மணி எனக்கு பக்கத்தில்தான் அமர்ந்திருப்பான். அவன் அடர் கருப்பு நிறத்தில் இருப்பான். கல்லூரி முதலாம் ஆண்டு இறுதியில் ஒரு நாள் அவன் கருப்பு பேன்ட்டும் காக்கி பெல்ட்டும் அணிந்துக் கொண்டு வகுப்பறைக்குள் அமர்ந்திருந்தான்.
"என்னடா மணி பெல்ட்டெல்லாம் போட்டிருக்க,
பேன்ட் போட மறந்திட்டியேடா" என்றேன்.
அன்று முழுக்க அவனை பார்த்து "என்னடா பேன்ட் போட
மறந்துட்டியா?" என்று கேட்டு சிரித்துக்கொண்டே இருந்தார்கள். அன்றிலிருந்து மணி
கருப்பு பேன்ட் போடுவதையே விட்டுவிட்டான் என்று நண்பன் சொன்னான்.
"மணிய கிண்டல் பன்னிக்கட்டே இருக்கியல.
ஒனக்கு மணி மாதிரி புள்ள பெறக்க போகுது" என்று சங்கர் சொன்னான்.
"இங்கபார்டா மணி, ஒன்ன மாதிரி புள்ள
பொறக்கனும்னு சாபம் விடுறான். அறந்தாங்கி வீரமாளி புள்ள நல்லபடியா பொறக்கனு தாயி" என்றேன்.
"த்தா சங்கரு. அவ்ளோதா" என்றான்
மணி.
"டேய் நா ஒ நல்லதுக்குதான்டா சொன்னேன்.
அவந்தான்டா" என்றான் சங்கர்.
மணி என்னிடம் பேசுவதை கொஞ்சகொஞ்சமாக
குறைத்து இடத்தையும் மாற்றிக்கொண்டான். அவன் பலமுறை என்னிடம் கேட்டிருக்கிறான்
"நான் ஒன்ன எதாவது பன்னனா. எதுக்கு என்னமட்டும் எதாவது சொல்லிக்கிட்டே இருக்க?"
என்று.
கல்லூரியில் சேர்ந்து, முதல் முறை வேதியியல்
சோதனைக்கூடத்திற்கு அழைத்துச் சென்றிருந்தார்கள். எனக்கு முன்னால் நின்றுகொண்டிருந்தவள்
"மணிய கூப்பிடேன்" என்றாள். மணி கீழே குனிந்து அலமாரிக்குள் எதையோ தேடிக்கொண்டிருந்தான்
"டேய் ஒன்னைய அது கூப்பிடுதுடா"
என்றேன்
"நான் என்ன அதுவா?" என்றாள்.
என்ன சொல்வது என்று தெரியாமல் அவளை பார்த்துக்கொண்டிருந்தேன்.
மணி வேகமாக நிமிரந்து "அவன் ஊர்காரப்பய.
அப்டித்தான் இருப்பான். ஊர்லயெல்லா அப்டிதான் பேசுவாங்க. ஊர்னா என்ன சொல்லறது வில்லேஜ்".
என்றான்.
"ஒன்னய கேட்டாளா. ஓம் பேரு சேனாதிபதியா?"
No comments:
Post a Comment