Friday, March 13, 2020

பெருங்கனவு - சிறுகதை - சந்துரு



பெருங்கனவு

1
கண்களை நாலாபுறமும் சுற்றி பார்த்தேன் .
ஒன்றுமே தெரியவில்லை
அந்த இடத்தில் இருட்டு போர்வை போல் போர்த்தப்பட்டு இருந்தது .
இருதயம் வெடித்து விடுவது போல் துடித்துக்கொண்டு இருந்தது.
தாகம் தொண்டையை கொஞ்சம் கொஞ்சமாக அறுத்துக்கொண்டு இருக்கிறது.
என்ன இடம் இது. எப்படியும் நடு இரவை தாண்டியிருக்கும்.
வெகு நேரமாக இருட்டில் ஓடுவதால், ஓட்டமும் , இருட்டும் ஓரளவுக்கு பழகி விட்டது.
யாரோ என்னை பின் தொடர்வதுபோல் இருந்தது
துரத்துபவன் யாரென்றே தெரியவில்லை.
ஆள் தானா, அதுவே சந்தேகமாக இருந்தது.
ஒரு உருவம் அது மட்டும் புரிகிறது.
வீட்டிற்கு எப்போது செல்வது , தெரியவில்லை ,
இந்த ஓட்டம் எப்போது முடியும்.
யசோதா இந்நேரம் ஊரையே கூட்டி இருப்பாள்.
தூரத்தில் ஒரு சின்ன வெளிச்சம் போல் ஒரு உயர்ந்த கட்டிடம் தெரிந்தது .
அதை நோக்கி இன்னும் வேகமாக ஓடினேன்.
நான் வேகமாக ஓடும் சத்தம் கேட்டு, பின்தொடர்ந்து யாரோ ஓடி வரும் சத்தமும் கேட்டது.
இதுதான் என் வாழ்வின் இறுதி ஓட்டம் என்னும் அளவுக்கு வேகம் இருந்தது.
அந்த கட்டிடத்தை நெருங்க நெருங்க அது ஒரு சர்ச் என தெரிந்தது.
கண்டிப்பாக யாராவது இருப்பார்கள் .கொஞ்சம் தெம்பு வந்ததும் ஓட்டம் இன்னும் வேகம் கூடியது.
சர்ச் அருகில் வர வர எப்படியும் பிழைத்து விடுவேன் என தோணியது.
சர்ச்சின் முகப்பில் ஒரு சின்ன வெளிச்சம் தெரிந்தது.
அருகில் சென்றேன் .
வெள்ளை அங்கி அணிந்த அவர் என்னை எதிர் பார்த்து காத்துஇருப்பது போல் தெரிந்தது.
"காப்பாத்துக்கங்க பாதர்" என அலறினேன்.
அவர் ஒன்றும் பேசாமல் தொங்கி கொண்டு இருந்த கயிற்றை பிடித்து இழுத்தார் .
அந்த கோவிலின் மணி அடித்தது.
அந்த நேரத்தில் அதன் ஒலி சத்தமாக ஒலித்தது.
திடீரென அந்த சத்தம் மிக பழக்கப்பட்ட சத்தம் போல் இருந்தது.
அடிக்கடி கேட்கும் ஒலி ஆயிற்றே.

என்னை யாரோ பிடித்து உலுக்குவது போல் இருந்தது.
டக்கென எழுந்து அப்படியே படுக்கையில் அமர்ந்தேன் .
என்னங்க , யாரோ செல்-ல் கூப்புட்டாங்க என சொன்னாள்.
செல்லை எடுத்து பார்த்தேன்.
குமார் இரண்டு மிஸ்ட் கால் என கைபேசி சொன்னது.
மணியை பார்த்தேன் காலை 4.45 மணி.
பின்னால் இருந்த லைட்டின் ஸ்விட்சை ஆன் செய்துவிட்டு பாட்டிலில் இருந்து கொஞ்சம் தண்ணீரை அருந்தி விட்டு திரும்ப குமாருக்கு கால் செய்யலாமா என யோசித்தேன்.
இரவு கண்ட கனவு இப்போது நினைவுக்கு வந்தது.
எ/சி குளிரையும் மீறி வேர்த்து இருப்பது தெரிந்தது.
அதற்குள் யசோதாவும் யாருங்க போன்ல என்றாள்.
குமார் என்றேன்.
இந்நேரத்துக்கா என்றாள்.
கைப்பேசி மீண்டும் ஒலித்தது. கையில் எடுத்தது சொல்லு குமாரு என்றேன் ,
அங்கிள் நான் விஜய் என்றவன் உடனே அழ ஆரம்பித்தான்.
என்ன ஆச்சு விஜய் என்றேன்.
அப்பா இறந்துட்டாரு என்றான்.
நீ எங்க இருக்க என்றேன்.
மதுரையில் அந்த பிரபல மருத்துவமனையின் பேரை சொன்னான்.
வீட்டுக்கு இப்ப கிளம்பிருவோம்.
அப்பாவோட பிரண்ட்ஸ்க்கு எல்லா நீங்களே சொல்லுங்க என்றான் அழுகையுடன்.
சரி விஜய் , பாத்துக்க , கிளம்பி வர்றோம் என்றேன்.
என பதற்றத்தை கவனித்தவள் என்ன ஆச்சு என்றாள்.
குமார் இறந்துட்டானாம் என்றேன்.
என்ன சொல்றீங்க என்றவள் அழுக ஆரம்பித்தாள்.
சீக்கிரம் கிளம்பு என்று சொல்லிவிட்டு ரூமில் இருந்து வெளியில் வந்தேன்.
அரை மணி நேரத்தில் கிளம்பினோம் .
கார் வேண்டாங்க , கால் டாக்ஸில போயிருவோம் என்றவள் அவளே போன் செய்து வரவழைத்துவிட்டாள்.
கால் டாக்ஸியின் பின் சீட்டில் இருவரும் ஏறினோம்.
சார் மீட்டர் பாத்துக்கங்க என்றார் டிரைவர்.
வண்டிய எடுங்க பாத்துக்கலாம் என்றேன்.
மதுர குரு தியேட்டர்ட்ட போங்க என சொல்லிவிட்டு கண்களை மூடினேன். 

குமார் !!

திண்டுக்கல்லில் தவிட்டுல் இருந்து ஆயில் பிரித்து எடுக்கும் அலையில் நான் வேலை செய்து கொண்டு இருக்கும்போது தான் குமார் எனக்கு பழக்கமானான். நான் கம்ப்யூட்டர் ,அவன் production டிபார்ட்மெண்ட் . பழக மிக எளிமையானவன் . நிறம் மாநிறம் தான்.
அனால் மிக நேர்த்தியாக இருப்பான்.
ஆரம்பத்தில் ஹலோ ஹலோ வென்று அரம்பித்து பின் மிக நெருக்கம் ஆனவன்.
ஏற்கனவே எனக்கு நெருக்கமான நண்பர்கள் எல்லாம் வேலை மற்றும் தொழில் நிமித்தம் ஒவ்வருவராக வேறு வேறு ஊர்களுக்கு சென்று கொண்டிருந்த நேரம்.
பாலு, ஷண்முகம் , கண்ணன் , குமார் மற்றும் நான் என ஒத்த வயதுடைய ஒரு நட்பு வட்டத்தை அந்த ஆலை எங்களுக்கு உருவாக்கி தந்தது.
இது போக லதா, மஹேஸ்வரி, புவனா, அனந்தி , காயத்திரி , பிரியா , சுதா, வசந்தி என மொத்தம் பனிரெண்டு பெண்கள் வேறு.
இதில் ப்ரியா மட்டும் என்னோடு கல்லூரியில் ஒன்றாக படித்தவள்
அவள் மூன்று வருடம் முடித்து வெளியேற நான் மட்டும் அங்கேயே மேற்பட்டிப்புக்கென ஒருவருடம் செலவழித்தேன்
வேலை செய்த மூன்று வருடங்களும் எதோ காலேஜ்க்கு போவது போல் தான் இருக்கும்.
ஒரு நாள் குமார் என வீட்டிற்கு வந்தான். சிறிது நேரம் அரட்டை அடித்துக்கொண்டு இருந்தோம்.
திடீரென பிரியா அவனை காதலிப்பதாக சொன்னான்.
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
அவளே சொன்னாளா என்றேன்.
ஆம் என்றான்.
சரி பாத்துக்கலாம் , இப்ப என்ன கொஞ்ச நாள் லவ் பண்ணுங்க அப்புறம் யோசிப்போம் என்றேன்.
அவன் சென்று விட்டான்.
கண்ணாடியில் முகத்தை பார்த்தேன்.
"சந்துரு வேண்டாம் , இது சரியல்ல " என கல்லூரி கடைசி வருடம் பிரியா என்னிடம் சொன்னது நினைவுக்கு வந்து போனது.
மிக மிக மோசமாக தாக்கப்பட்டதை போல உணர்ந்தேன்
குமாரும் , பிரியாவும் இப்போது என் நண்பர்கள்
மனதை தேற்றி கொண்டேன்
வாழ்க்கையில் தோற்று போனவன் போல இருந்தது
சில மணி நேரத்தில் சகஜ நிலைமைக்கு வந்துவிட்டேன்
ஆயினும் பொறாமை என கண்களில் தெரிந்தது
இப்படியே சில மாதங்கள் சென்றன.
அலுவலகத்தில் நிறைய மாறுதல்கள்
அவற்றில் சில என்னை நிறைய பாதித்தது
கல்லூரி தினங்களில் ஏற்பட்ட சில கசப்பான நிகழ்ச்சிகளை நான் இங்கு வந்து பின் தான் கொஞ்சம் கொஞ்சமாக மறக்க ஆரம்பித்தேன்.
  
சில நேரங்களில் நான் என்ன செய்கிறேன் என தெரியாது சில விஷயங்களில் ஈடுபட ஆரம்பித்தேன்.
கோபம் எப்போதும் என்னை விடாது துரத்த ஆரம்பித்தது.
எப்போதும் எரிந்து விழுந்து கொண்டே இருந்தேன்.

இப்போது சில நாட்களாக எனக்கு திண்டுக்கல்லை விட்டு வெளியேறு என ஓயாது ஒரு குரல் தலையில் ஒலித்துக்கொண்டே இருந்தது .
பெரிதாக எதையோ இழக்க போகிறோம் . ஓடு ஓடு என அந்த குரல் என்னை தினமும் இம்சித்தது .

காஞ்சிபுரத்தில் இதே போல ஒரு கம்பெனி உருவாகி கொண்டு இருந்த நேரம்.
அதன் MD எங்கள் அனைவரையும் அழைத்து காஞ்சிபுரத்துக்கு வந்து ஜாயின் பண்ணுமாறு கூறினார்.

அவர் சொன்ன சம்பளம் அனைவரின் மனதையும் மாற்றியது.
எனக்கு ஊரை விட்டு போனால் போதும் என்ற ஓரே நினைப்பு தான்.
அதனால் ஒத்துக்கொண்டேன்.

ஐந்து பேரும் அங்கு சென்றோம். ( நான், பாலு, கண்ணன், ஷண்முகம் , குமார் ) வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வேலைக்கு சென்று கொண்டு இருந்தோம்.
ஒரு நாள் காலை திடீரென பிரியா பெட்டியுடன் காஞ்சிபுரத்துக்கு வந்தாள்.
வீட்டில் பிரச்சனை என்றாள் .
ரெண்டே ரெண்டு நாட்கள் தான்.
வீடு பார்த்து, கோயிலில் கல்யாணம் செய்து வைத்து புது குடித்தனமும் ஆரம்பம் ஆகிவிட்டது.
சில மாதங்களுக்கு பின் இருவரின் பெற்றோரும்அவர்களின் வீட்டிற்க்கு வர ஆரம்பித்து விட்டார்கள்.

பின் ஒவ்வொருவராக வேறு வேறு ஊரில் செட்டில் ஆனோம்.
அனைவருக்கும் கல்யாணம் ஆகி விட்டது.
பாலு நாக்பூரில்,
கண்ணன் கோவையில் ,
ஷண்முகம் ரெட்-ஹில்ஸ்ல் ,
குமார் சேலத்தில் என.
நான் எல்லா ஊர்களுக்கும் போய்விட்டு இறுதியில் திண்டுக்கலுக்கே வந்து விட்டேன்.
அனைவருடனும் போனில் , ஈமெயில்-ல், வருடத்துக்கு ஒருமுறை நேரில் என தொடர்பில் உள்ளோம்.

இதில் குமார் மட்டும் கடந்த சில வருடங்களாக தொடர்பில் இல்லாமல் இருந்தான்.
போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
நான்கு மாதங்களுக்கு முன் பிரியா என்னை போனில் தொடர்பு கொண்டாள்.
வழக்கமான விசாரிப்புகளுக்கு பின் இப்போது மதுரையில் இருப்பதாக சொல்லி வீட்டு விலாசம் தந்து கண்டிப்பாக வருமாறு சொன்னாள்.
அந்த ஞாயிறே குமார் வீட்டிற்கு சென்றேன்.
கதவை திறந்தது குமாரின் பையன் . சிறு வயதில் பார்த்தது. வாங்க அங்கிள் என்றான்.
வாங்கி வந்த இனிப்பு பெட்டியை அவனிடம் கொடுத்துவிட்டு என்ன படிக்கிற என்றேன்.
4th இயர் BE என்றான்.
எங்கே என்றேன். வேலம்மாள் என்றான் .
குரூப் ?
மெக்கானிக்கல் என்றான்.

அதற்குள் பிரியா வந்தாள். வழக்கமான விசாரிப்புகள் முடிந்து, ஒரு டீயையும் குடித்து முடித்து ,
குமார் எங்கே என்றேன்.
வெளியே போயிருக்கிறார் , வந்துருவாரு என்றாள்.
அப்போதுதான் கவனித்தேன் இருவர் முகத்திலும் எதோ ஒரு விவரிக்க முடியாத வெறுமை இருந்தது.
அதிலும் பிரியா எப்படி இருப்பாள்.

இப்போது பார்க்கவே மிக பாவமாக இருந்தது.
பாதியாக இளைத்து இருந்தாள்.
நெற்றியில் சுருக்கங்கள்.
எதோ ஒன்று சரியில்லை என தோணியது.

என்ன ஆச்சு ,
குமார் போன் எப்பவுமே சுவிட்ச் ஆப் ஆகி இருக்கு.
எப்போ மதுரைக்கு வீடு மாற்றி வந்தீங்க என கேள்விகளை அடுக்கினேன்.
இங்க வந்து நாலு வருசமாச்சு. இது எங்க அப்பா வீடுதான் இது . அப்பா அம்மா ரெண்டு பேருமே இப்போ இல்ல. இறந்துட்டாங்க .

குமார் இப்ப என்ன பண்ணிட்டு இருக்கான் ?

2

குமார் இப்போ என்ன பண்ணிட்டு இருக்கான் ?

இந்த கேள்வியை எதிர் பார்த்தவள் போல உடனே அவளுக்கு அழுகை வந்தது.
விஜய் 'அம்மா அழுகையை நிப்பாட்டுங்க' என்றான் '

பிரியா சொன்னாள்.

சேலத்தில் எல்லாமே நன்றாகத்தான் இருந்தது .
சில வருடங்களுக்கு முன் குமாரிடம் குடிப்பழக்கம் ஆரம்பித்தது.
மாதம் ஒரு முறை பின் வாரம் ஒரு முறை அதன் பின் தினமும்.
ஒரு ஏ.ஜி.எம் குடித்துவிட்டு வந்தால் கம்பெனி என்ன செய்யும் .
அதை செய்தது. சம்பளம் இல்லை.
சேமிப்பு, நகை , அனைத்தும் விஜய்யின் படிப்புக்கு, வீட்டு வாடகைக்கு , குடும்ப செலவுக்கு, இவரின் தண்ட செலவுக்கு என கரைந்தது.
கடன் அதிகரித்தது. அதன் பின் மதுரைக்கு வந்து என் தந்தையுடன் இருக்க ஆரம்பித்தோம்.
வந்த இரண்டு வருடங்களிலேயே அவரும் மறைந்துவிட்டார்.
உறவினர் அனைவருடனும் இவர் போட்ட சண்டையில் இப்போது யாரும் வர போக இல்லை.
இவரின் அண்ணன் ஒரு நாள் வந்த போது அவரிடமும் பிரச்சனை ,
அது போலீஸ் வரை சென்றது.
வீட்டு வாடகை இல்லை.  மேலே இரண்டு போர்சன் வாடகை வருகிறது. ஓரளவுக்கு சமாளிக்கிறோம்.
விஜய் படிப்பு செலவு அனைத்தும் என் மாமா பார்த்துக்கொள்கிறார்.

அனைத்தையும் ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள் .

இப்போது சில நாட்களாக புதிதாக தொழில் தொடங்க போகிறேன் , இந்த வீட்டை விற்று விட சொல்கிறார். என்ன செய்வது என்றே தெரியவில்லை. இருக்குற வீட்ட வித்துட்டு எங்க போறது . ஐந்தாறு வருஷமா இவர் எந்த வேலைக்கும் போகவில்லை. என்னையும் வேலைக்கு போக அனுமதிக்கவும் இல்லை.
எல்லாத்தயும் சந்தேக படுகிறார்.

டீ அடிக்ஷன் எதுவும் ட்ரை பண்ணியா என்றேன்.

இரண்டு முறை செஞ்சுட்டோம் . ஓடி வந்து விடுகிறார்.

ஏன் இவ்வளவு நாட்கள் எங்களுக்கு தெரியப்படுத்தவில்லை என்றேன்.

இதைப் பற்றி யாரிடம் பேசினாலும் அவ்வளவுதான் , மிக கேவலமாக நடந்து கொள்கிறார்.
முரட்டுத்தனம் அதிகரித்து விட்டது.

பேசிக்கொண்டு இருக்கும் போதே வெளியே கேட் திறக்கும் சத்தம் கேட்டது.
விஜய் , பிரியா இருவரின் முகங்களிலும் பயம் தெரிந்தது.

உள்ளே வந்தவன் நின்றான்.
ஹாலில் இருந்த என்னை பார்த்தான்.
அவன் முகத்தில் ஒரு சின்ன புன்னகை வந்தது ஆனால் உடனே முகத்தை இறுக்கிக் கொண்டான்.
மெலிந்த தேகம், உடைகள் மிக லூசாக இருந்தன.
முகம் கோபமா சோகமா என சொல்ல முடியாததொரு தோற்றத்தை தந்தது.
கண்கள் உள்ளே சென்று இருந்தன .
செம்பட்டை தோய்ந்த கேசம்.
அவனுடைய தோற்றம் எனக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தியது.

வாடா , எப்ப வந்த என்றான்.

இப்பத்தா , எப்படி இருக்க என்றேன்

ம் ம் , நல்லா இருக்கே.
என்ன எல்லாக் கதையும் சொல்லிட்டாளா என்றவன் பிரியாவை ஒரு பார்வை பார்த்தான்.
பின் என்னை பற்றி மற்ற நண்பர்களை பற்றி கேட்டு தெரிந்து கொண்டான்.

இருவரும் சிறிது நேரம் அமைதியாக இருந்தோம்.
அந்த அமைதி தான் எனக்கு பெரிய பயத்தை அளித்தது.
ஒரு பெரிய மூச்சு என்னிடம் இருந்து வந்தது. மெதுவாக எழுந்தேன்.

ஏன்டா இப்படி.
இந்த பழக்கத்தை எல்லா விடேன் என்று சொல்லிக்கொண்டே அவன் தோளை பற்றினேன்.
சடாரென என் கைகளை தட்டி விட்டான்.
எந்த அறிவுரையும் எனக்கு வேணாம்.

இல்லடா ஓ ஒடம்ப பாரு.
பாக்கவே என்னவோ போல இருக்க.
பிரியாவப் பாக்க அதுக்கு மேலே இருக்கு.

ஏ பொண்டாட்டிய பாத்துக்க எனக்கு தெரியும். நீ பாத்துக்க வேண்டிய அவசியம் இல்ல

மிருகம் சீறியது.
சண்டைக்கு அழைக்கிறது .

இல்ல இல்ல என்ன தப்பா புரிஞ்சுக்காத ! மீண்டும் அவனை நெருங்கினேன் .

'அவ எப்படி இருக்கானு பாக்கத்தான' நீ வந்த
மிருகம் கோபத்தை தூண்டியது.

உள்ளே என் உடம்பில் ஒரு நாகம் முழித்து உடலை அசைத்தது .
மெதுவாக மேலே நகர ஆரம்பித்தது .
உடல் சூடாக மாறிக் கொண்டிருந்தது
நாகம் தலைக்கு வந்தது
தலையை தூக்கி பார்த்தது.
தான் எதற்கு வந்தோம் என்று மறந்தது.
சூழ்நிலையின் வீரியம் அதற்க்கு புரியவில்லை.
மூலையில் கொட்டியது. விஷம் உடம்பு முழுக்க பரவியது.
உடல் கொதித்துக்கொண்டு இருந்தது. எதிரே பார்த்தது.
நண்பன் தெரியவில்லை . போதையில் வக்கிரமான ஒரு மிருகம் தான் தெரிந்தது.
சட்டென அவன் கன்னத்தில் கொட்டியது.

சேரில் அமர்ந்து இருந்தவன் தடால் என அப்படியே கீழே சரிந்தான்.
விஜய் உடனே அவனை தூக்கினான். சேரில் அமர வைத்தான்.

இரு மிருகங்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டவள் என்ன செய்வது என தெரியாது அப்படியே நின்றாள்.

அவன் கன்னத்தில் அடித்தவுடன் , நாகம் அமைதி கொண்டது .
கோபம் குறைந்தது.
சூழ்நிலை புரிந்தது. குமாரை பார்த்தேன்.
சேரில் அமர்ந்தவாறு வாந்தி எடுத்துக்கொண்டு இருந்தான்.
பிரியா ஒரு டவலை எடுத்து துடைத்து விட்டாள்.
குமார் எழுந்தான். என்னை பார்த்தான். ஒன்றும் சொல்லாமல் ரூமுக்குள் சென்று விட்டான் .
என்னை பார்த்தவாறு பிரியாவும் சென்றாள்.

வாந்தியின் அருவருக்கத்தக்க வாடையும் அதைவிட அவன் பேச்சும் எனக்கு குமட்டியது.
வெளியே வந்தேன். செருப்பை மாட்டினேன்.
விஜய் பின்னாலேயே வந்தான் .
அவன் முகத்தில் ஒரு ஆற்றாமை தான் தெரிந்தது.
பாத்துக்க விஜய் , நா அப்புறம் காண்டாக்ட் பண்றேன் என சொல்லி விட்டு தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன்.

'சார் டோல்கேட் வந்துருச்சு'

நினைவுகள் கலைந்தன
யசோதா பைசா எடுத்து கொடுத்துக்கொண்டு இருந்தாள் .

நான் மீண்டும் கண்ணை மூடினேன்

3

மனுஷனா அவே

என்ன பேச்சு பேசிட்டான்
குடிச்சா என்ன வேனா பேசலாமா
நடந்ததை நினைக்கையில் வெட்கமாக இருந்தது.
அப்பன் அடிவாங்குறத எந்த மகனும் பொறுத்துக்க மாட்டான்.
ஒரு நிமிடம் விஜய் கண் முன்னே நின்றான்.
ஒரு சாரியாவது சொல்லி இருக்கலாம். எங்க இந்த கோபம் எல்லாத்தயும் கெடுத்துடுது.
வர வர கோபம் எல்லை மீறி கொண்டு இருக்கிறது.
மணி பார்க்கலாம் என்று கையை பார்த்தேன் . கை வெறுமையாய் இருந்தது.
கடிகாரம் எங்கோ விழுந்திருக்கிறது.
திரும்ப குமார் வீட்டிற்கு போய் தேட எனக்கு தைரியம் இல்லை.

எப்படியும் மணி ஒருமணிக்கு மேல இருக்கும்.
லேசாக பசித்தது. தலை வலி வருவதற்கான அணைத்து முஸ்தீபுகளும் உடம்பில் தெரிந்தது .
மெயின் ரோட்டுக்கு வந்து விட்டேன். பஸ் ஸ்டாப்பில் கூட்டமில்லை.
சாப்பிட்டு ஊருக்கு பஸ் ஏறலாமா இல்ல திண்டுக்கல் போய் சாப்புட்டுக்கலாமா மனதில் குழப்பம்.
வர வர எது எதுக்கு கொழப்பிக்கிறதுனு ஒரு விவஸ்தை இல்லாம போயிருச்சு.
பசி முடிவை எடுத்தது.

ஐந்து நிமிட காத்திருப்புக்குப்பின் பஸ் வந்தது.
அதில் ஏறி காளவாசல் இறங்கினேன். அங்கிருந்து சற்று நடந்து அரசரடியில் உள்ள அந்த உணவகத்துக்கு வந்தேன்.
உள்ளே நுழைந்தவுடன் 'சார் ஏ/சி ன்னா அப்படியே மேல போங்க' என்றான் இல்லேன்னா சாப்பாடு டோக்கன் வாங்கிக்கங்க என்றான்.
ஒரு நிமிடம் நின்றேன்.
ஏ/சிக்கே போயிருவோம் என் முடிவெடுத்து படிக்கட்டில் எற ஆரம்பித்தேன்.
படி ஏறி கதவை திறந்து உள்ளே நுழைந்தேன். முகத்தில் சில்லென குளிர் காற்று அடித்தது.

ஒரே இருட்டாக இருந்தது.
நிறைய பேர் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தனர். காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்தேன்.
தண்ணீர் கொண்டு வந்து வைக்க வந்தவனை இங்க ரெஸ்ட் ரூம் எங்க இருக்கு என்றேன்.
அவன் கை காட்டினான் அங்கு சென்று விட்டு பின் கை கழுவும் இடத்துக்கு வந்தேன்.
எதிரில் இருந்த கண்ணாடியில் முகத்தை பார்த்தேன். எனக்கே என் முகம் பிடிக்கவில்லை.
கண்கள் சிவந்து சற்று வீங்கி இருந்தது.
தலை கலைந்து இருந்தது.கைகளாலேயே சரி செய்தேன்.
கைகளில் சிறிது  தண்ணீர் பிடித்து முகத்தை கழுவினேன். மூன்று முறை அதே போல் செய்தவுடன்  முகத்தில் சற்று தெளிவு தெரிந்தது.

பின் என் இருக்கைக்கு வந்து அமர்ந்தேன். ஒரு செட் சப்பாத்தி ஆர்டர் செய்து விட்டு தம்பளரில் இருந்து தண்ணீர் குடித்தேன். அது சில்லென தொண்டையில் இறங்கியது. அந்த இடம் மிக அமைதியாகி தெரிந்தது. அந்த அமைதி ஒரு தனிமையை தந்தது.
கீழயே கூட்டத்தோட சாப்பிட்டு இருக்கலாம்.
இந்த அமைதி , குளிர் , இருட்டு அணைத்தும் என்னை பயமுறுத்தி கொண்டே இருந்தது. என்ன செய்யலாம் . ஒரே யோசனை . பாலு நினைவுக்கு வந்தான். கைபேசியில் அழைத்தேன்.
நடந்தது அனைத்தையும் சொன்னேன். பொறுமையாக கேட்டவன் ஒன்னு ஒர்ரி பண்ணிக்காத.
நானே மத்த பேர்கிட்ட பேசுறேன். கண்டிப்பா ஏதாச்சும் பண்ணணு.
இல்லேன்னா அவே வாழ்க்கையே போய்டும்.
நம்ப சேந்து பண்ணி வச்சது அவன் கல்யாணம்.
அப்பிடியே உட முடியாது. சரி பண்ணிரலாம் . எதையும் மனசுல வச்சுக்காத .
அவனுடன் பேசியவுடன் கொஞ்சம் தெம்பு வந்தது.

சாப்பிட்டு முடித்து பஸ் ஏறி ஊருக்கு வந்து விட்டேன். நடந்தது அனைத்தயும் வீட்டில் சொன்னேன். அமைதியாக கேட்டவள் சரி பாப்போம் என்றாள்.

அந்த வாரம் சற்று போராட்டமாகத்தான் இருந்தது. வேலைகளுக்கு மத்தியில் இதை கொஞ்சம் கொஞ்சமாக மறந்தே விட்டேன்.

வார இறுதி விடுமுறை அன்று காலை டிபன் சாப்பிட்டுவிட்டு டிவி பார்த்துக்கொண்டு இருந்தேன் .
அழைப்பு மணி அடித்தது.
எழுந்து கதவை திறந்து பார்த்தேன்

குமார் நின்று கொண்டு இருந்தான்.

4

குமாரை பார்த்தவுடன் திக்கென இருந்தது. சண்டை போட வந்திருப்பானோ என தோணியது. 

என்ன பாத்துக்கிட்டே இருக்க , உள்ள கூப்புட மாட்டியா !

கொஞ்சம் சமாளித்து உள்ள வா என்றேன்.

வெளியே செருப்பை அவிழ்த்து விட்டு உள்ளே வந்தான்

வந்தவன் ஹாலில் அமர்ந்தான்.

வாங்கன்னா , பிரியா வரலையா , அதையும் அழைச்சிட்டு வந்துஇருக்கலாம்ல , விஜய் சௌக்கியமா , பாத்து ரொம்ப நாள் ஆச்சு என யசோதாவின் வரவேற்பு இருந்தது.

வாங்க அங்கிள் இது முகுந்தின் வரவேற்பு

அவன் எல்லோரையும் விசாரித்தான். முகுந்தை அருகில் வரச்சொல்லி அவன் கைகளை பிடித்துக்கொண்டு நல்லா படிக்கணும், பெரிய ஆளா வரணும், முகுந்த் நெளிந்தான். பின் சரி அங்கிள் என் சொல்லி அவன் ரூமுக்குள் சென்று விட்டான்.

யசோதா டீ கொண்டுவந்து சோபா எதிரில் இருந்த சின்ன டேபிளில் வைத்துவிட்டு மதியம் சாப்பாடு சாப்ட்டுட்டுதான் போகணும் என்றாள்.

இல்லம்மா , நான் சேலம் போறேன். பழைய கம்பெனி ஜிஎம்மை பாக்கப்போறேன் , லேட்டாயிடும் , இன்னொரு நாள் எல்லோரோட வந்து ஒரு நாள் தங்கிட்டே போறேன் என்றான்

அமைதியாக இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருந்தேன். அன்று பார்த்ததை விட இப்போது கொஞ்சம் தெளிவாக தெரிந்தான். நீல நிற டீ.ஷர்ட்டும் , வெள்ளை நிற பேண்டும் அணிந்து இருந்தான். நெற்றியில் குங்கும பொட்டு வைத்து இருந்தான். கண்கள் கொஞ்சம் சிறுத்து போயிருந்தன. குடித்திருக்க வில்லை.ஆனால் அவன் கைகள் ஏன் நடுங்கி கொண்டு இருக்கிறது. டீ யை அருந்தும் போது அது இன்னும் நன்றாக தெரிந்தது.

வீடு தேடி வந்து இருக்கேன் , இன்னும் கோபம் போலயா ! எதோ யோசனையிலேயே இருக்க .

என் அமைதியை கலைத்தான்.

அதெல்ல ஒண்ணுமில்ல , அப்படியே பேச்சு சிறிது நேரம் நண்பர்கள் வட்டத்தை பற்றி , பழைய சம்பவங்களை பற்றி போனது.

இடையில் டீ டம்பளர்களை எடுக்க யசோதா வந்தாள்.

சரி நான் கிளம்புறேன். சேலம் போனும் என்றவன் தடாலென என் காலில் விழுந்தான் .

பின் அவனே எழுந்து என்ன மன்னிச்சுரு. போன வாரம் ஏ அப்படி நடந்துக்கிட்டேண்ணே எனக்கே தெரியல.

யசோதா பதறினாள்

எனக்கு சங்கடமாக இருந்தது. அதெல்லா அப்பவே மறந்துட்டேன். அதைப் பத்தியே யோசனை பண்ணிக்கிட்டு இருக்காதே என்றேன்.

பேண்ட் பாக்கெட்டில் இருந்து என் தொலைந்த கை கடிகாரத்தை எடுத்து என்னிடம் தந்தான்.

கட்டிக்க என்றான். என்ன நினைத்தானோ தெரியவில்லை என்னை அப்படியே கட்டி கொண்டு சாரிடா என்று சொன்னான்.

பின் அனைவரிடமும் சொல்லி கொண்டு கிளம்பினான். பஸ்ஸ்டாண்ட் வரை வருகிறேன் என்றவனை வேண்டாம் என சொன்னான். நான் தான் முகுந்தை பேருந்து நிலையம் வரை இறக்கி விட்டு வருமாறு சொல்லி அனுப்பி வைத்தேன்.

அவன் சென்றவுடன் மனம் சற்று நிம்மதியாக இருப்பது போல தெரிந்தது . ஒரு வாரமாக ஏதோ ஒரு சுமையை தூக்கிக் கொண்டு இருந்தது போலவும் இப்போது அது இல்லாதது போலவும் தோன்றியது.
ஐம்பது வயசுல எந்த ஈகோ வும் இல்லாம ஒருவன் காலுல விழ ஒரு தனி தைரியம் வேணும். இத்தனைக்கும் எங்க நட்பு வட்டத்தில் அவன் தான் அதிகம் படித்தவன்.

முகுந்த் வந்தான் . பேருந்து நிலையத்தில் விட்டு விட்டதாகவும் , ஆயிரம் ரூபாய் அங்கிள் கொடுத்தார் என்வும் சொன்னான்.
அந்த பணத்தை யசோதா வாங்கி வைத்து கொண்டாள்.
முகுந்த் ஏமாற்றமாய் என்னை பார்த்தான். பின் இருவரும் சத்தமில்லாமல் சிரித்துக் கொண்டோம்.

கொஞ்ச நேரம் டிவி அப்புறம் புக் என மதியம் வரை நேரம் போனது. பின் மதியம் அனைவரும் சாப்பிட்டோம். முகுந்த் ஹாஸ்டலுக்கு கிளம்பி கொண்டு இருந்தான். அவனை கொண்டு போய் பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு வரும் வழியில் ஒரு நான்கு முனை சந்திப்பு இருக்கிறது,ஒரு பாதை பேருந்து நிலையத்துக்கும்,
ஒன்று ரவுண்டு ரோட்டுக்கு,
ஒன்று நாகல் நகருக்கும்
மற்றொன்று ஆர்த்தி தேட்டருக்கும் செல்வது.
சந்திப்பின் ஒரு முனையில் ஒரு ஜிம் உள்ளது.
அதற்கு எதிரே திண்டுக்கல் ஸ்கேன் சென்டர் உள்ளது.
அதன் முன் சற்று பெரிய சாக்கடை ஓடி கொண்டு இருக்கும்.
சாக்கடைக்கும் ரோட்டுக்கும் இடையில் ஒரு நான்கு அடிக்கு மண் நிரம்பிய ஒரு இடம் உள்ளது.
மாலை நேரங்களில் அங்கு மீன் வறுத்து விற்கும் வண்டி, பானி பூரி போடும் வண்டி என மக்கள் அதிகம் நிற்கும் இடம் அது .
பகலில் அந்த இடம் காலியாகத்தான் இருக்கும்.
வண்டியில் வந்து அந்த திருப்பத்தில் திருப்பித்தான் எங்கள் வீட்டிற்கு வர வேண்டும்.
அந்த திருப்பத்தில் தான் பார்த்தேன். அந்த மணலில் யாரோ ஒருவன் குப்புற படுத்து இருந்தான்.
அவன் நீல நிற டீ.ஷர்ட்டும் , வெள்ளை நிற பேண்டும் அணிந்து இருந்தான்.
வண்டியை நேராக வீட்டிற்கு ஒட்டி வந்து விட்டேன்.
வீட்டினுள் நுழைந்து பேனை ஓட விட்டு சோபாவில் அமர்ந்தேன்.

என்ன செய்யலாம்

அவன் தானா ?
இந்த கேள்வியே தப்பு , அவனே தான்.
"தெரிந்தே கண்டு கொள்ளாமல் வந்திருக்கிறாய் .
நீ படித்தவன்
எல்லாம் தெரிந்தவன் போல அனைவருக்கும் அறிவுரை சொல்கிறாய்
நீ இப்படி செய்யலாமா"
உள்ளே இருந்து மனிதன் குரல் வருகிறது

கண்டிப்பாக குடித்து இருப்பான். எழுப்பி அன்று போல் அவன் பேச ஆரம்பித்தால் என்ன செய்வது. குடித்தவனை எப்படி வீட்டிற்க்கு தூக்கி வருவது. ஊரே வேடிக்கை பார்க்கும். இவ்வளவு நாட்கள் கட்டி காப்பாற்றிய கௌரவம் காற்றில் பறக்குமே.

உள்ளே இருந்து சாத்தான் சத்தமிடுகிறது.

மனிதனின் குரல்வலையை சாத்தானின் கைகள் கெட்டியாக பிடித்து அமுக்கியது.
சாத்தான் கைபேசியை சைலன்ட் மோடில் வைத்துவிட்டு எ/சி யை ஆன் செய்து படுக்கையில் படுத்தது. மனதுக்குள் எழுந்த அவ்வளவு கேள்விகளுக்கும் சாத்தான் அருமையாக பதில் அளித்தது.
நீ செய்ததுதான் சரி என சாத்தான் என காதுகளில் சொல்லி கொண்டே இருந்தது.
தூக்கம் வர மறுத்தது.
மணியை பார்த்தேன். மனைவியை அழைத்தேன்.
சினிமாக்கு கிளம்பு ,
என்னங்க திடிர்னு
தூக்கம் வரல , ஹிந்தி படம் பாக்கணும்னு சொன்னியே , மூணு மணிக்குத்தான் படம்
டக்குனு கிளம்பு என சொல்லிவிட்டு நான் கிளம்ப தயாரானேன்.

வீட்டிற்கு அருகில் தான் கார்னிவல் சினிமாஸ்
மறக்காமல் கைபேசியை வீட்டிலேயே வைத்துவிட்டு வீட்டை பூட்டிவிட்டு நடந்து சென்று டிக்கெட் எடுத்து உள்ளே சென்று இருவரும் இருக்கையில் அமர்ந்தோம். விளம்பரப்படம் ஓடிக்கொண்டு இருந்தது. அது முடிந்து மெயின் பிக்ச்சர் ஆரம்பித்தது.அணைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டன .
திரையில் மட்டும் ஒளி வெள்ளம்.

அந்த இருட்டு சாத்தானுக்கு தேவைப்பட்டது.
இருட்டுனுள் மனிதனை ஒளித்துவைத்த சாத்தான் சினிமா திரை வெளிச்சத்தில் மனதையும் புத்தியையும் கொண்டு சென்றது.
படம் முடியும் வரை எதை பற்றியும் நினைக்காத வாறு சாத்தான் பார்த்துக்கொண்டது. படம் முடிந்து வெளியே வரும் போது வெளியில் வெளிச்சம் கண்களை கூச செய்தது. வீட்டிற்கு வந்து கைபேசியை எடுத்துப்பார்த்தேன். மொத்தம் பதினேழு மிஸ்ஸுடு கால்கள். அதில் ஒன்பது பிரியாவின் நம்பர், மூன்று குமாரின் நம்பர் , மற்றவை ஆபீஸ் சம்பந்தப்பட்டவை.

என்ன ஆயிற்று
என்ன செய்யலாம்
மனிதன் மெதுவாக வெளியே வர ஆரம்பித்தான்.
யசோதாவிடம் வெளியே செல்வதாக சொல்லிவிட்டு வண்டியை எடுத்துக்கொண்டு நேராக குமார் கீழே கிடந்த இடத்திற்கு சென்றேன்.


5

வண்டியை எடுத்துக்கொண்டு நேராக குமார் கீழே கிடந்த இடத்திற்கு சென்றேன்.

அங்கே குமார் இல்லை.
குமார் இல்லை என தெரிந்தவுடன் கொஞ்சம் நிம்மதி.
உடனே பிரியாவை செல்லில் கூப்பிட்டேன். மறுமுனையில் 'ஹலோ' என்ற குரல் கேட்டவுடன் என்ன ஆச்சு பிரியா , நிறைய மிஸ்ஸுடு கால் பாத்தேன் . எதுவும் பிரச்சினையா என்று அடுக்கிக்கொண்டே போனேன்.
அடுத்தவர் குரலை உயர்த்தி பேசுமுன்னே என் குரல் உயர்ந்து மற்றவரை அடக்கி விட வேண்டும்.
என்ன பேசுவது என்று அடுத்தவன் குழம்ப வேண்டும். தான் சொல்ல வந்ததை அவன் மறந்து நான் சொன்னதே சரி என அவனுக்கு தோன்ற வைக்க வேண்டும்.
அதிலும் என்னிடத்தியில் ஏதும் தவறு இருந்தால் அவ்வளவுதான் எதிர் முனையில் இருப்பவனை யோசிக்க வைப்பதே இல்லை.
நானே கேள்வியும் கேட்டு நானே அதற்க்கு பதிலையும் சொல்லி அவனை பேச விடாமல் செய்து விடுவது என் பழக்கம்.

காலையில குமார் வந்து இருந்தான். கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்துட்டு சேலம் போறேன்னு கிளம்பி போய்ட்டானே . எதுவும் பிரச்சினையா.
பேசிக்கொண்டே போனேன்.
இடை மறித்த அவள் 'திண்டுக்கல் பேருந்து நிலையத்தின் அருகில் குமார் கிழே விழுந்து கிடப்பதை பார்த்து எதிரில் இருந்த கடைக்காரர் குமார் செல்லில் இருந்து போன் செய்ததாக சொன்னாள். என்னை அழைத்து பார்த்து நான் போனை எடுக்காததால் அவளும் விஜயும் கால் டாக்ஸியில் வந்து அவனை அழைத்து சென்றதாக சொன்னாள் .

செயற்க்கையாக ஒரு பதற்றத்தை வரவழைத்துக்கொண்டு ' ஐயோ அப்படியா' இன்னைக்கின்னு பாத்து செல்ல சைலென்ட்ல போட்டுட்டு தூங்கிட்டேன்.
இப்பதான் எடுத்து பாத்துட்டு கூப்பிட்டேன். ரொம்ப சாரி என்றேன்.
குமார் பக்கத்துல இருக்கானா ?
இல்ல அவர் தூங்கிக்கிட்டு இருக்கார்.
சரி பாத்துக்க , இது சம்பந்தமா எல்லாத்துகிட்டயும் பேசிட்டு அவனை சரி பண்ண எதாவது வழி இருக்குத்தானுக்கு பார்ப்போம் என்றேன்.

வீட்டிற்கு வந்து யாரிடமும் ஒன்றும் பேசாமல் தலை வலி என சொல்லிவிட்டு படுத்துவிட்டேன்.
நான் செய்தது ஆகப் பெரிய தப்பு.
குமாரை யாரென்றே தெரியாத ஒருவனுக்கு இருந்த பண்பு எனக்கில்லை. மிகவும் வெட்கமாக இருந்தது. என்னை பற்றி நினைக்கையில் அருவருப்பாக இருந்தது .
எதாவது செய்து இதை மாற்ற வேண்டும் என தோணியது.

அடுத்த நாள் முழுவதும் இந்த நிகழ்ச்சி என்னை தொந்தரவு செய்து கொண்டே இருந்தது. மதிய நேரம் பாலு,கண்ணன் இருவரையும் காண்பரன்ஸ் காலில் கூப்பிட்டு இதை பற்றி சொன்னேன்.
பொறுமையாக கேட்ட இருவரும் மாத இறுதியில் மதுரைக்கு சென்று அதன் பின் முடிவு செய்யலாம் என் பேசினோம்.
அந்த மாத இறுதியில் நான் அலுவல் நிமித்தமாக மகாராஷ்டிரா சென்று விட்டேன்.
அதற்கு அடுத்த மாதம் தீபாவளி வந்தது. இப்படியே ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம்.
மதுரை செல்வது தள்ளி போய்க்கொண்டே இருந்தது.
இதோ இப்போது நான் கிளம்பிவிட்டேன். அவனை சரி செய்ய அல்ல. அவனின் இறுதி சடங்கிற்கு.

கார் குரு தியேட்டர் வந்தவுடன் கீழே இறங்கி ஒரு மாலை வாங்கி கொண்டு குமார் வீட்டிற்க்கு வழி சொன்னேன். தெரு முனையிலே இறங்கி கால் டாக்ஸியை செட்டில் செய்து அனுப்பினோம்.
இருவரும் குமார் வீட்டை நோக்கி சென்றோம்.
வீட்டின் வெளியே அப்போதுதான் ஷாமியான போட்டு கொண்டு இருந்தார்கள்.
பிளாஸ்டிக் சேர் வரிசையாக போடப்பட்டு இருந்தது.
வெளியே கூட்டம் இல்லை. வீட்டிற்குள் நுழைந்தேன்.
இருவது பேராவது அந்த ஹாலில் பிரியாவை சுற்றி குழுமி இருந்தனர்.
நாங்கள் உள்ளே நுழைந்தவுடன் ப்ரியாவின் அழுகை அதிகம் ஆயிற்று.
மற்றவர்களுக்கு என்னை தெரியாது.
யசோதா பிரியாவை அணைத்து கொண்டு அழுதாள்.
அனைவரும் என்னையே பார்ப்பது போல எனக்கு தோன்றியது.

பிரீஸிர் பாக்ஸில் குமார் வைக்கப்பட்டு இருந்தான்.
மேலே மாலைகள் போடப்பட்டு இருந்தன.
அருகில் சென்று மாலையை அவன் காலடியில் வைத்து விட்டு அவன் முகத்தை பார்த்தேன்.
எங்கிருந்தான் என்று தெரியவில்லை, விஜய் அருகில் வந்தான்.
வந்தவன் என்னை கட்டிக்கொண்டு பெருங்குரல் கொடுத்து அழுதான்.
இவனை பார்த்து அங்கு இருந்த பெண்கள் அனைவரும் அழ ஆரம்பித்தனர்.
எனக்கு சுத்தமாக அழுகை வரவில்லை.
குமாரின் முகத்தை பார்த்துக்கொண்டே சிறிது நேரம் நின்றேன். அந்த முகம் இறந்த நிலையிலும் என்னை கண்டு பரிகாசம் செய்வது போல் இருந்தது.
திடீரென அவன் கண்கள் திறந்தன என்னை பார்த்து இப்போது திருப்தி தானே என அவன் வாய் உச்சரித்தது. பயந்தேன்.
சுற்றிலும் பார்த்தேன்.
அமர்ந்து இருந்த அனைவரும் என்னை பார்த்து சிரிப்பது போல தோணியது.
அதிலும் பிரியா என்னை பார்த்து கைகொட்டி சிரிப்பது போல இருந்தது.
யசோதாவை பார்த்தேன் , அவளும் மற்றவர்களை போல என்னை கண்டு சிரித்தாள் . சுய நினைவுக்கு வந்தேன். அனைவரும் அழுது கொண்டுதான் இருந்தனர் .

வெளியே வந்தேன். ஒரு சேரில் அமர்ந்தேன். அதற்குள் நண்பர்கள் அனைவருக்கும் sms மற்றும் whatsup ல் செய்தியை அனுப்பினேன்.
சிலருக்கு நானே கால் செய்து சொன்னேன்.
குறுந்செய்தியை பார்த்துவிட்டு நண்பர்கள் என்னை அழைத்தனர்.
முதல் சில அழைப்புகளுக்கு ஒவ்வருமுறையும் நான் உணர்ச்சி வயப்பட்டுக்கொண்டே இருந்தேன்.
போக போக அதுவே குமார் இறந்தது ஒரு தினப்பத்திரிக்கையில் வரும் செய்தியை வாசிப்பது போல உணர்ந்தேன்.

சற்று முன்பாகவே நாள் ஒதுக்கி இங்கு வந்திருக்கலாம்.
நான் கொஞ்சம் முயன்று இருந்தால் மற்றவரையும் இழுத்துக்கொண்டு வந்து இருப்பேன்.
ஏன் செய்யவில்லை.
இவன் இப்படி செத்து போவான் என எனக்கு தெரியாதா இல்லை இந்த குடிகாரன் இறக்கட்டும் அதுதான் இந்த குடும்பத்துக்கு நல்லது என இருந்து விட்டேனே ! எனக்கே என் மேல் கோபமும் , சந்தேகமும் வந்தது.
எது எப்படியோ குமார் என ஒருவன் இருந்தான் . இப்போது அவன் இல்லை
இது மட்டும்தான் உண்மை.

விஜய் அருகே வந்து , அம்மா உங்களை அழைக்கிறார்கள் என்றான்.
குழப்பமான சூழ்நிழையில் உள்ளே சென்றேன்.
உள்ளே ஹாலை கடந்து உள்ளே ரூமினுள் சென்றேன். அங்கே யசோதா , பிரியா இருவரும் இருந்தனர்.
ப்ரியாதான் ஆரம்பித்தாள்.
நீ இங்க வந்துட்டு போனபின் அடுத்தடுத்த நாட்களில் குமார் மிகவும் குழம்பி போனதாகவும் என் முகத்தை பார்க்கவே வெட்கப்படுவதாகவும் புலம்பி இருக்கிறான்.
பின் எனக்காக ஒரு கடிதம் எழுதி அதை கொடுக்கத்தான் திண்டுக்கல் வந்து உள்ளான் .
ஆனால் என்னிடம் கொடுக்கவில்லை.
நேற்று மருத்துவமனைக்கு செல்லும் முன்பு அதை என்னிடம் சேர்க்குமாறு சொல்லி இருக்கிறான்.
சொல்லிவிட்டு என்னிடம் அந்த கடிதத்தை கொடுத்தாள். பின் கண்களை துடைத்துக்கொண்டு குமாரின் அருகே சென்று அமர்ந்து விட்டாள்.
யசோதாவும் என்னை பார்த்துக்கொண்டு ஹாலுக்கு சென்று விட்டாள்.
யசோதாவின் பார்வை ஏதோ சொல்ல வருகிறது
அது என்னவென்று புரியவில்லை.
அவர்கள் அனைவரின் அழுகைக்கும் எனக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பது போல உணர்ந்தேன்.
உள்ளே மூச்சு முட்டியது . வெளியே வந்து விட்டேன்

காலை முதல் எல்லாமே நாடகம் போல இருக்கின்றது.
நான் கடிதம் எழுதி பல ஆண்டுகள் ஆகிறது .
எனக்கும் பர்சனல் கடிதங்கள் வந்து ஆண்டுகள் பல ஆகின்றது .
குமாரின் கல்யாணம் முடிந்துஅவன் ஆபீஸ் ஜாயின் செய்த அன்று எனக்கு ஒரு கடிதத்தை கொடுத்து வாசிக்க சொன்னான். அதில் எனக்கும் மற்றவருக்கும் நன்றி தெரிவித்து எழுதி இருந்தான்.
இது எதுக்குடா என்றேன். பேசிய அனைத்தும் ஒரு நாள் மறக்கலாம்
ஆனால் பதிவு செய்தவை என்றும் மறக்காது என அவன்  சொன்னது நினைவுக்கு வந்தது.

இன்று வரை சில பதிவுகளை பொக்கிஷம் போல் பாதுகாத்து வருகிறேன்.

மெதுவாக அந்த வீட்டிலிருந்து வெளியே நடக்க ஆரம்பித்தேன். அங்கே அமர்ந்து கடிதத்தை படிக்க விருப்பமில்லை. இதில் என்ன பதிவு உள்ளதோ.தெரியவில்லை.
தெரு முனைக்கு வந்து அந்த கடிதத்தை பிரித்தேன்.

------------------------------

6

தெரு முனைக்கு வந்து அந்த கடிதத்தை பிரித்தேன்.

ஒரு வெள்ளை தாளில் கருப்பு மையினாலஎழுதப்பட்டு இருந்தது.
படிக்க ஆரம்பித்தேன்.

டியர்சந்துரு


முதலில் நீ மதுர வந்த அன்று வீட்டில் நான் நடந்துகொண்ட முறைக்கு என்னை மன்னித்துக்கொள்.
நீ பார்த்த பழைய குமார் இப்போது இல்லை.
அன்று நீ பார்த்தது ஒரு குடி நோயாளியை .
சில வருடங்களாகவே இந்த பழக்கம் என்னை தொற்றிக்கொண்டு விடமாட்டேங்குது.
வீட்டில் எப்போதும் சண்டைதான்.
பிரியா மிக நல்லவள்.
ஆனால் நான் குடிப்பது அவளுக்கு ஏனோ பிடிக்கவில்லை.
சில மாதங்களுக்கு முன் தெரு முனையில் அளவுக்கு அதிகம் குடித்துவிட்டு வந்து விழுந்துவிட்டேன்.
இதை வீட்டில் யாரோ சொல்ல விஜய் என்னை தூக்கி கொண்டு வந்து வீட்டில் போட்டான்.
அதற்க்கு மறுநாள் வீட்டில் பெரிய வாக்குவாதம் .
ஒரு கட்டத்தில் என்னை காதலித்ததுதான் தன் வாழ்வின் மிக பெரிய பாவம் என்றாள். பொறுத்துக்கொன்டேன். ஆனால் அதற்க்கு அடுத்து அவள் சொன்னது
(இடையில் வாக்கியங்கள் தெரியாத அளவுக்கு அடிக்கப்பட்டது இருந்தது , அவனேதான் அடித்து உள்ளான்)

என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. நீயே சொல் , அது உண்மை தானா .
நீ மட்டுமே பதில் சொல்ல முடியம். இதை நினைக்கும் போதெல்லாம் அளவுக்கு அதிகம் குடிக்கிறேன்.

யோசித்து பார்த்தால் குடிப்பதற்கு ஒரு காரணம் வேண்டும். இதை பிடித்துக்கொண்டேன் குடிக்க .

(நிறைய வரிகள் எழுதி அவை அடிக்கப்பட்டு இருந்தது )

நேரம் கிடைத்தால் திரும்ப என்னை வந்து பார். எங்காவது ஒரு வாரம் நண்பர்களுடன்  வெளியே , வெளியூர் , கோயில் எங்காவது போவோம் . கண்டிப்பாக நான் இதை விட்டு விடுவேன். இது நடந்தால் கண்டிப்பாக நான் மீண்டு விடுவேன் என தோணுகிறது.

காஞ்சிபுரத்தில் நாம் அனைவரும் இருந்தோமே அங்கு வேண்டுமானாலும் கூட செல்லலாம்.

அவ்வளவுதான் எழுதி இருந்தான். கடிதம் முற்று பெறவில்லை. கீழே அவன் கையெழுத்தும் இல்லை.

எதை சொல்கிறான்.
பிரியா என்ன சொன்னாள்.
எனக்கு உண்மை தெரியும் என்கிறான். எனக்கு மட்டும் பதில் தெரியும் என்கிறான். யோசித்து யோசித்து தலை தான் வலித்தது.

காலையில் இருந்து சாப்பிடவில்லை.
எதிரில் இருந்த சின்ன மெஸ்ஸில் இரண்டு இட்லியும் ஒரு காபியும் குடித்துவிட்டு அதன் அருகில் இருந்த மெடிக்கல் ஷாப்பில் தலைவலி வில்லையும் , தண்ணீர் பாட்டிலும் வாங்கிக்கொண்டு அந்த பஸ் ஸ்டாப்பில் வந்து அமர்ந்தேன்.
மாத்திரையை சாப்பிட்டு தண்ணீர் குடித்தேன்.


இதே பஸ் நிறுத்தத்தில்தான் குமாரை அடித்துவிட்டு வந்து அமர்ந்து இருந்தேன்.
அன்று அவன் சொன்னது நினைவுக்கு வந்தது.
எனக்கும் பிரியாவுக்கும் இடையில் எதோ இருப்பதாக முடிவு செய்துகொண்டு தான் அன்று அவ்வாறு பேசி உள்ளது தெரிகிறது.

நண்பர்களுக்கு உடனான பிரச்னையில் எப்போதுமே என் தலை தான் உருள்கிறது.
அது ஏன் என்றே தெரியவில்லை.
இப்போது புதிதாக இது. யாரிடமும் இதை பற்றி பேச முடியாது.
ஒருவன் இறந்து விட்டான். பிரியாவிடம் சான்ஸே இல்லை . எது எப்படியோ இன்னும் சில நாட்களுக்கு எனக்கு நிம்மதி என்பது இல்லை.

எனக்கு இந்த தண்டனை வேண்டும்.
கொஞ்சம் சிரமம் பார்க்காமல் வந்து இருந்தால் இவனை காப்பாற்றி இருக்கலாம். என்ன பெரிய வேலை.

எங்கெங்கோ போகிறோம். சித்தப்பாவின் சம்பந்தி, மனைவியோட அத்தையின் தந்தை என அதிகம் பார்க்காத பேசாத பழகாதவர்களின் விசேஷங்களுக்கு போகிறேன்.

என்னுடனே இருந்தவன். ஆறு வருடம் ஒவ்வொரு நிகழ்வையும் பகிர்ந்து கொண்டவன். திருமணம் ஆனவுடன் எல்லாம் மறந்து விட்டது.

பணம் அது மட்டும் தான் தெரிகிறது.
அதற்காக எங்கெங்கோ செல்ல நேரம் உள்ளது. நண்பனுக்கு உதவ மட்டும் டயம் இல்லை.

ஒருவன் சாவுக்கு கார் பிடித்து மாலை வாங்கிக்கொண்டு வர முடிகிறது.
இருக்கும் போது வர முடியவில்லை.
சாவுக்கு வரவில்லை எனில் இந்த ஊர் சாடும் .
அதற்க்காகத்தான் வந்து இருக்கிறேனோ.

வெகு நேரம் அமர்ந்து இருந்தேன். மனம் முழுவதும் ஒரே வெறுமை. கடிதத்தை கிழித்து போட்டேன். கொஞ்சம் தேவலாம் போல இருந்தது. 

ஆயிரம் கேள்விகள் என்னை போட்டு குடைந்து கொண்டே இருந்தது.



என்ன செய்ய போகிறேன்


7

ஆயிரம் கேள்விகள் என்னை போட்டு குடைந்து கொண்டே இருந்தது

எழுந்து குமார் வீட்டை நோக்கி நடந்தேன்.
சங்கூதும் சவுண்டி அவனுடைய வேலையே செய்து கொண்டு இருந்தான்.
நண்பர்கள்  உறவினர்கள் வந்து கொண்டே இருந்தார்கள்.
நேரம் செல்ல செல்ல அந்த வீட்டின் முன் ஒரு உக்கிரம் குடி கொண்டிருப்பது போல் தெரிந்தது.
நடப்பவை அனைத்தும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் அமைதியாக அமர்ந்து பார்த்துக்கொண்டே இருந்தேன். 

தானியங்கி சுடுகாட்டிலிருந்து ஆம்புலன்ஸ் வந்தது
குமார் இப்போது வெளீயே கிடத்தப்பட்டு இருந்தான்.
சாங்கியங்கள் அனைத்தும் முடிந்து குமார் தெரு முனை வரை தூக்கி வரப்பட்டு அம்பூலென்ஸில் ஏற்றப்படும் வரை அழுகை சத்தமும்
" கோவிந்தா கோவிந்தா " என்ற குரலும் உச்சஸ்தாயில் கேட்டுக்கொண்டே இருந்தது.
ஆம்புலன்ஸில் நானும் ஏற்றப்பட்டேன். இடுகாடு வரும்வரை அவன் முகத்தை பார்த்துக்கொண்டே இருந்தேன்.


கடிதத்தில் அவன் எழுதிய வரிகள் என்னுள் ஓடிக்கொண்டே இருந்தது. எந்த உண்மையை அறிய அவன் ஆசைப்பட்டான். அதுதான் அவன் கடைசி ஆசையா! நினைக்க நினைக்க என் தலையில் பாரம் ஏறிக்கொண்டே இருப்பது போல உணர்ந்தேன். இன்னும் எவ்வளவு நாட்கள் இதை தூக்கி சுமப்பது.

இடுகாடு வந்தது.
கீழே இறங்கினேன்
குமாரை இறக்கினார்கள்
நேரே தகன மேடை முன்பு கிடத்தப்பட்டான்
அங்கும் சடங்குகள் அரங்கேறின.
சடங்குகள் முடிந்தது
குமார் தகன அறைக்குள் கொண்டு செல்லப்பட்டான்
முகத்தை இறுதியாக ஒரு முறை பார்க்கச்சொன்னார்கள்
கோவிந்தா கோவிந்தா சத்தம்
குமார் மேல் சூடம் வைக்கப்பட்டது
விஜய் அதை கொளித்தினான்
சூடம் ஏறிய ஆரம்பித்தது
திரும்ப கோவிந்தா கோவிந்தா சத்தம்
இரும்பு ட்ராலி உள்ளே தள்ளப்பட்டது
தீயின் பிழம்பு தெரிந்தது
வெள்ளை துணி முதலில் கருகியது
அவ்வளவுதான்
அந்த ஷட்டர் மூடப்பட்டது.

வெயிட் பண்ணுங்க
ஒரு மணிநேரத்தில் ஆயிடும் 
அனைவரும் கலந்து வெளியே வந்தோம்


தகன அறையின் முன்னாள் ஒரு பெரிய புல் வெளி.
அழகாக இருந்தது. முன்பெல்லாம் சுடுகாடு ஒரு பயத்தை தரும் . இப்போது ஒரு அமைதி அங்கு இருந்தது. வந்தவர்கள் அமர பெரிய ஹால் ஒன்று இருந்தது.
சிலர் அமர்ந்திருந்தனர். பலர் கிளம்பிவிட்டனர். அங்கிருந்த ஸ்பீக்கர்-ல் ஒரு பெண்ணின் குரல் பாடிக்கொண்டு இருந்தது.

நான் அந்த பாட்டில் கவனத்தை செலுத்தினேன்

'ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க

ஜென்மமும் பூமியில் புதியது இல்லை
மரணத்தை போலொரு பழையதும் இல்லை

மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்

இடத்தின் அமைதியும் பாட்டின் வரிகளும் குரலின் சோகமும் என்னுள் மெல்ல இறங்கியது.
கண்கள் மெதுவாக மூடி மூடி திறந்தன.
வெளியே இருட்டு மெதுவாக பரவ ஆரம்பித்தது.
அருகில் இருந்தவர்களின் பேச்சுக்கள் எங்கோ தொலைவில் கேட்பது போல் இருந்தது.
அந்த இருட்டு என் மேலும் பரவியது
  
திண்டுக்கல் குமார் பாலு கண்ணன் ஷண்முகம் தவிடு புண்ணாக்கு புவனா பிரியா ஷாந்தி கம்பெனி புராடெக்ட் லீவு கம்ப்யூட்டர் சினிமா பிரியா காதலிக்குறா காஞ்சிபுரம் புது கம்பெனி வீடு மேனேஜிங் டைரக்டர் குமார் கல்யாணம் ஹோட்டல் சாப்பாடு சேலம் வேலூர் கோவை மதுரை பிரியா போன் விஜய் குடி அடி கீழ விழு எந்திரி மன்னிச்சுக்கோ என்ன செய்றது முகுந்த் யசோதா ஆயிரம் ரூபா விழுந்து கிடந்தான் கார்னிவல் சினிமா மிஸ்ட் கால் பாலு கண்ணன் ரயில் மகாராஷ்டிரா கோலாப்பூர் பூனே மறதி தீபாவளி புது டிரஸ் பட்டாசு ஸ்வீட் போன் கால் டாக்ஸி குரு தியேட்டர் மாலை குமார் பிணம் பிரியா லெட்டர் நீயே சொல் அது உண்மை தானா சிரிப்பு அழுகை உண்மை பொய் எண்ணெய் வைக்கிறவங்க மாலை சீயக்காய் சங்கு சத்தம் பொணத்த குளிப்பாட்டு சந்தனம் வை வளையலை உடை மூதேவி போ போ சீதேவி வா வா ஊதுவத்தி கோடித்துணி பாத்து தூக்கு கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

நீயே சொல் அது உண்மை தானா !
நீயே சொல் அது உண்மை தானா !
நீயே சொல் அது உண்மை தானா !

 ஓடு ஓடு ஓடு 
இருட்டு இருட்டு இருட்டு 

நாலாபுறமும் சுற்றி பார்த்தேன் . கண்ணுக்கு ஒன்றுமே தெரியவில்லை அந்த இடத்தில் இருட்டு போர்வை போல் மேலே போர்த்தப்பட்டு இருந்தது . இருதயம் வெடித்து விடுவது போல் துடித்துக்கொண்டு இருந்தது. தாகம் தொண்டையை கொஞ்சம் கொஞ்சமாக அறுத்துக்கொண்டு இருக்கிறது. என்ன இடம் இது. எப்படியும் நடு இரவை தாண்டியிருக்கும். வெகு நேரமாக இருட்டில் ஓடுவதால், ஓட்டமும் , இருட்டும் ஓரளவுக்கு பழகி விட்டது. துரத்துபவன் யாரென்றே தெரியவில்லை. ஆள் தானா, அதுவே சந்தேகமாக இருந்தது. ஒரு உருவம் அது மட்டும் புரிகிறது. வீட்டிற்கு எப்போது செல்வது , தெரியவில்லை ,இந்த ஓட்டம் எப்போது முடியும். யசோதா இந்நேரம் ஊரையே கூட்டி இருப்பாள். தூரத்தில் ஒரு சின்ன வெளிச்சம் போல் ஒரு உயர்ந்த கட்டிடம் தெரிந்தது . அதை நோக்கி ஓடினேன். நான் ஓடும் சத்தம் கேட்டதும் பின்தொடர்ந்து யாரோ ஓடி வரும் சத்தமும் கேட்டது. இதுதான் என் வாழ்வின் இறுதி ஓட்டம் என்னும் அளவுக்கு வேகம் இருந்தது. அந்த கட்டிடத்தை நெருங்க நெருங்க அது ஒரு சர்ச் என தெரிந்தது. கண்டிப்பாக யாராவது இருப்பார்கள் .கொஞ்சம் தெம்பு வந்ததும் ஓட்டம் இன்னும் வேகம் கூடியது. சர்ச் அருகில் வர வர எப்படியும் பிழைத்து விடுவேன் என தோணியது. சர்ச்சின் முகப்பில் ஒரு சின்ன வெளிச்சம் தெரிந்தது. அருகில் சென்றேன் . வெள்ளை அங்கி அணிந்த அவர் என்னை எதிர் பார்த்து காத்துஇருப்பது போல் தெரிந்தது. காப்பாத்துக்கங்க பாதர் என அலறினேன். அவர் ஒன்றும் பேசாமல் தொங்கி கொண்டு இருந்த கயிற்றை பிடித்து இழுத்தார் .அந்த கோவிலின் மணி அடித்தது. அந்த நேரத்தில் அதன் ஒலி சத்தமாக ஒலித்தது. திடீரென அந்த சத்தம் மிக பழக்கப்பட்ட சத்தம் போல் இருந்தது.
அடிக்கடி கேட்கும் ஒலி ஆயிற்றே.

என்னை யாரோ பிடித்து உலுக்குவது போல் இருந்தது. 

Chandru...
9842570395

No comments:

Post a Comment