அலுவலகம்
செல்லும் வழியில் அந்த கழுதைக்குட்டியை மட்டும் பார்க்காமல் இருந்திருந்தால்
எனக்கு சூர்யாவின் ஞாபகமே வந்திருக்காது. வெகுநாட்களாக
அவனுடன் பேசக்கூடாது என்றுதான் இருந்தேன். அவனிடம் இருந்து விலகி இருப்பதே நல்லது
என்று எனக்குத் தெரியும். ஆனால் அவனுடன் இருக்கும்போது அது தோன்றுவதில்லை. இன்று
எப்படியும் என்னை அழைப்பான்.
இப்போது
யோசித்துப் பார்த்தால் சூர்யாவிடம் ஈர்ப்பும் அற்ற விலக்கமும் அற்ற ஏதோ உறவு நான் பாவித்து
வந்திருக்கிறேன் என்று புரிகிறது. எந்த வயதில் அவனுடன் பழக ஆரம்பித்தேன் என்று
அறுதியாகச் சொல்ல இயலாது. ஆனால் இந்தக் கழுதைக்குட்டி சமாச்சாரம் மட்டும் நன்றாக
நினைவில் இருக்கிறது. அதுதான் எங்கள் முதல் சாகசம் என்று நினைக்கிறேன்.
அந்த
முதல் சாகசம்தான் சூர்யா என் மனதில் இட்ட முதல் கீறல். பால்யத்தில் இருவரும் ஊரையே
சுற்றி வருவோம். எல்லா சிற்றுயிறுகளும் எங்களுக்கு கல் எரிய தகுந்ததே. ஓணான், தெரு
நாய், வீட்டு நாய்., பூனை, காக்கை, குருவி, கிளி என்று
எதுவும் தள்ளுபடி இல்லை. ஒருநாள் சூர்யா ஒரு கழுதைக் குட்டியை துரத்திச் சென்றான்.
நானும் பின்னாலேயே ஓடினேன். அதன் வாலைப் பிடித்து இழுத்து அதன் மேல் சவாரியிட்டான்;
தரையில் அதன் முகத்தை தேய்த்தான்; அதன்
கழுத்தில் இருக கயிறு கட்டி மறுமுனையைப் பிடித்து ராட்டினம் போல் பக்கவாட்டில்
சுற்றி சுவற்றில் எறிந்தான். சூர்யா அப்போதெல்லாம் அழகாய்த் தெரிவான். நான்
சிரிப்பிற்கும் சந்தேகத்திற்கும் நடுவில் நின்று வேடிக்கை பார்ப்பேன். ஏதாவது சிறு
சிறு உதவிகள் மட்டும் செய்வேன். கூறுகெட்டுப் போன குட்டி ங்யே.. ங்யே.. என்று
கத்திக் கலைத்துப்போனது. அந்த சத்தம் சூர்யாவிற்கு பிடித்துப் போய் விட்டது. அது
சத்தமிடும்தோறும் சூர்யா சன்னதம் கொண்டான். சுவற்றில் மாறி மாறி அடித்தான்; பனை
மரத்தில் வீசினான்;
அம்மிக்கல்லை எடுத்து அதன் நடு முதுகில் போட்டான். நல்ல
வேடிக்கைதான். ஒரு கட்டத்திற்கு மேல் கழுதைக்குட்டி மனிதக் குழந்தை கணக்காக
சத்தமிட்டு அழுதது. நான் திகைத்து நிற்க;
சூர்யாவிற்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. புது சக்தியோடு அம்மிக்கல் சிகிச்சை
நடந்தது.
ஆரம்பத்தில்
சூர்யாவிற்கு ஈடுகொடுத்து விளையாடிவந்த நான்
பிறகு வெறும் சாட்சியாக மட்டும் நின்றிருந்தேன். எனக்கு தெரிந்திருந்தது இனி
சூர்யாவை யாரும் தடுத்து நிறுத்த முடியாது என்று. சூர்யா மேலும் மேலும் என்று
விளையாட்டில் திளைத்தான். சூர்யாவும் கழுதைக் குட்டியும் இந்த விளையாட்டை மீண்டும்
மீண்டும் நடத்தி, அதை ஏதோ ஒரு கலைநிகழ்ச்சி போல
கொண்டுவந்திருந்தார்கள். கடைசியாக குட்டி மயங்கியது. அது மண்முழுதும் குருதியால்
கோலமிட்டிருந்தது.
இருட்டிவிட்டது
போதும் என்றேன். சூர்யா ஒரு வழியாக சம்மதித்தான். இதைக் குட்டியை இனி என்ன செய்வது
என்று நான் யோசிக்கொம்போதே. சூர்யா அதை ஒரு சாக்கில் கட்டி முடிந்து ஒரு
மரத்திற்கு அடியில் பத்திரப்படுத்தி வைத்தான்.
"இருட்டிக்கிட்டு
வருது நாளைக்கு வந்து மிச்சதை விளையாடலாம்" என்றான். அந்த
சிறுவயது அக நடுக்கம் இன்று எனக்கு நினைவு வருகிறது.
யாரும்
பார்த்து விடுவார்களோ?
நானும் அகப்படுவேனோ? என்ற பயம். அன்று
நெஞ்சத்தில் ஆழமான கீறல் விழுந்தது.
"நாளைக்கு
நேரமே வாடா.." என்று விட்டு சந்தோசமாக ஓடியவனை வெறுமனே பார்த்துக்கொண்டு
நின்றேன்.
இன்றுபோல்
அன்றும் வெகு நாட்களாக அவனுடன் பேசாமல் இருந்தேன். மீண்டும் எப்போது எந்த
சாகசத்தின் பொருட்டு அவனுடன் பேசத்தொடங்கினேன் என்று நினைவில் இல்லை.
[2]
அலுவலகம்
வந்து அமர்ந்தவுடனேயே என் கைப்பேசி வரிசையாக சிணுங்கி சிணுங்கி நின்றது. அது
அம்மாவோ அப்பாவோ தங்கையோ அல்லது தம்பியாகவோ தான் இருக்கும் என்று சலிப்பாக
இருந்தது. யார் எதற்கு எவ்வளவு பணம் கேட்கப் போகிறார்களோ? மாதத்தின்
கடைசி நாள்; வருடத்தின் கடைசி நாள் இது. சம்பளம்
வந்திருக்கும் என்று அவர்களுக்கு தெரியும். இவர்களைப் பொறுத்தவரை நான் பணம்
காய்க்கும் மரம்.
எடுத்துக்
பார்த்தேன். "அட்வான்ஸ்ட் ஹாப்பி நியூ இயர்…"
என்று சூர்யாவிடம் இருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது. அத்துடன் நிரை நிற்கும்
நிர்வாணப் பெண்களின் புகைப் படங்களும் ஒரு கண் சிமிட்டும் இமோஜியும். என் அலுவலக மேஜைக்கு கீழ் கைபேசியை கொண்டு சென்று
யாரும் காண வண்ணம் அவசர அவசரமாய் ஒவ்வொன்றாய் நகர்த்திப் பார்த்தேன்.
மேனேஜர்
லீனா சட்டென்று மேஜை எதிர் வந்து நின்ற போது பட்டென்று கைபேசியை நிறுத்தி பைக்குள்
போட்டேன். "ரிப்போர்ட் இன்னும்
வரவில்லை. சீக்கிரம் வேண்டும்.." என்றுவிட்டு என் பதிலை எதிர்பார்க்காமல்
திரும்பிச் சென்றாள். என் நெஞ்சம் டம் டம் என்று அடித்துக்கொண்டது. மேனேஜர் லீனா
சென்ற உடனேயே பக்கத்து இருக்கை கீர்த்தி, "காஃபீ?" என்று
கேட்டாள். நான் சீற்படாத மூச்சுடன், "நீ முன்னே போ. நான்
வருகிறேன்" என்றுவிட்டு கனமாக மூச்சு
இழுத்து விட்டேன். கீர்த்தி சென்ற அடுத்த நொடியே கூட்டிப் பேருக்கும் வேலைக்கார
அம்மா,
" சார் ஒரு நிமிஷம் தள்ளிக்கோங்க மேஜையை சுத்தம் செஞ்சுட்டுப்
போறேன்" என்று அருகில் வந்து நின்றாள். இன்னும் மூச்சு சீராகாத எரிச்சலும்
படபடப்புமாக,
"அப்புறம் வாம்மா.. " என்று கத்தியதுகூட பாதிதான்
வெளியே வந்தது. ஒரு நிமிடம் அமர்ந்து எழுந்து காஃபீ குடிக்கச் சென்றேன். கைபேசியை
கொஞ்ச நேரத்திற்கு எடுக்கக்கூடாது என்ற முடிவுடன்.
யார் யாரோ
அட்வான்ஸ்ட் ஹாப்பி நியூ இயர் சொன்னார்கள் ஆனால் எனக்கு சூர்யாவிடம் இருந்த வந்த வாழ்த்து
மட்டும்தான் மீண்டும் மீண்டும் மண்டையில் ஓடிக்கொண்டிருந்தது. இனி இந்த எண்ணச்
சசுருள் ஓடிக்கொண்டே தான் இருக்கும். அதை நிறுத்தும் யுக்தி என்னிடம் எப்போதும்
இருந்ததில்லை. அதுவாக மட்டுப்படும் வரை காத்திருக்க வேண்டும்.
கண்களை
மூடி வலுக்கட்டாயமாக அந்த எண்ணங்களை நிறுத்தினேன். அது வீரியம் கொண்டு மூடிய
கண்கள் முன் நிழலாடியது. நொந்து கொண்ட தருணம் அம்மாவிடமிருந்து போன் வந்தது.
எனக்கு அது மேலும் சோர்வூட்டுவதாக இருந்தது.
"ஹலோ..";
"ஹலோ.. கண்ணு.. நான் அம்மா பேசுறேன் டா.."; "என்னம்மா..
சொல்லு..";
"இல்ல.. பணம் அனுபுறேன்ன்னு சொன்னியே.."; "எதுக்கு?"; "அதுதான்
சொன்னேனே கண்ணு." அம்மா பேசிக்கொண்டிருக்கும் போதே மற்றோரு அழைப்பு
காத்திருப்பில் வந்தது. எடுத்துப் பார்த்துவிட்டு மீண்டும் காதில் வைத்தேன் .
அம்மா
தொடர்ந்து பேசினாள்,
"இவளுக்கு கால்லேஜ் பீஸ் கட்டணும்,
நகை எடுக்கனுன்னு."; "அம்மா.... இன்னும்
சம்பளம் வரல. இப்படி எல்லாச் செலவையும் என்கிட்டயே சொன்னா எப்படி? நகை இப்போ
அவசியமா?
நான் இங்க நல்ல சோத்துக்கே வழியில்லாம இருக்கேன். அவ
கல்லேஜ் பீசுக்கே நான் யார்கிட்டயாவது கை நீட்டனும். எப்படியோ அனுப்பி
வைக்கிறேன்." என்று சலிப்புடன் சொன்னதை அம்மா உணர்ந்திருப்பாள்.
"சரி" என்றுமட்டும் சொல்லிவிட்டு வைத்துவிட்டாள்.
போனை
அமுத்தியவுடன். எண்ண வாசாலில் நின்றிருந்த நிர்வஸ்த்திர ஸ்திரீக்கள் நிரை நிரையாய்
எண்ணத் திரையில் வந்து அட்வான்ஸ்ட் ஹாப்பி நியூ இயர் சொல்ல ஆரம்பித்தார்கள்.
நான் செய்வதற்கு ஒன்றுமில்லாமல்; கண்டிக்காமல்; திளைக்காமல்
அவர்களை நிகழ விட்டுக்கொண்டிருந்தான்.
அந்த
ஸ்திரீக்கள் ஆடிப்பாடி ஓய்ந்து போவார்கள் என்று நினைத்தான். ஆனால் செல்லச்செல்ல புது விசைகொண்டு புது அவதாரம்
எடுத்து வெறியாட்டம் போட்டார்கள். அவர்களின் வெறியாட்டு என் முகத்தில் சங்கடமாகவும் சுருக்கங்களாகவும்
தெரிந்தது. யாரும் பாக்காத வண்ணம் தலைமேல் கைகோர்த்து குனிந்து அமர்ந்தேன்.
மீண்டும்
கைபேசி ஒலித்தது. மீண்டும் சூர்யா கூப்பிட்டான். இம்முறை எடுத்தேன்.
மறுமுனையில், "டேய்
புளித்தி,
செகண்ட் ரிங் வந்தா மறுபடியும் கூப்பிட மாட்டிய. எந்த
மிண்டைகிட்ட பேசிட்டு இருந்த?"
என்று சூர்யா கேட்டான்.
அவனுக்கு
பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தேன்.
"பேசுடா..
ஏன் பேசமாடீங்கிற?"
"என்ன
பேசுறது. நீ பண்ணுவது எல்லாம் நல்லவா இருக்கு? உன்கிட்ட
என்னான்னு பேசுறது?"
என்றேன்.
"இங்க
பாரு.. யாரோ செத்ததுக்கு எல்லாம் நான் பொறுப்பாக முடியாது."
"யார்
செத்தா?"
நான் ஆர்வமாகக் கேட்டேன்.
"அந்த
பார்க்கிங் டோக்கன் போடுறவன்கிட்ட சண்டை வந்தப்ப அவனும் அவன் ஆளுங்களும் நம்ம
ரெண்டு போரையும் போட்டு சாத்து சாத்துன்னு சாத்துனானுல்ல. மறந்துட்டியா?"
"ஆமா.
அதுக்குத்தான் அண்ணைக்கு ராத்திரியே அவன் பார்க்கிங்கில் நின்ன எல்லா வண்டிலையும்
காத்த புடுங்கிவிட்டியே."
"விட்டோம்ன்னு
சொல்லு." என்றான்.
"நான்
வேணான்னுதான் மொதல்ல சொன்னேன். நெனப்பு இருக்கட்டும்."
"எப்படியோ
ரெண்டு பெரும் தான் எல்லா வண்டிலையும் காத்த புடிங்கி விட்டோம். நீ போனததுக்கு
அப்புறம் நான் ஒரு அம்புலன்சுக்கும் புடிங்கி விட்டேன்."
"அடப்பாவி.
அப்புறம்?"
"சரி
அதைவிட்டு.." என்று பேச்சை மாற்றினான். நானும் மாறிக்கொண்டேன். ஆனால் மனதின்
ஒரு பகுதி,
யாரோ இறந்திருப்பார்களோ?
அதன் பழி
என்மீதுவந்து விழுமோ? என்று எண்ணியது.
"சரி யாருகிட்ட பேசிகிட்டு இருந்த நான் போன் பண்ணுனப்ப?"
"யாரோ விளம்பரக்காரிடா.. ஏதோ ஹாலிடே பாக்கேஜாம்.. நல்ல ரேட்டாம்..
கோவாவாம்.. வாங்கிக்கிறியான்னு கேட்டா?" என்றேன்.
"வாங்கிக்குறேன்.. நீயும் வாரியா? உனக்கு என்ன ரேட்டு?
ரெண்டு பெற சமாளிப்பியா ன்னு கேக்கவேண்டியது தானேடா?"
"என்ன வாய்டா உனக்கு? பொழுதன்னைக்கும் இதே
நினைப்புலதான் இருப்பியா? வாய் மட்டும் இல்லேன்னா உன்ன நாய்
தூக்கிட்டு போய்டும்.." என்றேன்.
"தூக்கிட்டு போறதுதான் போகுது, பொட்ட நாயா பாத்து
தூக்கட்டும்." என்றுவிட்டு சிரித்தான் சூர்யா. நானும் சிரித்தேன்.
சூர்யா
தொடர்ந்தான்,"நாயோட செய்ற மாதிரி வீடியோ ஒன்னு
இருக்கு அனுப்பி வைக்கட்டா?" என்று சலனமில்லாமல்
கேட்டான்.
"கருமோ கருமோ.. கழிசடை.. நீயே அதை வெச்சுத் தொலை."
"என்னடா இப்படி சொல்லிட்ட.. அமெரிக்கால ஓர் ஆராய்ச்சி நடக்குது. ஒரே
ரூமுக்குள்ள ஒரு மனுஷனையும் நாயையும் ஒரு வருஷம் தனியா அடைச்சு வெச்சாங்க."
"அப்புறம்?"
"அப்புறம் என்ன? எல்லாம் டாக்கி ஸ்டைலு தான்.."
"உவேவ்.." என்று வாந்தி எடுப்பதுபோல் செய்தேன்.
சூர்யா
கெக்கு கெக்கு என்று சிரித்தான். சிரித்துவிட்டு, "சரி.. டேய்.. இது நியூ இயர் நைட் டா.. கிளம்பி வா.. சரக்கு எல்லாம் எப்பவோ
ரெடி. வரும்போது சைடு டிஸும் டின்னரும் வாங்கிட்டு வந்திடு. சட்டுபுட்டுன்னு நாலு ரவுண்டு அந்நாக்கு
விட்டுட்டு பைக்குல ஊர் சுத்தப் போவோம். மொத்த சென்னையே வெளிலதான் இருக்கும்.
மவுண்ட் ரோடு, மெரினா பெசன்ட் நகர் எல்லாம் ஒரே ஜே ஜே ன்னு
இருக்கும்."
"பைக்லயா? பிரச்சனை ஒன்னும் வந்துடாதே?" என்று
சந்தேகமாகக் கேட்டேன்.
"பிரச்சனையா? டேய்.. என்னைப் பத்தி என்ன நினைச்சுட்டு
இருக்க? ஒக்காளி பிரச்சனை பன்ன போறதே நான்தான் டா."
என்று பெருமிதம் பேசினான் சூர்யா.
"இப்பவே உன் அலப்பறை தங்குல" என்று சிரித்தேன்.
"சரக்கு ஏத்துனமா ஊரைச் சுத்துனமா நாலு கைகலப்பு பண்ணுனமா வீட்டுக்கு வந்து
பொட்டிய கவுத்துணுமா அடுத்தநாள் எந்திரிச்சு ஜோலிய பாக்க போனமான்னு இருக்கணும்.
எல்லாம் கன் மாதிரி நடக்கணும் பாத்துக்க. இதுல ஏதாவது பங்கம் வந்துது.. அப்புறம்
அமெரிக்கால நடந்த ஆராய்ச்சி நியாபகம் இருக்குல்ல.."
"சரி வாறேன், நீ சரக்க ஓபன் பண்ணி வையீ."
என்றேன்.
"சரி வரும்போது உன் ஆஃபீஸ்ல இருக்கவளை எவளையாச்சும் கூட்டிகிட்டு வாடா. ஒன்
அவருல திருப்பி அனுப்பீரலாம்." என்று சூர்யா சிரித்தான்.
"அடைசீ நாயே.." என்று விட்டு துண்டித்தேன்.
கைப்பேசியைத்
துண்டித்தவுடன் எண்ண வாசலில் காத்திருந்த ஸ்திரீக்கள் தத்தம் நாய்களுடன் வந்து
வேலையை ஆரம்பித்தார்கள். இப்படி எத்தனையோ
எண்ண அலைச்சல்களும் தொந்தரவுகளும் என்
நியாபக அடுக்கில் அமர்ந்து இருக்கின்றன. அதது அதனதன் தூண்டு விசையை
சந்திக்கும்போது இப்படி வெளியே வந்து ஆடும். அவற்றுள் இன்னுமொன்று
சேர்ந்துகொண்டது. இனி ஒன்றும் செய்ய இயலாது. சிறிது நாட்கள் உச்ச கதியில் நடந்தேறி
பின்பு சலித்து பின்னால் பின்னால் சென்று மனதிற்குள் புதைந்து கொள்ளும். அப்புறம்
வேண்டிய சமயத்தில் மட்டும் வெளியே வரும். நான் மணிக்கட்டோடு சேர்த்து ஒருமுறை
கைகளை நன்கு உதறிக்கொண்டேன்.
அன்றிரவு
சூர்யாவைப் பார்க்க செல்லலாம் என்றும் வேண்டாம் என்றும் மாறி மாறி தோன்றியது. அவனை
விட்டு விலகி இருப்பதே நல்லது என்று முடிவாகும்போது கைபேசி மீண்டும் அடித்தது.
தம்பி அழைத்துக்கொண்டிருந்தான். எரிச்சலும் சங்கடமுமாக இருந்தது. கைபேசி மீண்டும்
இரண்டு முறை அடித்து ஓய்ந்தது. உளம் சோர்வடைந்து. ஏதேதோ எண்ணங்கள் சுருள் சுருளாக
வந்து என்னை ஆக்கிரமித்தது. இனி ஒரே விடுதலை சூர்யாவைப் பார்க்கச் செல்வது
மட்டும்தான்.
[3]
சூர்யாவின்
வீட்டின் முன் வந்து நின்றவுடன் எனக்கு கிளர்ச்சி கிளம்பியது. கதவைத்
திறந்துகொண்டு வந்த சூர்யா ஒரு பெரிய விஸ்க்கி பாட்டிலை முகரத்திற்கு நேராக வைத்து
ஆட்டினான். இருவர் முகத்திலும் பூரிப்பு.
"எந்த ஊர்
சரக்குடா..?"
"எல்லாம்
வெளிநாடு."
"சரி சரி
வா. சீக்கிரம் சட்டுபுட்டுன்னு ஆரம்பிப்போம். பத்து மணிக்கெல்லாம் ஊத்தி
முடிச்சுட்டு கிளம்புனாத்தான். பன்னெண்டு மணிக்கு ஏதாவது பீச்சுல இருக்க முடியும்.
பார்க்கிங் வேற எங்கயும் கிடைக்காது.
நாங்கள்
இருவரும் மதுவில் திளைத்தோம். புர உலக பிடுங்கல்கள் ஏதும் என்னைத் தொந்தரவு
செய்யவில்லை. என் மன இறுக்கம் தளர்ந்திருந்தது. மறுமுனையில் சூர்யா போதையில்
ஒளிவீசிக்கொண்டிருந்தான். அந்த ஒளி என் மீதும் விழுந்து என்னை
நிரப்பிக்கொண்டிருந்தது. அவன் உடல் மொழி மற்றுமோர் சாகசத்திற்கு தயாராக இருந்தது.
இத்தனை நாட்கள் அவனை தவிர்த்து வந்த எனக்கு இன்று அவன் பிடித்தமானவனாகத்
தெரிந்தான்.
சூர்யா, " சரி..வா...
வா... சீக்கிரம்... நேரம் ஆச்சு. ஊர் சுத்தப் போலாம். என்றுவிட்டு சமையலறை போய் ஏதோ
பொட்டலம் எடுத்து பாக்கெட்டில் போட்டுக்கொண்டு வெளியே சென்று பைக்கில் அமர்ந்தான்.
நான், "டேய், வீட்டை
பூட்டனும்." என்றான்.
"அதுக்கெடக்கு
வாடா. திஸ் ஐஸ் நியூ இயர்." என்று விட்டு பைக்கை கிளப்பி முன் சக்கரத்தை
அந்தரத்தில் விட்டு எடுத்தான். நான் பைக்கில் உட்கார்ந்துதான் மாயம். அது
மின்னலுக்க சவால் விடும்படி கடற்கரை நோக்கிப் பறந்தது.
[4]
கடற்கரை
ஜே ஜே என்று இருந்தது. லட்சம் பேராவது இருந்திருப்பார்கள். அனைவரும் போதை ஆண்கள்.
கடற்கரையின் ஒரு ஓரத்தில் பாட்டுச் சத்தம், மறு
ஓரத்தில் மேடை நடனம்,
வேறொரு பக்கம் இலவச குடி,
பிறிதொரு பக்கம் வெற்றுடல் ஆட்டம் என்று ஆலோலமாய் இருக்க எங்கோ ஒரு மூலையில் விழிபிதுங்கி
சில போலீசார் கம்மென்று நின்றிருந்தனர்.
கெக்கலிப்புடன்
அந்த பெரும் கடலை நோக்கி சூர்யா முன்னாள் ஓடினான். நானும் கத்திக்கொண்டே பின்
தொடர்ந்தேன். இருவரும் அந்த கலியாட்ட பெருங்கடலில் உள் நுழைந்தோம்.
நடனம்
ஆடிய இடத்தில் கண்டபடி கை கால் அசைத்து குதித்தோம். பாட்டுப் பாடும் இடத்தில்
கத்திக் கூச்சல் போட்டோம். யாரோ ஒருவன் சட்டையை கிளைத்துக்கொண்டு கத்தினான்.
சூர்யா அவன் சட்டையை மேலும் கிழித்து கத்தினான். இன்னொருவன் தலைகீழாய் நின்றான், அவனை
கால்களைப் பிடித்து சுழற்றி வீசியெறிந்தான். விழுந்தவன் முதற்கொண்டு அனைவரும்
கொண்டாடினோம். இன்னொருவன் கூட்டத்தின் மேல் தண்ணீர் பம்ப் வைத்து அடித்தான். அதை
பிடிங்கி அவனை சூர்யா துவம்சம் செய்ய கும்பல் அவனுடன் சேர்ந்து கொண்டது. நானும்
முடிந்தவரை சூர்யாவிற்கு ஈடுகொடுத்தேன்.
இருவரும்
குதூகலிக்கும் கூட்டத்திற்குள் வந்து நின்று முழங்கால்களில் கைகளை ஊன்றி மூச்சு
வாங்கி ஒருவரை ஒருவர் பார்த்து
சிரித்தோம். சூர்யா ஏதோ கேட்க வந்ததை ஊகித்து "செம
என்ஜாய்மென்ட்.." என்று நான் சொல்லி சந்தோஷப்பட்டேன்.
அப்போது
தான் நாங்கள் இருவரும் அந்த காட்சியை தூரத்திலிருந்து பார்த்தோம்.
அலையலையாய்
இருந்த ஆண்கள் கூட்டத்திற்கு நடுவே ஒரு இளம் பெண் காரின் மீது ஏறி நின்று
பாட்டுக்குத் தகுந்தவாறு நடனமாடிக் கொண்டிருந்தாள். காந்தத்தைப் பார்த்து திரும்பி
நிற்கும் இரும்புத் துகள்கள் போல ஆண் கூட்டம் அவளை மட்டும் நோக்கி நின்றது.
சூர்யா, "கோழி
சிகிடுச்சு.. வாடா.." என்று என்னைப் பார்க்காமல் கூட கூட்டத்திப் பிளந்து
அவள் திசை நோக்கி ஓடினான். நான் கயிற்றில் கட்டி இழுபட்டு கன்றுக்குட்டி போல
துள்ளிக்குதித்து அவன் பின்னால் ஓடினேன். பிராந்தியின் நெடியும் வியர்வை நெடியும்
அந்த கடைக்கரை சாலை முழுதும் வீசி அனைவரையும் வெறிபிடிக்க வைத்த்திருந்தது.
மொய்த்து
நிற்கும் கூட்டத்தை ஆன பலம்கொண்டு விளக்கி சூர்யா அந்தக் காரின் பக்கவாட்டில்
வந்து நின்றான். அவள் கணுக்கால் கைக்கெட்டும் தூரத்தில். சூர்யா என்னைப் பார்த்து
"எப்படி?" என்று ஜாடை
காட்டினான். நான்,
"சூப்பர்" என்று சமிங்கை செய்தேன்.
தெருவிளக்கின்
பிரகாச வெளிச்சத்தில் அவள் மின்னிக்கொண்டிருந்தாள். இலகுவான உடை அணிந்திருந்தாள்.
அவளது இளமையின் உச்ச காலத்தில் இருந்தாள்.
அந்த உச்ச காலத்தின் உச்ச கணத்தின் உச்ச சாத்தியத்தின் உச்சியில்
ஆடிக்கொண்டிருந்தாள். கைகளை சுற்றி இடுப்பை சுற்றி வட்டமடித்து நடனமாடினாள்.
காருக்குள் ஏதோ இன்னொரு பெண் பாட்டை மாற்றி மாற்றி போட்டு உள்ளுக்குள்ளே தலையையும்
உடலையும் அசைத்துக் கொண்டிருந்தாள். "குடிச்சிருப்பா போல.." என்று
சூர்யா சொன்னான்.
பாட்டு
நின்ற இடைவேளையில் "இந்த பொண்ணு.. உன் பேர் என்ன?" என்று சூர்யா
கத்தினான். கூட்டம் அமைதியானது. நான் கண்களை விரித்துப் பார்த்தேன். சூர்யா எல்லை
உடைத்திருந்தான். விளிம்பு தாண்டியிருந்தான். அவள், "ஸ்வாதி.."
என்றுவிட்டு அங்கிருந்தே கேட்டாள் , "வாட்ஸ் யுவர் நேம்?"
ஒரு கேட்ட வார்த்தை பதிலாகச் சொன்னான். "வாவ் ஸ்வீட் நேம்.." என்றாள். கூட்டம் சிரித்தது. சூர்யா முகம்
சிறுத்து.
அடுத்த
பாட்டு ஆரம்பித்தது. சூர்யா டக்கென்று அவள் ஆடையைப் பற்றி அவளை கீழே இழுத்தான்.
அந்தக் கனி குரங்குக் கூட்டத்திற்கு நடுவில் விழுந்தது. சூர்யா முதலில் குனிந்து
அவள் மேல் கை வைத்தான். வெறிகொண்ட கூட்டம் குனிந்து அவளை பற்றி மேலே தூக்கி
நாலாபுறமும் இழுத்தது. சூர்யா அவள் இடுப்போடு ஒட்டியிருந்த மெலிதான ஆடையை முழுக்க
உருவி காற்றில் வீசினான். இடுப்புக்கு மேல் உள்ள ஆடையை கூட்டம் பார்த்துக்கொண்டது.
அந்த வெறியாட்டக் கூட்டத்தின் வெறிச் சத்தத்தில் அவள் ஓலம் எங்கோ தூரத்தில்
அலறியது. அதை யார் இனி பொருட்படுத்துவர். அவள் நாலா புறமும் இழுபட கூட்டத்தின் முன் நின்ற சூர்யா அவள் உடல் மேல்
அலைந்து திரிந்தான். என்னை நோக்கித்
திரும்பி நீயும் வாடா என்றான். நான் குனிந்து கூட்டத்திற்குள் வந்து இரண்டு
கைகளையும் உள்ளே நீட்டி கைக்கு கிடைத்த இரண்டையும் கவ்வினேன். இரண்டு
உள்ளங்கைகளையும் நன்கு பதியவிட்டேன். என் கைகளை யார்யாரோ அவர்களுக்கான இடம் கேட்டு
பிறாண்டினார்கள். நான் ஆனமட்டும் அவைகளை விடாமல் பற்றியிருந்தேன். என் கைகள் இழுபட இழுபட அவன் அழுத்திப்
பிடித்திருந்தேன். சூர்யாவின் அதே முகத்தை அதன் கோணல்களை இன்று வெற்றிகரமாக நான்
பிரதி செய்திருந்தேன்.
இருவரையும்
கூட்டத்திற்கு வெளியே தள்ளிவிட்டார்கள் . கூட்டம் தன் பங்கை தான்
நிகழ்த்திக்கொண்டிருக்க நான்
சிரித்துக்கொண்டு "போலாம். போலீஸ் வந்துடும்.” என்றேன்.
சூர்யா, "அதுக்குள்ளயா?
இருடா… இனிமேதான் கச்சேரியை…" என்றவன்
பாக்கெட்டில் இருந்து பொட்டலத்தை
எடுத்துப் பிரித்து உள்ளங்கையில் தேய்த்தான். அது மிளகாய் நெடி அடித்தது.
என்னை நோக்கி கண் அடித்துவிட்டு
கூட்டத்திற்குள் நுழைந்தவனை பீதியுடன் பார்த்துக்கொண்டு நின்றேன்.
[5]
அடுத்த நாள் பின் மதியத்தில் தான்
எழுந்தேன். முந்தய நாள் சம்பங்கள் முழுதும் நினைவிலிருந்து தவறியிருந்தது. மதுவின்
கிரக்கத்திலேயே வெகு நேரம் அமர்ந்திருந்தேன். வயிறு பிரட்டவே கழிவறை சென்று
வந்தேன். பின்பு பசிக்கவே கையில் கிடைத்ததை வாயில் போட்டேன். சென்று படுத்தேன்.
சிறிது நேரம் கழித்து எழுந்தேன். மீண்டும் படுத்தேன். கிரக்கம் குறையக்குறைய
எண்ணமாக மாறாத கணத்த உணர்வு ஒன்று நெஞ்சில் கூடிக்கூடி வந்தது. நெஞ்சின் இறுக்கம்
தாளாமல் எழுந்து அமர்ந்தேன். முழு விழிப்பு தட்டியிருந்தது. மூச்சுக்காற்று
சீரற்று இருந்தது. இரு உள்ளங்கைகளையும் உஷ்ணம் கிளம்ப தேய்த்தது மூடிய கண்களில்
ஒற்றி எடுத்து அவற்றைப் பார்த்தேன். அதில் சட்டென்று அவள் முகம் தோன்றி மறைந்தது. ஒரே
எண்ணக் கீற்றாக முன்தின நிகழ்வுகள் நெஞ்சைக் கவ்விக்கொண்டது.
நெஞ்சின் எடை உடலைப் பிளந்து வெளியே
வந்துவிடும் போல் இருந்தது. உள்ளங்கைகளில் எடை பொதிந்தாற்போல் இருந்தது. எதையோ
இன்னும் பற்றி இருப்பது போலவும். அதில் மிளகாய் நெடி அடித்தது. மணிக்கட்டோடு
சேர்த்து கைகளை உதறி உதறி எடுத்தேன். அதில் பொதிந்திருந்த எடையை என்னால்
உதறவே முடியவில்லை. தலையைப் பிடித்துக்கொண்டேன். வீட்டிற்குள்ளேயே
மேலும் கீழும் நடந்தேன். ஓடிச் சென்று டீவியை போட்டேன். செய்திகளை அலசினேன். நான்
ஊகித்ததுபோலவே நேற்றைய நிகழ்வு அன்றைக்கான முக்கியச் செய்தியாக வந்திருந்தது.
என் நெஞ்சம் அடித்துக்கொண்டது.
"ஒரு பெண்ணுக்கு இது நடந்துவிட்டது. ஒரு உயிருக்கு இது நடந்துவிட்டது. அதற்கு
காரணம் நான். நான்.... நான்... அதன் பழி என்மீது. அதற்கு நான் தான் பொறுப்பு.
அப்படியானால் தண்டனையும் எனக்குத்தான். தண்டனை... ஐயோ தண்டனை... தண்டனை வலிக்குமா?
வலிக்காத
தண்டனைதான் உண்டா? வலியை தாங்கிக்கொள்ள முடியுமா?
உடல் வழியை
தாங்கிக்கொள்ள முடியும். ஓரளவேனும் முடியும். ஆனால் இது செய்திகளில் வருமே.
அதுவும் என் புகைப்படத்தோடு. எல்லோரும் பார்ப்பார்கள். பார்ப்பவர்கள் முதலில் நம்ப
மறுப்பார்கள், அப்புறம் ஆச்சரியப் படுவார்கள். ஆச்சர்யம் சிறிது நேரத்தில் பழகிப்போகும்.
பழகிய பின்னர் அதை அவர்கள் ரசிப்பார்கள். அந்த ரசனை அவர்களை கற்பனையில் இட்டுச்
செல்லும். கற்பனை மேலும் புனையும். என்னுடைய பழைய தவறுகள் தோண்டி எடுக்கப் படும்.
என் எல்லா தவறுகளுக்கும் நானே பொறுப்பாளி ஆவேன். என்ன மாதிரி உலகம் இது?
இவ்வுலகத்திடம்
இருந்து எதையாவது மறைக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் தேவைப்படும். அது இனி எனக்கு
இல்லாமல் போகும். அப்புறம் எப்படி நான் உயிர் வாழ்வது. அப்படியானால் என் உயிரும்
போகுமா? அம்மா... அம்மாவின் கதி?
தங்கை. ஐயோ தங்கை.
அவள் கல்யாணம்? நான் உயிருடன் இருக்க வேண்டும். எனக்கு என் உயிர்
முக்கியம். என் ரகசியங்கள் முக்கியம். நான் மறைத்து வைத்தவை மறைந்தே இருக்க
வேண்டும். அப்போது தான் நான் நடமாட முடியும். வாழமுடியும்.”
உள்ளங்கைகள் வியர்த்து இருந்தது. அது
மிளகாய் நெடியுடன் சொட்டிக்கொண்டிருந்தது. அதன் பிடிமான உணர்ச்சி இன்னும் தீவிர
கதியில் நடந்து கொண்டிருந்தது. நான் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல்
இருந்தேன். ஆனால் எனக்கு என்ன நேரக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன்.
உயிர் வாழவேண்டும் என்ற இச்சை என்னுள்
தீவிரமாக இருந்தது. வீட்டை விட்டு வெளியே சென்றால் மாட்டிக்கொள்வோம் என்ற பய உணர்வு ஏற்பட்டது.
அவ்வுணர்வை வெல்லும் பொருட்டு நான் வெளியே சென்று வந்தேன். செல்லும் இடங்களில்
எல்லாம் அவள் முகம் நிழலாடியது. அவள் ஜாடை கொண்ட அநேகப் பெண்களை நான் பார்த்தேன்.
திரும்பும் திசையேங்கும் அவள். ஸ்வாதி... ஸ்வாதி.... என்று அவளின் பெயர் எங்கும்
ஒலித்துக்கொண்டே இருந்தது. மனம் அப்பெயரை உச்சாடனம் செய்தது. வியர்த்து ஒழுக விறு
விறுவென்று வீடு வந்து கதைவடைத்து கதறி அழுதேன்.
உச்சகட்ட வலி அனுபவித்தேன். என் மீதே
கழிவிரக்கம் கொண்டேன். வாழ வேண்டும் என்று நினைத்தேன். இவ்வுலகின் 'தான்' என்ற எந்த பதமும் வாழவேண்டும் என்று நினைத்தால் அது கொலை
செய்துதான் தீரவேண்டும் அல்லவா. உயிர் பலி
எடுத்தே ஆகவேண்டும் தானே. நான் வாழ வேண்டுமென்றால் அவள் இறக்க வேண்டும். இவ்வளவு
நடந்த பின்பும் அவள் இப்படி உயிருடன் இருப்பாள்?
அவள் நல்ல பெண்
அவளாகவே இறந்துவிடுவாள். நல்ல குடும்பத்தில் தான் பிறந்திருப்பாள். குடும்பப்
பெயர் காப்பாற்றும் பொறுப்பு அவளிடம் இருக்கும். நெருப்பில் வெந்தோ;
தண்ணீரில்
மூழ்கியோ; குளிரில் குறைந்தோ; கழுத்தறுத்தோ கையறுத்தோ. ஒருவேளை அவள் சாக விரும்பவில்லை
என்றால்? ச்சீ.. என்ன மாதிரி பெண் இவள். அவள் பொருட்டு அவளை நானே
கொலை செய்வேன். நானே செய்வேன். நானே... நானே...
தொண்டை விக்கியது. கன்னங்கள்
இருகிக்கொண்டது. தாடை வலித்தது. கண்களில் நீர் வலிந்து வலிந்து மேலாடையை
நனைத்துக்கொண்டே இருந்தது. தரையில் விழுந்து குத்திக் குத்தி அழுதேன். நான்
சாகிறேன் நான் சாகிறேன். நானே சாகிறேன்..
என் தலை இரவு முழுது கவிழ்ந்து
இருந்தது. கவிழ்ந்திருந்த தலை மறுநாளும் அப்படியே தன்னை பழகிக்கொண்டது. இனி வீட்டில் இருந்தால் தற்கொலை
செய்துகொள்வோம் என்றெண்ணி தலை கவிழ்ந்தவாறே அலுவலகம் சென்றேன். என் உடல் இடைவிடாது
மெல்லிய நடுக்கத்துடன் இருப்பதை பீதியுடன் உணர்ந்தே இருந்தேன்.
ஒவ்வொரு பெண் எதிரில் வரும்தோறும்
ஸ்வாதி ஸ்வாதி என்றே மனம் எதிரொலித்தது. "அவள் இங்கு வருவாளோ?
வந்து என் முன்
நிர்ப்பாளோ? அவள் சுட்டுவிரல் என்னை நோக்கி காண்பிக்குமோ?
இவன்தான் அவன்
என்று உலகிற்கு அடையாளம் செய்வாளோ? என் மறுமொழி என்ன? அதிர்ச்சியாகவும் பதட்டமாகவும் நடப்பவையை வேடிக்கைப் பார்ப்பதைத் தவிர. நான் மறுக்க
வேண்டும்,
ஆதாரம் கேட்க வேண்டும். அவள் ஆதாரம் கொடுக்கவியலாது. நான் அக்கணமே
நிரபாராதியாவேன்." என் மனம் ஒப்புக்கொண்டும் நிரூபித்துக்கொண்டும்
அலையடைத்தது.
"அவள் இங்குதான் இருக்கிறாள். இங்கு எங்கோ இருந்து என்னை
கவனித்துக் கொண்டிருக்கிறாள். அவள் இருப்பை உள்ளும் புறமும் நான்
உணர்கிறேன்." அலுவலகம் நோக்கி நடந்து செல்லச் செல்ல இப்படி மடைதிறந்த பாயும்
இந்த எண்ண அலைகளை என்னால் நிறுத்தவே முடியவில்லை. அலுவலகம் நெருங்கி வரவர நான்
வேகமெடுத்து நடந்தேன். நடை வேகம் போதவில்லை என்று ஓட்டம் எடுத்தேன். என் அலுவலக
இருக்கையே தற்போது பாதுகாப்பான இடம். அங்கே ஒளிந்து கொள்ளலாம். அவள் இனி எப்படி
கண்டுபிடிப்பாள்? என் உலகில் நானும் அவளும் மட்டுமே இருந்தோம்.
அலுவலகம் நுழைந்தேன். படி தடுமாறியது;
கைப்பிடி
வழுக்கியது; கதவு பிடிமானம் இல்லாமல் இடறியது. தட்டுத்தடுமாறி மேஜையைப்
பிடித்து இருக்கையை நகர்த்தி அதில் என்னை வீசி எறிந்தேன். மூச்சு மேலும் கீழுமாக
ராட்டினம் சுற்றியது. தலை கிர்ரென்று இறுகி இறுகி தளர்ந்தது. உடல் வியர்வையால்
நனைந்திருந்தது.
என்னுடைய மனம் அடியாழத்தில் முடிவிலி
வரை நீண்டு கிடந்தது. இனி எந்த சாகசத்தினாலும் அதை மீட்டெடுக்க முடியாது என்று
உணர்ந்த உடனேயே என்னை ஒரு கண் கவனித்துக்கொண்டிருப்பதை உணர்ந்தேன். அது என்னைப்
பார்க்கிறது. பார்ப்பதால் என்னை அழக்கிறது. அதன் தீவிரம் கூடிக்கூடி வருகிறது.
என்னை துளைத்து ஊடுருவி செல்கிறது. அதனிடம் இருந்து நான் எதையும் மறைக்க முடியாது.
கைப்பேசி அலறியது. சட்டென்று என்
உள்ளங்கையில் அதே கனத்தை உணர்ந்தேன். மணிக்கட்டோடு சேர்த்து உதறினேன். அருகாமையில்
மிளகாய் நெடி வீசியது. மனிதக்
குழந்தையின் அழுகுரல் எங்கோ ஒலித்தது. என் மனம் மேலும்கீழும் தாண்டவமாடியது.
கைப்பேசி அலறியது. மனதில் பள்ளம் உருவாகியது. கைப்பேசி அலறியது. கைகள் கணம்
கூடியது. பள்ளம் உள்ளே இழுத்தது. கைப்பேசி நின்று மீண்டும் ஒலித்தது. பள்ளம் விசை
கொண்டது. உள்ளங்கைகளின் பிடிப்பு எரிந்தது.
பள்ளம் நிறைய வேண்டும். உள்ளங்கை
சுமையை இறக்கி வைக்க வேண்டும். கைபேசிக்கு பதில் சொல்ல வேண்டும்.
அப்போது ஸ்வாதி என் முன் வந்து நின்றாள்.
[6]
வந்தவள் என்னை மேலும்கீழும்
பார்த்துவிட்டு "ரிப்போர்ட் இன்னும் வரவில்லை. சீக்கிரம் வேண்டும்.."
என்றுவிட்டு என் பதிலை எதிர்பார்க்காமல் திரும்பிச் சென்றாள். பக்கத்து
இருக்கையில் இருந்த இன்னொரு ஸ்வாதி
"காஃபீ?" என்று கேட்டாள். அப்போது கையில் துடைப்பத்துடன் வேறொரு
ஸ்வாதி,
சார் ஒரு நிமிஷம்
தள்ளிக்கோங்க மேஜையை சுத்தம் செஞ்சுட்டுப் போறேன்" என்று அருகில் வந்து
நின்றாள்.
உள்ளங்கைகளை விசிறிபோல் வீசிக்கொண்டு
நிமிர்ந்து அவர்களைத் தாண்டிப் பார்த்தேன். அலுவலகத்தில் உள்ள அனைத்து ஸ்வாதிக்களும்
என்னை நோக்கி நின்றிருந்தனர். ஒரு ஓரத்தில் அம்மா ஸ்வாதியும் தங்கை ஸ்வாதியும் தத்தம் நாய்களுடன் நின்றிருந்தனர். மறு ஓரத்தில்
ஒரு ஸ்வாதி அம்மிக்கல்லை முதுகில் சுமந்து நின்றாள். வேறொரு இடத்தில் காற்றுப் போன
ஆம்புலன்ஸ் வண்டியில் ஒரு ஸ்வாதி உயிர் நீத்துக்கொண்டிருந்தான்.
மனச் சுருள் என்னை இழுத்தது. அதை
ஏதாவது கொண்டு கலைக்க வேண்டும்.. இல்லையேல் என்னையே அதற்கு பலிகொடுக்க வேண்டும்.
கைப்பேசி மீண்டும் ஒலித்தது.
சூர்யா…
Great ideology ✨ congratulations author vijay🍃
ReplyDelete