சருகனியிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் கிழக்கே
அதுவரை யாருமே அறிந்திருக்காத பொடிசான கிராமமாய் கிடந்த ஊர் ராக்கினார்கோட்டை. ஆனால்,
கடந்த எட்டு வருடங்களாக அதன் கதை வேறு. அந்த ஊரையும் அங்கு எட்டு ஆண்டுகளாய் நடந்து
வரும் திருவிழாவையும் பற்றி இப்போது அறியாத
ஆட்கள் அந்த மாவட்டத்தில் கிடையாது. அந்த ஊர் அம்மன் சக்தி வாய்ந்தவள். பிள்ளை வரம்
கொடுப்பவள், தாலி பாக்கியம் அருளுபவள் என்பதெல்லாம் தான் அவ்வளவு மக்கள் மனதிலும் இப்போது பொங்கி நிற்பது. ஒரே ஒரு அடுக்கு கோபுரம் உடைய அந்த
கோவிலுக்கு அத்தனை மவுசு என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். ஓரடுக்குக்கு மேலே கோபுரம்
எழுப்பக் கூடாதென கிடையாது. எழுப்ப இயலாது. ஆத்தா வாக்குத் தரவில்லை.
வருடா வருடம் தை கடைசியில் திருவிழா கூடும்.
காப்புக் கட்டியது முதல் திருவிழா வரைக்கும்
ஒட்டுமொத்த ஊரும் விடிகாலைக்கான அன்னமாகாரம்
தவிர்த்து விரதம் கிடக்கும். காப்புக் கட்டிய நாளிலிருந்து திருவிழா வரைக்கும் தினமும்
இராச்சாப்பாடு கோவிலில் பொங்குவார்கள்.முதல் நாள் தொட்டு திருவிழா வரை ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு பங்காளிமார்கள் மண்டகப்படி எடுப்பார்கள்.
அலுப்பு தட்டாமல் எட்டுநாள் இராத்திரியும் அம்மனைத் தூக்கம் முழிக்க வைத்திருக்க வேண்டி,
விடிய விடிய முளைக்கொட்டும் நடக்கும். அந்த ஊரைச் சுற்றிலும் உள்ள மொன்னர்கோட்டை, ஆக்கவயல்,
சூராணம், ஆழ்வாரேந்தல், கோட்டைக்காடு ஊர் குடி எல்லாம் கோயில் வாசலில் கூடி மாறி மாறி
தூக்கம் முழித்து முளைக்கொட்டி தினமும் ஆராதனை பாடுவார்கள். எட்டாம் நாள் பெரும் நாள்.
எட்டாம் நாளாகும் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உற்சவம், ஆராட்டு, பூக்குழி, பால்குடம்,
அருள்வாக்கு என எல்லாமும். முந்தைய நாள் இரவிலிருந்து விழா நாள் முடியும் வரை, அறுத்துக்
கட்டிய வயக்காடுகள் முழுக்க அலங்கார விளக்கு மரங்கள் வளர்ந்து மின்னும். பாட்டும் கூத்தும்
செவிப்பறைகளை அறையும். தொலைவிலிருந்து பார்க்க ஒரு முழு ஊரின் மீதும் ஒளிரும் மழை பெய்து
கொண்டிருக்கிறது என இரவின் கண்கள் விரியும்.
அன்றைக்கு மாலை தான் கோவிலில் திருவிழாவுக்குக்காக
காப்புக் கட்டியிருந்தார்கள். காப்புக் கட்டியது
முதலே கார்மேகம் முகத் தெளிச்சியில்லாமல் தான் இருந்தார். எவருடனும் பேசாமல் கொள்ளாமல்
முகம் சுண்டித் திரிந்தார். குஞ்சரத்துக்கு அவர் எதைப் போட்டு மனசில் உழற்றிக் கொண்டு
அப்படி இருக்கிறார் எனத் தெரியும். அது அத்தனை தூரம் நினைத்து நொந்து போக வேண்டிய சமாச்சாரமில்லை
எனத் தெரிந்திருந்தாலும்,இற்றுப் போன கைச்சட்டமாய் தன வீட்டு ஆம்பிளை அலைவதைப் பார்க்கப்
பார்க்க அவளது கன்றிப் போன கன்னங்களில் கண்ணீர் பொருமி வழிந்தது.
“ இப்டி நீங்க மொகத்தைத் தொங்கப் போட்டுக்கிட்டு
திரியிராப்புல எல்லாம் மாறிடுமா?. ஆனது ஆச்சுன்னு, அதை விட்டுத் தள்ளாம, இப்பத்தான்
இப்டி உக்கிப் போயி அலைஞ்சா எல்லாம் சரியாப் போகுமா?. பனி என்ன பனியாவா எறங்குது, ஆளக்
கொன்னுரும் போல. விசப் பனியாவுல்ல இருக்கு. வாங்க மொதல்ல வீட்டுக்குள்ள. போட்ட சோறு
ஆறி விருவிருத்துப் போச்சு.” தாழ்வார ஓட்டில் செருகியிருந்த சுருட்டையும் தீப்பெட்டியையும்
அவரிடம் நீட்டியபடி சத்தம் போட்டாள்.
“ ஒழுங்கா வாய மூடிக்கிட்டு உள்ள போறியா என்னடி? நாரமுண்டை. உனக்குலாம் என்ன மசுரா தெரியும். அந்த
கோயிலைப் பத்தியும் அங்கே எங்களுக்கிருந்த மருவாதி பத்தியும்.” நாராசமாய் கத்திக்கொண்டே
குஞ்சரத்தை எட்டி ஒரு உதை உதைத்தார் கார்மேகம்.
“ ஒன்னும் அறியாம தெரியாம ஒன்னும் நான் பேசல
சாமி . அதான், உங்களுக்கு உண்டானதச் செய்யணும்னு ஒருத்தனும் நிக்கலயில்ல. பங்காளிகளே
உங்களுக்கு மண்டகப்படியில எடமுமில்ல எழவுமில்ல ன்னு சொல்லிட்டாங்க. அப்புறம் என்னத்துக்காம்
ரோசமா வந்து இங்க முட்டிக்கிட்டுக் கிடக்கனும்ங்கிறேன்?.” விழுந்த உதையில் தடுமாறி
விழுந்தபடியே தரையை அடித்து அழுதாள் குஞ்சரம். அழுதபடி கிடந்த குஞ்சரத்தை அக்ரோசமாய்
மீண்டும் உதைக்க ஓடிய கார்மேகம் போன வேகத்தில் அவளை ஒன்றும் செய்யாமல் தன் தலையிலேயே
ஓங்கி ஒரு அடி அடித்துக் கொண்டார். பற்ற வைத்து வாயில் கனன்று கொண்டிருந்த சுருட்டை
எடுத்து படுவேகமாய் தரையில் எரிந்து வெறுங்காலால் மிதித்து அணைத்தார்.
“தாயோளிக, யாரை யாரு ஒதுக்குறதாம்? அவன் அப்பன் மட்டுமா
கட்டுனான் அந்தக் கோயில? திருவிழா வரட்டும். சிறிக்கி மக்களுக்கு அன்னைக்கு இருக்கு
கச்சேரி.”
கார்மேகத்துக்கு கோவில் மீதிருந்த கொஞ்ச நஞ்ச
உரிமையையும் பழுத்த மஞ்சனத்திப் பழத்தைப் பிய்த்துத் துப்பும் பறவைகள் போல அவரது பங்காளிகள்
இழுத்துப் பறித்துப் பங்குப் போட்டுக் கொண்டிருந்தார்கள். அவரை உறவுக்காரன் என்பதிலிருந்தும்
உரிமைக்காரன் என்பதிலிருந்தும் மெல்ல மெல்லச் சவட்டித் தள்ளத் தொடங்கினார்கள். இதையெல்லாம்
தாண்டி இத்தனைக்கும் அவர்கள் மூவரும் கார்மேகத்தின் பெரியத்தா மக்கள் என்பது தான் குஞ்சரத்துக்கு
நெருக்கென்று தைக்கிற விஷயம்.
அப்பன் செத்த பிற்பாடு பெரியத்தா மக்களோடு
ஒன்றாய்ப் போய்விட கார்மேகம் முருக்கிக் கட்டிய நம்பிக்கைகள் எல்லாம் நுனி கடிபட்ட
செடி போல வளர வாய்க்காமலே போய் கொண்டிருந்தன. அவர்களின் வீட்டுப் படியேற எத்தனை முறை
தலைப்பட்டாலும் முகங்கொடுத்துப் பேசக்கூட அவர்கள் தயாராக இருக்கவில்லை. நரகலைப் பார்க்கும்
முகச்சுளிப்புடனே அவர்கள் கார்மேகத்தைப் பார்த்தார்கள். கார்மேகத்தின் அப்பா பூசாரியாக
இருந்து சேவகம் பண்ணிய பிச்சையம்மன் கோவில் மீதான தனக்கிருக்கும் சிறு உரிமையும் கிடைக்காமலா
போய்விடும் என்று தான் அவர் நம்பியிருந்தார். நிகழும் என எதிர்பார்க்கும் தருணங்கள்
வெறும் சிந்தனை அளவிலிருந்து நீள மறுக்கின்றன. அதன் உண்மை உணரப்படும் நேரம் வாழ்வின்
மீதான கசப்பு தாளாத நிலைக்குச் செல்கிறது.
கார்மேகத்தின் வாழ்நாளைய எதிர்பார்ப்பையும், அந்த அளவிலான புனித நோக்கு எனும் ஒன்றைத்தான்
தாம் எதிர்த்து வழி மறித்து திருப்பி அனுப்புகிறோம் என்பதை அறியாத அவரது அண்ணன்களின்
வளர்ந்து நிற்கும் வெறுப்பையும் அது வளர்ந்து நிற்கும் உயரத்தையும் பார்த்து மிரண்டு
நடுங்கினாள் குஞ்சரம்.
சைக்கிள் ஹேண்டில்பார் இடுக்கில் சொருகி வைத்திருந்த
பாதி எரிந்த சுருட்டை எடுத்து பற்ற வைத்தார். பந்தத்தையே அணைக்கும் காற்று அடித்துக்
கொண்டிருந்தது. இரண்டு மூன்று குச்சிகள் உரசியும் பொடிக்கங்கு கூட சுருட்டில் பிடிக்கவில்லை.
ஒரே கொத்தாய் மூன்று நான்கு குச்சிகளை அள்ளி உரசினார். ‘சுரீர்" என வளர்ந்த நெருப்பின்
ஒளியில் அவர் முகம் அத்தனை ஆங்காரமாய் கனன்றது. சுருட்டை பெரும் இழுப்பாய் இழுத்து
நெஞ்சுக்குள் வெது வெதுவென புகையை நிரப்பி, நிதானமாய் மேலே பார்த்தபடி வெளியே தள்ளினார்.
நெஞ்சில் ஏறி நிறைந்திருந்த சுருட்டின் மொத்தக் கசப்பையும் கூட்டி காறித் துப்பிவிட்டு,
சுவரோரமாய் சரிந்து கிடந்த சைக்கிளை எடுத்து கண்மாய் கரைப் பக்கம் வேகமாக அழுத்தினார்.
அவ்வளவு இருட்டிலும் அவர் பாதை தவறாமல் கரையில் ஏறி மறைவதை அதிசயமாய் பார்த்தபடியே
தரையில் நொடித்துக் கிடந்தாள் குஞ்சரம். உடையதை இழக்கும் போது வராத ஆத்திரமும் துடியும்
இழந்துவிட்டோமென பிறர் கூடி அனுதாபப் பாவனையில் “உச்” எனும் போது கங்காய் உடைந்து காந்துகிறது.
அவருக்குள் அது தன் பெரிய சிவப்பு நாக்கால் பெரும் மலையையே பொசுக்கும் காட்டுத்தீ போல
எரிந்து கொண்டிருந்தது.
திருவிழாவுக்கு முந்தைய நாள், கடைசி மண்டகப்படி.
மொங்காரி வீட்டுப் பங்காளிகள் மண்டகப்படி. கோயிலின் முன் ஊர் திரண்டிருந்தது. மறுநாள்
திருவிழாவுக்காக கோவிலைச் சுற்றி சுத்தம் செய்யும்
பணி நடந்து கொண்டிருந்தது. ஊர் பெண்டுகள் மொத்த பேரும் உடல் வளைத்து குனிந்தபடி சுத்தம்
செய்து கொண்டிருந்தார்கள். கோவிலின் உச்சி கலசத்தில் அமர்ந்திருக்கும் ஒரு செம்போத்துக்
குருவியின் கண்களுக்கு மத்தியில் கோவிலிருக்க
சுற்றிலும் குனிந்து வேலை செய்யும் பெண்களைப் பார்க்க கீதாரிப் பெண்ணொருத்தி தன் ஆடுகளை
மேய்ச்சலில் விட்டு கவனித்துக் கொண்டிருப்பது போல இருந்தது. அந்த கோயில் தெய்வம் நிஜாமகவே
அவர்களுக்கு அப்படித் தான். இருளேறிக் கொண்டிருந்த மாலையில் கோயில் அலங்கார விளக்குகளை
தன் மீது போர்த்தி நின்றது. மண்டகப்படி பூஜை கார்மேகத்தை கழித்து நடந்து முடிந்தது.
மற்ற எல்லா நாள் மண்டகப்படிகளுக்கும் ஓடியாடி வேலை செய்துகொண்டிருந்த கார்மேகம் அன்று
கோவில் பக்கமே தலை காட்டவில்லை. குஞ்சரம் மட்டும் வந்திருந்தாள். பேச்சில்லாமல் கோயிலைச்
சுத்தம் செய்தாள். தீபாராதனை நேரம் ஒளிகூசாத வண்ணம் இமைகள் மூடி கண்கள் நீர் பொங்க
சாமி கும்பிட்டாள். என்ன குறையிருப்பினும் அவளுக்கு அந்த அம்மனைக் கும்பிடாமல் நாள்
ஓயாது. காய்ச்சல் மண்டையடி என கிடந்தாலும் “ஆத்தாவோட துண்ணூறு போட்டா பூராம் சரியாப்
போகும்" என்பாள். தன் குடும்பம் ஒதுக்கப்பட்டது பற்றி அவளுக்கு பெரிதாய் ஒன்றும்
அக்கறையில்லை. “சாமிக்குத் தொண்டூழியம் பண்ண சாக்கு எதுக்கு” என்பது குஞ்சரத்தின் நினைப்பு.
ஊரார் யாரும் ஏன் கார்மேகம் ஒதுக்கப்பட்டார்
என்று கேட்கக் கூட வாய் திறக்கவில்லை. பிரச்சினைகள்
தம்மைப் பதம் பார்க்காத வரையில் எல்லோருக்கும் அடுத்தவருக்குச் சொல்ல மட்டும் அனுதாப
வார்த்தைகள் கட்டுடைத்துக் கொட்டுகின்றன. அடுத்தவருக்கான நியாய அநியாயங்களை கேட்கத்
துணியும் நாக்குகள் எந்த தெய்வத்தாலும் படைக்கப்படவேயில்லை போலும்.
குஞ்சரம் பாதியிரவில் வீடு திரும்பினாள்.
கோயிலுக்கு வராதவர் வயிற்றுக்கு கஞ்சி கூட குடிக்கமாட்டார் என்பதும் அவளுக்குத் தெரியும்.
கோயிலுக்குக் கிளம்பும் முன்னமே அளவாய் சோறு பொங்கி வைத்துவிட்டு தான் சென்றாள். வீடு
வெளிச்சம் செத்துக் கிடந்தது. ஆள் பினாத்தும் சத்தம் மட்டும் கேட்டது. கார்மேகம் தான்.
விறகு வெட்டு கூலி மொத்தத்துக்கும் குடித்திருந்தார். வீட்டு வாசலில் காலை போட்ட கோலத்தின் வண்ணங்கள்
அப்பி நிறம் பூத்து உருண்டு கொண்டிருந்தார். கைலி அரைஞாண் கயிற்றிலிருந்து அவிழ்ந்து
அனாமத்தாய் கிடந்தது.அத்தனை போதையிலும் விட்டத்தை பார்த்துக் கிடந்தபடி ரண ரணமாய் கெட்டவார்த்தைகளை
எறிந்துகொண்டிருந்தார்.
குஞ்சரம் கையில் எடுத்து வந்திருந்த கோயில்
பிரசாதத்தை தட்டோடு கீழே போட்டுவிட்டு வேகமாய்
ஓடி கார்மேகத்தின் தலையைத் தூக்கித் தாங்கித் தூக்கினாள். நிரம்பக் குடித்திருந்ததால்
வாந்தியும் எடுத்திருந்தார் போல. வாயோரமெல்லாம் பருக்கைகள் கோழைக் கறையாய் படிந்திருந்தது.
சேலைத் தலைப்பால் வாயைத் துடைத்து விட்டவள், நெற்றி, கன்னம், காது என தூசி ஏறிக் கிடந்த
மனிதனை, குளிப்பாட்டிய பச்சைப்பிள்ளையை துவட்டும் பக்குவமாய் துடைத்துவிட்டாள். தட்டுத்
தடுமாறி அவரை எழுப்பி வீட்டுக்குள் அழைத்துப் போக முயன்றாள். அலைக்கலிப்போடு எழுந்து
நிதானப்பட நின்றபோது, கொஞ்சம் தள்ளி சிதறிக் கிடந்த கோயில் பிரசாதத்தை பார்த்துவிட்டார்.
அவ்வளவு நேரமும் மழுங்கிக் கிடந்த நிதானத்தை எங்கிருந்து திரட்டினாரோ தெரியவில்லை.
“ அடி, மானகெட்ட நாயே, கொஞ்ச நஞ்சமாச்சும்
ரோசம் வேணாம்,ரோசம். நம்மள ஒதுக்கி ஆகாத ஆளுன்னு விட்டப்பறமும் அவன் மண்டகப்படி சோத்தை
திங்கப் போனியாடி தேவிடியா!”. குஞ்சரத்தை ஓங்கி அடித்துக் கீழே தள்ளி வராத எச்சிலைக்
காறி குஞ்சரம் மேல் துப்பினார்.
“ காப்பாத்த இருந்த சாமியையும் எனக்கில்லைனு
பறிச்சுட்டான். சரி, கட்டுனவளாச்சும் இருக்காளேன்னு நெனைச்சேன். ஒக்காளி, என் நினைப்பத்
தான் செருப்பக் கொண்டு வெளுக்கணும். மானங்கெட்ட தேவிடியா.”
“கட்டுனவன் சொல்லுக்கு மட்டுப்படாம இன்னைக்கு
அவய்ங்க வீட்டுப் பந்தி வரை போனவ, நாளைப் பின்ன பாய்க்கும் போனாலும் போவா சிறுக்கி
முண்ட"
அவிழ்ந்து கிடந்த கைலியை பல்லில் கடித்துக்
கொண்டே வெறிகொண்ட மட்டும் கத்தினார். போதையேறிய உடம்புக்கு தடித்த வார்த்தை எது என்றெல்லாம்
தெரியவில்லை. சர்வ சாதாரணமாகவே கொலை வார்த்தைகளை விளாசினார். சொல் குத்திய மாத்திரத்தில்
கண்ணீர் சுரப்பு அறுபட்டது குஞ்சரத்துக்கு. அகல விழித்து அவரைப் பார்த்தவளுக்கு முகத்தில்
உணர்ச்சிகள் செத்து சுண்ணாம்பாகிப் போயிருந்தன. சாராய உறைப்பு மூளையைக் குத்தியிருந்ததால்
அவருக்கு பொட்டு நிதானமில்லை. அவளைத் திட்டிக் கிழித்துக் கொண்டே வெளியேறிப் போய்விட்டார்.
உடைந்த கலயம்போல கிடந்தவள் வழு திரட்டி எழுந்து
மெலிதான சுவரத்தில் ஒப்பு வைத்துக் கொண்டே வீட்டுக்குள் சென்றாள். அந்த ஒப்பாரி அபலையாய்
அலையும் கன்னிகளின் அழுகையை ஒத்திருந்தது. காற்று கட்டந்தரையையும் கீறி மண்ணெடுத்து
வீசிக் கொண்டிருந்தது. எண்ணெயில்லாமல் காமாட்சி விளக்கு சுண்டி சுண்டி எரிந்து கொண்டிருந்ததைப்
பார்த்ததும் தீப்பெட்டியிலிருந்து இரு குச்சியை எடுத்து தலையைத் திருப்பி திரியை நிமிண்டிவிட்டாள்.
திரியின் நாக்கு அளவாய் நீண்டு நிற்கும்படி எரியவிட்டாள். வீட்டின் கோடிக்குப் போனவள்
வேம்பின் அடியில் வைத்திருந்த விடிவிளக்கு எரிவதையும் ஒரு பார்வை பார்வை பார்த்துவிட்டு
வந்தாள். வேம்படியில் சின்ன பூடமாய் நிற்கும் தன் ஒற்றைப் பிள்ளைக்கு அவள் தினமும்
விளக்குப் போடுவாள். ஐந்து வயதில் மஞ்சள்காமாலை சுருட்டிக் கொண்டு போன அவள் மகனுக்கு
இருட்டு என்றாலே பயம். அந்த ஒற்றை விளக்கு அவனுக்கு விடிய விடிய துணையிருக்கும். பாதியிரவில்
முழிப்புத் தட்டினால் கூட விளக்குக்கு எண்ணெய் பார்த்து ஊற்றுவாள். பிள்ளை பாவம் பயந்தவனில்லையா?.
இரண்டு விளக்குகளின் வெளிச்சமும், திறந்த மடை நீர் போல இருண்டு கிடந்த வீட்டை மெல்ல
மெல்ல செம்மஞ்சள் ஒளியால் நனைத்துக் கொண்டிருந்தன.
கார்மேகம் குடிவெறியில் கோயிலுக்கே போய்விட்டார்.
முளைக்கொட்டி கொண்டிருந்த பெண்டு பிள்ளைகளை இடித்து விலக்கிக் கொண்டு கர்ப்பக்கிரகத்தை
பார்த்து மண்டியிட்டபடி தரையிலும் தலையிலும் மாரிலும் மாற்றி மாற்றி அடித்துக் கொண்டு
அழுதார். கோப வேகத்தில் கண்ணீரோடு நாக்கைத் துருத்திக் கத்தியதில் நாக்கு பிளந்து ரத்தம்
கசியத் தொடங்கியது. யாரும் வந்து தூக்கவுமில்லை. தடுக்கவுமில்லை. கையைக் கட்டியபடி
சாமியானா பந்தலில் பனிக்கு பாதுகாப்பாய் உடகார்ந்து கொண்டு வேடிக்கை மட்டும் பார்த்தது
அவரது பங்காளி குடும்பம்.
“ அடி ஆத்தா! உனக்கு என்ன நான் குறை வச்சேன்?.
ஒண்ணுமத்த தாயோளிக புள்ளை குட்டியோட உனக்கு பொங்கல் வச்சு பூஜை பண்றான். காப்படி நெல்லுன்னாலும்
அதுல உனக்குன்னு ஒரு பாகம் ஒதுக்கி, உன்னைய மூச்சுக்கு முன்னூறு தரம் ஒப்பிக்கிற என்னைய
மட்டும் ஏண்டி ஒதுக்கிப்புட்டே?. என் புள்ளை செத்தாலும், சிட்டு மாறி இருக்க உன்னைய
என் வீட்டு பொம்பளயாளு புள்ளைக்குப் புள்ளையா, தாய்க்குத் தாயா நினைச்சு விரதம் மேல
விரதம் இருந்து விறகாக் கிடக்கா. அவ கூடவா உன் வெள்ளிக் கண்ணுக்குத் தெரியாமப் போனா?.”
அழுத்தம் கூடி கோபம் வெடிக்கையில் அது கண்ணீராகி கரைவதன்றி தணிவதில்லை. உள்ளதை மறுத்து
ஒருவரை ஒதுக்குவது போல கொடுங்கொலை வேறொன்றும் நிகழ்வதேயில்லை.
மௌனமாய் இருந்த கூட்டத்திலிருந்து அப்போது
தான் யாரோ பேசினார்கள். “ நல்ல நாளு பெரிய நாளு அதுவுமா இந்த கெச்சங்கெட்ட பரதேசிப்
பய இங்க வந்து ஒப்பு வச்சுக்கிட்டு இருக்கான் பாரு. இவனெல்லாம் இந்த ஊரே இல்லன்னு சொன்னோம்.
ஆனா பாரு, இப்ப உறவுன்னு வந்து நிக்கிறான். பூசாரி வீடு நாங்க தான எடுக்குறது குடுக்குறதுன்னு
எல்லாம் பாக்குறோம்?. தரித்திரத்தை தலை மேல சுமக்குறவன் இந்த வாசப்படிக்கு வரலாமா?
ஆத்தாளுக்கு கறையாகதா அது?. மொதல்ல அவன இடத்த காலி பண்ணச் சொல்லுங்கய்யா. வப்பாட்டிக்குப்
பொறந்தவன்லாம் பங்காளியாக முடியாதுல்ல. அவனுக்கு ஒரு முறையும் கிடையாதுன்னு சொல்லி
கிளம்பச் சொல்லுங்கப்பா ஏய்”. மொங்காரியின் மூத்த மகன் பல்லைக் கடித்துக் கொண்டு சப்தம்
போட்டார்.
“ நானும் மொங்காரிக்கு பொறந்தவன் தான்டா.
எனக்கு உள்ளதை இல்லைன்னு சொல்ல நீ யார்ரா? தாயோளி. சாமிக்கு ஊழியம் பண்ண உடையவன் இல்லைன்னு
என்னைய ஒதுக்க நீ என்ன அந்த ஆத்தாளுக்குப் பிள்ளையோ? கமண்ட பயலுகளா, என்னைய ஒதுக்கிட்டு
திருவிழா எப்படி நடத்துவீகன்னு நானுந்தான் பாக்குறேன்.? சிவந்த கண்கள் நீர் உகுக்க
கேட்டைத் தாண்டி வெளியேறி மண்ணையள்ளித் தூற்றிக் கொண்டே நடை தடுமாறி போனார்.
மறுநாள் திருவிழாவுக்காக கோயிலும் ஊரும் தன்னை
அலங்கரித்துக் கொண்டிருந்தது.நேர்த்திக்கடன் கிடாய்களை கொண்டுவந்து கோயிலில் கட்டிக்
கொண்டிருந்தார்கள். வெறுமனே கொட்டகை மட்டும் கட்டப்பட்டிருந்த வாசலில் பூ அலங்காரங்கள்
நடந்துகொண்டிருந்தது. வேப்பிலையும் மாவிலையும் சேர்த்து தோரணம் கட்டினார்கள். நாடக
மேடைக்கு மண்ணள்ளிக் கொட்டி சமன் செய்தார்கள். எல்லாம் நாளை ஒரு நாளைக்கான ஆரவாரங்கள்
தான். காப்புக் கட்டியதிலிருந்து திருவிழா நாள் வரை பெரும்பாலும் சொந்த சங்கடங்களை
மக்கள் மறந்து கோயிலுக்கு ஊழியத்தில் மனத்தைச் செலுத்துவார்கள். கோயிலும் ஊரும் மெருகேறி
நாளைய விடியலுக்குக் காத்திருந்தது.
ஊரே
மிதக்கும் வெளிச்சம் கார்மேகத்தின் வீட்டை கரிசனையின் அடிப்படையிலும் சீண்டவில்லை.
அடுப்படி அன்று முழுதும் சூடு மறந்து சாம்பல் பறந்துபோய் கிடந்தது. கழுவப்போட்ட பண்ட
பாத்திரங்கள் அப்படி அப்படியே கிடந்தன. வீடு பெருக்கிக் கூட்டாமல் செத்தை கூடிக் கிடந்ததது.
திருவிழா நடந்து ஓய்ந்த சிறுகோயில் போல அந்த வீடு கிடந்தது. கார்மேகம் நாள் முச்சூடும்
கண்ணில் படவேயில்லை. பொழுது முழுக்க வீட்டுப் பக்கம் தலை கட்டாத கார்மேகத்தின் நினைப்பு,
இடிந்து அமர்ந்திருந்தவள் மூளையில் சுருக்கென தைத்தது. சிமென்ட் தொட்டியில் இருந்த
தண்ணீரில் முகத்தை அரைகுறையாய் கழுவிக்கொண்டு கண்மாய்க் கரை கருவேலம் தூர்களை நோக்கி
ஓடினாள். அறுத்துக் கட்டும் பொல்லாத நினைப்புகளில் இருந்து தன்னைத் தப்பித்துவிட அவர்
ஆகக் கடைசியில் போய் விழுவது குடியில் தான். எவ்வளவு குடித்தாரோ?, வெயில் உரைப்பது
கூட தெரியாத அளவுக்கு சாராயம் நிதானத்தை குழைத்திருந்தது. மொட்டை வெயிலில் தலை குப்புற
கிடந்தார். குஞ்சரம் கைத்தாங்கலாய் அவரைத் தூக்கி வீட்டுக்குக் கூட்டிச் சென்றாள்.
வழி நெடுக மொசு மொசுவென தேம்பியபடி வந்தார். கட்டிலிலே அவரைக் கிடத்திவிட்டு கட்டில்
காலருகே அவளும் சுருண்டு படுத்துக் கொண்டாள். எல்லாமும் அவர்களை மட்டும் அனாதரவாய்
விட்டுவிட்டு தொலைதூரம் போய்க் கொண்டிருப்பது போன்ற பிம்பம் அவளது அழுது கன்றிய கண்களுக்கு
மட்டும் வரி கோடுகளாய் தெரிந்தன.
திருவிழா அன்று காலை ஊரே நான்காம் ஜாமத்தில்
விழித்துக் கொண்டது. வாசல் பெருக்கி நீர் தெளித்து கோலமிட்டார்கள். ஊரின் கண்மாய் கரையில்
அதிகாலை மூன்று மணி முதலே கூடம் கட்டி ஏறியது. காலை ஏழு மணிக்கெல்லாம் கரகம் எடுக்கக்
கிளம்பினார்கள். ஊரிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் வழிவிடும் பிள்ளையார் கோயில்
அமைந்திருக்கும் பரேங்கடங்கு கண்மாய் மண்டி நீர் எடுத்து கரகம் கட்டினார்கள். அம்மன்
குறி சொல்லும் பெண் அருளேறி கரகத்தை தலையில் ஏந்தினாள். கரகம் ஏறும் நேரத்தில் காற்றை
நிறைத்தபடி குச்சிகளை சுழற்றி அடிக்கும் சிவகங்கை கொட்டும் மஞ்சள் புடவைகளின் குலவையும்
அடி வயற்றை அதிர்த்திப் பார்க்கும். பிடரியோர நரம்புகள் சில்லிடும். பெருமூச்செடுத்து
நாதுருத்திக் கத்தியபடி அருள் வந்த பக்தர்கள் சாமியாடுவார்கள். கூப்பிய கையும் நிறைந்தொழுகும்
கண்களும் அந்த கண்மாய் மேட்டை பால்மணம் பொங்கும் அம்மனின் கருவறையை நினைவில் சுண்டும்.
வானம் போட்டுக் கொண்டே “கல்வீட்டான்” பத்தன்
முன்னாலே போக, கரகத்துக்குப் பின்னால் ஊர் நடந்தது. தை முதல் வாரம், கனத்த பனி அறுத்து
முடித்த வயக்காட்டுக் கதிர் தாள்களை நசநசப்பாகியிருந்தது. மஞ்சள் புடவையும் வேட்டிகளுமாய்,
மங்கல் பனிக்கு மத்தியில் நெடு நீண்ட தண்ணீர் சாரையைப் போல ஊர்வலம் போய்க் கொண்டிருந்தார்கள்.
கரகம் எடுத்து வரும்போது கருப்ப சாமி வேட்டைக்கு செல்லும் போது கொண்டு போகும் பொருட்களை
பூசாரி வீட்டிலிருந்து அன்று ஒருநாள் மட்டும் கோயிலுக்கு கொண்டு சென்று வழிபாட்டுக்கு
வைப்பார்கள். மொங்காரி அந்த பூஜை சாமான்கள் பாதியை மூத்த தாரத்து மக்கள் வீட்டிலும்
மீதத்தை கார்மேகத்தின் வீட்டிலும் வைத்திருந்தார். அவர் சொத்து பத்தில் கூடக் குறைய
கொடுத்திருந்தாலும், கோயிலுக்கான உரிமையை சரிபங்காக்கிக் கொடுத்துவிட்டுத் தான் கண்
மூடினார். கார்மேகத்தை மண்டகப்படியில் ஒதுக்கியிருந்தாலும், அவரது வீட்டு மச்சில் இருக்கும்
கருப்பனின் பாதிப் பூசைப் பொருட்கள் மட்டும் வேண்டப்பட்டதாய் இருந்தது. முறையாக கருப்பனுக்கு
படைக்க இரண்டு பாதி பூஜை சாமான்களும் வேண்டும். படையலிலும் நேர்ச்சையிலும் சமரசம் கருப்பனுக்கு
ஆகாது. மொடாக் கோபம் கொண்டவன். ஊரும் உலகமும் அவனுக்கு அஞ்சித்தானே ஆகும். ஆகவே, இரு
பாதியையும் ஒன்றாய் சேர்த்து தான் வழிபாட்டுக்கு வைக்க வேண்டும்.
கார்மேகத்தின் வீட்டில் இருக்கும் பூஜை சாமானையும்
பொருட்களையும் எடுத்துச் செல்ல பங்காளிகளின் தலைமையில் ஊர்கூடி வந்திருந்தது. கார்மேகம்
சண்டை கட்டி பொருளைத் தர மறுத்து விதண்டவாதம் செய்தாலும் செய்வான் என்று எல்லோரும்
எதிர்பாத்திருந்தார்கள். கார்மேகம் வாசலை ஒட்டி கட்டிலில் சவலைப் பிள்ளை போல படுத்திருந்தார்.
உறங்கவில்லை. அரைக் கண் முழிப்பில் தான் கிடந்தார். அவரிடம் ஒரு வார்த்தையும் சொல்லிக்
கொள்ளாமல் பங்காளிகள் அவர்களாகவே வீட்டுக்குள் நுழைந்து பூஜை சாமான்களை எடுத்துக் கொண்டு
வெளியேறினார்கள். உசாரில்லாத ஜீவனோடு சின்ன சிலும்பல் கூட இல்லாமல் எல்லாவற்றையும்
பார்த்துக் கொண்டு தான் படுத்திருந்தார். கோப மூர்க்கமாய் திருவிழாவில் அவர் கரைச்சல்
கொடுப்பதாக சொல்லியிருந்தாலும் அவருக்கு பிரியமான அம்மனின் ஆராட்டைத் தடுக்க அவர் துணிந்தவரில்லை.
என்ன தான் சொந்த காரணத்திற்காக பங்காளிகளோடு மோதிக் கொண்டாலும் அவர் வீட்டுப் பிள்ளையாக
இருப்பவளை அவர் எப்படி பழிப்பார். கை நாடிக்கு நெருக்கமாய் அந்த அம்மனையும் அமர்த்தி
வைத்திருப்பவரல்லவா அவர்.
கோழிக் கூட்டைப் பெருக்கிக் கொண்டிருந்த குஞ்சரம்,
கார்மேகத்தை எதிர்பார்ப்போடு ஒரு பார்வை பார்த்தாள்.அவர் சண்டை கட்டாததை நினைத்து சற்று
நிம்மதியானாலும் மேற்கொண்டு மனிதன் நிம்மதி அழிந்து போகிறார் என்பதை அவளால் இறக்கிப்
பார்க்க முடியவில்லை. கன்னத்தைத் தாங்கி நின்ற கையை ஆயாசப் பெருமூச்சுடன் கீழிறக்கிக்
கொண்டு, மறுபடியும் குனிந்து பெருக்கத் தொடங்கினாள். ஒரு நாள் திருவிழா தம்பட்டம் இதெல்லாம்
அவளுக்கு பெரிதேயில்லை. நினைத்த நேரம் கும்பிட அவள் வீட்டில் இருக்கும் அந்த சின்னப்
பெண்ணின் படம் மட்டும் அவர்களுக்குப் போதும். இருந்தும் தன் வீட்டாம்பிள்ளை நொடித்துக்
கிடப்பதைப் பார்த்து தான் அவளுக்கு நோக்காடு கூடியது. நிமிராமல் பெருக்கிக் கொண்டே
இருந்தவளின் கண்ணீர், வெக்கை கால மழை போல சொட்டச் சொட்டக் ஆவியாகிக் கொண்டிருந்தது.
ஒரு நிமிடம் எழுந்து முந்தானையில் முகத்தைத் துடைத்துக்கொண்டு மீண்டும் குனிந்து கொண்டாள்.
எங்கோ வெடித்துக் கிறங்கும் மேய்ச்சல் கரட்டிற்கென பூப்போல மழை இங்கே தூறிக் கொண்டிருந்தது.
வருடத்திற்கு ஒரு அடி நீளமென வளர்ந்து இந்த
ஆண்டு எட்டடியில் தகித்துக் கிடந்தது பூக்குழி. பச்சை ஓலையால் அதைப் பரசி ஒரு வடிவமாய்ச்
செய்து கொண்டிருந்தார்கள். நெருப்பில் உப்புக்கல் விழுந்தது போல ஊடூடே கங்குக் கட்டைகள்
நொறுங்கும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. பூக்குழி முடித்து ராஜ அலங்காரத்தில் கண்
பறிக்கும் ஜொலிப்புடன் அம்மன் திரை விலக முகம் காட்டினாள். நல்ல வட்டவடிவான பால்பிள்ளையின்
முகம் அவளுக்கு. மரகதப்பச்சை நிறப் பட்டு, அவ்வளவு எடுப்பாக யாருக்கும் பொருந்தாது
எனும்படி நின்றாள் நீலமேனியாள்.
பூக்குழி முடித்த பிற்பாடு பூக்குவியலைக்
குவித்து அதில் சாம்பிராணி போட்டு விசிரினார்கள். காந்தார மணத்தில் மேகம் போல திரண்டு
பரவியது அந்த புகை. வாசமான மழை தூறும் மேகமாய் நின்ற புகை நாசியில் நின்று அம்மனை நினைவில்
நிறுத்தியது. அந்த கட்டிச் சாம்பிராணி வாடை தான், அவள் கருவறை விட்டு எழுந்து ஊர்சுற்றி
சாமங்களில் நடக்கையில் எழுவதுவோ என்பது போல இருந்தது. எரியும் கற்பூரமும் மணக்கும்
சாம்பிராணியும் கதம்பமும் அவளையன்றி யாரை நியாபகப்படுத்தும்.
அந்த நல்ல நாளின் உச்சபச்ச நிகழ்வாய் என்றைக்கும்
அன்னதானம் இருக்கும். நேர்த்திக்கடன் கிடாய்களின் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் கூடவோ
குறையவோ செய்தாலும் பந்தியில் கேட்போருக்கு பிரிசாரமில்லாமல் இலை ததும்ப கறியும் சோறும்
போடுவார்கள். எத்தனைக் கிடாய்கள் வெட்டினாலும் அவ்வளவு இறைச்சியும் ஒன்றாய்க் கொட்டிக்
கலந்துவிடுவார்கள். அதற்கு கூத்துக் கறி என்று பெயர் சொல்லுவார்கள். மட்ட அகலக் குட்டை
போல வெட்டி கல்லடுக்கி அடுப்புப் போடுவார்கள். ஊருக்கே சமைக்க ஒரு போசி தான். அந்த
போசியைச் சுற்று ஆறு பேர் குதுப்பி பிடித்து நிற்பார்கள். ஆணையார்கோட்டை முருகேசன்
பண்டாரி தான் சமையலுக்கு முழுப் பொறுப்பு. என்னே ஊற்றி பட்டை, அன்னாசிப்பூ, லவங்கம்,
கிராம்பு, கஸ்தூரி மேதி கொட்டி கிளறக் கிளற எழுந்து பரவும் மணம், நாள் முச்சூடும் ஓடித்
திரிந்த மக்களின் வயிற்றுக்குள் பசியைக் கூப்பாடு போட்டு கூப்பிடும். மொத்தக் கரியையும்
கொட்டி வதக்கி இறக்குவதற்குள் சுற்றுக் கிராமம் கோயிலில் கூடி நிற்கும். இத்தனை ஆண்டுகளில் எந்த விசயத்தில் குறை என்றாலும் அன்னதானத்தில் குறை
என்று வந்ததேயில்லை.
பூக்குழி, ஆராதனை, அருள்வாக்கு, அன்னதானம்,
கூத்து என எல்லாமே கார்மேகமும் அவர் வீட்டாளும் கலந்து கொள்ளாமலேயே நடந்து முடிந்தது.
ஒவ்வொரு முறையும் நிகழ்வுகள் தொடங்குவதையும் முடிவதையும் ஒலிபெருக்கி சத்தத்தை கேட்டு
அவர் அறிந்து கொண்டிருந்தார். சொந்த வினைக்காக சாமியை விளக்குவதா? என்ற கேள்வி மட்டும்
அவருக்குள் குடைந்து கொண்டிருந்தது. கிளம்பிப் போகலாம் தான். ஊரில் ஒரு கண் பார்த்தாலும்
ரோசமாய் பேசினவனுக்கு இங்கே என்ன வேலை என்பது போலத்தான் பார்ப்பார்கள். பிறருக்கு அஞ்சி
அவளைக் கும்பிடுவதை தவிர்ப்பது ஒரு வகையிலும் நியாயம் ஆகாது. கோயிலில் முதல் மரியாதையில்
பங்குமில்லை மண்டகப்படியில் உரிமையுமில்லை என்று தானே ஆனது. அவளைக் கும்பிட என்ன தடை
வரப்போகிறது. சட்டையில்லாத உடலை சிவப்புத் துவாலையால் போர்த்திக்கொண்டு வாசலுக்கும்
கோடிக்குமாய் நடந்துகொண்டே இருந்தார். மனித மனம் இழந்ததை மீட்க வழியற்றுப் போகும்போது,
சில சமயங்களில் இயலாமையை கசப்புடன் ஏற்று உண்மை நிலைக்குள் தன்னைத் தற்காத்துக் கொள்கிறது.
தோற்றுப்போதல் எனும் நிலை நிஜமாகவே இல்லை என்று நம்பத் தொடங்குகிறது. அவ்வளவு நேர யோசனைகளுக்குப்
பிறகு கொஞ்சம் தெளுச்சி அடைந்த முகத்துடன் குஞ்சரத்தைக் கூப்பிட்டார்.
“இஞ்சாருடி குஞ்சரம், நான் போய் சித்த தண்ணில
கிடந்துட்டு வாரேன். நீயும் குளிச்சு ரெடியாகு கோயிலுக்கு ஒரு எட்டு போயிட்டு வருவோம்"
கட்டிலிலிருந்து மெல்ல கையை ஊன்றி எழுந்தவர்
கண்மாய்க்கு துண்டும் கையுமாய் கிளம்பிப் போனார். குஞ்சரத்துக்கு இது தெரிந்த விஷயம்
தான். உலைக்கு அரிசியில்லாத நாளிலும் அந்த அம்மனுக்கு பூப்போட்டு விளக்கு பொருதாமல்
அவர்களுக்கு பொழுது விடியாது. பூசாரியாக உரிமை பறிக்கப்பட்டாலும் அவளுக்கு பக்தனாக
இருக்கும் உரிமையைப் பறிக்கவோ கொடுக்கவோ யோக்கியதை எவருக்குமில்லை என்று தான் கார்மேகம்
நம்பினார். குஞ்சரம் வீட்டைக் கூட்டிப் பெருக்கி
சாணி மெழுகிக் கொண்டிருந்தாள். வீடு முழுக்க கட்டிச் சாம்பிராணிப் புகை விரவி கமகமத்தது.
மதியம் விரதச் சாப்பாடு சமைத்தாள். குளித்துக் கிளம்பி இருவரும் கோயில்லுக் கிளம்பினார்கள்.
அம்மன் அத்தனை வண்ணப் பூக்களாலும் அவற்றின் மணத்தாலும் கமழ்ந்து மஞ்சள் முகத்தோடு பட்டுடுத்தி
அழகு பெண்பிள்ளை போல காட்சியிலிருந்தாள். உடலைக் குறிக்கி இரண்டு கைகளையும் இறுகப்
பிணைத்து தலைக்கு மேல் தூக்கி மெய்யுருகி கார்மேகமும் குஞ்சரமும் வேண்டிக் கொண்டார்கள்.
“ஊர் மக்க எல்லோரையும் நல்லா வையிடி அம்மா"
அவர்களது பிரார்த்தனை எப்போது அப்படியானதாகத்
தான் இருந்தது. மனத்தில் கனம் இலகியிருப்பது அவர் முகத்தில் அந்த குறை வெளிச்சத்திலும்
பளீரிட்டது. சாமி பார்த்த உடனே வீட்டுக்குத் திரும்பினார்கள். ஊரில் யாரும் அவர்கள்
வந்ததையும் போனதையும் பார்க்கவேயில்லை. அவரசரத்தில் கால் மேலேயும் தலை கீழேயும் என்பது
போல பரபரத்துத் திரிந்தார்கள்.
நெற்றி நிரம்ப பூசிய திருநீறு குங்குமத்தோடு
நிறைந்த மனமாய் வீடுவந்து சேர்ந்தார்கள். விரதம் பிடித்து சாமிக்குப் படையல் போட்டு
கும்பிட்டார்கள். வாழைப் பிஞ்சிலை நிரம்ப படையல் போட்டு வேம்படியில் பிள்ளைக்கும் படைத்தார்கள்.
வருடம் தவறாமல் கஷ்டம் வரத்தான் செய்கிறது. என்ன வந்தால் என்ன?, எல்லாம் அவள் பார்த்துக்
கொள்வாள் என்று மட்டும் அவர்கள் முழுமையாய் நம்பினார்கள். ஒரு வார அமளிகள் எல்லாம்
மனதிலிருந்து அழுது ஆர்பாட்டம் செய்து கரைந்து போயிற்று. அவள்தான் கரைந்து போக வைத்தவள்.
குஞ்சரம் இலையைப் போட்டு கார்மேகத்துக்கு
சாப்பாடு பரிமாறினாள். தெளிந்த முகத்துடன் அவர் சோற்றை அள்ளிச் சாபிடுவதையும் சாமியறை
விளக்கொளியில் தெரிந்த அந்த பெண்ணின் படத்தையும் மாறி மாறிப் பார்த்தாள். அவளுக்கு
எப்போதும் சாமியறையில் இருக்கும் அந்த பெண்பிள்ளையின் மீது பூரண நம்பிக்கை உண்டு. எந்த
சீக்கும் சிரமமும் அவள் கண்பார்க்க பறக்கும் என்று நம்புவாள். ஊரார் கண்ணுக்கு குஞ்சரம்
மண்டை குழம்பிப் போன பித்துக்குழியாகத் தான் தெரிந்தாள். அவர் தனியாக பேசுவது அவர்களுக்கு
அசூயையைத் தந்தது. அவள் தனியாகப் பேசுவதில்லை. ஒரு அழகு பெண் அவளுக்கு பேச்சுத் துணையாய்
இருப்பாள். அந்தச் சிறு பெண்ணிடம் குஞ்சரம் சிரிப்பால்,அழுவாள், கோபிப்பாள், செல்லமாய்
அடி கொடுப்பாள். படியளக்கும் அந்தப்பெண் ஊருக்கத் அம்மை என்றாலும் குஞ்சரத்துக்குப்
பிள்ளை தான்.
உற்சவங்கள் எல்லாம் முடியும் நேரம் வானவேடிக்கை
காட்டி திருவிழாவை நிறைவாக்கினார்கள். எல்லா நிகழ்வுகளும் அப்போது முடிந்திருந்தது.
பக்கத்தில் பேசும் சப்தம் கூட கேட்காத அளவு இரைச்சலோடும் கண் பறிக்கும் வண்ணங்களோடும்
மின்னப் போகும் வானத்தைப் பார்க்கும் ஆவலில் ஒட்டுமொத்த கண்களும் விட்டத்தைப் பார்த்து
நிலைகுத்தியவாறு நின்றன. கார்மேகத்தின் வீட்டின் முன் புழுதி அள்ளும் மெல்லிய சத்தம்
கூட பிசகாமல் கேட்டது. அவரது வீடு தனி அமைதிக்குள் தன்னை இருத்தியிருந்தது. வானவேடிக்கை
தொடங்கியதும் அதன் வண்ணங்கள் ஊரை இருளில் திறந்து திறந்து காட்டின. கட்டிலில் சரிந்து
கிடந்தவர் கையூன்றி எழுந்து பெருமூச்சோடு வானத்தைப் பார்த்தார். தன் பிள்ளைக்கும் அந்த
சின்னப் பெண்ணுக்கும் விடிவிளக்குப் போட்டுவிட்டு கட்டிலருகே வந்து அமர்ந்தாள் குஞ்சரம்.
வானம் வெடிக்கும் வண்ணங்களை கண் ததும்பப் பார்த்துக் கொண்டிருந்தவள், மெல்லத் திரும்பி
வீட்டுப் பக்கம் பார்த்தாள். வேம்பின் கிளையிலும் வீட்டின் கூரையிலும் என இரண்டு ஜோடி
கண்கள் அவர்களோடு சேர்ந்து வாணவேடிக்கையைப் பார்த்துக் கொண்டிருந்தன. ஒட்டு மொத்த வானமும்
அன்றிரவு அம்மனுக்கு ஏற்றிய விடிவிளக்காய் எரிந்து தீர்த்தது.
திருவிழா முடிந்த மறுநாள் காலை கோயில் அரவமற்றுக்
கிடந்தது. சுழலிக் காற்று குப்பைகளைப் பறத்திக் கொண்டுவந்து அங்கு போட்டது.வழக்கம்
போல திருவிழா முடிந்ததும் கோயில் நட்டாதரவாய் அமைதில் நின்றது. எப்போதெல்லாம் கோயில்
தனித்துவிடப்படுகிறதோ அப்போதெல்லாம் ஒருபெண் கார்மேகத்தின் வீட்டுக்குத் தஞ்சமெனப்
போய்க்கொண்டிருக்கிறாள்.
குறிப்பு :
அந்த அழகு பெண்ணுக்கு பிச்சையம்மா என்றும்
வேம்பில் உறங்குபவனுக்கு சாத்தையா என்றும்
பெயர். ஊரில் சொல்லப்படும் கதையின் படி, ஊர் தெய்வமான பிச்சையம்மனின் அண்ணன் பெயர்
சாத்தையா.
No comments:
Post a Comment