திடீரென்று முழித்தேன். முழித்த சிறிது நேரத்தில் அடி வயிறு வலிக்க கழிவறை செல்ல வேண்டியதாயிற்று. முடித்து, நடு வீட்டிற்குள் வந்தேன். அங்கே சுமத்ரா ஒருக்களித்துப் படுத்து தூங்கி கொண்டிருந்தாள் . அவள் கழுத்து வரை போர்வை மூடியிருக்க, போர்வையினுள் அபிமன்யு கிடந்தான். அவன் இடக்காலை அவள் இடுப்பில் தூக்கிப் போட்டிருக்க, போர்வையின் வெளியே சின்ன பாதம் எட்டிப்
பார்த்தது. அவளின் அடர்ந்த ஜடை அவன் கைக்குள் இருந்தது. அபிமன்யு எனக்கும் சுமத்ராவுக்கும் திருமணமாகி ஒரே ஆண்டில் பிறந்தான். இப்போது வயது ஐந்து. மெல்ல பக்கவாட்டு அறையின் கதவை திறந்து பார்த்தேன். அம்மா கட்டிலில் ஒருக்களித்துப் படுத்திருந்தாள். முதுகு என்னை நோக்கி இருக்க அருகில் ஜெயமோகனின் காடு விரிந்து கிடந்தது . மூடி வைத்து விட்டு வாசலுக்கு
வந்து கதவை திறந்தேன். சுண்ணாம்புக் கலவையில் நீலம் கலந்ததைப் போல வெள்ளையும் ஊதாவும் கலந்த அதிகாலை வெளிச்சம் அமைதியாகப் பரவிக் கொண்டிருந்தது . நான் இதுபோன்ற காலைப் பொழுதுகளை என் வாழ்க்கையில் அதிகம் பார்த்தது இல்லை .ஆனால் நன்றாய் நினைவிருக்கிறது பார்த்த நாளெல்லாம் ஏதோ ஒரு கிளர்ச்சியான மென்மையான உணர்வு இளையராஜாவை கேட்கும்போது எழுமே அது போன்ற உணர்வு எழும். ஆனால் சோம்பேறித்தனம் அதைத் தினமும் அனுபவிக்க விட்டிருக்கவில்லை. மெதுவாக சுற்றுசுவரில் கையை ஊன்றி தெருவை பார்த்தேன் . தெருவெல்லாம் காகித தெறிப்புகள் பாதிக் கருகிய நிலையில் சிதறிக்
கிடந்தது.
இரண்டு வீடு தள்ளி ஒரு வீட்டின் முன் வெடித்து சிதறிய பட்டாசுக் குப்பைகள் ஒரு சேர பெருக்கப் பட்டு ஒரு குவியலாக்கப்பட்டிருந்தது. இரட்டைக் குழந்தைகள் இரண்டுமே சிறுவர்கள் அவர்களுக்குள்ளே ஏதோ பேசிக்கொண்டு குவியலைக் கிளறிக் கொண்டிருந்தார்கள். மனதில் நேற்றைய சம்பவம் நெருடிக் கொண்டே இருந்தது. அம்மா அவ்வளவு கோப பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்றே தோன்றுகின்றது. வாழ்வின் ஒரே ஒரு முறை என்னை அடித்திருக்கிறாள். அப்பா போட்டோவைக் கேட்டு அடம்பிடித்ததற்கு. வெகு நேரம் அழுது கொண்டிருந்தேன். அம்மா ஒரு போட்டோவை எடுத்து வந்தாள் அதில் அம்மாவுடன் மூவர் இருந்தனர். ஒருவர் கழுத்தில் மாலை, அதே மாதிரியான மாலை அம்மா கழுத்திலும் தொங்கியது. அப்பாவை அடையாளம் சொன்னாள் . எங்கே என்றேன் இனி வர மாட்டார் என்ற பதில் வந்தது. ஏன் என இது வரைக் கேட்டதில்லை . நான், அம்மாவைத் தவிர எவரும் வீட்டில் இருந்ததே இல்லை .அவ்வபோது அம்மாவோடு வேலை செய்யும் சுதா ஆண்டி வருவதுண்டு. அம்மாவிடம் செல்லமும் இல்லை, அதிகப்படியான கண்டிப்பும் இல்லை. இப்போது படுத்திருக்கிறானே அபிமன்யு அது போல நான் அம்மாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு தூங்கியதாய் எல்லாம் எனக்கு நினைவில்லை .ஆனால் இவன் அதிர்ஷ்டக்காரன்!அவன் ஆச்சி தலை முடி பிடிக்காமல் தூங்கியதே இல்லை .
அம்மா வெளியில் யாரிடமும் அதிகம் பேசுவது இல்லை. புத்தகங்கள் வீடு முழுக்க நிரம்பியிருக்கும். அபிமன்யு சுமாத்ரா சபாபதி வந்த பின் புத்தகம் வாசிப்பது குறைந்திருந்தது என்றே தோன்றுகிறது. நேற்று போல அம்மா என்னிடம் கடுமையாக பேசியது இல்லை. அப்படியென்ன சபாபதி??
.....
சட்டென சபாபதி ஞாபகம் வரவே,
"சபாபதி" என்று கூப்பிட்டுப் பார்த்தேன் எந்தச் சலனமும் இல்லை.
அவனுடைய கூடாரத்தில், வீட்டின் பக்கவாட்டில்
இருந்த தோட்டத்தில் சென்று பார்த்தேன். எங்கும் இல்லை சுற்றுசுவர் இரும்பு கதவைப் பார்த்தேன். மூடியிருந்தது. வெளியே சென்றிருக்க
வாய்ப்பில்லை.! மாடிக்கு சென்று பார்த்துவிட்டு வேகமாக படியிறங்கிய போது கெட்டியான வார் போன்ற வால் சிமெண்டால் ஆன மாடிப்படிக்கும் வீட்டுச் சுவற்றிற்கும் இடையே உள்ள இடைவெளியில் தெரிந்தது . "இதற்குள்ளேயா"!!மாடிப்படிக்கும் சுவற்றிற்கும் இடையில் உள்ள இடைவெளி மிகக் குறுகியது. ஒரு ஆள் , சுவற்றிற்கு இணையாக நின்று, மெல்ல மெல்ல ஒரு காலை முன்னகர்த்தி பக்கவாட்டில் சென்றால்தான் அதனுள் செல்ல முடியும் . நீளம் 5.5 அடி இருக்கும் . மாடிப்படிக்கு அருகே வந்து பார்த்தேன் . அந்த இடைவெளியில், இரண்டு கால்களை நீட்டி அதில் தலையை வைத்து பின்னிரண்டு கால்களின் மேல் உடலை வைத்து வயிறு தரையில் படும்படியாக ஒளிந்து கொண்டிருந்தான் . வால் வெளியே நீட்டிக் கொண்டிருந்தது .
"சபாபதி" என்றேன். மெதுவாகத் தலையைத் தூக்கினான். அந்த சந்தில்
தலையைத் திருப்ப முடியாது.மெதுவாக எழுந்து பின்னாடி நகர்ந்து வெளியே வந்தான். முன்னங்கால்களை
வளைத்து உடம்பை நெளித்துக் கொடுத்தான் . தலையைத் தூக்கி அண்ணார்ந்து பார்த்தான். பழுப்பு நிறக் கண்கள். அவனுக்கு கண்களில் உணர்சிகளை வெளிக்காட்ட
தெரியுமென்றே நினைக்கிறேன். இப்போது என்னைப் பார்த்த போது
பயந்த கண்கள் அழுவது போல் தெரிந்தன.
அபிமன்யுவிற்கும்
இவனுக்கும் ஒரே வயது ஏறத்தாழ. நான்கு
மாதங்கள் சபாபதி பெரியவன் . சுமத்ரா ஆறு மாதமாய் இருக்கும்போது, சபாபதி கிடைத்தான்
. வீட்டிற்கு கொண்டு வந்தேன் . அம்மா"இத ஏன்டா கொண்டாந்த , அவளுக்கு டெலிவரி ஆச்சுன அவளைப் பார்க்கணும் புள்ளைய பார்க்கணும்
, இத யாரடா கவனிக்க"என்றாள் . நான் கையிலிருந்து இறக்கி
விட்டதும் தள்ளாடி தள்ளாடி நடந்து-அப்போதுதான் நடை பழகியிருந்த நான்கு கால் குழந்தை
போல-சுவரில் இடித்துக் கொண்டான் . பின்பு திரும்பி
நடந்து அம்மாவின் இரண்டு கால்களுக்கு இடையில் , அவள் சேலையின் நடுவில் நுழைந்து நின்று
கொண்டான். அன்றிலிருந்து அவன் அம்மாவின் வளர்ப்பு, அம்மாவின் கையாள், நிழல் . நடைபயிற்சிக்கு
செல்லும்போது, கடைக்கு செல்லும்போது இவனும்! சங்கிலியின் ஒருபுறம் அம்மாவின் கை மறுபுறம்
அவன் கழுத்தைச் சுற்றிய சங்கிலியோடு இணைக்கப்பட்டிருந்த
வார். சுத்த காவிநிறம் மூக்கிலிருந்து வாய் வரை கருப்பு நிறம் அப்பியிருக்கும் .தெருவில்,
மற்ற நாய்கள் உறுமும்
போது அம்மாவின் பின்னால் பதுங்கிக் கொள்வான்
. அம்மா இதற்கென்றே ஒரு கம்பை கையில் வைத்திருப்பாள் . உறுமிய நாயை கம்பைக் காட்டி
விரட்டுவாள் . உறுமிய நாய் பயந்து ஓடும் தருவாயில் ஏதோ தானே விரட்டியது போல் குரைப்பான் .சுத்த பயந்தாங்கோலி.
அம்மா விரட்டிய அந்த நாய் மேலும் ஓடுமெனில், இவன் குரைப்பு இன்னும்
அதிகமாகும் .பின் அம்மாவின் கையில் உள்ள கம்பு இவன் தலையை இடித்ததும் முனகிக் கொண்டே அமைதியாவான். இவனுக்கும்
சுமாத்ராவுக்கும் உள்ள உறவு சுவாரசியமானது. இவளிடம் சபாபதி அதிகம் ஒட்ட மாட்டான். வீட்டின்
வெளியே தூணில் கட்டப்பட்டிருக்கும் போதெல்லாம் தன்னிரக்கம் மிகுந்து விட்டேத்தியாய்
முனகிக் கொண்டேயிருப்பான். சற்றுநேரத்திற்கெல்லாம் முனகல் படிப்படியாக ஊளையாக மாறிவிடும்.
அப்போதெல்லாம் வெளியே வந்து அவள் நின்றால், அவளைப் பார்த்ததும் ஊளையிடுவதை நிப்பாட்டிவிட்டு
தலையை லேசாகத் தாழ்த்தி தரையைப் ஓரக்கண் வைத்து பார்த்திருப்பான். சிலசமயம் சுமாத்ரா
சோறு வைக்க வேண்டியிருக்கும் . இவள் சோறு வைத்து செல்லும் வரை தட்டருகே போக மாட்டான்.
அவள் சற்று அப்பால் சென்றதும் வாய் வைப்பான். இதே அம்மா சோறு வைக்கிறாள் என்றால், தட்டை
வாயால் கவ்வி தூக்கி வைத்திருப்பான். அம்மா தட்டை பிடுங்கி சோறு வைக்கும்போது , அவள் கையை நக்குவான் . சபாபதிக்கு அபிமன்யு மேல் தனிபிரியம் உண்டு. சுமாத்ரா அபிமன்யுவிற்கு ஊட்டுவதற்கு
சிலசமயம் தோட்டத்திற்கு தூக்கி செல்வாள். சபாபதி அவர்களை சுற்றி 10 அடி தொலைவில் எங்காவது நின்று அவர்களை பின் தொடர்வான்.
அபிமன்யு அடம் புடிக்கும்போது, சுமத்ராவின் குரல்
சற்று ஓங்கினாலும் , சபாபதி குரைப்பான். அந்த குரைப்பு "உனக்கும் எனக்கும்
1000 இருக்கலாம், அதற்காக அவனை திட்டுவதை பார்த்து
கொண்டிருக்க முடியாது" என்பது போல இருக்கும். சபாபதி உள்ளபடியே
பயந்தாங்கோலி என்றாலும், உயிர் போதும் அளவுக்கு பயப்படுவது 2 விஷயங்கள் 1. தண்ணீர் 2. பட்டாசு. அவனைக் குளிப்பாட்ட இங்கு பகிரத பிரயத்தனம்
நடக்கும். அவனுக்கென்று ஓர் வாளியுண்டு . அதில் தண்ணீர் பிடிப்பதை பார்த்தாலே அவன் கூடாரத்திற்குள் பதுங்கிக் கொள்வான். அவன் கூடாரம் மரப்பலகைகளால் 4 புறமும்
அடைக்கப்பட்டு , மேலே கூம்பு வடிவ தகரத்தால் மூடப்பட்டிருக்கும். அம்மா கையை
விட்டு அவன் வாரைப் பிடித்து வெளியே இழுத்து , தூணில் கட்டி, சுமாத்ரா சங்கிலியைப் பிடித்துக் கொள்ள , அம்மா குளிப்பாட்டி விடுவாள். ஒரு குவளை தண்ணீர் ஊற்றும்வரைதான், அங்கலாய்ப்பு.
பிற்பாடு , எருமை போல் நின்றிருப்பான். குளித்து முடித்ததும், உடலை உலுக்குவான். தண்ணீர்
சிதறும். அதைப் பார்க்கும்போதெல்லாம் அபிமன்யு கைத்தட்டி
சிரிப்பான். அபிமன்யு பொறுத்த வரை சபாபதி
ஒரு விளையாட்டு வஸ்து . சபாபதி காதைத் திருகுவான்
, அவனுக்கு கொடுத்த தண்ணீரை
சபாபதி மீது கொட்டுவான். அப்போதெல்லாம்
சபாபதி தலை தெறிக்க ஓடுவான் .
நேற்று தீபாவளி பட்டாசில் தான் பிரச்சனை. அம்மா அபிமன்யு மீது அவ்வளவு கோபப்பட்டு
பார்த்ததில்லை. ஏன் என் மீதும் கூட அவ்வளவு
கடின வார்த்தையை உபயோகித்ததில்லை . அபிமன்யு ஒரு நாள் கூட அவன் ஆச்சி இல்லாமல் தூங்கியதே இல்லை
. நேற்றுதான் முதல் தடவை. காரணம்?? ஆம் பட்டாசுதான்
. அபிமன்யு பிறந்ததிலிருந்து இதுவரை வீட்டில் பட்டாசு வெடித்துக் கொண்டாடியதில்லை .நேற்று வாங்கி கொளுத்தினோம் .
சபாபதி பதுங்கி இருந்தான் அம்மாவின் நாற்காலி
அடியில். அம்மா எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்
. அபிமன்யு "ப்பா, விடி சபதி" என்றான்.
சபாபதி மீது வெடியைப் போட சொன்னான். நானும் அருகில் சென்று வெடியைக் கொளுத்துவது போல
பாவனை செய்தேன். அம்மா வேண்டாமென எச்சரித்தாள் . அபிமன்யு சிரித்தான் . நான் ஆர்வ மிகுதியில்
மீண்டும் சபாபதியை மிரட்டினேன் . அம்மா இம்முறை சற்று கடுமையாக எச்சரித்தாள். அதற்குள்
சபாபதி தோட்டத்திற்குள் ஓடினான் . நான் அபிமன்யுவை தூக்கிக்
கொண்டு சபாபதியை துரத்தி ஓடினேன் .
வெடியையும் கொளுத்தி போட்டுவிட்டேன். சபாபதி ஊளையிட்டுக் கொண்டே அம்மாவின் காலடியில்
சென்று படுத்துக் கொண்டான் . சபாபதியின் பின்புறமிருந்து இரத்தம் வந்துவிட்டது. அம்மா
அபிமன்யுவை ஓங்கி அடித்து விட்டாள். அபிமன்யு சற்றே விக்கித்து பின் ஓலமிட்டான். சுமாத்ரா
சரேலென அபிமன்யுவை வாங்கி கொண்டு வீட்டினுள் போய்
விட்டாள். அபிமன்யு அழுதுகொண்டே இருந்தான் . அம்மா அவள் அறையில் சென்றவள்தான்.
வெளியே வரவே இல்லை . அபிமன்யு அழுது ஒய்ந்து தூங்க நெடுநேரமாகியது “ஆச்சி ஆச்சி என்று அறற்றிக் கொண்டே இருந்தான் . நான் என்னறையில் படுத்துக் கொண்டேன். இரவு யாரும்
சாப்பிடவில்லை .
......இப்போது என்னைப் பார்த்த போது
பயந்த கண்கள் அழுவது போல் தெரிந்தன. மெதுவாக தடவி விட்டேன். கையை நக்கினான் . அம்மா வெளியே வந்தாள்
. என்னிடம் பேசவில்லை. கடைக்கு புறப்பட தயாரானாள் வழக்கமான கம்புடன் சபாபதியும்
. "அம்மா பால் வேணாம் இன்னைக்கு பீச்
போய்ட்டு அப்படியே சாப்டு ஷாப்பிங் பண்ணிட்டு வந்தர்லாம் " என்றேன் . அம்மா பேசவில்லை ..உள்ளே சென்றுவிட்டாள்.
சாப்பிட்டுவிட்டு பீச்சில் உக்காந்திருந்தோம், சபாபதி அருகில் உக்கார்ந்து நாக்கை தொங்க
போட்டு கடலைப் பார்த்துக் கொண்டிருந்தான்
.இதுநாள் வரை நாங்கள் கடலில் சென்று கால் நனைத்து
விளையாடும்போதெல்லாம் அவனை இழுத்துப் பார்போம் வரவே மாட்டான் . காலிரண்டையும் மண்ணில் ஊன்றி இழுக்க
முடியாதவாறு படுத்துக் கொள்வான் . அம்மா அபிமன்யுவைக் கூப்பிட்டாள் "வா மாதேன் போ "என்றான்..அம்மா ஒரு புது
பொம்மையைக் காட்டியதும் "தமிக, குடு" என்று அம்மாவிடம் சென்றான்..அம்மா அவனைக்
கூட்டிக் கொண்டு கடலில் கால் நனைத்து விளையாடிக்
கொண்டிருந்தாள் . திடீரென்று, அலையின் திசைக்கு எதிர் திசையில் ஓட முற்பட்டு தடு மாறிக்
கீழே விழுந்து விட்டாள். நான் எழுந்து ஓட முற்படுகையில் பின்னே இருந்து சபாபதி நாலு
கால் பாய்ச்சலில் ஓடினான் ..அதற்குள் அம்மா எழுந்து விட்டாள். சபாபதி கடலில் இறங்கி
அம்மாவை இரண்டு கால்களாலும் தொற்றி , சுற்றி சுற்றி வந்தான். அபிமன்யு"
ஆச்சி தொமடீர் " என்று சிரித்துக் கொண்டிருந்தான்
...அம்மா சபாபதியை"ஒன்னும் இல்லடா , ஒன்னும்
இல்ல வா போலாம்னு " காரை நோக்கிப் போய்
கொண்டிருந்தாள். சபாபதி அவளைச் சுற்றி சுற்றி தொற்றிகொண்டே கார் வரை சென்றான் .அவள் காரில் ஏறியதும் எங்களை நோக்கி ஓடி வந்தான்.
நல்ல கதை
ReplyDelete