Tuesday, March 16, 2021

பீர் பாட்டில் - சேனாதிபதி

 

செல்வா இறந்துவிட்டதை ராஜி என் இடது காதில் அறிவிக்கும்போது டிடிகே சாலையில் நின்றுகொண்டிருந்தேன். சாலையை கடக்க துடித்த ந‍ந்தாவின் காலரை பிடித்து இழுத்து “செல்வா கூப்பிட்றானா?” என்று நான் கேட்டது புரியாமல் ந‍ந்தா கண்களை சுருக்கியபோது அம்மாவிற்கு போன்செய்து மீண்டும் இடது காதில் வைத்து ‘’ஊருக்கு வரேன். ஏடிம்ல ஐநூறுரூவா போட்டுவிடு” என்றேன்.

“என்ன திடீர்னு. எங்கெயோ போறேன்னு சொன்னியே” என்றாள்.

ஆதிவாசிகள்தான் கூச்சலிட்டுக்கொண்டு நடனமாடுவார்கலாம் என்று கிண்டலடித்ததை மறைத்து நாளைக்கு பேருந்தில் அந்த காட்டுப்பயலுகளுடன் சேர்ந்துகொண்டு கும்மாலம் போட்டும்போது மணி என்னை தள்ளிவிட, காயத்ரி மேல் விழுந்துவிடலாம் என்று போட்டுவைத்திருந்த திட்டத்திற்கு ஒரு கும்பிடு. டூர் காசுக்கு கோவிந்தா.

விடுதிக்கு வந்து உண்ட மயக்கத்தை தெளியவைத்து எழுந்திரிக்கும்போது கல்லூரி முடிந்து வந்த ஹரி “நாளைக்கு நைட்டு போற டூருக்கு இன்னைக்கே தயாராயிகிட்டு இருக்கியா?” என்று கேட்டதற்கு “செல்வா செத்துட்டானாம்.” என்று சொல்லிவிட்டு பையை தூக்கிக்கொண்டு சாலையில் இறங்கினேன்.

சிகரெட்டை பற்றவைக்கும்போதுதான் நினைவிற்கு வந்தது செல்வா இறந்துபோனதை ராஜி என்னிடம் சொல்லும்போது அழுதான் என்று. கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு முன் ராமன் வாத்தி நான் மறைத்து வைத்திருந்த அரியரை அப்பாவிடம் வெளிச்சம்போட்டுகாட்டிவிட்டு, பேனை என்னிடம் கொடுத்தபோது “சாப்ட்டியா?” என்று அப்பா கேட்டதற்கு “ம்” என்று சொன்னதும் “அப்றம் பேசுறேன்” என்று அப்பா போனை வைத்ததற்குபின்  கழிவறைக்கு சென்று கால் மணிநேரம் அழுத‍துதான் கடைசி. சுடச்சுட செய்தி வரும்போதே அழகை வரவில்லை செல்வாவின் அம்மாவை பார்க்கும்போதுது அழுகைவந்துவிட்டுதான் மறுவேலைபார்க்கும்.

உலகப்புகழ் பெற்ற ஃபார்வர்டு மெசேஜும் நானே உணர்ந்த உண்மையுமான “சிரித்த நாட்களை நினைத்தால் அழுவதும் அழுத நாட்களை நினைத்தால் சிரிப்பதும்தான் வாழ்க்கை” என்ற த‍த்துவத்தை நம்பி சிகரெட்டை இழுக்கும்போது சிக்கிக்கொண்டது ஒரு சிரித்த நாள்.

செல்வாக்கு அடிக்கடி சளி பிடித்துக்கொள்ளும். அதேபோல் பத்தாம் வகுப்பு படிக்கும்போதும் ஒரு முறை சளி பிடித்துக்கொண்டது. சளியை விரட்டுவதற்காக சிகரட்டின் முணையில் விக்ஸை தடவி வளித்தான். “அட ஐன்ஸ்ட்டின் பேராண்டி” என்று ராஜி வாயை பிளந்ததற்கு எல்லோரும் சிரித்தோம்.

யார் வைத்த சூனியமோ சுத்தமாக அழுகை வரவில்லை. செல்வாவின் அம்மாமுன் எல்லோரும் அழும்போது நாம் மட்டும் உண்மை நண்பனில்லாமல் போகப்போகிறோம் என்று பயந்துகொண்டே பேருந்தில் ஏறினேன்.

செல்வாவும் ராஜியும் ஒன்றாம் வகுப்பில் இருந்து நண்பர்கள். நான் ஆறாம்வகுப்பில் வந்து ஒட்டிக்கொண்டவன் என்பதால் அழுகை வரவில்லை என்று நினைத்துக்கொண்டிருந்தபோது தூங்கியிருப்பேன்.

இல்லை, தூங்குவதற்கு முன்னால் நான் முதன்முதலாக பீர் குடித்ததை நினைத்துக்கொண்டிருந்தேன். பள்ளி முடிந்து வரும் வழியில் உள்ள பட்டம்மா பருப்பு மில்லுக்கு பின்புறம் ஒரு தென்னை மரத்தின் அடியில் புத்தகப்பைக்குள் கையைவிட்டு பீர் பாட்டிலை வருன் எடுக்கும்போது “ஸ்க்கூலுக்கு கொண்டுவந்தியாடா” என்று வாயை பிளந்துகொண்டிருந்தேன்.

வருன் பீர்பாட்டிலை பல்லால் கடித்து திறக்க முயன்றபோது “அந்த ஸ்பானர் வாயன்ட்ட குடுடா” என்று செல்வா ராஜியை பார்த்து சிரித்தான்.

“குண்டு தாயலி” என்று ராஜி ஒரு கல்லை எடுக்கும்போது பீர்பாட்டிலை பல்லாலேயே கடித்து திறந்துவிட்டான் வருன்.

இரண்டாவது மடக்கு குடிக்கபோன வருன் பீரை குடிக்காமல் ராஜியிடம் நீட்டினான். “இப்ப யாராவது வந்தா நானும் மாட்டிக்கனும் அதானே உன் லட்சியம்” என்று சொல்லிவிட்டு ராஜி பீர் பாட்டிலை வாங்கினான். மூன்று மடக்கு குடித்துவிட்டு பீர்பாட்டிலை என்னிடம் நீட்டினான். ஒரு சொட்டாவது நக்கிபார்த்துவிடவேண்டும் என்று ஆசைதான். ஆனால்  “அவெங்கலோட சேந்துக்கிட்டு நீயும் ஆடுறியா” என்று செல்வா, மண்டைய பொழந்து மாவெளக்கு வைத்துவிடுவான் என்ற எண்ணம் ஓடிக்கொண்டிருந்தபோது ராஜியின் கையிலிருந்த பீரை வாங்கி செல்வா குடிக்கத்தொடங்கினான். “குண்டா எனக்கும் குடுடா” என்று பாட்டிலை வாங்கி ஒரு மடக்கு குடித்துவிட்டு “என்னடா இப்டி கசக்குது” என்றேன்.

போனவருடம் பொங்கல் விடுமுறைக்கு வீட்டிற்கு வந்திருந்தபோது ராஜி சென்னதைக்கேட்டுவிட்டு  செல்வாவிடம் போய் “டேய் குண்டா இப்ப ஹாட் அடிக்கிறியாமே?” என்று சண்டை போட்டதால் அடுத்து வந்த அவன் பிறந்த நாளில் இரண்டு குவாட்ர் வாங்கி ஒன்றரை குவாட்டரை அவனே குடித்துவிட்டு அரையை மட்டு எனக்கு கொடுத்து “இதுதான் போதை” என்று என்னை நம்பவைத்துவிட்டான். போனமாதம் வந்த ந‍ந்தாவின் பிறந்தநாளில் முழு குவாட்டரையும் நானே குடித்துவிட்டு “இதுதான் போதை” என்ற உண்மையை உணர்ந்த நான் “ஊருக்கு போயி அந்த குண்டன வெட்டி கொல்லனும்டா” என்றேன்.

அசைவிலேயே இருந்த உடல், பேருந்து நின்றதும் தானாக தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டதை எண்ணி நான் வியந்துகொண்டிருந்தபோது மோட்டல்காரன் பேருந்தை சுற்றி காலி தண்ணீர் பாட்டிலால் தட்டிக்கொண்டிருந்தான். பேருந்தில் இருந்து இறங்கி ஐந்து ரூபாய்க்கு சிறுநீர் கழித்தேன். அழுகைவரவைக்கும் முயற்சியில் கிங்கஸ் வாங்க மறந்துவிட்டிருந்தேன். பிஸ்க்கெட்டும் தண்ணீர் பாட்டில்களும் விற்கும் கடையில் சந்தேகத்துடன் ஒரு கிங்ஸ் என்றேன். கடைக்காரன் ஒரு சிகரைட்டை எடுத்துக்கொடுத்துவிட்டு பதினைந்து ரூபாய் என்றான் “என்னடா இது MRP வெலைக்கு விக்கிறாங்கெ” என்று சிகரெட்டை பார்த்தேன். அரபு மொழியைப்போல் ஒரு மொழியில் எழுதியிருந்தது. பார்ப்பதற்கு கிங்ஸ் போலவே இருக்கும். செல்வா சென்னைக்கு வந்திருந்தபோது வித்தியாசமா எதாவது ட்ரை பன்னி பார்ப்போம் என்று ஏவிஎம் வாசலில் உள்ள சிகரெட்டுக்கென பிரத்தியோகமாக உள்ள கடையில் ஒரு சிகரெட்டை விரலால் சுட்டி வாங்கியபோது இந்த சிகரெட்டின் விலை மூன்று ரூபாய். “என்னடா இது படத்துல வரது மாரி எங்கபோனாலும் செல்வா நியாபகமா வருது” என்று நினைத்ததனால், இனிமேல் தமிழ் படங்களை கிண்டல் செய்யும்போது மணசாட்சியுடன் கிண்டல் செய்யவேண்டும் என்று சபதம் எடுத்துக்கொண்டேன்.

பேருந்தில் ஏறி இருக்கையில் அமர்ந்தேன். இரத்தவோட்டம் இல்லாமல் கால்கள் வீங்கிபோயிருந்தன. வழக்கமாக வீங்குவதுதான். வீட்டுக்குபோயி முறையாக படுத்து தூங்கினால் வீக்கம் வடிந்துவிடும். செத்தவீட்டில் வீங்கிய கால்களுடனும் எரியும் கண்களுடனும் நிர்ப்பதை நினைத்தால்ப் பார்த்தால் அழுகையேவரும்போல் இருந்தது. “அப்பாடி, அப்டியாவது அழுகை வந்தாள் சரி”.

பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த நண்பர்களுடன் செல்வா வீட்டுக்கு சென்றோம். செல்வாவின் மரண செய்தியை கேட்டு செல்வாவின்ன் அம்மா மயங்கி விழுந்து விட்டதால் மருத்துவமணையில் சேரக்கப்பட்டுள்ளார் என்று தேன் வந்து பாய்ந்த‍து காதினிலே.

 

No comments:

Post a Comment