Sunday, February 6, 2022

முழுமை - சிறுகதை - தமிழ் குமரன் துரை.

 தளிர்த்து பூத்திருந்த வாகை மரம் சற்று வளைந்து அந்த வழியாக வருபவர்களை வரவேற்பது போல இருந்தது...

 அது நல்ல இளவேனில் காலமெண்பதால் பூத்த வாகைமாலரின் வாசம் அந்த இடத்தை வியாபித்து இருந்தது...

 அடர்ந்து இருந்தது அந்த காட்டுப்பாதையின் இருபுறமும் அடர்ந்திருந்த காட்டு செடிகளை உரசியவாறே வேகமாக நடந்து கொண்டிருந்தான் முத்தையன்...

 

"ஏம் மாமா இம்புட்டு வேரசா போர

கொஞ்சம் பைய போவேன்"

 

"பெரியமனுசங்கள பாக்க போகும்போது வெள்ளனவே போகனும் டா"

என்று கூறியவாறே பழைய வேகத்துடன் நடந்தான் முத்தையா

 

கடம்பன் அதிகமாக காடுகளை விட்டு வெளிய வந்தது இல்லை... அதனால் அதிசயமாக பார்ப்பதை போல ஒவ்வொன்றையும் கவனித்துக்கொண்டு வந்தான்...அவன் இடுப்பில் ஒரு வேட்டியை மட்டும் கட்டியிருந்தான். அவனின் இருபுறமும் புடைத்து அகன்றிருந்த தோள்களும்..விரிந்த மார்பும் ,

நரம்புகள் தெரிய புடைத்திருந்த கைகளும் அவனின் உடல்வலிமையை உணர்த்தின...

அவன் கைகளில் அணிந்திருந்த காப்பு அவனின் உறுதியை மேலும் பறைசாற்றியது.

அவன் தேகம் கருப்பாகவும் கண்கள் தீட்சண்யமாகவும் இருந்தது.

 

காட்டுப்பாதை முடிந்தது சமவெளி தொடங்கியவுடன் தன் மன நிலை மாற்றம் அடைந்திருப்பதை உணர்ந்தான் கடம்பன்.

 சிறிது தொலைவு நடந்ததும் 

" ஏன் மாமா அங்க இருக்கே ... அது என்னது?"

 

அதுதான் டா.. கோவில் கோபுரம் என்று சொல்லிவிட்டு மேலே நடந்தான்.

 

நல்ல குளிர்ந்த ஈர காற்று முகத்தில் மோத..

அருகில் ஏதோ நீர்நிலை இருப்பதை உணர்ந்து கொண்டான் கடம்பன்

 

உண்மைதான் .... அது ஒரு தடாகம்

அதில் செந்நிற குவளை மலர்களும் ஆம்பல் மலர்களும் சூரியன் வருகைக்குக் காத்திருந்தன அந்த இருள் விலகாத காலை வேளையில் மண்டுகங்களின் ஓசை 

 "கிரீச் கிரீச்" என்று கேட்டுக் கொண்டிருந்தது.

 

இது எதையும் இலட்சியம் செய்யாதவனாய் சென்றுகொண்டிருந்தான் முத்தையன் ஆனால் 

  கடம்பனோ ஒவ்வொரு மலரையும் புதிதாக பார்ப்பதுபோல் பார்த்துகொண்டு சென்றான்...

 

 "மலர்கள்தான் உயிர் தன்மையின் வெளிப்பாடு"

  ஆம் பூமித்தாய் இந்த பூக்களின் வழியே சிரிக்கிறாள்....

  என்று அவன் குலமுதுகிலவன் கூறியது அவன் நினைவில் தோன்றியது.

  அவை தன் இருப்பில் எத்தனை ஆனந்தம் கொண்டுள்ளது என்று வியந்தவாரே...

  முத்தையன் பின்னால் சென்று கொண்டிருந்தான்...

 

கோவிலை நெருங்கியதும்... மெலிந்து, சிவந்த உடலுடன் 

காதுகளில் பூவுடன்

கோவிலில் மந்திரங்களை உரக்க ஜபித்துக்கொண்டிருந்தார் மாதவய்யர்..

 

கோவிலை ஒட்டி நடப்பட்டிருந்த பெருங்கள்ளி செடிகளும், அதன் பூக்களும் கோவிலுக்கு தனி அழகை கொடுத்துக் கொண்டிருந்தன,

  வாயிலின் அருகிலே ஒரு பெண் தன் குழந்தைக்கு கைகளை கூப்பி இறைவனை தொழ சொல்லிக்கொடுத்து கொண்டிருந்தாள்

 

கோவிலை கடந்ததும் வரிசையாக அமைந்திருக் இந்த வீடுகளுக்கு இடையில் சென்றனர் கடம்பனும் , முத்தையன் அந்த தெருவில் நுழைந்த உடனே அனிச்சையாக தனது தோள் துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டான் முத்தையன் சற்று நேரத்திற்கெல்லாம் காற்றில் ஒரு மெல்லிய பெண் குரலில் பாடல் ஒலி கேட்டது ... முன்னேறி செல்ல செல்ல அக்குரல் மென்மையாக வலுத்தது...

 

அக்குரலின் இனிமையில் பாடியது பெண்தான் என்றும்... அப்பாடல் இறைவனை பற்றிய பாடல் என்பதையும் ஒருவாறு யூகித்து கொண்டான் கடம்பன்...

 

 குரல் வந்த வீட்டின் முன்பு திண்ணையில் ஐம்பதை கடக்காத உடல்வாகும்..நரைத்த தலை முடியும், தீட்சண்யமான விழிகளுடன் இருந்த பிரமணரிடம் 

 

" கும்புடுறேன் சாமி" என்றான் முத்தையன்.

 

இந்தக்குரல் கேட்டவுடனே... உள்ளிருந்து ஒலித்துகொண்டிருந்த பாடலோசை நின்றது .

 

 யாரு முத்தையனா!

  எங்க ரொம்ப நாளா ஆளையே காணோம்!.

  என்று கூறுக்கொண்டே .. உள்ளே நோக்கி 

 " ராஜம்......"

 என்றார்...

 ஐயரின் குரல் கேட்ட உடனே வெளியே வந்து முத்தையனிடமிருந்த பலாபழத்தையும் ,வேறு சில காய்கறிகளையும் பெற்றுக்கொண்டாள்.

 

பொஞ்சாதி எப்படி இருக்கா?

 

"நேத்து தான் சாமி எனக்கு கொழந்த பொறந்துச்சி"

உங்க புண்ணியதுல ரெண்டுபெரும் நல்லா இருக்காக"..

 

"நம்ம கையில என்ன இருக்கு!

 எல்லாம் உலகத்தையே ஆளும் அந்த சர்வேஸ்வரனின் புண்ணியம் என்று சொல்லுடா" .

அதான் சாமி உங்களைப் பார்த்து சாதகம் எழுத சொல்லலாம்னு வந்தேன்"

 

இவ்வாறு சீனிவாசய்யருக்கும் முத்தையனுக்கும் இடையில் உரையாடல் நடந்து கொண்டிருக்கும்போது..

 

கடம்பனின் மனம் முழுக்க பாடல் வந்த திசையை நோக்கிக் கொண்டிருந்தது ...

வீட்டின் முற்றத்தில் வைக்கப்பட்டிருந்த துளசி மாடமும் அதனை சுற்றி போட்டிருந்த கலைத்துவமான கோலத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான் கடம்பன் ,அப்போது அங்கே சற்றுமுன் குளித்த ஈரம் மாறாத கூந்தலுடன் அதில் துளசியும், ஒரு சிறிய மல்லிகைப்பூ சூடியிருந்தாள் ஒரு அழகிய மாங்கை, அவளின் முகம் சரியாகத் தெரியாதபடி அழகிய துளசி மாடத்தை நோக்கியவாறு நின்று இஷ்டதெய்வத்தை நினைத்து தொழுது கொண்டிருந்தாள்..

 

அப்பொழுது கடம்பனின் மனம் முழுவதும் அவள் சூடியிருந்த மல்லிகை மலரில் வியாபித்து இருந்தது, அதுவன்றி உலகில் வேறு எதுவும் இல்லை என்பதைப் போல் அதையே வெற்று நோக்கிக்கொண்டிருந்தான்

 

அந்த பெண்ணின் முடியில் இடம்பெற்றதால் அந்த மலர்கள் முழுமை பெற்று, மோட்சம் அடைந்து விட்டதாகவே எண்ணினான் கடம்பன்

அத்தருணத்தில் உடல் முழுதும் கண்ணாக அவள் எப்போது திரும்புவாள் என்பதையே எண்ணிக் கொண்டிருந்தான்.  

 

அப்போது அவன் இந்த உலகத்தில் இல்லை வேறு ஏதோ ஒரு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தான்

 

அவனின் மன ஓட்டத்தை அறிந்தவர்களாக ஏதோ ஒரு தன்னுணர்வால் உந்தப்பட்பட்டவளாக திரும்பினால் அந்த நங்கை..

 

அவள் திரும்பும் வேளையில் அதற்காகவே காத்திருந்தவனாக சூரிய தேவனும் அவளை நோக்கினான்...

 

காலை வேளையின் ஒளிக்கிரணம் பட்டு அவள் முகம் பொண்ணைபோல பளபளத்தது .... அவளின் நெற்றியில் இருந்த ஈர சந்தனம் அவளைவிட அழகாக இருந்தது...

 

அவளின் முகம் அவனுக்கு ஒரு பூவின் குளிர்ச்சியை உண்டாக்கியது...அந்த தருணத்தில் கடம்பன் என்பவன் அங்கு இல்லை, அந்த பெண் அங்கு இல்லை

கால ஓட்டத்தில் எல்லைகளை கடந்திருந்தான்

அவனின் பார்வையும் அவளின் நெற்றியில் இட்ட சந்தனமும் மட்டுமே இருந்தது..

 

 

அத்தருணத்தில் அவன் அவனையே கண்டான்,

 

ஆம், அவள் தான் நான், எண்ணில் உறையும் பெண் தன்மையின் வடிவம் தான் இவள்

என் கலைவுணர்வின் வடிவமே இவள் ,

நான் இத்தனை காலமாக தேடியலைந்த என் முழுமை....

 

கண்டுகொண்டேன்...

    இனி எனக்கு மரணமில்லை ஏனென்றால் எனக்கு பிறப்பும் இல்லை,

    நிகழ்காலமும் இல்லை எதிர்காலமும் இல்லை நான் காலங்களை கடந்து விட்டேன்.. 

   " நான் என்பது ஏதுமில்லை" என்பதை உணர்ந்தவனாய் வெற்று மனதுடன் அங்கேயே நின்றிருந்தான்..

 

இவ்வாறான எண்ண ஓட்டத்தில் சிக்கிக் கொண்டிருந்தான் கடம்பன்

முத்தையன் உடனான வேண்டுமஉரையாடலின் போது அருகில் இருந்த புதிய இளைஞனை கவனித்தார் சீனிவாச ஐயர் 

தன் தொண்டையை செருமினார்

அந்த அதிர்வை உணர்ந்து பழைய நிலையை அடைந்தான்

 

யார் இந்த பையன்"

 

"இது என் பொஞ்சாதி ஓட தம்பி, பேரு கடம்பன் "

 

கடம்பன் நல்ல பேரு , யாரோட பேருண்ணு தெரியர்து இல்ல ! என்னப்பன் முருகனுடைய பேரு!

 

அப்போது சீனிவாச ஐயர் அவனின் தோள்களின் வலிமையையும் , கண்களில் வெளிப்பட்ட தெளிவையும் கவனிக்கவே செய்தார்.

 

" இன்னும் ஒரு வாரத்தில் ஜாதகத்தை எழுதி வைக்கிறேன் வந்து வாங்கிக்கோ"

 

"சரிங்க சாமி அப்படினா உத்தரவு வாங்கிக்கிறேன்"

"இருடா பைய போலாம்"

 

"இல்லங்க சாமி

சந்தையில கொஞ்சம் பொருள் வாங்கணும் இப்ப போனாத்தான் இருட்டுறதுக்குள்ள போய் சேர முடியும்" என்றான் முத்தையன்.

 

மீண்டும் ஒருமுறை கும்பிட்டு விட்டு திரும்பி நடந்தான் முத்தையன், கடம்பன் ஒன்றும் பேசாமல் அவனை பின்தொடர்ந்தான் 

திரும்பும் சமயத்தில் அரை நொடிக்கும் குறைவான நேரத்தில்

அந்தப் பெண்ணின் விழியும் என் விழியும் ஒன்றோடு ஒன்று தொட்டு மீண்டது....

 

முத்தையன் கடைத்தெருவில் பருப்பும், மிளகாயும், உப்பும், வாங்கிக்கொண்டு காட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்

இருவரும் வெகு நேரம் எதுவும் பேசிக்கொள்ளவில்லை....

உயர வளர்ந்து அடர்ந்திருந்த மரங்கள் காட்டுப்பாதை தொடங்கிவிட்டதை உணர்த்தின... அப்பொழுது இயல்பாக உணர்ந்த கடம்பன்...

 

"ஏன் மாமா அய்யரு என்ன சொன்னாரு ?" என்றான் கடம்பன்.

"ஏண்டா நீயும் அங்க தான் இருந்த,

அவரு உன் பேர பத்தி சொன்னாரு..."

 

"உனக்கு முருகனோட பெயரில்லா "

 

" நாம காட்டுக்குள்ள இருக்க முருகனுக்கு வேற மாதிரி இல்ல பூசை பண்றோம் 

  நம்ம முருகனுக்கு பலிகொடுத்து, சாமியாடி ,குறிசொல்லி கும்பிடுவோம் அவங்க வேற மாதிரி கும்பிடுறாங்க"

 

"நாம முருகனுக்கு சந்தனம் மட்டும் தான் கொடுப்போம் 

அவங்க விபூதி கொடுக்காங்க"

 

நாம முருகனை மரத்துல கும்பிடுறோம், அவங்க கோவில்ல கும்புடுகராங்க

 

நம்ம முருகன் நல்ல வாட்ட சாட்டமா 

உசரமா வேலை வச்சு வேட்டையாடி விளையாடும்னு நம்ம முருகம்மா பாட்டி சொல்லுச்சு 

ஆனா அவங்க குழந்தை மாதிரின்னு சொல்றாங்க

 

"அப்ப எப்படி இரண்டும் ஒன்றாகும்?"

 

அட, கடம்பா..!

 

"ஒவ்வொருத்தரும் அவங்க விரும்புவதும், அவங்கள சுத்தி இருக்கிறவங்களும் தன்னை மாதிரியே இருக்கணும் என்று நினைப்பார்கள் அப்படி இல்லாமல் போய்விட்டால் அதை அவங்களால தாங்கிக்கவே முடியாது ....!

 

"இப்போ ஒரு எருமைக்கடா இருக்குதுன்னு வச்சுக்கோ அதோட சாமி பெரிய எருமைக்கடா ன்னு நினைக்கும்"

 

இதுவே யானைகள் என்றார் அதுக சாமி மனுசன்னா நினைக்கும்  

"அது தன் சாமி ஒரு பெரிய யானை தான் நினைக்கும்"

அதுமாதிரிதான் அவங்க அவங்களுக்கு ஏத்த மாதிரி சாமி மாத்திட்டாங்க 

ஆனா நாம தான் ஆதி

 

"நம்ம முருக நமக்கு காவல் தெய்வமும் காதல் தெய்வமாவும் இருக்கிறார்"

 

அவன் தான் டா நம்ம தெய்வம்,

நம்ம அரசன்....

 

"அவன் கடம்ப மரத்தில் வாசம் செய்யும் இயற்கையின் தெய்வம்"

 

இதைச் சொல்லும்போது அவ உடம்பு லேசாக நடுங்கியது.

 

 

அப்பொழுது அந்த அடர்ந்த காட்டில் 

பூத்துக் கிடந்த வெண்மை நிற மலர்கள் அவ்விடத்தை வாசனையால் நிரம்பியிருந்தது.. 

அவ்விடத்தை கடக்கும் போது கடம்பன் கண்களை மூடி அந்த மனத்தை முழுவதுமாக உணர்ந்த அந்த மனம் நாசிகளுக்கு மட்டுமல்லாமல் அவன் மனதுக்கும் இதமாகவே இருந்தது...

 

.

 

அந்தச்சமயம் கடம்பனுக்கு அய்யரின் வீட்டில் பார்த்த அப்பெண்ணின் கூந்தலில் இருந்த மல்லிகை பூவின் நினைவு வந்தது....

அந்த தருணத்தை அவன் மீண்டும் மீண்டும் நினைவில் நிறுத்தி மகிழ்ந்தான்

 

 அந்த பெண்ணை பற்றி அறிந்துகொள்ள விரும்பிய கடம்பன்..

 

  "அய்யர் ஓட வீட்டில பாட்டு சத்தம் கேட்டதே".... என்று கூறிய கடம்பனை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு

 

"அது அய்யரோட பொண்ணு ..பேரு வானி"

 

அந்த தருணத்தில் இருந்து அவன் அந்தப் பெயரை உச்சரித்துக் கொண்டே இருந்தது "வானி வானி வானி "

 

 அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் மேலும் "பொண்ணுக்கு மாப்பிள்ளை தேடிட்டு இருக்காங்க, மாப்பிள்ளை கிடைச்சா இந்த வருஷம் என் கல்யாணத்து முடிச்சிடுவாரு..." 

அது பற்றி அவனுக்கு கவலை இல்லாதவன் போல

அதை அவன் காதில் வாங்கவில்லை அவன் அந்தப் பெயரையே மீண்டும் மீண்டும் தனக்குள் உச்சரித்துக் கொண்டிருந்தான்..

 

அதைக் கூறும் போது அவனுக்கு ஆனந்தம் அவனுக்குள் ஊற்று எடுப்பதை உணர்ந்து... அதை மீண்டும் மீண்டும் செய்தான்.

 

                              

 

கடம்பன் எப்போதுமே வீட்டுக்குள் தூங்கியதில்லை அவனுக்கு வானத்தைப் பார்த்தபடியே நட்சத்திரங்களை ரசித்தபடியே தூங்கினால் தான் தூக்கமே வரும் அதேபோல காலையில் ஆற்றில் குளித்து விட்டு சூரிய உதயம் பார்ப்பது என்றால் கடம்பனுக்கு அலாதி பிரியம்

 

 ஒவ்வொரு நாள் சூரிய உதயம் பார்ப்பதற்கும் ஒவ்வொரு இடத்திற்குச் செல்வான் அன்றும் சூரிய உதயம் பார்ப்பதற்கு மலை முகட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார் வெளிச்சம் எங்கும் பரவியிருந்தது ஆனால் சூரியன் இன்னும் தென்படவில்லை அப்பொழுது பாறை இடுக்குகளில் வெளியே செந்நிற பூ ஒன்றை கண்டான் 

 அந்தக் கணம் அவன் மனதில் எதுவும் இல்லை , அவன் வெற்று உயிராக அதை பார்த்துக்கொண்டிருந்தான் .....

 "இதை நான் எங்கோ இதற்கு முன் கண்டிருக்கிறேன் " என்று எண்ணமிட்டான் 

 

சட்டென்று அவன் மனதில் அய்யரின் வீட்டில் கண்ட அந்தப் பெண்ணின் முகம்..

 

" ஆம் .......

 அவளின் முகமே தான் அதே குளிர்ச்சி அவளைப் பார்க்கும் போதும் அவ்வுணர்வு எனக்கு மலரையே நினைவூட்டியது "

 இதை தன் சித்தத்தால் நினைத்துப் பார்க்கும் பொழுது அவன் திகைப்பின் உச்சத்தில் இருந்தான்...

 

அந்தத் தருணத்தில் உணர்ந்தான்

 

" தன்னை உணர்ந்ததால் தான் முழுமையடைய முடியும். வாழ்வதும் முழுமையாய் வாழ்வதும் தான் ஆன்மீகம்" என்று...

 

 

இவையாவும் நிகழ்ந்து கொண்டிருந்த அதே தருணத்தில் தருணத்தில்...

 

நேர்த்தியாக கட்டப்பட்ட சம்பங்கி பூக்களால் ஆன மாலையை எடுத்துக்கொண்டு கோவிலை நெருங்கிக் கொண்டிருந்தபோது

கோவிலின் ஓரத்தில்

  அரச மரத்தடியில் கிடந்த அந்தப் பாறையைக் கண்டு ஒரு நிமிடம் 

  நின்றால்

அதைப் புதிதாக பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தால் ஏதோ ஒரு தன் உணர்வால் உந்தப்பட்டவள் போல அந்த பாறையின் சமீபத்தில் சென்று தன் வலது கையால் அதை தொட்டு உணர்ந்தாள்...

 

 அதன் கடுமை அவளுக்கு காரணமற்ற ஒரு மகிழ்வை கொடுத்தது அவள் சிறுவயதிலிருந்து எத்தனையோ முறை அந்தக் கோயிலுக்கு வந்திருக்கிறார் அந்தப் பாறையும் அநேக முறை பார்த்திருக்கிறாள் வழக்கமாக கோவிலுக்கு வரும் பொழுது அதை பெரிதாக சட்டை செய்ததில்லை...

இன்று என்ன ஆயிற்று எனக்கு என்று யோசித்துக் கொண்டிருக்கும் தருணத்தில் கெட்டியான காப்புகளை அணிந்திருந்த கடம்பனை எண்ணி நிலமகளை நோக்கி நாணம் உற்றாள்.

 

 

  இயற்கை பல அற்புதங்களை தன்னகத்தே கொண்டது 

                           - தமிழ் குமரன் துரை.

 

1 comment: