Wednesday, March 17, 2021

முப்புரம் ஓடிதல் – பார்கவி

 

பத்து அல்லது பன்னிரண்டு ஆண்டுகள். அது ஒரு பொருட்டா?

தன்னை வெறுப்புக்கு அப்பாற்பட்டவள் என்று கண்ணகி என்றும் எண்ணியதில்லை. ஆனால் வெறுப்பைப் புரிந்துகொள்ள முடியவில்லை. பெயரிடப்படாத விருப்புகளும் மிகைமதிப்பீடு செய்யப்படும் வெறுப்பும் கலந்தது தான் வாழ்க்கை. ஏன் என்ற வினா எழும் போதே ஆம் என்று விடையெழும் போது வெறுப்பு எடையழக்கிறது, தாழ்ந்து பணிகிறது, சிலையில் எடையிழக்கும் கருங்கல் போல்.

ஆயின், வெறுப்பென்பது அன்பின் வேறு வடிவம், அன்னை கொற்றவை ஆதல் போல. வெறுப்பைத் துறத்தல், இருப்பைத்  துறப்பதன் முதல் நிலை. இருப்பைத் துறக்க எண்ணியவர் இல்லைத் துறப்பார் என்பது விதி. மாசாத்துவானால் அதை ஏற்க முடியவில்லை. சேடிகளை விட்டு “அவள் நாட்டியப் பேரரசி, அருமணி, அழகி” என்று புகழச் சொன்னார், கோவலன் “வம்பன், எளியன், கொடியன்’ என்று இகழச் செய்தார். கண்ணகி சினம் கொள்ளவில்லை, மகிழவும் இல்லை. “ஆறு வற்றிவிட்டது” என்றார் மாசாத்துவான். சேடி பணிந்து, ‘கடல் பின்னடைந்து விட்டது” என்றாள்.

அவளுக்குச் சினம் கொள்ள அத்தனை உரிமையும் இருந்தது. பொன்னும் பொருளும் நிலமும் அளவில் சிறுத்துவிட்டன. எனவே நாடி வருவோரும் குறைந்துவிட்டனர். தோழிகளும் சேடியரும் நிறைந்து ததும்பிகொண்டிருந்த இல்லில் ஒரேயொரு அணுக்கத்தோழியைத் தவிர வேறெவரும் எஞ்சவில்லை. பெண்மக்கள் பலர் வாழ்ந்தொதுக்கிய அகத்தின் எச்சங்கள் நீராடிய பின்னும் விழிக்கடையிலிருந்து விலக மறுக்கும் மைத்தீற்றலாய் அங்கு எஞ்சி நின்றது.

எவ்வளவு வாரி அள்ளினாலும் துண்டுப்புகை போல் எங்கிருந்தோ சுருண்டு முற்றத்திற்குள் நுழையும் ஒருத்தியின் உதிர்ந்த மயிர், இன்னொருத்தி மறந்து கழற்றிய வளையல், கதவிடுக்குக் களியில் ஒட்டிய நறுஞ்சாந்து, பாதத்தில் தட்டுப்படும் சிதைந்த முத்து, கேட்பாரன்றிக் கிடக்கும் மர விளிம்பில் வெள்ளிப்பூணிட்டுத் திருகிய ஆடியும், அதில் பிரதிபலிக்கும் கண்ணகியும்.

முன்னர் அரசியர் நிரையிலிருந்த சேடி தெரிவித்து வற்புறுத்தி கண்ணகி பெற்றது. பொன்னை மாசற்றதென்று, முத்தை வலம்புரி என்றும் வணிகம் செய்யலாம், ஆடியை எப்பொருளுக்கு இணை வைப்பது என்று விளங்காமல் அது கண்ணகியின் அறையில் அப்படியே நின்று கொண்டிருந்த்தது, காலத்தின் செங்குத்தான நதி ஒன்றைப் போல.  

ஊழிக்கால நதி போல் காலம் தடங்கல் அற்றது, தடங்கல் அற்றவை கருணை அற்றவை. கண்ணகி தன் கருமையான தடித்த விரல்களை மரச்செதுக்கல்களின் மீது ஓடவிட்டாள். மரமலர்களை, மரமொட்டுகளை. மரக்கொடிகளை, அதில்அசையாது ஆடும் மரஇலைகளை, அதை வானிலிருந்தென பிடித்ததுத் தொங்கும் சாலபஞ்சிகை தேவதைகளை அவள் கைகள் தொட்டுணர்ந்தன. தன் பிம்பத்தை மற்றும் தவிர்த்தவளாய், ஆடியில் முகம் புதைத்து நின்றாள். கடைப் பார்வையில் ஒரு பிம்பம் தெரிந்தது - சற்று அகண்டு புடைத்த நுதல், எரிகரியிலிருந்து எடுத்து பதித்த உருண்டைக் கண்கள், கனத்த அதரம், மென்பட்டுக் கருந்தோல். பழக்கபட்ட அந்த பிம்பத்தில் ஏதோ ஒன்று பிழைப்பது போலிருந்து. திகைத்து, ஆடிப்பரப்பிலிருந்து உடலைப் பிய்த்து ஏறிந்து நேர் முன்னால் நின்று நோக்கினாள், காணமுடியவில்லை. மீண்டும் ஆடியினருகில் முகம் வைத்த போது சாலபஞ்சிகையின் காதணிச்செதுக்கு தனக்கு அணியாவதைக் கண்டாள். ஏன் என்ற சொல் யார் என்றானது.

"மா!" என்று எழுந்த நெடுமூச்சு "தவி" என்று முடிக்கும் போது கன்னத்தில் நீர்த்து வடிந்தது.

மூடிய சாளரத்தை மீறும் பொன் நாழிகை வெய்யொளி ஆடியில் விழுந்து அவள் ஆடிப்பாவையை எரித்துக்கொண்டிருந்தது. முகத்தில் ஓர் ஏளனப்புன்னகை எழுவதை அவள் ஆடிப்பாவையாகவே மாறிக்கண்டாள். அந்தப்புன்னகை அன்றிப்பிற அணிகளைக் களைந்தது நினைவிலெழுந்தது.

அம்மாவின் பார்வையில் படும்படி அமர்ந்து கொண்டே சென்று அணிந்திருந்த அணிகலன்களை உச்சந்தலையிலிருந்து ஒவ்வொன்றாக கழற்றினாள்.  மேகலையை எடுக்கும் போது “தெய்வத்துக்கு அடுக்குமா?” என்றாள் கிழத்தி பொறாமல். ‘தெய்வமும் உண்டு கொல்?’ என்று எண்ணிக்கொள்ளும் போதே, அம்மா அவள் கையைப்பற்றிக்கொண்டாள். "என்ன இது? கொழுநன் வாழும் போது? களையதலாகுமா? பத்தினிப் பெண்ணா நீ? அம்மா கோர்வையற்று பதறினாள். ஒன்றும் கூறாமல் கண்ணகி தன்  சிலம்புகளைச் சுட்டி, " போதும்” என்றாள். ‘மாதவியிடம்…’ என்று ஏதோ சொல்ல வாயெடுத்து அம்மா முடிக்கவில்லை.

‘மாதவி’, ஒரு மாயப்பொற்கொடி போல அப்பெயர் அவள் மனதைச் சுற்றிச் சுற்றிப் படர்ந்தது. அதை விலக்க அக்கொடி தடித்துப் பெருகி அவளை நெருக்கிக்கொண்டிருந்தது. ஆடிப்பாவை ஏளனச் சிரிப்பிலிருந்து கருணைப்பார்வையை தெளித்துக்கொண்டிருந்தது. இப்புவியில் பெருங்கருணையைவிட சலிப்பூட்டுவது ஒன்றுமில்லை. கருணை பிடரி வளைந்து முலை கனிந்து இடை பெருத்து விழி நீர் கசிய அமர்ந்திருப்பது. குரூரம் நிமிர்வு கொண்டது, கட்டுடைத்திருப்பது, இடை ஒசித்து, விழி சிமிட்டித் தொடர ஆணையிட்டுத் தான் பறந்து கொண்டிருப்பது.

சாலபஞ்சிகையை ஓர் அன்பிலாத துணைவனப்போல் இயல்பாகக் கடந்து தன் நகைப்பெட்டியைத் திறந்தாள். மூங்கில் குடுவை தட்டுப்படவில்லை. துழாவலில் மரக்குடுவை அகப்பட்டது. மங்கல அணிக்கென்று பிரத்யேகமாக செய்யப்பட குடுவை, அம்மா தந்தது. அதை பற்றி எடுத்து மரச்சட்டகத்தில் மாட்டி மூடியைத்திறந்தாள். பாரம் தாங்காமல் குடுவை ஒரு பக்கமாக சாய்ந்தது. அட்டிகையும் கொலுசும் நெற்றிப்பட்டையும் எட்டிப் பார்த்தன. வைரக்கல் பதித்த பொன்னரவம் பெருகுவது போல் அதன் பிம்பம் அறையை நிறைத்திருந்தது.

இரட்டை நாகங்கள் போல் பட்மெடுத்த தாலிக்காசின் ஊடாக அவள் ஒன்றைக்கண்டாள்.

 

பித்து நிலையில் பக்காவாட்டில் ஆடிக்கொண்டே கோவலன் பாலைப் பண்ணை யாழ் கூட்டிப் பாடிக்கொண்டிருந்தான்.  கண்ணகியின் கால்கள் கொடுங்காற்றில் சிக்கிய கொடி போல் அவசரமாக தாளமற்று அசைந்துகொண்டிருந்தன,. சில்பம்பொலி எழாமல் இருக்க காலைப்பொத்திக் கொண்டாள். பாடல் முடிவதற்குள் வாசலில் நிற்கும் யாசகர் பொறுமையிழந்து செல்லாமல் இருக்க வேண்டும்.

பொருந்திய தோளும், அழைக்கும் விழிகளுமாய் ஒரு தேவதை அவளை அழைப்பது போலிருந்தது.

பாலைப்பண் விளம்ப காலத்தில் இசைக்கப்படுவது. இளமதியம் பின்சூட்டில் ஓடிக்கொண்டிருக்கும் பொதிமாடு. அவன் தெய்வங்களுடன் உரையாடும் கந்தர்வன் போலிருந்தான். மிளகாய் வைத்தரைத்தது போல அவளுக்கு உரைத்தது.

பவழமும் மரகதமும் சேர்த்துக் கட்டிய ஒட்டியாணத்தை இடையில் அணிந்து, தன் நூற்சேலையில் விசிறி மடிப்புகள் வைத்து அதை ஆடலுக்குரிய உடையாக சாலபஞ்சிகை மாற்றிக்கொண்டாள்.

ஒரு நொடிப்பொழுதில்என்று கெஞ்சலுடன் குரலெழாமல் சொல்லிக்கொண்டே கண்ணகி எழப்போனாள். சிலம்பசைந்து பரலிசை எழுந்தது. கோவலனில் விரல்கள் யாழிலிருந்து பிரிந்தது. அவன் சீற்றத்தை அவள் எதிர் நோக்கியிருந்தாள்.

வெண்பட்டு அங்கவஸ்திரத்தை மார்புக் கச்சையாககட்டிக்கொண்டாள் தேவதை.

அவன் இதழ் வளைந்திருந்தது. “அவல் பலாவாகாது” என்றான்.

கற்பத்தித்த அட்டிகைகளும், முத்தாரமும், மணி மாலைகளும், காசு மலையும், இரத்தின வங்கிகளும் அவளை ஒரே நேரத்தில் பொற்கவசமிட்ட அரசனைப் போலும், முத்தங்கியிட்ட கொற்றவையைப் போலும் மிளிரச்செய்தது. கண்ணுக்கு அஞ்சனமும், உதடுகளுக்கு செம்மாதுளைச் சாறும் தடவிக்கொண்டாள்.

 

புறத்திலிருந்து வரும் யாசகனின் குரல் கேட்டு கண்ணகி சோற்றுக்கலயத்தை நோக்கி விரைந்தாள்.

"மாதவி...நீ மெய்யாகவே பேரழகியடி!" என்றது சாலபஞ்சிகை.

அவள் காலைச் சுட்டி , தலையை பக்கவாட்டில் அசைத்து நகைத்துக்கொண்டே “அடுத்த தலைக்கோல் உனக்கே"  என்றான்.

தலையும், தோளும், இடையும் லேசாக ஒசிந்து, முப்புறம் ஒடிந்த வாகில், ஒருகரம் பாதி மலர்ந்த மலராகவும், மறுகரம் அதில் தேனுண்ணும் வண்டாகவும், இமை தீய்ந்து கவிழ்ந்தும், இதழ் மலர்ந்தும் ஒயிலாக திரிபங்க நிலையில் நின்றிருந்த இயக்கியை யாரும் பார்க்கவில்லை. சிலம்பணிந்த அவள் பாதம் இலேசாக ஒலியெழுப்பிக்கொண்டிருந்தது. எங்கிருந்தோ கோவலன் கேளாத பழைய இசை மிதந்து வந்தது.

 

விழிநீர் தளும்ப நின்றிருந்த கண்ணகியின் முகத்தைக் காணாது கிளம்பினான்.

தேவதை, தன் விரிந்த குழற்கற்றைகளை யாழென மீட்டி முணுமுணுத்தாள். தன் செவிகளுக்கு மட்டும் கேட்கக்கூடிய லயத்திற்கு அவள் கால்களை நீட்டியும் நாட்டியும், தத்தியும், தாவியும், மெய் நெளிந்தும் அசைந்தும் ஆடினாள். ஆட்டத்தின் உள்வழிகளை இயக்கி வகுத்துக்கொண்டிருந்தாள்.

மூன்று மூன்று அடிளாக சீரான தாள்கதியில் கால் பதிந்த போது திஸ்ர கதியில் ‘மா த வி’ ‘மா த வி’என்று  என்று சிலம்பு கனைப்பதை அவள் அறியவில்லை.

தெரிந்த குரலொன்று ஆழியின் ஆழத்திலிருந்து "என்னை ஏற்றுக்கொள். தாழ் திற!" என்றான் கோவலன். குறுங்கண் சாளரத்தின் வழியாக அக்குரல் நூறு ஒலித்துகளாக உடைந்துடைந்து பெருகி அவ்வறையை அடைந்தது.

கண்ணகி மரவேலைப்பாடமைந்த அந்த ஆடியை ஒருமுறை உற்று பார்த்துக் கொண்டாள். தணிந்த கண்களும், மின்னும் கார்முகமும், புன்னகையில் விம்மி வெடிக்கும் இதழ்களும் கொண்ட இளைய இருள் மீது அவள் நோக்கு பதிந்தது. உடலை எம்பி குளிர்ந்திருக்கும் ஆடிப்பரப்பின் மீது சாய்ந்து வளைக்கரங்களால் பிடித்துக்கொண்டாள். சாலபஞ்சிகையின் மலர் கரங்கள் மெல்ல தளர்ந்து மொட்டாவதை பால்நிலவு பார்த்துக்கொண்டிருந்தது. ஆடிச்சிவந்த பாதம் தரைபட கண்ணகி கதவை நோக்கி நடந்தாள்.

No comments:

Post a Comment