சுயம் நீர்த்து லாவகமாக ஓடிற்று. உணர்வதற்கு ஒன்றுமில்லை
என்பதே உணர்வு. ஆங்காங்கே சுழிக்கும் பொழுதெல்லாம் பாதரசமாய் ஏதேதோ நினைவுகள் மிதந்து
திரிந்தன. பற்றுக்கோளை பிடிக்க அது கரைந்து ஓட்டத்தை துரிதப்படுத்துகிறது. தரைத் தேடி
முழுகுகையில் தலைகீழ் விகிதமாய் மீண்டும் எக்களிப்புடன் அகண்ட வானம். ஓரடி துள்ளலுடன்
பத்தடி வீழ்தலாய் முடிவின்றி இழுத்துச்செல்லும் ஓட்டம். இருமருங்கிலும் செங்குத்தாய்
குவிந்த பிரவாகம். ஒவ்வொரு அதிர்விற்கும் தத்தளிக்கும் நிறக்கலவை. திசையின்றி ஒரே ஒரு
சத்தம்.
“ ஏவாள், எழுந்திரு கண்களைத் திற. ”
கண்களைத் திறக்கையில் முதலில் உணர்ந்தது ஒருவித கவ்வலை
தான். எழுகையில் மண் துகள்கள் வெற்றுடம்பின் ரோம இடுக்களில் சிக்கி உதிர்ந்தன. பிருஷ்டத்தின்
ஒருமருங்கின் அடியில் கூரான கல் நெருடியது. கிளை நதியாய் கேசம் தோளில் பிரிந்து சதைமடிப்புகளில்
சிக்கி கொப்பூழில் சுருண்டு அடங்கியது. மெல்ல ஓச்சும் காற்றுக்குத் தன்னை ஸ்பரிசிக்கத்
தந்து அமர்ந்திருப்பது அந்நியமான சுகமாக இருந்தது.
“ ஏவாள், மேலே பார். ”
பரவிய சிறை விரித்த ஆலிவ் மரத்திலிருந்து வந்தது அந்தக்
குரல். விரல்வடிவ இலைகளின் சடசடப்புக்கிடையில், திரளாக குலுங்கி எக்களிக்கும் கூழாங்கல்
பழங்களுக்கிடையில், தெரிந்தது அதன் கண்கள் மட்டும் தான். குதப்பிய கலவைக்குள் வெடிக்கப்போகும்
கடைசித் தருணத்தில் ஊதி நிற்கும் குமிழிக் கண்கள். கிளைகளுக்கிடையில் மாய ஊர்தலுடன்
அந்தச் சர்ப்பம் கீழிறங்கியது.
“ ஏவாள் என்னைத் தெரிகிறதா? ”
“ தெரியும், ஞாபகமிருக்கிறது. ”
“ கண்டிப்பாக ஞாபகமிருக்கும், ஆனால் என்னுடன் சேர்ந்து
இன்னும் பல விஷயங்கள் ஞாபகமிருக்க வேண்டுமே? ”
“ இருக்கிறது, நன்றாகவே. ”
“ சரி சொல் பார்ப்போம். ”
“ முதலில் நீ ஒரு சைத்தான் நினைவிருக்கிறது. ”
“அதுவரை நினைவிருக்கிறதா? நல்லது, ஆதியிலிருந்து வேண்டாம்.
இறுதியாக நடந்ததைச் சொல். ”
“ ஹாட்ரான் கொலைடர். ”
“ அதுதான். ஹாட்ரான் கொலைடரில் நடந்தது நினைவிருக்கிறதா?
”
“ இரண்டு ஹாட்ரான்களின் மோதல். ”
“ புரோட்டான் தானே அந்த ஹாட்ரான்? புரோட்டானின் குவார்க்
பற்றி நினைவிருக்கிறதா ? ”
“ இரண்டு மேல் குவார்க்குகளும் ஒரு கீழ் குவார்க்கும்.
குலுவான் புலத்தில் மிதந்த படியே. ”
“ ஏவாள், நீ சொன்னது பாதி உண்மை. ”
“ ஆம் புரோட்டானின் உள்ளடக்கம் நிலையற்றவை, ஆனால் கூட்டுத்தொகை
மூன்று குவார்க் தான். ”
“ நல்லது, அனிச்சா என்ன சொல்கிறது? ”
“ எல்லாம் மாறுபவை. நெருப்பு எப்படியொரு மாறிக்கொண்டிருக்கும்
நிகழ்வோ நானும் அது போல் ஒரு நிகழ்வு மலையும் அது போல் ஒரு நிகழ்வு. அனைத்தும் நிகழ்வுகள்,
நிலையற்றவை. ”
“ நல்லது, புரோட்டான் மோதியப் பின் என்னவாயிற்று?
”
“ ஹிக்ஸ் துகள் உருவானது, மற்றும் பல துகள்கள் உருவாகின.
”
“ ஏவாள், மீண்டும் பாதி உண்மை. பேரழிவு வெற்றிடம் பற்றி
நினைவில்லையா? ”
“ அது நிரூபிக்கப் படாதது. ”
“ ஆகையால்? ”
“ பிரபஞ்சத்தில் இது மாதிரியான பல மோதல்கள் நிகழ்துள்ளன.
அப்பொழுது வெற்றிடம் உருவாகவில்லை. சரி இப்பொழுது உருவாகி இருந்தாலும் அது ஒரு நொடிப்பொழுதில்
வெளிப்படும் என்றாலும், எல்லாவற்றையும் விழுங்க பல மில்லியன் ஆண்டுகள் எடுக்கும்.
”
“ எடுக்கவில்லை என்று யார் சொன்னது? ”
“ பிதற்றாதே, அது நிகழ்ந்திருந்தால் நான் எப்படி இங்கிருக்க
முடியும்? ”
“ சரிதான், நீ யாரென்று உனக்கு நினைவில்லையா? ”
“ நான் ஏவாள். ”
“ ஏவாள்.மீண்டும் இது பாதி உண்மை. சுமேரியாவில் களிமண்
ஏட்டில் கணக்கெழுதி குஷிம் என்று கையெழுத்திடாயே நினைவிருக்கிறதா? ”
“ இருக்கிறது. ”
“ கப்பல்களில் புதுதேசம் தேடிச் சென்றது? ”
“ நினைவிருக்கிறது. ”
“ தம்மபதம் எழுதியது? ”
“ ம்..”
“ அணுவுலை அமைத்தது? ”
“ ம்..”
“ ஹாட்ரான் கொலைடர் நிறுவியது? ”
“ ம்.. ”
“ ஏவாள் என்றாயே. ஆனால் எப்படி எல்லாம் நினைவிருக்கிறது?
”
“ இவை எல்லாம் நினைவிருக்கிறது. ஆனால் பேரழிவு வெற்றிடம்
பற்றி நினைவில்லை. ”
“ கனவின் இறுதி நிமிடங்கள் நினைவிலிருக்காது ஏவாள்.
வெற்றிடம் பல மில்லியன் வருடம் கழித்து தோண்டிற்று. ”
“ அப்படியெனில் நான் இப்பொழுது எங்கு இருக்கிறேன்
? ”
“ இன்னும் பெயரிடவில்லை ஏவாள். அதற்கு எத்தனை லட்ச
வருடமாகுமோ தெரியாது. உனக்கு தெரிந்தவற்றை வைத்து சொல்வதெனில் பூமி என்று சொல்லலாம்.
”
“ வெற்றிடம் தான் பூமியை விழுங்கி இருக்குமே? ”
“ ஆம், பூமியென்ன எல்லா பிரபஞ்சங்களையும் விழுங்கிற்று.
சரி, உனக்கு வேண்டுமெனில் உன்னுள் பூமி இருந்ததென வைத்துக்கொள். ”
“ அது எப்படி? ”
“ ஏவாள் உன் உடம்பில் உள்ள ஒவ்வொரு அணுவிற்குள்ளும்
புரோட்டான் எலெக்ட்ரான் உண்டு. அதற்குள் குவார்க் உண்டு. அந்தக் குவார்க் உள்ளேதான்
எல்லா பிரபஞ்சங்களும் அடக்கம். நீ இதுவரை பார்த்ததெல்லாம் அந்த குவார்க்கிற்குள் இருந்த
பூமியைத்தான். அணு வேறுபடினும் குவார்க் ஒன்றுதான். எல்லா குவார்க்கிற்குள்ளும் அதே
பூமி அதே நிகழ்வுகள். பூமியில் நடந்ததெல்லாமே உன்னுள் நடந்ததால் எல்லாம் உனக்கு நினைவிருக்கும்.
அந்தப் பூமியில் பல கோடி வருடமாக நடந்ததெல்லாம் உனக்கு வெறும் சில மணி நேரங்கள் தான்.
”
“ அப்போ அது எல்லாம் கனவா? ”
“ அப்படியும் சொல்லலாம். யோசித்துப்பார் ஏவாள் கனவில்
வருகிற நீ மட்டும் நீயல்ல எல்லாம் நீதான். ஏவாளும் நீதான் ஆதாமும் நீதான். சாக்ரடீஸும்
நீதான் ஹோமரும் நீதான். கலிலியோவும் நீதான் ஐன்ஸ்டைனும் நீதான். நீ உன்னிலிருந்து கனவு
கண்டாய் அவ்வளவே, மற்றபடி கனவெல்லாம் நீதான். ”
“ இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும் என்கிறாய்.
”
“ உன் இஷ்டத்துக்கு வாழ் அதைதான் சொல்ல வந்தேன். ”
“ ஏற்கனவே நான் கண்டவற்றை வைத்து இம்முறை எந்த தவறும்
நிகழாமல் என்னால் பார்த்துக்கொள்ள முடியும். ”
“ என்ன தவறு ? எதை தடுக்கப போகிறாய்? ”
“ எல்லா யுத்தங்களையும் அவற்றால் வரும் நாசங்களையும்.
”
“ ஏவாள், மீண்டும் பாதி உண்மை. ”
“ இதிலென்ன பாதி உண்மை? உலகப்போர் நாசத்திற்குத்தானே?
”
“ நாசத்திற்குத்தான், உலகப்போர் இல்லையென்றால் உலகில்
வட்டாரப் போர் இறுதிவரை இருந்திருக்கும். ஏவாள்,யோசித்துப்பார் உலகப்போரால் ஜனநாயக
நாடுகளானவை எத்தனை? ”
“ விமானத்தில் குண்டெரிந்தது? ”
“ பின்னால் சொகுசு விமானம் வருவதற்கு. ”
“ இலட்சக்கணக்கானோர் காயம்பட்டது ? ”
“ பின்னாளில் அறுவை மருத்துவம் வளர்வதற்கு. ”
“ இனப்படுகொலை, நச்சுவாயு அறை? ”
“ பின்னாளில் தூக்கிடும்பொழுது கூட வலியில்லாமல் இறக்க
லாங் ஹாங்கிங் முறை கொண்டுவருவதற்கு. நேற்றைய கண்ணீர் துளிகளே இன்று அறுவடைக்கு தலைசாய்த்து
நிற்கும் கருணை, ஏவாள். ”
“ அணு ஆயுதம் ? ”
“ ஏவாள், தேசங்களின் ஒற்றுமைக்கு ஒரு முக்கிய காரணம்
அணு ஆயுதம். எத்தனை பேர் இறப்பார்கள் என்று தெரியாமல் ஆரம்பித்த போர்கள், கட்டாயம்
எல்லோரும் இறப்பார்கள் என்பதால்தான் ஆரம்பிக்கப்படாமல் இருக்கின்றன. ”
“ …”
“ நீ இவற்றை எல்லாம் தடுப்பதற்கு பதில் விவசாயத்தை
தடுக்கலாமே? அங்கிருந்துதான் சொத்து, நிலப்பிரபுத்துவம், நாடு, போர் எல்லாம் தொடங்கிற்று.
”
“...”
“ ஏவாள், நீ சொன்னவையெல்லாம் உண்மைதான். ஆனால் பாதி
உண்மை. பாதி உண்மைக்கும் பொய்யிற்க்கும் பெரிய வேறுபாடொன்றுமில்லை. இங்கு நடக்கக்கூடிய
எல்லாம் ஒரே நிகழ்வுதான். உலகம் தோன்றியதிலிருந்து அழியும் வரை ஒரே நிகழ்வு. நீ உன்னிடமிருந்து பார்க்கையில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு
நிகழ்வாகத் தோன்றும். நீ ஒவ்வொரு கண்ணிகளாய் பார்க்கிறாய், ஆனால் அது ஒரு மாபெரும்
சங்கிலி. எதையும் மாற்ற முடியாது. ஒரு கண்ணியை கழற்றினால், இருவேறு சங்கிலிகள். எத்தனை
கண்ணிகளை கழட்டப் போகிறாய்? ”
“ ஆனால் இம்முறை என்னால் விரைவிலேயே நாகரிகத்தின் உச்சத்தை
எட்டிவிட முடியும், பல லட்ச வருடங்கள் ஆகாது. குவாண்டம் பற்றி பேசுவதற்கு இன்னும் இருநூறு
வருடம் கூட ஆகாது. ”
“ அது சரிதான் எந்த மொழியில் ஆதாமுடன் பேசப் போகிறாய்?
அவன் உனக்கு முன்பே இங்கு வந்தவன். அவனுடைய குவார்க் வேறுவிதமானது. அவன் பூமி வேறு
விதமானது. உன் கனவும் அவன் கனவும் வேறுவிதமானது. நீ இலத்தினில் அல்ல சுமேரியனில் பேசினால்
கூட அவனால் புரிந்துக்கொள்ள முடியாது. அது மட்டுமின்றி வேறு ஒரு சிக்கல் உள்ளது. அந்தக்
கல்லை எடுத்து தூக்கி எறி.”
கல்லை உள்ளங்கையில் எடுக்கையில் வித்தியாசமான உணர்வு.
அதை தூக்கி எறிகையில் நொடியில் கண்ணை விட்டு மறைந்தது.
“ இது எப்படி? ”
“ ஏவாள், ஹிக்ஸ் புலம் தான் துகள்களுக்கு நிறை அளிப்பது.
நீ அங்கு பார்த்த ஹிக்ஸ் புலத்தின் தன்மைகள் இங்கில்லை. சூரியனிலிருந்து ஒளி இங்கு
வர எழுபது மணிநேரம் ஆகும். எல்லா வேதியல் இயற்பியல் தன்மைகளும் இங்கு வெவ்வேறானவை.
”
“இப்பொழுது என்ன செய்வது?“
“ இவ்வுலகத்திற்கு ஏற்றார் போல மாற அவ்வுலகை முதலில்
நினைவிலிருந்து அகற்ற வேண்டும். ”
“ எப்படி? ”
“அதற்கு தான் அந்தத் தோட்டத்தில் ஒரு மரம் இருக்கிறது.
அம்மரத்தின் பழத்திற்கு நினைவை அழிக்கும் ஆற்றல் உண்டு. நீ அப்பழத்தை ஆதாமிற்கும் கொடு,அதன் பின் பார்ப்போம்.“
“ சரி வருகிறேன். ”
அத்தோட்டத்தை நோக்கி நடக்கையில் ஒளி சற்று மங்கிக்கொண்டிருந்தது.
ஆலிவ் மரத்தை திரும்பி பார்க்கையில் அச்சர்ப்பம் ஏதோ பாதி உண்மையை மட்டும் சொன்னதுபோல
தோன்றியது.
இவையெல்லாம் கனவு என்பது மின்விசிறி நின்ற புழுக்கத்தில்
முழித்தப்பின்தான் தெரிந்தது. ஜன்னல்கம்பி இடுக்குகளில் சர்ப்பம் போன்று ஏதோ ஒன்று
ஊர்ந்தது. போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டு கண்களை மூடிக்கொண்டேன், இதில் ஏதாவது
பாதி உண்மையோ என்ற பயத்துடன்.
No comments:
Post a Comment