Tuesday, February 12, 2019

ரசம் சோறு - சிறுகதை - சபரிராஜ்


பசி வயித்த சுண்டி இழுக்குது, திடீர்னு கண்ணு முன்னாடி பச்சை சிவப்புனு வந்து கடைசியா இருட்டிக்கிட்டு வந்து கீழ விழுந்துருப்..

“ஏய்! சாந்தி இங்க வா”ன்னு ரெஜினா அக்கா கூப்பிட்டத கேட்டு திரும்பி பாத்தேன். கையில வைச்சிருந்த அவங்க சேலைய தண்ணி பக்கெட்டுல போட்டுட்டு துவைக்கிற கல்லுல இருக்கற சோப்பு வழுக்காம பத்திரமா அந்த அக்காகிட்ட போனேன்.
“பச்சை உடம்புகாரி வெறும் வயித்தோட வேலை செய்யாத கொஞ்சம் டீத்தண்ணி குடிச்சுட்டு போய் வேலைய பாரு” ரெஜினா அக்கா கொஞ்சம் நல்லவங்க, வீட்ல துணிதுவைக்க வரும்  போதெல்லாம் டீ, ரஸ்னானு எதாவது கொடுப்பாங்க. சாப்பாடு வடிக்கும் போது கஞ்சில ஒரு கை சோறு போட்டு கொடுப்பாங்க. நெறையா நாள் என்னோட மதிய சாப்பாடே இது தான்.
நானும் அவங்களுக்கு நெறையா வேலை செஞ்சு கொடுப்பேன். கடைக்கு போய் சக்கரை வாங்கிட்டு வரது, நல்ல தண்ணி வரும் போது புடிச்சி கொடுக்கறது, வீடு சுத்தம் பண்ணும் போது பாத்திரம் எடுத்து கொடுக்கறதுனு நெறையா… ஆனா என்ன என்னைக்காவது கால் வலிக்குதுனு கடைக்கு போகலைனு சொன்னா, கஞ்சிய எடுத்து கீழ ஊத்திருவாங்க.
“டீய குடிச்சிட்டு கடைக்கு போய் ஒரு கிலோ தக்காளியும் தேங்கா எண்ணெ அர லிட்டரும் (அந்த அக்கா தேங்கா எண்ணெலதான் சமைப்பாங்க) வாங்கிட்டு வரியா..?”
’கொடுங்கக்கா, போயிட்டு வரேன்’னு சொல்லி கூடையும் காசையும் வாங்கிட்டு கடைக்கு போயிட்டிருந்தேன். இந்த மாதிரி ஒரு நாள் கடைக்கு போகும் போதுதான் நான் அவர பாத்தேன்.
நல்லா துறு துறுனு இந்த தெரு முழுக்க சுத்திட்டு இருப்பாரு. அவர் நெத்தில ரெண்டு முடி முன்னாடி விட்டுருப்பாரு. ரஜினி ரசிகரு அதனால ஸ்டைலா பீடி குடிச்சிட்டு இருப்பாரு.
நாங்களா வீட்ல சொல்றதுக்கு முன்னாடி என் அப்பாவோட கூட்டாளி எங்கள தியேட்டர்ல வச்சி பாத்துட்டு அப்பாகிட்ட சொல்லிக் கொடுத்துட்டாரு. அப்புறம் நெறையா சண்டை போட்டு அழுது கடைசியா(என்) அவரோட ஃபிரண்டு தலைமையில ஊர் பிள்ளையார் கோவில ரொம்ப சாதாரணமா கல்யாணம் முடிஞ்சது. அன்னிக்குனு பாத்து ஜெயிச்ச ஜெயலலிதா புண்ணியத்துல எங்க கல்யாணத்துக்கு வான வேடிக்கையெல்லாம் பாத்தோம்.
“அண்ணா ஒரு கிலோ தக்காளி அர லிட்டரு தேங்கா எண்ணெ” வாங்கிட்டு மிச்ச காச வாங்கி கைல வச்சிட்டு வீட்டுக்கு திரும்பி வந்துட்டு இருந்தேன்.
ஒரு வாய் சோத்துக்கு எவ்ளோ கஷ்ட பட வேண்டியதா இருக்கு..? ஆனா ஒரு வருசத்துக்கு முன்னாடி வாழ்க்கை எப்படி இருந்தது... அப்பா ராசா இல்லைனாலும் என்ன ராசாத்தி மாதிரி வச்சிருந்தாரு. எவ்ளோ செல்லம் எனக்கு..? பிடிச்சதெல்லாம் கேட்காமலே கெடைக்கும், இவர தவிர. பிடிச்சவன கல்யாணம் பண்றது என்ன அவ்ளோ பெரிய தப்பா..?
யோசிச்சிட்டே வீடு வந்து சேந்தேன். ”வா பாப்பா கடைல கூட்டமா..?”னு கேட்ட கேள்விக்கு ’இல்லக்கா’னு சொல்லிட்டு மளிகை கூடைய கொடுத்துட்டு போய் மிச்சம் இருக்கற ரெண்டு சேலையையும் துவைச்சு போட்டுட்டு, போறேங்கானு அவங்க முன்னாடி போய் நின்னேன்.
“சரி, இந்தா”ன்னு கையில ஒரு குண்டாவ கொடுத்தாங்க, மகராசி! இன்னைக்கு கஞ்சிக்கு பதிலா சுடு சோறும் மிளகு ரசமும், நல்லா மணமா இருந்துச்சு. அந்த அக்கா நல்லா ரசம் வைக்கும், அதோட மணம் நாலு வீடு தள்ளி மணக்கும், அத விட கத்திரிக்கா பொறியல் பண்ணுவாங்க, அவ்ளோ ருசியா இருக்கும்.
பாத்திரத்த வாங்கிட்டு நான் வீட்டுக்கு வந்தேன், மூனு வீடு தள்ளிதான் எங்க வூடு. நான் வீட்டுக்குள்ள வரும் போது என் பையன எங்க அத்தை கையில வச்சிருந்தாங்க. அவரு காலைல வேலைக்கு போனாருனா திரும்பி வர மணி எழு ஆயிடும். என்ன பாத்ததும் மூஞ்சி முழுக்க சிரிக்கிறான். பையன என்கிட்ட கொடுத்துட்டு அத்தை ரேசன் கடைக்கு போய்ட்டாங்க.
என் பையன பாத்துட்டே இருக்கணும் போல இருக்கும், அவ்ளோ அழகா இருப்பான். இந்த பாப்பாத்தி பாட்டி இருக்காங்கல்ல..? அவங்க கூட மூச்சுக்கு முன்னூரு தடவை சொல்வாங்க ’எம்ஜிஆர் மாதிரி இருக்கான், எம்ஜிஆர் மாதிரி இருக்கான்’னு. அவன் மூஞ்சிய பாத்துட்டே இருந்தா பசி கூட மறந்து போகும். கொஞ்ச நாள் நான் அப்படித்தான் பாத்துகிட்டே பசியோட இருப்பேன்.
ஆனா, இன்னைக்கு சோறு இருக்கறதுனால தான் என்னவோ பசி கண்ணா முளி திருகிட்டு வருது. பையன ஒரு சேலைய விரிச்சு படுக்க வச்சிட்டு, தட்டத்த கழுவ உள்ள போனேன், வந்து பாக்கறேன். சொய்ன்னு… ராக்கெட் விட்ட மாதிரி படுத்துகிட்டே நேரா சாப்பாட்டுலேயே ஒன்னுக்கு போய்ட்டான்.
என் ராஜா, என் கண்ணு, என் மயிலு அழாத டா அழாத னு அவன் அழுகைய நிறுத்திட்டு, அவனுக்கு துணி மாத்தி விட்டுட்டு ஒரு ஓரமா படுக்க வச்சுட்டு வந்தேன். சாப்பிடறதுக்கு முன்னாடி ஒரே நிமிசம் யோசிச்சேன், பரவால்ல என் பையன்தானே..!

No comments:

Post a Comment