Tuesday, March 3, 2020

கனவின் கண் - சிறுகதை - நரேந்திரன்


கனவின் கண்
1
சூரிய கதிர்கள் கண்களை கூசச்செய்வதாக இருந்தது. கண்களை திறக்க முயற்சிக்கையில் தூக்கம் இன்னும் மீதமிருப்பதாக தோன்றியது. ஒரு விதமாக சமாளித்துக்கொண்டு அசதியுடன் எழுந்தமர்ந்தேன். ஏதோ விவரிக்க முடியாத வலி உடல் முழுவதும் பரவி இருந்தது.தூக்க கலக்கத்துடன் நோக்கியபொழுது மேலே சிறிது தூரத்தில் ஆளுயர நீள்வட்ட துளை போன்று ஏதோ தெரிந்தது. மயக்குநிலை என்றெண்ணி கண்களை கசக்கி விட்டு பார்த்தபொழுது அங்கே கச்சிதமாக செதுக்கப்பட்ட ஒரு நீள்வட்ட துளை துல்லியமாக தெரிந்தது. அதனடியில் இருந்து தொடங்கிய  நான்கு மரத்தால் செதுக்கப்பட்ட படிகள் என்னருகில் வந்து முடிந்திருந்ததன. நான் திடுக்கிட்டு என்னை சுற்றிலும் கண்களை துழாவினேன். என் அடியில் மெத்தை போன்று காயிந்த மஞ்சள் நிற இலைகள் சருகுகளாக அடர்ந்திருந்தது. கூர்ந்து நோக்கும்பொழுது, அது நன்றாக அறைபோல் செதுக்கப்பட்ட ஒரு மரப்பொந்து. அதன் அகலம் அது சற்று பெரிய மரம் என்பதை உணர்த்தியது.
நான் சிறிது சிறிதாக என்னை மீட்டுக்கொண்டு அச்சருகுகளில் நடந்து படியேறி துளை வழியாக வெளியேறினேன். சருகுகளில் நான் நடந்த ஒலி என்னுள் ஒரு கூச்சத்தை ஏற்படுத்தியது. வெளியில் நான் என்றுமே கண்டிராத ஒரு காடு என் கண் முன்னே விரிந்திருந்தது. சில வினாடிகள் மெய்மறந்து அதனை பார்த்து கொண்டிருந்தேன். தெளிந்த வானத்தின் வழியாக சூரிய ஒளி என் மீது படர்ந்திருந்தது. அங்கே மரங்கள் அனைத்தும் இலையுதிர் கால உக்கிரத்துடன் மஞ்சள் நிற இலைகளை உதிர்த்து கொண்டிருந்தன. அங்கு எங்குமே பச்சை தென்படவில்லை. முழுவதும் மஞ்சள் நிறத்தாலான இலைச்சருகுகள். கதிரவனின் கதிர்களால் அது பொன்வண்ணம் பெற்று ஜொலித்துக்கொண்டிருந்தது. கண்கள் இயல்பாக என் முன்னே சென்ற பாதையை கண்டுகொண்டது. என்னையும் மீறி அதை தொடர்ந்து என் கால்கள் இயங்க ஆரம்பித்திருந்தது.
சிறிது தூரம்தான் நடந்திருப்பேன்.என் காதுகளில் இலைச்சருகின் மேல் யாரோ நடந்து வரும் ஒலி கேட்டு திரும்பி பார்த்தேன். அங்கே ஒருவன் தூரத்தில் உள்ள ஒரு மரபொந்தின் வழியாக வெளியேறி என்னை நோக்கி வந்துகொண்டிருந்தான். அவன் கறுத்த நிறமுடையவனாக இருந்தான். அவனது கருமேனி எண்ணெய் தடவிய மினுமினுப்பை பெற்றிருந்தது.அவன் என்னருகில் வந்து நட்புடன் கூடிய ஒரு புன்னைகையை உதிர்த்துவிட்டு,
"நான் இதற்கு முன் எந்த மனிதரையும் இங்கே கண்டதில்லை" என்றான். அவன் குரல் இனிமையுடன் கூடியதாக இருந்தது.

"இது எந்த இடம்? நீ யார்?"  என்று கேட்டேன்.

"இது கனவின் நீட்சி, நான் கனவின் கீழ் அடுக்குகளின் நீட்சியாக இவ்விடம் வந்து சேர்ந்தேன். நீயும் அவ்வாறுதான் இங்கே வந்திருக்க முடியும்" என்றான்.

"இங்கு ஏன் பச்சை தென்படவேவில்லை?"

"நானும் பச்சையை தினமும் தேடி பார்க்கிறேன். என் கண்களுக்கும் தெரியவில்லை. எல்லாம் கருமையாகத்தான் தெரிகிறது" என்று கண்களை  சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு கூறினான்.

நான் திடுக்கிட்டு "என்ன கருமையாகவா.எனக்கு எங்கும் மஞ்சளாகவே தெரிகிறதே? என்றேன் சற்றே வியப்புடன்.

அவன் தெளிவடைந்த பார்வையுடன் என் கண்களை நோக்கி "அது உன் கனவின் கண் வழியாக அவ்வாறு தெரிகிறது" என்றான்.

"கனவின் கண்களா?" மறுபடியும் வியப்பு.

"ஆம். நாம் இருவரும் ஒரே கனவின் நீட்சியை பெற்றிருக்கிறோமே தவிர, இருவரின் பார்வைகள் வேறு வேறாகத்தான் இருக்க முடியம்" என்றான்.
நானும் புரிந்ததற்கான சிறு புன்னகையை உதிர்த்துவிட்டு, மேற்கொண்டு சென்ற பாதையின் வழியாக இருவரும் நடக்க ஆரம்பித்தோம். அவன் ஒரு வித மௌனத்தின் ஊடாக என் அருகில் வந்து கொண்டிருந்தான். நானும் சுற்றுமுற்றும் பார்த்து கொண்டிருந்தேன். தீடீரென்று ஒரு கேவல் ஒலி என் செவியை தொட்டது. உற்றுநோக்கும் போது அது ஒரு பெண்ணின் கதறல் போன்றிருந்தது. நான் வேகமாக அந்த ஒலி வந்த திசையை நோக்கி ஓடினேன். சிறிது தூரத்தில் அந்த காட்சி என்னை பதறச்செய்தது.ஒருவன் மூர்க்கமாக ஒரு பெண்ணை புணர்ந்து கொண்டிருந்தான்.நான் மிரட்சியுடன் என் அருகே வந்து கொண்டிருந்தவனை பார்த்தேன். அவன் இயல்பாக என் அருகில் வந்து என்ன என்பது போல் பார்த்தான். நான் அந்த காட்சியின் திசையை சுட்டி காட்டி,

"என்ன கொடுமை?ஏன் இவ்வாறு மூர்க்கமாக புணர்ந்து கொண்டிருக்கிறான் அவன்?" என்றேன் உச்சகட்ட பதற்றத்துடன்.

வியப்பு ததும்பிய விழிகளால் என்னை நோக்கி "உனக்கு அப்படியாகவா தோன்றுகிறது." என்றான்.
"ஏன் உனக்கு எவ்வாறு தோன்றுகிறது? என்றேன் கோபத்துடன்.

"அவன் அந்த பெண்ணை உண்பது போல் தோன்றுகிறது" என்றான்.

அச்சமயம் எங்கள் பேச்சொலி கேட்டு புணர்ந்து கொண்டிருந்தவன் எங்களை நோக்கினான். அவன் முகம் பேய் அறைந்தது போல் மாறியது. சட்டென்று அந்த பெண்ணை விட்டுவிட்டு புதர்மறைவில் பாய்ந்து மறைந்தான். அந்த  பெண் மின்சாரம் பாய்ந்த அதிர்ச்சியுடன் அங்கே மிக மெதுவாக அமர்ந்தாள். அவள் எங்களை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. அந்த பெண்ணின் உடல் என்னுள் காம உணர்வை உடல் முழுதும் பரவ செய்தது. அதன் வெறியேறிய கண்களுடன் என் அருகில் இருந்தவனின் கண்களை நோக்கினேன். அவன் கண்களிலும் அந்த வெறி குடியேறியிருந்தது. அவன் கண்கள் வழியாக என் கண்கள் பசியேறிய மிருக கண்களை போல் தெரிந்திருக்கும் என்பதை உணர்ந்தேன். அவன் இரையை பங்கு போட வந்திருக்கும் ஒரு மிருகமாக என்னை கருதி இருப்பான் என்ற எண்ணம் அகத்தில் துல்லியமாக எழுந்தது.
மிக வேகமாக அந்த பெண்ணை நோக்கி ஓடினோம். அவள் கூந்தல் சரிந்து அமைதியாக தரையை நோக்கி அமர்ந்திருந்தாள். அவளை அடைவதற்கு முன்னரே இருவரும் மூர்க்கமாக சண்டையிட தொடங்கியிருந்தோம். அவன் என்னை பலம் கொண்டமட்டும் அடித்து கொண்டிருந்தான். நானும் அவ்வாறே அவனை அடித்து கொண்டிருந்தேன். சண்டை முற்றி இருவரும் ரத்தம் சொட்ட சொட்ட, ஒரு காட்டு விலங்கின் ஆங்காரத்துடன் பொருதி கொண்டிருந்தோம்.
சட்டென்று ஒரு சிரிப்பு சத்தம். நாங்கள் சண்டையை நிறுத்திவிட்டு, சிரிப்பு வந்த திசையை நோக்கினோம். அவள்தான் சிரித்து கொண்டிருந்தாள். அவளின் விழிகள் எங்களை நோக்கி இருந்தது. விழி குருதியேறி மிக பயங்கரமாக தென்பட்டது. எனக்கு அச்சம் உடலின் உதறலாக வெளிப்பட்டது. அவனும் அச்சம் நிர்மபிய விழிகளுடன் என்னை நோக்கினான். சிரிப்பின் சத்தம் வர வர பெரிதாகியது. அதை உணர்ந்து நான் ஓட முயலும் போது ஒரு பலத்த காற்று எங்களை சுழற்றி அடித்தது. என்னை சுற்றி முழுவதும் மஞ்சள் இலைச்சருகுகள், என் உடலின் ஒவ்வொரு பாகமாக நுழைந்து கொண்டிருந்தது. நான் அதனுள் முற்றிலுமாக கரைந்து கொண்டிருந்தேன்.
2
 விழிப்பு வந்து கண்களை திறந்த பொழுது அறை முழுவதும் சூரிய வெளிச்சம் நிரம்பி இருந்தது. மணி பார்த்தேன் 7.15. சிறிது நேரம் பித்துப்பிடித்தாற்போல் இருந்தது.ஆம் கனவுதான், இவ்வளவு துல்லியமாக நான் எந்த கனவையும் கண்டதாக எனக்கு ஞாபகம் இல்லை. சிரிப்புதான் வந்தது. சட்டையை மாட்டி கொண்டு டீ குடிக்க கிளம்பினேன். டீ உள்ளே இறங்கியதும் ஒரு வித அமைதியை அகம் உணர்ந்தது. ஏன் இவ்வாறெல்லாம் கனவு வருகிறது என்று நினைத்து கொண்டே, சட்டைப்பையில் பணம் எடுத்து கொடுக்கும் போது ஏதோ கீழே விழுந்தது மாதிரி இருந்தது. என்ன அது என்று நோக்கிய பொழுது, இரண்டு மஞ்சள் இலைகள் சூரிய ஒளியில் தகித்துக்கொண்டிருந்தன.

சிவப்பு - சிறுகதை_ நரேந்திரன்


சிவப்பு
1
நான் நிர்வாணமாக நின்று கொண்டிருந்தேன். ஆனால் அந்த பிளாட்பாரத்தில் நடந்து கொண்டிருப்பவர்கள் என்னை கண்டு கொண்டதாக தெரியவில்லை. எனக்கு அச்சமும் அவமானமாகவும் இருந்தது. எதற்காக இங்கு நின்று கொண்டிருக்கிறேன் என்று தெரியவில்லை. இது எந்த இடம் என்று கூட புலப்படவில்லை. நான் என் வாழ்க்கையில் இதுவரை கண்டிராத இடம். சுற்றிலும் கட்டிடங்கள் காடுகள் போல் அடர்ந்திருந்தது. அதன் ஊடாக அமைந்திருந்த நடைமேடை முழுவதும் மனிதர்கள் வேகமாக நடந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் நடை இதுவே வாழ்வின் கடைசி நடை என்பது போல் மிக ஆழ்ந்தும் கவனத்துடன் கூடியதாக இருந்தது. அதில் ஒருவர் கூட சேர்ந்தாற்போல் நடக்கவில்லை. அனைவரும் தனித்தே நடந்து கொண்டிருந்தனர். நான் அவர்களை மிரட்சி உடன் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர்களின் உடை அனைத்தும் ஏதோ உயர்குடி விருந்திற்கு அணியப்படும் ஆடைகளை ஒத்திருந்தது.
அந்நொடியின் இருப்பை என்னுள் உணர்ந்தவுடன், ஒரு மெல்லிய அச்சம் என்னுள் பரவ தொடங்கியது. மழைத்தூறல் போல் சிரியதாக என்னுள் எழுந்த அச்சம் கனமழையின் அடர்வுடன் என் உடல் முழுவது பரவியது.என்னையும் மீறி நான் ஓட தொடங்கியிருந்தேன். அச்சமயத்தில் என்னுள் எந்த கடந்த காலமும் நினைவில் இல்லாததை உணர்ந்தேன். நான் யார் என்பதையும் என்னுள் மீட்டெடுக்க முடியவில்லை. மீள்வதற்கான எந்த அறிகுறியும் அங்கு தென்படவில்லை. களைத்து மூச்சிரைக்க நின்றவுடன் ஒரு மிகப்பெரும் வெறுமை என்னை பீடித்திருந்தது. திடீரென்று என்னுள் ஏற்பட்ட மூர்க்கத்துடன் அங்க என்னை கடந்து சென்ற ஒருவனை பலத்துடன் உலுக்கி,

நீங்களெல்லாம் யார்? இது என்ன இடம்? எதற்காக இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறீர்கள்?  என்று கத்தினேன். நான் அவ்வாறு கத்தியது எனக்கே என் குரல் வினோதமாக ஒலிப்பதை போலிருந்தது.

அவன் என்னை ஒரு வினாடி உற்று பார்த்து விட்டு உரக்க சிரித்தான். அப்போது என்னுள் ஒரு மிகப்பெரும் திகில் பரவியது. ஆம், அவன் பற்கள் சிவப்பேறியிருந்தன. அது ரத்தம் உறைந்த நிறத்தில் இருந்தது. நான் என்னை இழந்து மூர்ச்சையாகி இருந்தேன்.  
2

மயக்கம் தெளிந்த போது, கண்களை பறிக்கும் வெளிச்சத்துடன் கூடிய ஒரு அறையில் கிடத்தப்பட்டிருந்தேன் . கீழே மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் கட்டிலும் மெத்தையும் போன்றிருந்தது. என் மீது நோயாளிக்குரிய நீல நிற ஆடை உடுத்தப்பட்டிருத்தது. அறை சுத்தமாக இருந்தது. எங்கோ சிறிது தூரத்தில் ஒரு வித அறுவை எந்திரத்தின் ஒலியும், கதறல் போன்ற ஒலியும் காதை அறைந்தது. நான் எவ்வாறு இங்கே  வந்தேன்? என்று எண்ணங்களை தொகுக்க முயலும் போது  எதுவுமே நினைவில் இல்லை. அச்சமயத்தில் ஒரு பெண் என் அறைக்குள் நுழைந்தாள். அவள் தோற்றம் ஒரு மருத்துவரை ஒத்திருந்தது. அவள் என்னை பார்த்து மெலிதாக ஒரு புன்னகை புரிந்தாள். அவள் என்னை நோக்கி வந்து,
"இப்போது எவ்வாறு உணர்கிறீர்கள்?" என்று கேட்டாள். அவளது குரல் கனிவுடன் கூடியதாக இருந்தது.

"பரவாயில்லை" என்றேன்.

"நான் எங்கிருக்கிறேன்?  நான் யார்?" என்று அவளிடம் கேட்டேன்.

அவள் இக்கேள்விக்கு பலமுறை பழக்கப்பட்டதிற்கான ஒரு பார்வையை என்னிடம் உதிர்த்துவிட்டு, அவள் கொண்டுவந்திருந்த மருந்தை என்னுள் செலுத்தினாள். நான் மயக்க நிலைக்கு சென்று கொண்டிருக்கும் போதுதான் உணர்ந்தேன் அந்த மருந்தும் சிவப்பாக இருந்ததை.

3

நான் இப்போது அந்த நடை மேடையில் நடந்து கொண்டிருந்தேன். அந்த நடை ஏதோ ஒரு மீளா சுழற்சி போல் நிகழ்ந்து கொண்டிருந்தது. நான் ஒரு உயர்குடி பெருமக்களுக்கு உண்டான உடையில் இருந்தேன். அந்த நடை திரும்ப திரும்ப ஒரே இடத்தை சுற்றி சுற்றி நிகழ்ந்து கொண்டிருந்தது. அதை எனது அகம் உணர்ந்த போதிலும் என்னால் அந்த நடையை நிறுத்த முடியவில்லை.
தீடீரென்று என்னை யாரோ உலுக்குவது போல் இருந்ததது. நான் நிமிர்ந்து பார்த்தேன். ஒருவன் என் முன் நிர்வாணமாக நின்று கொண்டிருந்தான்.



Monday, March 2, 2020

திவாகர் - வாசிப்பனுபவங்கள்


கடலுக்கு அப்பால் வாசிப்பனுபவம்

ஏழாம் உலகம் வாசிப்பனுபவம்

குருதிப்புனல் வாசிப்பனுபவம்

உப்புவேலி வாசிப்பனுபவம்


Thursday, March 14, 2019

கட்டுரைகள் - தீனதயாளன்

1.ராஜ் கவுதமனின் "கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக" நூல் பற்றிய விமர்சனம்.

2. செகாவும் ஜெ.கே வும்   கட்டுரை

3. வள்ளுவத்தை வாழ்வியலாக்க முடியுமா? - உரை

4. யார் இவன் - பாரதி பற்றிய கட்டுரை

நன்றி.

- தீனதயாளன்

கவிதைகள் - லாஓசி

வீடு தேடி
அலையும் பறவைகள்,
மதியம் வெட்டப்பட்ட மரம்!

கையில் ஒட்டிய
வண்ணத்து பூச்சி சிறகின் நிறம்
மலரிலிருந்து அங்கு ஒட்டியிருக்குமோ??

சலனபடுத்த
மனமின்றி
கரையமர்கிறேன்...
சலனமின்றி நீந்திகொண்டிருக்கிறது நிலவு!!

மை தீர்ந்தும் எழுதிக்கொண்டிருக்கிறேன்,
நான் வாசித்தால் போதுமல்லவா???

நகம் கடிக்கும் பெண்ணின்
கால் விரல் நகம்!

பறக்க முடிந்தால்,
நகர மறுக்கும் வாகனங்களின் ஊடே
விரைந்து செல்லலாமே என்றெண்ணுகிறேன், 
மேலே வானமிருப்பதை மறந்து

தனியாய் விழுந்து தேகம் தொடும் ஒரு துளி நீரை மழை என ஏற்றுகொள்வதில்லை மனது

சொட்டு சொட்டாய் இருள் தின்றுகொண்டிருந்த தீயை ஒரேடியாக தின்றுவிட்டு பதுங்கியுள்ளது இருள்


நிலவு ஏன் தேய்கிறது….?

இரவின் ஒளியில்
இருவரும் ரகசியங்கள் பேசினோம்…
ஒட்டு கேட்க வந்த காற்றையும்
ஒத்தி போக சொல்லி!!
நின்னை மடி சாய்த்து
நிலவொளியில் உறங்க வைக்கையில்
நினைவில் ஒரு சந்தேகம்…
“நிலவு ஏன் தேய்கிறது….??”
தேவதை நீ அருகிலிருந்ததாலோ என்னவோ
தேவன் தோன்றினான் என்முன்னே பதில் சொல்ல…
உன் உறக்கம் கலைக்காமல்
மென் குரலில் அளவளாடினோம்…
“சாதாரணனின் சந்தேகம் தீர்க்க
சாட்சாத் சகலவியாபி வரவேண்டிய அவசியம்??”
“சொர்கத்து தேவதைகளின் தேவதையை
சொந்தமாக்கி கொண்டபின் நீ சாதாரணன் அல்லவே..!”
புரியா இறையின் பேச்சை
புரிந்துகொள்ள முயலாமல், கேட்டு வைத்தேன்,,,
“நிலவொளியில் என்னவள் ஜொலிக்கும் அழகை
நித்தம் ரசிக்க, ஏன் இல்லை
நித்தம் பௌர்னமி??”
“தேவதைகளின் சாசனம் நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை,
ஒரு கதை சொல்கிறேன் கேள்….!
அண்ட சராசரமும்
ஆகாயமும்
இவ்வுலகுடன்
ஈரேழ் உலகும்
உயிரும்
ஊர்மியும்
எண்ணும், எழுத்தும்
ஏமாசலமும்
ஐங்கணையும்
ஒச்சமும்
ஓங்காரமும்
ஔவியம் கொள்ள
பலவும்
படைத்திருந்தாலும்…
ஏதோ குறை இருப்பதாய் எண்ணம் கொல்ல
ஏனோ திருப்தி கொள்ளவில்லை மனம்…!
படைப்பின் உச்சமாய் சில
படைப்புகளை செய்தேன்.
தேவதைகள் என்று பெயரிட்டு
தேவர்கள் அவற்றை போற்றினாலும்
சில குறைகள் கண்டேன் அதிலும்….!
சித்தம் பரிதவிக்க,
ஈசன் அடிபடிந்து அவர் சொற்படி
ஈரேழு ஆண்டுகள் தவம் கிடந்து
திறமை அனைத்தையும்
திரட்டி ஷ்ருஷ்டித்தேன் .
திவ்ய தேவதையை…!!
தேவதைகளின் தேவதையை…!!
தேவதேவதையை…!!
தனி உலகு உண்டாக்கிட விழைந்தேன்
தங்க தேவதைக்கு….
அவளோ,
அண்டசராசாத்தை
அழகாக்க பிறந்தவளை
அகிலம் சுற்ற
அனுமதிக்க வேண்டினாள்.
என் படைப்பின் சாரத்தை,
கற்பனையின் உச்சத்தை,
நீண்ட யோசனைக்கு பின்
நீங்க அனுமதித்தேன்…
தேவதை சாசனமெனும் சில விதிகளுக்குட்பட்டு…!”
“அப்படி என்ன விதிகள் தேவா.?”
“விடிய போகிறது… முழு
விதிகளை பிறகொருநாள் பார்ப்போம்.
விடை மட்டும் இயம்புகிறேன் உன் கேள்விக்கு,
தேவதை தேவலோகத்தில்
அமிர்தத்தில் குளித்தாலும்
பூமியில் அவள் குளிக்க,
நான் தினம் பனித்துளி அனுப்புவதென ஏற்பாடு…!
மஞ்சள் பூசினால் நிறமாறுமே,
அவள் பூசிகொள்ள
திங்கள் ஒரு திங்கள் படைப்பதென்று முடிவு, உடன்
நீர் சொட்டும் தேகம் துடைக்க முகில்களும்..
சூடி முடிந்த கார் கூந்தல் சேர விண்மீன்களும்..!
நுன்சிலையின்
நுன்மேனி நோகாதிருக்க
இந்த கட்டுபாடு…!
இதன்படி, அந்த
தேவதேவதை தினம்
தேய்த்து குளிப்பதால்
தேய்ந்து போகிறது நிலவு..!”
“தேவே… அப்படியானால் நிலவு வளர்வதெப்படி??”
“உன் மடி உறங்கும் தேவதேவதையை கேட்டுகொள்….”



Thursday, March 7, 2019

திலக்கியா - சிறுகதை - பிரவீன் குமார்


திலக்கியா

அழுகை ஓலங்கள் என் உடலை சுற்றி மொய்த்துக்கொண்டிருக்கிறது  நிமிடத்திற்கு ஒரு முறை பூமாலைகள் என் சடலத்தின் மீது போர்தப்படுகின்றன, தலைவிரி கோலத்துடன் என் தாயின் கதறல்கள், துண்டின் துணையோடு தூணில் சாய்ந்துகொண்டிருக்கும் என் அப்பா இவை எதுவும் என் இறப்பை மீட்டெடுக்க போவதில்லை. அவள் விழிகள் உயிரற்ற என்  உடலை சந்திக்கும் தருணம் ஒன்று வாய்த்தால் இறந்த பின்பும் மீளுவேன். அவளின் வருகையை எதிர்பார்த்தபடி தெரு முனையில் அமைந்துள்ள கட்சிக்கொடி கம்பத்தின் படியில் அமர்ந்துகொண்டு போவோர் வருவோரை வெறித்து பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

சூரியன் சாயும் நேரம் மனிதர்களும் அவரவர் இருப்பிடத்தை தத்தம் அடைகிறார்கள். பள்ளி முடிந்து தனது பாட்டியின் விரலை பிடித்துகொண்டு வீட்டிற்கு விரையும் அந்த மழலை, மொபெட்டில் தனது காதலியை அமர்த்திக்கொண்டு உல்லாசமாய் வளம் வரும் அந்த இளைஞன். துப்பாக்கியை தோளில் சுமந்து பராக் பார்த்து கொண்டே தன் மனைவியுடன் செல்லும் அந்த குறவன். என் வீட்டு வாசலின் வழியே எனக்கு காட்சியளிக்கிறார்கள். நான் வேண்டுவது அவளின் முகம்... அவளை தவிர வேறு யாரையும் சிந்திக்க மனது ஒப்பவில்லை. நடந்தே அவள் கிராமத்திற்கு சென்றால் என்ன? இரண்டு வருடத்திற்கு முன்பு பொங்கல் பண்டிகையையொட்டி அந்த கிராமத்திற்கு சென்று வந்த ஞாபகம் அத்தெருவின் வீடுகளும், சாணத்தின் வாசமும் இப்பொழுதும் கூட நினைவலைகளில் தடம் பதித்துகொண்டிருக்கிறது. ப்ச்... நவீன உலகத்தில் மனிதர்களுக்கான சிறகை மட்டும் ஏன் உருவாக்க ஒருவரும் முயற்சி செய்யவில்லை... அப்பிடி ஒன்று அமைந்திருந்தால் இந்நேரம் அவள் கோலமிட வாசலுக்கு வரும் முன்பே என் வருகையை பதிவுசெய்திருப்பேன்.

படிப்பிற்காக நகர வாழ்க்கைக்குள் படி எடுத்து வைத்தாயிற்று புழங்கிக்கொண்டிருக்கும் இன்னல்களை மனதுக்குள்ளோ இல்லை உடலுக்குள்ளோ பதுக்கிவைக்கவேண்டும். பிறரின் சிநேகம் கிடைத்திருந்தால் என்னை நானே பாதுகாத்துகொள்ளும் தேவை இருந்திருக்காது. கல்லூரிக்கு வந்து சேர்ந்து பத்து நாட்களுக்கு மேல் கடந்தும் கூட என் அருகில் அமர்வதற்கு ஒருவரும் பிராயத்தனப்படவில்லை. ஜடை பின்னிய என் கேசமும், மை பூசிய என் சதையும் பிறரை என் வசம் திருப்பாமல் இருந்திருக்கலாம். அவளை பார்க்கும் வரையில் அப்பிடி தான் நிச்சயித்துக்கொண்டேன். இரண்டாம் பாடத்திற்கு மணி அடித்த பொழுது வகுப்பறைக்குள் பிவேசித்தவளின் விழி தேடல் என் இருப்பை தேர்வு செய்தது. எந்த சலணுமுமின்றி என் அருகில் வந்து அமர்ந்தாள். அவள் உடலில் இருந்து வெளிப்பட்ட வாசம் இயற்கையின் நறுமணமா...? இல்லை தேகத்தின் மேல் அப்பியிருந்த செயற்கையின் நறுமணா...? என்று எனக்கு தெரியவில்லை ஆனாலும் எனக்கு பிடித்திருந்தது.
அன்று கல்லூரிக்கு சென்ற முதல் நாள் அவள் அருகில் தான் அமர்ந்தேன். ஏதோ ஒரு உந்துதல் அவள் அருகிலான இருப்பிடத்தை தேர்வு செய்ய தூண்டியது. என்னை பார்த்தாளா என்று தெரியவில்லை நானாகவே அறிமுகம் செய்துகொண்டேன். “ஹாய்... ஐ யம் திலா..” மணிக்கட்டில் சுற்றிக்கொண்டிருந்த கயிறு மட்டுமல்ல அவள் தேகமும் கருப்பு தான். நெற்றியில் பதிந்திருந்த விபுதி அவள் கருமையை அலங்கரித்தது. மௌனத்தில் பதுங்கிக்கொண்டிருந்த பற்கள் சிரிப்பின் வழியே தலைகாட்டியது.

அவள் அணிந்திருந்த கம்மிஸ் எத்தனை விலையோ...! உடையின் சிகப்பும் அவள் மேனியின் சிகப்பும் போட்டிபோட்டுக்கொண்டிருந்தது. அவள் அந்தஸ்த்தை ஒத்திய பெண்கள் கல்லூரியில் பலர் இருந்தும் கூட என்னிடம் தான் அதிகமாக உரையாடிக்கொண்டிருந்தாள். என் பெயரை சொல்லி அறிமுகபடுத்திய நாளிலிருந்து நிமிடத்திற்கு நிமிடம் இலக்கியா... என்னும் நான் அவள் நாவிலிருந்து உதிர்ந்துகொண்டே இருந்தேன். எங்கெங்கோ அழைத்து சென்றாள் என் கரம் அவள் பிடியில் தான் அந்நகரத்தை வளம் வந்து கொண்டிருந்தது.

நகர வாழ்க்கை பழகியும் கூட இலக்கியாவின் வாழ்வு தன் பெற்றோக்கு அனுப்பும் கடிதத்தில் தான் சுவாசித்துகொண்டிருந்தது. எப்பொழுதும் கடிதம் கல்லூரியைபற்றி, நகரத்தைபற்றி குறிப்பாக என்னைபற்றி இலக்கியாவின் எழுத்துக்கள் என்னை ஆராதிக்க தவறியதே இல்லை. ஒரு முறை அவள் ஹாஸ்டல் அறைக்கு செல்லும் பொழுது அனுப்புவதற்கு தயாராக மேசையின் மேல் வைத்திருந்த கடிதத்தை படிக்க நேர்ந்தது அதில் “திலா எனக்கு தெரியாமலே என்னை  தத்தெடுத்துகொண்டாள் அப்பா... அவளை போல் இவ்வுலகில் சினேகிதி இருக்கபோவதில்லை, தயங்காமல் சொல்லுவேன் நீங்கள் எனக்கு பெற்றோர்களாக கிடைத்ததைவிட திலா எனக்கு சினேகிதியாக கிடைத்தது தான் என் வாழ்வில் நான் கொண்ட பெரும் பாக்கியம் கூடியவிரைவில் அவளை நம் கிராமத்திற்கு அழைத்து வருகிறேன்” நீண்டுகொண்டே போனது என்னைபற்றிய புராணமும் இதிகாசமும். அவள் எழுதத் தெரிந்தவள் எழுத்தின் வாயிலாக சொல்லிவிட்டாள் நான் எப்படி நிருபிப்பேன் அவள் என்னுள் கலந்த குருதி என்று.

கல்லூரியில் எங்களுக்கு பெயரும் வைத்தாயிற்று நாங்கள் ஜோடி புறாக்கலாம். நிதர்சனம் அதுவே... எங்களை போல் இல்லை என்று பொறாமைபடும் மாணவிகளும் இருக்கத்தான் செய்தார்கள். சில பொழுது என்னை மாற்றுவிக்கும் தூரிகையாக திலா செயல்பட தொடங்கினாள். அவளை போலவே ஒப்பனைகளை எனக்கும் தோற்றுவித்தாள், ஆங்கிலம் பழக கற்றுக்கொடுத்தாள், துணிவோடு நகர மனிதர்களை எதிர்கொள்ளும் வீரியத்தை என்னுள் விதைத்தவளும் அவளே. என்னை நானே இழக்க தொடங்கிய நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தது. மெல்ல... மெல்ல... திலாவின் ஆக்கிரமிப்புகள் பெருகிக்கொண்டே போனது.

இலக்கியாவுடன் சேர்ந்து நான் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் கானும் இடங்களில் எல்லாம் என் வீட்டு சுவற்றில் பளிச்சிடும். கல்லூரி மட்டுமல்லாது வீட்டிலும் அவள் முகத்தை தேடியே என் மனம் அலைந்துகொண்டிருந்தது. படிப்பு, லட்சியம், எதிர்காலம் எதைபற்றி சிந்தித்தாலும் இலக்கியாவின்றி அது முழுமை பெறாது என்றே நம்பதொடங்கினேன். தனிமையில் அவளை நினைத்து சிந்திக்கும் பொழுதுகளில் ரோமங்கள் தலை தூக்கி அதில் நீர் வழிவது போல் என் தேகம் அவஸ்த்தைபட்டது. கோவிலுக்கு செல்ல அவளுக்கு பிடிக்கும் இமை மூடி உதடுகள் துடிக்கும் முனகல்களை கூட ஒற்றை பார்வையில் அவ்வழகை ரசித்துகொண்டிருப்பேன். என்ன வேண்டிக்கொள்வாளோபல தடவை கேட்டிருக்கிறேன் “என் வேண்டுதல் கடவுளுக்கு தெரியும்” என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவாள். என்னுடைய புலம்பல்கள் அந்த கடவுளுக்கு தெரிந்திருக்குமோ... இல்லையோ...

என் புத்தக இடுக்குகளில் திலாவின் புகைப்படங்கள் மூச்சின்றி உறங்கிக்கொண்டிருக்கும். திலா என்னுடன் இருக்கும் நேரத்திற்க்காகவே கல்லூரி நாட்களை அதிகம் விரும்பினேன். அவளுக்கு கடற்கரை செல்ல பிடிக்கும் தொலைவில் அமர்ந்து கொண்டே அவள் அலைகளுடன் ஓடி பிடித்து விளையாடும் அழகை ரசித்துகொண்டிருப்பேன். எங்கள் இருவரின் பெயரையும் கடற்கரை மணலில் எழுதி எழுதி அலைகளுக்கு பசியாற்றிகொண்டிருப்பாள். அழியும் என தெரிந்தும் அவளது விரல் கடல் மணலோடு போராடிக்கொண்டிருக்கும். “அழிஞ்சிடுச்சிடி இலக்கியா” முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு மீண்டும் எழுதுவாள் தள்ளிநின்று அதை அழகு பார்க்கும் முன் கடல் அலைகள் முந்திக்கொள்ளும். அவளுடைய விரல் வலி தாங்காதே... திலாவை ஏமாற்றிக்கொண்டிருக்கும் இந்த கடல் வற்றி போனால் என்ன...? மனதுக்குள் அலைகளையும் அவைகளை தூது அனுப்பும் கடலையும் சபித்துக்கொண்டே இருப்பேன். சீற்றம் கொண்டு “அவைகளுடன் போராடாதே திலா..! உன் விரல் பாவம்... காலத்திற்கும் அழியாத சுவடு என் மார்பில் பதிந்திருக்கிறதடி” என் மார்பில் குத்திய அவள் பெயரை காட்டவேண்டும் என்று பல பொழுது தவித்திருக்கிறேன்.

திலா என்னும் பிம்பம் ஏன் இலக்கியாவாக உருபெற கூடாது பல பொழுதுகள் திலா என்னை இம்சித்தாள். கண்ணாடியில் எனதுருவம் மறைந்து அவள் உருவம் பிரதிபலிக்க தொடங்கியது. கல்லூரியில் மட்டுமல்லாது கனவிலும் என்னை தொடர்ந்துகொண்டிருக்கிறாள். அவள் நினைவாகவே கருமையை அதிகம் உடுத்த ஆயுத்தமானேன். பொங்கல் பண்டிகை, திருவிழா, செமஸ்டர் விடுமுறை எல்லாமே இலக்கியாவின் கிராமத்தில் தான். தலைவிரி கோலமாய் சுற்றிக்கொண்டிருந்த என்னை ஜடை பின்னலெடுத்து மல்லி வைத்து அழகு பார்த்தாள், அவளை போலவே பாவாடை தாவணி கட்டுவித்தாள், நான் கோலமிடும் வளைவுகளெல்லாம் அவள் கரம் பிடித்தே, ஏன் சப்பணமிட்டு சாப்பிட கற்றுகொடுத்தவளும் அவள் தான். இப்பொழுதெல்லாம் திலா-இலக்கியா என்று எழுதியே அழகு பார்க்கிறேன். சில உணர்வுகள் என் எதிரில் நின்று வினாவுகிறது இலக்கியா உன் தோழி மட்டும் தானா?

கல்லூரியின் வருகை பதிவேடு புத்தகத்தை இருவருக்கும் தனித்தனியே புரட்டி பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது. இருவரின் விடுமுறையும் வேறுபட வாய்ப்பில்லை. விடுமுறை எடுக்கும் திட்டம் இருந்தால் முன்னமே திட்டமிட்டுகொள்வது எங்கள் இருவரின் வழக்கம். அன்று ஒரு நாள் கல்லூரி வாசலில் நீண்ட நேரம் காத்திருந்தும் கூட திலாவின் வருகை தென்படவில்லை. உள்மனதிலும் கூட வியர்க்க தொடங்கியது. கல்லூரியை விட்டு வெளியே வந்து டெலிபோன் பூத் வாயிலாக திலாவின் வீட்டை அணுகிய பொழுது தான் அவள் வீட்டு வேலைக்காரியின் மூலமாக விசயம் கசிந்தது படியில் இருந்து தவறி விழுந்த திலா கையை உடைத்துக்கொண்டாளாம். டாக்சி ஒன்றை பிடித்து மருத்துவமனையை சேரும் வரையில் என் உயிர் நாடி இரயிலின் சக்கரங்களாக சுழல தொடங்கியது. ஓவென்று.... அழுகை குரல்கள் நான் அமர்ந்திருந்த கட்சிக்கொடி படியை நோக்கி வந்தது திரும்பி பார்தேன்.. தென்ன ஓலையில் பின்னப்பட்ட பாடையில் என் உடலை கிடத்த என் பெற்றோர்களும் உறவினர்களும் தாயராகிகொண்டிருந்தார்கள்... சீக்கிரம் வந்துவிடு திலா...

உள்ளே பிரவேசித்தவள் நான் சகஜ நிலையில் அமர்ந்திருப்பதை பார்த்தும் கூட அழுதுகொண்டே இருந்தாள். ஒன்னும் இல்லடி லேசா தான் அடிபட்டிருக்கு நார்மலா தான் இருக்கேன் அவளை சமாதானம் செய்ய நான் மேற்கொண்ட முயற்சிகளெல்லாம் அவள் கண்ணீரில் தான் நனைந்துகொண்டிருந்தன. திடிரென்று கண்ணீரை துடைத்துவிட்டு என்னை கண்டபடி திட்ட தொடங்கினாள். அவளை பார்த்து புண்முறுவல் செய்துகொண்டே அவள் திட்டுவதை ரசித்துக்கொண்டிருந்தேன். திட்டுவதிலும் சினத்திற்கு பதிலாக கொஞ்சல்களே அதீதமாக கலந்திருக்கும் அவளது பேச்சில். இலக்கியாவின்  பொய்மை கலந்த சினத்தை ரசிப்பதற்க்காக வேண்டுமென்றே பலமுறை அவளை சீண்டியிருக்கிறேன். அன்றைய நாளிலிருந்து இலக்கியா கணப்பொழுதும் என்னைவிட்டு விலகி இருக்க விரும்பவில்லை. என்னை கவனித்துகொள்வதற்காகவே என் வீட்டின் அறையை என்னுடன் பகிர்ந்துகொண்டாள்.

திலா அப்பாவிற்கு என் சமையல் பிடிக்கும் அவரிடமிருந்து பாராட்டுதலை பெறுவதற்காக அவ்வப்போது நான் திலாவின் வீட்டிற்க்கு விரைவேன். என்னை ஓயாது சீண்டுவதில் தான் அவளின் பொழுதுபோக்கு சமைத்துகொண்டிருக்கும் போது உப்பையோ காரத்தையோ கொட்டிவிட்டு ஓடிவிடுவாள். குழந்தை பாவனையில் அவள் செய்யும் புன்முறுவல் கோடி அழகு. விசாலமான அவ்வீட்டில் சிறுபிள்ளைகளாய் இருவரும் விளையாடிக்கொண்டிருப்போம். அவளால் நடக்க முடியாது என தெரிந்தும் அவளின் சீண்டுதளுக்காக ஏங்கிக்கொண்டு சமயலறையில் இருந்து நிமிடத்திற்கு ஒரு முறை எட்டி பார்த்துகொண்டிருப்பேன். பாத்ரூமில் குளித்துகொண்டிருக்கும் போது திலா பயன்படுத்திய மேலாடை தொங்கிக்கொண்டிருந்தது. அவளுடைய வாசம் அதில் கலந்திருக்குமோ...!  நுகர வேண்டும் போல் இருந்தது திலாவின் வாசம் முழுவதும் அதில் வியாபித்திருந்தது. நாசியின் வழியே திலா என்னை ஊடுருவினாள். கேட்டு அணிந்தாலும் அவள் மறுப்பு ஏதும் சொல்லப்போவதில்லை ஆனாலும் மனது சஞ்சலப்பட்டது. அவள் மேலாடையை அணிந்துகொண்டேன் திலா என்னை ஆரத்தழுவிக்கொண்டதாக ஒர் உணர்வு கண்கள் மெல்ல செருகி புலம்பினேன். இப்படியே என்னை அணைத்துக்கொண்டிரு திலா...

உடல் தேறியபொழுதும் இலக்கியா என்னை குழந்தையாக தான் பாவித்தாள். அவள் உதவியின்றி சாப்பிட முடியும் ஆனால் அவள் விரல் என் பற்களில் உரசும் அந்த ஸ்பரிசம் வேண்டும். அவள் உதவியின்றி நடக்க முடியும் ஆனால் என் தோள்களை அரவணைக்கும் அந்த பிடிப்பு வேண்டும். அவள் பிரித்துகொடுக்கையில் சாப்பிடும் மாத்திரைகள் கூட தொண்டை குழியில் இனிப்பாய் தான் இறங்குகிறது. எல்லா வேலைகளையும் செய்துவிட்டு என்னை நெருங்கிய பொழுது அவள் உடலில் இருந்து பரவும் அந்த வியர்வை வாசம்... கழுத்திலும் நெற்றியிலும் இடையிலும் பிசுப்பிசுப்பை ஒப்பிய அந்த ஈரம் பூரித்த சருமம் முழுவதும் எனக்கு வேண்டும்... என்னை நெருங்காதே இலக்கியா போதையூட்டும் உந்தன் வாசம் ஏதோ செய்கிறதடி... அவள் மோவாயை பிடித்து என் பார்வையே நீயாக வேண்டும் இலக்கியா என்று சொல்லவேண்டும் போல் இருந்தது. மதிய பொழுதில் இலக்கியா சோபாவின் மேல் உறங்கிக்கொண்டிருந்தாள் சாளரத்தின் வழியே வந்த சூரிய கதிர் அவள் மூக்குத்தியின் கற்கள் மீது மோதிக்கொண்டு மின்னியது. இந்த கருப்பு தேவதையை அள்ளிக்கொண்டால் என்ன...? அவள் உதடுகளில் படர்ந்த காந்த விசை ஈர்ப்பு என் உதட்டோடு அவள் உதட்டை நெருங்க செய்தது... இது என்ன மாதிரியான உணர்வு மூளைக்குள் இடித்த அலார ஒலி சுதாகரித்துக்கொண்டு பாத்ரூமிற்கு விரைந்தேன். அழுதுகொண்டே இருந்தேன் மனப்புழுக்கத்திலிருந்து விடுபட இனி நான் என்ன செய்ய வேண்டும்...

என்னை கடந்து என் உடல் மயானத்திற்கு போய்கொண்டிருக்கிறது சங்கின் ஓசையும் சேமங்குல மணியும் என் இறப்பை அறிவித்துகொண்டிருக்க சிதறிய பூக்கள் மீது பாதம் பதித்துக்கொண்டு கிராம மக்கள் என் உடலை பின்தொடர்கிறார்கள். கடைசி நபராய் அவர்களை நான் பின்தொடர்கிறேன் இன்னும் ஏன் திலா வரவில்லை...? என் சித்தப்பா மகன் ஊர் தலைவரின் வீட்லிருந்த டெலிபோன் வாயிலாக என் இறப்பை திலா வீட்டிற்கு தெரிவித்ததை நான் பார்த்தேனே... வரும் வரையில் ஏதேனும் பிரச்சனையா..? சீக்கிரம் வந்துவிடு திலா இன்னும் சிறிது நேரத்தில் என் உடல் நெருப்பிற்கு காணிக்கையாக்கப்படும். கானும் முகங்களிளெல்லாம் உன் உருவத்தை தான் தேடிக்கொண்டிருக்கிறேன் என்னை ஏமாற்றிவிடதே திலா சீக்கிரம் வந்துவிடு.

தூரத்திலிருந்து வந்துகொண்டிருப்பது என் அப்பாவின் கார் தான். நான் நின்றிருப்பதை கவனித்தாரா என்று தெரியவில்லை அதிவிரைவாக வீட்டின் உள்ளே நுழைந்தது. சில பொழுதுகள் இலக்கியாவுடன் நெருங்கியும் தள்ளியும் இருந்தேன். அவள் என் இலக்கியா என்று ஓயாது என் மனம்  உரிமைகொண்டாடியது. யாருக்காக பிறந்தவள் அவள்... அவளே சொன்னாளே நான் அவளை தத்தெடுத்துவிட்டேன் என்று நானும் உனக்காக பிறந்தவள் தான் இலக்கியா... இதை எப்படி அவளுக்கு உணரச்செய்வேன். கல்லூரி முடியும் நேரமும் நெருங்கியது. இந்த நான்கு வருடத்தில் தள்ளி வைத்தே பார்த்து பழக்கப்பட்ட பிரிவு எங்கள் இருவரையும் தள்ளி வைக்க முந்திக்கொண்டு வந்தது. இலக்கியாவை இழக்க நான் விரும்பவில்லை வாழ்க்கையின் தேடலுக்காக அல்லாமல் அவளை என்னுடன் தக்கவைத்து கொள்வதற்காகவே மேற்படிப்பிற்க்கு டெல்லியில் உள்ள கல்லூரியில் இருவருக்கும் சேர்த்து விண்ணப்பித்திருந்தேன். இலக்கியாவின் பெற்றோரை சமரசம் செய்து அவளை என்னுடன் டெல்லிக்கு அழைத்து செல்வதே என் திட்டம். இல்லக்கியாவை கடத்தி செல்லும் மனநிலையில் தான் என் மூளையும் இயங்கிக்கொண்டிருந்தது. இல்லகியா என்னுடன் இருந்தால் போதும் அதற்கான வேளையிலும் ஆயுத்தமானேன். அவள் ஊருக்கு சென்ற ஓரிரு வாரங்களில் அவளிடம் வந்த கடிதம் தான் நான் தீட்டி வைத்திருந்த திட்டத்திற்கு முழுவதுமாக முழுக்கு போட்டது.

உள்ளே நுழைவதற்கு முன்பே இடுகாட்டின் வாசம் வா... வா... வென்று வரவேற்றது. பேருந்தில் ஏறுவதற்கு முன் அவள் கொடுத்த அரவணைப்பும், என் தோள்களில் படிந்த அவளது கண்ணீரும் ஊருக்கு வந்து சேர்ந்த பொழுதும் கூட  என்னை விட்டு விலகவில்லை. அவள் கொடுத்த வாக்குறுதி இன்னும் இரண்டு வருடம் நீடிக்க செய்யும் என்னும் நம்பிக்கையில் அவளுக்காக காத்திருந்தேன். எங்கிருந்தோ வந்த ஆள் அடையாளம் தெரியாத உறவுமுறை திருமணம் என்னும் சுழிக்குள் என்னை மூழ்க வைக்கும் ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது. என் அனுமதியின்று எப்போதோ நிச்சயிக்கப்பட்ட விஷயமாம்... அவளுடன் இருந்த நாட்கள் இனி வரப்போகும் நாட்களில் கிடைக்குமா...? என் வீட்டு அந்நியர்கள் என் வாழ்க்கை வடிவத்தை வரைந்து கொண்டிருக்கும் அனைத்து விஷயங்களையும் அவளுக்கு கடிதம் எழுதினேன் நான் தற்கொலை செய்யவிருக்கும் விஷயத்தை தவிர...

அப்பாவின் காரை தொடர்ந்து சிறிது நேரத்தில் போலீஸ் ஜீப்பும் அதை தொடர்ந்து ஆம்புலன்ஸ் வண்டியும் என் வீட்டு வாசலில் முன் வந்து நின்றது. வெள்ளை சீருடை அணிந்து ஆம்புலன்ஸிலிருந்து குதித்தவர்கள் வீட்டினுள் பிரவேசித்து அவர்தம் வேளைகளில் ஈடுபட்டார்கள். வீட்டு வாசலில் சலசலப்புடன் பரிட்சயமான அக்கம் பக்கத்து முகங்கள் தென்பட தொடங்கின. கை குட்டையால் கண்களை துடைத்துக்கொண்டு மூக்கு கண்ணாடியை கையில் பிடித்தபடி தேம்பியவாறு வெளியே வந்துகொண்டிருந்தார் என் அப்பா. தன் முந்தானையால் முகத்தை பொத்திக்கொண்டு அழுதுகொண்டே வெளிவந்தாள்  வேலைக்காரி. உச்சுக்கொட்டிகொண்டு காற்றோடு கலந்துவந்த புலம்பல்கள் வீட்டு வாசலில் முன் பரவியது. கருப்பு உடை அணிந்து ஸ்ட்ரெக்சரில் தூக்கிசெல்லப்பட்ட ஓர் உடல் அருகில் சென்று பார்த்தேன் இமை மூடிய எனதுருவம் தெரிந்தது. 

“பாக்குரவங்க... கடைசியா முகத்த பாத்துக்கலாம்...” கையில் வரட்டியை வைத்துகொண்டு வெட்டியான் ஏலம் விட்டுக்கொண்டிருந்தான். எவரிடமிருந்தும் மறுமொழி வராமல் இருக்கவே அந்த சொர சொரப்பான வரட்டியை என் முகத்தில் போர்த்தி என் அப்பாவிடம் கொள்ளியை கொடுத்து அவரை ஆழுதப்படுத்தினான். உடலோடு சேர்ந்து என் ஆசைகள் எரிந்துகொண்டிருந்தது தொலைவில் நின்றவாறே நான் சாம்பலாகிக்கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

ஒவ்வொரு வண்டியும் கண்ணில் இருந்து மறைய தொடங்கின... வாசலில் நின்றுகொண்டிருந்த முகங்கள் அவரவர் வீட்டிற்கு சென்றன... நான் இன்னமும் என் வீட்டு வாசலிலே நின்றுகொண்டிருக்கிறேன்.

திலா அவள் அம்மாவின் இறப்பைபற்றி பேசியிருக்கிறாள், இலக்கியா ஜாதி கலவரத்தில் அவன் அண்ணன் இறந்ததைபற்றி பேசியிருக்கிறாள், திலா தன் பள்ளிபருவத்தைபற்றி பேசியிருக்கிறாள், இலக்கியா தன் கிராமத்தைபற்றி பேசியிருக்கிறாள், திலா தனக்கு பிடித்த நடிகரை பற்றி பேசியிருக்கிறாள், இலக்கியா தனக்கு பிடித்த பாடலை பற்றி பேசியிருக்கிறாள். ஏதேதோ விஷயங்களை பேசியிருக்கிறோம் ஆனால் காதலைபற்றி இதுநாள்வரையில் நாங்கள் பேசியதே இல்லை.