மின்னிக் கொண்டிருந்த தெரு விளக்கின் மங்கலான ஒளியில்
தெரிந்தவனிடம் "குமார் இருக்கானா?" என்று வெளி வாயிற்கதவு அருகே தெருவில்
நின்றவாறு கேட்ட பிறகுதான் வீட்டின் கதவுகள்
பூட்டப்பட்டு இருப்பதை கவனித்தேன்.
அக்கதவருகே நின்று கொண்டிருந்த அவன், வலது கையின் ஆள்காட்டி விரலால் மூக்குக் கண்ணாடியின்
நடுப்பகுதியை தொட்டு கொஞ்சம் சரிந்து இருப்பதை சரி செய்து கொண்டே என்னை உற்றுப் பார்த்தான்.
அந்த விரலுக்கு துணையாக நடுவிரலையும் நீட்டி அவனது இரண்டு கரிய உதடுகளுக்கு நடுவே சிக்கிக்
கொண்டிருந்த பீடியை பிடித்தான். கண்களை மூடிக்கொண்டு நிதானமாக காற்றை கூம்பு வடிவ வெள்ளை
காகித சுருளுக்குள் திணிக்கப்பட்டு இருந்த இலைகளின் தடைகளை மீறி செல்லும்படி இழுத்தான்.
அவன் அவ்வாறு கண்களுக்கு புலப்படாத காற்றை இழுத்ததில்
பீடியின் நுனித்தனலின் ஒளி அதிகரித்தது என் கண்களுக்கு புலப்பட்டது. வாயிலிருந்து விடுதலை
கொடுத்து உன் ஜீவன் முடிந்தது இனி உன் உதவியால்
நான் அடையப்போவது ஏதுமில்லை என்று சொல்வதைப்போல் இரு நொடிகள் அதை பார்த்துவிட்டு சுண்டி
விட்டான்.
அது காற்றில் சுழன்று கொண்டே அந்த வீட்டின் எல்லையின் முடிவிலும் பக்கத்து வீட்டு எல்லையின் தொடக்கத்திலும்
கட்டப்பட்டு இருந்த பொதுச்சுவரை தாண்டியது. அந்த தனலுக்கு இறையாக பஞ்சு ஏதும் அங்கு
இல்லை என்ற தகவலை சொல்லிவிட்டு மறைந்தது.
மீண்டும் அவனை நோக்கி என் பார்வையை செலுத்தினேன். அவன்
தலை இருந்த இடத்தில் புகை மூட்டமாக இருந்தது. தலையில்லா முண்டம் மட்டும் என்னை நோக்கி
நகர ஆரம்பித்தது. இரண்டடி நகர்வுக்கு பின்பே அவன் தலையும் உடலுடன் என்னை நோக்கி வருவது
தெரிந்தது.
இரும்பாலான வெளி வாயிற்க்கதவை திறந்து என்னருகில் நின்றவாறு
கரகரப்பான குரலில் “டைம் என்ன ப்ரோ?” என்று கேட்டான்.
“தெரியலையே..” என்று நான் சொல்லி முடிப்பதற்குள் அவனது
கைபேசியை எடுத்து “மணி ஒன்பதரை ஆயிடுச்சு, இந்நேரம் அவன் கோவா ட்ரிப் ஸ்டார்ட்டாகி
இருக்கும். வாங்க.. வாக்கிங் போயிட்டே பேசுவோம்" என்றான்.
“குமார் இந்த வாரம் ட்ரிப் போறத உங்க கிட்ட சொல்லலையா?”
என்று அவன் என்னிடம் கேட்க நான் எதுவும் சொல்லாமல் மௌனமாக அவனுடன் நடக்க ஆரம்பித்தேன்.
அந்த தெருவில் காலியிடங்கள் அதிகமாகவும் கட்டிடங்கள்
குறைவாகவும்தான் இருந்தது. தெருவில் நிசப்தத்தை தவிர வேறு எதுவும் இல்லை. நாங்கள் இருவர்
மட்டும் தான் மனிதர்கள் ரூபத்தில் அந்தத் தெருவில் நடமாடிக் கொண்டு இருக்கிறோம் என்று
கவனித்தேன். கிட்டதட்ட மனிதர்களால் கைவிடப்பட்ட இடம் போல் அத்தெரு காட்சியளித்தது.
“இங்க இருக்கறவங்க எல்லாம் வெளியே வரதே இல்ல.. இருக்காங்களா
இல்லையானு கூட தெரியல.. பாருங்களேன் எவ்ளோ அமைதியா இருக்கு” என்று என்னிடம் சொன்னான்.
ஆங்காங்கே இருந்த வீடுகளின் ஜன்னல்கள், உள்ளே போடப்பட்டு இருக்கும் மின்சார விளக்குகளால் வெளிச்சமாக இருந்தன. உள்ளே மனிதர்கள் இருக்கிறார்கள்
என்பதற்கு சாட்சியாக இருந்தது ஒவ்வொரு ஒளிரும் சாளரங்கள் மட்டுமே.
அண்ணாந்து பார்க்கையில் வானம் கருப்பு நிற விளக்கை
ஒளிர விட்டதுபோல் கருமையின்றி வேறு ஏதும் இல்லாமலிருந்தது. இங்கே ஒரு தெரு இருக்கிறது
என்று சொல்வதற்காக ஆங்காங்கே தெருவிளக்குகள் மஞ்சள் நிற வெளிச்சத்தை வானத்தின் எதிர்திசையை
நோக்கி ஒளிவீசிக் கொண்டிருந்தது.
“திடீர்னு கரண்ட் போயிடுச்சுனா இந்த இடம் எப்படி இருக்கும்?
பட் டோன்ட் வொரி ப்ரோ. என்கிட்ட பேனா மூடி சைஸ்ல ஒரு டார்ச்லைட் இருக்கு. அதுல எல்இடி,
அல்ட்ரா வைலட், லேசர்னு மூணு டிஃபரண்ட் லைட் ஆப்ஷன்ஸ் இருக்கு. அத வெச்சு பொழச்சுக்கலாம்”
என்று சொன்னான். நான் அந்த எல்லையில்லா இருளை எண்ணிப்பார்த்தேன்.
அவன் கொஞ்சம் பரபரப்பானான். இடுப்பை பிடித்துக்கொண்டு
தொங்கிக்கொண்டிருந்த அரைக்கால் சட்டையின் வலது கைப்பையில் கைகளை விட்டு கரிய நிற சிகரெட்
பாக்கெட்டில் இருந்து மீண்டும் ஒரு வெள்ளை பீடியை எடுத்து வாயில் வைத்துக்கொண்டான்.
இடது கைப்பையிலிருந்து லைட்டரை எடுத்து அதை
பற்ற வைத்தான்.
“ப்ரோ! பேய்னு ஒன்னு இருக்குன்னு நினைக்கிறீங்களா?”
என்று அவன் என்னிடம் கேட்கும்போது மின்னாமல் ஒளிர்ந்து கொண்டிருந்த தெரு விளக்கை கடந்து
கொண்டிருந்தோம்.
நான் முன்னும் பின்னும் பார்த்தேன்.
“இங்க இப்போ நம்மளோட அதுங்க நடந்து வந்துட்டு இருந்தாக்கூட
நம்ம கண்ணுக்கு தெரியவாபோது?” என்று அவனே புகை விட்டுக் கொண்டே பதிலும் சொல்லிக்கொண்டான்.
“அவனிடம் உண்மைதான் நம்ம கண்ணுக்கு அதுங்க தெரியாது”
என்று சொன்னேன்.
“எஸ் எஸ் கரெக்ட் ப்ரோ. பேய்ங்க நம்ப கண்ணுக்கு தெரியாது
பட் அதுங்கல உணர முடியும்னு நினைக்கிறேன்” என்றான்.
“உணர்வது கூட கஷ்டம்தான். ஒருவேல நம்ப புலன்கள் எல்லாம்
கூர்மையா இருந்தா வேணா அது சாத்தியப்படலாம்” என்று நான் சொல்லும்போது அந்த தெருவின்
எல்லையை நாங்கள் இருவரும் வந்தடைந்திருந்தோம்.
யாருமில்லா அந்த முச்சந்தியின் தெருவிளக்கின் வெளிச்சத்தில்
நாங்கள் இருவர் மட்டும் நின்று கொண்டிருக்கும்போது அவன் என்னிடம் “புலன்கள் கூர்மையாகனும்னா
என்ன பண்ணனும் ப்ரோ?” என்று கேட்டான்.
“இந்த மாதிரி தம் அடிக்கிறத முதல்ல நிறுத்தணும்” என்று
சொன்னேன்.
“ஹா.. ஹா.. ஹா.. என்று சிரித்துக்கொண்டே இது தம் இல்ல
ப்ரோ.. செடி” என்றான். “அப்படின்னா?” என்று கேட்டதற்கு “சரியான பழம்மா இருப்பிங்க போல..
புரியலைங்லா? கஞ்சா!” என்றான்.
“நான் இதுவும் தான் புலன்கள நாசம் பண்ணும்” என்று சொன்னேன்.
“நோ சான்ஸ்! இது புலன்களை மேம்படுத்த மட்டும் தான் செய்யும்” என்று கொஞ்சம் கண்டிப்பாக
சொல்லிவிட்டு வீட்டை நோக்கி திரும்பி நடக்க ஆரம்பித்தான்.
நான் தனியாக நிற்கலானேன். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு
வேகமாக நடந்து அவனருகில் சென்றவுடன் அவனுக்கு ஏற்றவாறு நடையின் வேகத்தை குறைத்து சமன்
செய்து கொண்டேன்.
“சரி, நீங்க சொல்றது உண்மையாவே இருக்கட்டும். அப்படின்னா
உங்களால இப்போ பேய்ய உணர முடியும்னு சொல்றீங்களா?” என்று கேட்டேன்.
“அப்படி செல்ல முடியாது.. பட் இப்போ இங்க இருக்குன்னு புருப் பண்ண முடியும்.”
“அப்படியா! எங்க நிருபிங்க பாப்போம்” என்றேன்.
“இந்த ஸ்ட்ரீட் லைட் கரெக்டா நாம்ப கிராஸ் பண்ணும்போது
ஆஃப் ஆகும் பாருங்களேன்” என்றான்.
அவன் அவ்வாறு சொல்லி முடிக்கும்போது சரியாக அந்தத்
தெருவிளக்கு கம்பத்தை தாண்டினோம். அவன் சொன்னதைப்போல் அந்த தெரு விளக்கு அணைந்தது.
ஆனாலும் அந்த வீட்டின் முன்பு இருந்த தெரு விளக்கு மின்னும் பணியை நிறுத்தவில்லை. அதை
நோக்கி இரண்டடி நகர்ந்தவுடன் நாங்கள் தாண்டிய தெரு விளக்கு மீண்டும் ஒளிரும் பணியை
தொடங்க நான் அதை திரும்பிப் பார்த்தேன்.
அவன் என்னிடம் “கோஇன்சிடன்சுனு நினைக்கிறீங்கதான?”
என்று சொல்லிவிட்டு மூக்குக் கண்ணாடியை சரி செய்து கொண்டான்.
“ஆமாம். ஏன் அடிக்கடி மூக்கு கண்ணாடியை சரி செய்றீங்க?”
என்று அவனைக் கேட்க “இது ஆன்லைன்ல வாங்குனேன் ப்ரோ.. சைஸ் தப்பா போட்டேன்” என்று அவன்
சொல்லும்போது மீண்டும் வீட்டு வாசலை வந்தடைந்தோம்.
“பேய் இருக்குன்னு இன்னும் நிரூபிக்கவே இல்லையே நீங்க.
கண்ணுக்கு ஒண்ணுமே தெரியலையே” என்று நான் அவனை கேட்டேன். தெரு விளக்கு அனைந்து எரிந்த
அந்தச் சம்பவத்தை நான் பேய் இருக்கிறது என்பதற்கு சான்றாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை
அவன் புரிந்து கொண்டான்.
“இப்போ புருப் பண்ணுறேன் வாங்க” என்று சொல்லிக்கொண்டு
திறந்திருந்த வெளி வாயிற் கதவு வழியே நுழைந்து வீட்டின் பக்கவாட்டில் இருந்த மாடிக்கு
செல்லும் படிகளில் ஏறத் தொடங்கினான். நான் அவனை பின்தொடர்ந்தேன்.
பூட்டப்பட்டிருக்கும் வீட்டிற்குள் மின் விளக்குகள்
எரிந்து கொண்டிருப்பது படியின் அருகே இருந்த ஜன்னலின் வழியாக தெரிந்தது. உள்ளே ஓடிக்
கொண்டிருந்த தொலைக்காட்சியின் சப்தமும் கொஞ்சம் கேட்டது. என் முன்னே சென்றுக்கொண்டிருந்தவனிடம்
“ஏன் வீட்டிக்குள்ள டிவி லைட்லாம் ஆன்லயே இருக்கு?” என்று கேட்டேன். அவன் "அதலாம்
ஆப் பண்ற பழக்கம்லாம் இல்ல ப்ரோ” என்றான்.
மொட்டை மாடிக்கு சென்று பக்கத்து வீட்டு மாடி அறையில்
ஒளிர்ந்து கொண்டிருந்த ஜன்னலுக்கு நேரே நின்றான். அது நான்கு பூட்டப்பட்டிருக்கும்
ஜன்னல்கள். ஆனால் உள்ளே இருப்பதை தெளிவாக காட்டிக்கொண்டிருந்தன, நூறு இன்ச் எல்சிடி
டிவி போல.
உள்ளே ஜன்னல் ஓரம் ஒரு பெண் மடிக்கணினியை பார்த்தபடி
பக்கவாட்டாக அமர்ந்திருந்தாள். அந்த அறையின் நடுவே போடப்பட்டிருந்த சோபாவில் ஒருவன்
அமர்ந்தபடி சுவரில் மாட்டப்பட்டிருந்த தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தான். அதில்
ஏதோ பாட்டு ஓடிக்கொண்டிருப்பது போல் இருந்தது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த அவனது
பின்தலை மட்டுமே எங்களுக்கு தெரிந்தது. ஒலியில்லா காட்சிகளை பார்பதற்கு கொஞ்சம் விந்தையாகவும்
இருந்தது. சாளரங்களின் அந்தப்பக்கம் வெளிச்சத்தில் இருக்கும் அவர்களுக்கு இந்தப்பக்கம்
நாங்கள் இருளில் நின்றுக் கொண்டு பார்த்துக்கொண்டிருப்பதே தெரியாது என்று யுகித்தேன்.
அவன் அவர்களை பார்த்தபடி ஒருமுறை புகையை நன்கு இழுத்து
விட்டு என்னிடம் “அங்க டிவி பார்த்துட்டு ஒருத்தன் இருக்கான்ல.. ஆக்சுவலி அவன் ஒரு
பேய்” என்றான்.
“எப்படி சொல்றீங்க?” என்று நான் கேட்டதற்கு “நான் ஒரு
வாரமா இந்த டைமுக்கு வந்து இவங்கள பார்த்துட்டு இருக்கேன். இவங்க ரெண்டு பேரும் இதுவரைக்கும்
பேசினதே இல்ல. ஏன் மூஞ்சியை கூட பார்த்துகிட்டது கிடையாது. இந்த வயசு மேரிட் கப்புல்ஸ்
இப்படியா இருப்பாங்க? இவன் அந்த சோபால உட்காருவான் ஏந்தரிப்பான் நடப்பானே தவிர எதையுமே
தொட மாட்டான், டிவி ரிமோட்டை கூட. எந்த பொருளையும் இவன் தொட்டு நான் பார்த்ததே இல்ல. இந்த பொண்ணு உள்ள போய் சமைக்கும் எடுத்துட்டு வந்து
சாப்பிடும். பட் இவன் சாப்பிட்டு கூட நான் பார்த்ததில்ல. அந்த டிவிக்கு பக்கத்துல சின்னதா
முகம் பார்க்குற கண்ணாடி இருக்குல, அத நான் நிற்கிற இடத்திலிருந்து பாருங்களேன்” என்று
சொல்லிவிட்டு கொஞ்சம் விலகினான்.
நான் அவன் சொன்னதைப் போல் பார்த்தேன்.
“என்ன தெரியுது அந்தக் கண்ணாடியில” என்று கேட்டான்.
“சோபா தெரிது” என்றேன்.
“பட் இந்த ஆங்குள்ள பார்க்கும்போது அவனும் சோபால தெரியணும்
தான?” என்று கேட்க, “ஆமா தெரியணும். ஆனா தெரியலையே!”
“ஏன்னா அவன் ஒரு பேய். பேய் கண்ணாடியில தெரியாது. அப்படி
ஒரு பேய் வீட்டில இருக்கிறது தெரியாம அந்த பொண்ணு இருக்குது. இப்போ புருப் பண்ணிட்டேன்
பாத்தீங்களா ப்ரோ?” என்று சொல்லிவிட்டு கஞ்சா பீடியை தரையில் போட்டு காலால் மிதித்து
அணைத்தான்.
நான் ஒரு நிமிடம் அனைத்தையும் கவனித்தபடியே நின்றுக்கொண்டிருந்தேன்.
அந்த சிறு முகம் பார்க்கும் கண்ணாடிக்கு கீழ் ஒரு ஆணியில் கேலண்டரும் அதே ஆணியில் ஐடி
கார்டும் தொங்கிக்கொண்டிருந்ததை பார்த்தேன். அவனிடம் “உங்க போன் தாங்க” என்று கேட்டு
வாங்கி கேமரா செயலியை திறந்து ஃப்ளாஷ் லைட்டை ஆப் செய்துவிட்டு ஐடி கார்டை போக்கஸ்
செய்து ஒரு போட்டோ எடுத்தேன்.
புகைப்படத்தை இரண்டு விரல்களால் விரிவாக்கி ஐடி கார்டை
பார்த்து அந்தப் பெண்ணின் பெயர் கவிதா ரங்கன் சோழிங்கநல்லூர் ஐ.டி பார்க்கில் விப்ரோ
கம்பெனியில் வேலை பார்க்கிறாள் என்று தெரிந்து கொண்டேன். இந்த தகவலை வைத்து அதே கைபேசியில்
இருந்த பேஸ்புக் செயலியில் இரண்டு நிமிடம் தேடினேன். அவளது ப்ரொபைலை கண்டுபிடித்தேன்.
மேரிட்டல் ஸ்டேட்டஸ் சிங்கிள் என்று இருந்தது.
நான் செய்வது அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த அவன்
“ஏன்? அவன் பாய் ஃப்ரெண்டாவோ? இல்ல பிரதராவோ கூட இருக்கலாம்னு யோசிக்கிறீர்களா” என்று
நான் எண்ணுவதை அவனே சொல்லிவிட்டு “நோ! அவன் ஒரு பேய். ஐ வில் ப்ரு யிட் ஃபர்தர்"
என்று கொடியில் தொங்கவிட்ட சட்டை போல் அவனது தோள்களில் தொங்கிக்கொண்டிருந்த மேல் சட்டையின்
கைப்பையிலிருந்து அந்த சிறிய பேனா மூடி சைஸ் டார்ச்லைட்டை எடுத்தான்.
“இந்த ஆங்குள்ள இருந்து லேசர் லைட் அடிச்சா அவன் தலைல
தான் அடிக்கனும். ஆனா லைட் டிவிக்கு கீழ இருக்கிற சுவரில அடிக்கும் பாருங்களேன்” என்று
சொல்லிவிட்டு லேசர் லைட்டை ஒரு நொடி ஒளிர விட்டு அணைத்தான்.
அவன் சொன்னது போல் அது அந்த சுவரின் மேல்தான் அடித்ததே
தவிர சோபாவில் அமர்ந்திருந்தவனின் தலையில் படவில்லை. “பேயிங்க மேல லேசர் லைட் அடிக்காது
ப்ரோ. அதுங்கல தாண்டிப் போயிடும்” என்றான்.
அவன் சொல்வது சரி தான். அந்தப் பெண் அப்படி ஒரு உருவம்
அங்கு இருக்கிறதே தெரியாதது போல் தான் இருக்கிறாள். ஆனால் இங்கிருந்து பார்க்கும் எங்களுக்கு
உருவம் தெரிகிறது. அப்படியென்றால் அவர்களுக்கும் எங்களுக்கும் இடையில் இருக்கும் இந்த
ஜன்னல் கண்ணாடியில் தான் ஏதோ விஷயம் இருக்க வேண்டும் என்று எண்ணினேன்.
கைபேசியில் சாளரங்களை போக்கஸ் செய்து மீண்டும் ஒரு
புகைப்படத்தை எடுத்தேன். புகைப்படத்தில் ஜன்னல் ஓரங்களை விரிவாக்கி பார்த்தேன். ‘மேஜிக்
விண்டோஸ்’ என்று சிறியதாக எழுதியிருந்தது.
அவனிடம் அதை காண்பித்த உடனே “நம்ப வீட்டு ஜன்னலுக்கும்
இதே பிராண்ட் கண்ணாடிதான் போட்டு இருக்கு” என்றான். நாங்கள் இருவரும் முகங்களை ஒருவரையொருவர் ஒரு நொடி
அமைதியாக பார்த்துக் கொண்டோம்.
அவன் வேகமாக கீழே இறங்கினான். நானும் அவனை பின்தொடர்ந்தேன்.
வீட்டின் பக்கவாட்டில் இருந்த ஒளிரும் சாளரங்கள் வழியாக
நாங்கள் இருவரும் உள்ளே நோக்கினோம். ஓர் மனித உருவம் தொலைக்காட்சியில் சன் டிவியில்
ஓடிக்கொண்டிருந்த கோவா திரைப்படத்தை பார்த்தப்படி தரையில் அமர்ந்திருந்தது.
அவன், அவனது மூக்கு கண்ணாடியை சரி செய்து கொண்டே என்னை
பார்த்தான். “நீங்க என்ன பிராண்ட் கண்ணாடி ஆன்லைன்ல வாங்கினீங்க?” என்று நான் அவனிடம்
கேட்க என்னிடமிருந்த அவனது கைபேசியை வாங்கி அந்த
விவரத்தை இரண்டு நிமிடங்களுக்கும் மேல் தேடினான். அவன் அணிந்திருக்கும் மூக்கு
கண்ணாடியை தயாரித்த நிறுவனத்தின் பெயரும் மேஜிக் விண்டோஸ் தான் என்று கண்டுபிடித்ததும்
நிமிர்ந்து என்னை பார்த்தான். ஆனால் நான் அப்பொழுது அங்கு இல்லாததால் அவன் கண்களுக்கு
என் உருவம் தெரியவில்லை.
அவனருகே இல்லை என்றாலும் அவன் என்ன செய்யப்போகிறான்
என்று எனக்கு நன்கு தெரியும். திரும்பவும் ஒரு பீடியைப் பற்ற வைப்பான். மாயச் சாளரத்தின்
வழியே தெரியும் காட்சிகளை தனக்கு ஏற்றவாறு தானே உருவாக்கிக் கொண்ட ஒரு தர்க்கத்தோடு
பார்த்துக் கொண்டிருப்பான். இதைத் தெரிந்து கொள்ள நான் அங்கு இருக்க வேண்டுமா என்ன?
மனிதர்கள் அனைவரும் அவர்களுக்கான மாயச் சாளரத்தின் வழியே தங்களுக்கே உரிய தனிப்பட்ட
புரிதலோடு உலகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறவர்கள் தானே. இதில் ஒரு விந்தை என்னவென்றால்,
எனக்கும் அவனுக்கும் தெரியும் காட்சிகள் வெவ்வேறல்ல. காரணம் நானும் அவனும் ஒன்றே.
No comments:
Post a Comment