Wednesday, March 2, 2022

சரவண பெருமாள் கவிதைகள்

 


    

  1.பேராச்சி

சர்க்கரைப் பொங்கலில் கண்
வைத்திருந்த மழலைகளையும்,
காதலியின் கனவில்
இருந்த காதலனையும்,
அடுத்தவள் அலங்காரத்தில்
இருந்த மாதரையும்,
புது மகிழுந்து -சாவியின்
இருந்து கணவர்களையும்,
எழுப்பியது கோவில் மணி!

மணந்தது பூவும் ,புனுகும்!
மயக்கியது சந்தனமும் -
சாம்பிராணியும்!
செம்பட்டு விரைவாய் விலக,
வெண்படல புகை மெதுவாய் அகல,
சந்தன காப்பில் அவள் சிரித்த முகம்!
சிலர் சிரிக்க ,
சிலர் விழிநீர் சிந்த,
சிலர் சன்னதம் கொள்ள
நின்றிருந்தேன் நானும்!

பொருநை நீர் சொட்டிய உடலுடன்
மயிர்கள் கூச்செரிய
கைகூப்பி
நிற்கிறேன் நானும்!

என்று அந்து முண்டாசுக்கவி
சொல்லடி சிவசக்தி
என்றானோ,
அன்றிலுருந்து‌ அவள்
அணுக்கம் எனக்கு!
தாயாய் கொடுப்பாள்,
பிள்ளையாய் பிடுங்குவாள்,
தோழியாய் விளையாடுவாள்,
இடும்பையாயினும்
இன்பமாயினும்
நிற்பேன் அவள் முன்!



2.அவளும் நானும்!

முகிலாய் அவள் சுற்றம்
இருந்தும் விழுந்தாள்
நிலவாய் கடலில்…!
அலைகளாய் அவன் சுற்றம்
இருந்தும் பிடித்தான்
நிலவை கடலில்..!


  3.கடலை மிட்டாய் டப்பா….

கடலை மிட்டாய்
டப்பா காலியாவதில்லை!
தாய்க்கென்று தந்தையும்,
மகனுக்கென்று அம்மையும்,
தம்பிக்கென்று அண்ணனும்,
யாருக்கோ என்று தம்பியும்,
கடைசி மிட்டாயயைத்
தின்னாமல் இருப்பதால்
கடலை மிட்டாய்
டப்பா காலியாவதில்லை!

No comments:

Post a Comment