Tuesday, February 12, 2019

ரசம் சோறு - சிறுகதை - சபரிராஜ்


பசி வயித்த சுண்டி இழுக்குது, திடீர்னு கண்ணு முன்னாடி பச்சை சிவப்புனு வந்து கடைசியா இருட்டிக்கிட்டு வந்து கீழ விழுந்துருப்..

“ஏய்! சாந்தி இங்க வா”ன்னு ரெஜினா அக்கா கூப்பிட்டத கேட்டு திரும்பி பாத்தேன். கையில வைச்சிருந்த அவங்க சேலைய தண்ணி பக்கெட்டுல போட்டுட்டு துவைக்கிற கல்லுல இருக்கற சோப்பு வழுக்காம பத்திரமா அந்த அக்காகிட்ட போனேன்.
“பச்சை உடம்புகாரி வெறும் வயித்தோட வேலை செய்யாத கொஞ்சம் டீத்தண்ணி குடிச்சுட்டு போய் வேலைய பாரு” ரெஜினா அக்கா கொஞ்சம் நல்லவங்க, வீட்ல துணிதுவைக்க வரும்  போதெல்லாம் டீ, ரஸ்னானு எதாவது கொடுப்பாங்க. சாப்பாடு வடிக்கும் போது கஞ்சில ஒரு கை சோறு போட்டு கொடுப்பாங்க. நெறையா நாள் என்னோட மதிய சாப்பாடே இது தான்.
நானும் அவங்களுக்கு நெறையா வேலை செஞ்சு கொடுப்பேன். கடைக்கு போய் சக்கரை வாங்கிட்டு வரது, நல்ல தண்ணி வரும் போது புடிச்சி கொடுக்கறது, வீடு சுத்தம் பண்ணும் போது பாத்திரம் எடுத்து கொடுக்கறதுனு நெறையா… ஆனா என்ன என்னைக்காவது கால் வலிக்குதுனு கடைக்கு போகலைனு சொன்னா, கஞ்சிய எடுத்து கீழ ஊத்திருவாங்க.
“டீய குடிச்சிட்டு கடைக்கு போய் ஒரு கிலோ தக்காளியும் தேங்கா எண்ணெ அர லிட்டரும் (அந்த அக்கா தேங்கா எண்ணெலதான் சமைப்பாங்க) வாங்கிட்டு வரியா..?”
’கொடுங்கக்கா, போயிட்டு வரேன்’னு சொல்லி கூடையும் காசையும் வாங்கிட்டு கடைக்கு போயிட்டிருந்தேன். இந்த மாதிரி ஒரு நாள் கடைக்கு போகும் போதுதான் நான் அவர பாத்தேன்.
நல்லா துறு துறுனு இந்த தெரு முழுக்க சுத்திட்டு இருப்பாரு. அவர் நெத்தில ரெண்டு முடி முன்னாடி விட்டுருப்பாரு. ரஜினி ரசிகரு அதனால ஸ்டைலா பீடி குடிச்சிட்டு இருப்பாரு.
நாங்களா வீட்ல சொல்றதுக்கு முன்னாடி என் அப்பாவோட கூட்டாளி எங்கள தியேட்டர்ல வச்சி பாத்துட்டு அப்பாகிட்ட சொல்லிக் கொடுத்துட்டாரு. அப்புறம் நெறையா சண்டை போட்டு அழுது கடைசியா(என்) அவரோட ஃபிரண்டு தலைமையில ஊர் பிள்ளையார் கோவில ரொம்ப சாதாரணமா கல்யாணம் முடிஞ்சது. அன்னிக்குனு பாத்து ஜெயிச்ச ஜெயலலிதா புண்ணியத்துல எங்க கல்யாணத்துக்கு வான வேடிக்கையெல்லாம் பாத்தோம்.
“அண்ணா ஒரு கிலோ தக்காளி அர லிட்டரு தேங்கா எண்ணெ” வாங்கிட்டு மிச்ச காச வாங்கி கைல வச்சிட்டு வீட்டுக்கு திரும்பி வந்துட்டு இருந்தேன்.
ஒரு வாய் சோத்துக்கு எவ்ளோ கஷ்ட பட வேண்டியதா இருக்கு..? ஆனா ஒரு வருசத்துக்கு முன்னாடி வாழ்க்கை எப்படி இருந்தது... அப்பா ராசா இல்லைனாலும் என்ன ராசாத்தி மாதிரி வச்சிருந்தாரு. எவ்ளோ செல்லம் எனக்கு..? பிடிச்சதெல்லாம் கேட்காமலே கெடைக்கும், இவர தவிர. பிடிச்சவன கல்யாணம் பண்றது என்ன அவ்ளோ பெரிய தப்பா..?
யோசிச்சிட்டே வீடு வந்து சேந்தேன். ”வா பாப்பா கடைல கூட்டமா..?”னு கேட்ட கேள்விக்கு ’இல்லக்கா’னு சொல்லிட்டு மளிகை கூடைய கொடுத்துட்டு போய் மிச்சம் இருக்கற ரெண்டு சேலையையும் துவைச்சு போட்டுட்டு, போறேங்கானு அவங்க முன்னாடி போய் நின்னேன்.
“சரி, இந்தா”ன்னு கையில ஒரு குண்டாவ கொடுத்தாங்க, மகராசி! இன்னைக்கு கஞ்சிக்கு பதிலா சுடு சோறும் மிளகு ரசமும், நல்லா மணமா இருந்துச்சு. அந்த அக்கா நல்லா ரசம் வைக்கும், அதோட மணம் நாலு வீடு தள்ளி மணக்கும், அத விட கத்திரிக்கா பொறியல் பண்ணுவாங்க, அவ்ளோ ருசியா இருக்கும்.
பாத்திரத்த வாங்கிட்டு நான் வீட்டுக்கு வந்தேன், மூனு வீடு தள்ளிதான் எங்க வூடு. நான் வீட்டுக்குள்ள வரும் போது என் பையன எங்க அத்தை கையில வச்சிருந்தாங்க. அவரு காலைல வேலைக்கு போனாருனா திரும்பி வர மணி எழு ஆயிடும். என்ன பாத்ததும் மூஞ்சி முழுக்க சிரிக்கிறான். பையன என்கிட்ட கொடுத்துட்டு அத்தை ரேசன் கடைக்கு போய்ட்டாங்க.
என் பையன பாத்துட்டே இருக்கணும் போல இருக்கும், அவ்ளோ அழகா இருப்பான். இந்த பாப்பாத்தி பாட்டி இருக்காங்கல்ல..? அவங்க கூட மூச்சுக்கு முன்னூரு தடவை சொல்வாங்க ’எம்ஜிஆர் மாதிரி இருக்கான், எம்ஜிஆர் மாதிரி இருக்கான்’னு. அவன் மூஞ்சிய பாத்துட்டே இருந்தா பசி கூட மறந்து போகும். கொஞ்ச நாள் நான் அப்படித்தான் பாத்துகிட்டே பசியோட இருப்பேன்.
ஆனா, இன்னைக்கு சோறு இருக்கறதுனால தான் என்னவோ பசி கண்ணா முளி திருகிட்டு வருது. பையன ஒரு சேலைய விரிச்சு படுக்க வச்சிட்டு, தட்டத்த கழுவ உள்ள போனேன், வந்து பாக்கறேன். சொய்ன்னு… ராக்கெட் விட்ட மாதிரி படுத்துகிட்டே நேரா சாப்பாட்டுலேயே ஒன்னுக்கு போய்ட்டான்.
என் ராஜா, என் கண்ணு, என் மயிலு அழாத டா அழாத னு அவன் அழுகைய நிறுத்திட்டு, அவனுக்கு துணி மாத்தி விட்டுட்டு ஒரு ஓரமா படுக்க வச்சுட்டு வந்தேன். சாப்பிடறதுக்கு முன்னாடி ஒரே நிமிசம் யோசிச்சேன், பரவால்ல என் பையன்தானே..!

Monday, February 11, 2019

சித்தி பழங்குடிகள் - கட்டுரை - அன்புராஜ்


பொது குடிகளிடமிருந்து வேறுபட்டு இடைவெளியுடன் தங்களை இன்றளவும் வேறுபாடான தனித்துவமான வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டு  உயிர்ப்புடன் தங்களை காப்பாற்றிக் கொண்டு வரும் ஒரு குழு அல்லது ஒரு சமுதாய மக்களை பழங்குடிகள் என்று அழைக்கிறோம்

 உலகில் சுமார் 15 கோடி மக்கள் பழங்குடிகள் உள்ளனர் என்று ஒரு ஆய்வு கூறுகிறது ஆனால் பழங்குடி மக்கள் தினந்தோறும் பல்வேறு வகையான நேரடியாக மறைமுகமான தாக்குதலை எதிர் நோக்கி வருகிறார்கள் அம்மக்களின் மண் கலாச்சாரம் பண்பாடு மீது நாள்தோறும் சிதைவு ஏற்படுத்தப்பட்டு வருகிறது தாங்கள் வாழ்ந்த மண்ணில் இருந்து துரத்தப்படுகிறார்கள் சட்டம் என்ற பெயரில் அவர்களுக்கு புரியாத மொழியில் நாள்தோறும் மிரட்டப்பட்டு வருகிறார்கள்

இப்படிப்பட்ட காலகட்டத்தில் கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா சித்தி பழங்குடிகளை பற்றிய ஒரு செய்தியைப் பார்ப்போம் இம்மாவட்டம்  கர்நாடகத்தில் தனிச்சிறப்புமிக்க மாவட்டம் சாதி மத நம்பிக்கைகள் இவர்கள் பேசும் மொழி துணை மொழிகள் உணவு வகைகள் போன்றவை தனிச்சிறப்பு மிக்கவை இந்த பகுதியில் ஹவாய்க்கர் , கொட சரஸ்வதர், லிங்காயத்து ,ஆலத்தூ ஒக்கலிகர், சித்தி,  நாம் தந்திரிகள், மற்றும் சன்னி முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் போன்ற முக்கிய சாதி மக்களை உள்ளடக்கிய மாவட்டமாகும்.
  இம்மக்களிடையே சித்தி பழங்குடி மக்கள் மிகத் தொன்மையான மதிப்புமிக்க பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் , 

சித்தி பழங்குடிகளின் உடலமைப்பு உணவு பழக்க வழக்கங்கள் நம்பிக்கை போன்றவர்களை ஆய்வு செய்தால் அவர்கள் ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக், தான்சானியா பிரதேச பாண்டு பழங்குடி மக்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வருகிறது.

இந்தப் பழங்குடிகளை போர்ச்சுகீசியர்கள் அடிமைகளாக பிடித்து வந்து கோவாவில் விற்பனை செய்து வந்தது ஆய்வின் அடிப்படையில் சில வரலாற்று ஆய்வாளர்கள் உறுதி படுத்தினாலும் அவர்கள் பின்னாட்களில் குழுவாக ஒன்று சேர்ந்து அடர்ந்த காடுகளில் போய் எப்படி வாழத் தொடங்கினார்கள் என்று இன்றுவரை அறியமுடியாத விஷயமாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது.

சித்தி பழங்குடிகளின் பழக்கவழக்கங்கள் இந்தியாவில் இருக்கும் முக்கிய பழங்குடிகளை விட தனித்துவமான ஒரு அம்சத்தை நாம் கவனிக்க வேண்டும் அது ரைஸ் (Race) அடையாளங்களுக்கு சம்பந்தப்பட்டது

இந்திய பழங்குடிகளைவிட சித்திகள் முற்றிலும் வேறு பட்டவர்கள் என்று சொல்ல அவர்களின் இன அடையாளங்கள் தான் 
       இவர்கள்  மூல ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த நீக்ரோ இனத்தில் உள்ள எல்லா அடையாளங்களையும் இன்றளவும் மிக தூய்மையாக காப்பாற்றி வருகிறார்கள் என்பது மிக ஆச்சரியமான செய்தி தமிழகத்திலுள்ள kader இருளர் மற்றும் புழையர் போன்ற பழங்குடிகளை  விட மாறுபட்ட பழங்குடிகளாக உள்ளனர்.

சித்தி பழங்குடிகளை போர்ச்சுக்கீசியர்கள் ஆடுமாடுகளைப் போல 1619 ஆம் ஆண்டு விற்பனை செய்தார்கள், ஸ்பார்ட்டகஸ் - க்கு  நிகரான ஒரு அடிமை வியாபாரம் கோவா துறைமுகங்களில் நடந்ததாக சொல்லப்படுகிறது இப்படி விற்பனை செய்யப்பட்ட சித்தி அடிமைகளை அங்குள்ள landlord சமூகத்தில் இந்து பட்டர்கள் கிறிஸ்துவர் முஸ்லிம் பண்ணையார்கள் வாங்கிச் சென்றார்கள் 
கோவா கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவத்தையும் இஸ்லாத்தையும் இந்துக்கள் இந்து மதத்தையும் அம்மக்கள் மீது வலுக்கட்டாயமாக திணித்தார்கள் தங்கள் சொந்த அடையாளங்களை தனித்துவமான ஆப்பிரிக்க பழங்குடிகளின் வழிபாட்டு முறையையும் பழக்கவழக்கங்களையும் இதன் மூலம் அழிக்க நினைத்தர்கள்

உலகில் மிகப்பெரிய மூன்று மதங்களில் சித்தி சமூகம் உடைந்து போனாலும் பழங்குடிகளின் மரபில் ஊறிப்போன பழங்குடியின ஒற்றுமை அவர்களிடம் இன்றளவும் காணப்படும் சிறப்பு என்னவென்றால் இந்த மூன்று மதத்தினரும் இன்றளவும் வேற்றுமை இல்லாமல் ஒற்றுமையாக உள்ளனர் வெறும் விருந்துகள் மட்டுமல்லாமல் திருமண உறவுகளும் கூட மூன்று மதத்தினரும் கலந்தே  எளிமையாக நடந்துவிடுகிறது

 மதவாதிகள் அவர்களை மதமாற்றம் செய்ததுடன் சரி இவர்களை மனிதர்களாக இன்றளவும் பார்க்கப்படுவதில்லை ஆனால் சித்திகள் தனித்து காணப்பட்டாலும் கலை, இசை, பண்பியல் விஷயங்களில் கிறிஸ்தவ, முஸ்லிம், இந்து சித்திகளிடம் ஒரே பொது தன்மையுடன்  காணமுடிகிறது

சித்தி பழங்குடி மீது மதங்களை கட்டாயப்படுத்தி திணிக்கப்பட்டது என்பதற்கு அவர்களாகவே மதங்களை தழுவி கொள்ளவில்லை என்பதற்கு பல ஆய்வு அறிக்கைகள்தெளிவுபடுத்துகிறது

நிறத்தில் செயல்பாட்டில் மற்றும் கலாச்சார விஷயங்களில் திமிரு பிடித்தவர்களாக நடந்துகொண்ட மேல்சாதி மெஜாரிட்டி மதத்தின் மக்கள் என்றைக்கும் சித்திகளை தன் மக்கள் என்று பார்க்கப்படுவதும் இல்லை அரவணைத்துக் கொண்டதும் இல்லை இந்து தர்மம் ஆகட்டும் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ தர்மம் ஆகட்டும் சித்திகளின் வாழ்க்கையில் நம்பிக்கை என்ற அளவில் மட்டுமே வேலை செய்கிறது இதை விட்டால் சித்திகளிடம் மதங்கள் பெரிய பாத்திரங்கள் எதையும் வைகிக்கவில்லை இதனால்தான் சித்திகள் குடும்பத்தில் விநாயகா கணபதி'  நாகேஷ் , தாமஸ், பிரான்ஸ் , பர்சு ,மொஹமத் என்று ஒரே குடும்பத்தில் பல மதத்தின் பெயர்கள் இன்றளவும் புழக்கத்தில் உள்ளது

மதத்தின் பெயரால் சித்திகள் இன்னொரு சித்தியை பார்க்கப்படுவதில்லை அடிப்படையில் சித்திகள் நாம் என்ற உணர்வே மேலோங்கி உள்ளது இம்மூன்று மதங்களும் இம் மக்கள் மீது திணிக்கப்பட்ட தங்கள் அடையாளங்களை அழிக்க நினைத்தாலும் அவர்கள் மரபுரீதியாக இம்மூன்று மதங்களுடன் பின்னிப் பணியவில்லை
இப்படி ஏகாதிUத்திய சக்திகளால் மதவாதிகளாலும் சித்திகளை தங்கள் வாழ்விடங்களை விட்டு வலுக்கட்டாயமாக பிடித்து வந்து ஒரு மாறுபட்ட சமூகத்தில் கொண்டு வந்து விட்டாலும் தங்களுடைய தனித்துவத்தை இன்றளவும் காப்பாற்றிக் கொண்டு காடுகளில் வாழும் சித்திகள் ,பழங்குடிகளுக்கு ஒரு முன்னுதாரணம்.


சித்திகள் மற்றும் வனம்:-

      மற்ற பழங்குடிகளை விட சித்திகளிடமும் உடல் நலம் Uற்றிய விசியத்த்தில் இருக்கும் நம்பிக்கைகள் வனத்தில் உள்ள மூலிகைகளுடன் சம்மந்தப்பட்டது. உதாரணம், வனத்தில் உள்ள ஒரு வித வாசனை வேர் சளி, காய்ச்சல், உடல் பலவீனமான விசியத்துக்கு சம்மந்தமாக பயன்படுத்தப் Uடுகிறது. இதே போல வனத்தில் உள்ள தாட்சினி சக்கை என்று அவர்கள் மொழியில் சொல்லும் ஒரு மரத்தின் பட்டையை எடுத்து Uல்வலி, ஈர்கள் வீக்கம் போன்ற நோய்க்கு Uயன்படுத்துகிறார்கள் இப்படி வனத்துக்கும் சித்திகளின் வாழ்வியலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

மொழி மற்றும் தார்மீக நம்பிக்கைகள்:-

      சித்திகள் பேசும் மொழி அவர்களுடைய தனி பண்புடன் ஒரு துணை மொழியை உருவாக்கிக் கொண்டார்கள், அம்மொழி மராட்டிய , மற்றும் கொங்கணி வார்த்தைகளை கொண்ட கன்னட குரல் அமைப்பில் பேசப்படும் மொழியn க உள்ளது.
        அவர்கள் பேசும் போது சில சமையம் கன்னட மொழிச் சொர்க் களை அப்படியே பயன் Uடுத்துகிறார்கள்,உதாரணம்Gode- சுவர் Beli,  Anna-.அண்ணா ,Angadi-.   கடை,போன்ற ஒலியமைப்பை கொண்ட வார்த்தைகளை அதன் மூல அர்த்தத்தையே மைய்யமாக கொண்டு பேசுகிறார்கள்.
       மரட்டிய எழுத்துக்களையோ , கொங்கணி எழுத்துக்களையோ இம்மக்கள் அறிந்திருக்க வில்லை
இன்றைய தலைமுறை குழந்தைகள் கன்னடத்தை பாட மொழியாக படிப்பதால் கன்னட மொழியை மட்டுமே படிக்கவும் எழுதவும் திறன் கொண்டவர்களாக உள்ளனர்.
      சித்திகளின் கலாச்சாரம் மிக எளிமையாதும். இவர்களின் வாழ்வியல் முழுமைக்கும் தென் கன்னட மாவட்த்தின் வனத்தின் இயற்கையின் பிரதிபலிப்பை கான முடிகிறது.
   சித்திகளின், கடவுள், மத நம்பிக்கைகள், நீதி, பண்பியழ், பாவம் - புண்ணியம், மற்றும் நீதி பரிபாலனைகள் அனைத்தும் பல நூறு வருடங்களாக காடுகளிலேயே ஊரிப் போனதால் தான் இவர்களுடைய பண்புகளை இயற்கையே உருவாக்கிக் கொடுத்துள்ளது.


சித்திகள் - கடவுள்

    சித்திகளின் கடவுள் "சித்தி நசம், வேட்டை நாசம்" என்ற கடவுலைப் Uற்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
      சித்தி நாச கடவுள் சித்திகளின் வாழ்வியலில் மிக முக்கிய பங்காற்றும் கடவுள்.இந்த கடவுள் காய்ந்த தேங்கம் வடிவத்தில் உள்ளது, அதாவது காய்ந்த தேங்காயை கொண்டு வீட்டின் உச்சத்தில் கட்டி வைத்து அதை பூஜை செய்யும் சம்பிரதாயத்தை கொண்டுள்ளார்கள்.
இந்த தேங்காய்க்குள் தங்கள் முன்னோர்களின் ஆத்மா குடிகொண்டிருப்பதாக, அப்படி குடி கொள்வதால் குடும்ப வளர்ச்சிக்கு எப்போதும் உதவிகரமாக இருப்பார்கள் என்று ஆழமாக நம்புகிறார்கள்
எல்ல சித்தி வீடுகளிலும் இந்த தேங்காய் வழிபாடு உள்ளது.
    மானுடவியல் ஆய்வாளர் திரு எல்.எல். ஹெக்கடே அவர்களின் கூற்றுப்படி சித்திகள் தென் கன்னட மாபட்ட காடுகளுக்கு வந்த போது மத வழிபாட்டு சடங்கு காரணங்களால் பாலியான வாளிபன் ஒருவனே சித்தி நாசம் என்று வழிபடுகிறார்கள் என்று எழுதுகிறார்.
 ஆனால் சித்தி நாசம் என்ற வழிபாட்டு முறை கிராம சிறு கடவுள்களுக்கு மாற்றான கற்பனையாக கூட இருக்கலாம் என்ற கருத்தும் உண்டு.

இரண்டாவதாக சித்திகளிடம் மற்றொரு கடவுளும் உள்ளது அதற்கு பெயர் (Jattiga god) சட்டிக சாமி என்று பெயர். இந்த சாமி தென் கன்னட மாட்டத்தில் உள்ள மற்ற பழங்குடிகரும் இதை வழிபடுகிறார்கள்
இச்சாமி கிராமங்களின் எல்லைச்சாமி யாவும், காட்டு விலங்குகளிடமிருர்தும் திருடர்களிடமிருந்தும் தங்கள் விவாசய உற்பத்தியை காப்பாற்றும் தெய்வமாகவும் பார்க்கப்படுகிறது.
    விவசாய பூமியின் கடைக்கோடியிலும், வனமும் _ கிராமமும் இனையூம்  எல்லைப்பகுதியில் கருப்பு கல் நட்டு அதை ஜட்டிகசாமி என்ற பெயரில் வழிபடுகிறார்கள்.

திருமண முறை :-

   சித்திகளின் திருமண முறையில் சுற்றி இருக்கும் சமூக்கத்தி தாக்கம் இருந்தாலும், நடைமுறையில் மிக எளிமையான திருமண சடங்குகள் உள்ளது. சித்திகளின் மூன்று மதத்திலும்   இன்றைக்கும் வரதட்சனை என்ற நோய் கிருமி இவர்களிடம் காணப்படவில்லை

திருமணம் என்பது ஆண் - பெண் இனைப்பு மட்டும் அல்லாமல் இரண்டு சித்திகளின் குடும்பங்கள் இணையும் விழாவா உள்ளது, ஒரு வேலை திருமணம் செய்து கெண்ட சித்தி இளைஞர்கள் பிரிந்து சென்று விட்டாலும் இரண்டு குடும்பங்களிலும் எவ்வித விரிசல்களும் ஏற்படுவதில்லை, அதே குடும்பங்களில் அடுத்த திருமண சம்மந்தகளும் நடைபெறுகிறது.
  சித்திகளின் திருமண முறை 4 நாட்கள் நடைபெருகிறது. வரதட்சனை முறை ஒன்று இல்லை என்றால் பெண் வீட்டில் இருந்து கொஞ்சம் அரிசி, _ பருப்பு, - துணிகள், - கொட்ட முத்து(ஆமணக்கு) சீரகம் போன்றவைகளை பெற்றுக் கொள்கிறார்கள்.

இலக்கியம்:-

    சித்திகளின் இலக்கியம் என்பது மிக தெளிவாக உள்ளது. அடிமைத்தனித்துக் கு எதிராக வாய் மொழி இலக்கியமாக இன்றளவும் உள்ளது. அங்குள்ள காப்பி தோட்ட கவுடர்களின் அடக்கு முறைகளுக்கு எதிரான பாடல்களும், தங்கள் வம்சத்தை கட்டுப்படுத்த, அடக்க நினைக்கும் மேல் சாதி பிராமணர்களை எதிர்த்து பாடல்களும் கதைகளும் உள்ளது.
     இந்த கதைகளில் வர்க்க எதிர்போராட்டமோ, மேல்சாதிக்கு எதிரான போராட்டமோ இல்லாமல் இருப்பதுடன் எங்கும் வன்மங்கள் பிரதிபலிப்பதில்லை, மாறாக தங்கள் வாழ்க்கையின் வலிகளை பிரதிபலிக்கும், மனக்குமரல்களை, ஆழ்மனதில் உரைந்து கிடக்கும் நிராசைகளை கதை,பாடல் வடிவத்தில் சொல்லப் Uடுகிறது.

     இந்த நூற்றாண்டில் மாற்று மத தொடர்பால் "குலத்தாட்டு " என்று அம்மக்களால் அழைக்கப்படும் (Cross breed) கலப்பு நீக்ரோக்கள் உண்டாகி இந்திய மக்களைப் போல சிலர் தென்பட்டாலும் சித்திகள் தூய்மையான உடலமையும் பண்பியலையும் சிதையாமல் சிதராமல் இன்னும் காப்பாற்றியூம்   வருகிறார்கள்.
    சொந்த நிலம், உறவுகளை விட்டு பரதேசிகளாக அடிமைகளாக மாற்று மண்ணில் வாழ்ந்து வந்தாலும் சித்திகள் பன்பியலில் பெரும் பணக்காரர்களாக மற்ற சமுகத்துக்கு கற்றுக் கொள்ள வாழ்க்கை தத்துவங்களை , அறிவை , அகிம்சையை , சமத்துவத்தை  வைத்துள்ளார்கள். 
        நாம் கற்றுக் கொள்ள தயாரா?


மண் - சிறுகதை - லோகேஷ் ரகுராம்


நான் வேலைக்கு வெளியூர் செல்லவதாக இருந்தேன். அங்கேயே செட்டில் ஆகிவிடுவதாகத்தான் முடிவு. வீடு பார்த்து வைத்திருந்தேன். மரியாதைக்காக ஒரு எட்டு அவரிடம் சொல்லிவிட்டு வரலாம் என்றிருந்தது.
சாஸ்தா கோயிலின் கீழைப்பக்கம் திரும்பி வயல் வரப்புகளைத் தாண்டிச்சென்று தென்னங்கொல்லைக்கு நடுவே அவரின் ஓட்டு வீடு. மண் ரோட்டில் சென்றால் வயலைச் சுற்றிச்செல்ல வேண்டும். அதற்கு நேரமாகும். அதனால் வரப்பில் நடக்கலாம் என்று நடந்தேன். முதல் நாள் இரவு மழைப் பெய்து இருந்தது. கடைசி வரப்பைத் தாண்டும் போது வரப்பின் ஓரத்தில் கால் வைத்துவிட்டேன். என் கால் சறுக்கி சகதியில் சிக்கியது.
காலைச் சேற்றில் இருந்து விடுவித்துக்கொண்டு அந்த ஒற்றைச் செருப்பில் அத்தனை கனத்துடன் நடந்தேன்.
அவரது வீட்டின் முற்றத்து பைப்படியில் காலைக் கழுவிக்கொண்டு என் செருப்பைக் கழுவினேன்.
“என்னது இப்படி ஒருப்படி சேத்த அள்ளிகிட்டு வந்துருக்க!” என்று வந்தாள் பாட்டி. அதாவது அந்த கிழவரின் மனைவி.
என்னைப் பார்த்த அந்தக் கிழவர். “எதுக்கு வந்துருக்கான் தெரியுமா?” என்று அவளிடம் திரும்பி கேட்டார்.
பின்னர் “தொர, இந்த ஊர்ல ஜோலி இல்லன்னுட்டு வெளியூர் போகப்போறாராம். வெளியூர்னா அம்பது மைல் குள்ள இல்ல. எரநூத்தம்பது மைல் தாண்டி. பெங்களூரு.” என்று பாட்டியிடம் அரக்கப்பறத்தார்.
“ம்ம்ம்.” என்று இழுத்தாள் பாட்டி.
நான் கரகரவென்று பைப்படியில் என் செருப்பை தேய்த்துக்கொண்டிருந்தேன். அந்தச் சகதி போனபாடில்லை.
“ஒஞ்செருப்புக்கு அந்த மண்ணுமேல இருக்குற பத்துதல் கூட ஒனக்கு இல்லாம ஆய்ருச்சே” என்று என் செயலைப் பார்த்து நகைத்தார், அந்தக் கிறுக்குக் கிழவர்.
நான் எதுவும் பேசவில்லை. பேசினால் விதண்டாவாதம் வரும். இது கணேச மாமா வீட்டுத் திண்ணையில்லை வம்பளக்க. எப்படியும் சாயுங்காலம் அங்கு அவர் வருவார்.
செருப்பைக் ஒருவழியாக கழுவிய பிறகு, நான் “போய்டு வரேன் பாட்டி. பாத்துக்கோங்க” என்று சொல்லிகொண்டேன்.
“காணாத களங்காணப் போற. அத்தனையும் பாத்துட்டு ஊர்வந்து சேரு ராசா” என்றாள் அவள்.
மரியாதைக்காக அவரிடமும் சொல்லிக்கொண்டேன்.
அவர் என் காதறுகில் வந்து கிசுகிசுத்தார்.
“நம்மூர் பேரச் சொல்லும்போது ஒன் ஒடம்புல இருக்கற கடைசி மசூரும் கூச்சமத்து என்னிக்கு நிக்காம போவுதோ அன்னிக்கு நீ செத்துட்டனு நெனச்சுக்க” என்றார்.
அதை அவர் கொஞ்சம் வில்லத்தொனியில் தான் சொன்னார். சபிப்பது போல இருந்தது.
இந்த மனுசனுக்கு எதுக்கு இத்தன வஞ்சம், வக்கிரம் என்று அவரைத் திட்டிக்கொண்டே வேகமாக நடந்தேன். இந்த முறை மண் ரோட்டில் தான்.
மாலை கணேச மாமா வீட்டுத்திண்ணையில் நான் சென்று உறங்கினேன். ஐந்து மணி வாக்கில் மேய்ச்சலுக்காக போய்விட்டு திரும்பி வந்தவர் மாடுகளை அவர் வீட்டுத் திசையில் விரட்டிவிட்டு திண்ணையில் வந்தமர்ந்தார்.
“என்னடா, இன்னும் ஒறக்கம் வேண்டி கெடக்கு” என்று மேய்ச்சலுக்கான வைத்திருந்த தடியால் என் பின்னாடி தட்டினார்.
வெளியில் நால்வருடன் பேசிக்கொண்டிருந்த கணேச மாமா அவர்களை வழியனுப்பி விட்டு
“யோவ் கூர் கெட்ட கெழவரே, அவனப் போய் ஏன் சீண்டுறீர். நாளைக்கு ஊரவிட்டு போகப் போறான். ஒறங்கட்டும் வுடும்” என்றார்.
“அது சரி. யாரு அவனுவலாம்” என்று வந்துபோனவர்களைப் பற்றி கேட்டார்.
“அதான பாத்தேன். ஊரான் வூட்டு கொல்லைய எட்டிப் பாக்காம ஒனக்கு சோறு தொண்டயெறங்காதே” என்றார் கணேச மாமா.
பின்னர் அவரே விஷயத்தை சொன்னார்.
“அந்த மேக்கால பஸ் ஸ்டாப் பக்கம் எனக்கு ரெண்டு செண்டு நெலம் கெடக்குல்ல. அத விக்கலாம் னு இருக்கேன்.
கருவேல முள்ளா அடஞ்சு கெடக்கு. பிரயோசனப் படல. விசாரிச்சேன். கடை வச்சுக்கறேன்னு வந்து கேட்டானுவ. அதான் கிரயம் பண்ணி தர்றதா சொல்லிருக்கேன்”
அதைக் கேட்ட அந்தக் கிழவர். குரலை உயர்த்தினார்.
“அடத் தத்தாரிப் பய மவனே.
ஒன் நெலத்த வேற ஒருத்தனுக்கு குடு வேணாங்கல. ஆனா வெள்ளாம பாக்குறவனுக்கா குடு.
கடையெழுப்புறவன்ட கொடுக்கறேங்கற”
“யோவ், அந்த நெலம் துண்டா தனியா கெடக்கு அங்க.
அதுல இவரு வெள்ளாம பாத்து அறுத்து தள்ளிருவீராக்கோம்.
வந்த வரை லாபம்’ ன்டு போவியா” என்றார்.
நான் நல்ல வேலை என் பஞ்சாயத்தில்லை என்று எண்ணிக்கொண்டேன்.
“எல நான் மண்ணறிஞ்சவன் மனசறிஞ்சவன் பாத்துக்கோ.
காக்காணி நெலத்துக்கு வக்கில்லாத சீவன் இருந்தா என்ன செத்தா என்னனு நம்புறவன்.
நெலம்னா அதுக்கு உயிர்ப்பு இருக்கணும். என்னிக்குன்னாலும் ஒரு உசுர மேல எழுப்புற அனுட்டானம் அதுக்குண்டு.
ஒன் கான்கிரீட்டு அதச்செய்யுமா?” என்று கரகரத்தார் அந்தக் கிழவர்.
“உன் வேல என்னவோ அதப்பாத்துட்டு போவீராக்கும்” என்று சினந்துகொண்டார் கணேச மாமா.
“உனக்கு இப்ப புரிபடாது டா” என்று எழுந்து,
என் தாடையைப் பிடித்து ஆட்டிவிட்டு
“கழுவுற மீனுல நழுவுற மீனு கணக்கா இன்னிக்கு நீ நழுவிட்ட மவனே. நாளைக்கு பஸ் ஏத்திவுட வாரேன்” என்று வேகு வேகென்று நடந்தார்.
அத்தகைய மூப்பிலும் தளர்விலும் தன் நடையால் நிலத்தை அளந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.
பொழுது சாயத்தொடங்கியிருந்தது.
மறுநாள் மதியம் பேருந்தேறி பெங்களூர் அடைந்தேன்.
பார்த்து வைத்த புதிய வீட்டைத் திறந்து நுழைவதற்கு முன்பு
என் செருப்பைக் கழற்றுகையில் மொஸைக் தரையில் கரகர வென மணற்துகள்கள் சிதறியிருப்பதை உணர்ந்தேன்.
என் செருப்பின் பின்பகுதியைத் திருப்பிப்பார்த்தேன்.
செருப்பின் சோல் இடுக்குகளில் ஒரு வில்லை சகதி உலர்ந்து எஞ்சியிருந்தது.
“என் மண்” என்று எண்ணிக்கொண்டேன்.
அது முதல் ஒவ்வொரு முறையும் ஊர் சென்று திரும்புகையில் அப்படிப் பார்ப்பது வழக்கமாய் மாறிப்போயிருந்தது.
இன்று அந்தக்கிழவரை நான் நினைவால் மீட்டிக்கொள்கிறேன்.
இந்தச் செய்தியை வாசித்து விட்டு
“கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகரம் நீட்டிய திருச்சி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு அதே வண்டியில் இளநீர் ஏற்றி அனுப்பிய டெல்டா மக்கள்.”
இதைச் சொல்லி அவரிடம் அழ வேண்டும் என்று தோன்றுகிறது.
இதைக் கேட்டு அவர்
“மண்ணு தான் மனுசன் வெதச்ச தென்னையில ஏறி நின்னு எளணீல தண்ணியா இனிக்குது” என்று சொல்லி என்னை ஆற்றுப்படுத்தக்கூடும்.
“இப்படி புயல் வந்து எல்லாத்தயும் புடுங்கிப் போட்டுட்டுதே தாத்தா” என்றேன்.
“புயலோ மழையோ வந்தா என்னடா எல்லாஞ் சரிஞ்சு இந்த மண்ணு மேல தான கெடக்கு.
எல்லாமும் அழுகி மக்கி நாளைக்கு இந்த பூமி மேல ஒரு பச்ச தலக்காட்டும். அது போதும் டா மொத்த சனமும் மீள. மண்ணு மனுசன என்னிக்கும் கைவிடுறதில்ல” என்றவர் மறைந்தார்.
அந்த மண்ணே அந்த மனிதராக வந்தது போல் இருந்தது.
மண்ணிற்குத் தேவை மனிதன் தான். வேறெதுவும் வேண்டாம்.
அவர் சொன்ன இனிப்பிலும் பச்சையிலும் நாம் மீண்டுவிடலாம். இயற்கை இது போன்ற ஏதோ ஒரு கனிவை நமக்கு காட்டாமல் விடாது.
என் உணர்வுகளை சொல்லாக்கிவிட்டேன். செயல் படமுடியாமல் இங்கிருந்து தடுமாறுகிறேன். அந்த குற்றவுணர்வுடன் என் நிலத்து மக்களுக்கு உதவும் அத்துணை வெளிக்கரங்களுக்கும் என் சிரந்தாழ்கிறேன்.

அது நீ – சிறுகதை - லோகேஷ் ரகுராம்


·        





·        
இருட்டில் இப்பிரபஞ்ச பிரவாகத்தில் புரிபடாத மூலையில் மண்டியிட்டு அமர்ந்து விம்மி விசும்பி அழுதுகொண்டிருந்தேன். என் அழுகையால் நீண்டுகொண்டே இருந்தது இரவு. இரவுகள் அழுகைகளுக்கானவை என்பது ஏற்றுக்கொள்ளும்படி தான் இருக்கிறது. என் கண்ணீரைத் திரட்டித் திரட்டி ஒளிகொள்ளச்செய்தாலே ஒழிய பகல் சாத்தியம் இல்லை. என் கண்ணீர் கரித்துக் கரிந்து இரவென மாறியது.
அப்போது தான் என் அறை கதவு தட்டப்படும் சத்தம் ஒலித்தது.
“நான் வரலாமா?” என்று இங்கீதத்துடன் எழுந்தது அந்தக் குரல்.
“மானுடரின் மனதறைக்கு தாழில்லை. நீங்கள் தாராளமாக உள் நுழையலாம்” என்றேன்.
அவர் உள் நுழைந்தார். வெள்ளை நிற அங்கி உடல் வழிய செம்மண் நிறத் தலைமயிர் தோள் வழிய அருங்குறுந்தாடி தாடை வழிய நின்றார் அவர்.
அவர் கண்களில் வழிவது மட்டும் என்ன? புரிபடவில்லை.
“உன் விசும்பல் என்னைச் சீண்டுகிறது. அழாதே.” என்றார்.
“என் விசும்பல் எப்படி உங்களுக்கு ஒலித்தது?
“உன் விசும்பல் ஒலி என் விசும்பறைந்தது. என் நிசப்த வானத்தில் எழுந்த விரிசலாய் உன் சப்தம். மண்ணிலிருந்து எய்தபட்டது என்றறிந்தேன். மண்ணிறங்கினேன்.” என்றார்
“அப்படியானால் யார் நீங்கள்?” என்றேன்.
“இயேசு” என்றார்.
“எந்த இயேசு? ஆண்டவராகிய இயேசு வா” என்றேன். “என் விசும்பல் கேட்டு விண்ணைவிட்டு இகலோகம் இறங்கினீரா?”
அதற்கு அவர் எதுவுமே சொல்லவில்லை. அவரது வெள்ளை நிற மேலங்கியில் அவரது மார்புக்கு அருகே ஒரு உயிரசைவு தெரிந்தது. அது அவரது இருதயதுடிப்பு என்று மருட்சியைத் தந்தது ஒரு கணம். மறு கணம் அந்த மருட்சி தன் கழுத்தை வெளி நீட்டியது. தூய வெள்ளை நிற ஆட்டுக்குட்டி. அந்த ஆட்டுக்குட்டியின் தலையைத் தடவிக் கொடுத்தவாறே அவர் இருந்தார்.
“அசடரே. என்னவென்று கேட்கவந்தீரா? இல்லை உங்களைப் போல இன்னொரு அசடனைப் பார்க்கவந்தீரா?” என்று ததும்பினேன்.
அவரது முகம் ஒரு துளி முறுவலுக்குப் பின் பெரிதாக எதையும் வெளிகாட்டாது இருந்தது. அவர் என்னை அசட்டையாக எண்ணியிருக்கலாம்.
“பாருங்கள். என் துயரை. உங்கள் கல்வாரி மலையின் குகை இருட்டை. நீர் தான் என் மீட்பரோ? “
“நீங்கள் உண்மையாகவே தேவகுமாரரா ? மனித வடிவில் தரையிறங்கிய தேவனோ? உங்களை நீங்கள் மனித குமாரனாக தானே முன்மொழிகிறீர்கள்.”
“ஒன்று சொல்லட்டுமா? உங்கள் பிறப்பினால் ஏற்பட்ட இரத்தக் கறையை துடைப்பதற்காகவே உங்கள் மொத்த பிறவியையும் செலவிட்டீர்கள். ஆம். ‘உலகத்தின் மீட்பர்’ என்று சொல்லப்படும் நீங்கள் பிறந்த போது, “புனிதம்” பிறந்தது என்றனர். ஆனால் பாவமும் சேர்ந்தே பிறந்தது உங்களுடன். உங்களால். உங்கள் பிறப்புச் சங்கதியை அறிந்த ஏரோது மன்னன் அவன் நாட்டில் அன்று பிறந்த அத்தனை குழந்தைகளையும் அவன் வாளிற்கு இரையாக்கினானே!”
“பாவத்தின் தீக்கங்கு உங்கள் புனிதத்திற்கு முன்பிலிருந்தே கொழுந்தெரிய ஆரம்பித்துவிட்டது. ஒரு புனிதரின் பிறப்பு ஏன் ஒருவரை அப்படி கொதிப்படையச் செய்ய வேண்டும். இதுவா புனிதம் என்பது? ஒன்றை புனிதமென்று பாவத்தைக் கொண்டே தான் அறிய முடியுமா என்ன?”
“ ‘இயேசு’ புனிதம் என்றால், ஏரோது மன்னனிடம் எழுந்த ‘இயேசு என்கிற சிந்தை’ ஒரு பாவம். அந்த பாவத்திற்கும் நீங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்.” என்றேன்.
“உங்களை ப்ரஸ்தாபிக்க நீங்களே அரங்கேற்றிய நாடகம் அது. பாவமென்ற நாடகத்தை நடத்தி புனிதர் பட்டம் பெற்றுக் கொண்டீர்கள். உங்கள் பிறப்பு ஏன் ஒரு மொட்டு நவிழ்வது போல சத்தமில்லாமல் இருந்திருந்து உலக பாவங்களை நீங்கள் சுமந்திருக்கக் கூடாது. இதை என்றைக்காவது உணர்ந்திருக்கிறீர்களா?”
“என்னால் ‘உங்களினால் ஏற்பட்ட அந்த குழந்தைகளின் இரத்த கறையைக் கழுவவே உங்கள் மீதி வாழ்க்கை’ என்று நிறுவ முடியும். அதற்காகவே சிலுவை அரங்கில் ஏறினீர்கள். ஆணியறைந்த உங்கள் கைகளை முகர்ந்து பாரும் ஐயா, என் தேவனே, அந்தப் பச்சிளங் குழந்தைகளின் குருதி வீச்சம் அடிக்கும்.”
“உங்களை மீட்கவே ஒரு ஜென்மம் பத்தாது. இதில் உலக மீட்பு எப்படிச் சாத்தியம்?”
“உன்னை உலகத்தின் உயர்ந்த இடங்களில் ஏறியிருக்கப் பண்ணுவேன் என்று நீங்கள் சொல்வதாய் வேதம் சொல்கிறது. நான் கேட்கிறேன். எது ஐயா, உயர்ந்த இடம்? உங்கள் முன் மண்டியிடுவதா? என்னைப் போன்றவருக்கு, மிஞ்சிப் போனால் ‘மண்டியிடுவது’, மீறி நின்றால் ‘சிலுவைப்பாடு’, இதற்கு இடைப்பட்ட எந்த நிலையும் வாய்க்கப்படவில்லையே.” அவர் என்னை உற்றுப்பார்த்துக்கொண்டே இருந்தார்.
“என்னைப் போன்ற அவிசுவாசிகளுக்கு உங்கள் அகத்தில் இடமில்லை என்பதை நான் நன்கறிவேன்” என்றேன்.
“மானுட உள்ளத்தில் எழும் இது போன்ற எண்ணங்களும் அதன் பொருட்டு எழப்பெற்ற தருக்கங்களின் கூட்டு விளைவு தான் நான். என்னைப் புரிந்து கொள்ள உனக்கு இப்போது இது மட்டும் போதும்.” என்றவர் “நீ யார்?” என்றார்.
“அசடரே, என்னை யாரென்று அறியாதவரா நீங்கள். சொல்கிறேன் நான் யாரென்பதை. உங்களால் உங்களது திருப்பெயரால் வீழ்த்தப்பட்டார்களே ஆயிரம் ஆயிரம் குழந்தைகள் அதில் ஒற்றை குழந்தையின் ஓலம் தான் நான். உங்களை மண்ணிறங்கி வரவைத்த ஓலம் அதுதான் என்று வைத்துக் கொள்ளுங்கள்.”
“உயிர்த்தெழுதல் உங்களுக்கான செயல்பாடு மட்டும் இல்லை.  உலகை ரட்சிக்க நீங்கள் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தீர்கள். நான் கொல்லப்பட்ட அந்நாளே உயிர்த்தெழுந்து விட்டேன். இது புறக்கணிப்பின் உயிர்த்தெழல். ஏன் இறந்தோம் என்ற நிராகரிப்பின் உயிர்த்தெழல். இந்த ஒற்றைக் கேள்வியுடன் உங்கள் முன் மண்டியிட்டிருக்கிறேன்” என்று கூறி அவர் முன் அழுவதைத் தொடர்ந்தேன்.
“அழு அழு உன் கண்கள் வற்றும் வரை அழு. உன் நாவில் எழும் சொல்லும் வற்றுமளவு அழு” என்று என்னைப் பார்த்துக்கொண்டே நின்றார். பின்பு அவர் முன் நா எழவில்லை. எஞ்சியிருந்த சொற்களை கண்ணீராய்க் கரைத்துக்கொண்டிருந்தேன்.
அவர் கைகளில் இருந்த அந்த ஆட்டுக்குட்டி சடாரென்று என் கைகளுக்கு தாவியது. பின்னர் “இங்கு நான் என்பவன் நானல்ல…” என்று சொல்லி மறைந்து போனார்.
என் மனதறையின் சுவரில் அறையப்பட்டிருந்த அவரது படத்தில், வெளியிலிருந்து எழுந்த எதோ ஒரு ஒளித்தீற்றல் வெளிச்சத்தில், அவரின் மேல் நோக்கி எழுந்திருந்த வலது கை ஆட்காட்டி விரல் திசைமாறி என்னைச் சுட்டுவது போல் இருந்தது.
பின்னர் மண்டியிட்ட நான் எழுந்து பல அடுக்குகளைக் கடந்து வெளியே வந்தேன். பெத்லகேம் நகரம் அன்று இரவு சுடர் கொண்டது. வான வேடிக்கைகள் விண்ணை அதிர்த்தின. திராட்சை ரசத்தின் வாசம் அந்த நகர் முழுதும் சூழ்கொண்டது. தள்ளாடிய மக்கள் ஒவ்வொருவரும் ‘இயேசு பிறந்துவிட்டார். இயேசு பிறந்துவிட்டார்’ என்று ஒருவரையொருவர் ஆரத்தழுவிக்கொண்டனர்.
நான் என் மடியில் இருந்த ஆட்டுக்குட்டியின் தலையை வருடிக்கொண்டே அந்த தெருக்களில் அலைந்தேன். அவர் விட்டுச் சென்ற வருடலின் இதம் அதன் தலையில் இன்னும் எஞ்சியிருந்தது.