Tuesday, March 1, 2022

ஸெல்மா சாண்டாவின் அலமாரிப் பூச்சிகள்.. - சிறுகதை - லட்சுமிஹர்


சிதிலமடைந்திராது தன்னை தக்க வைத்துக்கொள்ள பேருதவியாக மீண்டும் மீண்டும் எனை  வட்டமடித்து ரீங்கரித்துக்  கொண்டாடும் இவைகளைப்  பற்றி எப்படி எனக்கு தெரியாதோ,?  அதே போலத்  தான்  வெள்ளை நீரோடைக்குள் இருளின் குவியலாகிய  எண்ணங்கள் மிதந்து, தேங்கிக்  கிடக்கும் கறுப்பு வடிவத்திற்குள் அவனது அதே வடிவமும்  ஒன்றோடொன்று  நேரெதிரில் . மேலும்  என் ஒளிர் சிகப்பால் செல்மாவின் மன ஆழத்தைப் பளிச்சிட,  அவளை அணுகத்  துடித்த அவன் கிறங்கித் தான்   போகிறான்....

கிறிஸ்துமஸ்  நெருங்கிக்  கொண்டிருந்தது .

வெண்ணிற நீரோடையில் நீந்தத்  தொடங்கியவனுக்குச் ஷெல்மாவின்  அறிமுகம் அவ்வளவு எளிதில் வாய்க்கவில்லை.

இருட்டையும் துணையாக அழைத்துக்கொண்டு அவனோடு விளையாடி மகிழ, மனம் குதித்தெழும்பி இதுவரை கண்டிறாதப்  பெரும் பதற்றத்திற்குள் கொண்டு செல்லும்...

' அவன் பார்த்திடுவானா  ' என்று தன்னை கறுப்பு கனலில் மறைத்திட்டு எதிர்பார்ப்பினை வெளிபடுத்த இந்த கதையை சொல்லிக்கொண்டிருக்கும்... தொங்கிக்  கொண்டிருக்கும் கிறிஸ்துமஸ் ஸ்டார் சாட்சி.

கருங்குவி  எண்ணங்களை நன்குத்  தெரிந்தவன் போல, அடர்ந்த இருட்டினுள் அவள் கண்களை வந்தடைந்து விடுகிறான். பெரும் வெளிச்சமாகி அவர்களின் இடைவெளி  நிரப்பப்படுகிறது.

**

" கண்டிப்பா அந்தக் காட்டை பார்க்கணும்... எழில் வனப்பு  . "

எப்போதும் இதைப் பற்றியானப்  பேச்சுத்  தான் அவளுக்கு.

நிதானிப்பில்லாத பேருலைச்சல் அகத்தில்  வந்துவிடுவது எதனால் என்று கண்டறிய முடியுமா என்ன !?  சிரிப்புதான் மலர்கிறது .

கீயிங்கி  நினைப்பு  செல்மாவைச்    சுற்றிக்கொண்டு இடைவிடாத இறுக்கத்தில்  அவளைச்   சாப்பிட  ஆரம்பித்திருக்கிறது ..

கீயிங்கி  காட்டிற்குள் அவள் இதற்குமுன் ஒரு முறை மட்டும் சென்றிருக்கிறாள்...

எங்கும் நிறைந்து கிடக்கும் பனிப்பாறை இடுக்குகளில் துளிர்த்திருக்கும் மலர்களின் மேல் துயில்கொள்ள.. அதைப்  பறித்திட்டு நுகர,  கவிதை கூட அங்கிருந்து பறித்து வந்தது  தான்‌‌‌ என்பாள்.

பறந்த வெளியில்  சுற்றித்திரியும் சுகத்தைக்  கண்டவளாய்,த்தி கூச்சலிட்டு தன் இருப்பைத்  தெரியப்படுத்த வேண்டும் என்கிற பாரமின்றி, சிறு சிரிப்பினில் பெரும் வனத்தை தனதாக்கும் குழந்தையின் அசைவாக..

அங்கிருக்கும் மனிதர்கள் யாவும் தன்னை புல்லினூடும் , பெரும் மரங்களினூடுமே பிணைத்திட்ட பிழைப்பு.

நிரம்பி வழியும்  புனிதமென்று அங்கு ஏதும் இல்லை...!!

தான் கண்ட இந்நிலப்பரப்பின் ரகசியத்தை எங்கனம் காப்பாற்றுவது.அதனால் ஏற்படும் எந்த குழப்பமும் நீண்டு கொண்டே இருக்க அனுமதி மறுக்கப்  பட்டு  மறைகிறது. காப்பாற்ற வேண்டும் என்பதைத்  தாண்டிச்  சரியான செவியினுள் அதை நுழைத்திடவே விழிக்கிற எண்ணத்தில்,  காப்பாற்றிட வேண்டும்  என்கிற அவசியம்  இருக்க வாய்ப்புகள் குறைவு....ஓளி ஊடுருவி சிதைந்த மனதை எடுத்தெழும்பிட  அலையோடு கரையில் சேர்க்கச்  சொல்லித்  துடிக்கிறது... யாராக இருப்பான்?  அவனுக்காகவே  ரகசியத்தை என்னுள் மீண்டிடாத உணர் இடுக்குகளில் அசைந்தாடி இணையாக்குகின்றன .

" ஸெல்மா ..ஸெல்மா .." இன்னும் சத்தமாக அவள் பெயரை யாரோ கூப்பிடுவது கேட்டுத்  திரும்பினாள்..

அதிசயங்கள்... !!!

அவளை அணைத்துக்  கொண்டு  கீயிங்கி காடு தூங்கிப்  போனது....

அவள் கீயிங்கி  காட்டின் இதய துடிப்பை கேட்டுக்  கொண்டேயிருந்தாள்,

உறங்குவது போல நடித்துக்கொண்டு... !!!

***

காத்திருப்பு எவ்வளவு கொடியது.. ஆரம்பத்தில்..சுகமென மாறிப்  போகும் தருணத்தை கண்டடைய இருவரும் தங்களைச்  சுற்றி பிணைக்க முடியாதப்படி ஆக்கிக்  கொண்டவைகளைக்  கண்டறியும் படலமாக மாறிப்போனது...

ஏங்கித்  தவித்தலில்  மிருகத்தின் உருவமாகிப்  போய்க்  காட்டினை ஆள எவ்வளவு நீள நிழல் கொண்டு துரத்திவிட   முடியுமோ ?

நேர நெருக்கடிகள் அற்ற நூலாம்படைகளாகவேத்  துருத்திக்  கொண்டிராத திருப்பல்கள் நிறைந்த பக்கங்கள் ...

வசமென சுருண்டு மேலிருந்து கீழேன வலமிருந்து இடமெனப்  பெருகிப்  பழுத்த நெஞ்சுக் கூடுகள் சேர்ந்து அளித்திடும் சிதைவுகள் யாவும் மீறல் இன்றி நிகழ்ந்த நினைவோடை குமிழ்களுக்குள்ளே   உட்கார்ந்து கொண்டேச்  சுற்றி அலையலாம்.

அவளை உடையெனும் பாவனையில் ஊரும் பனுவல் பூச்சியை எங்னம் விரட்டுவாள்? 

அது அவளை மெல்ல விழுங்கத்  தொடங்கிச் செமிக்கும் தருணமது   .

அதன்  பரிவு மிகுதியில் திளைத்தக்  குவி ஆழத்திடலாகிய  நெஞ்சின்  சுமைகளை அழுந்தி அழித்திட்டு போய் ஊரும் ஞானத் தேடலான இவை இருப்பின் சில தருணங்களில் சுழன்று சிறு அசைவின் படியே களித்திடும் நேரங்களில் மிகையாகிப்  போன அலங்காரம் அற்றப் பிணையில் கொண்டு செல்லப்படும் இளவரசி.

மேனியெங்கும் படர்ந்து விரிந்து தன்னை நிலைநாட்டிக்  கொண்டப்  பூச்சி அவளது ஆழ்மனத்திற்குள் இறங்கத்  தொடங்கியக்   காலக் கட்டம் கீயிங்கி  காட்டின் பனிக்காலம்.

காதல் படர்ந்து வெறிபிடித்து விருச்சம் விட்டு வளர்‌‌‌ந்து தன்னை தன் காலக்  கட்டத்திலிருந்து தனித்துக் காட் நீண்டு வளர்ந்திருந்தவைகள், எவர் சென்றாலும் உள்ளிழுத்துக்‌‌‌ கொண்டு தான் யார்..? என்பதை நிரூபிக்கும் கொடிய, பாசாங்கு இல்லாத  வெளியாகி மிளிர..

அதன் ஆதி வினைக்குப் பெரும் வணக்கத்தை வைத்ததையும் பூச்சி  எடுத்துக்கொள்ள , அரித்து கிடக்கும் மேனிக்குள் அழகின் சாட்சியாய் நின்றிருக்கும் இதை அவன் உணரத்  தொடங்கிய நேரம், கரையான்கள் அரித்துக்கிடக்கும் பக்கங்களோடு  அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களிலேயே அவனின்  பார்வையோடியது.

" books  இவ்வளவு படிப்பியா ?!" என்றான் ஆச்சரியப்  புன்னகையுடன்.

அவளது சிரிப்பில் ஊறி  உதிர்ந்த பூச்சிகள் அவனுக்குத்‌‌‌ தெரியவில்லை .

***

கிறிஸ்துமஸின்  முன்னிரவு பூத்துக்  குலுங்கும் அந்தக்  காட்டினை அறிமுகப் படுத்துவதாய் அவள் அவனுக்குச்  சத்தியம் செய்தாள்.

“ நீ பாத்துருக்கியா? ! ”

“ம்ம் ”

“உண்மையாவா..எங்க இருக்கு ?”

“அவசரப்  படாத... கிறிஸ்‌‌‌துமஸ் இரவு  பக்கத்துல இருக்கு ”

அவள் அருகில் நெருங்க முற்பட்டப்  போது..

அவள்  வானில் தொங்கிக்  கொண்டிருந்த ஸ்டாரை அவன் மேல் தட்டி விட்டாள்.

சின்ன அடிதான் .

சிணுங்கல் சிரிப்புடன்..

“ என்ன.. ஏன்   புடுச்சுருக்கு.. உனக்கு.? ”

“..... ” அமைதியாக அவன் .

“ நீ.. எதுக்கு என்ன பாத்துட்டே இருந்த? ”

“ அதை தான்,  நான் கேட்கலானு  வந்தேன்”

“கீயிங்கி காட்ல மனுசங்க எப்படி இருப்பாங்க தெரியுமா? 

“தெரியாதே 

“முட்டாள் நான்  .. ச்‌‌‌ச.. உனக்கு எப்படித்  தெரியும்..விக்ரம் ”

“ விக்ரம் சம்புகன் 

“ சம்புகன்.. ம் ம்..தவம் செய்து வரம் வாங்கி என்னை வந்தடைந்துள்ளாய் போல .. அங்கு எல்லோரும் சமம், விக்ரம் சம்புகன்... ”

“கீயிங்கி ( முனுமுனுத்துக்  கொள்கிறான் ) ..நானும் பார்க்கணும் ”

“ கிறிஸ்துமஸ்  பிறக்கும் இரவு வரை காத்திரு..கீயிங்கி காட்டினுள் உன்னையும் அழைத்துச்  செல்கிறேன் ”

எதற்கு அவளைப்  பிடித்துப்போனது.. இப்படி அவளின் அறையில் தனிமையில் இருப்பதை எண்ணிப்  பார்த்திடாதவனின் பார்வை நீண்டு அவளின் உடலின் சுவையறிய துடிக்க... அவளுடனான நெருக்கத்திற்கு காத்துக் குறுகிய கவலையே காத்திருத்தலில் .. வெளியேற துடிக்கும் சர்ப தீண்டலின் மௌனமாகி ஊர்ந்து நெளிந்தது ..

***

எண்ண வெளியில்....

“ பைத்தியமா இவளுக்கு? 

“எனக்கா..?  ஆம்.”

****

உடலின் ஆழத்தினை அறியாதவனாகிப்  போக வாய்ப்புகள் பல இருக்கையில், சரியான மேனியைத் தேர்ந்துடுத்து மெய் சிலிர்க்க வேண்டிக் காலம் தாழ்த்துதல் எவ்வளவு பெரிய முட்டாள் தனம். கீயிங்கி  காட்டின் தன்மையை அறிந்திட அவள் சொல்லும் கதைகளை உள்வாங்கிக்‌‌‌ கொள்ளும் போது அவளின் அங்க அசைவுகள் யாவையும் உன்னிப்பாக கவனிக்கத்  தொடங்கினான்.. அதைக் கொண்டாட கிறிஸ்துமஸ் இரவு வரை காத்திருக்க வேண்டுமா?  மனம் ஏங்கித்  தவியாய் தவித்தது.‌.. உடல் பாவம் தானே?

தூரத்துப்  பார்வையில் ஏங்கியதை விட, அருகில் ஏங்கிக்  கிடப்பது சாவின் சாவியை பாக்கெட்டில் வைத்து விட்டு மகிழ் நினைவு மீட்ட தரையின் மீதுப்  பாதம் படாமல் வானை எட்டி விடும் கனவாகவே இருக்கிறது...

குதி..  குதி..

     ..  குதி..

கீயிங்கி கதைகள் நின்ற பாடில்லை.

கதைகளினுள் நுழைந்து வெளியேற அனுமதிக் கொடுத்த வண்ணமே இருக்கிறாள்.

கீயிங்கி காடே..

கிறிஸ்‌‌‌துமஸ்  விடியும் முதல் நாள்?  

பைத்தியம்.. அவள்.. பைத்தியம்.. வானெங்கும் கோலோச்சி நிற்கும் கதையின் வாள் பிடி அவள் இறுக்கத்தில்..

அங்க அசைவில் எனைப் பற்றி எறியும் சீண்டல்கள் கீயிங்கி காட்டிற்குள் கொண்டுச்  செல்ல மெல்லிய விரிசலாகுமா  ..

அவள் முன், அமர்ந்து கொண்டிருக்கும் என்னை பரிசுகளை அள்ளிக்  கொண்டு வந்து வெளிப்படுத்தத்  துடிக்கின்ற விலையற்ற  கொண்டாட்ட நிலையில் தள்ளிவிடும் தாடி வளர்த்த கிறிஸ்துமஸ்  தாத்தாவாக்கிய கற்பிதம் .

உருவங்கள் கொள்ளும் சித்திர உரையாடல்களின் வழியே என்னைக்  கையசைவில் பத்திரமாகப்  பார்த்துக்‌‌‌ கொண்டே   " நல்லாருக்கு... டிரஸ் " என்றாள்.

“ இது..கிறிஸ்துமஸ்  தாத்தா டிரெஸ்ஸா ..”

“ஆமா..அழகா இருக்கு..”

பரிசுகள் குவியும் தடத்தினை அறிய மகிழ்ச்சி .

****

கிறிஸ்துமஸ்  முன்னிரவு :

அவள் அவன் கையை இறுக்கிப்‌‌‌ பிடித்திருந்தாள் ... அவன் இதயம் துடிக்கும் படபடப்பு இங்கு வரைக் கேட்கிறது...

அவள் அவன் அருகில் நெருங்குகினாள்..

“ விக்ரம்.. ”

“ ம்..சாண்டா..” நெஞ்சம் கொள்ளவில்லை.

சிரித்துக்கொள்கிறாள்.

மிகையென மீறல்கள் இன்றித்  தழுவிக்  கொள்ள ..

அணைப்பில் எதைக்  கொண்டு வந்து சேர்த்தாள்  என்று தெரியவில்லை..   கீயிங்கி ..காடு அவன் கண் முன் காட்சியளித்தது..

தன்னை இழந்தவனை, அவள் பனுவலின் பக்கங்களென வாசிக்கத் தொடங்கினாள் ..

கிறிஸ்துமஸ்  இரவில்..சிதிலமடைந்திராது, தன்னை தக்க வைத்துக்கொள்ள பேருதவியாக, மீண்டும் மீண்டும் எனை  வட்டமடித்து ரீங்கரித்துக் கொண்டாடும் இவைகள்  அந்த பனுவல் பூச்சிகளைத் தவிர வேறொன்றுமில்லை.

*****


1 comment: