ஸ்டெல்லா
மரி
நடுநிசியைத்
தாண்டியும் ஸ்டெல்லாவிற்குத் தூக்கம் வரவில்லை. ஆயிஷா நிச்சயமாக இதை ஏற்றுக் கொள்ள
மாட்டாள். பாவம் உடைந்து போவாள். இப்பவே இதல்லாம் தெரிஞ்சுக்கணுமா?
என்று
ஸ்டெல்லா தனக்குள் யோசித்தபடி பாயில் படுத்திருந்தாள். ஆனாலும் வேறு வழியில்லை
என்று தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்ட
கணத்தில் நடராஜனின் பிம்பம் மனதில் வந்து
போனது. சீலிங்கில் தலைகீழாய் தொங்கிக்
கொண்டிருக்கும் மின் விசிறி பகல் நேரத்து அனல் காற்றைச் சூடாகக் கீழே அனுப்பிக்
கொண்டிருந்தது. அருகில் ஆயிஷா தனது தொடைகளுக்கு இடையே இரண்டு கைகளையும் சொறுகி
குழந்தை போல நைட்டியில் படுத்திருந்தாள் . பெட்ஸிட் காலுக்கடியில் சுருண்டு
கிடந்தது. இந்த ஒரு இரவு தான். நடராஜனுக்கும்
ஏனைய சிலருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியத்தை நாளை ஆயிஷாவும் தரிசிக்கப் போகின்றாள்.
இது ஸ்டெல்லாவின் சுயம் நிகழ்த்தப் போகும் திட்டமிடப்பட்ட மகிழ்ச்சி . தன்னை
நேசிப்பவர்களிடம் ஸ்டெல்லா செய்யும் தந்திரம் கூட.
பிரபஞ்ச
ரகசியத்தை அவிழ்க்கத் தயாராகும் மும்முரத்தோடு ஆயிஷாவுக்கு அன்றைய பொழுது
விடிந்தது. ஜனவரி மாத முன் பனி வங்கக் கடலின் நீலப் படுக்கையிலிருந்து எழுந்த
ஈரக்காற்றுடன் சேர்ந்து இரவெல்லாம்
பின்னிய வெண்நிற பனிப் போர்வை அந்த
வீட்டிலிருந்து நீக்கத் தொடங்கியிருந்தது . வீட்டைப் போத்தியிருந்த இரவானது அன்றைய
பகல் நேரம் குறித்த கவிதையை எழுதிப் பார்த்துத் திருப்தியடையாமல் கசக்கி வீசிய
தாளின் மடிப்புகள் போல ஆயிஷா சுருண்டு படுத்திருந்தாள். குளிருக்கு இதமாகத்
தனது முழு உடலையும் போர்வைக்குள் சுருட்டி படுத்திருந்த ஆயிஷா விஷம் காக்காத
பாம்பொன்று உடம்பின் மீது ஊர்ந்து கிளர்ச்சியூட்டும் கனவிலிருந்து விடுபட்ட
அதிர்வில் கண்விழித்தாள். ஸ்டெல்லா திறந்து வைத்திருந்த ஜன்னல் வழியே சோம்பல்
முறித்த பூனைக்குட்டி போல உறங்கியிருந்த
நகரத்து இரைச்சல் மெல்ல உள் நுளைந்து தனது அகண்ட வாயைத் திறந்து பேச ஆரம்பித்தது.
ஆயிஷா
குளித்து முடித்து உடை மாற்றும் வரை ஸ்டெல்லா வீட்டில் இல்லை. சரியாக எட்டு
மணிக்கு ஸ்டெல்லா வீட்டிற்கு நுழைந்ததும் நேராக முகம் பார்க்கும் கண்ணாடிக்கு அருகில்
இருந்த வேளாங்கண்ணி மாதா சுரூவத்தை தொட்டு கண்களை மூடி பிராத்தித்தாள்.
அருகிலிருந்த தீர்த்தத்தை பெருவிரலில் தொட்டு தன் நெற்றியில் சிலுவைக் குறி
போட்டுவிட்டு ஆயிஷாவைப் பார்த்து
வாஞ்சையுடன் அவளது நெற்றியிலும் சிலுவைக்குறி போட்டு அதே இடத்தில் தன் ஈர
உதடுகளில் முத்தம் பதித்தாள். ஆயிஷாவுக்கு எப்படியும் ஒரு நாளைக்குக்
குறைந்தபட்சம் பத்து முத்தங்களாவது நெற்றியில் கிடைத்துவிடும். ஸ்டெல்லா முதன்
முறை ஆயிஷாவின் நெற்றியில் முத்தமிட்ட போது ராஃபி அம்மாவின் என்றுமே விலகாத
ரோஜாப்பூ சென்ட் நறுமணம் சூழ்ந்த முத்தமும், கல்லூரியில்
சேர்ந்த மூன்றாம் மாதத்தின் தொடக்கத்தில் வந்த அம்மாவாசை பின்னிருட்டில் தன்
வீட்டிற்குப் பின்புறம் ரா பூச்சிகள் மோதி மஞ்சள் நிறம் வழியும் சோடியம்
தெருவிளக்கைத் துணையாகக் கொண்டு ராமகிருஷ்ணனைத் தனியே சந்தித்துப் பேசிக்
கொண்டிருக்கும் போது சட்டென்று நெஞ்சோடு சேர்த்து அணைத்து ஆயிஷாவின் உதட்டில்
அழுத்தமாகக் கொடுத்த முதல் முத்தமும் மனதில்
வந்து கணத்தது. ஆரம்பத்தில் ஸ்டெல்லா கொடுக்கும் முத்தங்கள் அவளைக் கூச்சப்பட
வைத்தாலும் நாளடைவில் ஆயிஷாவுக்குள் பல மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது. சில நேரம்
ஸ்டெல்லாவுடனேயே தங்கிவிடலாம் என்று கூடத் தோன்றியிருக்கின்றது. ஆனால் அதை இதுவரை
ஸ்டெல்லாவிடம் சொன்னதில்லை.
ஆயிஷாவுக்கு
இருபத்திரண்டு வயது. பார்த்ததும் ஒரு சாயலில் பழைய நடிகையை நினைவுபடுத்தும்
லட்சனமான முகம். கல்லூரியில் சேர்ந்த ஆறே மாதத்தில் தன்னை விட இரண்டு வயது இளைய
இராமகிருஷ்ணன் மீது வந்த கட்டுக்கடங்காத காதலும் அதனால் கல்லூரியிலிருந்து
நிறுத்தியதும், கோடை விடுமுறையில் நடந்த
விபத்தொன்றில் இராமகிருஷ்ணனுக்கு ஏற்பட்ட திடீர் மரணமும் ஆயிஷாவை வெகுவாக மனதளவில்
பாதித்திருந்தது. நள்ளிரவு கடந்து அழ ஆரம்பித்தவள் தற்கொலை செய்து கொள்ள முயன்ற
போது அவளது தங்கை வீறிட்டு கத்தி
அனைவரையும் எழுப்பி ஆயிஷாவைக்
காப்பாற்றினாள் . அதற்குப்பின் ஓரிரு முறை வெவேறு விதங்களில் தற்கொலைக்கு முயன்று
காப்பாற்றப் பட்டிருக்கின்றாள். நாளடைவில் கட்டுப்பாடுகள் அதிகரிக்க ஒரு
கட்டத்தில் வீட்டின் கூரையைப் பார்த்துக் கை நீட்டி சிரிப்பதைப் பார்த்த அவளது
வாப்பா ஆயிஷாவுக்குப் பேய் பிடித்துள்ளதாகப் பயந்து தர்காவிற்கு அழைத்துச் சென்று
மந்தரித்தார். பின்னாளில் சிரிப்பதை நிறுத்தியிருந்த ஆயிஷா ஒருசில நாட்களில்
தானாகப் பேசத் தொடங்கி இருந்தாள். ஒரு பவுர்ணமி இரவில் உடைகளைக் களைந்து
நிர்வாணமாக வீட்டின் நடுவில் நின்று குளித்த போது ஆயிஷாவின் வாப்பா நெஞ்சைப்
பிடித்தபடி கீழே சரிந்து விழுந்து உயிரை விட்டிருந்தார். வாப்பா இறந்த சில
மாதங்களில் வீட்டுப் பாதுகாப்பையும் மீறி மழை பெய்த ஒரு நள்ளிரவில் ராமகிருஷ்ணன் ஆயிஷாவின் விரல் பிடித்து
அழைத்துக் கொண்டு இருளில் கரைந்தான் .
பின்பு கூட்டம் பிதுங்கி வழியும்
ஒரு ரயிலில் சென்னையின் சென்ட்ரல் ஸ்டேஷன்
நடைபாதையில் ஆயிஷா தனியே வந்திறங்கினாள். ஸ்டெல்லா வேலூர் சென்று திரும்பிய
அதேவேளை ரயில் நிலையத்தின் கூட்டத்தினுடே பித்து நிலையில் தனக்குள் பேசிக்
கொண்டிருக்கும் ஆயிஷாவைப் பார்த்து தன்னுடன் கூட்டி வந்து வைத்துக் கொண்டாள்.
ஆயிஷாவைத்
தனக்குத் தெரிந்த வைத்தியரிடம் காட்டி மருந்து கொடுத்து கடந்த ஆறு மாதமாகத்
தன்னுடன் வைத்து மருத்துவம் பார்த்து வந்தாள் . தன் பெயர் ஆயிஷா என்பதும் சொந்த
ஊர் சேலம் என்பதும் சில வாரங்களாகத்தான் அறிந்திருந்தாள்.
ஆயிஷா
குணமானதும் வெள்ளியில் உருவம் செய்து காணிக்கையாகச் செலுத்தி ஆளுயர மெழுகுதிரி
ஏற்றி பூசை ஒப்புக் கொடுத்து நேர்த்திக்கடன் செய்வதாக வேளாங்கண்ணி மாதாவிடம் வேண்டியிருந்தாள். அதன்படியே இரண்டு
வாரங்களுக்கு முன்பு இருவரும்
வேளாங்கண்ணி சென்று பழைய மாதா கோயில்
குளத்தில் புடவை முந்தானையில் முடிந்து
வைத்திருந்த காசை போட்டு மெழுகுதிரி
காணிக்கையாக கொடுத்து வேண்டிய மட்டும் நன்றிப் பெருக்குடன் ஸ்டெல்லா வழிபட்டாள். அந்த நாள் இரவு நெடுநேரம்
கடற்கரையில் தனியே அமர்ந்து தனியே சிரித்துக்கொண்டிருந்த ஸ்டெல்லாவை ஆயிஷா பெரிதாக
கண்டு கொள்ளவில்லை . ஆனால் அலைகளை மீறி எழுந்த ஸ்டெல்லாவின் சிரிப்பொலி மட்டும் ஆயிஷாவை விட்டு அகலவில்லை .
இருவரும் இரண்டு நாட்கள் தங்கி இருந்து
வாடகைப் பாத்திரத்தில் மீன் சமைத்து சாப்பிட்டு பின்பே சென்னை திரும்பியிருந்தனர் .
ஸ்டெல்லா
குளித்து நீர் புள்ளிகள் உதிரும்
ஈரத்தலையுடன் ஃபேனுக்குக் கீழ்
நின்று தலையைத் துவட்டிக் கொண்டிருந்தாள். நெஞ்சுவரை பாவாடை கட்டியிருந்தாள் . தனது கூந்தலை சடீர் என்று துண்டால் வெட்டுவது
போல இரண்டு கையால் உதறும்போது தெறித்த நீர்த்திவலைகள் கணநேர நிறமிகள் அறையெங்கும்
நிரம்பி மறைந்தன. தொடையிலிருந்து
தரைக்குத் திரும்பும் வனத்தின் மனம் சுமந்த நீர்த்துளிகள் ஸ்டெல்லாவின்
பாதத்திலிருந்து வழிந்து குழந்தையின் கிறுக்கல்களை ஒத்த இன்னமும் வரையப்படாத கோட்டோவிமாக
உருவாக்கியிருந்தது . ஆயிஷா ஒரு தட்டில் சுடச்சுட நான்கு இட்டிலிகளைத் தேங்காய்
சட்டினியில் மிதக்க வைத்தபடியே கட்டிலில் அமர்ந்தாள். மனதின் அடியாழத்தில் தொக்கி
நிற்கும் கேள்வியானது ஆயிஷாவின் நினைவுகளுக்குள் கண் விழித்தது. உதிர்ந்த ஒற்றை
மயிற்பீலி போலக் காற்றில் ஒயிலாக மிதக்கும் இந்த ஸ்டெல்லாக்கா யார் ?
என்
மீது ஏன் இவ்வளவு கரிசனம் ? என்
மடியில் அவ்வப்போது ஒரு குழந்தையாய் படுக்கும் ஸ்டெல்லாக்கா ஒரு புதிர் தான் என்று
யோசித்துக் கொண்டிருக்கும் போது வீட்டிற்கு எதிர்புறம் சற்றுத் தொலைவில் கருவேலங்காட்டிற்குப் பின்புறம் புதிதாக
முளைத்திருந்த குழாய் ஸ்பீக்கர் திடீரென்று கத்தத் தொடங்கியது. “மாருகோ
மாருகோ மாருகையி “என்ற பாடல் யாருடைய
விருப்பத்தின் பேரிலேயோ ஒலிக்க ஆரம்பித்தது. "ஏதோ திருமண விசேஷம் போல .
கல்யாண வீட்டு சொந்தக்காரர் கமல் ரசிகராக இருக்க வேண்டும்" என்று ஆயிஷா
தனக்குள் எண்ணிக் கொண்டாள்.
ஸ்டெல்லா
கருப்புநிற டாப்ஸ் அணிந்து கொண்டு கண்ணாடியில் ஒட்டியிருந்த ஸ்டிக்கர் பொட்டை
எடுத்து இரு புருவங்களுக்கும் இடையே ஒட்டி அழுத்தும் போது உதடுகளில் முணு முணுத்துக் கொண்டிருந்த அந்தப்
பாடலை அவளது உடலுக்குள் தள்ளிவிட்டது போல இருந்தது . சம்பா சம்பா அடி ரம்பா ரம்பா எனும்
வரிகளின் இசை அதிர்வுகள் ஸ்டெல்லாவின்
நரம்புகளுக்குள் இடம்பெயர்ந்து அடவுகளாக வெளியே தெறித்தன. இறுக்கமான மேலாடை
ஸ்டெல்லாவின் அங்க வடிவை மிகையாகக் காட்டியது . சற்றே கீழிறங்கிய கழுத்தை உடைய
சுடிதாரின் மேற்பகுதியில் துள்ளி அடங்கும் மார்புகளின் கணம் தாளாமல் லேசாக அசைந்து
கொடுக்கும் தாளலயம் முன்னைக் காட்டிலும் ஸ்டெல்லாவை இப்பொழுது கூடுதல் அழகோடு
காட்டியது. கெண்டைக்கால்களில் மிச்சமிருக்கும் ஈரத்தத்தில் ஆயிஷாவின் பிம்பம் தாங்கிய நீர்த்துளி கிரகணப்
புள்ளியின் ஒளிக் குவியலாய் மின்னியது . இப்பொழுது
நடன அடவுகளில் வேகம் கூடியது. மேகத்திலிருந்து வளைந்து சுழன்றடித்தபடியே தலைகீழாய் கீழிறங்கும் கறுப்பு
நீர் தழல் அருவி போல அவிழ்த்து விடப்பட்ட கூந்தலுடன் ஸ்டெல்லா ஆடிக்
கொண்டிருந்தாள். பெரிய சைஸ் நீர்க்குமிழி போல டாப்ஸை மீறி திமிறி குதித்து உடையும்
புட்டங்களும் , தப் தப் எனத் தரைக்கு முத்தம்
கொடுக்கும் லயத்துடன் துள்ளிக் குதிக்கும் கால்களும் , அந்த
அறை ஜன்னலின் வழியே கீழிறங்கும் சூரியனின் ஒளிக் கோடுகளும் ஒன்றாய் சேர்ந்து
ஸ்டெல்லாவைத் தேவதையாக்கியிருந்தது . கைவீசிச் சுழன்று ஆடும் போது ஸ்டெல்லா நகரும்
ஓவியமாகவே இருந்தாள். ஆயிஷா வைத்த கண் வாங்காமல் ஸ்டெல்லாவைப் பார்த்துக்
கொண்டிருந்தாள்.
"இந்த
வயசுலயும் இப்படி டான்ஸ் ஆடுறாங்க. யார் தான் இந்த ஸ்டெல்லாக்கா என்ற கேள்வி
முன்பைக் காட்டிலும் அதிகமாக ஆயிஷாவைக்
குடைந்தெடுத்தது .
ஸ்டெல்லா
சுடிதாரில் கல்லூரி மாணவியைப் போல இருந்தாள். வயதின் மூப்பு தெரியாத உடல்வாகு
ஸ்டெல்லாவிற்கு. ஆயிஷா, ஸ்டெல்லா
இருவரையும் ஒன்றாகப் பார்ப்பவர்கள் நிச்சயமாக அக்கா தங்கை என்றே சொல்லுவார்கள்.
பெரியமேடுவுக்குச்
செல்ல வேண்டும் என்று சொன்னதிலிருந்து ஸ்டெல்லாவின் முகத்தில் ஏதோ ஒரு கலை
கூடியிருப்பதை ஆயிஷா கவனித்தாள். இப்படிச் சிரித்த முகத்துடன் ஸ்டெல்லாக்கா
இருந்து பார்த்ததில்லை. ரகசியங்களைத் தூக்கிச் சுமக்கும் நத்தைக் கூடாகவே
ஸ்டெல்லாக்கா இருப்பதாக ஆயிஷாவிற்குப் பட்டது. பெருவாரியான நேரங்களில் ஆயிஷாவைக்
குறித்துதான் ஸ்டெல்லா பேசிக்
கொண்டிருப்பாள். ஸ்டெல்லாவைப் பற்றிய கேள்விகள் வரும் போது சின்னப்
புன்னகையில் அதைக் கடந்து விடுவாள். ஆனால் இன்று ஸ்டெல்லா இவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பது
ஆயிஷாவுக்குப் புதிராகவே இருந்தது.
இப்பொழுது
பக்கத்துத் தெருவில் "நூறு வருஷம் இந்த மாப்பிளையும் பொண்ணும் தான் " என்ற
பாடல் ஒலிக்கத் தொடங்க இருவரும் வீட்டிலிருந்து புறப்பட்டனர்.
1
சரியாகப் பத்து மணிக்கு இருவரும் ஈ வே ரா
பெரியார் சாலையில் உள்ள பழமையான கட்டிடத்தின் முன்பு ஆட்டோவில் வந்து இறங்கினர் .
சாலையில் சற்றே குறைவான நெரிசலிருந்தாலும் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று நெருக்கமாக
மெல்ல அவர்களைக் கடந்து நகர்ந்து கொண்டிருந்தன. சாலையை ஒட்டி இருக்கும் அரசு
கவின்கலைக் கல்லூரி என்று பெயர் பொறிக்கப்பட்டிருந்த அந்தப் பழமையான சிகப்பு நிற
கட்டிடம் அவர்களைச் சென்னை நகரப் பேரிரைச்சலில் இருந்து அமைதிக்குள் வரவேற்றது.
கல்லூரிக்குள் ஸ்டெல்லாக்காவிற்கு என்ன வேலை ? ஒருவேளை இங்கு யாரையேனும் பார்க்க வந்திருக்கலாம் என்று ஆயிஷா யோசித்தபடி
ஸ்டெல்லாவின் பின்னால் ஒரு நிழலைப்போல நடக்க ஆரம்பித்தாள். அது ஓவியக்கல்லூரி என்பதை
சில நிமிடங்களில் கண்டுகொண்டாள். கல்லூரிக்குள் கூட்டம் அதிகமில்லை. அங்கிருக்கும்
மரங்கள் செடி கொடிகளை விட ஆட்கள் குறைவாகத்தான் தென்பட்டனர்.
ஆயிஷா தன் வாழ்நாளில் முதன் முறையாக
அப்பொழுதுதான் ஓவியக் கல்லூரிக்குள் வருகின்றாள். ஸ்டெல்லாவின் வேகமான நடை அந்த இடத்திற்கு
முன்பே பழக்கப்பட்டிருந்தாள் என்பதைக் காட்டியது. சுற்றி இருந்த சிலைகளை அவள்
கவனித்ததாகத் தெரியவில்லை. ஆயிஷா தன் நடையில் ஒருவித நிதானத்தைக் கடைபிடித்தாள்.
சிறுவயதில் ஓவியம் வரைந்ததற்காகத் தன் தாத்தா ஐயூப்கானிடம் வாங்கிய அடி நினைவில்
வந்த போது இலைகள் சூழ்ந்த மேற்கூரையிலிருந்து விடைபெற்று பூமிக்குத் திரும்பும்
பெயர் தெரியாத விதைக் கொட்டையானது ஆயிஷாவை தட்டி நிகழ்காலத்திற்குத் திரும்ப
அழைத்து வந்தது.
படபடப்பு அடங்கிப்போய்க் கேள்விகளற்ற
ஆச்சர்யத்தின் நொடிகளில் ஆயிஷா சிக்கியிருந்தாள். மரங்கள் சூழ்ந்த அந்த நிழல்
காட்டிற்குள் பழமை மாறாத வெள்ளை நிற , சிகப்பு நிற கட்டிடங்கள் தள்ளித் தள்ளி இருந்தன. நடைபாதையின் இரண்டு
பக்கமும் இருந்த சிற்பங்கள் ஆயிஷாவின் கவனத்தைத் தன் பக்கத்திற்கு இழுத்து மெதுவாக
நடைபோட வைத்தது. இப்பொழுது ஸ்டெல்லா வெள்ளை கட்டிடத்திற்குள் சென்று யாரிடமோ
பேசிக் கொண்டு இருந்தாள் . ஆயிஷா மிச்சமுள்ள இடத்தைச் சுற்றிலும் வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்தாள்.
அங்கங்கே நிற்கும் சிலைகளைப் பார்ப்பதற்கு
மாணவர்கள் ஒன்றாகவோ, தனியாகவோ கலையாகிப் போன தருணத்திலேயே
நின்றிருப்பது போல இருந்தது. தனக்கு எதிரே உள்ள வயதான வேப்ப மரத்தில் கட்டி
தொங்கவிடப்பட்டிருந்த பெரிய கோயில் மணி , தூங்கு மூஞ்சி மரத்தின் கீழ் இருக்கும் சுடுமண் சிற்பங்கள், பார்த்ததும் புரிந்து கொள்ள முடியாத வித்யாசமான கற்சிற்பங்கள், தரையெங்கும் கொட்டிக் கிடக்கும் கோங்க மரத்தின் மஞ்சள் நிற பூ குளியல்
போடும் பெண் , அங்கங்கே நின்றும் சாய்ந்தும் கிடைக்கும்
சிற்பங்கள், மூங்கில் மரத்தின் கீழ் நெளிக்கோலம் போடப்பட்ட
கல் இருக்கை என நின்று ரசிக்க வைக்கும் இடமாக அந்த வளாகம் இருந்ததை ஆயிஷா
நிதானமாகப் பார்வையில் பதிய வைத்துக் கொண்டிருந்தாள். வாழ்வில் ரசிக்கத் தவறிய நொடிகளின்
குவியலாக அந்த வளாகமிருந்ததை ஆயிஷா மனதிற்குள் எண்ணி புழுங்கிக் கொண்டிருந்தாள்.
இந்தச் சமூகம் கற்பித்த பெண் குறித்தான சுமை அடுக்குகளில் சிக்கி நசுங்கிப் போய்
லயித்தல் என்ற ஒன்றை எப்பொழு இழந்து போனோம் என்ற கேள்வி ஆயிஷாவிற்குள் எழுந்தது.
இறுதியாக அனைத்தையும் கடந்து வெளிப் பூச்சுப்
பூசாத செங்கல்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பது போலப் பிரம்மாண்டமாய்
நின்றிருக்கும் அந்த மூன்று மாடி கட்டிடத்தின் முன் ஆயிஷா குழந்தையாகவே மாறி
நின்று கொண்டிருந்தாள். ஆங்காங்கு தென்படும் மாணவர்களை ஆயிஷா ஏக்கத்துடன் பார்த்துக்
கொண்டிருந்த போது தனது தாத்தாவின் மீது கோபம் பெருக்கெடுத்தது.
அந்தச் சிகப்பு நிற கட்டிடத்தின் உள்ளேயிருந்து
ஸ்டெல்லாவைப் பார்த்துச் சிரித்தபடியே நாற்பத்தி அஞ்சு வயசு மதிக்கத்தக்க ஒருத்தர்
வந்தார். இளமையான தோற்றமாக இருந்தாலும் தாடி நரைத்திருந்தது. ஒல்லியான உடல்வாகு.
வெள்ளையில் கருப்பு நிற கோடுகள் போட்ட குர்தா அணிந்திருந்தார். அது அவரது கால்
முட்டிக்கு வந்திருந்தது. மிச்சமுள்ள இடத்தில் நீலநிற காட்டன் பேண்ட்
ஆக்கிரமித்திருந்தது .
“வாங்க ஸ்டெல்லா " என்றார் சிரித்த முகத்துடன் .
" நடராஜன் சார் ....நல்லா இருக்கீங்களா.. ?
"நல்லா இருக்கேன்... நீங்க ?” என்று சிரித்துக் கொண்டே ஆயிஷாவைப் பார்த்தார்.
"நா சொன்னேன்ல சார். ஆயிஷா. சேலத்துக்கார
பொண்ணு. இப்ப ஸ்டெல்லா பொண்ணு “ என்று
சொல்லும் வார்த்தையில் ஆயிஷாவின் மீதான கரிசனம் கூடியிருந்தது .
“ஹா ஹா ஹா ...” என்று வாய்விட்டு சிரித்தார் நடராஜன்.
"வணக்கம் சார் " என்று சொல்லி
புன்னகைத்து விட்டு இதுவரை மறந்திருந்த படபடப்பை தன்னுடலில் மீண்டும்
ஏற்றிக்கொண்டு இருவரையும் மாறி மாறி பார்த்தாள். மூவரும் பேசிக்கொண்டே அந்தக்
கட்டிடத்தின் அகன்ற வாயிக்குள் செல்லத் தொடங்கினர் .
“ஆயிஷாவுக்கு டீ யா? காப்பியா ? என்று நடராஜன் கேட்டார் .
“இல்ல வேணாம் சார்"
“நாங்க ரெண்டு பேரும் மசாலா டீ பைத்தியம். இன்னைக்கு ஸ்டெல்லா வருவாங்கன்னு
ஸ்பெஷலா கொண்டு வந்துருக்கேன் . பிளாஸ்க்ல நிறைய டீ இருக்கு. நீ டீ குடிப்பல்ல ?
“பரவால்ல சார்”.
“அட நம்ம சார் டா” என்று ஸ்டெல்லா
ஆயிஷாவையும் தனது நட்பு வட்டாரத்திற்குள் இணைத்துக் கொண்டாள் .
நடராஜன் அவர்கள் இருவரையும் தனது அலுவலக
அறைக்குக் கூட்டிச் சென்றார். அவருடைய அறை முதல் தளத்தில் இருந்தது. முதல்
தளத்திற்குச் செல்லும் வழியில் ஒரு பெரிய ஹாலில் மாணவர்கள் வரைவதற்குத் தேவையான
ஓவிய ஸ்டெண்டுகள் வரிசையாக இருந்ததை ஆயிஷா ஏக்கத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டே
நடந்து வந்தாள்.
சற்றே பெரிய அறையில் ஜன்னலுக்குப் பக்கத்தில்
ஓவியர் நடராஜனின் டேபிளும் அமர்வதற்கான பிளாஸ்டிக் வயர்களால் பின்னப்பட்ட மர
நாற்காலியும் இருந்தது. டேபிளுக்கு எதிரே யாரேனும் வந்தால் அமர்வதற்காக இரண்டு
நாற்காலிகள் போட பட்டிருந்தன. அதில் ஸ்டெல்லாவையும் ஆயிஷாவையும் அமரச்
சொல்லிவிட்டு நடராஜன் தனது செல்பில் இருந்த பிளாஸ்கை எடுத்தார்.
ஆயிஷா அந்த அறையைச் சுற்றிலும் நோட்டமிட்டாள் .
டேபிளில் நவீன ஓவியம் குறித்த ஆங்கிலப் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
பக்கத்தில் ஒரு கண்ணாடி அலமாரியில் எண்ணெற்ற புத்தகங்கள் குவிந்திருந்தன. நிஜமா
இவரு இத்தனை புக்கையும் ஒன்னுவிடாமா முழுசா படிச்சிருப்பாரா ? என்று ஆயிஷா தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டாள்.
நடராஜன் இரண்டு பீங்கான் கப்களில் தேனீரை ஊற்றிக்
கொண்டு வந்து இருவரிடமும் கொடுத்தார் .
“உங்களுக்கு? என்று ஸ்டெல்லா நடராஜனைக் கேட்டாள் .
"இல்ல கொஞ்ச நேரம் போகட்டும். கிளாஸ் முடிச்சுட்டு
குடிக்கறேன். இது உனக்காகக் கொண்டு வந்தது " எனும் வார்த்தையில் மென்மை
குடியிருந்தது . பத்து பத்தரைக்கு ஆரம்பிச்சுரலாம் . ஒரு மணி நேரம் தான் என்று
சொல்லிவிட்டு
"சரி நீங்க டீ குடிச்சுட்டு இங்கயே இருங்க. நா சொல்லி
அனுப்பறேன். அப்புறம் வாங்க " என்று சொல்லிவிட்டு அந்த அறையில் இருந்து
நடராஜன் வெளியேறினார்.
ஸ்டெல்லாவுக்கு மசாலா டீயின் சுவை நாவைக்கடந்து
குடலில் தித்திப்பாக இறங்கிக் கொண்டிருந்தது.
“நாம எதுக்கு இங்க வந்துருக்கோம்னு சொல்லுங்கக்கா “ என்று குழந்தை போலக் கெஞ்சும் தொனியில் ஆயிஷா கேட்டாள் .
ஸ்டெல்லா முழுவதுமாக டீயைக் குடித்து விட்டு
பீங்கான் கப்பை டேபிளில் வைத்து நெடிய உரைக்கு ஒப்பான புன்னகையை அப்போதைக்கு
உதிர்த்து விட்டு நாற்காலியில் முழுவதுமாக அமர்ந்து பின்னால் சாய்ந்து பெருமூச்சு
விட்டாள் .
எல்லாத்துக்கும் சிரிப்பா ?'
இருவருக்குள்ளும் அமைதியே பெருக்கெடுத்து
ஓடியது . கால் மணிநேரம் கழித்து ஒரு மாணவி வந்தாள் . அக்கா...சார் கூப்பிடுறார் என்று ஸ்டெல்லாவை
அழைக்க இருவரும் அந்த மாணவியின் பின்னால் சென்றனர். படியிலிருந்து இறங்கும் போதே
நடராஜனின் குரல் மூவருக்கும் கேட்டது .
ஒக்குசாயோட “ தி ட்ரீம் ஆ பிஷெர்மேன் வைப் ” டிராயிங், எகான் ஷியலோட “ தி ரெடிக்கல் நியூட் ” ஆர்ட் பத்தி …. ” என்று மாணவர்களைப் பார்த்துக் கேட்கத் தொடங்கும் போது
ஸ்டெல்லாவும் ஆயிஷாவும் அந்த அறைக்குள் நுழைந்தனர்.
அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில்
திரும்பி தன்னைப் பார்த்தது ஆயிஷாவுக்கு என்னவோ செய்தது .
“இவங்கதான் ஸ்டெல்லா. இன்னைக்கு நம்ம கிளாஸ் மாடலா வந்திருக்காங்க . இவங்க
ஆயிஷா . கூட வந்துருக்காங்க “ என்றார்
நடராஜன் .
அங்கிருந்த மாணவர்களின் முகத்தில் புன்னகையும்
ஒருவித எதிர்பார்ப்பும் கூடியது. மாணவிகள் பெரியதாக எந்தவித உணர்வையும்
வெளிக்காட்டாமல் இயல்பாக இருந்தனர்.
ஆயிஷாவுக்கு ஒன்றும் புரியவில்லை . சிலருடைய
நேச பார்வைகள் மட்டும் அவள் மீது பட்டு சிறு புன்னகையை உதிர்த்துவிட்டு நகர்ந்தன.
அந்தப் புன்னகையை ஒருவித அச்சத்துடனேயே ஆயிஷா எதிர்கொண்டாள். பதிலுக்குப்
புன்னகையைப் படரவிடும் மரியாதையை புதிய சூழலின் அம்சமானது முழுமையாக
ஆக்கிரமித்திருந்தது. ஒரு சில மாணவர்கள் ஸ்டெல்லாவை ஒருவித குறுகுறுப்புடன்
பார்த்தபடி தங்களுக்குள் மகிழ்ந்திருந்தனர். அவர்களது கண்களில் அடுத்து நடக்கப்
போகும் நிகழ்வு குறித்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆயிஷாவுக்கு முன்பை விட இப்பொழுது
படபடப்பு அதிகமானது. என்னதான் நடக்கின்றது என்பதை யூகிக்க முடியவில்லை. ஒரு
ஓரத்தில் இருந்து நடக்கப் போவதை இனி வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடியும்
என்பது புரிந்திருந்தது. அந்த அறையின் மூலையில் இருந்த திட்டில் அனைவரது
ஓவியத்தையும் பார்க்கும் விதமாக ஆயிஷா அமர்ந்து கொண்டாள்.
அந்த
அறை கதவுகள் சாத்தப்பட்டு ஸ்டெல்லாவின் மீது குறிப்பிட்ட கோணத்தில் செயற்கை ஒளி
விழும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஸ்டெல்லாவுக்குப் பின்னால் ஒரு கருப்பு
நிற திரைச்சீலை சுவற்றோடு சேர்த்துக் கட்டப்பட்டிருந்தது . ஸ்டெல்லா அருகில்
இருந்த மறைவுக்குச் சென்று தனது உடைகளைக் கழட்டிப் போட்டு விட்டு அங்கிருந்த ஒரு
டவலை தன் நெஞ்சோடு சுற்றி வலது கையால் இறுக்கி பிடித்தபடி மாணவர்கள் முன்பு
நின்றாள். நடராஜன் ஸ்டெல்லாவை எப்படி நிற்க வேண்டும் என்பதை அருகில் சென்று சொல்லி
நிற்கவைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
பேரமைதி.
ஆயிஷாவுக்கு ரத்த நாளங்களில் தறிகெட்டு ஓடும் உதிரத்தின் துடிப்புக் காதுகளில்
கேட்க ஆரம்பித்தது. ஸ்டெல்லா பிடித்திருந்த டவலானது இப்பொழுது பாதத்தைச் சுற்றிப்
படர்ந்திருக்கும் அரவு போலச் சுருண்டு கிடந்தது.
இயற்கை தனக்கு அளித்த பரிசை ஒளிவு மறைவின்றி மாணவர்களுக்குக் காட்டத்
தொடங்கினாள். ஆயிஷா ஒரு கணம் உறைந்து போனாள். தனது தாய்க்குப் பின் முதன் முதலாக ஒரு
பெண்ணின் நிர்வாணத்தை அதுவும் இத்தனை பேர் மத்தியில் பார்க்கின்றாள். அந்த
அதிர்ச்சியிலிருந்து ஆயிஷா மீள நீண்ட நேரம் பிடித்தது. ஆனால் ஸ்டெல்லாவின்
முகத்தில் எந்த விதமான சலனமோ, கூச்சமோ
ஏதுமில்லை. யாரும் அறிந்திராத
வனத்திற்குள் பூத்திருக்கும் பெயர் தெரியாத மலர் போல அந்த அறையில் ஸ்டெல்லா
பொன்னிறமாக ஒளிர்ந்து கொண்டிருந்தாள்.
நடராஜன்
தனக்குத் தோதான ஒரு பக்கத்தில் அமர்ந்து ஸ்டெல்லாவை வரையத் தொடங்கினர். நிசப்தமான
அந்த அறையில் வெற்றுத் தாளின் மீது உரசும் பென்சில் முனைகளின் ஒலியைத் தவிர வேறு
எந்த ஒலியும் எழவில்லை . ஆளுயரத்திற்கு நின்றிருந்த ஓவியப் பலகையில் கிளிப்பில்
தொங்கிக் கொண்டிருந்த வெள்ளைத்தாளில்
குறுக்கும் நெடுக்குமாக விரையும் கறுப்பு
கோடுகள் ஒலியை எழுப்பிக் கொண்டே
ஸ்டெல்லாவை பிரசவிக்க ஆரம்பித்தன. நேரம் செல்லச் செல்ல ஸ்டெல்லாவின் உடல் பாகங்கள்
வெவ்வேறு தாள்களில் வெவ்வேறு வடிவங்களில் உயிர் பெற்றத் தொடங்கின . நீள்சதுர
வெள்ளைக் கருப்பையில் வெவ்வேறு ஸ்டெல்லாக்கள் முடிவே இல்லாமல் புதிது புதிதாய்
உறுப்புகள் பெற்றபடி உருவாகிக் கொண்டிருந்தாள். மரச்சட்டகக் கிளிப்பில்
பொருத்தப்பட்டிருந்த வரிகள் ஓடிய தாள் கருவறையில் கண் திறக்காத ,
இன்னும்
பிறக்காத குழந்தை போல ஸ்டெல்லா இருப்பதாக ஆயிஷாவுக்குத் தோன்றியது. நடராஜன்
ஏறக்குறைய ஸ்டெல்லாவின் பிரதி நிழல் போலத் தனது கருப்பு வெள்ளை கோட்டோவியத்தை
வரைந்து முடித்திருந்தார். சில மாணவர்கள் ஸ்டெல்லாவின் வரிகள் ஓடிய மார்பையும்,
மடிப்பு
விழுந்த வயிற்றையும், பிட்டத்தையும்
தத்ரூபமாக வரைந்து கொண்டிருந்தனர். ஆயிஷாவுக்கு எதிரே இருக்கும் மாணவி ஒருத்தி
ஸ்டெல்லாவின் வலது தொடைக்கு மேலே மயிர்கள் சூழ்ந்த யோனிக்கு அருகில் இருக்கும்
சிகரெட் தழும்பை வரைந்து கொண்டிருந்தாள். வரைந்து முடித்தும் சில மாணவர்கள்
ஸ்டெல்லாவின் காலைத் தொட்டு கும்பிட்டு நன்றி தெரிவித்ததை ஆயிஷா அதிர்ச்சியுடனும்
ஒருவித புரிந்த குழப்பத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஸ்டெல்லாக்கா
எப்படி இந்த வேலைக்கு வந்தாங்க? இப்படி
ஒரு வேளை இருக்கா ? என்று நினைக்கும் போதே
ஆயிஷாவுக்கு உடம்பெல்லாம் கூசியது. இருட்டைக் கீறி விட்டது போலக் கண்கள் மட்டும்
தெரியும் படுதாவை ஒருகணம் நினைத்துப் பார்த்தாள். பனிரெண்டாம் வகுப்புப்
படிக்கும்போது முட்டி வரை மறைக்கும் இளஞ்சிவப்பு நிற மிடி போட்டதற்காக வாப்பாவிடம்
வாங்கிய திட்டும் பின்பு அவர் அந்தத் மிடியைப் பாத்திரக்காரனுக்குப் போட்டு
பிளாஸ்டிக் பக்கெட் வாங்கியதும் மனதில் வந்து போனது. உடையில் எந்தப் பகுதி ஆபாசமானது? ஆபாசம் ஏன் உடையிலிருக்கும்
உடலை வரையறுக்கிறது? எண்ணங்களின் வழியே
நிர்வாணத்தைப் பார்க்கும் கண்களுக்கு ஏது உடை? என்ற
கேள்விகள் ஆயிஷாவுக்குள் எழத்தொடங்கின. ஒருகணம் ஆயிஷாவுக்கு அந்த அறையிலிருந்த
அனைவரும் நிர்வாணமாய் நடமாடத் தொடங்கினர். அந்த அறையில் எங்கோ ஒரு மூலையில் ராமகிருஷ்ணன்
நின்று தன்னையே பார்ப்பதாக பட்டது .
சட்டென்று அவளையும் அறியாமல் கைகள் அவளது மார்புகளை நோக்கி நகர்ந்தது. தாள்களில்
நிர்வாணம் கலையாக மாறிய நொடியில்
ஏதேன் தோட்டத்தில் அலைந்து கொண்டிருந்த
ஆதி பாம்பு அங்கிருந்து வெளியேறியது. ஆயிஷாவிடமிருந்தும்
கூட .
நடராஜன் அன்றைய வகுப்பிற்கான தொகை சேர்த்து கூடுதலாக
ஐநூறு ரூபாய் கொடுத்தார். ஸ்டெல்லா
நடராஜனுடன் பார்வையில் எதையோ பரிமாறிக் கொண்டே உதட்டளவில் வேறு ஏதோ பேசிக்
கொண்டிருந்தனர். பேசிக்கொள்ளும் விஷயங்களை விடப் பேசிக் கொள்ளாத விஷயங்களின் ரகசிய
சம்பாஷணைகளின் மெளனப் புன்னகைகள் அவ்வப்போது இருவரது கண்களிலும் வெளிப்பட்டுக்
கொண்டிருந்தது. ஆயிஷா அனைத்தையும் கவனித்தவாறே ஸ்டெல்லாவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
மதிய வெய்யிலின் தணல் மழை பெய்யத் தொடங்கியிருந்த தருணத்தில் ஆயிஷாவுக்கு ஸ்டெல்லா
புதிதாகத் தெரிந்தாள்.
பாட்சா தியேட்டருக்குப் பக்கத்திலிருந்த முனியாண்டி விலாஸில் கோழி வருவலுடன் தங்களது
மத்திய உணவை முடித்துக் கொண்டு அப்படியே அந்த வருட பொங்கலுக்கு ரிலீஸாகியிருந்த
புலன் விசாரணை படத்திற்குச் செல்ல இருவரும் முடிவெடுத்தனர் . தியேட்டரில் கூட்டம் அதிகமாகவே இருந்தது. பத்து ரூபாய் டிக்கெட்டை இருபது
ரூபாய்க்குப் பிளாக்கில் வாங்கிக் கொண்டு இருவரும் தியேட்டருக்குள் சென்றனர்.
ஸ்டெல்லாவிற்கு விஜயகாந்த் என்றால் கொஞ்சம் பிரியம் அதிகம் என்பதைப் படம் பார்க்கும்
போது ஆயிஷா கண்டு கொண்டாள். படம் முடிந்ததும் மாலை மெரீனா கடற்கரைக்குச் சென்று நெடுநேரம்
கடற்கரையில் அலைகளுக்கிடையே
நட்சத்திரங்களைக் களவாடும் சிறுமியைப்
போல நுரைகளுக்கு அடியே மறைந்து ஒதுங்கும் சிப்பிகளில் நத்தையற்ற வரிகள் ஓடிய சங்கை எடுத்து ஸ்டெல்லா
காதில் வைத்து தனக்குத்தானே சிரித்துக் கொண்டிருந்தாள் .
வீடு திரும்பும் போது இரவு ஏழு மணிக்கு மேல்
ஆகிவிட்டது. நாள் முழுக்க வெளியே வெய்யிலில் அலைந்தால் இருவரது உடலிலும் உப்பு
பூத்து அவர்கள் அணிந்திருந்த உடையில் மெல்லிய கோடுகளாகப் படர்ந்திருந்தது.
ஸ்டெல்லா முகத்தைக் கழுவி துண்டில் துடைத்துக் கொண்டே இரு வந்தறேன் என்று சொல்லிவிட்டு வெளியே கிளம்பினாள். ஆயிஷா
குளிக்கச் சென்றாள் .
ஆயிஷா கண்விழிக்கும் போது இரவு மணி பத்தைக்
கடந்திருந்தது. ஸ்டெல்லா இப்பொழுது குளித்து முடித்து நைட்டிக்கு மாறியிருந்தாள்.
ஆயிஷா எழுந்து முகத்தைக் கழுவிவிட்டு ஸ்டெல்லாவுக்குப் பக்கமாகக் கட்டிலில்
அமர்ந்தாள். அந்தக் கட்டிலெங்கும் லக்ஸ் சோப்பின் மணம் கசிந்து கொண்டிருந்தது.
"எழுப்பிருக்கலாம்ல கா "
"நீ நல்லா தூங்கிட்டு இருந்த . அதா
எழுப்பல . நைட்டுக்கு பார்சல் வாங்கிட்டு வந்துட்டேன் . சாப்பிடலாமா " என்று
கேட்டாள் .
நீங்க இன்னும் சாப்பாடலியா க்கா ?
இல்ல .
ரொம்ப நேரம் தூங்கிட்டேன் .
பரவால்ல . வா .
“ம்ம்” என்ற மெல்லிய குரலில் ஆயிஷா தலையாட்ட ஸ்டெல்லா
வாங்கி வைத்திருந்த பார்சலை ஆயிஷாவிடம் கொடுத்து விட்டு வீட்டிலிருந்து வெளியே
வந்து ஒரு ஓரமாகப் போடப்பட்டிருந்த மூங்கில் ஏணியை எடுத்து அவளது அறையின் சிமிண்ட்
கூரையில் சாய்த்து நிறுத்தினாள். இன்னிக்கு நாம மேல மொட்டை மாடியில உக்காந்து
சாப்பிடப் போறோம் " என்றாள்.
அந்தத் தெரு இரவு ஒன்பது மணிக்கே உறங்கத்
தொடங்கி விடும். வெகு தூரத்தில் சோடியம் விளக்கு கம்பத்தின் கீழ் ஒரு நாய் மட்டும்
படுத்திருந்தது. அவ்வப்போது எங்கோ இருட்டில் குலைக்கும் நாய்க்குப் பதில் சொல்லி
ஊளையிட்டுக் கொண்டிருந்தது.
அது கைப்பிடி சுவர் இல்லாத மொட்டைமாடியில் போதுமான நிலா வெளிச்சம் இருந்தது . தண்ணீர் தொட்டி கட்டும் போது கொஞ்சம் இடம்
விட்டு மேல் தளத்தைக் கட்டியிருந்ததால் கொஞ்சம் தாராளமாகவே இடமிருந்தது.
தொட்டிக்கு அருகில் பாயை விரித்துத் தொட்டி சுவரில் சாய்ந்த படி இருவரும்
அமர்ந்தனர். தொட்டியின் குளிர் அவர்களது முதுகில் படர்ந்து தன்னிருப்பைக்
காட்டியது .
ஸ்டெல்லா தான் வாங்கி வந்திருந்த ஓல்டு மன்க்
கோட்டர் பாட்டிலை ஆயிஷாவுக்கு முன்னால் வைத்தாள்.
"அக்கா என்ன இது? இதல்லா சாப்புடுவீங்களா? என்று ஆயிஷா
அதிர்ச்சியாகக் கேட்டாள் .
ரொம்ப நாளுக்கு அப்புறம் மனசு கொஞ்சம் சந்தோசமா
இருக்கு அதான்.
ஆயிஷா தனக்குள் திரும்பத் திரும்பக்
கற்பிக்கப்பட்டிருந்த பெண் குறித்த பொதுப் புத்தியை மனதிற்குலேயே அடக்கிக்
கொண்டாள். காலையில் ஆடிய நடனம், நடராஜன் சார்
முன்பு வகுப்பில் நிர்வாணமாக நின்றது இப்ப
இது என ஸ்டெல்லா புதிரின் மொத்த உருவமாக ஆயிஷாவுக்குத் தெரிந்தாள்.
பிளாஸ்டிக் கவரில் இருந்த பொட்டலங்களை
ஒவ்வொன்றாகப் பிரித்து “ இது… எங்க ஊரு ஸ்பெஷல் சாப்பிடு ” என்று சொல்லி
விட்டு தான் வாங்கி வந்திருந்த பார்சல்களைப் பிரித்து அடுக்கினாள் . பட்டையான
பெரிய சைஸ் சேமியா போல இருந்த அதை அப்பொழுதுதான் முதல் முதலாக ஆயிஷா காண்கிறாள். இது நங்கியி தொக்கே . சாப்டு பாரு என்று சொல்லி பார்சலை
பிரித்துக் கொடுத்து விட்டுத் தனக்குப் பரோட்டாவை இரண்டு கையால் சிறு சிறு
துண்டுகளாக்கி அதன் மீது சால்னா ஊற்றினாள். ஊற்றிய சால்னா இலையைத் தாண்டி தரையில்
படர்ந்தது.
அப்ப நீங்க இந்த ஊரு இல்லையா? என்று அதிர்ச்சியில் ஸ்டெல்லாவைப் பார்த்து ஆயிஷா கேட்டாள். ஸ்டெல்லா சிரித்துக்
கொண்டே சில்வர் டம்ளரில் கொஞ்சம் தண்ணீர்
விட்டுக் கழுவி வீட்டிற்குப் புறமாக ஊற்றிவிட்டு நிதானமாக ஒரு குழந்தையை அள்ளி
எடுக்கும் தொனியில் பாட்டிலை எடுத்துத் திறந்து
பூச்செண்டை நுகர்வது போல பாட்டிலின் வாயில் நாசியை வைத்து ஒரு கணம் கண்கள்
மூடி ரம்மை நெஞ்சில் நிறைத்தாள். அந்த நாளை
முழுமையாக வாழ்ந்து முடித்த நிறைவு ஸ்டெல்லாவின் முகத்திலிருந்து. ஆயிஷாவுக்குக் காற்றில் இப்பொழுது ரம்மின் நெடி
அடித்தது. ஸ்டெல்லா டம்ளரில் ரம்மை கொஞ்சமாக ஊற்றி நிறையத் தண்ணீரைக் கலந்து
ஆயிஷாவைப் பார்த்து சியர்ஸ் சொல்லி சுவைக்க ஆரம்பித்தாள். ஸ்டெல்லாவின் செயல்கள் அனைத்தும் ஒரு சடங்கைப் போல ஒழுக்கத்துடன் இருந்தது.
உருளைக்கிழங்கு சிப்ஸை நொறுக்கி பரோட்டாவில்
போட்டு சாப்பிடும் ஸ்டெல்லாவை ஆயிஷா ஒருகணம் திகைப்பாகப் பார்த்தபடி சாப்பிடத்
தொடங்கினாள். நல்லா இருக்கும் நீயும் சாப்பிட்டுப் பாரு என்று சொல்லிக் கொண்டே
சிப்ஸ் பாக்கெட்டை ஆயிஷாவின் பக்கம் தள்ளி வைத்து விட்டு ஆயிஷா கேட்காமலேயே
ஸ்டெல்லா பேசத் தொடங்கினாள்.
“எனக்குச் சொந்த ஊரு பர்மால இருக்குற மாகுவேங்கற கிராமம். எங்க தாத்தா
மாணிக்கம் புதுக்கோட்டைகாரர். பாட்டி லட்சுமி . அவங்களுக்கு ஒரே பொண்ணு எங்க
அம்மா ராமதிலகம். பஞ்சம் பொழைக்கப் போன இடத்துல எங்க அம்மாக்கு அங்க இருந்த ஒரு
தமிழ் குடும்பத்தோட சம்பந்தம் வெச்சி எங்கப்பா பாண்டித்துரைக்குக் கல்யாணம் செஞ்சி
வெச்சாங்க . எங்க அம்மா, அப்பா, தாத்தா , பாட்டி எல்லாரும் ஒண்ணா இருந்தாங்க. அந்த ஊரு
காரங்களுக்கு நம்ம ஊரு விவசாய முறைய காத்துக் கொடுத்து அப்படியே கொஞ்சம் இடம்
வாங்கி விவசாயம் பண்ண ஆரம்பிச்சாங்க . அங்க “சவனேன்னு” ஒரு அரிசி இருக்கு. அத வயல்ல போட்டிருந்தாங்க. நல்ல விளைச்சல் கிடைச்சி
உள்ளூர்காரங்களுக்கு வயல்ல வேளை கொடுக்கற
அளவு வசதியான குடும்பமா இருந்தாங்கன்னு
பாட்டி பெருமை பேசும். எங்க தாத்தாவ
ஜப்பான் ஆர்மிக்காரங்க எங்கயோ ரயில் பாதை போட கூட்டிட்டு போய்ட்டாங்க.
கொஞ்ச நாள்ல எங்க அப்பாவும் நேதாஜி படைல சேந்து காட்டுக்குள்ள போயிட்டாரு. அப்ப நான் எங்க அம்மா வயித்துல மூணு மாச குழந்தை.
அப்பா என்ன பாக்க அவ்வளோ ஆசையா இருந்தாருன்னு பாட்டி அடிக்கடி சொல்லுவாங்க. ஆனா கடைசி வரை எங்க
அப்பாவால என்ன பாக்க முடியல என்று கூறிவிட்டு சில
நொடி மௌனத்தின் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் . கொஞ்ச நாள்
அம்மாவும் பாட்டியும் நிலத்தப்
பாத்துட்டு இருந்தாங்க.
நேதாஜி படைக்கு போன எங்க அப்பா என்ன அனாருன்னு யாருக்கும்
தெரியல . கொஞ்ச வருசத்துல பர்மா முழுக்க ஏதோ பிரச்சன. அப்ப எனக்கு பத்து
வயசு . ஜப்பான் ஆர்மிகாரங்க அந்த கிராமத்தை
இரத்த களறி ஆக்கினாங்க. எங்க நிலத்துல வேல செஞ்சவங்க அப்படியே அந்த நிலத்த
எடுத்துகிட்டாங்க. ஒரு அம்மாவாசை ராத்திரி
அஞ்சாறு ஜப்பான் ஆர்மிகாரனுக கூட ஊள்ளூர் பர்மியன்காரங்களும் சேந்து எங்க
வீட்டுக்கு வந்து வீட்டில இருந்த எல்லாப்
பொருளையும் உடச்சி அம்மாவ கூட்டமா… அந்தத் தேவடி … ” என்று பாதி வார்த்தையை வாயிக்குள் முணு முணுத்தபடி ரம்மை
ஒரு முடக்கு குடித்து விட்டு மிச்சரை அள்ளி வாயில் போட்டு நன்றாக மென்று
முழுங்கினாள். எங்க பாட்டி சாகறக்கு முன்னால தான் அழுதுட்டே சொல்லிச்சி. அன்னிக்கு
ராத்திரி எங்க அம்மா ஒரு பொட்டு கண்ணீர் கூட விடலையாமா. எங்க பாட்டி எங்க அம்மாவ அழுடி அழுது தொலச்சிடுன்னு சொல்லி
அடிச்சும் கூட அழாம ஏதோ பேசிக்கிட்டே
அவங்க உடம்பத் துணிய வெச்சி தொடச்சிட்டே " உடம்பெல்லா அழுக்குன்னு ” தானா பேச தொடங்கிட்டாங்கலாமா என்று ஸ்டெல்லா சொல்லும் போது ஆயிஷாவுக்கு கல்லுரிக் கால
இரவுகள் சட்டென்று நினைவில் வந்து மனதின் எங்கோ
மறைவிடத்தில் மின்னல் கீற்றென வலி தொற்றி
உடல் முழுக்கப் பரவி அடங்கியது. தனக்கு முன்பிருந்த தண்ணியைக் குடித்து
ஆசுவாசப்படுத்திக் கொண்டு ஸ்டெல்லாவின் பேச்சுக்கு காது கொடுத்தாள்.
திரும்ப சொந்த ஊருக்கு போயிறலான்னு அங்க இருந்த நம்மூர்காரங்க கையில உயிரை மட்டும்
எடுத்துக்கிட்டு நடுசாமத்துல அங்க இருந்து டிரக்கர்ல தப்பிச்சு போக
முடிவெடுத்தாங்க . எங்க பாட்டி தாத்தாவோட நினைவா அவரு போட்டிருந்த மோதரத்தை
மட்டும் கையில எடுத்துட்டு நாங்க இருந்த வீட்ட
தீ வெச்சி கொழுத்திட்டு திரும்பிப் பார்க்காம டிரக்கர்ல ஏறிட்டாங்க.
டிரக்கர்ல வர்றப்ப ரொம்ப தூரத்துக்கு அந்த வெளிச்சம் தெரிஞ்சது. எங்க பாட்டி முகம்
கல்லு மாதிரி இறுகி போய் இருந்துச்சி.
பர்மாவுல இருந்து இந்தியாவுக்கு வந்த மூணு
கப்பல்ல ரெண்டாவதா வந்த கப்பல்ல எங்க பாட்டி என்னையும் எங்க அம்மாவையும் கஷ்டப்பட்டு
கூட்டிட்டு வந்தாங்க. ஒரு நாள் தான் பாக்கி. அடுத்த நாள் மெட்றாஸ்ல இறங்கிருவோம்னு
பாட்டி சொன்னதும் பொறந்த
மண்ணு எப்படியும் நம்மள காப்பாத்தும்னு அங்க இருந்த எல்லார் முகத்துலயும் நிறைய
நம்பிக்கை இருந்துச்சி . எங்க அம்மாவை தவிர. கப்பல்ல ஏறுனதுல இருந்து யார் கூடவும்
பேசாம எங்க அம்மா என்னோட முகத்தையே
பாத்துட்டு இருந்தாங்கலாமா. பகல் முழுக்க
என் மடியில தலைவெச்சி என் முகத்த பாத்துட்டே என்
கன்னத்துல அவ்ளோ முத்தம் கொடுத்தாங்கலாமா. பாட்டி சாகர வர தெனோ சொல்லி அழும் என்று சொல்லிவிட்டு தன் கன்னத்தைக்
கிள்ளி தனக்குத்தானே முத்தமிட்டபடியே அப்ப
தெரியல அதுதான் கடைசி முத்தம்னு என்று
கூறிவிட்டு மௌனமானாள். ஸ்டெல்லாவின்
பார்வை எங்கோ நிலைகுத்தியிருக்க விரல்களால் தன்
கன்னத்தை தடவியபடிக் கண்களில்
இருந்து பிரிவின் பாரம் சுமந்து வழியும்
கண்ணீர்த் துளிகளை அந்த இரவிலும் ஆயிஷாவால் பார்க்க முடிந்தது. சற்று நேரம்
அங்கு அமைதி நிலவியது. நெஞ்சுக்குள் எழும் துயரத்தின் ரணக் குவியல்கள் விம்மல்களாக
ஸ்டெல்லாவின் தொண்டைக் குழியிலிருந்து வெளிவரத் துடித்துக் கொண்டிருந்தன. அதை ரம்மை
கொண்டு அடக்கி உள்ளே தள்ளிவிட்டு பேசத் தொடங்கினாள்.
இறுக்கமா ஒருதடவை கட்டிப்புடிச்சாங்க அதுமட்டும் என்னால மறக்க முடியல. விடிஞ்சு
மெட்றாஸ்ல இறங்கறப்பத்தான் தெரிஞ்சது . எங்க அம்மா கப்பல்ல இல்லன்னு.
பாட்டி என்னை வேக வேகமா அங்க இருந்து கூட்டிட்டு வந்துட்டாங்க. கொஞ்ச நாள் கழிச்சி
தான் பாட்டி சொன்னாங்க. அன்னிக்கு
ராத்திரி கப்பல்ல இருந்து நட்சத்திரங்கள்
மிதக்கற கடலுக்குள்ள குதிச்சுட்டாங்க என்று சொல்லி விட்டு வானத்தைப் பார்த்தாள்.
நானும் அப்பப்ப யோசிப்பேன். கப்பல்ல கடைசியா வர்றப்ப
என்கூட என்னவெல்லா பேச ஆசப்பட்டிருப்பாங்க? தெரியல. ஒன்னு தெரியுமா எங்க அம்மாவோட குரலே இப்ப மறந்து
போச்சி என்ற வார்த்தையில் வலி
கூடியிருந்தது. ஆயிஷாவுக்கு ஸ்டெல்லாவின் வார்த்தைகள்
கூர் ஊசிகளாய் மாறி காதுகளின் வழியே உடலெங்கும் ரணத்தைக் கிளறியபடி பரவியது.
நெஞ்சில் ஏதோ கணம் கூடியது போல உணர்ந்தாள். எப்படியாவது ஸ்டெல்லாக்காவுடன் ஒரு
புகைப்படம் எடுத்துவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள் . ஸ்டெல்லா சற்று நேரம் மெளனமாக
இருந்தாள். தூரத்தில் அடிவானத்தில் தெரியும் இருட்டைக் காட்டி ”
எங்க
அம்மா அதோ அங்க கடல்ல காத்துட்டு
இருக்காங்க. வாரத்துக்கு ஒருவாட்டி அவங்கள பாத்துருவேன் . கடற்கரையில உக்காந்து அந்த வாரம் நடந்த
எல்லாத்தையும் அவங்ககிட்ட சொல்லுவேன். அவங்க பதிலுக்கு என்னோட பாதத்த ஈரமாக்கி
என்ன தொட்டு சிரிப்பாங்க என்று சொன்னாள்.
அவங்க கிட்ட உன்ன பத்தியும் சொல்லிருக்கேன். அவங்க
கூட என்னால பேசாம இருக்க முடியாது என்று சொன்ன போது ஆயிஷாவுக்கு ஒரு கணம் வேளாங்கண்ணியிலும் ,
மாலை
மெரினாவிலும் குழந்தையாக ஸ்டெல்லா அலைகளுக்கு
இடையே ஓடி விளையாடியது தோன்றி மறைந்தது.
“இங்க வந்த கொஞ்ச நாள்ல
மயிலாப்பூருக்கு பக்கத்துல சிஸ்டருங்க நடத்துற “நம்பிக்கை
இல்லம்” ஹோம்ல என்ன சேத்து விட்டு
எங்க பாட்டியும் செத்துப் போயிட்டாங்க.
சொந்தம்னு சொல்லிக்க யாரும் இல்ல. எனக்கு அந்த ஹோம் தான் உலகமா
இருந்துச்சு. அங்க தான் எனக்கு இந்தப் பேரு வெச்சாங்க.
அப்ப
மொதல்ல ? என்று ஆயிஷா கேட்க
காயத்ரி
… நல்லா இருக்குல்ல என் பேரு என்று
சொல்லிச் சிரித்தாள்.
ரெண்டுமே
நல்ல இருக்கு" என்றால் ஆயிஷா .
சிரித்துக்
கொண்டே மெல்ல ரம்மை ஒரு மிடறு பருகி காட்டத்தைக் காற்றில் ஸ்ஸ் என்று ஊதி
மட்டுப்படுத்திக் கதையைத் தொடர்ந்தாள். நம்பிக்கை இல்லத்துல பத்தாவது வரைக்கும்
படிச்சேன் . அதுக்கு மேல படிக்க வைக்க யாரும் இல்ல . சிஸ்டர் ஒருத்தங்க சொல்லி
பக்கத்துல தையல் கிளாஸ் போனேன். அங்கதான் எனக்குச் சனியன் புடிச்சது “
என்று
சொல்லி ஸ்டெல்லா இரண்டாவது ரவுண்டுக்குத் தயாரானாள்.
ஆயிஷா
சாப்பிட்டு முடித்திருந்தாள் .
டெய்லரிங்
கிளாஸ்ல ரேவதின்னு ஒரு அக்கா புதுசா சேந்தாங்க. அவங்க வீட்டுக்காரர் சினிமால
டான்ஸ் மாஸ்டர்னு சொன்னாங்க . வாரம் ரெண்டாயிரம் சம்பளம். போட்டுக்க வித விதமான
துணி , மேக்கப் அப்படி இப்படின்னு
அங்க இருந்த எல்லார் கிட்டயும் சொன்னாங்க. என்னைப் பாத்து நீ கூட லட்சணமாத்தான்
இருக்க. சினிமாவுக்கு வரியான்னு சொல்லி சிரிச்சது எனக்குள்ள ஏதோ செஞ்சிருச்சு.
ஹோமுக்கு போயி கண்ணாடியில என்னோட முகத்தைப் பாக்கணும்னு முடிவெடுத்தேன் . ஹோம்ல
போடுற சாப்பாடு , வருசத்துக்கே சேத்து
ரெண்டு துணி அப்படின்னு இருந்த எனக்கு அப்ப அது உண்மையா பொய்யான்னு யோசிக்க
முடியல. எல்லா நடிகர்களும் குளோஸ் பிரண்டு சொல்லி பெரும பேசீட்டு இருந்தாங்க.
விஜயகாந்த படச் சூட்டிங்ல இப்ப இருக்காருன்னு சொன்னதும் எனக்கு ரொம்பச்
சந்தோஷமாயிருச்சி. ஏதோ அந்த அக்காதான் என் வாழ்க்ககையை மாத்த வந்திருக்கிற தேவ
தூதனா அப்ப தெரிஞ்சாங்க. எப்டியாச்சு விஜயகாந்த பக்கத்துல பாக்கணும்னு வெறி
கூடுச்சு. கிளாஸ் முடிஞ்சு ஹோமுக்கு வந்ததும் முதல் வேலையா கண்ணாடியை தேடி
பாத்தேன். ரசம் போன கண்ணாடியில் அன்னைக்கு அழகாத்தான் இருந்தேன்.
அதுக்கப்புறம்
ஒரு ஆறு மாசமிருக்கும். ரேவதி அக்காவோட வார்த்தைய நம்பி ஹோம விட்டு
சிஸ்டர்களுக்குத் தெரியாம வெளியேறினேன் . பெரிய தப்பான முடிவு எடுத்துட்டேன்னு
காலம் கத்து கொடுக்க ஆரம்பிச்சது. இந்த மெட்றாஸ் தன்னோட கோரமான இருட்டு முகத்தைக்
காமிக்க ஆரம்பிச்சது. திரும்பி போக இடமில்லை. வாழ்க்கை இழுத்துட்டு போகிற திசைல
பயணிக்க ஆரம்பிச்சேன். எங்காவது ஒரு திருப்பம் வந்துதான ஆகணும் அப்படீங்கற
நம்பிக்கை . தினமும் ராத்திரி எவனெவன் முன்னலயெல்லாமோ ஒட்டு துணியில்லாம
ஆடனும் என்று ஸ்டெல்லா சொன்னதும்
ஆயிஷாவுக்குச் சுளீரென்றிருந்தது . ஆடலன்னா சிகரெட்ல சூடு வைப்பானுக . பாடு பசங்க
என்று சொல்லிய போது இரண்டாவது ரவுண்டில் ஊற்றிய ரம்மைக் காலி செய்திருந்தாள் .
இறுதியாக பாதி டம்ளருக்கு ரம்மை ஊற்றி அதில் கொஞ்சமாக நீரை கலந்து போதையின் மாய
உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டே எங்கயோ பார்த்து யாரையோ திட்டிக் கொண்டிருந்தாள்.
ஆயிஷா காலை வகுப்பறையில் தனக்கு அருகில் ஒரு பெண் வரைந்து கொண்டிருந்த சிகரெட்
தழும்பு குறித்துச் சிந்தித்துக் கொண்டிருந்தாள்.
ஒரு
கட்டத்துல டான்ஸ் ஆடாமலேயே கையில நிறையா காசு வர ஆரம்பிச்சது. கிராமத்துல கோயில்
விசேஷத்துக்கு ஆட சொல்லி கூட்டிட்டு போவாங்க. நான் போகாத கோயில் பங்க்சன் தமிழ்
நாட்டுல இல்ல தெரியுமா! எல்லாக் கோயில் திருவிழாவுக்குப் போயிருக்கேன். உங்க
ஊருக்கு கூட வந்திருக்கேன்.
சேலத்துக்கா
? என்று அதிர்ச்சியாக ஆயிஷா
கேட்டாள் .
ஆமா
. சேலத்துக்குப் பக்கம் ஏதோ ஒரு கிராமம். ஊர் பேரு மறந்திருச்சி .
ஆயிஷா
“ஓ” எனும்
ஒற்றைச் சொல்லில் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஒன்றாக வெளிப்படுத்தினாள் .
நடுசாமத்துலதான்
டான்ஸ் ஆரம்பிக்கும். எனக்கு என்ன டிரஸ் தெரியுமா? உள்ள
போட்டுருக்கற ஜட்டி தெரியற மாதிரி
குட்டையா தோ இதுவரை ஒரு பாவாடை என்று தனது மேல் தொடையில் கோடு கிழித்து
காட்டினாள் . லோ நெக் வெச்ச ஜாக்கெட் அவ்ளோதான் . டான்ஸ் ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துல
என் மேல மேல தண்ணிய ஊத்தி விட்ருவானுக . அதுக்குத்தான் காசு. கூட ஆடுறவன் எல்லார்
முன்னாலயும் மார தொட்டுத் தடவி அமுக்கி எல்லாத்தையும் பண்ணுவான். மரத்துப் போச்சி என்று ஸ்டெல்லா தனது மார்பைத் தடவினாள் . அடுத்த நொடியே இயல்பாகிவிடும் பக்குவத்தில்
ஸ்டெல்லா பழகியிருந்தாள்.
ஒரு பெருமூச்சுக்குப் பின் சில சமயம் என் கூட
இப்படி ஆடுறதுக்குப் பெரிய போட்டியே நடக்கும் தெரியுமா ? என்று தொடர்ந்த ஸ்டெல்லாவைப் பார்க்கும் போது ஆயிஷாவுக்கு வலித்தது. தான்
பித்து நிலையிலிருந்தாலும் இப்படியொரு சூழலில் மாட்டவில்லை என்பது பெரும் ஆறுதலாக
இருந்தது. ஸ்டெல்லாக்கா மட்டும் என்னைச் சந்திக்காமலிருந்திருந்தால் என்று
நினைக்கும் போதே ஆயிஷாவுக்கு அடிவயிறு கலக்கியது. ஆயிஷாவுக்குச் சட்டென்று மனதில்
வாப்பாவின் மடி நினைவுக்கு வந்தது.
நான் சுத்தி சுத்தி ஆடுறப்ப கீழ உக்காந்துட்டு
இருக்கிற கிழடுங்க வாயத் தொறந்து காணாதத பாக்கற மாதிரி பாத்துட்டே வேட்டிக்குள்ள
கைய விட்டுட்டு உக்காந்திருப்பானுக . டான்ஸப்ப சுத்தி இருக்கிற விடல பசங்கல
இருந்து கிழடுக வரை கையில பத்து நூறுன்னு காச வெச்சிட்டு ஜாக்கெட்டுல சொருக காத்துகிட்டு
இருப்பானுக. இந்தக் கெழடுங்க இருக்கே அதுக தான் காச சொருகர மாதிரி மார
நிமிண்டிட்டு போவானுக என்று சொல்லி சிரித்தாள். ஸ்டெல்லாவின் சிரிப்பு ஆயிஷாவுக்கு
வலித்தது . ஆயிஷா ஏதும் பேசவில்லை. ஆனால் வலி மிகுந்த கேள்வியின் பிடியில்
சிக்கியிருந்தாள்.
இந்த உடம்பு மேல அவ்ளோ வெறி. ஒவ்வொரு ஊருலயும்
என் டான்ஸ்க்கு தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கு தெரியுமா . ராத்திரி டான்ஸ் முடிச்சுட்டுப் புறப்படும் போது பாக்கணுமே அவனவன்
வீட்டுக்கு வரச்சொல்லி என்னைப் பேரம் பேசுன கதையெல்லா இருக்கு. அதுலயும் சித்தூர்
பக்கம் போனா ஒருவாரம் ஆனாலும் விடமாட்டாங்க என்று சொல்லி முடிக்கும் போது ஸ்டெல்லா
சாப்பிட்டு முடித்தாள்.
சின்ன ஏப்பத்துக்குப் பின் அங்கிருந்த சுவர்
ஓரமாக வீட்டிற்குப் பின்பக்கமாக இருந்த காலி இடத்தில் கையைக் கழுவினாள். காலியான
பாட்டிலையும், பார்சல் பேப்பர்களைச் சுருட்டி வீட்டிற்குப்
பின்னால் இருக்கும் கருவேலம் முள்ளு மர புதருக்குள் எறிந்தாள் . வீர்ர்ரீ என்ற ஒரு
பன்னியின் அதிர்ச்சி சப்தம் ஸ்டெல்லாவை திடுக்கிட வைத்தது. ச்ச்சூ என்று சொல்லி
பன்னியை இருட்டிற்குள் துரத்திவிட்டாள். அதன்பின் நிதானமாகச் சுற்றிலும் யாரும்
இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு தண்ணீர்த் தொட்டியை ஒட்டி இருந்த இருட்டான
பகுதியில் அமர்ந்து மாடியில் இருந்து கொண்டே வீட்டிற்குப் பின்புறம் சிறுநீர்
கழித்தாள். சற்று தள்ளி இருட்டிற்குள் ஓடிய பன்றி திடுக்கிட்டு திரும்பிப்
பார்த்துவிட்டுச் சென்றது. ஆயிஷா தூரத்தில் சட்டெனத் தோன்றி கீழே விழுந்து மறைந்த
பச்சை நிற எரி நட்சத்திரத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஸ்டெல்லா பாயில் படுத்து வானத்தைப் பார்த்து
சிறிது அசுவாசப்படுத்திக் கொண்டு கதையின் இறுதிப்பகுதிக்கு வந்துவிட்ட நிதானத்தில்
பேச ஆரம்பித்தாள். “ஒரு டான்ஸ் புரோகிராம்ல நம்ம ஹவுஸ் ஓனர்
ஸ்டிபன் அண்ணாவைப் பாத்தேன். சினிமா குரூப் டேன்ஸ் ஆடுறக்குச் சான்ஸ் வாங்கித்
தந்தார். அங்க போனா அதுக்கு மேல. நடிகர்கள் கூட முன்னால வரிசைல ஆடுறதுக்கு நிறைய
விட்டுக் கொடுக்கணும். நான் கடைசியா ஆடுன படம் சூரசம்ஹாரம். அதுல “ வேதாளம் வந்துருக்குது “ பாட்டுக்கு
ஒரு ஓரமா ஆடுவேன். அதுக்கு அப்புறம் இந்தப் பொழப்பு வேணான்னு வெளிய வந்துட்டேன்.
அப்புறம் அவருதான் கன்னிமாரா லைப்ரேரில
டெம்பரவரியா கூட்டிப் பெருக்கற வேலைய வாங்கித்தந்தாரு. அங்க வெச்சித்தான் நடராஜன்சாரப்
பாத்தேன் என்று நடராஜனைப் பற்றிப் பேச ஆரம்பித்ததும் ஸ்டெல்லா முகத்தில் புதிதாக
ஏதோ ஒரு மென்மை கூடியிருந்ததை அந்த இருட்டிலும் ஆயிஷாவால் உணர முடிந்தது.
ஒரு தடவை நானும் அவரும் சாந்தோம் பீச்சுல
சந்திச்சோம். அங்கதான் இந்த மாதிரி மாடலா நிக்கறத பத்திச் சொன்னாரு. இதுக்கு
முன்னால இருந்த ஒரு அம்மா சொந்த ஊருக்குப் போயிருச்சாமா . அதனால என்ன வரச்சொல்லிக்
கேட்டாரு. ஏனோ அவரு சொல்லி என்னால தட்டாம இருக்க முடில. அன்னிக்கு ராத்திரி
தூக்கமே இல்ல. கண்டவன் முன்னால அம்மணமா நிக்கறத விட பாடம் படிக்கற இடத்துல இப்படி நிக்கறது
ஒன்னும் தப்பு இல்லன்னு முடிவெடுத்தேன் . அடுத்த நாள் காலேஜுக்குப் போனேன்.
அன்னிக்கு ஆரம்பிச்சது அஞ்சு வருசமா அவரு வரச் சொன்ன தட்டாம போயிருவேன் என்று
சொன்ன ஸ்டெல்லாக்காவின் சந்தோசத்துக்கான காரணம் ஆயிஷாவுக்கு புரிந்தது.
இருட்டுல
டிரஸ் போட்டிருந்தாலும் அம்மணமாக்க
துடிக்கற இந்த ஊருக்குள்ள வெளிச்சத்துல
அம்மணமா நின்னாலும் ரொம்ப பாதுகாப்பா இருக்கேன் என்று சொல்லி முடிக்கும் முன்பே ஹே
அங்க பாரு புளு கலர்ல புதுசா ஒரு நட்சத்திரம் என்று வானில் புதிதாகத் தோன்றிய விண்மீனைப்
பார்த்துக் கை காட்டி சிரித்தாள்.
நீண்ட நாளுக்குப்பின் ஸ்டெல்லா சிரித்த
முகத்துடன் உறங்கப் போனாள். ஆயிஷா தூக்கம் கலைந்த இரவில் கண் விழித்தாள் .
மனதிற்குள் ஸ்டெல்லாவின் வலி நிரம்பியிருந்தது. அந்த இரவில் வானமெங்கும் புதிது
புதிதாக நட்சத்திரங்கள் தோன்றி ஒளிர்விட்டு மின்னத் தொடங்கியிருந்தன.
கீழே வீட்டிற்குள் ஒரு உற்சாகமான போர் வீரனைப்
போலப் பாயில் படுத்திருக்கும் ஸ்டெல்லாவை ஆயிஷா பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளுக்குள் ஏதோ உடைந்து கொண்டிருந்தது. வாழ்தலைத் தவிர உன்னதமான ஒன்று உலகில்
இருக்க முடியுமா என்ற கேள்விக்கான பதிலாக உறங்கிக் கொண்டிருக்கும் ஸ்டெல்லாவை
வாஞ்சையோடு பார்த்து தலையைக் கோதிவிட்டாள். ஆயிஷாவுக்குள் ஏதோ பெருக்கெடுத்து ஊரத்
தொடங்கியது.
2
அடுத்த ஓரிரு நாளில் ஸ்டெல்லா ஆயிஷாவினுடைய
அம்மாவை சேலத்திலிருந்து வரவைத்திருந்தாள். உடன் ஆயிஷாவின்
தாய் மாமா வந்திருந்தார். தன்னால்தான் வாப்பா இறந்துவிட்டார் என்று தெரிந்து உடைந்து
அழுதாள். ஆயிஷாவும் அவங்க அம்மாவும் கட்டிப்பிடித்து அழுத் தொடங்கிய போது ஸ்டெல்லா அந்த
அறையிலிருந்து வெளியேறினாள். சற்றுநேரம் அந்த வீடு அழுகையின் பேரொளியில்
மூழ்கியிருந்தது. இறுதியாகச் சிரிப்புச் சத்தத்தில் அன்றைய காலைப் பொழுது கடந்தது.
ஆயிஷாவுடைய அம்மா ஸ்டெல்லாவை கட்டிப்பிடித்துத்
தனது கண்ணீரால் நன்றி தெரிவித்தார். அடிக்கடி வரவேண்டும் என்ற அன்புக் கட்டளையை
ஆயிஷாவுக்கு கட்டி அணைத்தபடியே கண்ணீருடன் ஸ்டெல்லா சொன்னாள். ஆயிஷாவின் இறுகிய
பிடியில் ஸ்டெல்லா காலசக்கரத்தில் பின் சுழன்று கொண்டிருந்தாள் .
ஸ்டெல்லாவின் முதுகில் ஆயிஷாவின் கண்ணீர்த் துளிகள் சொல்லிலடங்கா நன்றியுணர்ச்சியுடன் கதகதப்பாக வழிந்து கொண்டிருந்தது. ஆயிஷா
பேரன்புடன் ஸ்டெல்லாவின் கன்னத்தில்
அழுத்தமான முத்தம் பதித்த நொடியில்
ஸ்டெல்லா பர்மாவிலிருந்து சென்னை
திரும்பும் கப்பலில் அவளது அம்மாவின் மடியில்
இருந்தாள்.
அதற்குப்பின் ஆயிஷா சேலம் வந்துவிட்டாள். எட்டு
வருடங்களுக்குப் பின் ஆயிஷா தனது தங்கை தஸ்லீமாவை ஓவியக் கல்லுரியில் சேர்க்கத்
தன் கணவனுடன் சென்னை வந்தாள். முதலில் ஸ்டெல்லாக்காவை பார்த்துவிட வேண்டும் தன்னுடைய
திருமணத்திற்கு அழைத்தும் வரவில்லை என்ற கோபத்தோடு ஸ்டெல்லா அக்காவிடம் செல்ல
சண்டை போடவேண்டும் என்ற திட்டமிடலுடன் ஸ்டிபன் அண்ணா வீட்டிற்கு தன் கணவனுடன் ஆட்டோவில்
வந்து சேர்ந்தாள். அந்தத் தெருவே மாறியிருந்தது. எதிரில் புதிதாகப் பல வீடுகள்
முளைத்திருந்தன. ஸ்டிபன் அண்ணாவின் வீடு பூட்டியிருந்தது. பக்கத்திலிருந்த
வீட்டில் ஸ்டெல்லாவைப் பற்றிக் கேட்கும் போது முகத்தைச் சுருக்கி வேண்டா வெறுப்பாக
ஓ.... அவளா அவ.. வீட்டைக் காலி செஞ்சு ஒரு வருசத்துக்கு மேலாச்சு என்று
சொல்லிவிட்டு அடுத்தக் கேள்வியை எதிர்பாக்க விரும்பாதது போல அந்தக் குண்டுப் பெண்
கதவைச் சாத்தினார். ஆயிஷாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது . ஸ்டெல்லாக்கா மட்டும்
இருந்திருந்தா குடும்பத்தோட வந்தத நினைச்சி நிச்சயமாக சந்தோசப் பட்டுருப்பாங்க. பையன
அள்ளியெடுத்து எடுத்து கொஞ்சிருப்பாங்க. எங்க போயிருப்பாங்க ? எங்கச்சு இருப்பாங்களா என்று யோசித்த போது இருப்பாங்களா என்ற வார்த்தையில் கணம்
கூடியிருந்தது. சற்றே கலக்கத்துடன் வாடிய முகத்தோடு
ஆட்டோவில் ஏறும்போது ஆயிஷா
ஸ்டெல்லா வீட்டு மொட்டை மாடியைப்
பார்த்தாள் . மொட்டைமாடி வெறிச்சோடி
இருந்தது.
ஏமாற்றத்தின் பின்னே ஒரு சின்ன நம்பிக்கை
ஒளியாய் நடராஜன் சாரின் நினைவு அவளுக்குள் மிச்சமிருந்தது. நடராஜன் சாரைப் பார்ப்பதற்காக கல்லூரி அலுவலகத்தில்
இருந்த பியூனிடம் விசாரித்தாள். அவரா ? அவரு போன வருஷம் தான் கல்யாணம் ஆகி அவுங்க ஊரு பக்கமே செட்டில் ஆயிட்டாரே
என்று பியூன் சொன்னார் .
ஆயிஷாவுக்கு ஸ்டெல்லாவின் முகம் மனதில் வந்து
போனது . இன்னமும் இந்த முகம் எத்தனை வருடம் நினைவில் இருக்கப்போகின்றது. ஒரு
போட்டோ கூட எடுக்கவில்லயே என்ற ஆதங்கமும் ஏக்கமும் ஆயிஷாவைக் கலங்கடித்தது. ஆயிஷா ஏதோ மனதில் உந்துதல் வந்து
" அவங்க ஒயிப் பேரு தெரியுமா சார்? என்று கேட்டாள்.
“ஸ்டெல்லா “என்றார்.
எங்கோ தொலைவில் கடல் அலை
எழுந்தது அடங்கியது . ஆயிஷா மாலை குடும்பத்துடன் மெரினா பீச்சில் கால்
நனைக்க வேண்டும் என்று மனதில் திட்டமிட்டுக் கொண்டாள்.
-----------------------------------------------------------------------------------------------------------------------
Deep and emotional ✨
ReplyDeleteCongratulations sister 🌿