Tuesday, February 12, 2019

பயணம் - பாலசுந்தர்



இயற்கை உலா – சொல்-காட்சியாதல்

எப்பொழுதும் இயற்கையை ரசிப்பதென்பது தீராதது. சிற்பங்கள் நிலையாக இருந்து பல படிமங்களை மனதுள் ஏற்படுத்தி உளக்கிளர்ச்சியை உண்டாக்குகிறதென்றால், இயற்கை கணந்தோறும் புதுபுது உருவம் எடுத்து கணந்தோறும் நம் உளக்கிளர்ச்சியை பல படிமங்களில் தக்க வைத்துக்கொள்கிறது. அவ்வகையில் இளம்புலரியின் அழகை கடற்கரை பரப்பில் நின்று ரசிக்க வேண்டும் என்று விருப்புற்று அதிகாலையே மெரினா கடற்கரைக்கு நண்பர்களுடன் சென்றிருந்தேன். மெரினா என்றாலே நம் நினைவிற்கு வருபவை கூட்டமும், சுண்டல், கருவாடு போன்ற இதர பொருட்களை விற்கும் சிறுவர்கள், பெண்கள் கூட்டமும் தான். அதிகாலை மெரினா வேறொரு உலகத்தை கொண்டிருக்கிறது. தினமும் அது பாம்பு போல் அதை விழுங்கி விழுங்கி உமிழ்கிறது. நாங்கள் சென்ற நேரம் கடற்கரையில் பத்து நபர்கள்கூட இல்லை. 

இளங்காலை கதிரவன் உதிப்பதற்கு முன்பும், முழுவதுமாக மறைவதற்கு சில நிமிடங்கள் முன்பும் கடல் சிவன் அம்சமான கஜசம்ஹாரமூர்த்தமாக கடல் உருக்கொள்கிறதா என்று எண்ணுமளவிற்கான கருமை. கஜசம்ஹார சிற்பத்தில் சிற்பி நிலையான கல்லில் யானையின் தோலை சிவபெருமான் போர்வையாக போர்த்தி நடனமாடுவதாக அமைத்திருப்பான். அந்த தாண்டவத்தின் நேரடி நிலையை அந்நொடிகளில் கடலிலே கண்டேன். சிவன் சம்ஹாரம் செய்த அந்த யானை அரக்கனின் விடாய், அதன் கால் நகங்களுக்குள் சென்று கடல் அலைகளாக உருமாறி என் கால் பாதங்களை அதன் விடாய் தீர்க்க வந்து இழுக்கிறதோ என்று தோன்றுமளவிற்கு அலைகள் வந்தறைந்து அறைந்து சென்றது.
  கொஞ்சம் கொஞ்சமாக புலரத்தொடங்கியது… அக்காட்சிகளை காண இருகண்கள் கண்டிப்பாக போதாது. வானத்தை பார்ப்பதா தங்க தோணிகள் போல் மிதக்கும் கடல் அலைகளை ரசிப்பதா என்று மயங்க வைத்துவிட்டது. அக்காட்சிகளை பார்க்க பார்க்க மனம் ஊழ்க நிலைக்கு சென்றுவிட்டது. அன்றுவரை கற்றறிந்த சொற்கள் பயனற்றதோ, மௌனம்தான் சிறந்த சொல்லோ என்று எண்ணுமளவிற்கு என்னுள் மௌம் குடிக்கொண்டது. இந்நிலையில் என் மனம் தானாக பாரதியை நாடியது. எத்தனயோ கவிஞர்கள் எண்ணற்ற வகையில் இயற்கையை வருணித்திருந்தாலும், என்னை பொருத்தவரை அவர்கள் அனைவரும் பாரதியிடம் தோற்றவர்களே! கண்ட காட்சியை சொல்லாக, உணர்வெழுச்சியாக வடித்தெடுத்துவிட்டான். நான் கண்ட காட்சியை அன்றே பாரதி கண்டு கவியாக எழுதி கடலன்னைக்கும் கதிரவனுக்கும் கவிமனம் புரிந்துவிட்டான் போலும்! அந்திசாயும் பொழுது ஏற்பட்ட இயற்கை மாயங்களை கூறுவதாக பாஞ்சாலி சபதத்தில் அமைந்துள்ள இப்பகுதி, புலரிக்கும் அப்படியே பொருந்துவது வியப்பான விடயம். அக்கவிதை இதோ

பார்சுடர்ப் பரிதியைச் சூழவே படர்முகில்
எத்தனை தீப்பட் டெரிவன! ஓகோ!
என்னடி இந்த வன்னத் தியல்புகள்!
எத்தனை வடிவம்! எத்தனை கலவை!
தீயின் குழம்புகள்! — செழும்பொன் காய்ச்சி
விட்ட ஓடைகள்! — வெம்மைதோன்றாமே
எரிந்திடுந் தங்கத் தீவுகள்! — பாரடி!
நீலப் பொய்கைகள்! — அடடா, நீல
வன்ன மொன்றில் எத்தனை வகையடி!
எத்தனை செம்மை! பசுமையுங் கருமையும்
எத்தனை! — கரிய பெரும்பெரும் பூதம்!
நீலப் பொய்கையின் மிதந்திடுந் தங்கத்
தோணிகள் சுடரொளிப் பொற்கரை யிட்ட
கருஞ் சிகரங்கள்! — காணடி, ஆங்கு
தங்கத் திமிங்கிலம் தாம்பல மிதக்கும்
இருட்கடல்! — ஆஹா! எங்குநோக்கிடினும்
ஒளித்திரள்! ஒளித்திரள்! வன்னக் களஞ்சியம்!’

கணந்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும்;
கணந்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும்;
கணந்தோறும் நவநவமாங் களிப்புத் தோன்றும்;
கருதிடவும் சொல்லிடவும் எளிதோ? ஆங்கே,
கணந்தோறும் ஒருபுதிய வண்ணங் காட்டிக்
காளிபரா சக்திஅவள் களிக்குங் கோலம்
கணந்தோறும் அவள்பிறப்பாள் என்று மேலோர்
கருதுவதன் விளக்கத்தை இங்குக் காண்பாய்.

உண்மையாகவே, புலரியில் கடல் செழும்பொன் காய்ச்சி விட்ட ஓடைகள் போன்றும், தங்கத்திமிங்கிலம் மிதக்கும் இருட்கடல் போன்றும், ஒளித்திரளாக கணந்தோறும் வியப்புக்களும், புதியனவும் தோன்றிக்கொண்டே இருந்தன

கடைசியாக சென்னை மெரினாவில் இளங்காலை புலரியை கண்டுமுடித்துவிட்டு புதுச்சேரிக்குச் செல்ல நானும் நண்பர்களும், ஆயுத்தமானோம். சமீபத்தில் நமது தமிழக அரசு புதிய பேருந்துகளை பயன்பாட்டிற்கு கொண்டுவந்திருக்கிறது. முதலில் நாங்கள் அது புதுச்சேரி பேருந்து என்றுதான் எண்ணியிருந்தோம், உள்ளே கைப்பிடியில் நமது அரசியல்வாதிகள் புன்முறுவலுடன் காட்சியளித்தவுடன் தான் தெரிந்தது அட இது நம் தமிழக அரசு பேருந்து என்று. புது பேருந்து என்பதால் எந்தவித குலுக்கலோ, சத்தமோ இல்லை, அலுங்காமல், குலுங்காமல் மிக அருமையாக பயணம் அமைந்தது, அதுவும் எனக்கு ஜன்னல் சீட்டு, கேட்கவா வேண்டும் என் மனம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டே எங்கெங்கோ சஞ்சரித்துக் கொண்டுயிருந்தது. மரக்காணம் அருகே ஒரு நீர்நிலையைக் கண்டேன் ஒரு 5 நிமிடங்கள் அவ்வழியாக சென்றிருப்போம். மாலை மயங்கும் நேரம், வெள்ளித்தாள்களை கடலில் மிதக்கவிட்டது போன்று இருந்தது அக்காட்சி. கண்ணை சிமிட்டவோ அகலவோ முடியா அளவிற்கு நீர்நிலை முழுவதும் வெள்ளித் திரட்சி பார்த்து பார்த்து தீரா விடாயுடனும், ஏக்கத்துடனும் பார்த்துச்சென்றேன்.
நண்பர் புதுச்சேரியில்தான் இருக்கிறார் அதுவும் அரிக்கமேடு அமைந்திருக்கும் அரியாங்குப்பத்திற்கு மிக அருகில் இருக்கும் வீராம்பட்டிணத்தில் தான் அவரின் பிறப்பு முதல் வளர்ப்பு வரை. இதற்கு முன்பு இரண்டு முறை சென்றிருந்தாலும், இந்த முறைதான் என் சிறுவயதில் உளக்கிளர்ச்சியை ஏற்படுத்திய பல நாட்கள் செல்ல  வேண்டும் என்றிருந்த அரிக்கமேடு இவ்வளவு அருகில் இருக்கிறது என்று தெரிந்தது. சென்ற முறை சென்றிருந்த பொழுது பாரதியார் இல்லத்தில் காலம் மறந்து காலயந்திரப் பயணத்தில் பாரதியுடன் உலவிய மனபிறழ்ச்சி ஏற்பட்டது. புதுச்சேரிக்கு சென்றதன் முக்கிய நோக்கம் நண்பர் தேர் திருவிழாவிற்கு அழைப்பு விடுத்ததற்குதான். இதை நல்வாய்ப்பாக பயன்படுத்தி, கி.ரா. வை சந்திக்கவும், அரிக்கமேடு செல்லவும், லே கபேவில் குளம்பி குடிக்கவும், பாரதிதாசன் இல்லத்திற்கு செல்லவும், புதுச்சேரி அருங்காட்சியகம் உலாவவும் உள்திட்டம் ஏற்படுத்தி இதுபற்றிய கனவுகளுடன் பேருந்தில் பயணப்பட்டுக்கொண்டிருந்தேன்.
சுமார் 7மணியளவில் புதுச்சேரிக்கு வந்துசேர்ந்தோம் பேருந்துநிலையத்திற்கு வந்து நண்பன் வரவேற்று, முதல் வேலையாக லே கபே விற்கு அழைத்துச்சென்று மனநிறைவுடன் நண்பர்களுடன் குழாவி குளம்பி குடித்தது மகிழ்ந்திருந்தோம். என் மனமும் அவ்வப்பொழுது லே கபேவின் வரலாற்றை எண்ணிக்கொண்டிந்தது.  புதுச்சேரியின் முக்கிய இடங்களில் இது ஒன்று. இதற்கு முன்பு கடற்கரைசாலை அருகே ரயில் சென்றுக்கொண்டிருந்தது. அதற்கு அருகிலேயே துறைமுக அலுவலகமாக செயல்பட்ட பிரஞ்ச் பாணியிலான தொன்மை கட்டிடத்தில்தான் லே கபே அமைந்துள்ளது. கடற்காற்றின் ரம்மியமான தொடுகையை உணர்வதற்கும், வானத்தின் வர்ணஜாலங்களை எவ்வித இடையுறும் இல்லாமல் கண்டு ரசிக்கவும் ஏற்ற இடம் லே கபே. அதுவும் இதுபோன்ற ரம்மியமான இடத்தில் நண்பர்களுடன் சேர்ந்து இருந்தால் நம் மனமும் கொண்டாட்டத்திற்கான மனநிலைக்கு சென்றுவிடும். லே கபேவில் வரலாற்றுடன் குளம்பியும் சேர்ந்து குடித்துவிட்டு கடற்கரையில் சற்று காலாற உலவிவிட்டு வரலாற்றின் தடம் பதிந்த வீராம்பட்டினம் எனும் சிறப்புமிக்க பாக்கத்திற்கு சென்று சேர்ந்தோம். பயண அலுப்பு காரணமாக தானாக நித்திரைதேவி தேடிவந்து குடிகொண்டாள். நிம்மதியான தூக்கம். அடுத்தநாள் மேலும் திருவிழாக் கொண்டாட்டத்திற்கான மனநிலையுடன் தயாராக கதிரவன் நித்திரதேவியை விரட்டிவிட்டு எங்களிடம் வந்து சேர்ந்தான்.
அதற்கடுத்தநாள் காலை தேரோட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தோம். மிகப்பெரிய தேர் என்றும் சொல்ல முடியாது, சிறிய தேர் என்றும் சொல்ல முடியாது, மக்கள், இளைஞர்கள் அனைவரும் தேரை வடம் பிடித்து இழுக்க தயாராக இருந்தனர். நண்பர்கள் என்னையும் கூட்டத்தோடு ஐக்கியமாகி வடம் பிடித்து இழுக்க வற்புரித்தனர். ஆனால் நான் தோரோட்டம் கண்டிராதலாலும், தேர் அசைவின் அழகை காணும் வாய்ப்பை நழுவவிடக் கூடாது என்பதாலும் அவர்களுடன் செல்ல மறுத்துவிட்டு, தேர்அசைவின் முதல் அசைவை என் மனதில் அசைத்துக்கொண்டு நின்றிருந்தேன். ஊர்கூடி தேர் இழுப்பதன் உண்மை அர்த்தத்தை அங்குதான் கண்டுணர்ந்தேன். நான் அதுவரை தேர் அனைவரும் பிடித்து இழுத்தவுடன் அழகாக நகர்ந்து சென்றுவிடும் என்றுதான் நினைத்திருந்தேன், அங்கு தான் என் எண்ணம் தவறு, இயந்திர தேர் போன்று மிக எளிதாக நேராக சென்றுவிடாது என்று உணர்ந்தேன், பல்லாயிரம் பேர் இழுக்கவும், தேர் அழகாக பக்கவாட்டில் அசைந்தசைந்து செல்லவும் ஒரு குட்டியானையின் அசைவை காண்பது போன்றிருந்தது. காட்டில் பல்லாயிர எறும்புகள் ஒரு குட்டி யானையை இழுக்கும் முயற்சிக்கு அது அசைந்துகொடுத்து நகர்வது போன்றிருந்தது, அந்த தேரோட்டம், கடைசியாக வீதியின் முக்குவரை திரும்பி மறையும் வரை தோரோட்டத்தின் அழகை ரசித்து என்னை மறந்து நின்று கொண்டிருந்தேன், ஒரு சின்ன ஏமாற்றம், அந்த தேரோட்டம் நடப்பதற்கருகில் ஒரு சிறு யானையையும் சேர்த்து நடக்க வைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது. தேர் இழுத்து முடித்து, ஆரம்பித்த இடத்தில் வந்து சரியான நிறுத்துவதில் கிடைக்கும் ஆனந்தம், வாழ்வில் எதிலும் வெற்றி கிடைக்கவில்லை என்று கருதுபவனுக்குக் கூட எளிதாக கிடைக்கும் வெற்றி போன்றது. தேர் இழுத்து மீண்டும் அதே இடத்தில் சரியாக நிறுத்தவைப்பதில் கிடைக்கும் பேரானந்தத்தை வேடிக்கைபார்த்த என்னாலேயே உணர முடிந்தது என்றால், தேர் இழுத்தவர்கள் எவ்வளவு பேரானந்தத்தை கண்டிருப்பார்கள் என்று எண்ணிக்கொண்டேன். அப்பொழுது ஒன்று முடிவுசெய்தேன், இந்த தேரே இவ்வளவு பரவசத்தை தருகிறதென்றால், திருவரூர் தேர் எவ்வளவு பரவசத்தையும், பேரானந்தத்தையும் தரும், அதை வாழ்நாளில் ஒரு முறையேனும் நேரில் சென்று பார்த்துவிட வேண்டும் என்று முடிவுசெய்துள்ளேன். கண்டிப்பாக அந்த நாள் கைகூடும்.
தேரோட்டம் முடித்த கையோடு என்னையும் அழகாக தூக்கிக்கொண்டு கடலில் போட்டு, கும்மாளம் அடித்துக்கொண்டு, கடலலைகளோடு மோதி, விளையாடி மீண்டுவந்து மதியம் சாப்பிட்டு அரிக்கமேட்டிற்கு செல்ல ஆயுத்தமானோம்.
அரிக்கமேடு என் கனவுகளின் பண்டைய நகரம், பல்லாண்டுகளாக நான் சென்று பார்க்கவேண்டும் என்று எண்ணியிருந்த தொல் குடியிருப்பு அன்ன புதுக்காடு. நண்பர் வீட்டிலிருந்து நடந்து செல்லும் தூரமேயாதலால் களைப்பு நீங்க அரட்டையடித்துக் கொண்டும், அரிக்கமேடு வரலாற்று செய்திகளை பரிமாறிக்கொண்டும் சென்றோம். அப்பொழுதெல்லாம் அரிக்கமேட்டில் மிகச்சாதாரணமாக பண்டைய ரோம், எகிப்திய நாணயங்கள் கிடைத்தன என்றும், அதை மக்கள் வரலாற்று முக்கியத்துவம் தெரியாமல் அங்கு சுற்றிப்பார்க்க வந்தவர்களுக்கு அன்பளிப்பாகவும், செல்லத்தக்க காசு கொடுத்து மாற்றிவிட்டார்கள் என்றும் அதுபோன்று எங்கள் வீட்டில் உள்ளவர்களும் செய்தனர் என்றும் என் நண்பர் கூறினார். நம் மக்களும், அரசாங்கமும் வரலாற்றிற்கு எவ்வளவு தூரம் முக்கியத்துவம் தருகிறார்கள் என்பதன் நேரடி சாட்சி அரிக்கமேடு. எந்தவிதமான பாதுகாப்பு வசதிகளோ அல்லது அந்த உலக வரலாற்று சிறப்புமிக்க இடத்தை பற்றிய அறிவிப்புகளோ, என எதுவும் இல்லாமல், பாழடைந்த கட்டிடம் மட்டும் காலத்தின் எச்சத்தில் உறைந்துபோய் வெறும் கல்லாகவே நின்றுக்கொண்டிருக்கின்றன. இதுபோன்ற ஒரு இடம் வெளிநாட்டில் இருந்திருந்தால் எப்படி வைத்திருப்பார்கள்? எது எதற்கோ வெளிநாட்டினருடன் ஒப்பீடு செய்துக்கொள்கிறோம் எதற்கு செய்ய வேண்டுமோ அதற்கு செய்ய தவறிவிடுகிறோம்.
நம்மவர்களும் வரலாற்றில் எந்தளவிற்கு தேர்ச்சியுடன் இருக்கிறார்கள் என்று அன்று வியந்துவிட்டேன். அந்த இடிந்தநிலையில் உள்ள கட்டிடம் மிக நிச்சியமாக கி.மு. காலத்தில் கட்டப்பட்டதுதான், அப்பொழுதே நம்மவர்கள் செங்கல் வைத்து எந்தளவு கட்டியுள்ளனர் என்று என் நண்பர் ஒருவர் கூறியபொழுது அதிர்ச்சியடைந்துவிட்டேன். பிறகு அவருக்கு அந்த பேராலய வரலாற்றைப்பற்றி எடுத்துக்கூறுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. நம் இணையப்பக்கத்திலும் மிகச்சரியாக அந்தப் பேராலயத்ததைப்பற்றிய குறிப்பிகள் கிடைக்கவில்லை பின்பு நீங்கள் ஒரு சமயத்தில் புதுச்சேரிக்கு கம்பன் விழாவிற்கு வந்த பொழுது அரிக்கமேட்டிற்கு சென்றதுப் பற்றிய ஒரு கட்டுரையிலிருந்து அவருக்கு ஆதாரங்களை சுட்டிக்காட்டி காண்பித்து உண்மை நிலையை எடுத்துக் கூறுவது போன்ற நிலை ஏற்பட்டது. ஏனென்றால் தமிழகத்தில் செங்கல் கட்டுமானம் கொண்ட மிகப் பழைய கட்டிடமாக அதுவும் முக்கால்வாசி இடிந்தநிலையில் மாமல்லபுரம் அருகே இருக்கும் சாலுவன்குப்பத்தில் அகழ்ந்தெடுத்த சங்க காலம் சார்ந்த கி.மு. 2ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட முருகன் கோயில் மட்டும்தான் நமக்கிருக்கும் ஒரே பழைய செங்கல் கட்டுமான அத்தாட்சி. மேலும் சாலுவன் குப்பத்தில் காணப்படும் செங்கல்கள் வடிவம் சிறியதுதான் தற்கால பயன்பாட்டில் இருக்கும் செங்கள் அளவேயானது. ஆனால் அரிக்கமேட்டில் நாங்கள் பார்த்த செங்கல்களின் நீளம் ஒவ்வொன்றும் மிகப்பெரியது. பேராலயத்தின் கட்டுமான செங்கல்கள் அளவு மிகப்பெரியதாக காணப்படுகிறது. இது ப்ரெஞ்ச் கட்டிடத்தில் தான் முதன்முதலாக பயன்படுத்தப்பட்டதா? அல்லது அரிக்கமேட்டில் இருந்த மிகப்பழைய செங்கல்கள் கொண்டு எழுப்பப்பட்டதா என்பது தெரியவில்லை, இதைப் பற்றி யாரேனும் விரிவாக ஆய்வு செய்து எழுதியுள்ளார்களா என்றும் தெரியவில்லைஎன இதுபோன்று பல விடயம் நண்பர்களுடன் அலவலாவிக் கொண்டு அப்படியே அரிக்கமேட்டிற்குள் நடந்து பொதுக்கே என்று அறியப்பட்ட அந்த பழைய துறைமுகம் இருந்த இடத்திற்கு வந்து அரியாங்குப்பம் ஆறு மற்றும் சதுப்புநிலக்காடுகளை பார்த்த பொழுது என் மனம் காலம் கடந்து சென்றுக்கொண்டிருந்தது. இந்த இடத்தில்தானே பன்னாட்டு வணிகர்கள் வந்து மாற்றுக்கொண்டு சென்றிருப்பர், இந்த இடத்தில்தானே கறுப்பு தங்கம் என்றறியப்பட்ட ரோம சாம்ரைாஜ்யத்தை வீழ்த்திய அந்த குண்டுமணியளவேயான மிளகு ஏற்றுமதி நடத்தியிருப்பர், இந்த இடத்தில் எத்தனை எத்தனை மக்களின் வாழ்வாதாரம் நம்பியிருந்தது, இந்த இடத்தில் எத்தனை எத்தனை யவனர்கள், காப்பிரியர்கள். சோனர்கள் என மொழிக்கு புதுச்சொற்கள் சேர்க்கப்பட்டது என மனம் சென்றுக்கொண்டிருந்தது.
மேலும் அரிக்கமேட்டின் வரலாற்று முக்கியத்துவமான சம்பங்கள் தாங்கள் அந்த கட்டுரையில் குறிப்பிட்டபடியால் கூறியது கூறல் வேண்டாம் என்ற இலக்கிணத்திற்குட்பட்டு அரிக்கமேட்டைப்பற்றி இங்கு எதுவும் குறிப்பிடவில்லை. அரிக்கமேட்டில் கண்டெடுத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை புதுவை அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைத்துள்ளனர் என்று கேள்விப்பட்டு அதற்கடுத்த நாள் புதுவை அருங்காட்சியகத்திற்கு செல்லவும், எழுத்தாளர் கி.ரா. விடம் முந்தைய நாளே சந்திப்பதற்கான அனுமதி வாங்கியதால் அவர் குறித்த நேரத்தில் செல்லவும் திட்டமிட்டோம். அன்றிரவும் கொண்டாட்ட மனநிலையில் நண்பர்களுடன் அரட்டையடித்துக்கொண்டு அடுத்தநாளிற்காக காத்திருந்தேன்.
புதுச்சேரியில் இருந்து நண்பன் வீட்டில் முந்தைய நாளிலேயே கி.ரா. வுடன் தொலைப்பேசியில் நேர அனுமதிப்பெற்றிருந்தேன். அடுத்தநாள் கி.ரா.தான் என் மனம் முழுவதும் ஆக்கிரமித்திருந்தார். அதற்கேற்றார்போல் தங்களின் தளத்திலும் அன்றைய தினத்தில் கி.ரா. எழுதிய கன்னிமை சிறுகதை பற்றிய தங்களின் விமர்சனக் கட்டுரையும் இடம்பெற்றிருந்தது. மிக ஆனந்தமடைந்தேன். கி.ரா. சந்திப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பிருந்தே தங்கள் தளத்தில் தேடி தேடி கி.ரா. பற்றி தாங்கள் எழுதிய கட்டுரைகள், கதைகள் என அந்த விமர்சனத்திலிருந்து நேரடியாக கதைக்குச் சென்று படித்தது என்று முழுவதும் இரண்டு நாட்கள் கி.ரா. ஆக்கங்கள் பற்றித்தான் வாசித்துக்கொண்டிருந்தேன். நாற்காலி, கன்னிமை, கதவு போன்ற சிறுகதைகளையும், தாங்கள் கி.ரா. பற்றி எழுதிய சில கட்டுரைகளையும் மனதில் இருத்திக்கொண்டு, அதில் இருந்து அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள், சொல்ல வேண்டிய கருத்துகள் மனதில் அசை போட்டப்படி கி.ரா. வை சந்திக்கும் அந்த இளங்காலைப் பொழுது கடந்தது.
சுமார் 10 மணிக்கு கி.ரா. தன்னுடைய நேரத்தை என்னுடைய சந்திப்பிற்கு ஒதுக்கியிருந்தார். அவரைப்பற்றி தடம் இதழில் வெளிவந்த பேட்டி கட்டுரைகள் எடுத்துக்கொண்டு செல்லலாம் என்று திட்டமிட்டிருந்தேன் ஆனால் வழக்கமான பதற்றத்தின் காரணமாக நண்பனின் வீட்டிலேயே மறந்து விட்டு வைத்துவிட்டேன். செல்லும்வழியில் அவருக்கு பழங்கள் வாங்கிக்கொண்டோம். நான் அவருக்கு பரிசளிப்பதற்காக முந்தைய நாள் கடையில் பிரபஞ்சனின் ஒரு புத்தகத்தை வாங்கியிருந்தேன் நல்ல வேலை அதையாவது கவனமாக நான் எடுத்துக்கொண்டேன். பயண வழி முழுவதும் அவரைப்பற்றிய எண்ண ஓட்டங்கள் 10 நிமிட பயணத்தில் அவரிருக்கும் அடுக்ககத்திற்கு வந்து சேர்ந்தோன். பிறகு ஒரு ஐந்து நிமிடம் எந்த வீடு என்று கண்டுபிடிப்பதில் தத்தளித்து சரியாக 10.30 மணிக்கு அவர் வீட்டிற்கு சென்று சேர்ந்தோம். நண்பர்களுக்கு இலக்கிய பரிட்சியம் இல்லையாதலால் நான் மட்டும் பழங்கள் புத்தகங்கள் எடுத்துக்கொண்டு ஒருவித படபடப்புடன் அவர் வீட்டின் முன்பு வந்தேன் முகப்பில் அவர் மகன் நீங்கள் தானே கால் செய்தது என்று விசாரித்து வரவேற்றார். உள் முகப்பிலேயே உடலில் ஒரு துண்டை போர்த்திக்கொண்டு, தாடியுடன் விட்டத்தை பார்த்தபடி ஏதோ யோசித்துக்கொண்டிருந்தார் எழுத்தாளர் கி.ரா. அவர் மகன் நேற்று போனில் பேசியவர் வந்திருக்கிறார் என்று கூற திரும்பி என்னைப் பார்த்தார் நான் சிறிய புன்னகையுடன் வணக்கம் ஐயா என்று கூறினேன், அமரும்படி கூறினார். கையிலிருக்கும் பழங்கைளைப் பார்த்து இது என்ன? என்று கேட்டார், தாங்கள் சாப்பிடுவதற்கு பழங்கள் என்று கூறினேன் இவ்வளவா? இனிமேல் எல்லாம் பழத்தோடு வந்து சந்திக்காதே என்று அறிவுறுத்தினார். நான் பரவாயில்லை என்றேன். சற்று நேரம் அமைதி. அவர் எதுவும் பேசவில்லை. மீண்டும் பழையபடி விட்டத்தைப்பார்க்க ஆரம்பித்துவிட்டார். அவர் அமர்ந்திருந்த நாற்காலியைக் கண்டவுடன் எனக்கு நாற்காலி கதையில் வந்த நாற்காலிதான் ஞாபகத்திற்கு வந்தது. அதை அவரிடம் கூறினேன். ஒரு சின்ன சிரிப்பு மீண்டும் அமைதி, விட்டத்தை பார்க்க ஆரம்பித்துவிட்டார்.  கொஞ்ச நேரம் கழித்து  என்னால் அதுவரை படப்படப்பை அடக்க முடியவில்லை ஒருவித கனவுலகத்தில் இருந்ததாகத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன்.அவரே பேச ஆரம்பித்தார்.  அப்புறம் என்ன விஷயமா வந்திருக்க? என்ன பன்ற? என்று விசாரித்தார். நான் பதில் கூற ஆரம்பிப்பதற்குள் அவரின் துணைவியார் வந்தார். அவருக்கு வணக்கம் கூறினேன். அவரும் புன்முறுவலுடன் வணக்கம் செய்து சென்றுவிட்டார். பிறகு  என்ன குடிக்கிறாய் காபியா?, டீயா? என்று கேட்டார். நான் அதெல்லாம் வேண்டாம் பரவாயில்லை என்றேன். அவர் மீண்டும் கேட்டார் காபி என்றேன். அவரின் மருமகள் காபி கொண்டுவந்து  எங்கள் இருவருக்கும் கொடுத்து உள்ளே சென்றுவிட்டார். சற்று நேரத்தில் அவரின் மகனும் வங்கி வேலை விஷயமாக சென்றுவிட்டார். 
வழக்கமான விசாரிப்புகள் சென்றது. பிறகு நான் எழுத்தாளர் ஜெயமோகனின் உதவியுடன் தான் தங்களின் எண் வாங்கினேன் என்றேன். அன்றைய தினம் தங்களின் விமர்சனக் கட்டுரைப் பற்றியும் கூறினேன். அமைதியாக கேட்டுவிட்டு. He is good writer என்று தங்களை ஒரு வரியில் பாராட்டி பின்பு அமைதியடைந்தார். இடையிடையே அவர் பலமாக சிந்தித்துக்கொண்டேயிருந்தார். அப்படி சிந்திக்கும்பொழுது விட்டத்தை பார்த்துக்கொண்டிருந்தார். அந்தப்பொழுது அவரின் முகபாவனைகளில் பலவிதமாக மாறின. ஒவ்வொரு யோசனைக்கும் ஒவ்வொரு முகபாவனை போன்று என்று எண்ணிக்கொண்டேன். அந்த முகபாவனையை கொஞ்ச நேரம் நான் ரசித்துக்கொண்டிருந்தேன். பிறகு இலக்கியங்கள் பற்றி பேச்செடுத்த பொழுது அதிகமாக புத்தகங்களை படிக்காதே, என்றார் நான் சிவில் சர்வீஸ் தேர்விற்கு தயாராகிக்கொண்டிருக்கிறேன் என்று சொல்லியிருந்தேன். அதனால் அவர் நன்றாக படித்து நல்ல அதிகாரியாக வா, அதிகமாக இலக்கியம் படிக்காதே, ஒரு பயனும் இல்லை. தமிழகத்தில் என்னைப் போன்ற சில எழுத்தாளர்கள் மட்டும்தான் நல்ல நலையில் இருக்கிறோம் என்று மனம் வெதும்பி கூறினார். இந்தக் கூற்றை அவரிடம் சற்றும் நான் எதிர்பார்க்கவில்லை.
பிறகு கொஞ்ச நேரம் அமைதி, திடீரென்று புன்முறுவலுடன் என் பக்கம் திரும்பி அம்மா அப்பா பற்றி விசாரித்தார். என்ன ஊர் என்று கேட்டார். நான் கொண்டலாம்பட்டி என்றேன். கிராமமா? என்று ஒருவித புன்னகையும், உவகையும் கலந்த முகப்பாவத்தோடு கேட்ட அந்தக் கேள்வி என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத தருணம். நான் இதுவரை எவரிடமும் அத்தகைய ஒரு முகபாவனையைக் கண்டதில்லை. மிக மிக குழந்தைதனமான கல்லமற்ற அந்த புன்முறுவல் பூத்த முகம் என் அகத்தில் அன்றலர்ந்த மலர் போல் எப்பொழுதும் இருக்கிறது. ஆனால் என் நேரம் நான் இருந்த ஊர் கிராமம் இல்லை. நான் கிராமம் இல்லை கிட்டத்திட்ட டவுண் போன்றது என்றவுடன் மீண்டும் புண்ணகை மறந்து அதே போல் பழைய நிலைமைக்கு சென்றுவிட்டார்.
கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு தற்பொதைய education system சுத்தமா சரியில்ல... வாத்தியாருக்கு எங்க மரியாதை இருக்கு நாம பேசர இங்கிலிஷ்லா ஒரு இங்கிலிஷா இந்த ஆங்கிலம் நம்மல அடிமைபடுத்தறவன் பேசனது. அப்ப அவன் எப்படி பேசுனானோ அப்படித்தான் இன்னும் நாம பேசறோம். ஆனா லண்டன்ல இந்த ஆங்கில அறிவோட போய் பேசுண நம்மல ஒரு மாரி பாப்பாங்க, காலத்துக்கு ஏத்தமாதிரி நம்ம மொழியிலும் மாற்றத்த கொண்டுவரணும், இன்னும் இலக்கண சுத்தத்தோட, சங்க இலக்கியத்திலேயே இருந்து பெரும பேசக்கூடாது. அப்டினா கி.ரா. சங்க இலக்கியம் வேண்டாங்கிரானா னா அப்படியில்ல நமக்கு சங்க இலக்கியமும் வேணும், உலகத்துல இந்தளவுக்கு செறிவான ஒரு மொழியா நம்ம மொழி இருந்திருக்குன்னா அதுக்கு ஆதாரம் சங்க இலக்கியம் தா... ஆனா அந்த சங்க இலக்கியத்தை இப்ப படிச்ச எத்தன பசங்களுக்கு புரியுது ஒருத்தனுக்கும் புரியாது. அதுனால இப்ப எழுதுற நாவல்கள், இலக்கியங்கள் எல்லாமே பேசுற மொழியில தான் எழுதனும், இங்கிலிஷ் காரன் பேசுறது ஒரு மாரி எழுதுறது ஒருமாரியா எழுதுறான். நாமதான் உரைநடை தமிழ் பேச்சு தமிழ் அப்டின்னு நிறையா வெச்சிட்டுயிருக்கோம். இப்ப பேசுறப்ப நீயும் நானும் இங்கிலிஷ்னுதான் சொல்லுவோம் ஆனா எழுதுறப்ப ஆங்கிலம் னு எழுதுவோம் நான் என்ன சொல்றன்ன எழுதுறதையும் இங்கிலிஷ்னு எழுது யார் என்ன கேக்க போறா அப்படி பேசுற மொழியில எழுதுனா தா நம்ம மொழிய உலகம் முழுசா நாம கொண்டுட்டு போக முடியும். என்று தன் கருத்தை கூறினார்.
ஆய்வியல் நிறைஞர், முனைவர் போன்ற ஆய்வு படிப்புகளில் பெரும் மாற்றத்தை கொண்டுவரவேண்டும். மீண்டும் மீண்டும் எழுதுனதே எழுதி இதுதா ஆய்வுனு சொல்றதுக்கு எதுக்கு டாக்டர் பட்டம். இது எவ்ளோ பெரிய ஏமாத்து வேலை. டாக்டர் பட்டம் எதுக்கு தரானுங்க சொந்தமா யாரும் சொல்லாத கருத்த, எழுதாதத எழுதுறவனுக்கு தரது. இப்ப வர்ற 90 சதவீத ஆய்வேடுக்கள் சொல்றதேதா திரும்ப திரும்ப சொல்றது. நான் பேராசிரியரா போன கல்லூரில அங்க இருக்கிற லைப்ரரில எடுத்து பார்த்த எல்லா ஆய்வேடும் காப்பி அடிச்ச மாரி ஒன்னா யிருந்தது. இதுக்கெதுக்கு டாக்டர் பட்டம். அதுல வேர ஒருத்தன் எப்படி கவிதை எழுதியிருக்கான், என்று சமீபத்தில் தான் தொகுத்த கட்டுரைகள் தொகுப்பு நூலாக பதிவுகள் எனும் நூலில்  இடம்பெற்றிருந்த ஒரு மாணவன் எழுதிய கவிதை ஒன்றை எனக்கு அவரே வாசித்துக்காண்பித்தார்.
கவிஞர் தபரா என்பவர் எழுதிய அந்தக் கவிதையை தருவதற்கு முன்பு அவருக்கே உரித்தான அந்த அங்கத நடையில் இப்படி கூறுகிறார். “கவிஞர் தபிரா எழுதிய அந்த எழுத்தை பிரபலப்படுத்தும் நோக்கம் எனக்குக் கிடையாது. நான் வாசித்தத்தை எனது நாட்கறிப்பில் பதிவு செய்யனும் என்றுபட்டது. பேராசிரியர்கள் மன்னிப்பார்களாக.” அடுத்ததாக அந்தக் கவிதை தருகிறார். இதோ கவிதைத் தலைப்பு பேராசிரியன் படிக்கிற கவனி, என்றார் கி.ரா.
ஒரே கட்டுரையை
திரும்பத் திரும்ப
ஒன்பது இடங்களில்
படித்து படித்து
பணம் பண்ணும்
ஏமாற்றுப் பேர்வழி   
(யாரு பணம் பன்றா பேராசரியன் நல்லா கவன்ச்சியா ஒரே கட்டுரை திரும்பத் திரும்ப ஒன்பது இடங்கள்ல படிச்சு ஒவ்வொரு டைம் பணம் பன்றான்னு எழுதியிருக்கான்  - இது கி.ரா. விளக்கம். அடுத்துப் படிக்கிற கவனி)
அங்கும் இங்கும்
பார்த்து எழுதி
புத்தகம் போட்டு
அதையும் விற்க
ஆளைப் பிடிக்கும்
அறிவுக் கொழுந்து (சற்று அழுத்தமாக வாசிக்கிறார்)

வாய்ப்புக் கொடுத்து
வாய்ப்பு வாங்கி
பணத்துக்கு மேல்
பணத்தைப் பெருக்கும்
கொடுக்கல் வாங்கல்
ஈட்டிக் காரன்

பாடம் நடத்த
பேப்பர் திருத்த
வேவு பார்க்க
ஆய்வு மாணவரை
அடிமையாய் நடத்தும்
கொடுங்கோல் பண்ணை

மாணவர் எவனும்
மாட்டிக் கொண்டால்
சீமைச் சரக்கும்
கோழிக் கறியும்
உள்ளே தள்ளும்
குப்பைத் தொட்டி

வெளியூர் போன
படிப் பணம்
எவ்வளவு பெற்றும்
ஓசியில் தின்றே
வயிறு வளர்க்கும்
ஈனப் பிறவி (மீண்டும் இந்த இடத்தில் அழுத்தம் கொடுத்து வாசிக்கிறார்)
கேட்டியா? ஒரு மாணவன் ஒரு பேராசிரியன் பத்தி எழுதியிருக்கிற கவிதைய... இப்டிதான் நம்ம கல்வி முற இருக்கு. நாம சுதந்திரம் வாங்கி எவ்ளோ வருஷம் இருக்கும் இன்னும் நம்ம கல்வி முறல பெரிய மாற்றத்த எடுத்துட்டு வரணும். என்று கூறினார்.
பொதுவாக கி.ரா. கவிதைகளை அவ்வளவு ரசித்து படிப்பதில்லை. கி.ரா. விற்கு கவிதை வடிவத்தில் ஈடுபாடு இல்லை என்ற பொதுக்கருத்து ஒன்று உண்டு. ஆனால் அவரே அந்தக் கவிதையை மிக ரசித்து ஒவ்வொரு ஒரியாக நிறுத்தி நிதானமாக மீண்டும் மீண்டும் வாசித்துக் காண்பித்தார். அந்த சமயம் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
இதுபோன்று கொஞ்சம் பேசிக்கொண்டிருந்தோம். 10.30 மணியிலிருந்து ஒரு மணி வரை கி.ரா. வுடன் நேரம் சென்றது தெரியாமல் அவரின் புன்முறுவல்கள், அவரின் கருத்துக்கள், அவரின் முகபாவங்களை ரசித்துக்கொண்டிருந்தேன். பின்பு அவரே கேட்கனும் நினைச்சதுல்லாம் கேட்டுட்டயா? எதுவும் மறக்கலல்ல? என்று கேட்டார் எங்கே நிறை கேட்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன் படபடப்பில் ஒன்றும் கேட்வில்லை. ஆனால் அவரைப் பார்த்தது பேசியது, மிகுந்த மனநிறைவை கொடுத்தது. வருகிறேன் என்று சொன்னபொழுது, இன்னொருவாட்டி வரப்பலா எதுவும் வாங்கிட்டு வராதா... என்று மீண்டும் அறிவுறுத்தி, அப்ப உன்ன பாத்ததுல ரொம்ப சந்தோஷம் என்று கூறி எல்லாம் சம்பிரதாயத்துக்குத்தான், என்று புன்முறுவலுடன் விடைகொடுத்தார். மிகுந்த மனநிறைவுடன் நான் வெளிவந்தேன்.
அங்கு காத்துக்கொண்டிருந்த நண்பர்களுடன் சென்றேன், அன்றைய மதியப்பொழுது புதுச்சேரி அருங்காட்சியகத்திற்கு சென்றோம். அரிக்கமேட்டில் கிடைத்த தொல்பொருட்களுக்கென்று பிரத்யேகமாக ஒரு அறை ஒதுக்கி காட்சிப்படுத்தியிருந்தனர். ஒவ்வொரு பொருளும் என்ன என்று விளக்கியிருந்தார்கள். செப்புத்திருமேனிகள், ஓவியங்கள், பிரெஞ்சு கவர்னர்கள் பயன்படுத்தி மேஜை, பொருட்கள், டுப்ளக்ஸின் அலுவலக அறை மாதிரி, அக்காலத்திய சாரட் வண்டி, புவியியல் சார்ந்த பொருட்கள் என நிறைய கண்குளிர கண்டு, வரலாற்றை நேரடியாக அனுபவித்து தெரிந்துக்கொண்டோம். அன்றைய பொழுது எனக்கு மிகுந்த மனநிறைவை தந்தது. பல நாட்கள் இந்த நாளை நினைத்து நினைத்து உவைகைக்கொள்வேன் என்று எண்ணியிருந்தேன்.

No comments:

Post a Comment