அவள் தம்பியை அந்த திருவிழாக் கூட்டத்தில்
தேடிக்கொண்டிருந்தோம். இருட்டிவிட்டதால் கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது. அவன் வந்திருப்பது
உறுதியென்றால் இன்னும் கொஞ்ச நேரத்தில் அவளும் அவளின் பாதுகாப்புக் கொடுக்குகளும் வந்துவிடுவார்கள்.
“டேய் வெண்ண, எல்லாரும் திருவிழா முடிஞ்சு
கெளம்பிட்டாங்கடா இனிமேயுமா வறப்போறா” என்றான் மணி.
“இனிமேதான்டா அவங்கெ வருவாங்கெ. அதான்டா
அவெங்க அப்பன் டிரிக்கு” என்றான் ராக்கேஷ்.
“பொண்னப்பெத்தாலே அறிவாளியாயிடுவாங்கெ
போல” என்றேன்.
“மாப்ள, ஒனக்கும் தங்கச்சி இருக்குள”
என்றான் பரா.
“அதனாலதான், எங்க அப்பா அறிவாளியா இருக்காரு”
என்றேன்.
“போடு, தகிட தகிட” என்றான் பரா.
இறுதியாக அவள் தம்பியைக் கண்டுபிடித்துவிட்டோம்.
அவள் கொடுக்குகளுடன் வளையல் கடைக்குள் நுழைந்துவிட்டாள். அவள் வெளியே வரட்டும் எனக்காத்திருந்தோம்.
“அத பாக்குறதுக்கு பதிலா அவுக அக்காவையாவது
பாக்கலாம். அவ்க அக்காதான் செமயா இருக்கு” என்றான் கோபால்.
ராக்கேஷ் வாயைக்கோணிக்கொண்டு சிரித்தான்.
காசியும் கோபாலும் கைகளை அடித்துக்கொண்டனர். நான் அவள் அக்காவை உற்றுப்பார்த்தேன்.
அப்படி ஒன்றும் அழகாய் இல்லை. அதோடு அவளுக்கு அரும்பு மீசை முளைத்திருப்பதுபோல் இருந்தது.
மீசையைப்பற்றி சொல்ல வாயெடுத்தேன். பாரதியார் பாட்டெல்லாம் வேறு பாடி வைத்திருக்கிறோம்
என்பதால் விட்டுவிட்டேன்.
பாரா கோபாலைப் பார்த்து “அப்டியெலா சொல்லாத
மாப்ளா. என்ன இருந்தாலும் அவ ஒரு அழகுடா. அந்த மஞ்ச கலர் சுடிதார்ல. தகிட தகிட” என்றான்.
“டேய், நா அவள பாத்துகிட்டு இருக்கேன்டா”
என்றேன்
“அவ ஒன்னைய பாக்குறாளா. அதான் இங்க முக்கியம்”
என்றான் கோபால்.
“தங்கச்சி அண்ணெ நா இருக்கெ பயப்படாதமா.
ஒனக்கு நம்ம பராவ புடிச்சிருக்கா இல்ல இந்த பையனையாமா” என்றான் காசி. எல்லோரும் சிரித்தோம்
அவள் வெளியே வந்து எங்களைக் கடந்து சென்றாள்.
அவளுக்கும் அரும்பு மீசை இருந்தது. ஆனால் அவள் அம்மாவிற்கு இல்லை. கொஞ்சநாள் ஆனால்
மீசை உதிந்துவிடும் என எண்ணிக்கொண்டேன்.
“என்னடா நடக்குது இங்கெ ஒன்னைய இப்டி
பாக்குறா” என்று ராக்கேஷ் விழிகளை பிதுக்கினான்.
“ஒரு பொண்னு நம்மல காதலிக்கிறாளா இல்லையானு
தெருஞ்சுக்க திருவள்ளுவர் பத்து திருக்குறள் எழுதிருக்காரு. அதுல எட்டு அவ பாக்குறத
வச்சே கண்டுபிடிக்கிறது எப்படினு எழுதிருக்காரு” என்றேன்
“என்ன அதிகாரம் மாப்ள அது” என்றான் பரா.
“குறிப்புணர்தல்னு நெனைக்கிறேன். ரெண்டு
குறிப்புணர்தல் இருக்கும். காமத்துப்பால்ல உள்ளதுதான் அது. ஆனா திருவள்ளுவர் தியரிப்படி.
அவங்கெ அப்பா அம்மால்லா இருக்கும் போது என்னைய யார்னே தெரியாதவன் மாதிரில்ல பாக்கனும்.
இவ இப்டி பாக்குறா” என்றேன்
“அவ அப்பென்தான் எப்பவுமா கூடவே இருக்கானே.
அதான் அவன ஒரு மனுசனா மதிச்சிருக்கமாட்டா” என்று ராக்கேஷ் சிரித்தான்.
“நீயல்லவா நண்பன்” என்று ராக்கேஷ் தோலைத்தட்டினேன். “ஆனா, அவ பாக்குறப்ப
வயிரெல்லா கூசுச்சுடா. இதத்தான் செம்பாகம் அன்று பெரிதுனு சொல்லிருப்பாருபோல” என்றேன்.
”இவன் ஒருத்தன்டா. பாக்குறத வச்சே கண்டு
புடிச்சிறலாம்கிறதோட நிருத்திக்கி” என்றான் காசி.
“கண்டுபுடுச்சுட்டம்னா வச்சுக்க, அப்பறம்
நம்ம தெரமைய பயன்படுத்தி டெவலப் பன்னிக்க வேண்டியதுதான்”
“ஓங்கிட்டதான் அந்த தெரம இல்லையே” என்றான்
கார்த்தி.
“குண்டா, இப்ப பாரு எப்டி பேசுறேன்னு”
என்றேன்.
“புடுங்குவ” என்றான் பரா.
கொடுக்குகள் கொட்டிவிடும் அபாயம்.
இந்த முறை கண்டிப்பாகப் பேசிவிடலாம்
என்று பலவிதமாக முயன்று கடைசியில் Key Chainல் பெயர் எழுதும் இடத்திற்கு வந்து நின்றோம்.
பாரா சொன்னான் “கீச்செய்ன்ல பேரெழுதி
அவ கிட்ட குடுத்துருவோம்” என்று.
“என்னடா, விஜய் படம் பாக்குறவங்கெ பன்ற
மாதிரி பன்ன சொல்ற” என்று சலித்துக்கொண்டேன்.
“பெரிய வெண்ண இவரு. இந்த திருவிழா இல்லாட்டினா
அவளவுதான்டி. அவளும் சூர்யாவும் கல்யாணம் பன்னிக்கிட்டு அப்பாச்சி பைக்கல போவாங்கெ.
அப்பறம் எங்கிருந்தாலும் வாழ்கதான். பையனுக்கு சேனாதிபதினுகூட பேரு வக்கெ முடியாது”
“ஏன்டா சேனாதிபதினு பேரு வைக்க முடியாது”
என்று திவாகர் கேட்டான்.
கித்தார் வடிவ Key Chain என்று நினைக்ககறேன்.
முன்பக்கம் என் பெயர். பின்பக்கம் என் தொலைபேசி எண். அவளும் அவளின் கொடுக்குகளும் மேடையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்போது
அவள் காலடியில் தூக்கி எரிந்துவிடலாம் என்பது திட்டம். திட்டத்தை நிறைவேற்றுவதாக பொறுப்பேற்றுக்கொண்டு
ஒருவன் அவள் அருகிள் சென்றான். “பூச்சீனு நெனச்சு கத்தீட்டா என்ன பன்றது” என்று பாரதி
முனுமுனுத்தான். திட்டம் படுதோல்வி.
அந்த Key Chainஐ வீணடித்துவிடக்கூடாது
என்பதற்காக அவளுடன் கல்லூரிப்பேருந்தில் பயணிக்கும் ஒருவனிடம் கொடுத்தணுப்பினேன். இரண்டு
நாட்களுக்கு பின்தான் அந்த Key chaiஐ கொடுத்தாதக சொன்னான். அப்போது நான் சென்னைக்கு
வந்துவிட்டேன். அவளிடம் கொடுக்கசொல்லி அவள்
வகுப்புத் தோழி ஒருவளிடம் கொடுத்தாகவும் அந்த
தோழி அவளின் HODயிடம் கொடுத்துவிட்டதாகவும்
சொன்னான்.
No comments:
Post a Comment