதல்

கார்ப்பரேட் கம்பெனி காவல் வரை

எங்கும் எதிலும்

அவன் உழைப்புண்டு

 

ஆனாலும்

ஒப்பு புன்னகையோ

நன்றி பாவனையோ கூட

நம்மிடமில்லை அவனுக்காய்...

அவன்

வெறும் நார்த்திண்டியன் தானே நமக்கெல்லாம்?

 

பனை உயர அந்தரத்தில்

கிலோ மீட்டர்களில் நீளும் பாலங்களானாலும் 

நாம் தரையில் பறக்கும் – நெடுஞ்சாலைகளானாலும் 

அவன் உழைப்பைக் கழித்தால்

மிஞ்சப்போவது ஒன்றுமில்லை...

அவன் கால் தடம் பதியா சாலை இல்லை...

அவன் கை ரேகை பதியா சுவரில்லை – இன்று

ஆனாலும்

அந்த

பஞ்சம் பிழைக்க வந்தவனுக்காய்

நமக்கென்ன கவலை ?

நம்

பிழைப்புக்கே பங்கமெனும் அநியாயப் பழிபோட்டு

முழுப் பூசணியை சோற்றில் மறைக்க

இம்மியும் நன்றியின்றி

கொஞ்சமும் கூச்சமின்றி

கூடிக்கொள்கிறோம் ஒன்றாக...

என்றோ ஒரு நாள்

ஒரு வேளை உணவுக்காய்

தேசந்துறந்து

கண்டம் கடந்து

மலேசிய காடுகளில்

இலங்கைத் தோட்டங்களில்

ஆப்பிரிக்க சுரங்கங்களில்

உழைப்பைக் கொட்டி

அனாதைகளாய் உயிர் விட்ட

நம் மூதாதையர்களுக்காய்

நாம் சிந்தும் கண்ணீர்

நிஜமென்றால்...

 

இன்றும்

அதே நிலையில்

நம்மிடம் வந்தடைந்த

இவ்  இந்திய மகனும்

நம்மைப் போல் ஒருவனே!

நம்மில் ஒருவனே -என்ற

ஸ்நேகப் பாங்கல்லவா இருக்க வேண்டும்?

இன்றேல்

நாம் சிந்தும் கண்ணீர்

வெறும் நீலிக்கண்ணீரே!

--- நி.அகிலா---

சம்பல்

 

வெளச்சலுக்கு குறவில்ல

வெலை கேட்க ஆளில்ல

அதென்ன மாயமோ மந்திரமோ

வெதக்கயில உச்ச வெல

வெளயியல நட்ட வெல

 

வெடிய வெடிய போர் ஓட்டி

வெடிஞ்சு வெடியாம தண்ணீ திருப்பி

அலைஞ்சு திரிஞ்சு ஆள் தேடி

 

வங்கிக்  கடன்  பத்தாம

கந்துக்கு கடன் வாங்கி

ஓடி ஓடி மருந்தடிச்சு

ஓயாம ஒரம் போட்டு

காத்து மழ தப்பிச்சு

வெளச்சல்ல மீண்டாலும்

வெல இப்ப சம்பல் எனும்

விதி மட்டும்

விடாம துரத்துதே!

 

---நி.அகிலா-

 

 

என் சமையலறைத் தோழன்

 

என் கதவு திறப்புக்காய்

காத்திருந்து

புலிப்பாய்ச்சலாய் உள்ளோடி

ஊற்றி வைத்த பாலை

ஒரே உறிஞ்சில்  முடித்து

அங்கும் இங்கும்

அலைந்து கத்தி - சரியாய்

நான் நிற்கும் கால் மிதியில்

படுத்துப்புரண்டு

என்னை கத்த வைக்கிறான்

நானும்

அதட்டி உருட்டுவதாய் காட்டிக் கொள்கிறேன்

அவனிடம்

 

என் அதட்டலுக்கும்

 கொஞ்சலுக்கும்

 ஒரே பதில் – மியாவ் மியாவ்

 

 நான் அவனைத் திட்டுவதே இல்லை

அவனை சாக்காக்கி

அனைவரையும் அர்சித்துக்கொள்கிறேன்

இது அவனுக்கும் தெரியும்.

 

அடுப்படிக்கும் டைனிங்கிக்கும் என்று

என் பம்பர சுற்றலில்

அவனும் இணைவான் அவசரமாய்

பாவம்

பாதிச்சமையலில் படுத்து விடுவான்

பிறகு

அவனுக்கென்ன தலையெழுத்தா?

 

 

என் குரல் உயர்வதே

அவனிடம் மட்டும் தான் – பிறரிடம்

சரி என்பதை கூட தலையசைப்போடு

முடித்துக்கொள்வேன்

என் மனம் சொல்லாத சரிக்கு

வார்த்தைகள் எதற்கு  வீண்செலவாய்?

 

கூடாரம் முற்றும் சாக்கிட்டுப்

பரப்பினாலும்

அவன் உரசிப் படுப்பதென்னவோ

என் பாதங்களின் மீது தான்ஸ

கடிந்து கத்தினாலும்

துரத்தவோ துன்புறுத்தவோ மாட்டேன்

என்ற உறுதியை

என் மீது அவன் அடைந்து விட்டான்.

 

என் உடல் மொழியோ

என் முகவசைவோ காட்டி விடுகிறது

என் பிரியத்தை...

அது வேண்டும் அவனுக்கு

அது போதும் அவனுக்கு...

மற்றபடி என் அரை கிளாஸ் பாலுக்காய்

அவன் என் வீடு வருவதில்லை...

 

ஊமை போல் பேச்சற்று

உள்ளுக்குள் கொந்தளித்து

உப்பு புளி சேர்த்தேனா என்ற

நினைவுக் குழப்பங்களில் இருந்து

இவன் வருகை என்னை மீட்டு விட்டது

 

அடுத்த கட்ட (மன) அழுத்தத்திலிருந்து

தப்பித்துக் கொண்டேன்..

 

இவன் வராத நாட்களில்

என் சமையல்

ருசிப்பதே இல்லை

அன்றைய என் மனக் கசப்பு

சமையலில் சேர்ந்து விடுகிறதோ என்னவோ?

 

---நி.அகிலா---

 

 

வெளியேற்றப்படும் விவசாயி

 

வெளிநாட்டு கூலிக்கும்

இந்நாட்டு முதலாளிக்குமான

இடைவிடா போட்டியில்

 

நாளொரு லட்சமும்

பொழுதொரு கோடியுமாய் கூடி

விண்தாண்டி பறக்குது விவசாய நிலம்...

 

உங்காம திங்காம

எங்கேயும் போகாம

இராப் பகலா பாடுபட்டு

காடே கெதின்னு

காலங்கள் கரைத்து

இணப்பொலி  எசஞ்சு  வந்தா

எப்படியும் முடிச்சுடனுங்குற

ஒரே நெனப்பே லட்சியமாய்

மிச்சம் மீதி சேர்த்து வச்ச

லட்சமும் சொச்சமும் - இப்ப

எதுக்கும் பத்தா செல்லாப் பணமாச்சு

 

தீரா கஷ்டத்துக்கோ

மீளா கடனுக்கோ

வழியற்று கைமாறும் விளைநிலம்

 

இன்று

பங்குச் சந்தை பங்குகளாய்

கைமாறிக்கொண்டே போகுது

பங்கு தாரர்களாய்

அனைவரும் நுழைந்து விட்டோம்

விவசாயி வெளியேறி விட்டான்!

விவசாயந் தவிர

வேறொன்றும் தெரியாத விவசாயி - இனி

பேண்ட் போட்டு நடந்து பழகி

சல்யூட் அடிக்க கத்துகிட்டா

கஞ்சிக்கு கவலையில்லை...

 

--- நி.அகிலா---

 

 

 

 

 

எதற்கிந்த பிரிவினை? ஏன் இந்த ஒதுக்கம்?

 

 

அழுக்கே ஆடையாய்

பசியே வாழ்க்கையாய்

கோணிப்பை விரித்த கொட்டகையே வீடாய்

கும்பிட்டு குனிந்தே கூனனாய்

பயந்தும் பணிந்தும்

பாமரப் பிறவியாய்

இழிவாய் நடத்தப்பட்டாய்

சாத்திரம் ஓதிய

சாதியப் பெயர்களில்...

 

படிப்பை உடும்பாய் பற்றி

பழிப்பைப் புறந்தள்ளி

பட்டங்கள் பல பெற்று

பதவியில் வந்தமர்ந்தும்

பாகுபாடு மறையவில்லை...

 

கை நீட்டி வரவேற்க

மனமில்லை...

கை கோர்த்து உடனிருத்தும்

மாண்பில்லை...

பட்ட கஷ்டமும்

எட்டிய உயரமும்

எவர்க்கும் பொருட்டில்லை...

 

ரிசர்வேஷனா நீங்க?

என்ற ஒற்றைக் கேள்வியில்

குப்புறத்தள்ளி

குரூரச் சிரிப்பில்

வாழ்ந்து பார்க்கிறோம் எஜமானாய்

 

நல்ல பள்ளியை தேடிப்பிடித்து

சிக்கல்கள் சிறிதும் இன்றி

பிறப்பே படிப்பதற்கென்றாகி

நாம் பெற்ற மதிப்பெண்ணை விட

 

 

திக்கற்ற வாழ்க்கையில்

சேர்த்து விட்ட பள்ளியை சரணடைந்து

பள்ளிப்படிப்போடு

குடும்ப சுமை தாங்க

கூலிக்கும் சென்று வந்து

இன்னல்களின் நடுவே

இவன் பெற்ற மதிப்பெண்

எப்போதும் முதல் மதிப்பெண்ணே...

 

எவன் பெற்ற

எந்த நூற்றுக்கு நூறும்

இதற்கில்லை ஈடு...

 

எதற்கிந்த பிரிவினை?

ஏன் இந்த ஒதுக்கம்?

ஒரு வேளை

நம்மைக் கடந்து விடுவான் என்ற பதற்றமோ?

 

 

உம்மை கேட்டுக்கொள்கிறேன்

ஒன்றே ஒன்று

அவனிடத்தில் உம்மை நிறுத்தி நினைத்துப்பார்

தெளிந்துவிடும் பித்தம்

நீ...

மனிதனென்றால்...

 

--- நி.அகிலா---

 

 

 

 

 

 

ஒரு சீதையின் வரலாறு

 

அரசாங்கக் கோப்புகளில்

உன் தகப்பனுக்குத் தாரமாகி

உள்ளூர் கோவிலில்

உன்னிடம் தாலி கொண்டு

சட்டத்தின் ஓட்டைகளில் நழுவி

உன்னிடம் வந்தடைந்தேன்

இரண்டாம் தாரமாய்

 

வீடு கட்ட கனவு கண்டு

காடு கரை உழைத்து

விளைந்ததெல்லாம் காசாக்கி

பத்தா காசுக்கு

என் கற்பையும் விற்று

பணமாக்கிக் கொண்டாய்

ஒத்துக்கொண்டேன் நானும்

ஒண்டி வீட்டுக்காய்

 

பிள்ளைகள் பெற்று வளர்த்து

மருமகளோடு மல்லுக்கட்டி

மகளையும் பிடிக்காமல் போய்

வந்துவிட்டேன் தனியாய்

வீதி வேடிக்கையே

வாழ்க்கை என்றானது....

 

உடம்பு சீர் கெட்டு

கை கால் சத்து கெட்டு

சித்தமும் கலங்கி சீரழிந்து

என் சாவு நாளுக்காய்

மீண்டும் வந்தடைந்தேன்

என் வீட்டிற்கு

 

மாட்டுக் கொட்டைகையே

போதுமாம் எனக்கு

ஒன்னுக்கும் ரெண்டுக்கும் போயி

நாறிவிடும் வீடாம்..

 

 

என் சதை வித்து கட்டிய வீட்டில்

நுழையவிடா உம் அழுக்கு மனத்தின்

துர்நாற்றத்தை விடவா

என் ஒன்னுக்கும் ரெண்டுக்கும் நாறிவிடும்?

 

ஆனாலும் சாவுக்கு முன்பு

எனக்கொரு வாய்ப்பு என் மகனிடம் கூறிவிட

 

மகனே!

வீடொன்றும் உன் தந்தையின்

உழைப்புக்கான சாட்சி மட்டுமல்ல- அது

உன் தந்தையல்லாத

மற்றொருவன்  முன்  நான் நிர்வாணமானதின்

சாட்சியும்   அதுதான் ...

 

 

---நி.அகிலா---