கனவின் கண்
1
சூரிய கதிர்கள் கண்களை கூசச்செய்வதாக இருந்தது. கண்களை திறக்க முயற்சிக்கையில்
தூக்கம் இன்னும் மீதமிருப்பதாக தோன்றியது. ஒரு விதமாக சமாளித்துக்கொண்டு அசதியுடன்
எழுந்தமர்ந்தேன். ஏதோ விவரிக்க முடியாத வலி உடல் முழுவதும் பரவி இருந்தது.தூக்க
கலக்கத்துடன் நோக்கியபொழுது மேலே சிறிது தூரத்தில் ஆளுயர நீள்வட்ட துளை போன்று ஏதோ
தெரிந்தது. மயக்குநிலை என்றெண்ணி கண்களை கசக்கி விட்டு பார்த்தபொழுது அங்கே
கச்சிதமாக செதுக்கப்பட்ட ஒரு நீள்வட்ட துளை துல்லியமாக தெரிந்தது. அதனடியில்
இருந்து தொடங்கிய நான்கு மரத்தால்
செதுக்கப்பட்ட படிகள் என்னருகில் வந்து முடிந்திருந்ததன. நான் திடுக்கிட்டு என்னை
சுற்றிலும் கண்களை துழாவினேன். என் அடியில் மெத்தை போன்று காயிந்த மஞ்சள் நிற
இலைகள் சருகுகளாக அடர்ந்திருந்தது. கூர்ந்து நோக்கும்பொழுது, அது நன்றாக அறைபோல் செதுக்கப்பட்ட ஒரு மரப்பொந்து. அதன் அகலம் அது சற்று பெரிய
மரம் என்பதை உணர்த்தியது.
நான் சிறிது சிறிதாக என்னை மீட்டுக்கொண்டு அச்சருகுகளில் நடந்து படியேறி துளை
வழியாக வெளியேறினேன். சருகுகளில் நான் நடந்த ஒலி என்னுள் ஒரு கூச்சத்தை
ஏற்படுத்தியது. வெளியில் நான் என்றுமே கண்டிராத ஒரு காடு என் கண் முன்னே
விரிந்திருந்தது. சில வினாடிகள் மெய்மறந்து அதனை பார்த்து கொண்டிருந்தேன். தெளிந்த
வானத்தின் வழியாக சூரிய ஒளி என் மீது படர்ந்திருந்தது. அங்கே மரங்கள் அனைத்தும்
இலையுதிர் கால உக்கிரத்துடன் மஞ்சள் நிற இலைகளை உதிர்த்து கொண்டிருந்தன. அங்கு
எங்குமே பச்சை தென்படவில்லை. முழுவதும் மஞ்சள் நிறத்தாலான இலைச்சருகுகள். கதிரவனின்
கதிர்களால் அது பொன்வண்ணம் பெற்று ஜொலித்துக்கொண்டிருந்தது. கண்கள் இயல்பாக என்
முன்னே சென்ற பாதையை கண்டுகொண்டது. என்னையும் மீறி அதை தொடர்ந்து என் கால்கள்
இயங்க ஆரம்பித்திருந்தது.
சிறிது தூரம்தான் நடந்திருப்பேன்.என் காதுகளில் இலைச்சருகின் மேல் யாரோ நடந்து
வரும் ஒலி கேட்டு திரும்பி பார்த்தேன். அங்கே ஒருவன் தூரத்தில் உள்ள ஒரு
மரபொந்தின் வழியாக வெளியேறி என்னை நோக்கி வந்துகொண்டிருந்தான். அவன் கறுத்த
நிறமுடையவனாக இருந்தான். அவனது கருமேனி எண்ணெய் தடவிய மினுமினுப்பை
பெற்றிருந்தது.அவன் என்னருகில் வந்து நட்புடன் கூடிய ஒரு புன்னைகையை
உதிர்த்துவிட்டு,
"நான் இதற்கு
முன் எந்த மனிதரையும் இங்கே கண்டதில்லை" என்றான். அவன் குரல் இனிமையுடன்
கூடியதாக இருந்தது.
"இது எந்த இடம்? நீ யார்?" என்று கேட்டேன்.
"இது கனவின்
நீட்சி,
நான் கனவின்
கீழ் அடுக்குகளின் நீட்சியாக இவ்விடம் வந்து சேர்ந்தேன். நீயும் அவ்வாறுதான் இங்கே
வந்திருக்க முடியும்" என்றான்.
"இங்கு ஏன்
பச்சை தென்படவேவில்லை?"
"நானும்
பச்சையை தினமும் தேடி பார்க்கிறேன். என் கண்களுக்கும் தெரியவில்லை. எல்லாம்
கருமையாகத்தான் தெரிகிறது" என்று கண்களை
சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு கூறினான்.
நான்
திடுக்கிட்டு "என்ன கருமையாகவா.எனக்கு எங்கும் மஞ்சளாகவே தெரிகிறதே? என்றேன் சற்றே
வியப்புடன்.
அவன்
தெளிவடைந்த பார்வையுடன் என் கண்களை நோக்கி "அது உன் கனவின் கண் வழியாக
அவ்வாறு தெரிகிறது" என்றான்.
"கனவின் கண்களா?" மறுபடியும்
வியப்பு.
"ஆம். நாம்
இருவரும் ஒரே கனவின் நீட்சியை பெற்றிருக்கிறோமே தவிர, இருவரின்
பார்வைகள் வேறு வேறாகத்தான் இருக்க முடியம்" என்றான்.
நானும்
புரிந்ததற்கான சிறு புன்னகையை உதிர்த்துவிட்டு, மேற்கொண்டு
சென்ற பாதையின் வழியாக இருவரும் நடக்க ஆரம்பித்தோம். அவன் ஒரு வித மௌனத்தின் ஊடாக
என் அருகில் வந்து கொண்டிருந்தான். நானும் சுற்றுமுற்றும் பார்த்து
கொண்டிருந்தேன். தீடீரென்று ஒரு கேவல் ஒலி என் செவியை தொட்டது. உற்றுநோக்கும் போது
அது ஒரு பெண்ணின் கதறல் போன்றிருந்தது. நான் வேகமாக அந்த ஒலி வந்த திசையை நோக்கி
ஓடினேன். சிறிது தூரத்தில் அந்த காட்சி என்னை பதறச்செய்தது.ஒருவன் மூர்க்கமாக ஒரு
பெண்ணை புணர்ந்து கொண்டிருந்தான்.நான் மிரட்சியுடன் என் அருகே வந்து
கொண்டிருந்தவனை பார்த்தேன். அவன் இயல்பாக என் அருகில் வந்து என்ன என்பது போல்
பார்த்தான். நான் அந்த காட்சியின் திசையை சுட்டி காட்டி,
"என்ன கொடுமை?ஏன் இவ்வாறு
மூர்க்கமாக புணர்ந்து கொண்டிருக்கிறான் அவன்?" என்றேன்
உச்சகட்ட பதற்றத்துடன்.
வியப்பு
ததும்பிய விழிகளால் என்னை நோக்கி "உனக்கு அப்படியாகவா தோன்றுகிறது."
என்றான்.
"ஏன் உனக்கு
எவ்வாறு தோன்றுகிறது?
என்றேன்
கோபத்துடன்.
"அவன் அந்த
பெண்ணை உண்பது போல் தோன்றுகிறது" என்றான்.
அச்சமயம்
எங்கள் பேச்சொலி கேட்டு புணர்ந்து கொண்டிருந்தவன் எங்களை நோக்கினான். அவன் முகம்
பேய் அறைந்தது போல் மாறியது. சட்டென்று அந்த பெண்ணை விட்டுவிட்டு புதர்மறைவில்
பாய்ந்து மறைந்தான். அந்த பெண் மின்சாரம்
பாய்ந்த அதிர்ச்சியுடன் அங்கே மிக மெதுவாக அமர்ந்தாள். அவள் எங்களை கண்டு
கொண்டதாகவே தெரியவில்லை. அந்த பெண்ணின் உடல் என்னுள் காம உணர்வை உடல் முழுதும் பரவ
செய்தது. அதன் வெறியேறிய கண்களுடன் என் அருகில் இருந்தவனின் கண்களை நோக்கினேன்.
அவன் கண்களிலும் அந்த வெறி குடியேறியிருந்தது. அவன் கண்கள் வழியாக என் கண்கள்
பசியேறிய மிருக கண்களை போல் தெரிந்திருக்கும் என்பதை உணர்ந்தேன். அவன் இரையை பங்கு
போட வந்திருக்கும் ஒரு மிருகமாக என்னை கருதி இருப்பான் என்ற எண்ணம் அகத்தில்
துல்லியமாக எழுந்தது.
மிக வேகமாக அந்த பெண்ணை நோக்கி ஓடினோம். அவள் கூந்தல் சரிந்து அமைதியாக தரையை
நோக்கி அமர்ந்திருந்தாள். அவளை அடைவதற்கு முன்னரே இருவரும் மூர்க்கமாக சண்டையிட
தொடங்கியிருந்தோம். அவன் என்னை பலம் கொண்டமட்டும் அடித்து கொண்டிருந்தான். நானும்
அவ்வாறே அவனை அடித்து கொண்டிருந்தேன். சண்டை முற்றி இருவரும் ரத்தம் சொட்ட சொட்ட, ஒரு காட்டு விலங்கின் ஆங்காரத்துடன் பொருதி கொண்டிருந்தோம்.
சட்டென்று ஒரு சிரிப்பு சத்தம். நாங்கள் சண்டையை நிறுத்திவிட்டு, சிரிப்பு வந்த திசையை நோக்கினோம். அவள்தான் சிரித்து கொண்டிருந்தாள். அவளின்
விழிகள் எங்களை நோக்கி இருந்தது. விழி குருதியேறி மிக பயங்கரமாக தென்பட்டது. எனக்கு
அச்சம் உடலின் உதறலாக வெளிப்பட்டது. அவனும் அச்சம் நிர்மபிய விழிகளுடன் என்னை
நோக்கினான். சிரிப்பின் சத்தம் வர வர பெரிதாகியது. அதை உணர்ந்து நான் ஓட முயலும்
போது ஒரு பலத்த காற்று எங்களை சுழற்றி அடித்தது. என்னை சுற்றி முழுவதும் மஞ்சள்
இலைச்சருகுகள், என் உடலின் ஒவ்வொரு பாகமாக
நுழைந்து கொண்டிருந்தது. நான் அதனுள் முற்றிலுமாக கரைந்து கொண்டிருந்தேன்.
2
விழிப்பு வந்து கண்களை திறந்த பொழுது
அறை முழுவதும் சூரிய வெளிச்சம் நிரம்பி இருந்தது. மணி பார்த்தேன் 7.15. சிறிது நேரம் பித்துப்பிடித்தாற்போல் இருந்தது.ஆம் கனவுதான், இவ்வளவு துல்லியமாக நான் எந்த கனவையும் கண்டதாக எனக்கு ஞாபகம் இல்லை.
சிரிப்புதான் வந்தது. சட்டையை மாட்டி கொண்டு டீ குடிக்க கிளம்பினேன். டீ உள்ளே
இறங்கியதும் ஒரு வித அமைதியை அகம் உணர்ந்தது. ஏன் இவ்வாறெல்லாம் கனவு வருகிறது
என்று நினைத்து கொண்டே, சட்டைப்பையில் பணம் எடுத்து
கொடுக்கும் போது ஏதோ கீழே விழுந்தது மாதிரி இருந்தது. என்ன அது என்று நோக்கிய
பொழுது, இரண்டு மஞ்சள் இலைகள் சூரிய ஒளியில் தகித்துக்கொண்டிருந்தன.
No comments:
Post a Comment