Showing posts with label ஈரோடு 2020. Show all posts
Showing posts with label ஈரோடு 2020. Show all posts
Thursday, March 5, 2020
தம்மம் தந்தவன் - ஒரு மதிப்புரை - மாதவ்
தம்மம் தந்தவன்
- ஒரு மதிப்புரை
சில வாடிக்கையாளர்களை சந்திக்கும் ஏற்பாட்டுடன் ஜனவரி,
2020ல் நான் ஔரங்காபாத் பயணித்தேன். ஒரு நாள் வேலை ஏதும் இல்லாததினால் எல்லோரா குகைகளை
காண முடிவு செய்தேன். போவதற்கு முன் அந்த இடத்தினை பற்றிய வரலாறு, இன்னபிற ஐதீகங்கள்
அறியும் பொருட்டு 'எங்கும் சுற்றி, ரங்கனைச்சேவி' என்று விக்கிபீடியாவை சரண்டைந்தேன்.
எல்லோரா குகைகள் பௌத்த, ஜைன, இந்து என மூன்று மதங்களின்
நல்லிணக்க வெளிப்பாடாக கலந்து காணப்படும் ஒரு இடம். இவற்றில் விஸ்வகர்மா குகை என்றழைக்கப்படுவது
பௌத்த மார்க்கத்தை சார்ந்த ஒன்று. இதன் மேல் கூரை வளைந்ததாகவும் கல்லினால் செய்யப்பட்ட
வளைந்த சட்டங்கள் கொண்டதாயிருக்கும். இவை மரத்தினால் வடிக்கப்பட்டவை போன்ற தோற்றமளித்தாலும்,
கல்லினால் செய்யப்பட்டவையே.
அங்கு சென்ற பொழுது ஒரு புத்த பிக்கு ஆழ்ந்த குரலில்,
நிறுத்தி, நிதானமாக புத்தம் சரணம் கச்சாமி என்று ஜபித்துக்கொண்டிருந்தார். அந்த நாதம்
அக்குகையை நிறைத்து, ததும்பி, ஒரு மகா ரீங்காரத்தோடு செவி வழி என்னை முழுமையாக ஆட்கொண்டது.
இதே நேரத்தில் கோயமுத்தூரில் விஷ்ணுபுரம் விருது வழங்கும்
விழா கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது. அவ்விழாவின் ஒரு பகுதியாக புதிய எழுத்தாளர்களையும்
அவர்களின் படைப்புகளை அறிமுகப்படுத்துதலும் நடந்தது. அவ்வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட
ஒருவர் நண்பர் காளிப்ரஸாத். சென்னை ஜெயமோகன் வாசகர் வட்டத்தின் போது அவரின் அறிமுகம்
கிடைத்தது. அவருடைய படைப்பு 'தம்மம் தந்தவன்'. இப்புத்தகம் விலாஸ் சாரங் என்ற மராத்திய
எழுத்தாளரின் மொழிபெயர்ப்பு.
தம்மம் தந்தவன் சித்தார்தனின் பிறப்பிலிருந்து ஆரம்பிக்கிறது.
இப்பிறப்பு ஒரு வெட்டவெளியில், சாலமரத்தின் கீழ் நிகழ்கிறது.
சித்தார்தன் குழந்தை பருவத்திலிருந்தே தன் தேடலை தொடங்கி
விட்டான். ஓர் அரச குடும்பத்தில் பிறந்தும், அந்த சூழ்நிலையின் சுகங்களில் மனம் ஒப்பாமல்
மக்களின் துயருக்கான காரண, காரியங்களை ஆராயத் தலைப்பட்டிருக்கிறான். ஒரு பசு போன்று
வேடந்தரித்து தொழுவத்திலும், நாய் போன்றும், துறவறம் பூண்ட பிறகு சாவின் விளிம்பு வரை
பட்டினி கிடந்தும் தன்னையே கடுஞ்சோதனைக்கு உள்ளாக்கி இருக்கிறான். My experiments
with truthல் படித்த சுயவதையை சார்ந்த பரீட்சைகள்.
இப்புனைவு முழுவதும் மரங்கள் முக்கிய குறியீடுகளாக நிலைநிறுத்தப்படுகின்றன.
ஓரிடத்தில் ஆப்பிள் மரத்தை பற்றிய குறிப்பு மிகவும் புத்திசாலித்தனமான செருகல். ஆப்பிள்
மரத்தின் கீழமர்ந்து புவி ஈர்ப்பு விசையை பற்றிய ஞானமடைந்த ந்யூட்டன். அதற்கும்முன்,
ஆப்பிள் மரத்தின் கனியை சுவைக்க கூடாதென்னும் தடையை மீறி, ஆசையால் உந்தப்பட்டு அதை
கடித்த ஆதாம், ஏவாளுக்கு கிடைத்த சாபம் முதலியன நம் மனக்கண் முன் விரிகின்றன. ஒருபுறம்
ந்யூட்டனுக்கு கிடைத்த ஞானம், மறுபறம் ஆசையினால் விளைந்த கேடு. இவை இரண்டையும் ஊடுபடுத்தினால்
நமக்கு கிடைக்கும் பிம்பமே, ஆசையை அறுத்து, போதி மரத்தின் கீழ் தவமிருந்து சித்தார்த்தன்
கிடைக்கப்பெற்ற ஞானம். இதுவே சித்தார்த்தன் புத்தனாகிய தருணம். நாம் பேசும் eureka
moment!
இன்று வரையில் இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றமதி புத்தமதம்
தான் என்று எங்கேயோ படித்த ஞாபகம். இந்த மார்க்கம் வெறும் cult மட்டுமில்லாமல், ஒரு
மிகப்பெரிய கோட்பாட்டிலும், சிந்தனை அடிப்படையிலும் நிறுவப்பட்ட கட்டமைப்பாக இப்புத்தகம்
நிறுவுகிறது
இறப்பையே சோகத்தின் பிரதான காரணமாக கருதியிருந்த நினைப்பிற்கு
மாறாக, புத்தர் பிறப்பையே சோகத்தின் ஊற்றுக்கண்ணாக பிரகடனப்படுத்தியிருக்கிறார். 'அந்த
குழந்தையின் பிறப்பு, பிறவாமையைப் போதிப்பதில் வந்தடைந்தது' என்ற வர்ணனை ஒரு ஹைகூ கவிதை.
தத்துவ தளத்தில் புத்தர் தன் சீடர்களுக்கு போதித்தது ஒவ்வொரு
தனி மனிதனும் ஒரு தீவாய் இருந்து தம்மத்தை கடைபிடிப்பதேயாம். இந்த கோட்பாடு எம்மதத்திலும்
இல்லாத ஒன்றாக பதியப்பட்டிருக்கிறது. இந்து மதத்தின் அகம் ப்ரம்மா என்ற கோட்பாட்டை
கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டதா என தெரியவில்லை. விற்பனையைப்பற்றிய ஓரளவு பட்டறிவை
தவிர வேறேதும் பாண்டித்யத்தை பெறாத நான் இதை இவ்விதம் ஐயுறுவதே மடமை.
இந்த வரலாறு நடக்கும் தருணங்களில் குறிப்பிடப்படும் நகரங்கள்
இப்போதும் இருக்கின்றன. அவ்விடங்களின் பழைய பெயர்களையும் அதன் சமீபத்திய பெயர் பட்டியலும்,
அவைகள் தற்கால இந்திய, நேபாள வரைபடத்தில் எங்கே உள்ளன என்ற சித்திரமும் இருந்திருந்தால்
இக்கதை இன்னமும் கூட ஆழமாக மனதில் பதிந்திருக்கக்கூடும்.
இது புத்தரின் வாழ்க்கையை பிறப்பிலிருந்து, இறப்பு வரை
இட்டு செல்லும் ஒரு புனைவு. புத்தர் பிறந்து, முக்தியடைந்து, மறைவது வரை நம்மை ஒரு
time capsule பயணம் செய்ய வைக்கிறது. புத்தரின் வாழ்க்கை கிமு என்பதினால் அவரின் வாழ்க்கைக்கும்,
இன்னபிற நிகழ்வுகளுக்கும் எழுத்து சான்றுகள் அதிகமின்றி, செவிவழி சரித்திரங்களையே ஆதாரங்களாக
சார்ந்து எழுத வேண்டிய கட்டாயம். அதனால், இருக்கும் சான்றுகளை வைத்து இது கட்டமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறிருந்தும் இப்புத்தகம் ஒரு நிறைவை தருவதென்னவோ உண்மை.
இந்நிறைவிற்கான முக்கிய காரணம், புத்தரை ஒரு அப்பழுக்கில்லாத,
தலையை சுற்றி ஒளிவட்டமுள்ள ஒரு கடவுளாக காட்ட முனையாததே. தம்மம் தந்தவனில் புத்தர்
புலால் உணவை, குறிப்பாக காட்டுப்பன்றியை விரும்பி உண்பவராகவும், ஒரு கட்டத்தில் நிர்பந்தம்
ஏற்படும் போது புலால் மறுப்பை அரை மனதுடன் ஏற்பவராகவும், வயோதிக காலத்தில் தன் இடத்தை
சீடர்களுக்கு விட்டுக்கொடுக்க மறுப்பதுமான சில சாதாரண மானுட தருணங்கள் சித்தரிக்கப்படுகின்றன.
ஒரு காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பரவியிருந்த இத்தம்மம்
எவ்வாறு தேய்ந்து, உரு தெரியாமல் ஆகிற்று என்கிற எண்ணமும் மேலோங்குகிறது. இதனை ஆராய
தலைப்படும் புத்தகம் ஒரு management சார்ந்த புத்தகமாகவும் கருத்தில் கொள்ளப்படும்.
இப்புத்தகத்தை நான் பரிந்துரைக்கிறேனா, இல்லையா என்பது
இரண்டு லட்சணங்களின் மூலம் தெரிவிக்க விரும்புகிறேன்
1. படித்து முடிக்கும்
வரையில் என் மனம் இப்புத்தகத்தை பற்றி பலவாறாக அசைபோட்டபடி இருந்தது.
2. ஒரு விற்பனை
பிரதிநிதி வாடிக்கையாளரை சந்திக்கும் போது, அந்த சந்திப்பு இன்ன பிற வாடிக்கையாளரை
நோக்கி இட்டுச்சென்றாலே அது ஒரு வெற்றி பெற்ற சந்திப்பாக கருதப்படும். இப்புத்தகம்
படித்த பிறகு என் எண்ணமெல்லாம் விலாஸ் சாரங்கின் மூலத்தையும், இப்புத்தகம் எழுத அவர்
படிக்க தெரிவு செய்த மற்ற புத்தகங்களை பற்றி வட்டமிட்டபடி இருக்கிறது.
இந்த வெற்றி மூல புத்தகம் எழுதிய விலாஸ் சாரங்கிற்குமன்றி,
தமிழில் மொழிபெயர்த்த காளிப்ரஸாதையும் சம பங்கு சாரும்.
Madhav
29 Feb., 2020
வருத்தப்படாத வாலிபர் சங்கம் - சிறுகதை - சு.ஹரிஹரன்
வருத்தப்படாத வாலிபர் சங்கம்
நான் நின்றிருந்த சாலையின் எதிரில் பச்சை
நிற மனிதன் நின்று கொண்டிருந்தான். தலை முதல் கால் வரை ஒரே பச்சை. சட்டை, பேண்ட், ஷூ
அனைத்தும் பச்சை. அப்போது அவன் மண்டையில் கூர்மையான கல்லொன்று விழுந்தது. ஆனால் அவன்
அசையவில்லை. உச்சந்தலையிலிருந்து ரத்தம் வழிய தொடங்கியது, வேகமாக. ரத்தத்தை பொருட்படுத்தாமல்
போட்டிருந்த சட்டையை அவன் கழட்ட ஆரம்பித்தான். ஏன் ரத்தத்தை பொருட்படுத்தவில்லை? தள்ளியிருந்து
பார்த்ததால் தெரியவில்லை. தெரிந்து கொள்ள சாலையை கடக்க ஆரம்பித்தேன். இப்போது முகம்
முழுவதும் ரத்தம். இப்போது பேண்ட்டை கழட்ட, ரத்தம் வேக வேகமாக மேல் பாதியில் பரவ ஆரம்பித்தது.
இப்போது ஜட்டி மட்டும் மிச்சம். பாதி சாலையை கடந்தபோதும் என்ன சம்பந்தமென்று தெரியவில்லை.
ஜட்டியையும் கழட்ட ஆரம்பிப்பான் என்று நினைக்கவில்லை. நல்ல வேளையாக ரத்தம் ரொம்ப வேகமாக
பரவி அவன் மானத்தை காப்பாற்றியது. அவன் முழுவதும் சிகப்பாக ஆனான். ஆர்வம் அதிகமாகி
ஓட ஆரம்பித்தேன். அவன் உடல் முழுவதும் ரத்தத்தால் ஆனா சிகப்பு. மூச்சு வாங்க ஓடினேன்.
லேசாக இடது பக்கத்தில் திரும்பி பார்த்தல் ஒரு ராட்சசன். யார் அந்த ராட்சசன், அதுவும்
இவ்வளவு பக்கத்தில்? கோபத்தில் அவன் என்னை எட்டி உதைக்க நான் பறந்தேன், ஆவென்று வலியில்
கத்திக்கொண்டு.
...
இப்போது நான் கண் மூடி படுத்து கொண்டிருந்தேன்.
உதைத்த வலி இப்போது இல்லை. ஃபேனிலிருந்து மெல்லிய காற்று வீசியது, மிக சுகமாக இருந்தது.
ஏனென்று தெரியவில்லை, மிக லேசாக உணர்ந்தேன். கண் திறந்தபோது என்னை சுற்றி நிறைய பேர்
நின்று கொண்டிருந்தார்கள். என் பின்னாடி கூட இருக்கிறார்கள் போல. எவ்வளவு பேரென்று
தெரியவில்லை. ஆனால் நிறைய பேர். சொல்லி வைத்தாற்போல் எல்லோரும் வெள்ளை சட்டை, வெள்ளை
வேஷ்டி. என் தலையை இடத்திலிருந்து வலமாக, வலதிலிருந்து இடமாக திரும்பி அவர்களை பார்த்தேன்.
யாரும் பேசவில்லை. ஆனால் என்னை உற்றுப் பார்த்து கொண்டிருந்தார்கள். நான் கேட்கவில்லையென்றால்
இன்று முழுக்க என்னை பார்த்து கொண்டிருப்பார்கள் போல.
"நான் எங்கே இருக்கேன்?".
ஒரு பக்கத்திலிருந்து சலசலப்பு. "போச்சா. போச்சா" என்று சில பேர் அவர்களுக்குள்ளேயே
கேட்டுக்கொண்டார்கள். ஒருவன் மட்டும் சத்தமாக "ஏன்டா மூதேவி. இது உன் வீடுன்னு
தெரியாதா? என்ன மயித்துக்கு நான் எங்கே இருக்கேன்னு கேட்ட?". அவன் கத்தியது எல்லாரையும்
வாயடைக்க செய்தது. ஆமாம். என் வீடுதான். இவ்வளவு பேர் என்னை சுற்றி இருந்ததால் தெரியவில்லை.
எழுந்து உட்கார்ந்து சத்தம் வந்த திசையை பார்த்து "எவன்டா என் வீட்ல என்ன கத்தறது?".
இப்போது எல்லோரையும் பார்த்து "நீங்க எல்லாம் யாருடா" என்று கத்தினேன். என்
வீட்டில் நான் கத்த மாட்டேனா? "நீங்க எல்லாம் யாருடான்னு இப்போ கேளு". அதே
ஆள், அதே திசையில். "நான் வெச்சது ரொம்ப சேஃப் பெட்டு கண்ணா. எவ்வளோ தடவை தோற்றாலும்
நீ மாறப்போவதில்லை. போ, போ. கூப்புடறான் பார்." இதை சொன்னது வேறொருவன். கூட்டம்
விலக ஆரம்பித்தது. பெட்டில் தோற்ற, என்னை திட்டிய ஆள் வந்தான். எவ்வளவு பேர் என் வீட்டில்?
இப்போது அவன் என் முன்னால் நின்றான். மறுபடியும் "யாருடா நீ? உன் கூட வந்த இவங்க
எல்லாம் யாருடா?" என்றேன். "நாங்க வருத்தப்படாத வாலிபர் சங்கத்துலேந்து வந்திருக்கோம்"
என்றான்.
சங்கமா? என்று நான் முணுமுணுத்தக் கொண்டேன்.
என்ன வெச்சு காமெடி கீமெடி பண்ணறாங்களா? பயங்கர எரிச்சலில் மறுபடியும் அவர்களை நோட்டம்
விட்டேன். நான் உள்பட எல்லோரும் வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டை. துளி கரை இல்லை. எல்லோரும்
மத்திய வயது ஆண்கள். என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். என் கிட்ட ஏதாவது
பிரச்சினையா? நான் தோளிலிருந்து கால் வரை முழுவதாக பார்த்தேன். ஒன்றும் வித்தியாசமாக
தெரியவில்லை. முகத்தை தடவி பார்த்தேன். ம்ஹூம். "நீங்க எல்லாம் வாலிப சங்கமா.
இல்லை வயோதிக சங்கமா?" என்றேன் எரிச்சலில். சுற்றி இருந்தவர்களில் சிலர் சிரித்தார்கள்.
சிலர் ஏதோ பேசினார்கள். எனக்கு சரியாக புரியவில்லை. "இன்னமும் உனக்கு நக்கல் போகலை
பார்" என்றான் பெட்டில் தோற்றவன். "ஏன்டா சாவடிக்கற?" என்றேன்.
"நான் எல்லாம் உன்னை சாவடிக்கல." என்றான் பதிலுக்கு.
"டேய். சீக்கிரம் சொல்லித் தொலைடா.
டைம் ஆச்சு" என்றது, பின்னாலிருந்து ஒரு குரல், என்னை விட எரிச்சலில்.
"அப்போ நீ வந்து சொல்லு" என்றான்
பதிலுக்கு.
"பெட்டுல தோத்தது நீ"
அதற்கு பதிலேதும் சொல்லாமல் என்னை திரும்பி
பார்த்து "நீ நேத்து செத்துப் போயிட்ட" என்றான்.
"என்னது! நான் செத்துட்டேனா? விளையாடுறியா?".
எழுந்து நின்றேன். "இவர்களை எல்லாம் யார் உள்ளே விட்டது. திறந்த வீட்டில் நாய்
நுழைந்த மாதிரி". நான் அவர்களை விலக்கி போக முற்பட்டேன். என் கையைப் பற்றி நிறுத்தினான்.
"கையை விடுடா".
"நாங்களும் செத்துட்டோம், ரொம்ப
நாள் முன்னாடி". எனக்கு இப்போது நிஜமாக பயமாக இருந்தது. அது கண்ணிலும் தெரிந்திருக்க
வேண்டும். "பயப்பட்டதே" என்று மெதுவாக சொல்லி என் கையை விட்டான். நான் அவர்களை
விட்டு போகாமல் அவனை பார்த்தேன். பயம் இன்னும் போகவில்லை. இவனுக்கு பைத்தியமா, இல்லை
எனக்கு கனவா? நேத்து கடைசியாக என்ன நடந்தது? நான் என்ன பண்ணிக் கொண்டிருந்தேன்? இவர்கள்
எல்லாம் பேயா, பிசாசா? நானும் பேயா? பேய்க்கு கால் இருக்காதில்லையா? நான் கீழே குனிந்து
என் காலைப் பார்த்தேன். சத்தியமாக இருந்தது. அவர்களுக்கு கால் இருக்கிறதா? நேரடியாக
குனிந்து பார்க்காமல், கழுத்தை நேரே வைத்துக்கொண்டு கண்களால் கீழே நோட்டம் விட்டேன்.
எவ்வளவு தெரியாமல் செய்ய நினைத்தாலும், கண்டிப்பாக முன்னாடி இருப்பவனுக்கு கண்டிப்பாக
தெரிந்திருக்க வேண்டும். உடனேயே "நமக்கு கால் இருக்கா இல்லையான்னு பார்க்கிறான்டா"
சொன்னான். எல்லோரும் சிரிக்க ஆரம்பித்தார்கள். "வேஷ்டியை எல்லாம் தூக்கிக் காட்டுங்க"
என்று சொன்னவுடன் அதற்காகவே காத்திருந்தது மாதிரி எல்லோரும் செய்தார்கள். உறுதி செய்வதற்காக
பார்த்தேன். என்னைப் போல் எல்லோருக்கும் நன்றாக கால் இருந்தது.
"இதோ, இந்த நொண்டிக்குதான் கால்
இல்லை. மத்தவன் எல்லோருக்கும் கால் இருக்கு" என்று பின்னாலிருந்த ஒருவன் சொன்னான்.
"முன்னாடி போடா நொண்டி" என்று தொடர்ந்தான்.
"எப்போ பார்த்தாலும் என்னையே போக
சொல்லுங்க. இன்னொரு நொண்டிப்பயலை சங்கத்துல சேத்துக்கோங்கடான்னு சொன்னா கேக்கறீங்களா?
நகர்ந்து தொலைங்க" என்று சொல்லிக்கொண்டே என் முன்னாடி வந்தான். "நல்லா பாரு.
எனக்கு ஒரு கால்தான் இல்லை".
நான் மிகவும் குழம்பிப் போயிருந்தேன்.
எதுவும் பேசவில்லை. யாரையும் பார்க்க முடியாமல் தரையை பார்த்துக் கொண்டிருந்தேன். நான்
நிஜமாகவே செத்துப் போய் விட்டேனா? "நகரு, நகரு, தலைவர் வருகிறார் பாரு. நகரு,
நகரு" என்று யாரோ சொல்ல நான் தலை நிமிர்ந்து பார்த்தேன். பெட்டில் தோற்றவன் கொஞ்சம்
ஒதுங்க, தலைவன் என்று சொல்லப்பட்டவன் என் முன்னே வந்தான்.
"வணக்கம். நான்தான் இந்த சங்கத்தோட
தலைவன்" என்று கைகூப்பினான். எனக்கு அவனை பார்த்து ஒன்றும் சொல்ல தோன்றவில்லை.
தலைவனுக்கு உண்டான தோரணை அவன் குரலிலும், நின்று கொண்டிருந்த விதத்திலும் தெரிந்தது.
என்னை நேராக கண்களில் பார்த்தான், சின்ன புன்னகையோடு. நான் பேசும் வரையில் என்னையே
பார்த்துக் கொண்டிருப்பான் போலிருந்தது. என்ன பேசுவதென்று தெரியலை. ஆனாலும் ஏதாவது
பேசுவதற்காக வாயை திறந்த போது அவன் "நீங்க எப்படி இருக்கீங்கன்னு கேக்க முடியாது.
ஏன்னா நேத்துதான் செத்துப் போனதாக சொன்னாங்க" என்றான் நக்கலாக. எனக்கு அவன் நக்கல்
பிடிக்கவில்லை. "சங்கத்தை பத்தி சொல்லிட்டாங்கல்ல?" என்று என்னை கேள்வி கேட்டான்.
நான் அவனைப் பார்த்து இல்லையென்பது போல தலையாட்டினேன். "ஏன், சொல்லலியா?"
என்று திரும்பி பெட்டில் தோற்றவனிடம் ஆச்சரியத்துடன் கேட்டான்.
"அதுக்குள்ள நீங்க வந்துட்டீங்க"
என்று கண்ணை பார்க்காமல் சொன்னான். மழுப்புகிறான் என்று நன்றாக தெரிந்தது.
கையை நீட்டி அறையின் இன்னொரு பக்கத்தில்
காண்பித்து "செத்துப் போகாதவங்களுக்கு மட்டும் இல்லை" என்று சொல்லி இந்த
கூட்டத்தை காண்பித்து "நம்மை மாதிரி செத்துப் போனவங்களுக்கும் டைம் முக்கியம்"
என்றான். செத்துப் போகாதவங்க! ஆமாம், என் மனைவி, இரண்டு பெண்கள் எங்கே? அவர்களைப் பார்த்தல்
தெரிந்து விடுமே! செத்துப் போகாதவர்கள் திசையை நோக்கி, கொஞ்சம் எம்பிப் பார்த்தேன்.
"உன் பிணத்தை கூட நீ பார்க்கவில்லையா?". அதற்குள்ளாகவே ஒருமைக்கு தாவியது
எரிச்சலை தந்தது. "எல்லோரும் நகருங்க". இப்போது அவன் கையை சொடுக்க, அதுவரை
அமைதியாக இருந்த அறை சத்தமானது. சில பேர் அழும் சத்தம் கேட்டது. நான் அதை நோக்கி நடந்தேன்.
என் மனைவியும் இரண்டு மகள்களும் அழுது கொண்டிருந்தார்கள். நான் பிணமாக படுத்துக் கொண்டிருந்தேன்.
தலையில் அடிபட்ட இடத்தில் கட்டு. மூக்கில் பஞ்சு. கை மற்றும் கால் கட்டை விரல்களை கட்டியிருந்தார்கள்.
என் பிணத்தை உணர்ச்சியில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். எவ்வளவு நேரம் போனது தெரியவில்லை.
பின்னாலிருந்து ஒருவன் தொட, திடுக்கிட்டு திரும்பினேன். அங்கே போ என்பது போல கை காட்டினான்.
திரும்ப நடந்து தலைவன் முன் நின்றேன்.
"உனக்கு என்ன வேண்டும்?",
நானும் ஒருமையில் சொன்னேன்.
"சங்கத்தில் சேரு"
"எதுக்கு?"
"நீயும் எங்களை மாதிரிதான். எழவு
வீட்டில் செத்துப் போனவர்களை பற்றி தப்பா பேசுகிறவன்."
"நானா? நான் எப்போது அந்த மாதிரி
பேசியிருக்கேன்?"
"உன்னைப் பற்றி எங்களுக்கு எப்படி
தெரியும்னு நினைக்கிற? நீ யாரை அசிங்கப் படுத்தினாயோ செத்தப்போ, அவன்தான் எங்கள் கிட்ட
சொன்னான்."
"யார் சொன்னா?" என்றேன் ஆவலாக.
"இப்போ அது முக்கியம் இல்லை. நீ
சொல்லு. சேருகிறாயா?"
எப்படியும் செத்தாச்சு. இனிமே ஒன்றும்
இல்லை. "சரி" என்றேன்.
தலைவன் பெட்டில் தோற்றவனை பார்த்து
"எல்லாத்தையும் நானே சொல்லணுமா?" என்றான்.
அவன் உற்சாகமாக "சேருவதற்கு சில
ரூல்ஸ் இருக்கு. உன்னை குறைந்தது மூன்று பேர் அசிங்கப் படுத்தணும். அதற்கப்புறம் இன்னொரு
டெஸ்ட் இருக்கு. என்னவென்று சொல்ல மாட்டோம். ஆனால் அதில் நீ பாஸ் செய்ய வேண்டும்"
சொன்னான்.
"உங்கள் சங்கத்தில் சேர இவ்வளவு
கஷ்டப்பட வேண்டுமா? அந்த அளவுக்கு என்ன பெரிய சங்கம் இது. நீதானே தலைவன். சொல்லு."
"இருப்பதிலேயே நல்ல டைம்பாஸ் சங்கம்
இதுதான். மற்றதெல்லாம் ரொம்ப வேஸ்டு. அப்புறம் உன் இஷ்டம்"
"..."
"நான்தான் ஆரம்பிச்சு முதல் ஆளா
நான்தான் சேர்ந்தேன். இப்போது சேர நிறைய பேர் தயாரா இருக்காங்க. ஆரம்பத்தில் அப்படி
இல்லை. நீ லேட்டா செத்த. நான் என்ன செய்வது?"
"தலைவரை ஒரு மணி நேரத்துல மூன்று
பேர் அசிங்கப் படுத்தினாங்க தெரியுமா? அது ஒரு ரெகார்டு. உன்னால் முடியுமா?"
"இவன்தான் முதல் ஆள். இவனை அசிங்கப்
படுத்தியதை யார் பார்த்தது, அதுவும் ஒரு மணி நேரத்தில் மூன்று பேர்". இந்த சந்தேக
கேள்வியை யாரும் எதிர்பார்க்கவில்லை, முக்கியமாக அந்த தலைவன். இப்போது அவன் என்னை வெறுப்புடன்
பார்த்தான்.
பெட்டில் தோற்றவன் நிலைமையை சமாளிக்க
பேச்சை மாற்றினான். "சரி. இப்போ உன்னை எவ்வளவு பேர் அசிங்கப் படுத்தறாங்கன்னு
பார்ப்போம்"
"மூன்று பேர் எல்லாம் அசிங்கப்
படுத்த மாட்டாங்க. நான் அவ்வளவு மோசம் கிடையாது." என்றேன் கொஞ்சம் கோபத்தில்.
"அப்படியா? உன்னைப் பற்றி சொன்னவன்
அப்படி சொல்லவில்லையே."
"மிஞ்சி மிஞ்சி போனால், ஒருத்தன்
சொல்லுவான். தள்ளு. நான் போய் நிற்கிறேன் என் பிணம் முன்னால். யார் சொல்லறாங்கன்னு
பார்ப்போம்". நான் நடக்க ஆரம்பித்தேன். செத்தவர்கள் எல்லோரும் சிரித்தார்கள்.
நம்பிக்கையுடன் பிணம் முன்பு நின்றேன். இப்போது மனைவியை பார்த்தல் கொஞ்சம் ஆச்சரியமாக
இருந்தது. அழுவது மாதிரி தெரியவில்லை. வாயை மூடி உட்கார்ந்திருக்கிறாள். கொட்டாவியை
அடக்கிக் கொண்டிருக்கிறாளோ? தெரியவில்லை. மகள்களைப் பார்க்க தோன்றவில்லை. விட்டால் இந்த மூன்று பேரே
என்னை அசிங்கப் படுத்துவார்கள் போலிருக்கிறது. மூன்றோடு நின்றால் சரி. வாசலை பார்த்தேன்.
ஆட்கள் வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருந்தார்கள். உள்ளே இருப்பவர்களை விட வெளியே
இருப்பவர்கள் கண்டிப்பாக தைரியமாக பேசுவார்கள். ஏதாவது மாட்டும். வெளியே நடந்தேன்.
என் பின்னாடி சங்கத்து கும்பல் வந்தது. ஆவலுடன் காத்திருந்தோம்.
"ஸ்பாட்லயே அவுட்டு இந்த சனிப்பாடை".
காதில் இது விழுந்ததும் திரும்பிப் பார்த்தேன். பக்கத்தில் இருந்தவன் தொடர்ந்தான்.
"எந்திரிச்சு வந்துட போறான்"
"எந்திரிச்சாலும் சுடுகாட்டுக்கு
கூட்டிட்டு போய்டுவாங்க. கவலை படாதே"
எல்லோரும் கை தட்டினார்கள். "அஞ்சு
நிமிஷத்துக்குள்ளயே முதல் ஆள். சூப்பர்! தலைவர் ரெகார்டை முறியடிச்சிடுவான் போலயே"
என்றான் ஒருவன்.
"கத்தாதீங்க. ஏன் இப்படி சொன்னான்னு
கேக்கணும்"
"அவனோட அப்பன்தான் உன்னைப் பற்றி
சொன்னான்" என்றான் பெட்டில் தோற்றவன்.
"அவன் இங்கே இருக்கானா?" என்றேன்
ஆர்வத்தில்.
"இல்லை. சங்கத்துல சேர்ந்ததும்
அப்புறம் பார்க்கலாம். சனிப்பாடை! இப்போ உள்ளே வா"
தலைவனைத் தவிர எல்லோரும் மகிழ்ச்சியாக
இருந்தார்கள். நான் செத்தது எனக்கே மறந்து போய் அவர்களுடன் உற்சாகமாக இருந்தேன். எல்லோரும்
மறுபடியும் அறையின் ஓரத்தில் வந்தோம்.
"ஒரே ஆள்தான் சொல்வான்னு சொன்ன.
இப்போ பார்"
"நானே எதிர்பார்க்கவில்லை"
சிலர் தோளில் தட்டினார்கள். சிலர் கை
கொடுத்தார்கள். தலைவன் மட்டும் வரவில்லை. எங்கே என்று தேடினால் அவன் வேறொருவனுடன் சீரியசாக பேசிக்கொண்டிருந்தான்.
என்ன பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. என்னைப் பற்றிதான் இருக்கும். சங்கத்தில் சேர்ந்தவுடன்
நம்பிக்கையில்லா தீர்மானம் போட்டு முதலில் அவனை தலைவர் பதவியிலிருந்து தூக்க வேண்டும்.
பார்ப்போம். முதலில் எனக்கு இன்னும் இரண்டு பேர் வேண்டும். எங்கே அவர்கள்?
கண்ணால் தலைவனை காண்பித்து "முதல்
தடவை தலைவர் கை கொடுக்க வரவில்லை. உன்னைப் பார்த்து பயப்படறான்னு நினைக்கிறேன்"
என்றான் பெட்டில் தோற்றவன். திட்டிய கோபத்தில் என் பக்கம் சாய்கிறான். இவனை வைத்து
ஆரம்பிக்க வேண்டும். இப்போது நான் மறுபடியும் சனிப்பாடையை நோக்கி போனேன். என் பின்னால்
எல்லோரும் வந்தனர். திரும்பிப் பார்த்தேன். அங்கு தலைவன் மட்டும் தனியாக இருந்தான்.
கண்டிப்பாக மகிழ்ச்சியாக இல்லை.
ஒருவன் வேக வேகமாக உள்ளே நுழைந்து
"இவரோட ஆதார் கார்டு இருக்காங்களா" என்று என் மனைவியைப் பார்த்து கேட்டான்.
"இல்லையே. ஏன் கேக்கறீங்க?"
என்றாள். முன்னாடி அழுத அழுகையின் சோகம் மிச்சமிருந்தது முகத்தில்.
"அது இல்லைன்னா எரிக்க விட மாட்டாங்கன்னு
சொன்னாங்க. அதான் கேட்டேன்"
"என்னது? எரிக்க விட மாட்டாங்களா?
பொதச்சுடுவாங்களா?" என்றான் வேறொருவன்.
"அது நம்ம வழக்கம் இல்லீங்களே"
என்றான் வேறு வேறொருவன்.
"ஐயோ! ஆதார் கார்டு இல்லாமையா போவீங்க"
என்று என் மனைவி கத்தினாள்.
"கத்தினா வந்துட போறாரா? வந்து
ஆதார் கார்டுதான் எடுத்துட போறாரா? கார்டு இல்லாம இருக்கறவங்களுக்கு இந்த மாதிரி ஆகாதா?
அனாத..." ஆறுதல் சொல்ல வந்தவன் என்னை அனாதைப் பிணம் ஆக்கினான்.
இன்னொருவன் "அனாதைப் பிணமா"
என்று அந்த வாக்கியத்தை விட்டு வைக்காமல் முடித்தான். புரியாமல் இருந்த ஒண்ணு ரெண்டு
பேருக்கும் இப்போது புரிந்திருக்கும்.
"ஐயோ! நீங்க இப்படியா போவீங்க"
என்று மறுபடியும் கத்தினாள்.
என்னுடன் இருந்தவர்கள் எல்லோரும் ஆரவாரமாக
சிரித்தார்கள். சீக்கிரம் எல்லாம் நடக்கிறது. ஆனால் இந்த மாதிரி அசிங்கப் படுவது கொஞ்சம்
எரிச்சலாகத்தான் இருந்தது. "சும்மா இருடீ!" என்று நான் கத்தினேன்.
"நீ எதுக்கு கத்தற? அவங்க யாருக்கும்
கேக்காது" என்றான் ஒரு செத்தவன். "முதல்ல நீ சனிப்பாடை. இப்போ நீ அனாதைப்
பிணமா. தலைவரே! கேட்டீங்களா?" என்று தொடர்ந்தான். தலைவன் வேண்டா வெறுப்பாய் மண்டை
ஆட்டினான். அவன் செத்தப்போ அவனையும் கொஞ்சம் அசிங்கப் படுத்தியிருக்க வேண்டுமென்று
தோன்றியது.
இப்போது மிக அருகில் வந்தார்கள் என்னை
நெருக்கிக்கொண்டு. எனக்கு மூச்சு முட்டியது! என் மவுசு அதிகரிக்கும் அதுவும் இவ்வளவு
சீக்கிரம், என்று நான் நினைக்கவில்லை. மூன்றாமானவனுக்காக காத்திருந்தேன். இல்லை. காத்திருந்தோம்
அமைதியாக. உயிரோடு இருந்தவர்களும் இப்போது அமைதியாக இருந்தார்கள். கிட்டத்தட்ட மயான
அமைதி. வாசலைப் பார்த்துக் கொண்டிருந்தோம். உள்ளே இருந்த கொஞ்ச பேர் வெளியே சென்றார்கள்.
அவர்களே கொஞ்ச நேரம் கழித்து உள்ளே வந்தார்கள். இதையே பதினைந்து நிமிடம் மாற்றி மாற்றி
பத்து பேர் செய்தார்கள். புதுசா யாரவது வந்து தொலைங்கடா என்று முணுமுணுத்தேன். புதியதாக
ஒருவன் வந்தான். அமைதியாக வந்து ஒதுங்கி நின்றான் வாசலுக்கு அருகில். யாரிடமும் பேசவில்லை.
கல்யாண மண்டபம் மாத்தி வந்தது மாதிரி நின்று கொண்டிருந்தான்.
"இவன் யாருன்னே எனக்கு தெரியாது.
சும்மா வந்து பாத்துட்டிருக்கான். இவனை மூன்றாவதாக சேர்த்துப்பீங்களா?" என்றேன்
என் சகாக்களிடம். அவர்களும் புரியாமல் முழித்தார்கள்.
"தலைவரை கேட்க வேண்டும்" என்றான்
ஒருவன். அவன் தலைவனிடம் போய் விஷயத்தை சொன்னான். அவனும் மண்டையாட்டி கேட்டுக் கொண்டிருந்தான்.
இருவரும் என்னருகில் வந்தார்கள்.
"விஷயத்தை சொன்னான். ஆனால் சேர்த்து
கொள்ள முடியாது" என்றான் தலைவன்.
"ஏன்" என் குரலில் சுத்தமாக
மதிப்பு இல்லை.
"எதுவும் பேசவில்லையே" அவனும்
சண்டை போடும் முடிவில் இருந்தான்.
"பேசித்தான் அசிங்கப் படுத்தணுமா
என்ன?"
"எல்லோருக்கும் அதே சட்டம்தான்"
"அப்போ சட்டத்தை மாற்றலாம்"
எல்லோரையும் சுற்றிப் பார்த்து "யார் யார் இதை மாற்ற வேண்டுமென்று நினைக்கிறீங்க?
அவங்க எல்லாம் கை தூக்குங்க" என்றேன். இது வரையில் யாரும் செய்யத் துணியாதது.
கொஞ்சம் சலசலப்பு. கை தூக்க நினைத்தவர்களும் பயந்தார்கள்.
அப்போது இன்னொரு புதியவன் வந்தான். எல்லோர்
கவனமும் திசை திரும்பியது. அவன் நேரே என் மனைவிக்கு ஆறுதல் சொன்னான். அவள் ஏதோ சொல்ல,
"சரி விடுங்க. இது ஒரு கல்யாணச்ச்சாவு" என்றான்.
"இது எப்படிடா கல்யாணச்சாவு? கல்யாணம்
ஆகாம ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க. டேய்" என்று கத்தினேன். "நீ சாகாமயா போவ.
உன் சாவுக்கு வரேண்டா கண்டிப்பா" என்று இன்னும் அதிகமாக கத்தினேன்.
"இதுதான் மூன்றாவது ஆள். தலைவரோட
ரெகார்ட் பிரேக்! முப்பதே நிமிஷத்துல எல்லாம் முடிஞ்சுடுச்சு. சூப்பர்" என்றான்
பெட்டில் தோற்ற என் நண்பன். எல்லோரும் மறுபடி கை தட்டினார்கள். எனக்கு அப்போதுதான்
விளங்கியது. இப்போ நான் சங்கத்து ஆள்!
"இன்னும் ஒரு டெஸ்ட் பாக்கி இருக்கு.
பொறுங்க" என்று தலைவன் கத்தினான். அவன் சொன்னது யார் காதிலும் விழுந்ததாக தெரியவில்லை.
எனக்கு இருந்த மூடில் நான் இப்போது ஆட ஆரம்பித்தேன் சாவு மேளம் இல்லாமல்! என்னுடன்
சேர்ந்து எல்லோரும் ஆட ஆரம்பித்தார்கள். டண்டணக்க டணக்குனக்க, டண்டணக்க டணக்குனக்க. எல்லோரும் ஐந்து நிமிடம் ஆடி
களைத்து நிறுத்தினோம்.
"தலைவரே, கடைசி டெஸ்டும் பாஸ்"
என்றான் என் நண்பன்.
"எந்த கடைசி டெஸ்ட்ல நான் பாஸ்
ஆனேன்?" கடைசி டெஸ்ட் ஒன்று இருந்ததையே மறந்திருந்தேன்.
"மூன்று பேர் உங்களை அசிங்கப் படுத்தினால்
போதாது. நீங்களும் உங்களை அசிங்கப் படுத்தணும். அதைத்தான் நீங்க டான்ஸ் ஆடி பண்ணீங்க.
இதை யாரும் சொல்ல மாட்டாங்க. நீங்களே பண்ணனும். அதுதான் இந்த டெஸ்ட்டோட ஸ்பெஷல்"
என்றான் நண்பன், மரியாதையாக.
தலைவன் என்னிடம் வந்து "சங்கத்துல
சேர்ந்ததற்கு மகிழ்ச்சி" என்று மகிழ்ச்சியே இல்லாமல் கை குலுக்கினான். என் அடுத்த
இலக்கு, உன் பதவிதான் என்று நினைத்துக்கொண்டே நானும் மண்டை ஆட்டினேன்.
மற்ற எல்லோரும் என்னிடம் கை குலுக்கினார்கள்.
எதையோ சாதித்து விட்ட மகிழ்ச்சி என்னிடம். கை குலுக்கிவிட்டு எல்லோரும் வீட்டை விட்டு
போக ஆரம்பித்தார்கள். கடைசியாக நானும் என் நண்பனும். "வாங்க. போகலாம்" என்று
அவன் முன்னே நடந்தான்.
வீட்டை விட்டு வெளியே வந்தோம். என் சகாக்கள்
எல்லோரும் முன்னே போய்க் கொண்டிருந்தனர். "இப்போ நாம எங்கே போறோம்" என்று
கேட்டேன்.
என்னை பார்த்து திரும்பி சொன்னான்
"நரகத்துக்கு".
Tuesday, March 3, 2020
பயணம் தொடங்கியது - சிறுகதை - கார்த்திகேயன் A.M
'இந்த பொட்டல் காட்டுல இன்னும் எம்புட்டு வருஷம்தான் இருக்குறது, நாலு வருஷம் தண்ணி இல்ல , காடெல்லாம் பொளந்து கிடக்குது, இனிமே சோத்துக்கும் வழி இருக்காது
, பேசாம மதுரை பக்கம் போயிடலாமா'
மாரியின் கவலை அன்றைய எல்லா வீடுகளிலும்
உள்ளதுதான்.
'சும்மா இருடி கிறுக்கு தனமா பேசாத , இந்த
வாட்டி மழை பேயும், அப்புறம் எல்லாம் சரியாயிடும் '
கந்தசாமி அவளை சமாதானம் சொல்லி பேச்சை
நிப்பாட்ட பார்த்தான் .
'கிழிக்கும், இந்த நாலுக்கும் சோறு போட
வேண்டாம், பேச்சு வயசுக்கு வந்தாச்சு அவளையும் கட்டி குடுக்கணும் '
'காலையில ஆரம்பிகிக்காத, நான் இந்த குளத்தம்
கரைக்குபோய்ட்டுவாரேன் '
'எதுக்கும் வக்கு இல்லனாலும் சீட்டு விளையாட
மட்டும் கிளம்பியாச்சு'
அவன் குளத்தம் கரையில் உள்ள அரச மரத்தடியைதான்
அப்படி சொன்னான், அந்த திண்டில் , ஊரில் உள்ள அநேக ஆண்கள் சீட்டு , ஆடுபுலி , தாயம்
என்று விளையாடி மழைவர வேண்டி கொண்டுஇருந்தனர் .மற்ற ஆண்கள் எல்லாம்
மதுரை , சென்னை , ஏன் பம்பாய் வரை கூட வேலை தேடி சென்றுவிட்டார்கள், அவர்களுக்கு இந்த
ஆட்டம் பிடிபடவில்லை.
ஊரில் உள்ள எல்லா பெண்களும் கல் உடைக்கவும்,
கிணறு தோண்டவும் சென்றார்கள், கூலிக்கு கிடைக்கும் கோதுமையோ அரிசியோ அவர்களை உயிர்
வாழ உதவியது.
கந்தசாமி, மாரியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்,
தனது ஆண்மையை கேள்வி கேட்டவளுக்கு அதை நிருபிக்க வேண்டியுள்ளதால், அவன் கை ஓயும் வரை
அடித்தான்.
பேச்சி அவனுடைய வம்சத்தையும் ஆண்மையும்
மேலும் பழித்தால்
பாவம் அவனும் என்ன தான் செய்வான் இருந்த
எல்லா பொருளையும் விற்று சீட்டு விளையாடினான், ஒரு நாளும் ஜெயித்த பாடு இல்லை.
சாயங்காலம் சாராயம் குடிக்கும் கடன் ஏறிக்கொண்டே
சென்றது.
மொக்கை குடிசையின் ஓரம் நின்று அழுது கொண்டுஇருந்தான், அவனது தம்பி சந்தோஷமாக மண் அல்லி தின்றுகொண்டிருந்தான்,
பேச்சி தனது மாமனின் குடிசை வாசலில் நின்று என்ன செய்வது என தெரியாமல்
கண்கள் கலங்கி நின்று கொண்டிருந்தாள்.
மாரி கூந்தலை அல்லி முடிந்து கொண்டு தூரத்தில்,
வேலுப்பிள்ளையின் காட்டில் கிணறு தோண்டும் வேலைக்கு கிளம்பினாள்.
நாற்பது அடிவரை பல அடுக்கு பாறைகளை உடைத்தாகி
விட்டது , ஈரத்திற்கான தடம் இல்லை.
மாரி வேகமாக நடந்தாள், அவளின் நம்பிக்கைகள்
எல்லாம் பொய்த்து கொண்டு போனது , கல்யாணம் ஆன புதிதில் சந்தோசமாகதான் இருந்தார்கள்.கந்தசாமி
தனது இரண்டு ஏக்கர் நிலத்தில் எள்ளு , பருத்தி ,வேர்க்கடலை என சாகுபடி செய்து ,செழிப்பாக
இல்லாவிட்டாலும் நிம்மதியான வாழ்க்கை அமைய உதவியது.
பேச்சி பிறந்த பிறகு பல ஆண்டுகள் கழித்து
மூன்று ஆண் பிள்ளைகள் .காடு காய்ந்தது , அதனுடன் சேர்ந்து வீடும் அந்த ஊரும்.கிணறு
இருப்பவர்களின் தோட்டத்திற்கு வேலைக்கு சென்றார்கள் . மூன்று வேலை கஞ்சி இரண்டு வேலை ஆனது.இப்பொழுது அரசாங்கம் கிணறு தோண்டுபவர்களுக்கு
கொடுக்கும் கோதுமை தான் குடும்பத்தை காப்பாற்றுத்துகிறது, அந்த ஊர் மக்களெல்லாம் பிழைப்பு
தேடி மதுரை, சென்னை என்று செழிப்பாக வாழ்வதாக வரும் செய்தி அவளை
நிலையில்லாமல் ஆக்கியது , பேச்சி பெரியமனுஷியாகியது அவளை தூக்கமில்லாமல் செய்தது ,
சீட்டு கட்டு கந்தசாமிக்கு வீட்டைமறக்கடித்தது ,சாராயம் அவன்குடும்ப பாரத்தை குறைக்க உதவியது. பேச்சி கந்தசாமியை மீட்க முடியாத குழியில் இருப்பதாக நம்பினால்,
அது அவள் ஆழ்மனதை நெருப்புக்குழம்பாக கொதிக்க செய்தது. இந்த பிள்ளைகளின் சிரிப்பும்
அவர்களின் எதிர்காலத்தின் நினைப்பும் அவளின் செயலில் அதை பிரதிபலிக்க செய்யாமல் செய்தது.மொக்கையனின்
புழுதி படிந்த தலையும் வெற்று உடம்பும் ஐந்து வயது மழலை பேச்சும் அவளை கரைத்தது .
கந்தசாமியின் உதை இன்று அவளை எதுவும் இயலாதவளாக
உணர செய்தது, வேலை முடிந்து கூரைப்பெட்டியில் அரிசி கொண்டுவந்தாள் ,
மொக்கையன் தாயை பார்த்த ஆனந்தத்திலும்
சோறு கிடைக்க போகும் ஆசையிலும் குதித்து ஓடி வந்தான் , மாரியின் முகத்தில்
எந்த ஒரு உணர்ச்சியும் இல்லை.
'ஏல பேச்சி எங்க போன' பக்கத்து குடிசையை
பார்த்து கத்தினாள், அது அவளது தம்பி காசியின் வீடு, வெள்ளைக்காரனுக்கு வாகன ஓட்டியாக
இரண்டாம் உலக போரில் பணிபுரிந்தவன்.
ஊரில் அனைவரும் அவனை மிலிட்டரி என்று கூப்பிடுவார்கள்.
பெரிதாக அவனுக்கு வேலையும் இல்லை தேவைகளும் இல்லை, அக்காவிற்கு தேவைப்படும் பொழுது
பணமாகவோ அல்லது பொருளாகவோ கொடுத்து உதவுவான்.தான்தோன்றியாக சுற்றியதால் திருமணம் புரிதலும்,
குழந்தைகளும் இடைஞ்சல் என்று எண்ணினான்.இந்த ஊரில் ராணுவ கேப்டனுக்குஉண்டான அனைத்து
மரியாதையும் அவனுக்கு உண்டு , அதனால் இந்த ஊர் அவனுக்கு மிகவும்
பிடித்துவிட்டது .
'அங்க இங்கனு நின்னு வாய பக்காத போயி சுல்லி
பெறகிட்டு வா' மாரி பேசிக்கொண்ட தன் குடிசைக்குள் சென்று அடுப்பை பற்ற வைத்தால்.
'ஏல மொக்கை, உனக்கு இன்னைக்கு அம்மா கஞ்சிக்கு
துவையல் தரேன், போயி ஓட கரையில இருக்குற மரத்துல இருந்து காயிகளை பரிச்சிட்டு
வா ' உற்சாகத்தில் இருந்த மொக்கைக்கு இது மேலும் குஷிப்படுத்தியது.
மொக்கை ஓடிப்போய் அந்த அரளி செடியில் இருந்த
காய்களை பறித்து கொண்டு வந்தான்.
மாரி அனைவருது கிண்ணத்துலயும் கஞ்சி ஊத்தினால்
.
கந்தசாமி இன்னும் வீடு திரும்பவில்லை,
சாராயம் குடித்த போதையில் தெரு முனையில் விழுந்து கிடந்தான். இன்னும் ஒரு மாதத்தில் சாராயக்காரியின்
பெயருக்கு அவனது காடெல்லாம் மாறி போகும்,
அதை பற்றி கவலைப்படும், நிலையில் அவன் இல்லை.
மாரி துவையலை அனைவருக்கும் ஒரு உருண்டை
பிடித்தால், முதலில் அவள் உண்டாள், மொக்கையன் கண்களில் அவனுக்கு வாழ்கை மீது இருக்கும்
நம்பிக்கையும் ஆனந்தமும் தெரிந்தது.
அவளின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து
ஓடியது, முதல் உருண்டையை அவள் உண்டாள், மொக்கையன் கையை நீட்டினான். வாழ்கை பிட்சை கேட்பது
போல் தோன்றியது அவளுக்கு.
அவனது தலையில் ஓங்கி கொட்டினால், மற்ற
அனைத்து உருண்டைகள அவளே முழிங்கினாள் . பேச்சி புரிந்தும் புரியதுமாக முழித்து கொண்டு
இருந்தால்.மொக்கையனை மாரி சமாதானம் செய்து தூங்க செய்தால்.
அனைவரும் தூங்க சென்றுவிட்டனர். கந்தசாமி
இருள் ஏறிய பிறகு விடு வந்தான், மாரியை சமாதானம் பண்ணிவிடலாம் என்ற நம்பிக்கையில்
.
'எடி மாரி, இந்த கஞ்சி உத்துடி' என்று
அவளை உலுக்கினான், அவனது மொத்த போதையும் தெளிந்தது. தனது வாழ்க்கையே பாரமாக உணர்ந்தான்.
காசி மறு நாள் , ஆலமரத்தில் விழுதாய் தொங்கிய
கந்தசாமியியை இறக்கினான்.
முப்பதாவுது நாள் பேச்சி , கருப்பசாமி
கோயில் வாசலில் மணமகளாய் நின்றாள், நொண்டி பால்சாமி அவளுக்கு வாழ்கை
தந்தான்.
காசி அன்று இறவு தனது மருமகன்களை தூக்கி
கொண்டும், பிடித்து கொண்டும் , நடக்க ஆரம்பித்தான், ஊர் வெளியே சென்று அங்கு இருந்த
கருப்பசாமி கோயில் வாசலில் நின்றன்.
அங்கு கோயில் கதவு சாத்தி கிடந்தது, அங்கு
நின்று சாமி கும்பிட்டு தரையில் இருந்த மண்ணை அள்ளி நெற்றியில் பூசினான்.
ஊரை விட்டு வெளியே செல்லும் சாலையில் நடக்க
ஆரம்பித்தான், அவர்களை வழியனுப்பவோ வரவேற்கவோ எந்த ஊரும் இல்லை
Subscribe to:
Posts (Atom)