Thursday, March 5, 2020

தம்மம் தந்தவன் - ஒரு மதிப்புரை - மாதவ்


தம்மம் தந்தவன் - ஒரு மதிப்புரை
சில வாடிக்கையாளர்களை சந்திக்கும் ஏற்பாட்டுடன் ஜனவரி, 2020ல் நான் ஔரங்காபாத் பயணித்தேன். ஒரு நாள் வேலை ஏதும் இல்லாததினால் எல்லோரா குகைகளை காண முடிவு செய்தேன். போவதற்கு முன் அந்த இடத்தினை பற்றிய வரலாறு, இன்னபிற ஐதீகங்கள் அறியும் பொருட்டு 'எங்கும் சுற்றி, ரங்கனைச்சேவி' என்று விக்கிபீடியாவை சரண்டைந்தேன்.
எல்லோரா குகைகள் பௌத்த, ஜைன, இந்து என மூன்று மதங்களின் நல்லிணக்க வெளிப்பாடாக கலந்து காணப்படும் ஒரு இடம். இவற்றில் விஸ்வகர்மா குகை என்றழைக்கப்படுவது பௌத்த மார்க்கத்தை சார்ந்த ஒன்று. இதன் மேல் கூரை வளைந்ததாகவும் கல்லினால் செய்யப்பட்ட வளைந்த சட்டங்கள் கொண்டதாயிருக்கும். இவை மரத்தினால் வடிக்கப்பட்டவை போன்ற தோற்றமளித்தாலும், கல்லினால் செய்யப்பட்டவையே.
அங்கு சென்ற பொழுது ஒரு புத்த பிக்கு ஆழ்ந்த குரலில், நிறுத்தி, நிதானமாக புத்தம் சரணம் கச்சாமி என்று ஜபித்துக்கொண்டிருந்தார். அந்த நாதம் அக்குகையை நிறைத்து, ததும்பி, ஒரு மகா ரீங்காரத்தோடு செவி வழி என்னை முழுமையாக ஆட்கொண்டது.
இதே நேரத்தில் கோயமுத்தூரில் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது. அவ்விழாவின் ஒரு பகுதியாக புதிய எழுத்தாளர்களையும் அவர்களின் படைப்புகளை அறிமுகப்படுத்துதலும் நடந்தது. அவ்வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒருவர் நண்பர் காளிப்ரஸாத். சென்னை ஜெயமோகன் வாசகர் வட்டத்தின் போது அவரின் அறிமுகம் கிடைத்தது. அவருடைய படைப்பு 'தம்மம் தந்தவன்'. இப்புத்தகம் விலாஸ் சாரங் என்ற மராத்திய எழுத்தாளரின் மொழிபெயர்ப்பு.
தம்மம் தந்தவன் சித்தார்தனின் பிறப்பிலிருந்து ஆரம்பிக்கிறது. இப்பிறப்பு ஒரு வெட்டவெளியில், சாலமரத்தின் கீழ் நிகழ்கிறது.
சித்தார்தன் குழந்தை பருவத்திலிருந்தே தன் தேடலை தொடங்கி விட்டான். ஓர் அரச குடும்பத்தில் பிறந்தும், அந்த சூழ்நிலையின் சுகங்களில் மனம் ஒப்பாமல் மக்களின் துயருக்கான காரண, காரியங்களை ஆராயத் தலைப்பட்டிருக்கிறான். ஒரு பசு போன்று வேடந்தரித்து தொழுவத்திலும், நாய் போன்றும், துறவறம் பூண்ட பிறகு சாவின் விளிம்பு வரை பட்டினி கிடந்தும் தன்னையே கடுஞ்சோதனைக்கு உள்ளாக்கி இருக்கிறான். My experiments with truthல் படித்த சுயவதையை சார்ந்த பரீட்சைகள்.
இப்புனைவு முழுவதும் மரங்கள் முக்கிய குறியீடுகளாக நிலைநிறுத்தப்படுகின்றன. ஓரிடத்தில் ஆப்பிள் மரத்தை பற்றிய குறிப்பு மிகவும் புத்திசாலித்தனமான செருகல். ஆப்பிள் மரத்தின் கீழமர்ந்து புவி ஈர்ப்பு விசையை பற்றிய ஞானமடைந்த ந்யூட்டன். அதற்கும்முன், ஆப்பிள் மரத்தின் கனியை சுவைக்க கூடாதென்னும் தடையை மீறி, ஆசையால் உந்தப்பட்டு அதை கடித்த ஆதாம், ஏவாளுக்கு கிடைத்த சாபம் முதலியன நம் மனக்கண் முன் விரிகின்றன. ஒருபுறம் ந்யூட்டனுக்கு கிடைத்த ஞானம், மறுபறம் ஆசையினால் விளைந்த கேடு. இவை இரண்டையும் ஊடுபடுத்தினால் நமக்கு கிடைக்கும் பிம்பமே, ஆசையை அறுத்து, போதி மரத்தின் கீழ் தவமிருந்து சித்தார்த்தன் கிடைக்கப்பெற்ற ஞானம். இதுவே சித்தார்த்தன் புத்தனாகிய தருணம். நாம் பேசும் eureka moment!
இன்று வரையில் இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றமதி புத்தமதம் தான் என்று எங்கேயோ படித்த ஞாபகம். இந்த மார்க்கம் வெறும் cult மட்டுமில்லாமல், ஒரு மிகப்பெரிய கோட்பாட்டிலும், சிந்தனை அடிப்படையிலும் நிறுவப்பட்ட கட்டமைப்பாக இப்புத்தகம் நிறுவுகிறது
இறப்பையே சோகத்தின் பிரதான காரணமாக கருதியிருந்த நினைப்பிற்கு மாறாக, புத்தர் பிறப்பையே சோகத்தின் ஊற்றுக்கண்ணாக பிரகடனப்படுத்தியிருக்கிறார். 'அந்த குழந்தையின் பிறப்பு, பிறவாமையைப் போதிப்பதில் வந்தடைந்தது' என்ற வர்ணனை ஒரு ஹைகூ கவிதை.
தத்துவ தளத்தில் புத்தர் தன் சீடர்களுக்கு போதித்தது ஒவ்வொரு தனி மனிதனும் ஒரு தீவாய் இருந்து தம்மத்தை கடைபிடிப்பதேயாம். இந்த கோட்பாடு எம்மதத்திலும் இல்லாத ஒன்றாக பதியப்பட்டிருக்கிறது. இந்து மதத்தின் அகம் ப்ரம்மா என்ற கோட்பாட்டை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டதா என தெரியவில்லை. விற்பனையைப்பற்றிய ஓரளவு பட்டறிவை தவிர வேறேதும் பாண்டித்யத்தை பெறாத நான் இதை இவ்விதம் ஐயுறுவதே மடமை.
இந்த வரலாறு நடக்கும் தருணங்களில் குறிப்பிடப்படும் நகரங்கள் இப்போதும் இருக்கின்றன. அவ்விடங்களின் பழைய பெயர்களையும் அதன் சமீபத்திய பெயர் பட்டியலும், அவைகள் தற்கால இந்திய, நேபாள வரைபடத்தில் எங்கே உள்ளன என்ற சித்திரமும் இருந்திருந்தால் இக்கதை இன்னமும் கூட ஆழமாக மனதில் பதிந்திருக்கக்கூடும்.


இது புத்தரின் வாழ்க்கையை பிறப்பிலிருந்து, இறப்பு வரை இட்டு செல்லும் ஒரு புனைவு. புத்தர் பிறந்து, முக்தியடைந்து, மறைவது வரை நம்மை ஒரு time capsule பயணம் செய்ய வைக்கிறது. புத்தரின் வாழ்க்கை கிமு என்பதினால் அவரின் வாழ்க்கைக்கும், இன்னபிற நிகழ்வுகளுக்கும் எழுத்து சான்றுகள் அதிகமின்றி, செவிவழி சரித்திரங்களையே ஆதாரங்களாக சார்ந்து எழுத வேண்டிய கட்டாயம். அதனால், இருக்கும் சான்றுகளை வைத்து இது கட்டமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறிருந்தும் இப்புத்தகம் ஒரு நிறைவை தருவதென்னவோ உண்மை.
இந்நிறைவிற்கான முக்கிய காரணம், புத்தரை ஒரு அப்பழுக்கில்லாத, தலையை சுற்றி ஒளிவட்டமுள்ள ஒரு கடவுளாக காட்ட முனையாததே. தம்மம் தந்தவனில் புத்தர் புலால் உணவை, குறிப்பாக காட்டுப்பன்றியை விரும்பி உண்பவராகவும், ஒரு கட்டத்தில் நிர்பந்தம் ஏற்படும் போது புலால் மறுப்பை அரை மனதுடன் ஏற்பவராகவும், வயோதிக காலத்தில் தன் இடத்தை சீடர்களுக்கு விட்டுக்கொடுக்க மறுப்பதுமான சில சாதாரண மானுட தருணங்கள் சித்தரிக்கப்படுகின்றன.
ஒரு காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பரவியிருந்த இத்தம்மம் எவ்வாறு தேய்ந்து, உரு தெரியாமல் ஆகிற்று என்கிற எண்ணமும் மேலோங்குகிறது. இதனை ஆராய தலைப்படும் புத்தகம் ஒரு management சார்ந்த புத்தகமாகவும் கருத்தில் கொள்ளப்படும்.
இப்புத்தகத்தை நான் பரிந்துரைக்கிறேனா, இல்லையா என்பது இரண்டு லட்சணங்களின் மூலம் தெரிவிக்க விரும்புகிறேன்
1.  படித்து முடிக்கும் வரையில் என் மனம் இப்புத்தகத்தை பற்றி பலவாறாக அசைபோட்டபடி இருந்தது.
2.  ஒரு விற்பனை பிரதிநிதி வாடிக்கையாளரை சந்திக்கும் போது, அந்த சந்திப்பு இன்ன பிற வாடிக்கையாளரை நோக்கி இட்டுச்சென்றாலே அது ஒரு வெற்றி பெற்ற சந்திப்பாக கருதப்படும். இப்புத்தகம் படித்த பிறகு என் எண்ணமெல்லாம் விலாஸ் சாரங்கின் மூலத்தையும், இப்புத்தகம் எழுத அவர் படிக்க தெரிவு செய்த மற்ற புத்தகங்களை பற்றி வட்டமிட்டபடி இருக்கிறது.
இந்த வெற்றி மூல புத்தகம் எழுதிய விலாஸ் சாரங்கிற்குமன்றி, தமிழில் மொழிபெயர்த்த காளிப்ரஸாதையும் சம பங்கு சாரும்.
Madhav
29 Feb., 2020

No comments:

Post a Comment