Thursday, March 7, 2019

கவிதைகள் - கிரி ராம் பாரதி




உள்ளுறையும் வன்முறை

அனைத்துவிதமான பயிற்சிகளையும்
அளித்திருந்தார்கள்
அனைத்திலும் தேறிவிட்டதான நினைப்பு
உள்ளூர குருகுருப்பு
அதன் விளைவான தோரணை
அந்த சர்வாதிகாரியை முடித்தாகுமாறு
ஆணை
இயல்பாக கலந்தேன் அவனிடத்தில்
சமயமும் வாய்த்தது
உகக்கா நிர்வாணத்தை அணிந்த
ஒரு பெண் துணையுடன் அங்கிருந்தான்
தளர்ந்த உடல்
சிறுநீர் பையை ஏந்தியபடி
அவளை அடிப்பதை ரசித்துச் செய்தான்
எதற்கும் அவளிடம் உணர்வே எழவில்லை
அவளைப் பற்றியபடி கழிவறையில் நுழைந்தான்
அவள் உடலும் அவன் கைகளும் மட்டுமே
பேசும் ஒலிகள்
மின்னலாக அவன் முன் எழுந்தேன்
தாக்கினேன்
நழுவி வெளியே வந்துவிட்டான்
கையில் கிடைத்த கிண்ணத்தால் அடித்தேன்
சில அடிகள் சில இடங்களில் சிவந்தன
அவன்மேல் விழும் ஒவ்வொரு அடிக்கும்
என்னைவிடுத்து அவளை அடிக்கிறான்
வெளித் தெரியாத
என் சலனத்தைக் கண்டுகொண்ட
அவனோ சிரிக்கிறான்
அவளோ சிலையாகவே இருக்கிறாள்
அவள் பெற்ற அடிகளில்
எனது கைகள் நீரில்
தவறி விழுந்தவனைப் போல
துவள்கின்றன இலக்கடையாது
சிவந்த அவளது உடலை
அவன் மேலும் சிவக்க வைக்கிறான்
என்னுள்ளுறைந்த தோரணை
வெக்கங்கெட்டு மண்டியிட்டிருந்தது
இறுதியாக எனது அத்தனையையும்
சேர்த்துத் திரட்டிக்கொண்டு
ஒரு அடியை அவனுக்குக் கொடுத்தேன்
கூசச் செய்த சிரிப்போடு
அப்படியே அவளுக்கதைக் கடத்தினான்
ஒரு கணத்தில் எனதுடல்
இறுகி வியர்த்துச் சூடேறி
நெளிந்தது
இதற்குமேல் அச்செயலை என்னால்
தாங்க இயலாத சங்கடத்துடன்
விழித்துக்கொண்டேன்
உள்ளுறையும் வன்முறை ஒலிக்கிறது
புவியிடை மனிதர்கொள் பொருள்
புடவியில் கொள்ளும் பொருளென்ன



உறுபசி அறுத்தல்

கைகள் பெறுவது இயற்கை
கைகள் கனிவது ஊழ்
அக்கனிவு
நம்மிடமும் கசியப்பெற்றால்
நாம் பெறுவது வரம்
அந்த அன்னை யாராயினும்
அன்னையரைப் போல
கைகள் கனிந்தவர்
வேரெவர்


எங்கோ ஒலிக்கிறது

மெல்ல மெல்ல
தனது கணக்கிடவியலா கால்களின்
அடி வைப்புகளில்
நகர்ந்து வந்து தாண்டிச் செல்கிறது
கதிர்க்கூட்டம்
தளர்ந்த
இறுதி நடை வைப்புகள்
மறையும் தருணம்
கூதலில் ஆழ
எங்கோ ஒலிக்கிறது அகவல்
செல்திசை நோக்கி
அனல் கொண்டு
மீண்டு வரும்படி





என்ன வேடிக்கை

நலமா.....

மனைவி மக்கள்.....

மகிழ்ச்சி

அதொன்றுமில்லை
அந்த முக்கு வேம்படியிலே
குட்டி வினாயகன் கோயில்
யாரோ எவரோ
செருப்பு மாலை போட்டுவிட்டார்களாம்
போட்டவர்
அவராகத்தான் இருக்கும்
இல்லை இல்லை
இவராகத்தான் இருக்கும்
என்று
அவரவர் பேசிக்கொள்கிறார்கள்
யார்தான் செய்தது
என்று
முறைத்தாலும் குழைந்தாலும்
குட்டி வினாயகன்
மூச்சடக்கி இருக்கிறானாம்
என்னதான் செய்ய
என்று கூடிப் பேசியதில்
இரும்புக் கதவு போட்டுவிடலாம்
வீட்டுக்கு நூறு வரி
என்பது ஏகமான முடிவு
நான் இரகசியமாக
கேட்டுப் பார்த்தேன்
அவன்
ஏதோ விளையாட்டாகச் செய்துவிட்டான்
என்று சிரிக்கிறான்
அவர்கள் குடும்பப் பண்பு போல
பேராது நிற்கும் பெருங்கருணை




ஓர் உயிர்

உடலென்னவோ சிறியதுதான்
அதில் விரிந்த வண்ணங்கள்
விசிறி விசிறி
விரித்து காட்டுகின்றன
விரிந்த புடவியழகின்
அருந்துளியை
சுவைகளால் நிறைந்த உலகில்
இனிமையை மட்டுமே
தொட்டெடுக்க படைக்கப்பட்ட
ஓர் உயிர்



கனி

மரத்தின் கரு
விதை
எனில்
கருக்குடம் கனி

அன்னையர்
இனிப்புகளை மட்டுமே
அறிந்தவர்களா

அல்லது

தன் வழியில்
உயிர்த்து வரும்
ஆயிரம் ஆயிரம்
குழந்தைகளும்
இனிமையில் மட்டுமே
திளைப்பவை
என்று அறிந்தவளா
அந்த மூதன்னை


கூதல்

தொட்டெழுப்பி
அணைத்துக்கொண்டது
அந்த அன்பை மறுத்து
கண்ணுறக்கம் கொள்ளும்
கொடிமனம் எனக்கில்லை
இருந்தும்
அணைப்பில்
இவ்வளவு இறுக்கம்
வேண்டாமே என்று கூறி
போர்வையையும் தலைக்கட்டையும்
கொடுத்தேன்
விருப்பமில்லாமல் ஏற்றுக்கொண்டது
காலை நடைக்கும்
அழைத்தது
தழுவலில் விலகலின்றி
புறங்கைக்கட்டோடு போனோம்
வெளியையும்
மறுகணமில்லாதபடிக்கு
அணைத்திருந்தது
இவ்வணைப்புக்கு
அப்பால்
வேலிகளை இணைத்திருந்தது
அணைப்புக்கு ஏங்கி விழுந்த
சிறுவான் துண்டு



சித்திரக்காரர்

மேலேறி அமர்ந்துகொண்டார்
என்றுதான் நினைத்தேன்
கவனிப்பாரா என்று தெரியவில்லை
நாங்கள் மட்டுமல்ல
சுற்றியிருந்த அனைவருமே
அவரவருக்கான
வேலைகளில் ஈடுபட்டிருந்தனர்

ஓரத்துக் குழாயில்
பால்க்கேனை கழுவவந்த பால்காரரிடம்
நீரடித்த பெண்களின் சலசலப்பு

சைக்கிளில் கரும்புக்கட்டோடு சென்றவர்
கோந்தாளையை தவரவிட
இவ்வீட்டுக்காரர் அவ்வீடொட்டித் தள்ளியதில்
அங்கே நான்கு புருவங்கள் இடித்துக்கொண்டன

இருவர் சேர்ந்து
மணிநேர லயிப்பில் உருவாக்கிய
கோலத்தில் விழுந்த பொடுசுக்கு
பொச்சடங்காதா
என்று பொரிந்த தாய்

கட்டிட வேலை முடித்து
கைகால் கழுவையில்
நீரடித்துக் கூச்சலிட்ட இளசுகள்

நகராட்சி குப்பைத்தொட்டியில்
அகழ்ந்த சேலையை
அவரது தேவைக்குக் கிழித்துக்கொண்டிருந்தார்
ஆந்திரா பைத்தியம் என்று எங்களால்
பெயரிடப்பட்டவர்

அதே நகராட்சி குப்பைத்தொட்டியை ஆய்ந்து
தன் ஆணைக்குறியிட்டு
எல்லைப் பாதுகாப்பை உறுதிப்படுத்தி
ஓடியது நாய்

மாடியில் விளையாடிய பொடுசுகளின்
கைநழுவி அப்பாடா என்று
சாக்கடையில் வந்தமர்ந்தது பந்து

இவற்றுக்கிடையில்
நான் அவரை கவனிக்கிறேன்
என்பதையும் சேர்த்து கவனித்தார்

எங்களின் அத்தனை தனித்த
பேச்சொலிகளும் மூச்சொலிகளும்
ஒன்றாகி முழக்கமென இரைய
அத்தனைக்கும் மேலமர்ந்து
தன்னினிய குரலில் பாடியபடியே
எதிர்காற்றில் தன் மென்சிறகுகளால்
அந்தர வெளியின் பொன்மார்பில்
நமக்கெல்லாம்
புலப்படா ஓவத்தைத் தீட்டினார்






சொல்

சொல்
எப்படிச் சொல்வேன்
அறிதல் வெளிப்படும் சொல்லை
தவிப்புதான்
நாள் கணக்கில்
தவம் போல
வந்து விழும் சொல்லுக்காக
காத்துக் கிடக்கிறேன்

தவித்தலைந்து
கையறு நிலையில்
வந்தமர்ந்திருக்கையில்
வான் பொழியும் விரிமலர் போல
வந்து விழுகிறது சொல்
சொல் அகமொலிக்கையில்
தூக்கம் தொலைந்துவிடுகிறது
உடல் களைப்பு மாய்ந்துவிடுகிறது
பித்து போல
திரும்பத் திரும்பச் சொல்லி
கிளியாகிறேன்
சொல்
சொல்லாக
சொல்லிச் சொல்லி
கூத்தாடுகிறேன்

அனைவர் முன்பும் யாருமறியாமல்
சொல் தரும் வானே
எப்போதும் உம் குழந்தைமேல்
உமது பெருங்கருணை
பெருமழையெனப் பொழியட்டுமே





தர்மம்

பசி
அனல் எரிகிறது
என்றேன்

மீன் பிடிக்க போகலாம்
என்றார் அவர்

வழி நெடுக
வயிறு நிரையப்போகும் நினைப்பு

அழகிய குளம்
நீர்ச்செடிகளுக்கு இடையே
மீன் உணவு தேடிக்கொண்டிருந்தது
தூண்டிலிட்டு
அமர்ந்தோம்

முதலில் ஒரு மீன்
தூக்கி கூடையில் போட்டார்
வெள்ளியுடல் பலபலத்தது
அந்தத் துடிப்பைப் பார்த்தால்
மகிழ்ச்சிக்கும்
துயரத்துக்கும்
வேறுபாடு தெரியாத துடிப்பு
ஆனால்
அதன் கண்கள்
என்னவோ செய்தன

மீன் பிடிக்க வேண்டுமா
என்றேன்

என்னில் எதையோ உணர்ந்த
அவர்

எது உனக்கு தேவை
என்றார்

உணவு தான்
ஆனால்.....

அப்போது அதுவே தர்மம்

அடுத்த புழுக்கொக்கி
நீரில் விழுந்திருந்தது
இருந்தாலும்
என்னால் நிலைக்க இயலவில்லை
துடிக்கும் உயிர்
கண்கள் சிமிட்டியிருந்தாலும்
பரவாயில்லை
ஆனால்
நீர்மை கொண்ட
சிமிட்டா விழிகள்
அதைக் கண்டும்
காணாது இருக்க
பழகிக்கொள்ளத்தான் வேண்டுமா



தேன்

வண்ணத்துப் பூச்சி
ஏனது மலரை நோக்கியே வருகிறது
மலர் மணம் கொண்டிருப்பதா
மலர் தேன் கொண்டிருப்பதா
வண்ணத்துப் பூச்சிக்கு தேன் சுவைப்பதா
மலருக்கு அழகு போதவில்லையா
மணத்தால் மயக்குகிறது
தேன்சுவையால் இழுக்கிறது
இரண்டும் எதைத் தேடுகின்றன

புற்றெழத் தவமியற்றியவர்களின் கதைகள்
இம்மணுக்குப் புதிதல்ல என்றாலும்
யார் பார்த்ததுண்டு
யாருக்கேனும் பார்க்க வேண்டுமெனில்
இதோ
தவத்தில் புற்றெழ ஓருயிர்
பெருங்கருணையோ
ஊழின் நெறியோ
தவ வலியோ
புற்றவிழ மலர்ந்தது மலர்
மலரிடம்
வண்ணத்துப் பூச்சியும்
தவம் கொண்டு
அருகமர்ந்து
உணர்ந்தொழிந்து பெறுவது எதை
இருவரும் எதைத் தேடினரோ அதை

தேன்
பெற்ற பிறகு
மலரிலிருந்து மணம் எழுந்ததும்
வண்ணத்துப் பூச்சி சென்றமர்ந்து
மலரிலிருந்து மலர் எழுந்தது




நந்தி

படுத்துக் களைத்து
எழுவதற்காக
முன்னங்காலில் ஒன்றை
முன்னால் வளைத்தும்
நாசி துழாவும் நாவுடன்
வால்
சுழன்று படிந்தும்
உறைந்து நிற்கிறார்
நந்தி
தலையில் வைத்த
ஒற்றை இலை துணைகொண்ட
செம்பருத்தியை
விழாது தாங்க வேண்டும்
என்று
ஒரு தொடுகையில்
சொல்லிவிட்டுப் போன
பாப்பாவுக்காக




நல்லாள்

ஒருபோதும்
கண்களுக்கு அகப்படாத
அகன்று விரிந்த உரு
மெல்ல வாய் திறக்கிறது
தவித்த வாய்கள்
தணிந்து செல்கின்றன
காலத்துக்கும்

பேணுவதன்றி
பெற்றவள் செய்வதற்கு
ஒன்றுமில்லையே

ஒன்றுமில்லாதவள்
ஏன் பெற்றாள் ?

இது என்ன கேள்வி
பெறுவதே நியதி
பெறுவதே உவகை
பெறுவதே வரம்


நீர்

நான்
தூண்டில் போடுகிறேன்
ஒவ்வொரு முறையும்
மீன்
மாட்டுகிறதோ இல்லையோ
ஒவ்வொரு முறையும்
நீர்
மட்டும்
மாட்டிக்கொள்கிறது



முக்காலியா

முக்காலியா நான்
சரி உனக்கு என்னை
அப்படித்தானே அறிமுகம்
செய்துவைத்தாள் உன் அன்னை
இன்று நான்
இவ்வுருவில்
இங்கிருக்கிறேன்
உனது பாட்டி பிறந்திருந்த
பொழுதுகளில்
உயிர் உதிப்பில் அகஞ்சிலிர்த்து
ஆடிக்கொண்டிருந்தேன்
அவள் துள்ளி விளையாட
நிழலும்
சிறுகுருவிகள் சிறகுளர்த்த
தோளும்
கொடுத்துப் பேணிக்கொண்டிருந்தேன்
பூத்துக் கனிந்தவிட்டிருந்த நான்
அவளுக்கு சடங்கென ஆவதற்கு
முன்பே முக்காலி
பிறப்பெடுத்துவிட்டேன்
பூத்தவளின் கன்னிமையை கண்ணொற்றி
நான் மடியேற்றி அமர்த்திக்கொண்டேன்
ஆறேழு தலைமுறைகளையும் கண்டுவிட்டேன்
உனது பாட்டியை நீ அறியமாட்டாய்
என்னையும் நீ ஒரு பொருட்டாக
எண்ணப்போவதுமில்லை
இருந்தாலும்
உனக்கென்று என்னால் அளிக்க
சில உள்ளன
விருப்பமிருந்து கொஞ்சம் எனது
கதகதப்புக்கு உன் கைகளைக் கொடுத்தால்
நீ உணர்ந்துகொள்வாய்
உனது மூதன்னையின்
கனிந்த கைகளின் தொடுகையை
என்னில் பூத்துதிர்ந்த
மலர்களின் நன்னறு மணத்தை
இப்புடவியின் உயிர் தொடர்ச்சியை

  

வரம்

மெத்தென மெல்லுடல்
மலரோடுதான் உவமிக்கப்படுமோ
எல்லைகள் இருக்கத்தான் செய்கிறது
அருநிகழ்வு தான்
எந்தன் கைகளின் மேல்
நிகழ நிகழ நெகிழ்ச்சி
இந்த நெகிழ்ச்சிக்காகவே
என்னையும்
நெகிழ்ந்தேந்தினரோ
நெகிழ்ச்சியை கையேந்தி அளிக்கவே
நிகழ்ந்தேனோ
நம்மைப் புவியும்
புவியை மண்டலமும்
அதனை வெளியும்
புடவியை
யார் ஏந்தி நெகிழ்ந்தார்
பிள்ளைகள் தன் பிள்ளைகளை
நோக்கியே தவமிருக்கின்றன
இதுவே அளிக்கப்பட்ட வரமோ
இந்த வரமன்றி
எஞ்சுவது வேறென்ன

விதை

விதை
அது தன்னை மறைத்துக்கொள்வதில்
இருந்தே
புத்துருக்கொள்கிறது

உருக்கொள்ளாது மறைந்த விதைகள்
என்றென்றைக்குமான
மாறாத உருவை அடைந்துவிடுகின்றன

நமக்காக
மாறாப் புன்னகையோடு
நமக்காகவே உருக்கொள்ளும்
சிறுவிதை
ஏனித்தனை எடை கொண்டதாக ஆகிறது
எடை கொள்ளும்போதே
வலுக்கொள்கிறது
ஆழ்ந்து அமைகிறது
தவிர்க்கவியலா இடத்தையும்
அடைகிறது
அத்தகையதொரு விதை
என்னுள்ளத்துள்ளும் மறைந்தமையட்டும்
எடைகொள்ளட்டும்
வலுக்கொள்ளட்டும்
ஆழ்ந்தமையட்டும்
துளிர்த்து கிளைபரப்பி
மலர்ந்து மணம் வீசட்டும்



தழல் - சிறுகதை - கிரி ராம் பாரதி



1

ஆற்றோரப் புதர்கள் காலைக் கடனுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருந்தன என்றாலும், திருநீலனுக்கு அங்குதான் சிந்தனைகள் எழுந்தன. மலத்தைத் துடைத்த கல்லை ஒரு கணம் பார்த்தான், பழுத்து வெளுத்த இலையின் நிறத்தில் இருக்க, மஞ்சள் பூச்சாக மலம் இழுபட்டிருந்தது. ச்சீ... என அதை விசிறிவிட்டு சட்டென எழுந்து ஆற்றை நோக்கி நடந்தான், முகத்தில் ஒரு தெளிவின்மை, கண்கள் அங்குமிங்கும் அலைய, என்ன எண்ணமிது என்று நினைத்துக்கொண்டே ஆடைகளைக் கலைந்து நீரில் இறங்கினான். இருள் வெளுக்கத் தொடங்கியிருந்தது, உள்ளமும் உடலும் கொண்டிருந்த பதற்றம் நீரின் குளிர்வை எல்லாம் உணர முடியாமல் செய்திருந்தது. மனமெங்கும் மலம் நிறைந்திருந்தது, அதைத் தேய்த்துக் கழுவித் தீர்த்துவிடுவது போலக் குளித்துக் கரையேறி ஆடையை அணிந்து கொண்டு மணலில் அமர்ந்தான், வெளியெங்கும் குளுமை நிறைந்திருக்க, இயற்கை அதன் சுழலில் மாறாமல் இயங்கியது கணத்தது. பாதங்களில் நீர் வழிந்து சென்று கொண்டிருக்க, உடல் பதற்றம் மறைந்திருந்தாலும், அந்த எண்ணம் ஏன் வந்தது என்ற கேள்வி மட்டும் எஞ்சியபடி இருந்தது. வானின் செம்மை மறைந்து மஞ்சள் விரியத் தொடங்கியிருந்தது உள்ளத்தில் திரும்பத் திரும்ப அந்த எண்ணத்தையே கொப்பளித்தது. அங்கு அமர்ந்து சிந்தனையில் மூழ்கியிருப்பது சில காலமாகவே திருநீலனுக்குப் பழக்கமாகி இருந்தாலும், சிலநாள்களாக தீவிரமான எண்ணங்கள் எழுந்து அலைக்கழித்தன, உள்ளத்தை இருவேறாகப் பிளந்து தர்க்கமாடிக் கொண்டே இருந்தாலும் கேள்விகள் மேல் கேள்விகள், ஒன்றை மறுக்க மற்றொன்று என முடிவிலியின் கனம் தாள முடியாததாய் இருந்து கொண்டிருக்கிறது. கரையில் இருக்கும் ஈசுவர ஆலயம் அவனது குழந்தைப் பருவத்திலேயே உள்ளத்தை ஈர்த்துவிட்டிருந்தது. ஈசன் அவனை அங்கு வரவழைக்கவே சிறிய வட்டக் கிணற்றைத் தோண்டி ஒரு ஆமையையும் வளர்த்துக் கொண்டிருந்தார். பாதங்களைத் தழுவித் தாவி நீர் விரைந்து கொண்டிருக்க, அதன் நெளிவு சுழிவுகள் கண்களில் மினுங்கின. கையை நீரில் அலைந்து உதறிவிட்டு எழுந்து, தோளில் கிடந்த துண்டில் துடைத்துகொண்டு, கோயிலை நோக்கி நடந்தான். அன்று கண்ட கனவு கலங்கலாக எழுந்தது, அதன் தெளிவின்மை சலிப்பைத் தர ஈரக்கால்களில் ஒட்டிகொண்டிருந்த மண்ணை வலிந்து தட்டிக்கொண்டே நடந்தான். இரு கரையிலும் சிலர் ஆற்றுப் பாறைகளில் துணியைத் தப்பிக்கொண்டிருந்தனர், அந்த ஒலி ஒரு ஒத்திசைவிலும் அவ்வப்போது விலகியும் ஒலித்தது. அவர்களைப் பார்த்துக்கொண்டே படிகளில் ஏறி கோயில் முகப்பை அடைந்ததும், உள்ளிருந்து பாடும் குரல் கேட்டது. அப்போதிருந்த மனநிலைக்கு அவன் நின்றிருந்த அரச மரத்தில் கத்திக்கொண்டிருந்த காகம், மேலும் கொதிப்பைத் தந்தது. சட்டென இது என்ன இப்படி ஒரு நினைப்பு என எண்ணிக்கொண்டு முகப்பை நோக்கினான். அங்கு சுவரோரமாக அமர்ந்திருந்த பரதேசி, வருவோரிடம் கேட்காத குரலில், சாமி என்றவாறு கூப்பிக் கையை நீட்டினான், சில செருப்புகளும் அவனது துணி மூட்டையும் அவன் அருகில் கிடந்தன. முகப்பை நோக்கி மெல்ல நடந்தான், பரதேசியின் அந்தக்குரலையும் அந்த உடலையும் எதிர்கொள்ள இயலாமல் விரைவாக அவனைக் கடந்து உள்ளே சென்றான். நமக்கு மட்டுந்தான் இப்படி இறுக்கம் உண்டாகிறதா, எல்லோரும் எளிதாக ஒரு மனிதனின் இருப்பை இரங்கலை எப்படி எளிதாக கடந்து செல்கின்றனர், நாமே ஒரு சாதாரண செயலை எடையேற்றிக் கொள்கிறோமோ?’, வினா மேல் வினாவாகக் கிளைத்தது. பாடும் குரலின் ஒலி பெருகியபடியே இருக்க, ஒரு வழக்கத்துக்காகச் சுற்றியிருந்த சன்னதிகளைக் கண்டு கடந்தான். எண்ணெயும் நீரும் பட்டுக் களிம்பேறி விளக்கின் ஒளியில் ஒளிரும் சிலைகளைக் காணக் காண ஒவ்வொன்றும் சோர்வைத் தந்தன. பெரிதாகக் கூட்டம் இல்லாததால் உள்ளம் அமைதியாக இருந்தாலும், ஒருவர் அவனுக்கு முன்பாக ஒவ்வொரு சன்னதியிலும் நின்று உருகிக் கடந்துகொண்டிருந்தார். அவரது பார்வை படும்போது மட்டும் வணங்குவதைப் போலக் கைகளைக் கூப்பிக் கொண்டு நின்றான். கிணற்றில் ஒருமுறை எட்டிப் பார்க்க, உள்ளம் அவன் அறியாது நகர்த்திக் கொண்டு சென்றது, வட்டமாக உள்ளிறங்கிய கிணற்றில் எப்போதும்போல பத்தடியிலேயே நீர் கிடந்தது, கீழே சுவரின் கங்கில் ஆமையின் ஒருபுறம் மட்டுமே தெரிந்தது. ஆமையைக் காணும் ஒவ்வொரு முறையும் எழும் மகிழ்வு இம்முறை எழவில்லை, சுவரின் மீது கிடந்த நார்க்கயிற்றை விரல்களால் அழுத்திக்கொண்டிருந்தன கைகள், துருத்திகொண்டிருந்த நார்கள் குருகுருப்பாக விரலில் அழுந்த, ஒரு கணம் நின்று நகர்ந்தான். கருவறையின் பின்புறமாக சென்று கொண்டிருக்கையில் மெல்லிய ஓசையாய் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. இளம்பெண் ஒருத்தி செண்பக மரத்திலிருந்து உதிர்ந்து கொண்டிருந்த மலர்களைப் பொருக்கிக் கொண்டிருக்க, அவளுடன் இருந்த குட்டிப் பயல், மேலே பார்த்தபடி மரத்தை ஆட்டி மலர்கள் விழாததை எண்ணிப் புலம்பிக் கொண்டிருந்தான். வேகமாக நடந்து அந்த இடத்தைக் கடந்து சென்றான். அவளது முகத்தைப் பார்க்காது கடந்து வந்துவிட்டதை எண்ணி அவன் உள்ளம் மெலிதாக மகிழ்ந்தது, அப்படியே சுற்றி உமையவள் உறைவிடத்திற்கு வந்தான். உள்ளே அடியெடுத்து வைத்த ஒரு கணம் நின்று நோக்கினான், இருளில் இருந்து உமையவளும் அடியார்கள் சிலரும் துலங்கி வந்தனர். சிலரே நின்றிருந்தனர், ஒரு பெண் திரும்பி நோக்க, கைகளைக் கூப்பிக் கொண்டு செய்ய வேண்டியவற்றைத் தன்னியல்பாக உடல் செய்ய, உள்ளம் மட்டும் ஏதோ நிலைகொள்ளாமையில் தள்ளாடியது. தூபம் காட்டி முடிந்ததும் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டு வெளியேறினான். இருளுக்குள் இருந்து வெளிச்சத்துக்கு வந்ததும் கண்கள் கூச, தலையைத் திருப்பினான், யாழி கன்னங்கள் கிழிந்து, துருத்திய பற்களில் உறுமலோடு, சிரித்துக்கொண்டிருப்பது போலப் பட்டது. கிழிந்த கன்னங்களின் ஓரத்தில் எச்சில் வழிய கோரமான முகம் எழுந்து முகத்தைச் சுழித்துக் கொண்டான். இப்போதெல்லாம் அடிக்கடி இத்தகைய எண்ணங்கள் வருகிறதை எண்ணி ஒரு படபடப்பு, அவை எழாமல் இருக்க முயன்றால் வீரியமான எண்ணங்கள் எழுகின்றன, இந்த விந்தையை அவனால் புரிந்து கொள்ள இயலவில்லை, அது மேலும் அச்சங்கலந்த குழப்பத்தைத் தந்தது. ஒருமுறை அதனைத் திரும்பவும் கண்டு இறங்கி நடந்தான், ஈசனின் உறைவிடத்தில் நுழைந்தான், பாடல் ஒலியை நிலம் அதிர்வாக அவன் உள்ளத்திற்கு உணர்த்தியது. அப்போதுதான் அவ்விடத்தின் அமைதியை ஒருகணம் கண்டான். அனைவரும் கூப்பிய கரங்களோடு கருவறையை நோக்கி நின்றும், அமர்ந்தும் இருக்க, ஒருவர் பாடிக்கொண்டிருந்தார். கருஞ்சுவர்கள் அவ்வொலிலைப் பெற்று எதிர்த்து முழங்கி அதிர்வைத் தந்தன. நல்ல குரல் வளம் என்று எண்ணிக்கொண்டாலும் உள்ளத்தில் ஏதோ ஒரு ஒவ்வாமை உணர்வு, அங்கு இருந்த அனைவர் மீதும் வெருப்பை உணர்ந்தான், அவர்களின் முகங்களில் இருந்த தெளிவும் அர்ப்பணிப்பும் தூய்மையும் துள்ளலும் மேலும் எரிச்சலைத் தந்தது. இது என்ன விளையாட்டு இவர்களுக்கு, இப்படி நாளும் பாடித் திரிந்தால் வாழ்வு நடந்துவிடுமா, அர்ப்பர்கள், அறியாமையை எடுத்து தலைக்குள் திணித்துக் கொண்டவர்கள், பக்தி முத்திய பைத்தியக்காரர்கள் என்று உள்ளம் கூறிக்கொண்டிருக்கையிலேயே, இன்னொரு குரல் இது என்ன அளவு கடந்த பேச்சு என்று மட்டுறுத்தியது. இது என்ன இருமை என்று ஒரு கணம் நினைத்தாலும், எப்போதும் இப்படித்தானே இருந்தது என்பதை அப்போதுதான் உணர்ந்து வியந்து கொண்டான். வெளியில் இருக்கும் பரதேசிக்கு காசு தர இரங்காதவர்கள் உள்ளம் எப்படி இப்படி பணிந்து குழைந்து துவண்டு கொண்டிருக்கிறது என்று வெருப்பு வளர்ந்து கொண்டிருக்கையிலேயே பாடல் முடிவுற்று அனைவரும் தூபத்துக்கு முண்டியடித்தனர். திருநீலனுக்கு அந்தத் தட்டு எங்கு போய்விடப் போகிறது, இந்தத் தவளைகள் எக்காலமும் திருந்திவிடப் போவதில்லை என்று உள்ளிருந்து ஒன்று கூக்குரலிட்டது. முதலாகச் சென்ற ஒருவர் தூபத்தை ஒற்றிக் கொண்டு திருநீற்றைப் பெற்றபடி அடக்கமாக வந்தார், இவனைப் பார்த்ததும், சிரித்தவாறே நீற்றைப் பூசிக்கொண்டு, போய் வாங்கிக் கொள்ளுங்கள், பார்த்துக்கொண்டிருந்தால் கிடைக்காது என்றவாறு திரும்பிக் கருவறையை நோக்கித் தலைக்குமேல் கும்பிட்டார். இப்போது, புடனியில் ஒரு அடி வைக்க வேண்டும் என மீண்டும் அந்தக்குரல் கொக்கரித்தது. கூட்டம் தூபத்தை ஒற்றிக்கொண்டு கலைந்து திரும்பி இவனது இருப்பை அறிந்ததும், நிமிர்ந்த தலையோடு சலனமில்லாத பார்வையில் ஈசனைப் பார்த்துவிட்டு, திரும்பி வெளியே வந்துவிட்டான். அவன் நின்று நகர்ந்த இடத்தில் இருந்த தூணில் லிங்கத்தின் மீது பாதத்தை வைத்தபடி இருக்கும் கண்ணப்ப நாயனாரின் புடைப்புச் சிற்பத்தின் விளிம்பில் திருநீரு இட்டுக் கொண்டவர்கள், மீத நீற்றைக் கொட்டிக் கையைத் தட்டிக் கொண்டனர். அதன் பிறகு எங்கும் நிற்கவில்லை, அனைவரும் அவனைவிடப் பல படிகள் கீழே நிற்பது போல ஒரு உணர்வு, வெளியே பரதேசியின் தட்டு மட்டும் பதற்றத்தைத் தர வேகமாகத் திரும்பிக் கடந்து சென்றான். பெருமாள் சன்னதி ஆளரவமின்றிக் கிடக்க, அர்ச்சகர் விசிறியபடி தூணில் சாய்ந்திருந்தார். கண்களில் குழப்பமும் ஆங்காரமுமாக இதழ்கள் மெல்ல குவிந்து விரிய, மென்மையாக சொற்கள் இழைய, கரையோரமாக நடக்கத் தொடங்கினான். கோயில்தான் மக்கள் புழங்கும் மைய இடமாக ஆற்றின் கரையில் இருந்தது, அந்த ஒலிகள் அடங்கும் வரை நடந்துகொண்டே சென்றான். சீரான மெல்லிய நீரொலி மட்டுமாக கரையோர மரங்களிலும் புதர்களிலும் இருந்த சில பறவைகளும் மட்டுமே காதுகளில் மொய்த்துக் கொண்டிருந்தன.

2

அன்று ஒரே குதூகலமாக உள்ளம் துள்ளியபடியே இருந்தது, மாலை கூத்துப் பார்க்கச் செல்லலாம் என்று தாத்தா கூறியதுதான், வாய் நிறையச் சிரிப்பும் துள்ளலுமாக குதித்துக்கொண்டிருந்தான். கூத்து என்ற சொல்லைக் கொண்டு தாத்தா அவனில் ஒட்டிக்கொண்டார். அவரை விடாது கூடவே நடக்கத் தொடங்கினான். கூத்தைப் பற்றி ஏதேதோ கேட்டுக்கொண்டே சென்றான். பாவம் குழந்தை பயந்துவிடுவான் என்று சொல்லி வீட்டுப் பெண்கள் தடுத்துக்கொண்டே இருந்ததிலிருந்து தாத்தா இன்று விடுதலை அளித்ததே பெரும் கொண்டாட்டமாக இருந்தது. என்ன கூத்து என்பதைத் தவிர வேறு எதையும் சொல்லாமல் மிக இரகசியமாக தாத்தா நடந்து கொண்டிருந்தார்.
தொடர் முயற்சிக்குப் பிறகு,சாகாவரம் வாங்கற கதை, என்றார் தாத்தா.
சாகாவரம்னா..... என்றான்.
தாத்தா, இப்படி விளையாடிக்கிட்டே இருக்கலாம் என்றார்.
நானும் சாகாவரம் வாங்கலாமா என்றான் துள்ளலுடன்.
ம்.....
எப்படி ?
அந்தக்காலத்துல முனிவர் தவம் செஞ்சது மாதிரி தவம் செய்யனும்
எப்படி ? என்றான் ஆர்வமாக.
சும்மா கிடைக்குமா வரம்..... நாற்பத்தி எட்டு நாள் தவம் பண்ணனும்.
நாற்பத்தி எட்டு நாள் னா..... நெறையா நாள்...... என்று தன் உள்ளத்திற்கு சிக்காத ஒன்றைப் புரிந்துகொள்ள முயன்றது அவனது உள்ளம்.
அப்போ எப்படி சாப்படறது ? பசிக்குமே....
பசிக்கும்.
பசிச்சா சாப்பிட்டு முடிச்சு தவம் பண்ணலாமா ?
ம்.... சாப்பிடக்கூடாது. கண்ண முழிக்காம தவம் பண்ணனும்.
சிறிது சிந்தித்தவன், அப்போ நான் தூங்கும்போது தவம் பண்ணலாமா.... அப்போதான் கண்ண மூடி சாப்பிடாம இருப்பேனே..... என்றான்

இன்னும் பெரிய ஆளா ஆனதுக்குப் பிறகு பண்ணலாம், என்றார் தாத்தா.
வழியில் வேடிக்கை பார்த்துக்கொண்டே வேறு ஏதேதோ பேசிச் சிரித்து ஆற்றை நெருங்கினர். ஓசை கேட்டதும் முன்னால் ஓடினான், அவன் ஓட ஓட ஆறு விரிந்தபடியே சென்றது. பெரும் நீர்ப்பெருக்கு தளும்பி நெளிந்து சுழித்து நகர்ந்தபடி இருந்தது. ஆற்றோர புதர்களுக்குள் இருந்த இடைவெளிகளில் இருவரும் சென்றமர்ந்தனர். மலத்தைக் கழித்தபடியே பேசிக்கொண்டிருந்தனர்.
தாத்தா, ஆச்சா  என்றார்.
ம்... என வாயைக் கோனி மூச்சை இழுக்க இருமல் வந்தது. தாத்தா இந்தா இந்தக் கல்லுல தொடச்சிட்டு வா ஆத்துல போயி கழுவிக்கலாம் என்று முடித்துக்கொண்டு எழுந்து சென்றார். வண்டுகள் சிற்றுருண்டைகளாக மலத்தைப் பிரித்துக்கொண்டு உருட்டத் தொடங்கியிருந்தன. துடைத்துவிட்டு எறிந்த கல்லை ஒரு கணம் நின்று நோக்கிவிட்டு தாத்தாவின் பின்னால் ஓடினான்.

3

உணவை முடித்துக்கொண்டு அனைவரும் சென்று படுத்துக் கொண்டனர். விளக்கொளி தணிந்து மறைந்திருந்தது, சூழ இருள் நிறைந்து பரவி கனத்தது, மெல்ல மார்த்துடிப்பு மிகுந்து வியர்த்தது, கண்களில் இருந்த உறக்கம் காணாமல் போயிருந்தது, தொண்டை வரல எச்சிலை விழுங்கிக்கொண்டான், கண்கள் விரிந்தால் இருள் முகத்தில் அறைந்தது, மூடினாலும் அதே அழுத்தம், செவி கூர்ந்திருந்தது, வெளியே தாத்தா இருமும் ஒலி, எங்கோ நரியின் ஊழை, எதிர்த்தரப்பாக நாய்கள் குரைத்தன, முரல் வண்டுகளின் முரலொலி சீராக முரைந்தது, காற்றில் கிளைகளின் உரசல், இலைகளின் சலசலப்பு, தவளைச் சத்தங்கள், கூரையின் தடுக்குகளில் எலிகள் ஓடும் சரசரப்பு, கண்களை இருக மூடிக்கொண்டான். ஆண்டவா.... எந்த எண்ணமும் இருக்கக் கூடாது என்று வேண்டிக்கொண்டு, திரும்பிப் படுத்துக் கொண்டான். கட்டுந்துறையில் எருமை சாணமிடும் ஒலி கேட்டது, அந்த நினைவு எழுந்ததும், மேலும் படபடப்பு ஏற்பட்டது, கைகளை இறுக மூடிக்கொண்டான், ஒருமுறை மேய்ச்சலுக்குச் சென்றபோது இரு எருமைகள் மோதிக்கொண்டன, கொம்புகள் பட்டென உரசும் ஒலிகள், மூச்செரியும் ஒலிகள், நீர் மினுங்கும் அந்தப் பார்வைகள், கைகள் இறுக எண்ணங்களை மாற்றத் துடித்தான், அவன் முயல முயல எருமைகள் சண்டையை நிறுத்தின, மூச்செறிந்து வாலைச் சுழற்றியது ஒன்று, அடிவயிற்றில் உதைத்து ஈயை விரட்டிய மற்றது குனிந்து கொம்புகளைக் காட்டி வேகமெடுத்தது. சட்டென எழுந்து அமர்ந்தான். தொடர்பில்லாமல் சிறுவயதில் கேட்ட கதையொன்று கிளைத்துக்கொள்ள தலையைப் பற்றிக்கொண்டான். ஏதேதோ எண்ணங்கள் கிளைத்துக்கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் தனித்த ஒன்றின்மேல் கவனம் கொள்ள இயலாது, வெள்ளத்தின் செம்மை கலந்த சுழிப்பாய் எண்ணங்கள் சுழன்று கலக்க, தானறியாது உறக்கத்தில் ஆழ்ந்தான். சட்டென விழித்துக்கொண்டு உடலதிர எழுந்து அமர்ந்தான், வான் ஒளி கொண்டிருந்தது. ஊழி என்னும் சொல் மட்டுமே உள்ளம் முழுதும் நிறைந்து இருந்தது. எங்கு கேட்ட சொல்லென ஒருவாறும் அறிய முடியவில்லை, ஆனால் அது திரும்பத் திரும்ப ஒலித்தது. அன்றைய கனவும் மிகவும் கிளர்ச்சியடையச் செய்திருந்தது உள்ளத்தை.
ஊழி. ஊழிக்கு ஒரு நொடி. ஊழிக்கு ஒரே நொடிதான்.
பூமி
வான்
ஒன்று தாய்
ஒன்று தந்தை
குழந்தைகள் நாம்
அவர்கள் கூடல் நீடிக்கும்வரை
ஊடல் கொண்டனர்
ஊழி
  
இந்த வரிகள் எங்கோ உள்ளத்தின் அடியாழத்தில் இருந்து கிளைத்துக் கொண்டு வெளியே வந்து விழுந்தன. அன்று முழுவதும் எந்தச் செயலைச் செய்தாலும், இடையே ஊழி ஊழி என உள்ளம் அந்த வரிகளையே அள்ளி அள்ளிப் பூசிக்கொண்டிருந்தது. தான் தேடிக்கொண்டிருந்த ஏதோ ஒன்றைக் கண்டடைந்துவிட்ட குழந்தையைப் போலத் துள்ளியது. பெரும் சுமையை இறக்க வழியில்லாமல் சுற்றியலைந்து இறக்கி வைத்த பரவசம் சூழ்ந்துகொண்டது.

4

நெடுநாட்களாக உள அலைச்சல்களில் உழன்று கொண்டிருந்தவனை அன்று ஏதோ காரணம் சொல்லி கண்ணன் வெளியே அழைத்துக்கொண்டு சென்றான். ஏதேதோ முயன்றும் அவனைப் பேச வைப்பது கண்ணணுக்குப் பெறும்பாடாய் இருந்தது. சற்று நேரம் இருவரும் சொற்களின்றி நடந்து கொண்டிருந்தனர். வழியில் இருந்த மரங்களை எல்லாம் கண்டபடியே வந்தான் திருநீலன்.

தயக்கமாக, என்னால பேச முடியல, அத சொல்லிப் புரிய வைக்க முடியாது என்றான் திருநீலன்.
அவனது கண்கள் கலங்கியிருந்ததைக் கண்ட கண்ணன் என்ன நடந்தது, சொல்லு என்றான்.
அவனை அருகிருந்த வேம்பின் நிழலில் அமர வைத்து அமர்ந்தான்.

ஒரு நீள் மூச்சிற்குப் பிறகு திருநீலன், சின்ன வயசிலிருந்து என்ன உனக்குத் தெரியும், ஒவ்வொரு இடத்திலும் நான் நடந்து கொள்ளும் விதம், சிந்தனை ஓட்டம், எல்லாம். ஆனா...., இப்போ எல்லாமே ஒரே குழப்பமா இருக்கு. இப்போக்கூட கொஞ்ச நாளைக்கு முன்னால தாத்தா எறந்த..., அப்போ இருந்து...., அது ரொம்ப அதிகமா ஆயிருச்சு. தாத்தா எறந்தப்போ எனக்குக் கொஞ்சங்கூடக் கண்ணீரே வரல..., உலகத்துல ஒரு உயிர் பிறந்தா எறந்துதான ஆகனும், இது வெறும் சுழற்சி. மண்ணுல இருந்து வந்த ஒவ்வொன்னும் மண்ணுலதான் முடிஞ்சாகனும். அப்படி பாத்தா இங்க வேத்துமைனு ஒன்னுமில்ல இல்லையா, எல்லாமே ஒன்னுதான், எல்லாமே மண்ணுதான். இந்த வேம்பு, அந்த ஊமத்த, அதோ அந்த அணில், நான், நீ எல்லாமே ஒன்னுதான். இந்த சிந்தன வந்தப்பறம் எதுவுமே மகிழ்ச்சியோ துக்கமோ தரல, எல்லாமே ஒன்னுதான்னு ஆயிருச்சு. ஊழி தொடங்கி ஊழி வரைக்கும்னு காலத்த நாம நெனச்சாலும் அதத்தாண்டி ஒன்னு இருக்கு, மொதலுமில்ல முடிவுமில்ல, அப்படி பாத்தா இந்த சாமி எல்லாம் எதுக்கு, வெறும் கைத்தடி தானா..., இந்த உண்மைய அறிய முடியாதவனுக்கும் அறிஞ்சும் அச்சப்படறவனுக்குமா...., மெய் அறிஞ்ச பெறகு எப்படி...., என்னால கோயிலுக்குள்ள நிக்க முடயல, எல்லாம் வெறும் கல்லுன ஒரு நெனப்பு, எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியல. ஆனா எதோ தெளிவு வந்த மாதிரியும் இருந்துச்சு. கொஞ்ச நாள் முன்னால நான் மட்டும் இதே வழியில வந்தேன், உனக்குதான் தெரியுமே இந்த வருசம் மழை சரியில்லாம நம்ம பக்கம் மரமெல்லாம் காயிறது, அதப் பாத்துக்கிட்டே நடந்து வந்தப்போ என்னாச்சுனு எனக்கே தெரியல மட்டை எல்லாம் தொங்கி, எலை எல்லாம் விழுந்து வெறுங்கொம்பா நிக்கற மரத்தப் பாத்து கண்ணுல கண்ணீர் நிக்காம வந்துச்சு, அன்னைக்கு ரொம்ப நேரம் அழுதேன், என்னால இதத்தான் புரிஞ்சுக்க முடியல..., எனக்கும் இந்த மரத்துக்கெல்லாம் என்ன சம்பந்தம், தாத்தா போனப்பக்கூட அழல, ஆனா இந்த மரம் எதோ என் கொழந்த எறந்த மாதிரி..., அப்படி ஒரு அழுக..., இப்ப நெனச்சாக்கூடக் கண்ணீரா வருது. என்னென்னமோ கனவு..., முக்கா வாசிக்கு மேல கண்ண முழிச்சா கரைஞ்சிரும், நீ எப்பவாவது இந்த கனவ கவனிச்சிருக்கியா, நான் இவ்வளவு நாள் கவனிச்சதுல ஒன்னு தெரியுது, தீவிரமா எதப்பத்தியாவது சிந்தனை ஓடுனா, அது கனவா வருது, ஆனா எல்லாத் தடவையும் அப்படி இல்ல, நம்ம மனசோட ஆழத்துல என்ன இருக்குதுங்கறத நம்ம கனவ கவனிச்சா தெரிஞ்சிருது, நாம யோசிக்கும்போதோ, எதோ ஒன்ன திட்டம்போடும் போதோ, வெளி உலகத்துக்கு ஏத்த மாதிரி, நம்ம மனசு வளஞ்சிக்குது, இது அறிஞ்சு செய்யறதில்ல, ஒருமாதிரிப்.... பழக்கம். உண்மைல நாம யாரும் நம்மள உண்மையா வெளிப்படுத்தறதே இல்ல, ஒவ்வொருத்தர் கிட்டயும், ஒவ்வொரு சமயத்துலயும் நமக்கு ஏற்படற அனுபவம்..., வெளீல நம்மள எப்படி பாக்கறாங்க..., ஒரு சமூகமா பொதுவா எப்படி நடந்துக்கனும்னு எல்லாம் ஒரு எதிர்பார்ப்பு இருக்கு..., அதத்தாண்டி உண்மையான நாம யாரு...., அத ஆழ்மனசுதான் சொல்லும்..., அதுதான் கனவு. இது ஒரு மாதிரி...., எண்ணெயத் தெளிய வைக்கிற மாதிரி...., இல்ல எனக்கு சரியா சொல்லத் தெரியல. ஒரு சில கனவு எல்லாம் எப்படி வருதுன்னே தெரியறதில்ல, இப்ப யோசிச்சா, நான் கண்டதுதான், ஆனா பாக்காத கோணத்துல வருது. சிலதப் புரிஞ்சிக்க முடியல...., அது எனக்கு எதத் தெளிய வச்சுப் புரிஞ்சிக்கக் காட்டுது....., நான் சரியாத்தான் இருக்கனா, எனக்கே பயமா இருக்கு, இத யாருகிட்ட எப்படி சொல்லிப் புரியவப்பேன். உங்கிட்ட சொல்றதுக்கே எவ்வளவு நாள் ஆகிருக்கு. இப்பல்லாம் ஒரு சாதாரண ஒன்னுக்கே கண்ணு கலங்கிறுது, நான் உண்மையிலேயே அந்த விசயத்தோட உண்மைக்காக அழறனா, என்னனு ஒன்னும் புரிஞ்சிக்க முடியல என்றவாரு சொல்லி முடிக்கையிலேயே கண்கள் கலங்கி குரலில் நடுக்கம் வந்திருந்தது. இன்னும் சற்றுப் போனால் அழுது கொட்டிவிட்டிருப்பான் என்பதை உணர்ந்த கண்ணனுக்கு என்ன கூற வேண்டுமென்பதே பிடிகிடைக்கவில்லை.

நீ ரொம்ப யோசிக்கறயோனு தோணுது, அவ்வளவு எல்லாம் யோசிக்காத, ஒரே எடத்துல இருந்து ஒரே சிந்தனைல இருந்தா உன்னால மத்ததப் பாக்க முடியாது, வெளிய வா..., எல்லாம் கொஞ்சநாள்தான், அப்பறம் எல்லாமே மாறும். எதாவது சாதிக்கற மாதிரி எண்ணம் வேணும் என்று சுருக்கமாக முடித்துக்கொண்டான். திருநீலன் சூரியன் அளவு இல்லைன்னாலும் தழல் அளவாவது வாழ்க்கைல எது மேலயாவது பிடிப்பு இருக்கனுமல்ல, வாழ்ந்தென்ன செத்தென்ன, காலப் பெருவெளீல எல்லாமே தூசு...., மூச்சுக் காத்துக்குப் பறக்கற தூசு என்றான். சிறிது நேர அமைதிக்குப் பிறகு சரி, ஏதோ கனவு வந்ததுனு சொன்னியே என்ன என்றான் கண்ணன். திருநீலன் உள்ளத்தில் அது புகை மூட்டமாக சுழன்றுகொண்டிருந்தது, அது ஒரு கனவுதான், ஆனா கனவுக்குள்ள ஒரு கனவு என்றவாறு அந்த எண்ணத்தில் ஆழ்ந்தான்.

5

ஒரே அலறல்களாகக் கேட்டுக்கொண்டிருக்க, எழுந்து நோக்கவும் உளம் இயையவில்லை, படபடப்பு மிகுந்து வியர்த்தது. அவ்வப்போது பம் என்ற சினுங்கள் ஒலிகளோடு மூச்செறியும் ஒலியும் எழுவதை மட்டும் உள்ளம் அந்த அலறல்களில் இருந்து பிரித்து எடுத்து கவனித்துக்கொண்டிருந்தது. மூச்சடக்கி மெல்லத் தலையை உயர்த்தி நோக்கிய கணம், அந்த பம் ஒலி நீண்டு முழங்கியபடி, தலையைச் சிலுப்பித் திரும்பிய களிறு கண்டுகொண்டது. படபடப்புக் கூடி தப்பி ஓட முயன்றான், பின்னால் முதுகோடு விழுந்த ஒரு அடியில் தூக்கியெறிப்பட்டு அருகிருந்த புதருக்குள் விழுந்தான். சிந்தை தெளியும் முன் வெளியே இழுபட்டுத் திரும்பியதும், பேருடல் கொண்ட பெரும் பாறை உயிர்த்து எழுந்து விழிகள் சிவக்க சினந்து குனிந்து நோக்குவது போல ஒரு கணம், தலையால் அழுத்த, விலாவுக்கு இருபுறமும் பட்டையுரிந்த மரம் போல தந்தக்கால்கள் மண்ணில் ஊன்றி அலைந்து உழுதன. துதிக்கையோ கரும்பெரும் நாகமென உடலின் மேல் விழுந்து நெளிந்தது. தந்தங்களுக்கு இடையில் சிக்கி இழுபட புழுதி சூழக் கிடந்தான், ஏதோ கூச்சல் கேட்டுக் களிறு நிமிர்ந்தது. வியர்வையில் புழுதி படிந்த உடலில் கண்களைத் தவிர எதுவும் அசையவில்லை. பாறையிடுக்கில் நீண்டு முளைத்த மரம் போன்ற தந்தத்திலிருந்து மண் துகள்கள் காற்றில் மெல்ல இறங்கி முகத்தில் படிந்தது. துதிக்கையை ஒரு சுழற்றுச் சுழற்றிக் காலால் உந்தித் தள்ளியதில் தோளுரிய சரிந்ததில், அருகிருந்த மரத்தின் வேரில் பட்டு நின்றது உடல். அச்சத்தில் ஒரு கணம் அம்மரமும் களிற்றின் உறலடி என உள்ளம் துணுக்குற்றது. அச்சத்தில் மெல்லத் தலையைத் திருப்பினான். இவனைக் காக்க வந்த யாரோ ஒருவரை இழுத்துப்போட்டு கால்களுக்கிடையில் உருட்டி எறும்பை மிதிப்பது போல ஏறி துதிக்கை காற்றில் சுழலக் காதுகள் விரிய வந்தது களிறு, அவனது கையைப் பற்றியிழுத்து ஒரு அடி எடுத்து வைத்ததில் இடது முழங்கால் ஒடிந்து தசைகள் மண்ணில் பிசைந்து அப்பின. பாறை விழுவது போல தந்தக்கால்கள் மாரெலும்புகள் நொருங்க அவன் மேல் விழுந்தன.

சிந்தை தெளிவில்லாது கலங்கியது, சட்டென ஒரு மின்னல் போல துலக்கம். விழிகளைத் திறந்தான். கால்களுக்கிடையில் அடக்க முடியாது சிறுநீர் விட்டு விட்டு வெளியேறியது. மெல்லப் பின்னே நகர்ந்து எழுந்து அமர்கையிலேயே கைகள் கட்டப்படிருப்பதை உணர்ந்தான். கட்டிய கைகளிலே முகத்தைத் துடைத்துக் கொண்டான்.

வானிலிருந்து துளிகள் விழுந்து கொண்டிருந்தன. பேரிருள். வான் ஒளிரியதில் பேருருவம் கொண்டு எழுந்து நின்றது அப்பெருங்காடு. ஒளியணைந்து உறுமல் ஒன்று முதிர் சிம்மம் போலக் காட்டின் மேல் பரவிச் சென்று தெற்கு மூலையில் எதிர்த்து முழங்கியது. இலைகள் கிளைகள் சருகுகள் பாறைகள் கற்களென விசும்பின் துளிகளில் மோதி இரைய, முரல் வண்டின் ஓசையெனக் காடு இருண்மையில் உயிர்த்து எழுந்தது. மாருள்ளிருக்கும் தசையின் துடிப்பு இரையும் காட்டிலும் உணர முடிந்ததாய் இருந்தது. உயிர் துறந்த பல்லுயிர் உடல்கள் சிதைந்து எருவாகி வளர்க்கும் உயிர்க்கூட்டமென நெடுமரங்கள் ஓங்கிக் கைவிரித்த ஓலம் கேட்டு விசும்பு இறங்கியதோ என்ற எண்ணம் சட்டெனத் தோன்றியதில் உடல் விதிர்த்து அடங்கியது.

மெல்ல எழுந்து கால்கள் வைத்த இடமெல்லாம் பொதிந்து இறங்கின. துளிகள் மேலும் இளக்கம் கொடுத்து மண்ணைப் பாம்பின் வாயென மாற்றுவது போலிருந்தது. இருளின் ஒலிகளில் அந்தக் களிறு தன்னைச் சுற்றி வருவதாய் உளம் மயக்குக்கொண்டு படபடத்தது. கைகள் கட்டப்பட்டிருப்பது வேறு ஒரு கூடுதல் படபடப்பைத் தந்தது. உறுமிய விசும்பு மெல்ல இறங்கியது ஒரு அமைதியைக் கொடுத்தாலும் இருள் மிகுந்த விளிப்பையும் கோரியபடியே இருந்தது. கை கால்கள் கட்டப்பட்டு சரிவில் தள்ளிவிடப்பட்டதை நினைத்துக்கொண்டான். கால் கட்டு, விழுந்ததில் எங்கோ மாட்டிக்கொண்டு அழுந்தி அறுந்த தடத்தைக் கால்களின் ஒவ்வொரு அசைவிலும் உணர முடிந்தது. உடலெங்கும் இருந்த சிராய்ப்புகள் ஏதோ அருவருகத்தக்க ஒன்று ஊறுவது போல எரிந்தபடி நச்சரித்தன. நாரால் கட்டப்பட்டிருந்த கட்டினை வாயால் கடித்துப் பார்த்தும், பலனில்லை. கடித்ததில் நா கசந்து முகம் சுழித்துக் காரி உமிழ்ந்த பிறகு, மெல்ல இருளில் நீரில்லா இடத்தைத்தேடி அடி வைத்துத் தடுமாறியபடியே நடந்தான். நீர் கலந்த அவ்விடத்தின் மணம் மெல்ல வேறொன்றாகிவிட்டிருப்பதை நாசி உணர்ந்தது. இருள் இருக்கும் இடத்தைவிட்டு அகலப் பெரும் அச்சுறத்தலைத் தந்தாலும் அந்த இருளில் ஒவ்வொரு அடியும் எடுத்து வைப்பது தன் உடலைக் களிறு தாண்டிச் செல்வதை உணர்வது போலவே இருந்தது.

சட்டென ஏதோ ஒரு ஒலி சுருக்கெனத் தொட்டதும், சுற்றும் முற்றும் பார்த்தான். விழிகள் பயனற்றவை என அக்கணம் மீண்டும் உணர்த்தியது விரும்பத்தக்கதாக இல்லை. விழிகள் படபடத்து நோக்கியபடி இருந்தாலும் செவிகள் கூர்ந்து இருப்பதையும் உணர்ந்தான். மீண்டும் மெல்லச் சில அடிகள், மரம் ஒன்று தடுத்தது, விலகிய இரண்டாம் அடியில் சிறு பள்ளத்தில் முழந்தாள் நீரில் அமிழ்ந்து போனான். நிலத்தின் திடமின்மையில் படபடப்பு மிகுந்து தவழ்ந்து கரையேறி கையூன்றி நிற்க, உடலில் இருந்து சேற்று நீர் மண் மட்குத் துகள்களோடு வழிந்து இறங்கியது. கால்களுக்கு இடையே சிரிய நீர்தடங்கள் அந்தப் பள்ளம் நோக்கி இறங்குவதைக் கைவைத்த இடத்தைக்கொண்டு அறிய முடிந்தது. தொடர்ந்து செல்வதா வேண்டாமா என்று உள்ளம் தர்க்கம் ஆடினாலும், மார்த்துடிப்பு அடங்கியதும் எழுந்து மீண்டும் சில அடிகள் வைத்தான். ஒலிகள் கலந்து மெல்ல இரைந்தபடி இருந்த காடு நீ தனியனல்ல என்று நினைவுறுத்தியது, தொண்டையில் மேலும் அச்சத்தின் அழுத்தத்தைத் தந்தது. நீரில்லா இடமென அறிந்ததும் அங்கேயே நின்று உற்று உணர முயன்றான். இரைந்த ஒலியில் இருந்து சில ஒலிகள் தான் அறிந்தவை என்று உணர்ந்தான். அருகில் எங்கோ தேங்கிய நீரில் ஏதோ விழுந்த ஒலி மார்த்தசையில் துடிப்பை அதிகரித்தது, ஏதாவது பிஞ்சோ பழமோ விழுந்திருக்கலாம் என உள்ளம் சொல்லிக்கொண்டது. இருந்த இடத்திலிருந்து சிறு வட்டமெனச் சுற்றிக் கால்களால் நிலத்தை அறிந்து மண்டியிட்டு அமர்ந்தான்.

துளிகள் குறைந்து தூரலென மாறியிருந்தது. சுற்றும் முற்றும் பார்த்திருக்கையில் ஏதோ ஒளிப்புள்ளி பட்டதும் கண்கள் கூர்ந்து நோக்க, எச்சரிக்கையோடு எழுந்து பார்த்தான். சில அடிகள் முன்னால் சென்றதும் கால் விரல் ஒரு மரத்தின் வேரில் பட்டு மறத்து வலித்தது. சற்றுத் தடுமாறி அதே வேரில் அமர்ந்து விரலை அழுந்தப் பற்றிக்கொண்டான். இவ்வாறான எதிர்பாராத பொழுதுகளில் சட்டென சினம் தோன்றுமே இப்போது ஏன் இந்த வலி அச்சத்தைத் தருகிறது என்று எண்ணினான். கண்கள் மூடியவாறு முகம் சுழிபட்டுக் குனிந்தபடி விரலை மெல்ல நீட்டி மடித்து சுழற்றிவிட்டு, வேரின் விளிம்பில் கை வைத்துத் திரும்பி, மீண்டும் அந்த ஒளியைத் தேடினான். ஒன்றும் புலனாகவில்லை. கூதலில் நெஞ்சம் அதிரத் தொடங்கியிருந்தது. உள்ளமும் உடலும் சோர்வுற்றுத் தளர்ந்து இருக்கையில் சட்டெனக் கையின் மணிக்கட்டை ஏதோவொன்று அழுந்தப் பிடித்தது. பல ஊசிகள் ஒரு நேரத்தில் உள்ளிறங்கியது போன்ற வலி, கையை உதறிப் பதறி எழுந்ததும் தடுமாறிய கால்கள் சடசடவென அடியெடுத்து நகர முற்பட்டு, அச்சத்தில் வாய் ஏதேதோ உலற, மாருள்ளே துடிப்பு மிகுந்து, தடுமாறிக் கீழே விழுந்து புரண்டான். பிடி விலகியபாடில்லை, கையைத் தரையில் அடித்தும் உதறியும் பார்த்தான், கால்களால் உதைத்தான், சட்டெனப் பிடி நழுவியதும் எழுந்து ஓடினான்.

இருள் சிறு பள்ளத்தையும் பெரும் பள்ளமென உணரச் செய்து கால்களைத் தடுமாற வைத்து விழச் செய்தது, எழுந்து ஓடிய சில அடிகளில் மடாரெனத் தலையில் ஏதோ இடித்து விழுந்தான். தலையில் கை வைத்தபடி எழுந்து மீண்டும் ஓட்டம். மரத்தில் நேராகச் சென்று இடித்து, கழுத்து இடது மார்பில் பலத்த அடிபட்டு மீண்டும் விழுந்தான். அந்த அடி சற்றே நிதானப்படுத்தியது. மார்பைப் பிடித்தபடி மெல்ல எழுந்து சுற்றும் பார்த்தபடி அடிமேல் அடிவைத்து காற்றில் கைகளால் துழாவியபடி நகர்ந்தான். வலியில் மீண்டும் முகம் சுழித்துக் கொண்டது. அவனது பெருகிய மூச்சொலி மட்டுமே காதுகளுக்கு அணுக்கமாகவும் அணைப்பாகவும் இருந்தது. கை வலியும் மிகுந்தது. இருளில் கண்களுக்குப் புலனாகவில்லை எனிலும் விரல்களால் குருதி வழிவதை உணர முடிந்தது. சற்றுத் தொலைவு தடுமாறி நடந்து வந்தும், கால்களில் ஏற்பட்ட நடுக்கம் ஓரிடத்தில் மண்டியிட்டுக் கையூன்றி அமரச் செய்தது.

 துளிகள் நின்றுவிட்டன. மரங்கள் மட்டுமே, மெல்ல தவழத் தொடங்கியிருந்த காற்றில் கூதல் கொண்டு சிலிர்த்ததில் சில துளிகள் நழுவி விழுந்தன. நனைந்து குளிர்ந்திருந்த உடலில் ஊசிகளைச் செருகுவது போலக் குளிர் ஊடு சென்றது. அச்சமும் கூதலும் சேர்ந்து உடலைக் குலுக்கியது, கழுத்து நரம்பு ஒருபுறம் இழுத்துப் பிடிக்க உடனே கைகளால் அணைத்தபடி எதிர்புறமாகக் கழுத்தைத் திருப்பினான். விழுந்ததில் கீறல்கள் கண்டிருந்த உடலில் சேறு மூடியிருந்தது, வலது தொடை அடிமரத்தின் வேர்க்கொத்தில் விழுந்ததில் வீக்கம் கண்டிருந்தது. மரத்தில் இடித்த தலை வீக்கத்தை உணர்ந்து கையால் அழுத்தினான், கண்களில் நீர் தேங்கியது. ஏதோ சரசரவென சரியும் ஒலி செவியில் சேர்ந்ததும் உடல் விதிர்க்க சுற்றும் நோக்கினான், கண்களின் ஈரம் வழிந்து இறங்கியது. கூதலில் நடுங்கி ஒலியெழுப்பாது சுற்றிலும் நோக்க, களிறு ஒன்று தளர்ந்து நெகிழ்ந்த மண்ணில் அடிகள் ஊன்றச் சுற்றித் துதித்த கை இறங்கக் காதுகள் விரிய நடந்து கொண்டிருந்தது. நகர்ந்து அருகிருந்த மரத்தோடு ஒட்டிக் கொண்டான். அந்த ஒலியைக் கேட்டதைப் போல, நடந்துகொண்டிருந்த களிறு ஒரு காலைத் தூக்கியபடி காதுகள் விரிய நின்று நோக்கியது. கைக்கட்டினால் கண்களை மூடி முகத்தை மறைத்துக்கொண்டான். மெல்ல உடல் குலுங்க, ஈரமாகி அதிர்ந்த இமைகளைத் திறந்தான். சிறு பூச்சிகளின் இரைச்சலில் இருள் மட்டுமே எஞ்சி இருந்தது.

முகத்தைத் துடைத்துக்கொண்டு அமர்ந்தான். எண்ணங்கள் ஏதுமில்லாமல் இருந்தது. தோளில் ஏதோ பட்டதும் அதிர்ந்து விழுந்து திரும்பினான். வீசிய காற்று செடியொன்றை அலைந்து தொடச் செய்திருந்தது. கைகளின் கயிற்றுச் சுற்றை தோளில் தேய்த்துக்கொண்டு எழுந்து அமர்ந்தான். கண்கள் சுற்றிலும் அலைந்ததில் சற்றுத் தள்ளி, ஒளிர் வண்டொன்றைக் கண்டன. கண்கள் தன்னியல்பாக உற்று நோக்கின, அத்தகைய இருளில் சிறு பொறியைத் தூலமாக தனது உள்ளம் உணர்ந்து பற்றிக்கொண்டு அதையே தொடர்ந்தது. இறகென ஏறி இறங்கிச் சுழன்றது. நின்று நோக்கி நகர்ந்தது. ஒரு கட்டத்தில் கால்கள் தானாக அவ்வொளியைத் தொடர்ந்தன. உடலின் இன்னல்கள் மறைந்தன, கட்டுப்பாடுகள் இல்லாமல் ஆகின.

 ஒரு இடத்தில் அந்த ஒளி மெல்ல சுழலாக மேலேறியது. விழிகள் தழல் போல் வானேறும் ஒளியையே இமையாது பார்த்திருந்தன. அந்த ஒற்றைத் தழல் விழிகளில் இரண்டானது. இரண்டான சுடர் காற்றின் அலையில் கைகள் விரித்தது, அடிகள் எடுத்து வைத்து வளர்ந்தது, இரையும் காட்டின் தாளத்தில் அடிகள் வளைந்து நகர தழலின் கைகள் விரிந்து பரவியது. அதன் ஆடலில் வெம்மை வந்து தன்னைத் தொட்டதும், தழல் வெம்மை குளிர்ந்து காடெங்கும் பரவியது. இமைகள் அரைத்துயில் நிலையில் வான் நோக்கியிருக்க, அச்சத்தில் இறுகிய உடலும் தளர்ந்து குளிர்ந்தது. கைகளும் கால்களுமாக விரிந்த தழல் உருவம் கொண்டு எழுந்தது. எழுந்த தழலோ ஒளியால் இருளை மிதித்து ஏறி நின்று புன்னகைத்ததில் அது விசும்பில் பேரொலியாக எதிர்த்து முழங்கியது. அந்த முழக்கத்தில் இருளானது பேய்களும் அஞ்சும் காட்டின் ஈரம் பாய்ந்த ஒடுங்கிய மூலைகளில் சென்று பதுங்கியது. அடுத்த புன்னகையில் தழலோ காட்டின் மேல் எழுந்து நின்று ஆடத்தொடங்கியது. அதன் கைகள் விரிந்து விரிந்து பெருகின, ஒருகட்டத்தில் எத்தனை என்று கூற முடியாதபடி பெருகி கடலில் மடங்கி விழும் அலையெனக் கரங்கள் வானில் அலைவதாகப்பட்டது. தனது கைகளால் தழலின் பாதங்களைப் பற்றிக்கொள்ள முயன்றான். ஒவ்வொரு முயற்சியிலும் தழல் அடியெடுத்து வைத்துக் காற்றில் மேலேறியது. அதன் ஆடலில் மெய் உறைந்து நின்றிருந்தான். பேருருவம் எடுத்து சுழன்று ஏறி ஆடிய தழலின் வியர்வைத் துளியொன்று காட்டில் நழுவி விழ, காடு தழலின் ஒளியை தானும் பெற்று எரிந்தது. தன் மேலும் அந்தத் துளியின் சிறு துளி பட்டு உடலே எரி பெற்று எரியத் தொடங்கினான். தன் உடலில் எரிந்து தழல் நடனமிடுவதைக் கண்டு வியந்தான். சுற்றத்தில் மரமும் மலரும் இலையும் கல்லும் மண்ணும் சருகும் நீரும் உயிரும் அற்றதும் என அனைத்தும் எரிந்தன. அசைவின்றி நின்றவை அனைத்தும் அசைவு கொண்டு ஆடியது போல ஆனது, மேலும் வியப்பைத் தந்தது. எரிந்தொளிர்ந்த காட்டில் அனைத்தும் பொன்னெனப் பூத்தொளிர்ந்தன. தழல் சுழல எரியும் இலையொன்று உச்சியிறங்கி மண்ணில் படிந்ததில் மண்ணின் தழல் விலகி மீண்டும் அதனோடு முயங்கி ஆடியது. மரத்திலிருந்து வீழும் துளிகள் உருண்டொளிர்ந்து வீழ்ந்து தெரித்தன. மிசையிறங்கி வழிந்த நீர்த்தடங்கள் சுழித்தொளிர்ந்து எரிந்திறங்கின. அதில் வளைந்து அலைந்து நெளிந்து சென்ற அரவம் தழல் நாவென எரிந்தூர்ந்து மறைந்தது. தழலின் பேரொளியில் ஒரு துளியே அத்தனை ஒளிர்ந்தது. அப்பேரொளியைக் கண்டு இமைகள் நீரைச் சொரிந்து அந்த நீரும் பொறிகள் மின்ன எரிந்து விழுந்து தெரித்தது. அக்கணம் கண்களை மூடினான், எங்கோ காட்டில் அஞ்சி ஒடுங்கியிருந்த இருள், மின்னலெனப் பாய்ந்து பற்றியதில் உடலின் உணர்வுகள் அற்று மயங்கி முடிவு முதலிலா இருளுல் மிதக்கலானான். 


நீலம் - சிறுகதை - கிரி ராம் பாரதி


எடையற்றிருக்கிறது உடல். நகர்கிறதா இல்லையா என்று எதையும் உணர முடியவில்லை. மெல்ல மினுங்கும் ஒளி மட்டுமே புலனாகிறது, தளும்பலுடன். மெல்ல மிதந்திறங்கும் நீரோட்டமாய் மிதந்தபடியே இருக்கிறேன்.

வெளியோ மினுங்கும் நீலம். அசையா உடல், பிடிப்பின்றி, நிலைகொள்ள இயலாமல் அந்தரத்தில் துவள்கிறது. எடையற்ற நூலாடையை மென் காற்று அலைவது போல ஓருடல். மீனா ?, ஆம். வாலும் துடுப்புகளும் நீரில் அலைய, மெல்ல நகர்கிறது. அத்தனை மெல்லிய வாலுடைய வகை மீனை, இக்கணம்வரை கண் கண்டதில்லை. நீலத்தில் மிதக்கும் நீலம் அது. கண்ணுறுத்தாத ஒளி பட்டுத்தெறிக்கும் உடல்.

மென் நகையுதிர்க்கும் முகம் போல, அது சற்று தொலைவில் அசைந்தாடியபடியே இருக்கிறது. அணுகினால் விலகுகிறது. அந்த மென்மை என்றும் கைகளில் சிக்க மறுப்பதுபோலப் படுகிறது. நான் விலகினால் மெல்ல அணுகி வந்து நாணத்தோடு தன் இருப்பை மட்டும் உணர்த்திவிடுகிறது. மேலும் விலக முற்பட்டால் தன் உடல் மென்மையை அந்த நீராழத்தில் ஒளியில் வழிய அலையாய் மிதந்து வருட வருவதாய் முன்னகர்ந்து விலகி நிற்கிறது. அந்த நகைப்பை உணர்த்தும் உணர்வை மட்டுமே அளித்துவிட்டு கொந்தளிப்பில் ஆழ்த்துகிறது.

அந்தக் கண்கள், இமையாது நோக்கும் கண்கள், சுழலுள் சுழல் கொண்ட கண்கள், பழிங்கென மினுங்கும் மணிகள், எனையே காண்கின்றன, ஏறி, இறங்கி, என்னுள் ஆழ்ந்து, எதைத்தான் தேடுகிறது இந்த உடலில். மெய்யாக அது காண்பது என் உடலையா, அதன் வழியாக வேறேதோ ஒரு மாய மெய்யையோ ?. உருளாது, அசையாது, இமையாது, விழிப்பதை மட்டுமே உணர்கிறேன். இல்லை அவ்வாறு எண்ணுகிறேனோ ?.

ஒளி நலுங்கும் நிலம் என் பாதம் தாங்கி நிற்கிறது. என் புருவ மத்தி இணைந்து விரிகிறது, என் உடலே நலுங்குவதாய் ஒரு கணம். இல்லை..., நான் நினைக்கிறேனோ அவ்வாறு ?. உறுதியாக, வலுவில், ஊன்றி, நிலை கொண்ட மரம் போல இருக்கிறேன். சுற்றம் மட்டுமே நீலத்தில் நலுங்குகிறது.

சட்டென என் விழிகள் தேடுகின்றன, எங்கே, அது எங்கே, அந்த நீல, மகரம், மச்சம், மீன், ஏதோ ஒன்று, நான் இதற்கு முதற்கணம் வரை காணாத அது, எங்கே.

 அசையாத என்னுடல் என் கட்டுப்பாடு ஏதுமின்றித் திரும்புகிறது. ஒரு கணம் கூட என்னால் உணரமுடியாத என்னுடல், மெல்லச் சரியும் பழுத்து, காய்ந்து, இடை முறியும் மரம் போலவே சரிகிறது.

அக்கணம், என் விழிகளில் அந்த மென்மை சூடிய வால், வளைந்து, மடங்கி, சுருங்கி, விரிந்தது.  சட்டென என் பின்னிருந்து அந்த வால், மெல்ல கன்னத்தில், இலைமேல் நீரென, இல்லை, நிலம் மேல் நிழலென, ஒரு தொடுகை, ஒன்றே ஒன்று, வாழ்வு முழுவதும் ஏங்கி, நினைந்து, உருகி, உருவழிந்து, உணர்வு மட்டுமேயாக ஆன, ஒரு கனவு போல. ஒரு தொடுகை, மெல்லிய தொடுகை, அத்தகைய தொடுகையை உணர்ந்து கொள்ள, அத்தகைய கூரிய உணர்வுடல் வேண்டும், நீர் அறியும் நீர் போல, தீ அறியும் தீ போல. எப்படியோ, அக்கணம் நான் உணர்ந்தேன்.

அந்த உணர்வை, எண்ணி எண்ணி விழிப்படையும் தருணம், மெல்லச் சரிந்தது என்னுடல், அந்த நலுங்கும் நீலமேந்திய நிலத்தின் மீது, நீருள் ஆழும் சிறுமண் துகளெனப் படிந்தது. எடையுணரா அதே நிலைதான் இக்கணமும்.

 எதிரே, அந்த நீலத்தில் நீலமெனக் கலந்து, நீலத்தின் சாரமென உருக்கொண்டு, நீலத்தின் மென்மையில் ஒரு துளியென மென்மை கொண்ட உடலில், மென்மையும் இதுவும் வேறில்லாத செதில்களும், துடுப்புகளும் வாலும் அலைய, அந்தக் கண்கள், என் முன்பு நேர் நோக்கி நிற்கிறது.

அந்த விழிகள்...., இப்பேறியற்கையின் பேரமைதியினைக் கொண்ட அந்த விழிகள், கூர்ந்து நோக்க, நீலம்..., நீலம்..., நீலம்.... அடர் நீலம், கருமை மிகும் நீலம், கருமையே மெய்யெனவாகும் நீலம், இறுதியில் கருமை மட்டுமே எஞ்சும் நீலம். அதன் இருள் கொண்டு கூதல் நிறைக்கிறது வெளியெங்கும். வெளியெங்கும் இந்தக் கூதல் தாங்காதே நீலம் நலுங்குகிறதா...., ஆம், அந்த விழியின் கருமையே வெளியைக் கூதல் கொண்டு நிறைக்கிறது. என் விழிகளின் ஒளியும் அந்தக் கருமைக்குள் ஊழ்கத்தில் மூழ்க எத்தனிப்பதை உணர்கிறேன்.
அந்த மயங்கிய கார் ஒளியில், அந்த செதில்களும் வாலும் மட்டுமே மினுங்க அது நகர்கிறது, மெல்ல அசைந்து, அசைந்து எனை நோக்கி வருகிறது, மென் விசை கொண்ட அதன் செதில்கள் ஒவ்வொன்றும் இருளாகவே ஒளிர, அது வருகிறது. அதன் வாய், அது புன்னகையோ, இல்லை, ஏதோ நற்சொல் கூறல், இல்லை, தீச்சொல்லோ. அதன் மென்மை இப்போது இல்லை. உக்கிர இருண்மையில் கூதல் மிக்கு ஒளிரும் அது, என் சுருங்கிய தோல் புகைய, வற்றிய தசைகள் உருக, தளர்ந்த நரம்புகள் துடித்து வெடிக்க, உள்ளோடிய எலும்புகள் துகளெனப் போக, தூற்றி நோக்கும் கண்கள் போலிருக்கின்றன.

நான் இமைத்த பொழுதில் அது தொடுமளவு நெருங்கிவிட்டது. என் உடல் அசையவில்லை. வாழ்வின் மொத்த விழைவும் கொண்டு முயன்றும் அசையவில்லை. நீர் இமைகளுக்கு இடையே நலுங்கும் இக்கணம், அது என்னைத் தொடுகிறது. ஆம், அதுவேதான். தொட்டுவிட்டது. தன் இதழ் கொண்டே, மெல்லிய மலர் தொடுகை. அக்கணம், என் இமைகளில் நலுங்கிய நீர் வழிய தெளிவுரக் காண்கிறேன். அருகில், மிக அருகில், முழுவுருவும் காணமுடியா அண்மை. விழிகளில் விழிகள். விழிகளுக்குள், முடிவிலா விழிகள் கிளைத்து முளைத்து விழித்துக் கொண்டன.

அக்கணம், அது தன் இதழ் திறந்து எனை விழுங்கத் தொடங்கியது. ஈரம் காய்ந்து நிற்கும் மணற்குன்றெனப் பொடிந்து, அதன் மெல்லிய இதழ் தீண்டலில் அதனுள் என்னுடல் துண்டுகள் செல்கின்றன. ஒவ்வொரு தொடுகையிலும் பொடிந்து மறைகிறது ஒரு துளி. என்னுடல், கரைந்தழிகிறது என் விழிகளில். ஒரு கணம். நான் விழிகள் மூடினேன். நீலம்...., அந்தக் கரிய நீலத்தில், கருமையில், கூதல் கொண்ட கருமையில், நானும் கரிய நீலம்.